Thursday, October 20, 2011

தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி - ஸ்தானிஸ்லாவ் திகாத்

ஸ்தானிஸ்லாவ் திகாத் (1914-1978)

போலந்து சிறுகதை தமிழில்: சுகுமாரன்

ஓர் இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தனது கையெழுத்துப் பிரதியில் திருத்திக் கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி.திடீரென்று யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த நேரங் கெட்ட நேரத்தில் எந்த விருந்தாளியும் வருவது வழக்கமில்லை. தனக்கோ ஒரு வேலையாள் கூடக் கிடையாது. பிறகு இந்த அகாலத்தில் யாராக இருக்கும்?

ஆனால் குரலில் கொஞ்சம் கூடப் பரப்பரப்பைக் காட்டாமல் சாதாரணமாகச் சொன்னார். '' வாருங்கள்sukumaran , உள்ளே, வாருங்கள்''.

மடக்குக் கதவுகள் மெதுவாகத் திறக்கப்பட்டன. அறை முழுவதையும் அசாதாரண ஒளியால் நிறைத்துக் கொண்டு ஓர் உருவம் தோன்றியது. முதற் பார்வையிலேயே அது சாதாரண மனிதனல்ல என்று விளங்கியது. நீண்ட தாடியும், கறுத்த மேலங்கியும் தொய்ந்த காலுறைகளும் உணர்த்திய அசாதாரணத்தன்மையை தாஸ்தயேவ்ஸ்கி மனப்பூர்வமாகப் புறக்கணித்தார். விநோதமான எதிலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்று வாழ்க்கை அனுபவங்களிருந்து இதற்குள் அவர் கற்றுக் கொண்டிருந்தார். எனவே எந்த வார்த்தையும் பேசாமல் அறைக்குள் நுழைந்து தன் முன் நிற்கும் விசித்திர உருவத்தைப் பார்த்தும் கூட இதில் இயல்பை மீறியதாக எதுவுமில்லை என்பதுபோல உணர்ச்சியற்றவராக இருந்தார்.

அறிமுகமற்றவரின் தோற்றத்தில் தெரிந்த அசாதாரணத்தன்மையை ஒதுக்கி விட்டு நெடுநாள் பழகிய நபரிடம் சொல்வதுபோலச் சொன்னார் '' உட்காருங்கள், உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?''

அந்தப் பரிச்சயமற்ற மனிதர் அறை நடுவில் ஒரு நடன் ஆசிரியரின் கால் அசைவுகளை நினைவுபடுத்துவதுபோல நின்று கொண்டிருந்தார். தன்னுடைய எதிர்பாராத வருகையும் தோற்றமும் ' குற்றமும் தண்டனையும்' எழுதிய ஆளிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர் கவனித்தார்.

திடீரென்று ஞானோதயம் உண்டானவர்போல முதல் வாசகத்தை உச்சரித்தார். '' நான் காப்ரியேல் தேவதூதன்''.

''சொர்க்கத்துக்கும் பூமிக்கும் அதிபதியானவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்''

சிரமமான எதையோ செய்து முடித்ததைபோல மௌனமானார் அவர். நீண்ட நேரத்துக்குப் பிறகு பின்வருமாறு சொன்னார்:

''அவருக்கு உங்களுடன் சில முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேச விருப்பம். அதற்காக உங்களை அழைத்துச் செல்வது என் கடமை''

தாஸ்தயேவ்ஸ்கி இருக்கையிலிருந்து எழுந்து கோட்டைச் சரி செய்து கொண்டே சொன்னார் '' நான் எப்போதுமே தயார்''

கடவுள் தன்னுடைய அடர்ந்த வெண்நிறத் தாடியை வருடிக் கொண்டே தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் சொல்ல ஆரம்பித்தார்.

'' நண்ப, இங்கே இருக்கும் நாங்கள் எல்லாரும் உன்னதத்தை நோக்கி உங்கள் திறமை பறந்து உயர்வதை அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்''

தாஸ்தயேவ்ஸ்கி அந்தப் பாராட்டுக்குப் பணிவுடம் தலை வணங்கினார்.

''ஆனால்... எனக்கு அதை எப்படி விளக்குவதென்று புரியவில்லை. நான் சொல்ல விரும்புவது... அதாவது... நீங்கள் காட்டுகிற உலகம் இருண்டே இருக்கிறது. நீங்கள் வாழ்க்கையின் கருமையான பக்கத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். அதன் நன்மைகளைப் பார்ப்பதே இல்லை... அதுமட்டுமல்ல... இவற்றையெல்லாம் வெறும் ஆறே நாட்களில் சிருஷ்டித்தேன் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்... கவனக் குறைவால் ஒருவேளை பிசகுகள் நேர்ந்திருக்கலாம்... ஆனாலும்...''

கடவுள் தன்னுடைய நிலைமையை விளக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டி ருந்தார். எனினும் அதற்கிடையிலும் எழுத்தாளரின் மேதைமையைப் பாராட்ட மறந்து விடவில்லை. 'அதிகாரியின் தொனியில் அல்ல; ஆலோசகனின் பரிவுடனேயே இதைச் சொல்கிறேன்' என்பதைப் புரியவைப்பதில் அவர் பிரத்தியேக அக்கறை கொண்டிருந்தார்.

கடவுளின் பரிதாபமான நிலைமை தாஸ்தயேவ்ஸ்கியை சங்கடப்படுத்தியது. அவருக்கு என்னால் என்ன செய்ய முடியும்? அவருக்கு நிச்சயம் ஒரு துணை தேவை.

வீட்டுக்குத் திரும்பிய உடனேயே 'கரமசோவ் சகோதரர்க"ளை எழுத ஆரம்பித்தார் தாஸ்தயேவ்ஸ்கி.

***

கல்குதிரை 1991 தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ்

சீனப் பெருஞ்சுவர் - ஃப்ரான்ஸ் காஃப்கா- தமிழில் : சுகுமாரன்

ஆங்கிலத்தில்: வில்லா, எட்வின் ம்யூர்

சீனப் பெருமதில் அந்த நாட்டின் வடக்கு முனையில் முடிவடைந்திருந்தது. தென் கிழக்கிலிருந்தும் தென் மேற்கிலிருந்தும் இரண்டு பகுதிகளாக வந்து கடைசியில் அங்கே ஒன்று சேர்ந்தது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த இரண்டு தொழிலாளர் அணிகள் பகுதி பகுதியாகக் கட்டி முடிக்கும் கட்டுமான உத்தியை சிறிய அளவில் பயன்படுத்தியிருந்தார்கள். அதை இப்படிச் செய்தார்கள்: இருபதுபேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்தைக்Kafka_last கட்ட வேண்டும். ஐநூறு காதம் என்று வைத்துக் கொள்வோம். அதே போன்ற இன்னொரு குழு முதலில் கட்டி முடித்த பகுதியுடன் இணையும்படி அதே நீளமுள்ள இன்னொரு பகுதியைக் கட்டியது. ஆனால் இந்த இணைப்பிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அதாவது ஆயிரம் காதம் கட்டிய பின்பு, ஆரம்பமாவதல்ல மதிலின் கட்டுமானம் . மாறாக, மறுபடியும் கட்டுமானத்தைத் தொடர்வதற்காக இந்த இரண்டு அணிகளும் முற்றிலும் வேறான சமீபப் பகுதிகளூக்கு மாற்றப்பட்டன. இதனால் ஏராளமான இடைவெளிகள் உண்டாயின. பின்னர் மெல்ல மெல்லவே இந்த இடைவெளிகள் சரி செய்யப்பட்டன. மதில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரையும் சில இடங்களில் முடிக்கப்படவில்லை. உண்மையில் ஒருபோதும் முழுமையாக்கப்படாத இடைவெளிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அது பரிசோதனை செய்யப்பட முடியாததாக இருக்கலாம். அல்லது மதிற் சுவரின் பிரம்மாண்டமான கட்டுமானம் காரணமாக , ஒரு மனிதனால் தன்னுடைய கண்களாலோ அல்லது தீர்மானத்தாலோ பரிசோதனை செய்ய முடியாதது என்று காட்டுவதற்காக எழுப்பப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

மதிற் சுவரைத் தொடர்ச்சியாகக் கட்டியிருந்தாலோ அல்லது இரண்டு பகுதிகளையுமாவது தொடர்ச்சியாகக் கட்டி முடித்திருந்தாலோ எல்லா வகையிலும் வசதியாக இருந்திருக்கும் என்று ஒருவன் முதலில் யோசிக்கலாம். உலகளாவிய ரீதியில் பாராட்டப்படுவது போலவும் அறியப்படுவதுபோலவும், வடக்கிலுள்ள மக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் மதில் திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் தொடர்ச்சியான கட்டுமானம் இல்லாமல் மதிலால் எப்படிப் பாதுகாப்பைத் தரமுடியும்? அப்படிப் பட்ட மதிலால் பாதுகாப்புத் தர முடியாது என்பது மட்டுமல்ல அதில் நிரந்தரமான ஆபத்தும் இருக்கிறது. ஆள் நடமாட்டமில்லாத பிரதேசத்திலிருக்கும் இந்த மதில் சுவரை அந்த நாடோடிகளால் எளிதில் அடுக்கடுக்காகத் தகர்க்க முடியும். இந்த இனத்தவர்கள் கட்டுமான வேலைகளில் அதிகக் கவனமுள்ளவர்கள்,வெட்டுக் கிளிகளைப்போல நம்ப முடியாத வேகத்தில் தங்களுடைய தங்குமிடங்களை மாற்றிக் கொண்டி ருப்பவர்கள் என்பதால்,கட்டுமானக் காரர்களான எங்களை விட மதில் நிர்மாண முன்னேற்றத்தைப் பற்றி மிகவும் தெளிவான அறிவு ஒருவேளை அவர்களுக்கு இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மதிலின் கட்டுமான வேலைகளை வேறு எந்த வகையிலும் தொடர முடியாமலிருந்தது. இது புரிய வேண்டுமென்றால் கீழே சொல்வதைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். மதிற் சுவர் நூற்றாண்டுக் காலங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; ஆகவே, கட்டுமானத்தில் முழுக் கவனமும் அறியப்படும் எல்லாக் காலத்திலும் எல்லா மக்கள் கூட்டத்துக்கும் உரிய கட்டடக் கலை அறிவின் பயன்பாடும் மதிலை எழுப்புகிறவர்களிடம் தன்னலமில்லாத பொறுப்புணர்வும் இருப்பது இந்த வேலைக்குத் தவிர்க்க இயலாதது. சிறு வேலைகளுக்காகச் சாதாரண ஆட்களிலிருந்து அப்பாவிகளையும் பெண்களையும் சிறுவர்களையும் அதிகமான தினக் கூலிக்கு அமர்த்தலாம் என்பது சரிதான். தினக் கூலிக்காரர்கள் நான்கு பேரை மேற்பார்வையிடுவதற்குக் , கட்டடக் கலையில் விற்பன்னரான ஒருவர் தேவைப்பட்டார். ஒப்புக் கொண்ட வேலையை முறையாகச் செய்பவரும் அதில் முழுமையாக ஈடுபாடு கொள்பவருமான ஒருவர் கட்டுமானப் பணிகளுக்குத் தேவை. ஆனால் அப்படியான ஆட்கள் அதிகமில்லை. இருந்தும் அதுபோன்றவர்களூக்கான தேவை அதிகமாக இருந்தது.

இந்தப் பணியை ஆலோசனையில்லாமல் ஒப்புக் கொள்ளவில்லை. முதல் கல் நாட்டப்படுவதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, கட்டடக் கலை, குறிப்பாகக் கல் தச்சு, ஞானத்தின் மிகவும் முதன்மையான துறையாக, மதில் கட்டப்பட வேண்டிய சீனப் பகுதி முழுவதும் பாராட்டப்பட்டிருந்தது. இதனோடு கொண்ட தொடர்பிலிருந்துதான் மற்ற கலைகளூம் அங்கீகாரம் பெற்றன. சரியாகக் காலூன்றி நிற்கக் கூடத் தெரியாத சிறுவர்களான நாங்கள், உருண்டைக் கற்களால் ஆசிரியரின் பூந்தோட்டத்துக்கு மதிற்சுவர்போல ஒன்றை எழுப்ப வேண்டும் என்று அவர் போட்ட கட்டளைக்குப் கீழ்ப்படிந்து பூந்தோட்டத்தில் நிற்பதை என்னால் இப்போதும் துல்லியமாக நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆசிரியர் அவருடைய தளர்ந்த நீள் அங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டு மதிற் சுவரை நோக்கி ஓடி வந்து அதை உதைத்துத் தள்ளினார். நேர்த்தியில்லாத எங்கள் வேலைக்காக எங்களைக் கடுமையாகத் திட்டினார். நாங்கள் அழுது கொண்டே பெற்றோரைத் தேடி நாலாப் பக்கமாக ஓடினோம். ஒரு சாதாரண சம்பவம்தான். ஆனால் அது அந்தக் காலஉற்சாகத்தின் குறிப்பிடத் தகுந்த செயலாக இருந்தது.

இருபதாம் வயதில், நான் கீழ்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றிருந்த சமயத்தில்தான் மதில் சுவரின் கட்டுமான வேலைகள் தொடங்கின என்பதால் நான் அதிருஷ்டசாலி. நான் அதிருஷ்டசாலி என்று சொல்லக் காரணம், கிடைக்கக் கூடியவற்றுள் மிகவும் உன்னதமான கலாச்சாரத்தில் பட்டம் பெற்ற ஏராளமானவர்கள் பல வருடங்களுக்குப் பிறகும் அவர்களுடைய அறிவால் செய்யக் கூடிய எதையும் கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் பிரம்மாண்டமான கட்டடக் கலைத் திட்டங்களுடன் திரிந்தார்கள்; ஆயிரக் கணக்கானவர்கள் அவநம்பிக்கையில் மூழ்கினார்கள். ஆனால். கடைசியில் மேற்பார்வையாளர் பணிக்கு நியமிக்கப்பட்டு வேலை செய்ய வந்தவர்கள், ஒருவேளை தாழ்ந்த பதவியாக இருந்தும் கூட வேலைக்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருந்தார்கள். மண்ணில் பாவிய முதல் கல்லுடன் தாங்களும் மதில் சுவரின் பகுதியே என்று நினைத்தவர்களாக இருந்தார்கள். மதிற் சுவர் நிர்மாணத்தைப் பற்றிச் சிந்திப்பதை முடிக்காமலிருந்ததும் அதைப் பற்றி மேலும் சிந்தித்ததும் அவர்களாகவே இருந்தார்கள். நிச்சயமாக இதுபோன்ற கல் தச்சர்களுக்குத் தங்களுடைய பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை மட்டுமே இருக்கவில்லை. மதிலைக் குற்றம் குறையில்லாமல் அதன் முழு வடிவத்தில் பார்த்து விட வேண்டும் என்ற பொறுமையின்மையும் இருந்தது. தினக் கூலிக்காரர்களிடம் இந்தப் பொறுமையின்மை இல்லை. ஏனெனில்,அவர்களுடைய அக்கறை கூலியில் மட்டுமே இருந்தது. உயர் நிலையிலிருந்த மேலதிகாரிகளாலும் இடை நிலையிலிருந்த மேற்பார்வையாளர்களாலும் நிர்மாணத்தின் வேகமான முன்னேற்றத்தைக் காணமுடிந்தது. அதனால் அவர்களால் தங்களுடைய தன்னம்பிக்கையை உய்ர்த்திக் காட்ட முடிந்தது. ஆனால், அவர்கள் செய்யும் சாதாரணமான பணியைப் பொருத்து மிக உயர்ந்த அறிவுத் திறனுள்ள சிறிய மேற்பார்வையாளர்களை உற்சாகமூட்ட வேறு வழிகளைத் தேடவேண்டியிருந்தது. உதாரணமாக, வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான காதங்கள் தாண்டியிருக்கும் ஆள் வாசமில்லாத மலைப் பிரதேசங்களில் மாதக் கணக்காக அல்லது வருடக் கணக்காக, ஒரு கல்லின் மேல் இன்னொரு கல்லை அடுக்கிக்கொண்டு அவர்கள் நின்றிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நீண்ட வாழ்க்கைக்கு மத்தியில் முடிவை நெருங்கவே செய்யாத அதுபோன்ற கடின உழைப்பு அவர்களை ஏமாற்றத்தில் தள்ளி விடும். அதற்கெல்லாம் அப்பால் அவர்களுடைய செயலூக்கத்தைக் குறைத்து விடும். இந்தக் காரணங்களால்தான் பகுதி பகுதியான கட்டுமானம் போதும் என்று தீர்மானித்தார்கள். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குள் ஐநூறு காதம் கட்டி முடிக்கவேண்டிருந்தது. இந்தச் சமயத்துக்குள் மேற்பார்வையாளர்களுக்கு தங்கள் மேலும் மதில் மேலும் உலகத்தின் மேலுமுள்ள எல்லா நம்பிக்கைகளும் காணாமற் போயிருக்கும். இந்தக் காரணத்தால் மதிற் சுவரின் ஆயிரம் காத நீளம் கட்டி முடிக்கப்பட்டதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கும்போதே அவர்கள் தொலைவிடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். பயணத்துக்கு இடையிடையே அங்குமிங்குமாக மதிலின் பூர்த்தி செய்யப்பட்ட பாகங்களைப் பார்த்தார்கள்; மேலதிகாரிகளின் அதிகாரபூர்வமான இருப்பிடங்களைக் கடந்து போனார்கள்; வெகுமதிகள் வழங்கப்பட்டார்கள்; புதிய தொழிலாளர் குழுக்கள் உற்சாகத் துள்ளலுடன் வருவதைக் கேட்டார்கள்;

மதிலுக்குச் சாரம் கட்டுவதற்காக மரங்கள் வெட்டி அடுக்கப்படுவதைப் பார்த்தார்கள்; மதிற் சுவர் கட்டி முழுமையாக்கப்படப் பிரார்த்தனை செய்யும் விசுவாசிகளின் பிரார்த்தனை மந்திரங்கள் ஒலிப்பதைக் கேட்டார்கள். இவையெல்லாம் அவர்களுடைய பொறுமையின்மையைக் கொஞ்சம் மட்டுப்படுத்தின. அவரவர் வீடுகளின் அமைதியான குடும்ப வாழ்க்கையும் ஓய்வும் அவர்களை சாந்தப்படுத்தின. அவர்களுடைய தகவல்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தவர்களின் பணிவான நடத்தையும் அமைதியானவர்களும் சாதுக்களுமான மக்களின் பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையும் அவர்களுடைய வேகத்தை மீண்டும் முடுக்கி விட்டன. பின்னர், நாட்டின் பெருஞ்சுவர் கட்டுமானப் பணியில் மீண்டும் ஈடுபடுவதற்கான விருப்பதை அடக்க முடியாத அவர்கள், எதையும் நம்பிவிடும் குழ்ந்தைகளைபோலத் தங்கள் குடும்பத்தினரிடம் விடை பெற்றனர். அவர்கள் தேவைப்படும் வேளைக்க்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். கிராம மக்களில் பாதிப் பேர் நீண்ட தூரம் அவர்களுடன் வந்து வழியனுப்பினார்கள். கொடிகளையும் தலைப்பாகைகளையும் வீசிக் கொண்டு எல்லாப் பாதைகளிலும் மக்கள் இருந்ததார்கள். இவ்வளவு மகத்தான. இவ்வளவு அழகான, இவ்வளவு நேசத்துக்குரிய நாடு தங்களுடையது என்பதை அவர்கள் முன்னர் ஒருபோதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. யாருக்காகப் பாதுகாப்பு அரணை ஒருவன் நிர்மாணம் செய்கிறானோ மற்ற பிரஜைகள் எல்லாம் அவனுடைய சகோதரர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீண்டிருக்கும் நன்றியுணர்வு இருப்பதால் தங்களுக்கு உரிய எல்லாவற்ரையும் கொடுக்கவும் தங்களால் செய்ய முடிந்ததையெல்லாம் திரும்பத் தரவும் தயாராக இருந்தார்கள். ஒற்றுமை. ஒற்றுமை. தோளோடு தோள் சேர்ந்த ஒரு சகோதர வட்டம். அது உடலின் குறுகலான சிரைகளில் மட்டும் ஓடும் குருதியோட்டமல்ல; சீனாவின் முடிவற்ற தூரங்களினூடே அமைதியாக ஓடும் குருதியோட்டம்.

அப்படியாகப் பகுதி பகுதியான நிர்மாண முறை நமக்குப் புரிகிறது. ஆனால் இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. நான் இந்தப் பிரச்சனையிலேயே நீண்ட நேரம் உழன்று திரிவதில் பொருத்தமின்மை எதுவுமில்லை. முதற்பார்வையில் முக்கியத்துவ மில்லாததாகத் தென்பட்டாலும் மொத்தமான மதில் நிர்மாணத்திலுள்ள முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்தின் கருத்துகளையும் உணர்வுகளையும் புரியவைக்க வேண்டுமானால் இந்தக் கேள்விக்குள் மேலதிக ஆழத்தில் செல்ல என்னால் ஆகாது.

தெய்வீகமான அங்கீகாரம் இருந்தாலும் கூட, மனிதனின் கணக்குகள் அந்தப் பணியுடன் வலுவாக எதிர்நிலை கொண்டிருந்தாலும் கூட பாபேல் கோபுர நிர்மாணத்தை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல அன்றைய கட்டுமானத் திறமை என்று முதலிலேயே சொல்லித் தீர வேண்டும். நான் இதைச் சொல்வதற்குக் காரணம், நிர்மாணத்தின் ஆரம்பக் காலங்களில் சான்றோர் ஒருவர் மிகத் தெளிவாக ஒப்பீடு செய்து ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார் என்பதுதான். பாபேல் கோபுரம் அதன் இலக்கை எட்டுவதில் தோல்வியடைந்தது, உலகம் முழுவதும் தெரிந்திருக்கும் காரணங்களால் அல்ல; அல்லது அதற்கு மிகவும் முக்கியமான காரணத்தைஏற்றுக் கொள்ளப் பட்ட காரணங்களில் கண்டடைய முடியாது என்பதை அவர் இந்தப் புத்தகத்தில் நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார். எழுதி வைக்கப் பட்ட அதிகாரபூர்வமான ஆவணங்களிலிருந்தோ தகவல்களிலிருந்தோ எடுத்தவையல்ல அவருடைய சான்றுகள். அந்த இடத்துக்கே சென்று ஆராய்ச்சி செய்திருப்பதாகவும் அவர் உரிமை பாராட்டிக் கொள்கிறார். கோபுரம் இடிந்து விழுந்ததாகக் கண்டு பிடித்திருக்கிறார். அஸ்திவாரத்தின் பலவீனத்தால் எப்படியும் கோபுரம் இடிந்து விழுமென்றும் கண்டுபிடித்திருந்தார். எப்படிப் பார்த்தாலும் அந்தப் பழைய காலகட்டத்திலிருந்து நம்முடைய காலகட்டம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. நம்முடைய காலகட்டத்தின் விற்பன்னர்கள் எல்லாருக்கும் கல் தச்சைத் தொழிலாக ஏற்றுக் கொண்டவர்களுக்கும் அடிக்கட்டுமானத்தைப் பொருத்தவரை தவறு நேர்ந்ததில்லை. எதுவாக இருந்தாலும் நம்முடைய சான்றோர்கள் நிரூபிக்க எண்ணியது இதையல்ல; ஏனெனில், மனித சமுதாய வரலாற்றில் முதன் முதலாக இந்தப் பெருஞ்சுவர்தான் புதிய பாபேல் கோபுரத்தைக் கட்டுவதற்குத் தேவையான அஸ்திவாரத்தைக் கொடுக்கும் என்று அவர் நம்பினார். முதலில் இந்தப் பெருஞ்சுவர். இரண்டாவது பாபேல் கோபுரம். அந்தக் காலத்தில் எல்லார் கைகளிலும் அவருடைய புத்தகம் இருந்தது. ஆனால் அவர் இந்த கோபுரத்தை எவ்வாறு யோசித்தார் என்று தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்று நான் இன்றும் ஒப்புக்கொள்கிறேன். கால் அல்லது அரை வட்டமல்லாமல் ஒரு முழு வட்டமாக உருவாக்கப்படாத இந்த மதிற் சுவரால் எப்படி ஒரு கோபுரத்தின் அடிக்கட்டுமானமாக முடியும்? இதற்கு அர்த்தம் ஏற்படுவது ஆன்மீகத்தில் மட்டும் தானே? அப்படியிருக்க, எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கும் பணியின் பலனாக நீண்டு நிற்கும் ஒரு மதில் எதற்காகக் கட்டப்பட வேண்டும்?

ஒருவேளை அந்தக் காலத்தில் மக்களின் தலைக்குள்ளே பண்படுத்தப்படாத ஏராளமான சிந்தனைகள் இருந்திருக்கலாம். இந்தச் சான்றோரின் புத்தகம் அதற்கான உதாரணங்களில் ஒன்று. அதனால்தான் ஒரே நோக்கத்துக்காக தங்களால் முடிந்தவரை அவர்களுடன் இணைந்து கொள்ள ஏராளமான மக்கள் முயற்சி செய்திருந்தார்கள். எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதுதான் மனித இயல்பு.அது புழுதியைபோல நிலையில்லாதது; எந்தக் கட்டுப்பாட்டையும் பொறுத்துக் கொள்ளாதது. அதை அதன் கட்டுக்குள் வைத்தால் எல்லாவற்றையும், துண்டுதுண்டாகும்வரை, சுவரையும் வரம்புகளையும் இடம் கால உணர்வற்றுத் தன்னைத் தானேயும் நொறுக்கத் தொடங்கும்.

பகுதி பகுதியாக மதிலைக் கட்டுவது என்ற முறையைத் தீர்மானித்தபோது மேலதிகாரிகள் இது போன்ற செயல்கள் பெருஞ்சுவர் நிர்மாணத்துக்கே அச்சுறுத்தலாகக் கூடும் என்பதை கவனத்திலிருந்து தள்ளிவிடவில்லை. நாங்கள் - இங்கே நான் பலர் சார்பாகத்தான் பேசுகிறேன் - மேலதிகாரிகளின் கட்டளைகளைக் கவனமாக ஆராயும்வரை இவை எதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.நாங்கள் எல்லாரும் சேர்ந்து செய்து கொண்டிருந்த இந்த மகத்தான பணியில் சாதாரண வேலைகளுக்குக் கூட மேலதிகாரிகள் இல்லாமல், எங்களுடைய படிப்போ அறிவோ மட்டும் போதுமானதாக இருக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தோம். மேலதிகாரிகளின் அலுவலகத்தில் - அது எங்கே இருந்தென்றோ அங்கே யாரெல்லாம் இருந்தார்களென்றோ நான் விசாரித்த யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை - இப்போதும் தெரியாது - எல்லா மானிட யோசனைகளும் ஆசைகளும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன என்பது நிச்சயம். எல்லா மானுட இலட்சியங்களும் நிறைவுகளும் அதற்கு எதிராகச் சுழன்று கொண்டிருந்தன. தெய்வீக உலகங்களின் மகத்துவப் பிரதிபலிப்புகள் அவர்கள் தங்கள் திட்டங்களைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக அவர்களுடைய கைகளில் வந்து விழுந்தன.

இந்தக் காரணத்தால் அதிகாரிகள் ஆத்மார்த்தமாக விரும்பியிருந்தால் தொடர்ச்சியான நிர்மாணப் பணியைத் தடை செய்த இடர்ப்பாடுகளைக் கடந்திருக்க முடியுமென்று உண்மையுணர்வுள்ள ஒரு பார்வையாளனுக்குத் தோன்றும். அப்போது அதிகாரிகள் திட்டமிட்டுத்தான் பகுதி பகுதியான கட்டுமான முறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற முடிவைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிராது. பகுதி பகுதியான கட்டுமானம் தற்காலிகமானது. எனவே பொருத்தமற்றது. அதிகாரிகள் பொருத்தமற்ற ஒன்றையே வேண்டுமென்று விரும்பினார்கள் என்ற முடிவு மட்டும் மிஞ்சுகிறது. விசித்திரமான முடிவு. சரிதான். ஒருவகையில் பார்த்தால் இதைப் பற்றிச் ல்ல ஏராளமாக இருக்கின்றன. இன்று ஒருவர் இதைப் பற்றி ஒருவேளை அச்சமில்லாமல் விவாதிக்கலாம். அந்தக் காலத்தில்,அநேக ஆட்கள் மத்தியில் - அவர்களில் மேன் மக்களும் உட்படுவர் - ரகசியமான ஒரு அறிவுரை இருந்தது. அது இவ்வாறூ;உங்களுடைய சகல திறன்களையும் பயன்படுத்தி மேலதிகாரிகளின் கட்டளைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுவும் ஓர் அளவுக்கு. பின்பு அதை பற்றி நுணுகி யோசிக்காமலிருங்கள். அது தொல்லை என்பதானால் அல்ல; தொல்லையாகத்தான் இருக்கும் என்பதும் நிச்சமல்ல. தொல்லைக்கும் தொல்லையின்மைக்கும் இந்தக் கேள்விக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதற்குப் பதிலாக வசந்த காலத்து நதியைப் பாருங்கள். வலுவடையும் வரை அது உயர்ந்து கொண்டிருக்கிறது. கடலை அடையும்வரை

அதன் நீண்ட வழியை தக்கவைத்துக் கொண்டே நீண்ட வழியின் கரை மண்ணை வளமாக்குகிறது. கடலில் அதற்கு மனமார்ந்த வரவேற்பு காத்திருக்கிறது. ஏனெனில் அது மிகச் சிறந்த உதவியாளன். இதுவரைக்கும் நீங்கள் அதிகாரிகளின் கட்டளைகளைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு நதி கரை புரண்டு ஓடுகிறது. அதற்கு அதன் உருவமும் வரம்புகளூம் இல்லாமற் போகின்றன. நீரொழுக்கின் வேகம் குறைகிறது. மண்ணில் சிறிய சிறிய தீவுகளை உருவாக்கிக் கொண்டு வயல்களை நாசம் செய்து கொண்டு அதன் விதியைப் புறக்கணிக்க முயற்சி செய்கிறது. ஆனால் இந்தப் புதிய விரிவாக்கத்தில் அது நீண்டகாலம் தொடர்ந்து செல்ல முடிவதில்லை; அதன் கரைகளுக்குள் மறுபடியும் திரும்பி வந்தே ஆகவேண்டும். அடுத்து வரும் கோடையில் வற்றி வறண்டு போகவும் வேண்டும். இங்கே நீங்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

இந்த நீதிக் கதைக்கு, பெருஞ்சுவர் நிர்மாண வேளையில் அசாதாரண முக்கியத்துவமும் வலிமையும் இருந்திருக்கலாமென்றாலும் என்னுடைய இந்தக் கட்டுரையில் மிகவும் வரையறுக்கப்பட்ட முக்கியத்துவமே உள்ளது. என்னுடைய விசாரணை முற்றிலும் வரலாற்று ரீதியிலானது; என்றோ மறைந்து போன மேகங்களிலிருந்து இப்போது மின்னல்கள் உருவாவதில்லை. அந்தக் காரணத்தால் பகுதி பகுதியான கட்டுமானத்தைப் பற்றிய அன்றைய மக்களை நிறைவடையச் செய்த ஒரு விளக்கத்தை விட ஆழமாகச் செல்லும் ஒன்றுக்காக நான் கடினமாக முயற்சி செய்யலாம். என்னுடைய சிந்தனைத் திறன் என் மேல் திணிக்கும் வரையறைகள் மிகக் குறுகலானவை; என்றாலும் , இங்கே கடந்து செல்லவேண்டிய இடங்கள் முடிவற்றவை.

யாருக்கு எதிராக இந்தப் பெருஞ்சுவர் அரணாக இருக்க வேண்டியிருந்தது? வடக்கில் உள்ள மக்களுக்கு எதிராக. நான் சீனாவின் தென்கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். வடக்கிலுள்ள மக்கள் எங்களை அங்கே தொந்தரவு செய்ய முடியாது. புராதன நூல்களில் நாங்கள் அவர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். அவர்களுடைய இயற்கையான குணத்தையொட்டி அவர்கள் செய்யும் கொடூரங்களை நினைத்து அமைதியான மரங்களுக்கடியில் நின்று நாங்கள் பெருமூச்சு விட்டிருக்கிறோம். இந்தப் பாழாய்ப் போன இனத்தவர்களின் முகங்களையும் திறந்த வாய்களையும் கூர்மையான பற்களுள்ள தாடையையும் பற்களால் கடித்துக் கீறி விழுங்கு வதற்காக இரையைத் தேடுவதுபோலத் தெரியும் பாதி மூடிய கண்களையும் ஓவியனின் உண்மையாக சித்தரிப்பு காண்பிக்கிறது. எங்கள் குழந்தைகள் அடம் பிடிக்கும்போது நாங்கள் இந்தப் படங்களைக் காட்டுவோம். உடனே அழுது அலறிக் கொண்டு அவர்கள் எங்கள் கைகளைத் தேடி ஓடி வருவார்கள். எனினும் இந்த வடவர்களைப் பற்றி இதை விட அதிகமாக எதுவும் எங்களுக்குத் தெரியாது. அவர்களை நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் எங்களுடைய கிராமத்திலேயே வசித்திருந்தாலும் ஒருபோதும் அவர்களைப் பார்த்ததில்லை. அவர்களுடைய முரட்டுக் குதிரைகளில் ஏறி, அவர்களால் முடிந்த எவ்வளவு வேகத்தில் எங்களை நோக்கிப் பாய்ந்து வந்தாலும் கூட நாங்கள் ஒருபோதும் அவர்களைப் பார்த்திருக்க முடியாது. அவர்களால் எங்களை நெருங்க முடியாத அளவுக்குப் பெரியது எங்கள் நாடு; அவர்கள் அத்துவான இடத்தில் தங்களுடைய பயணத்தை முடித்துக் கொண்டிருப்பார்கள்.

நாங்கள் எங்களுடைய வீடுகளையும் பாலங்களையும் அருவிகளையும் பெற்றோரையும் விசும்பும் மனைவிகளையும் எங்களுடைய பாசத்துக்கு ஏங்கும் பிள்ளைகளையும் விட்டு விட்டு தூரத்திலிருக்கும் நகரத்தில் பயிற்சி பெறுவதற்காக ஏன் போனோம்? அங்கிருந்து பின்னும் தொலைவில் வடக்கேயுள்ள மதில் சுவரை நோக்கிப் பயணம் செய்யும்போது எங்களுடைய சிந்தனைகள் இவையாக இருந்தன. ஏன்? மேலதிகாரிகளிடம் ஒரு கேள்வி. எங்களுடைய தலைவர்களுக்கு எங்கலைத் தெரியும். பிரம்மாண்டமான பதற்றத்தில் மூழ்கியிருக்கும் அவர்களுக்கு எங்களைப் பற்றியும் எங்களுடைய வேலையைப் பற்றியும் தெரியும். நாங்கள் எளிய குடிசைகளில் ஒன்றாக வசிப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் நடுவில் அமர்ந்து குடும்பத் தலைவன் சொல்லும் பிரார்த்தனைகளை அவர்கள் விரும்பலாம்; விரும்பாமலுமிருக்கலாம். மேலதிகாரிகளைப் பற்றி இதுபோன்ற கருத்துகளை விளக்க என்னை அனுமதித்தால் என்னுடைய அபிப்பிராயம் , அது புராதன காலத்திலிருந்தே நிலைபெற்று வருவது என்பதாக இருக்கும். ஆனால் யாரோ ஒருவருடைய அழகான கனவைப் பற்றி விவாதிக்க அவசரமாகக் கூட்டப்பட்டு அவசரமாகக் கலைக்கப்படும் சீன அதிகாரிகளின் குழுக் கூட்டத்தைப் போலக் கூட்டப்பட்ட கூட்டமல்ல இது. மேலதிகாரிகளின் சபை கூடியதனால் அன்று மாலையே, ஏற்கனவே என்ன முடிவு செய்திருந்தார்களோ அதை அமல்படுத்துவதற்காக,அதிகாரிகளுக்கு முன் தினம் மகத்தான ஒரு வரத்தைக் கொடுத்த ஒரு கடவுளுக்குச் செய்யும் சடங்குத்தனமான விளக்கு அலங்காரம் போன்ற ஒன்றாக, எங்களை அழைத்துக் கொண்டு போனார்கள். அதை அமல்படுத்துவதற்காக நாளை தீபாலங்காரங்கள் ஏற்படுத்துவதற்கு முன்பு குறுந்தடிகளால் தாக்கி ஏதோ ஓர் இருண்ட மூலையில் தள்ளுவதற்காகக் மட்டுமே ஆட்களை முரசு அறைந்து படுக்கையிலிருந்து எழுப்பிக் கொண்டு போனார்கள். அநாதி காலம் முதல் சர்வ அதிகார சபை நிலைத்திருந்தது என்று நான் நம்புகிறேன்; பெருஞ்சுவரைக் கட்டும் தீர்மானமும் அதுபோன்றதுதான். தாங்கள்தான் அதற்குக் காரணம் என்று நம்பிக் கொண்டிருந்த வடக்கேயுள்ள முட்டாள் கூட்டம். அதற்குக் கட்டளையிட்டது தானே என்று நம்பிய முட்டாள் பேரரசர். ஆனால், இந்த மதிலைக் கட்டுகிற நாங்கள் அதுஅப்படியல்ல என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோம்; அதனால் வாயை மூடிக் கொள்ளுகிறோம்.

***

பெருஞ்சுவர் கட்டுமான வேளையிலும் அதற்குப் பிறகு இன்று வரையும் மனித இனத்தின் ஒப்பீட்டு வரலாற்றில் - இந்த முறையில் மட்டும் சாராம்சத்தைக் கண்டடைய முடிகிற சில பிரச்சனைகள் இருக்கின்றன - ஆழ்ந்திருந்தேன். சீனர்களான எங்களுக்கு துல்லியமான தனித்தன்மையுள்ள குறிப்பிடத் தகுந்த சமூக அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு பிடித்தேன்.மற்றவை தெளிவின்மையில் தனித்தன்மை கொண்டவை. இந்த நிகழ்வுகளின், குறிப்பாக கடைசி அம்சத்தின் காரணங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் எல்லா சமயத்திலும் என்னுடைய ஆர்வத்தைக் கிளறி விட்டதுண்டு. இப்போதும் கிளறி விடுகிறது. இந்த மதிற் சுவரின் கட்டுமானம் சாராம்சத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.

எங்களுடைய நிறுவனங்களில் மிகவும் பூடகமான அமைப்பு எங்கள் பேரரசுதான். பீக்கிங்கில், பேரரசரின் அவையில் , கற்பனைதான் எனினும் , இந்த விஷ்யத்தைப் பற்றி தெளிவான கருத்து இருக்கிறது. உயர்நிலைப் பள்ளிகளில் அரசியல் கோட்பாடும் வரலாறும் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விஷயங்களில் அதிக ஞானமுள்ளவர்கள் என்றும் அவர்களின் அறிவை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கத் தகுதியானவர்கள் என்றும் பாராட்டப்படுகிறது. கீழ்நிலை வகுப்புகளுக்குச் செல்லும்போது ஆசிரியர்கள், மாணவர்களின் அறிவைப் பற்றிய சந்தேகங்கள் நீங்குவதாகவும் நூற்றாண்டுகளாக மக்களின் மனதுக்குள் அடித்து இறக்கப்பட் சில கருத்துகளைச் சுற்றி மேம்போக்கான ஒரு கலாச்சாரம் ஆகாயம் முட்ட உயர்ந்திருப்பதாகவும் நாம் காணலாம். மரபான அவற்றின் உண்மைகள் எதுவும் காணாமற் போகவில்லை. எனினும் இந்தப் பதற்றத்தின் மூடு பனிக்குள் அந்த உண்மைகள் பார்க்கப்படாமல் போகின்றன.

ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் பேரரசைப் பற்றிய இந்தக் கேள்விக்குத்தான் சாதாரண மக்களைப் பதில் சொல்லும்படிச் செய்ய வேண்டும். என்னவானாலும் பேரரசின் கடைசிப் புகலிடம் அவர்கள்தானே? என்னுடைய சொந்த நாட்டுக்காக இனி ஒருமுறை மட்டுமே என்னால் பேச முடியும் என்று இங்கே வெளிப்படையாகச் சொல்லுகிறேன். என்றென்றும் இவ்வளவு அழகும் வளமுமான மாற்றங்களை ஏற்படுத்தும் இயற்கைக் கடவுள்களையும் அவர்களின் சடங்குகளையும் தவிர்த்தால் நாங்கள் பேரரசரைப்பற்றியே யோசிக்கிறோம். ஆனால் இப்போதைய பேரரசரைப் பற்றியல்ல. அவர் யாரென்றோ அவரைப் பற்றிய தெளிவான தகவல்களோ தெரிந்திருந்தால் ஒருவேளை அவரைப் பற்றி யோசிக்கலாம். சரிதான் - எங்களுடைய ஒரே ஒரு ஆர்வம் இது மட்டுமே இந்த விஷயத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள நாங்கள் எப்போதும் முயன்று கொண்டிருக்கிறோம். இது விசித்திரமானதாகத் தோன்றலாம். எனினும் எங்கள் நாடு முழுக்கவும் அருகிலும் தொலைவிலுமிருக்கும் கிராமங்களிலும் சுற்றித் திரிந்த பயணிகளிடமிருந்தோ எங்கள் நாட்டு நீரோடைகளில் மட்டுமல்லாமல் புனித நதிகளிலும் நீர்வழிப் பயணம் செய்த மாலுமிகளிடமிருந்தோ எதையாவது கண்டுபிடிப்பது அசாத்தியமற்றதாக இருந்தது. ஒருவர் ஏராளமான செய்திகளைக் கேள்விப்படுகிறார் என்பது சரிதான். ஆனால் திட்டவட்டமாக எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

எந்த நீதிக் கதையாலும் நியாயப்படுத்தப்பட முடியாத அளவு, சொர்க்கத்தாலும் பாதுகாக்க முடியாத அளவு விரிந்து கிடப்பது எங்கள் நாடு. பீக்கிங் இதில் ஒரு புள்ளி மட்டுமே. அரண்மனை புள்ளியை விடவும் குறைந்தது. இருந்தாலும் உலகிலுள்ள எல்லா அரச வம்சத்தையும் போல எங்களுடைய பேரரசரும் கீர்த்தி பெற்றவர். ஒப்புக் கொள்கிறேன். இப்போது இருக்கும் சக்ரவர்த்தி நம்மைப் போன்ற ஒரு மனிதர், ஒருவேளை, பெரும் அளவுகள் கொண்ட மஞ்சத்தில் - சிறியதும் குறுகலானதுமான கட்டிலாக இருப்பதற்கான சாத்தியமே அதிகம் - படுத்துக் கிடக்கிறார். நம்மைப்போலவே அவரும் சில சமயம் உடம்பை நிமிர்த்தி முறித்துக்கொள்ளவும் மிகவும் களைப்படையும்போது அழகான வாயால் கொட்டாவி விடவும் செய்கிறார். அவற்றைப் பற்றி ,திபெத்தியப் பீடபூமியின் எல்லைக்கு அருகில் - ஆயிரக்கணக்கான காதங்கள் தொலைவிலுள்ள தென் பகுதியில் - எங்களுக்கு என்ன தெரியும்? அதுமட்டுமல்ல, ஏதாவது தகவல்கள் இங்கே வந்து சேருமானால் கூட - மிகவும் தாமதமாகவே இங்கே வந்து சேரும் - எங்களை வந்தடையும் முன்பே பழையதாகிவிடும். எப்போதும் - விவேக ஞானமுள்ளவர்களெனினும் அரசதிகாரத்துக்கு எதிராகச் செயல் படுபவர்கள், விஷம் தோய்ந்த அம்புகளுடன் ஆட்சியாளரை அவருடைய பதவியிலிருந்து நீக்க என்றென்றும் முயன்றுகொண்டிருப்பவர்கள் என்று அறியப்படாத கனவான்களின் கூட்டம். அரசவை உறுப்பினர்கள் - இவர்களால் சூழப்பட்டிருப்பார் பேரரரசர். பணியாட்கள், நண்பர்கள் வேடம் புனைந்த சதிகாரர்களும் பகைவர்களும் இருப்பார்கள். சாம்ராஜ்ஜியம் நிரந்தரமானது. ஆனால் சக்ரவர்த்தி அரியாசனத்தில் ஆட்டம் கண்டு கொண்டும் இடறிவிழுந்து கொண்டுமிருக்கிறார். கடைசியில் அரச வம்சம் முழுவதுமாக மூழ்கி, மரணப் பதற்றத்தில் இறுதி மூச்சு விடுகிறது. இந்தப் போராட்டங்களைப் பற்றியோ துயரங்களைப் பற்றியோ மக்கள் ஒருபோதும் அறிவதில்லை. தாமதமாக வந்து சேர்ந்தவர்களைப் போலவும் நகரத்துக்கு வந்த அந்நியர்களைப் போலவும் கூடவே கொண்டு வந்திருக்கும் உணவை அருந்திக் கொண்டு ஆட்கள் கூடையிருக்கும் தெருவோரத்தில் அமைதியாக நிற்கும்போது, முன்னால். வெகு தொலைவில் நகரத்தின் இதயப் பகுதியிலிருக்கும் சந்தைத் திடலில் அவர்களுடைய ஆட்சியாளரின் படுகொலை நடந்து கொண்டிருக்கும்.

இந்தச் சூழ்நிலையைச் சிறப்பாக விளக்கும் நீதிக் கதையொன்று உண்டு: அது இப்படிப் போகிறது. சாம்ராஜ்ஜிய சூரியனுக்கு முன்னாலிருந்து மிக மிகத் தொலைவுக்கு ஓடி ஒளியும் முக்கியத்துவமில்லாத நிழலான உனக்கு, வெறும் குடிமகனான உனக்கு சக்ரவர்த்தி ஒரு செய்தியனுப்புகிறார். மரணப் படுக்கையிலிருந்து உனக்காக மட்டும் ஒரு செய்தியனுப்புகிறார். அவர் தூதனிடம் படுக்கை அருகில் முழந்தாளிட்டு உட்காரும்படிக் கட்டளையிட்டு விட்டு செய்தியை ரகசியமாக அவனிடம் சொல்லுகிறார். அவர் அந்தச் செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கற்பித்திருக்கிறார். எனவே, அதை திரும்பத் தன்னுடைய செவியில் ரகசியமாகச் சொல்லும்படி உத்தரவிடுகிறார். பின்பு அது சரிதான் என்று தலையசைத்து ஏற்றுக் கொள்கிறார். ஆம். அவருடைய மரணத்துக்குச் சாட்சி வகிப்பதற்காகக் கூடி நின்றவர்களுக்கு முன்னால் தடையாக இருந்த எல்லாச் சுவர்களும் இடித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன. பெரிய, உயரமான படிகளில் பேரரசின் மகத்தான இளவரசர்கள் ஒண்டி ஒதுங்கி நிற்கிறார்கள். அவர்கள் எல்லார் முன்னிலையிலும் சக்ரவர்த்தி செய்தியைச் சொல்கிறார். தூதன் உடனே புறப்படுகிறான். திடகாத்திரனான, களைப்பே தீண்டாத அந்த மனிதன் வலது கையாலும் இடதுகையாலும் தள்ளிக்கொண்டு கூட்டத்துக்கு மத்தியில் வழியை உண்டாக்குகிறான்; எதிர்ப்புத் தென்படுகிறபோது சூரிய முத்திரை பதித்த மார்பைச் சுட்டிக் காட்டுகிறான். பிற எந்த மனிதனும் உண்டு பண்ணுவதை விடவும் வேகமாக வழியமைத்துக் கொள்கிறான். முடிவில்லாத அளவுக்குப் பெரிய ஆட்கூட்டம். வெட்டவெளியில் வந்திருந்தால் அவன் எவ்வளவு வேகமாகப் போயிருப்பான்? உடனடியாகவே அவனுடைய முட்டியால் தட்டப்படும் வரவேற்கத் தந்த ஓசையை உன்னுடைய கதவில் கேட்டிருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய வலிமையை எவ்வளவு பயன் தராத விதத்தில் பிரயோகிக்கிறான். இருந்தும் அவன் இப்போதும் அரண்மனையின் மிகமிக உள்ளே இருக்கும் அறைகளைத்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறான். ஒருபோதும் அவன் மறு முனையை அடையப் போவதில்லை. அதில் வெற்றியே பெற்றாலும் அவன் எதையும் அடையப் போவதில்லை. இன்னும் மண்டபங்களைக் கடக்க வேண்டும். மண்டபங்களுக்குப் பிறகு அரண்மனை. மீண்டும் இன்னொரு முறை படிக்கட்டுகள்; மண்டபங்கள். இன்னொருமுறை இன்னொரு அரண்மனை. இதுபோல ஆயிரக் கணக்கான ஆண்டுகள். அப்படியாக, கடைசியில் மிகவும் வெளியிலிருக்கும் கோட்டை வாயிலைத் தாண்டினால் - ஆனால் ஒருபோதும், ஒருபோதும் அது நடக்காது - சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை முன்னால் காணலாம். தன்னுடைய குப்பை கூளங்களால் நிறைந்திருக்கும் உலகத்தின் மையம். இறந்த ஒரு மனிதரின் செய்தியுடன் கூட யாரும் அந்த வழியாகச் செல்ல முடியாது. ஆனால் அந்தி மயங்கும்போது நீ உன் ஜன்னலருகில் அமர்ந்து கனவு காண்கிறாய்.

இதுபோல ஆசையுடனும் ஏமாற்றத்துடனும்தான் எங்களுடைய மக்கள் பேரரசரைக் காண்கிறார்கள்.எந்தச் சக்ரவர்த்தி ஆட்சி செய்கிறார் என்று அவர்களுக்குத் தெரியாது. அரச பரம்பரையின் பெயரைப் பற்றிக் கூட சந்தேகங்கள் நிலவுகின்றன. பள்ளிக் கூடங்களில் வரிசைக் கிரமமாக, தேதி வாரியாக அரச பரம்பரையைப் பற்றிக் கற்பிக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்திலுள்ள உலகந்தழுவிய சந்தேகங்கள் பிரம்மாண்டமானவை என்பதால் மிகப் பெரிய அறிஞர்கள் கூட சந்தேகத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விடுகிறார்கள். எங்களுடைய கிராமங்களில் முன்பு எப்போதோ மறைந்து போன சக்ரவர்த்திகள் அரியாசங்களில் அமரவைக்கப்படுகிறார்கள். பாட்டில் மட்டுமே வாழ்ந்திருந்த பேரரசரின் அறிவிப்பு ஒன்று, அண்மைக் காலத்தில் ஒரு பூசகர் மூலம் பலிபீடத்தின் முன்னால் வாசிக்கச் செய்யப்பட்டது. பழைய வரலாறாகிவிட்ட யுத்தங்கள் எங்களுக்குப் புதியவை. பக்கத்து வீட்டுக்காரன் இந்த செய்தியைத் தெரிவிக்க உற்சாகத்துடன் ஓடி வருகிறான். நேசிப்பால் கெடுக்கப்பட்டவர்களும், தந்திரக்காரர்களான அரசவை உறுப்பினர்களால் முறையற்ற வழிகளில் இட்டுச் செல்லப்பட்டவர்களும், ஆசையை அடக்க முடியாதவர்களும் பேராசைக்காரர்களும் அடங்காத காமம் கொண்டவர்களுமான பேரரசிகள் என்றென்றும் வெறுக்கப்படும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். எவ்வளவு காலத்துக்கு முன்பு அவர்கள் புதைக்கப்பட்டார்களோ அந்த அளவு பளபளப்பானவையாக இருந்தன அவர்களைப் பற்றிய வண்ணமயமான கதைகளும். ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய ஒரு வறட்சிக் காலத்தில் ஒரு சக்ரவர்த்தினி தன்னுடைய கணவனின் ரத்தத்தை எப்படிக் குடித்தாள் என்பதை கடும் மனவேதனையில் எழுந்த அழுகையுடன் நாங்கள் கேட்கிறோம்.

அப்படியாக எங்களுடைய மக்கள் இறந்துபோன பேரரசர்களுடன் தொடர்பு கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கும் ஆட்சியாளரை இறந்துபோனவராகத் தவறுதலாக நினைக்கிறார்கள். ஒருமுறை, ஒருவனுடைய வாழ்க்கையில் ஒருமுறை மட்டும், ஓர் அரண்மனை அதிகாரி மாநிலச் சுற்றுப் பயணத்திற்கிடையில் எதிர்பாராமல் எங்களுடைய கிராமத்துக்கு வருவார் என்றால், அரசாங்கத்தின் பெயரால் அறிவிப்புகள் செய்வாரென்றால், வரி விவரப் பட்டியலைப் பரிசோதனை செய்வாரென்றால், பள்ளிச் சிறுவர்களைப் பற்றி ஆய்வு நடத்துவாரென்றால், எங்களுடைய செயல்களையும் பிரச்சனைகளையும் பற்றி பூசகரிடம் விசாரிப்பாரென்றால் பிறகு பல்லக்கில் ஏறுவதற்கு முன்பாக கூடி நிற்கும் ஆட்களிடம் தன்னுடைய அபிப்பிராயத்தை தெளிவில்லாத மொழியில் சொல்லுவாரென்றால் எல்லா முகங்களிலும் ஒரு சிரிப்பு மின்னி மறையும். ஒவ்வொருவரும் பக்கத்திலிருப்பவரைக் கள்ளப் பார்வை பார்த்து அதிகாரி அதைப் பார்த்து விடாமலிருக்கத் தங்களுடைய குழந்தைகளை நோக்கிக் குனிந்து கொள்வார்கள். அவர்கள் இப்படி யோசிக்கிறார்கள்: இறந்துபோன ஒருவரைப் பற்றி உயிரோடு இருப்பதுபோல எதற்காக அவர் விசாரிக்கிறார்? அவருடைய பேரரசர் நெடுங்காலத்துக்கு முன்பே மறைந்து விட்டார். அரச பரம்பரையும் துடைத்து அழிக்கப்பட்டாயிற்று. அதிகாரி எங்களிடம் வேடிக்கை பேசுகிறார். எனினும் அவரைக் கோபப்படுத்தி விடாமலிருக்க நாங்கள் அதைக் கவனிப்பதுபோல காட்டிக் கொள்வோம். ஆனால் நாங்கள் எங்களுடைய இன்றைய அதிகாரிகளைத் தவிர யாருக்கும் கீழ்ப்படிய மாட்டோம். ஏனெனில் அப்படிச் செய்வது குற்றம். விடை பெறும் வாகனத்துக்குப் பின்னால் ஏற்கனவே சிதிலமாகிபோன முதுமக்கள் தாழியிலிருந்து ஏதேனும் ஒருவன் கிராமத்தின் ஆட்சியாளனாக எதேச்சையாக உயர்ந்தெழுகிறான்.

இதைப் போலவே எங்களுடைய மக்கள் நாட்டில் ஏற்பட்ட புரட்சிகளாலும் சமகாலப் போர்களாலும் சிறிது கூட பாதிப்படைவதில்லை. என்னுடைய இளம் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நிலைவு கூர்கிறேன். அண்டையில் இருக்கும், ஆனால் வெகு தூரத்திலிருக்கும் நாட்டில் ஒரு கலகம் வெடித்தது. அதற்கு என்ன காரணம் என்று என்னால் நினைவு கூர முடியவில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அங்கே எந்த வேளையிலும் புரட்சி வெடிக்கலாம்; அங்கே இருந்த மக்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள். அந்தப் பிரதேசத்தைக் கடந்து வந்த ஒரு பிச்சைக்காரன் புரட்சிக்காரர்களால் வெளியிடப்பட்ட ஒரு துண்டறிக்கையை என்னுடைய தந்தையின் வீட்டுக்குக் கொண்டு வந்தான். அது ஓர் உற்சவ தினம். எங்களுடைய அறைகள் விருந்தினர்களால் நிரம்பி இருந்தன. மையமான இடத்தில் உட்கார்ந்திருந்த பூசகர் அந்தத் துண்டறிக்கையை வாசித்தார். திடீரென்று எல்லாரும் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார்கள். இந்த சந்தடியில் துண்டறிக்கை கிழிந்து போனது. முன்னரே தாராளமாகப் பிச்சை பெற்றிருந்த பிச்சைக்காரனை உதைத்து வெளியேற்றி விட்டு அழகான அந்த நாளைக் கொண்டாடுவதற்காக விருந்தாளிகள் கலைந்தார்கள்.எதனால்? இந்த அண்டை நாட்டு எழுத்து வடிவம் சில முக்கிய அம்சங்களில் எங்களுடைய மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது. எங்களுடையது மிகப் புராதனமானது. இந்த வித்தியாசம் துண்டறிக்கையின் சில வாசகங்களிலும் இருந்தன. பூசகர் சிரமப்பட்டு இரண்டு வரி வாசிப்பதற்கு முன்பே நாங்கள் எங்களுடைய தீர்மானத்துக்கு வந்து விட்டிருந்தோம். முன்பு எப்போதோ சொல்லப்பட்ட பழைய வரலாறு. நீண்ட காலத்துக்கு முன்பே அமுங்கிப் போயிருந்த பழைய துக்கங்கள். அங்கே அப்போது நிலவிய பயங்கரத்தை அந்தப் பிச்சைக்காரனால் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரியவைக்க முடிந்ததெனினும் - இப்படித்தான் என் ஞாபகம் - மறுக்கும் விதமாகத் தலையை உலுக்கிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அதை அதிகம் கவனிக்க மறுத்தோம். நிகழ்காலத்தைப் பாழடித்துக் கொள்ள எங்கள் மக்கள்தான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்?

இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து உண்மையில் எங்களூக்கு ஒரு பேரரசரே இல்லை என்ற முடிவுக்கு யாராவது வந்து சேர்வார்கள் என்றால் அவர்கள் உண்மைக்கு வெகுதூரத்தில் இல்லை. மீண்டும் மீண்டும் இது நடந்து கொண்டேயிருக்கும். எங்களைக் காட்டிலும் சக்ரவர்த்தியிடம் விசுவாசம் வைத்திருப்பவர்கள் யாரும் இல்லாமலிருக்கலாம். ஆனால் எங்களுடைய விசுவாசத்திலிருந்து பேரரசர் அவசியமான விதத்தில் எதையும் தேடி அடைவதில்லை. எங்கள் கிராமத்தின் எல்லையில் சிறிய ஒரு கம்பத்தின் மேல்

புனித டிராகனின் உருவம் இப்போதும் இருக்கிறது. மனித இனத்தின் ஞாபகத்தின் தொடக்கத்திலிருந்தே பீக்கிங்கைப் பார்த்து நினைவாஞ்சலியாக தீயாகக் கனலும் சுவாசத்தை விட்டுக்கொண்டிருந்தது என்பதும் சரிதான். ஆனால் எங்கள் கிராமத்து மக்களுக்கு பீக்கிங்கே கூட பரலோகத்தை விட அந்நியமானது. அடுத்தடுத்து வீடுகள் கொண்ட எங்கள் குன்றுகளிலிருந்து பார்த்தால் தெரியும் வயல்வெளிகளை விடப் பெரிய கிராமம் உண்மையில் இருக்கிறதா? இரவு பகலாக இந்த வீடுகளுக்குள்ளே பரபரக்கும் மக்கள் கூட்டம் உண்மையில் அங்கே இருக்கிறதா? பீக்கிங்கை அப்படிப்பட்ட நகரம் என்று யோசிக்கவும் அதுவும் அதன் சக்ரவர்த்தியும் ஒன்று என்று நினைக்கவும் உள்ளதை விட அதிகம் சிரமம் தோன்றுகிறது. யுகம் யுகமாக சூரியனுக்குக் கீழே அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கும் மேகம். இதுபோன்ற அபிப்பிராயங்களை வலியுறுத்துவதன் விளைவுதான் சுதந்திரமும் கட்டுப்பாடற்றதுமான வாழ்க்கை. அது எந்த வகையிலும் நன்னெறிக்குப் புறம்பானதல்ல. என்னுடைய சொந்த கிராமத்திலுள்ளவர்களைப் போன்று இந்த நல்ல குணம்கொண்டவர்களை என்னுடைய பயணங்களில் எந்த இடத்திலும் பார்த்ததேயில்லை. ஆனால் சமகாலத்தன்மை கொண்ட எந்த சட்டத்துக்கும் உட்படாத, புராதன காலங்களிலிருந்து எங்களை வந்தடைந்த உபதேசங்களையும் எச்சரிக்கைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் வாழ்க்கை.

பொதுப்படையாகச் சொல்லுவதைத் தவிர்க்கிறேன். என்னுடைய மாநிலத்திலிருக்கும் எண்ணற்ற கிராமங்கள் எல்லாமும் இப்படியானவைதான் என்றும் நான் எண்ணவில்லை. பிறகு சீனாவிலேயே இருக்கும் ஐநூறு மாநிலங்களின் காரியத்தைச் சொல்ல வேண்டியதுமில்லையே? இருந்தும் இந்த விஷயத்தில் நான் வாசித்த ஏராளமான புத்தகங்கள், எனது தனிப்பட்ட பார்வைக் போக்கு ஆகியவர்றின் அடிப்படையில் இப்படி அபிப்பிராயம் கொள்ள நான் துணிகிறேன். குறிப்பாக, ஏராளமான மனிதர்களுடன் தொடர்புள்ள இந்த மதிலின் நிர்மாணம், நுட்பமான அறிவுள்ள ஒருவனுக்கு, பெரும்பாலும் எல்லா மாநிலங்களும் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்த ஒருவனுக்கு , இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இப்போதைய பேரரசருடன் எங்கள் கிராமம் காட்டும் நடத்தை, அடிப்படை ஒர்றுமையுள்ள ஒன்ரை நினைவுபடுத்துகிறது என்று சொல்ல நான் ஆயத்தமாகிறேன். இந்த நடத்தையை மகத்தானதென்று சித்தரிக்க எனக்கு விருப்பமில்லை. மாறாக நேர் எதிராகவே விரும்புகிறேன். உண்மையில் இதன் முதன்மைப் பொறுப்பு அரசாங்கத்திடம்தான் இருக்கிறது. உலகில் மிகப் புராதனமான சாம்ராஜ்ஜியமான. விரிவடைவதில் வெற்றி காணாத அல்லது விரிவடைவதில் அக்கறை காட்டாத நாட்டின் மிகத் தொலைவிலிருக்கும் எல்லைவரைக்கும் முடிவில்லாத இந்தச் செயல்பாடுகளைக் கொண்டு சேர்க்கிற அரசுதான் களங்கமில்லாத இந்த அரசு என்பது சரியே. மக்களின் நம்பிக்கையிலும் எண்ணத்திலும் ஒரு சோர்வு இருக்கிறது. பேரரசை பீக்கிங்கின் மந்தத்தன்மையிலிருந்து எழுப்பி உயர்த்துவதிலும் நடைமுறையிலிருக்கும் தெளிவான எதார்த்தை மார்போடு சேர்த்துக் கொள்வதிலும் அது - அந்த சோர்வு - தடையாக இருக்கிறது.

நிச்சயமாக இந்த மனோநிலை நல்ல இயல்பல்ல. இந்தக் குறைதான் எங்கள் மக்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமைக்கான முக்கியத் தூண்டுதல்களில் ஒன்று என்பதே உண்மை. இது நாங்கள் வாழும் பூமிதான். இங்கே அடிப்படையான கோளாறு இருக்கிறது என்று நிறுவ முயற்சி செய்வது எங்களுடைய மனசாட்சியை மட்டுமல்ல; அதற்கும் மேலாக எங்கள் கால்களையும் தகர்த்துக்கொள்ளுவதற்குச் சமமானது. இந்தக் காரணங்களால் இந்தக் கேள்விகளுக்குள்ளே என்னுடைய விசாரணையுடன் மேலும் தொடர்ந்து செல்ல மாட்டேன்.

***

The Penguin Complete Short Stories Of Franz Kafka (1983)

Wednesday, October 19, 2011

உலக இலக்கியக் கொண்டாட்டம் -எஸ். ராம கிருஷ்ணன்

உலகெங்கும் வாசகர்களால் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னாகரீனினா, தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், பாஷோவின் ஜென்கவிதைகள், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் , ஹோமரின் இலியட், ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஆராயிரத்து ஒரு அராபிய இரவுகள். ஆகிய  ஏழு புத்தகங்கள் குறித்து  நான் விரிவான ஏழு சொற்பொழிவுகளை நடத்த இருக்கிறேன்

உலக இலக்கியங்கள் குறித்து தமிழில் முதன்முறையாக இந்தத் தொடர் உரைகள் நடைபெற இருக்கின்றன.

உயிர்மையுடன் ருஷ்யக் கலாச்சார மையமும், ஜெயகாந்தன் புஷ்கின் இலக்கியப்பேரவையும் இணைந்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருக்கிறன

நவம்பர் 21 திங்கள் முதல் 27 ஞாயிறு வரை தினசரி மாலை ஆறுமணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது

தினம் ஒரு புத்தகம் குறித்து ஒரு மணி நேர உரையும் அதைத்தொடர்ந்து அரைமணி நேரக் கலந்துரையாடலும் நடைபெறும்.

இடம் : ருஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கா ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை 18

நாள் : நவம்பர் 21 முதல் 27 வரை

நேரம் : தினமும் மாலை 6 மணி

உலக இலக்கியத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர்களைக் கொண்டாடவும் அவர்களது படைப்புகளை  மறுவாசிப்பு செய்யவும் உத்வேகம் தரும்படியான முன்முயற்சியிது

இளம்வாசகர்கள், கல்விப்புலங்களில் இலக்கியம் பயிலுவோர், மற்றும் இலக்கிய ஈடுபாடு கொண்ட அனைவரும் அவசியம் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்

எஸ். ராம கிருஷ்ணன்

***

lecture