Thursday, March 31, 2011

நாடகக்காரி - ஆண்டன் செகாவ்

தமிழில் - புதுமைப்பித்தன்

     அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில்லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ் என்பவனுக்குத்தான் அவள் வைப்பாக இருந்து வந்தாள்.

     அன்று அவளும் கோல்ப்பக்கோவும் முன்னறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். Anton_Chekhov வெயில் சகிக்க முடியவில்லை. கோல்ப்பக்கோவ், அப்பொழுதுதான் சாப்பிட்டுவிட்டு மிகவும் மட்ட ரகமான போர்ட் ஒயின் பாட்டிலைக் காலி செய்ததினால், சிடுசிடு என்று பேசிக் கொண்டிருந்தான். இருவருக்குமே அன்று பேச்சில் லயிப்பில்லை. வெயில் தணிந்தால் வெளியே சென்று காற்று வாங்கிவிட்டாவது வரலாம் என்ற நினைப்புத்தான் இருவருக்கும்.

     திடீரென்று வெளிக்கதவை யாரோ படபடவென்று தட்டி உடைத்தனர். கோல்ப்பக்கோவ், பக்கத்து நாற்காலியில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டை எடுத்துக்கொண்டு, வேறு அறைக்குச் செல்லலாம் என்று எழுந்தான். அவன் முகக்குறி, "வெளியில் யார்?" என்று பாஷாவைக் கேட்பது போல் இருந்தது.

     "தபால்காரன், அல்லது வேறே யாராவது நம்ம குட்டிகள்" என்றாள் பாஷா.

     தபால்காரனாவது அல்லது பாஷாவின் ஸ்திரீ நண்பர்களாவது தன்னை அங்கு கண்டுகொள்வதை, கோல்ப்பக்கோவ் பொருட்படுத்தவில்லை. ஆனால், எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருப்பதற்காகவே, துணிமணிகளைச் சேர்த்து வாரிக்கொண்டு, மற்றொரு அறைக்கு சென்றான்.

     பாஷா முன் பக்கம் சென்று வெளிக் கதவைத் திறந்தாள்.

     அவள் கதவைத் திறந்ததும், எதிரில் தான் முன்பின் அறியாத அந்நிய ஸ்திரீ நிற்பதைக் கண்டு, ஆச்சரியத்துடன் பார்த்தாள். பாஷாவின் முன் நின்றவள் வாலிப நங்கை; அவளுடைய உடையிலும் நின்ற நிலையிலும் குடும்ப ஸ்திரீ என்று ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

     வந்தவள், முகம் வெளிறிப் போயிருந்தது; 'மூசுமூசு' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். அவள் நெடுந்தூரம் ஓடி வந்தவள் போல் தென்பட்டாள்.

     "என்ன வேண்டும்?" என்றாள் பாஷா.

     வந்தவள் உடனே பதில் சொல்லவில்லை. முன் ஒரு அடி எடுத்து வைத்து அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்பு சோர்ந்தவள் போல உள்ளே வந்து உட்கார்ந்தாள்; அவளது வெளிறிய உதடுகள் பேசுவதற்கு முயன்று அசைந்தன. ஆனால் அவளால் பேச முடியவில்லை.

     நெடு நேரம் கழித்து வந்தவள் தனது சிவந்த கண்களால் பாஷாவின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள். பின்பு, "என் புருஷன்; - அவர் இங்கு வந்தாரா?" என்றாள்.

     "புருஷனா?..." என்று ஈனஸ்வரத்தில் எதிரொலித்தாள் பாஷா. அவளது கைகளும் கால்களும் குளிர்ந்து விறைத்தன.

     "எந்த புருஷன்?" என்றாள் பாஷா மறுபடியும்.

     "என் புருஷன் நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்" என்றாள் அந்த ஸ்திரீ.

     "தெ...ரி...யா...து! அம்மா! நான் ஒருவருடைய புருஷனையும் பார்க்கவில்லை" என்றாள் பாஷா.

     ஒரு வினாடி இருவரும் மௌனமாக இருந்தனர். அந்த அந்நிய ஸ்திரீ, தனது கைக்குட்டையால் முகத்தைத் துடைத்து, விம்மிக்கொண்டுவரும் அழுகையைக் கைக்குட்டையால் அடக்க முயன்றாள். அவளது முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பாஷாவிற்கும் பயம் அதிகரித்தது. கல்லாய்ச் சமைந்தது போல் நின்றாள்.

     "அவர் இங்கே இல்லையென்று சொல்லுகிறாயாக்கும்?" என்றாள் அவள் மறுபடியும். இப்பொழுது அவளது அழுகை அடங்கிவிட்டது; குரல் கணீரென்றது. உதட்டில் ஒருவிதமான புன்சிரிப்பு நிலவியது.

     "நீங்கள் யாரைப் பற்றிக் கேட்கிறீர்கள்? ஒன்றும் தெரியவேயில்லையே!" என்றாள் பாஷா.

     "சீ! நீ ஒரு மோசமான தரித்திரம் பிடித்த கழுதை!" என்றாள் வந்தவள்.

     அவளது முகக் குறி பாஷாவை எப்படி வெறுக்கிறாள் என்பதைக் காண்பித்தது.

     "நீ... நீ ஒரு மோசமான கழுதை! கடைசியாக உன் மூஞ்சிக்கி நேரே இதைச் சொல்லுவதற்குச் சமயம் கிடைத்ததே!"

     பாஷாவிற்குப் புதிதாக வந்த ஸ்திரீ சொல்லுவது மனத்தில் தைத்தது. உண்மையிலேயே தான், மோசமாக, பார்ப்பதற்கு விகாரமாக இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. உப்பிய கன்னமும், அம்மை வடு நிறைந்த முகமும், என்ன சீவினாலும் பணியாது முகத்தில் வந்து விழும் தலை முடியும், பார்ப்பதற்கு விகாரமாகத்தான் இருக்கும் என்று அவள் மனத்தில் பட்டது. இதனால் வெட்கினாள். சிறிது ஒல்லியாக, நெற்றியில் வந்து விழாத கூந்தலுள்ளவளாக, முகத்தில் நிறைய பவுடர் அப்ப வேண்டாதவளாக இருந்தால், தானும் ஒரு குடும்ப ஸ்திரீ போல் பாவனை செய்ய முடியும் என்று நினைத்தாள். எதிரில் நிற்கும் அந்நிய ஸ்திரீயின் முன்பு நிற்கவும் வெட்கப்பட்டாள் பாஷா.

     "என் புருஷன் எங்கே! அவர் இங்கு இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையே கிடையாது. ஆனால் ஒன்று சொல்லுகிறேன், கேள். பணம் காணாமற் போய்விட்டது. அதற்காக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவரைக் கைது செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். இவ்வளவும் உன் வேலைதான், தெரிந்ததா?" என்றாள் கோல்ப்பக்கோவின் மனைவி.

     அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து அங்குமிங்கும் உலாவினாள். அவளைப் பார்ப்பதற்கே பாஷாவிற்குப் பயமாக இருந்தது. அவளுக்கு இன்னதென்றே புரியவில்லை.

     "இன்று அவரைக் கண்டுபிடித்து ஜெயிலில் அடைத்து விடுவார்கள்!" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ். அதை நினைக்கும் பொழுதே அவளுக்குத் துக்கமும் கோபமும் நெஞ்சையடைத்தன. "அவரை இந்தக் கதிக்கு ஆளாக்கினது யார்? மோசமான மூதேவி! பண ஆசை பிடித்த ஜடமே!". அவள் மூக்கும் உதடும் தாங்க முடியாத துர்நாற்றத்தை ஏற்றதுபோல நெளிந்து மடிந்தன. "எனக்கு வேறே விதியில்லை! கேட்கிறாயா? எனக்கு வேறே வழியில்லை. இப்பொழுது உன் பக்கத்திலேதான் பலம் இருக்கிறது. ஆனால் உதவியில்லாத என் குழந்தை குட்டிகளைப் பதுகாக்கத் தெய்வம் இருக்கிறது! அவருக்குத் தெரியும். அவர் உனக்குத் தகுந்த கூலி கொடுப்பார்! அனாதை விட்ட கண்ணீர் நிலத்தில் மறையாது. காலம் வரும். அப்பொழுது நீ என்னை நினைப்பாய்!"

     பிறகு அந்த அறையில் நிசப்தம் குடிகொண்டது. ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ் கையை நெறித்துக்கொண்டு அறையில் அங்கும் இங்கும் நடந்தாள். பாஷா, பயத்தால் அப்படியே விறைத்துப் போய், தலையில் அப்பொழுதே இடிவிழுமோ என்று நடுங்கி நின்றாள்.

     "எனக்கு ஒன்றும் தெரியாது அம்மா!" என்றாள் பாஷா. இந்தக் கோடையிடி போன்ற சூடான வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. மாலை மாலையாகக் கண்ணீர் வடித்து, குலுங்கிக் குலுங்கிக் கதறினாள்.

     "புளுகாதே! எனக்கு எல்லாம் தெரியும்! ரொம்பக் காலமாகத் தெரியும்! போன மாசம் முழுவதும் இங்கேதான் வந்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியும்" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்; அவளது கண்கள் தணல் வீசின.

     "ஆமாம்! அதற்கென்ன? எத்தனையோ பேர் வருகிறார்கள்! நான் என்ன கையைப் பிடித்தா இழுக்கிறேன்! அது அவரவர்கள் இஷ்டம்!" என்றாள் பாஷா.

     "நான் சொல்வதைக் கேள்! ஆபீசில் பணத்தைக் காணவில்லை. அவர் பணத்தைத் திருடிவிட்டார். தரித்திரம் பிடித்த உன் மூஞ்சிக்காக அவர் ஆபீசிலே குற்றத்தைச் செய்திருக்கிறாரே! உனக்கு நியாயம், கட்டுப்பாடு, ஒழுங்கு ஒன்றும் கிடையாது. உன் வாழ்க்கையே மற்றவர்களைக் கஷ்டப்படுத்டுவதுதான். ஆனால் கொஞ்சமாவது இரக்கம் இல்லாமல் உன் நெஞ்சு வெந்து உலர்ந்து போயிருக்காது! அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் உண்டு. அவரைத் தண்டித்து நாடு கடத்திவிட்டால் (ரஷ்யாவில் ஜாரரசன் ஆட்சியில் திருட்டுக் குற்றத்திற்காகவும் ஸைபீரியா என்ற குளிர்ப் பாலைவனத்திற்கு நாடு கடத்திவிடுவார்கள்) அவர் குழந்தைகளும் நானும் தெருவிலே கிடந்து பட்டினியால் மடிய வேண்டியதுதான். அதை உணர்ந்து கொள்! அவர்களை இந்தக் கதியிலிருந்து தப்புவிக்க ஒரே வழியிருக்கிறது. இன்றைக்கு நான் 900 ரூபிள் (ருஷிய நாணயம்) சம்பாதித்தால் அவரை விட்டுவிடுவார்கள். 900 ரூபிள்கள் தான்!"

     "என்ன, 900 ரூபிள்களா?... எனக்குத் தெரியாது... எடுக்கவில்லை" என்றாள் பாஷா.

     "நான் உன்னிடம் 900 ரூபிள்கள் கேட்க வரவில்லை, உன்னிடம் பணமில்லை என்று எனக்குத்  தெரியும்... மேலும் உன் காசு எனக்கு வேண்டாம்! நான் கேட்பது வேறு! உன்னைப் போன்ற பெண்களுக்கு ஆண் பிள்ளைகள் விலையுயர்ந்தவற்றைப் பரிசளிப்பார்கள். என் புருஷன் உனக்குக் கொடுத்தவைகளை மட்டிலும் திருப்பிக் கொடுத்துவிடு!"

     "அம்மா! உன்னுடைய புருஷன் எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லை" என்று பாஷா கதறினாள். அப்பொழுதுதான் அவளுக்குச் சிறிது புரிய ஆரம்பித்தது.

     "கொடுத்த பணம் எல்லாம் எங்கே? அவர் பணத்தையும், என் பணத்தையும் எங்கு கொண்டு தொலைத்தார்? கேள்! உன் காலில் விழுந்து பிச்சையாகக் கேட்கிறேன். கோபத்திலே கண் தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னித்துக்கொள். நீ என்னை வெறுப்பாய்; அது எனக்கு தெரியும். ஆனால் என் நிலைமையை யோசித்து, கொஞ்சம் இரங்கு. காலில் விழுந்து கேட்கிறேன், அவர் கொடுத்த சாமான்களை மட்டும் திருப்பிக் கொடுத்துவிடு."

     "உம்" என்று தோளை குலுக்கினாள் பாஷா.

     "உனக்குக் கொடுக்கறதில் சந்தோஷந்தான். கடவுள் சாட்சியாகச் சொல்லுகிறேன், உன் புருஷன் எனக்கு வெகுமதி கொடுத்தது கிடையாது. நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுகிறேன். என்னை நம்பு; இருந்தாலும் நீ சொல்வதிலும் கொஞ்சம் உண்மையிருக்கிறது. அவர் ஒன்றிரண்டு சாமான்களை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவைகளை வேண்டுமானால் கொடுத்து விடுகிறேன்," என்றாள் பாஷா.

     உடனே மேஜையைத் திறந்து, அதிலிருந்து ஒரு ஜதை தங்க வளையலையும் ஒரு சிவப்புக்கல் பதித்த மோதிரத்தையும் எடுத்தாள்.

     "இந்தா!" என்று வந்தவளிடம் அவற்றைக் கொடுத்தாள்.

     கோல்ப்பக்கோவ் மனைவியின் முகம் சிவந்து, உதடுகள் துடித்தன. பாஷாவின் நடத்தையால் அவளுக்குக் கோபம் வந்தது.

     "என்னிடம் எதைக் கொடுக்கிறாய்? நான் உன்னிடம் தானம் கேட்க வரவில்லை. நியாயமாக உனக்குப் பாத்தியதை இல்லாத, உன் சந்தர்ப்பத்தை வைத்து அவரிடம் கசக்கிப் பிடுங்கிய நகைகளைக் கேட்கிறேன். அன்றைக்கு வியாழக்கிழமை, என் புருஷனுடன் துறைமுகத்திற்கு வந்தாயே; அப்பொழுது நீ போட்டுக்கொண்டிருந்த விலையுயர்ந்த புரூச்சுகளும் கை வளைகளும் எங்கே? ஒன்று மறியாதவள் போல் என்னிடம் பாசாங்கு பண்ணாதே! கடைசியாகக் கேட்கிறேன். அந்த நகைகளைக் கொடுப்பாயா, மாட்டாயா?"

     "நல்ல வேடிக்கைக்காரியாக இருக்கிறாய்!"

     இப்பொழுது பாஷாவிற்கும் சிறிது கோபம் வந்தது.

     "உனது நிக்கோலாய் பெட்ரோவிச்சிடமிருந்து ஒரு நகையாவது நான் பெற்றதில்லை. அவன் வரும்பொழுதெல்லாம் பட்சணந்தான் வாங்கி வருவான்."

     "பட்சணமா?" என்று சிரித்தாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.

     "வீட்டிலே குழந்தைகளுக்கு வயிற்றிற்கு ஒன்றும் கிடையாது. பட்சணமா உனக்கு; நன்றாக இருக்கிறது? அவர் கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்க முடியுமா, முடியாதா?"

pudu5     பதில் ஒன்றும் பெறாததினால், அவள் மௌனமாக உட்கார்ந்து யோசித்தாள். கண்கள் வெறிச்சென்று பார்த்தபடி இருந்தன.

     "இனி என்ன செய்வது? நான் 900 ரூபிள் சம்பாதிக்காவிட்டால் அவர் கதி அதோகதிதான்... பின்... குழந்தைகள், நான்... எல்லோருக்கும் அந்தக் கதிதான்! அவளைக் கொல்லட்டுமா? காலில் விழட்டுமா?" என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.

     அவளுக்கு அழுகை பொருமிக்கொண்டு வந்தது. கைக்குட்டையை எடுத்து வாயை அமுக்கிக் கொண்டாள்.

     விம்மல்களுக்கிடையே, "நான் உன் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீதான் என் புருஷனை நாசப்படுத்தி விட்டாய். அவரைக் காப்பாற்று! அவர் மீது இரக்கமில்லையானால் இந்தக் குழந்தைகளுக்காவது கொஞ்சம் தயவு பண்ணு! குழந்தைகள் உனக்கு என்ன செய்தன?"

     குழந்தைகள் ஆதரவற்றுப் பசியால் தெருவில் நின்று கதறுவதுபோல் பாஷாவின் மனக்கண் முன்பு தோன்றியது. குழந்தைகளை நினைத்ததும் பாஷாவிற்கும் துக்கம் வந்தது. அவளும் விம்மியழுதாள்.

     "என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்? நான் மோசமானவள், நிக்கோலாய் பெட்ரோவிச்சை நாசப்படுத்தியதாகச் சொல்லுகிறாய்! சத்தியமாக, தெய்வத்தின் மீது ஆணையாக சொல்லுகிறேன் - அவரிடமிருந்து நான் ஒன்றும் பெற்றது கிடையாது. எங்கள் நாடகக் கம்பெனியில் ஒரு பெண்ணைத்தான் பணக்காரன் ஒருவன் வைத்திருக்கிறான்; மற்றவர்கள் எல்லாருக்கும் தினசரி சாப்பாட்டுக்கே கஷ்டம்! நிக்கோலாய் பெட்ரோவிச் படித்தவர், மரியாதைக்காரர், பெரிய மனிதர். அதனால் அவரை வரவேற்றேன். பெரிய மனிதர்கள் எல்லாருக்கும் வரவேற்பளிப்பது எங்கள் கடமை."

     "நான் அந்த நகைகளைக் கேட்கிறேன். அவற்றைக் கொடு. நான் உன் காலில் விழுந்து கண்ணீர் விடுகிறேனே. சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டுமானாலும் செய்கிறேன்!"

     அவள் குனிவதைக் கண்டு பாஷா பயந்து வீரிட்டாள். இந்தத் தெய்வம் போன்ற ஸ்திரீ நாடகக்காரியின் காலில் விழுவதால் பன்மடங்கு உயர்ந்து விளங்குவதாக மனத்தில் நினைத்தாள்.

     "சரி இந்தா நான் கொடுத்து விடுகிறேன்!" என்று பாஷா கண்ணைத் துடைத்துக் கொண்டு மேஜையண்டை ஓடினாள்.

     "இந்தா! ஆனால், இவற்றை நிக்கோலாய் பெட்ரோவிச் கொடுக்கவில்லை! வேறொரு பெரிய மனிதர் தந்தார்!" என்று மேஜையுள்ளிருந்த வைர புரூச்சையும், பவள மாலையையும், மோதிரம், கை வளையல் முதலியவற்றையும் எடுத்துக்கொடுத்தாள்.

     "இந்தா எல்லாவற்றையும் எடுத்துக் கொள்! ஆனால் இவைகளை உன் புருஷன் கொடுக்கவில்லை. இவைகளை எடுத்துக் கொண்டு போய்ப் பணக்காரராகுங்கள்!" பாஷாவிற்கு, அவள் 'காலில் விழுவேன்' என்றதில் பெருத்த கோபம். "நியாயமாக நீ அவர் மனைவியாக இருந்தால், இவைகளை நீயே கட்டாயம் எடுத்துக்கொண்டு போக வேண்டும்! நீயே வைத்துக்கொள்ள வேண்டும்! அப்படித்தான்! நீயே வைத்துக்கொள்ள வேண்டும்! நான் அவரைக் கூப்பிடவில்லை. அவராக வந்தார்!"

     கண்களில் பார்வையை மறைக்கும் கண்ணீர் வழியாகக் கொடுக்கப்பட்ட நகைகளைக் கவனித்து, "இன்னும் பாக்கியிருக்கிறது. இங்கிருப்பவை 500 ரூபிள் கூடப் பெறாது!" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.

     உடனே பாஷா மேஜையிலிருந்த தங்கக் கைக் கடிகாரம், சிகரெட் பெட்டி, பொத்தான்கள் எல்லாவற்றையும் எடுத்து எறிந்து, "இவ்வளவுதான்! இனி வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது. வேண்டுமானால் சோதனை போட்டுக் கொள்ளு!" என்றாள்.

     ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ், ஒரு பெரிய பெருமூச்செறிந்து, நகைகளை எல்லாம் கைக்குட்டையில் சேர்த்து முடிந்து கொண்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாது, வெளியே சென்று விட்டாள். உள் கதவு திறந்தது. கோல்ப்பக்கோவ் அங்கு வந்தான். அவன் முகம் வெளிறியிருந்தது. கசப்பு மருந்தை விழுங்கியவன் போல் தலையை அசைத்துக் கொண்டு நின்றான். அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது.

     "நீ எனக்கு என்ன கொடுத்தாய்? எப்பொழுதுதான் வெகுமதி கேட்பதற்கு அனுமதித்தாய்" என்று பாஷா அவன் மீது சீறி விழுந்தாள்.

     "வெகுமதி! அதைப் பற்றி இப்பொழுதென்ன? தெய்வமே! உன் காலிலா அவள் விழ வேண்டும்!"

     "நீ எனக்கு என்ன வெகுமதி கொடுத்தாய் என்று கேட்கிறேன்" என்று பாஷா மறுபடியும் சீறினாள்.

     "தெய்வமே! பெருமையையும் மதிப்பையும் விட்டுவிட்டு இவள் காலில் விழவா! நானல்லவோ அதற்குக் காரணம். இவ்வளவையும் நான் அனுமதித்தேனே!"

     கோல்ப்பக்கோவ், தன் தலையைக் கையில் பிடித்துக் கொண்டு, வேதனையால் முனகினான்.

     "இதற்கு மன்னிப்பு உண்டா? என்னால் என்னை மன்னித்துக் கொள்ள முடியாது. கிட்ட வராதே! மூதேவி" என்று பாஷாவை உதறித் தள்ளிவிட்டு, "உன் காலிலா விழ வேண்டும்! உன் காலில்! ஐயோ தெய்வமே! உன் காலில்" என்று முனகிக்கொண்டே, அவசர அவசரமாக உடுத்திக் கொண்டு, கதவைத் திறந்து வெளியேறினான்.

     பாஷா கீழே விழுந்து புரண்டு ஓலமிட ஆரம்பித்தாள். அவசரத்தில் முட்டாள்தனமாக நகைகளைக் கொடுத்தற்காக வருத்தப்பட்டுக் கொண்டாள். அவளை அவள் மனமே இடித்தது. மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி தன்னைக் காரணமில்லாது அடித்தது ஞாபகம் வந்தது. அதை நினைத்துக் கொண்டும் இன்னும் அதிகமாக ஓலமிட்டு
அழுதாள்.

***

ஆங்கிலத்தில் படிக்க இங்கே

Monday, March 28, 2011

மைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே

தமிழில் - அச்சுதன் அடுக்கா

தனது நாட்டை எகிப்திய வரி வசூலிப்பவர்களின் பேராசைக்கு ஒப்படைத்தவனும், 1842ஆம் வருடம் 14வது பர்மகாட் சந்திர தினத்தில் அரண்மனை அறையொன்றில் இறந்தவனுமான துஷ்டன் யாகப்தான் சூடானை ஆண்டவர்களில் கொடூரமானவன் என்பதை எல்லாச் சரித்திரமும் அறியும். மாந்திரீகன் அப்-எர்-ரக்மான் அல்-மஸ்முதி (இப்பெயரை ’கருணை உள்ளவர்களின் வேலைக்காரன்’ என்று வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம்) அவனைக் குறுவாளால் அல்லது விஷத்தால் jorge-luis-borges கொன்றான் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவன் துஷ்டனான போதிலும், அவன் இயற்கையான மரணத்தில் இறந்து போயிருப்பதும் சாத்தியம் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். காப்டன் ரிச்சர்ட் எப்.பர்டன் அம்மாந்திரீகனை 1853ல் சந்தித்துப் பேசினார். நான் கீழே தந்திருப்பது அவன் நினைவு கூர்ந்த அச் சம்பவம்:

எனது சகோதரன் இப்ராஹிமினால் அவனை ஏமாற்றிய குர்டோஃபானின் ஏமாற்றுக்காரத் தலைவர்களின் வஞ்சகம் நிறைந்த உபயோகமற்ற துணையோடு நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கையின் விளைவாகத்தான், துஷ்டன் யாகப்பின் கோட்டையில் நான் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்பது உண்மை. ரத்தம் படிந்த நீதியில் என் சகோதரன் வாளுக்கிரையானான். ஆனால் நான், நானொரு மாந்திரீகன் என்றும், எனக்கு வாழ்வு தருவானானால் மந்திர விளக்கைக் காட்டிலும் அற்புதமான வடிவங்களையும் தோற்றங்களையும் அவனுக்குக் காண்பிக்கிறேன் என்றும் சொல்லி அத் துஷ்டனின் வெறுக்கப்பட்ட கால்களில் விழுந்தேன். அந்தக் கொடுங்கோலன் உடனடியாக நிரூபணம் கேட்டான். ஒரு நாணல் பேனா, ஒரு கத்திரி, ஒரு பெரிய வெனிஸ் காகிதம், ஒரு மைச் செப்பு, கனல்கள் கொண்ட தட்டு, கொஞ்சம் தனியா விதைகள், ஒரு அவுன்ஸ் பென்சோயின் இவற்றைக் கேட்டேன். காகிதத்தை ஆறு துண்டாக்கினேன். முதல் ஐந்து துண்டுகளில் மந்திரங்களும், பிரார்த்தனையும் எழுதினேன். எஞ்சிய துண்டில் புனித குரானிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதினேன்: ‘உனது முகத்திரையை உன்னிலிருந்து மாற்றி விட்டோம்: இன்று உனது பார்வை துளைத்துக் கொண்டிருக்கிறது.’ பின், யாகப்பின் வலக்கையில் ஓர் மாந்திரீக வட்டம் வரைந்தேன். கையைக் குழிக்கச் சொல்லி, அதன் நடுவில் மை விட்டேன். அவன் பிரதிபலிப்பதைப் பார்க்கும்படியாக இருக்கிறதா என்று கேட்டேன். இருக்கிறதென்றான். தலையைத் தூக்க வேண்டாம் என்று சொன்னேன். கனல் தட்டில் பென்சோயினையும், தனியா விதைகளையும் இட்டேன். கனலில் பிரார்த்தனைகளைச் சொன்னேன். அடுத்ததாக, அவன் பார்க்க விரும்பும் ரூபத்தின் பெயரைச் சொல்லச் சொன்னேன். அவன் ஒரு கணம் யோசித்து சொன்னான். ‘ஓர் காட்டுக்குதிரை, பாலைவன எல்லைகளில் மேய்பவற்றில் மிகச் சிறந்தது.’ முதலில், அவன் ஒரு அமைதியான பசும் மேய்ச்சல் நிலத்தைப் பார்த்தான். ஒரு நிமிடத்திற்குப் பிறகு, சிறுத்தையின் அசைவுகளும், முகத்தில் ஒரு வெண் புள்ளியும் கொண்ட குதிரை நெருங்கி வருவதைப் பார்த்தான். அதைப்போன்ற வலிமையுள்ள குதிரைக் கூட்டம் ஒன்றைப் பார்க்கக் கேட்டான். தொடுவானில் தூசுப்படலத்தைப் பார்த்தான். பின் குதிரைக் கூட்டம். இப்பொழுதுதன் எனது வாழ்வு காப்பாற்றப்பட்டதென்றறிந்தேன்.

அன்றிலிருந்து, கீழ்வானில் முதல் ஒளிகிரகணம் தோன்றும் பொழுதில், இரண்டு படைவீரர்கள் என் சிறைக்கூடத்திற்கு வருவார்கள். சாம்பிராணி, கனல் தட்டு, மை இவைகள் ஏற்கனவே தயாராக இருக்கும். துஷ்டனின் படுக்கையறைக்கு என்னை அழைத்துச் செல்வார்கள். உலகில் புலனாகும் எல்லாப் பொருள்களையும் பார்க்கக்கேட்டான். நானும் காண்பித்தேன். நான் இன்னும் வெறுக்கும் அந்த மனிதன் தன் உள்ளங்கையில் இப்போது இறந்து போயிருக்கும் மனிதர்கள் பார்த்திருப்பவைகளையும், இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பார்த்திருப்பவைகளையும் கொண்டிருந்தான்; நகரங்கள், காலநிலைகள், பூமியைப் பிரித்திருக்கும் ராஜ்ஜியங்கள்; தத்தமது கடல்களில் ஓடும் கப்பல்கள்; போர், இசை மற்றும் அறுவைக் கருவிகள்; அழகான பெண்கள்; ஸ்திரமான நட்சத்திரங்களும் கோள்களும்; கடவுளற்ற மனிதர்கள் அருவருக்கத்தக்க அவர்களின் படங்களைத் தீட்ட உபயோகிக்கும் வண்ணங்கள்; சுரங்கங்கள், எந்திரத் தளவாடங்கள், தங்களுக்குள் பூட்டி வைத்திருக்கும் ரகசியங்கள் சொத்துக்களோடு; தேவனின் புகழையும், தொழுதலையுமே உணவாகக் கொண்ட வெள்ளித் தேவதைகள்; பள்ளிக் கூடங்களில் வழங்கப்படும் பரிசுகள்; பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருக்கும் பறவைகளினதும், அரசர்களினதுமான விக்ரகங்கள்; உலகைத் தாங்கிப் பிடித்திருக்கும் காளையாலும், அதன் அடியில் கிடக்கும் மீனாலும் ஏற்படுத்தப்பட்ட நிழல்; கருணைமிக்க அல்லாவின் சந்தனக் கழிவுகள், வாயு விளக்குத் தெருக்கள், மனிதன் சப்தம் கேட்ட மாத்திரத்தில் மரணமுறும் சுறா போன்ற சொல்ல இயலாதவற்றைக் கண்டான். ஒருமுறை, ஐரோப்பா என்றழைக்கப்படும் நகரத்தைக் காட்டச் சொன்னான். நான் அதன் முக்கிய ரஸ்தாவை அவன் பார்க்கச் செய்தேன். கறுப்பு மற்றும் பலவகைக் கண்ணாடிகள் அணிந்திருக்கும் மனிதர்களின் பிரம்மாண்டமான ஓட்டத்தில்தான் முகமூடி அணிந்த அந்த மனிதனைப் பார்த்தான் என்று நான் நினைக்கிறேன்.

அதுமுதல், சிலசமயம் சூடானிய அணிகளோடும் சிலசமயம் யூனிபார்மோடும் ஆனால் எப்போதும் முகத்தில் முகமூடியோடும் அந்த உருவம் நாங்கள் பார்த்தவற்றினிடையில் அடிக்கடி வந்தது. அவன் வரத் தவறியதேயில்லை. நாங்கள் அவன் யாரென அறியத் துணியவில்லை. முதலில் சீக்கிரம் மறைந்து விடுவதாகவும் அல்லது ஸ்திரமாகவும் தோன்றிய மைக்கண்ணாடி உருவங்கள் இப்போது மிகுந்த சிக்கலாகி விட்டன. அவைகள் எனது கட்டளைக்குத் தாமதமின்றிப் பணிந்தன. அந்தக் கொடுங்கோலன் மிகத் தெளிவாகப் பார்த்தான். அதிகரித்துக் கொண்டே போகும் காட்சிகளின் கொடூரம் எங்களிருவரையும் அசதி நிலைக்குள்ளாக்கியது. தண்டனைகள், மூச்சுத் திணறடித்துக் கொல்லுதல், முடமாக்குதல் போன்ற சிரச்சேதம் செய்பவனின், கருணையற்றவனின் சந்தோஷங்களைத் தவிர வேறெதற்கும் நாங்கள் சாட்சியாகவில்லை.

இவ்வாறாக 14வது பார்மகாட் சந்திர தினத்தின் இரவும் வந்தது. மைவட்டம் அக்கொடுங்கோலன் கையில் உண்டாக்கப்பட்டது. பென்சோயினும், தனியா விதைகளும் கனல்தட்டில் இடப்பட்டன. பிரார்த்தனைகள் சொல்லப்பட்டன. நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம். அன்று, அவன் இதயம் ஓர் மரண தண்டனையைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால், அந்த துஷ்டன் சட்டப்படியானது, கருணை நிராகரிக்கப்பட்டதுமான ஒரு தண்டனையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கட்டளையிட்டான். டிரம்ஸீடன் வீரர்களை, விரிக்கப்பட்டிருந்த பசுந்தோலை, பார்வையாளர்களாக இருக்கக் கொடுத்து வைத்த மனிதர்களை, நீதியின் வாளை ஏந்தியிருந்த சிரச்சேதம் செய்பவனை அவன் பார்க்கச் செய்தேன். அவனைப் பார்த்து அதிசயித்து யாகப் என்னிடம் சொன்னான். ‘அது அபுகிர் உனது சகோதரனுக்கு நீதி வழங்கியவன். உனது உதவியில்லாமல் விஞ்ஞானத்தால் இந்த ரூபங்களை ஏற்படுத்தும் விதம் எனக்குத் தெரியப்படுத்தப்படும்போது உனது மரணத்தையும் நிச்சயிப்பவன்.’

அவன் கொல்லப்படப் போகும் மனிதனை முன்னால் கொண்டுவரச் சொன்னான். அது செய்யப்பட்டபோது, கொல்லப்படப்போகும் மனிதன் அந்த முகத்திரை அணிந்த விசேஷமான மனிதன் என்பதைக் கண்டு அக்கொடுங்கோலன் வெளிறினான். நீதி வழங்கப்படுவதற்குமுன், அத்திரையை அகற்றும்படி நான் பணிக்கப்பட்டேன். இதைக் கேட்டதும், நான் அவன் காலடியில் விழுந்து, ‘ஓ இக்காலத்தின் மன்னனே, இச் சகாப்தத்தின் மொத்தமும், சாரமுமானவனே, அவன் பெயரோ அவன் தந்தையின் பெயரோ, அவன் பிறந்த நகரத்தின் பெயரோ நமக்குத் தெரியாததால் இந்த உருவம் மற்றவற்றைப் போன்றதல்ல. நான் பதில் சொல்லியாக வேண்டிய ஓர் பாவத்திற்குள்ளாகும் பயத்தால், இந்த உருவ விஷயத்தில் நான் தலையிடத் துணியவில்லை’ என்று முறையிட்டேன்.

அந்த துஷ்டன் சிரித்தான். சிரித்து முடித்ததும், அப்படியொரு குற்றம் இருக்குமானால், இதைத் தனதாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சத்யம் செய்தான். தனது வாளைக் கொண்டும், குரானைக் கொண்டும் சத்யம் செய்தான். இதன்பின், நான் அந்தக் கைதியின் அடையாளம் காட்டவும், பசுந்தோலில் சுற்றியிருக்கவும், அவன் முகத்திரையைக் கிழிக்கவும் கட்டளையிட்டேன். அப்படியே நடந்தன. கடைசியில் யாகப்பின் மிரண்ட கண்களால் அம்முகத்தைப் பார்க்க முடிந்தது - அது அவன் முகம். பயமும், பைத்தியமும் அவனைக் கவ்விக்கொண்டன. எனது திடமான கையின் மேல் அவனது நடுங்கும் கையை வைத்தேன். அவனது மரணச்சடங்கிற்குச் சாட்சியாகும்படி கட்டளையிட்டேன். அவன் தன் கண்களை அகற்றவோ, மையைக் கவிழ்த்தவோ முடியாத அளவுக்கு, அந்தக் கண்ணாடியோடு ஒன்றிப் போனான். குற்றவாளியின் கழுத்தில் வாள் விழும் காட்சியில் யாகப் எனது இரக்கத்தைத் தொடாத ஓர் சப்தத்தை முனங்கினான். தரையில் தடுமாறி விழுந்து இறந்தான்.

எல்லாம் அவன் மகிமை. அவன் எப்போதும் மன்னிப்பவன். அவன் கைகளில் இருக்கின்றன வரம்பற்ற குற்றங்களின், தீராத தண்டனைகளின் சாவிகள்.

நன்றி: கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு

ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்

Saturday, March 26, 2011

பரிசுச்சீட்டு -ஆண்டன் பாவ்லொவிச் செகாவ்

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன்

இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான்.

மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி 'இன்னிக்குப் பேப்பரைப் பார்க்கவே விட்டுட்டது' anton_pavlovich_chekhov என்றாள். 'குலுக்கல் முடிவு வந்திருக்கா பாருங்க.'

'ஆமா, இருக்கு,' என்றான் டிமிட்ரிச். 'ஆனா உன் சீட்டு காலாவதியாவல்லியா?'

'இல்லல்ல, வட்டியெடுக்க நான் செவ்வாயன்னிக்குதானே போயிருந்தேன்...'

'நம்பர் என்ன?'

'வரிசை 9499 - எண் 26'

'சரி... பாத்திர்லாம். 9499 அப்புறம் 26...'

பரிசுக் குலுக்கல் அதிர்ஷ்டத்தில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. பொதுவாக குலுக்கல் முடிவுகளை அவன் சட்டை செய்வதும் கிடையாது. ஆனாலும், இப்போது வேறு செய்ய எதுவும் இல்லாததாலும், கையில் பேப்பர் இருக்கிறதாலும், பரிசு பெற்ற எண் வரிசையில் விரலைக் கீழ்நோக்கி ஓட்டினான். அவனது அசிரத்தையைக் கிண்டலடிக்கிற மாதிரி, மேலிருந்து இரண்டாவது வரியிலேயே அவன் கண்கள் சிக்கிக் கொண்டன. 9499! அசந்து விட்டான் அவன். தன் கண்ணையே நம்ப இயலாமல் கை நடுங்கி மடியில் விழுந்தது செய்தித்தாள். மேற்கொண்டு எண்ணைப் பார்க்க முடியவில்லை. உள்ளே சிலீரென யாரோ தண்ணியைக் கொட்டினாப் போல ஒரு குளிர். வயிற்றில் கிச்சு கிச்சு. இதமான அபாரமான தளும்பல்.

''அடி மாஷா 9499 இருக்கு'' மெல்லச் சொன்னான்.

வெலவெலத்துப்போன திகைப்பான அந்த முகத்தை அவன் பெண்டாட்டி பார்த்தாள். அவர் முகம் பொய் பேசினாப்போல இல்லை.

''9499-தா?'' மேசை விரிப்பைத் தவற விட்டபடி அவள் முகம் வெளிறக் கேட்டாள்.

''ஆமாண்டி ஆமா. நிசம்மா, இருக்குடி இருக்கு!''

''சரி, நம்ம நம்பர்... அது இருக்கா பாருங்க...''

''ஆமாமா. நம்ம சீட்டின் நம்பர், அதுவும்... ஆனால், இரு. இல்லடி... பார்க்கறேன் பார்க்கறேன். ஆனாக்கூட நம்ம வரிசை - அது இருக்கு. அத்தோட... புரியுதா?...''

பரந்த, அர்த்தம் இல்லாத அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி மனைவியைப் பார்த்தான் டிமிட்ரிச். ஜோரான விளையாட்டு சாமானைப் பார்த்ததும் குழந்தை அப்படித்தான் சிரிக்கும். பெண்டாட்டியும் புன்னகை சிந்தினாள். அவள் வாங்கிய வரிசையில் பரிசு வந்திருக்கிறது, என்றாலும் குறிப்பிட்ட அவள் எண்ணுக்குப் பரிசு பற்றித் தேட அவசரப்படவில்லை அவன். ஒராளைக் கிண்டலும் கவலையுமான காத்திருப்புக்கு உட்படுத்தி அதிர்ஷ்டம் சார்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தினா, என்ன சுகம். என்ன சுவாரஸ்யம்...

ஒரு நீண்ட மெளனம். ''நம்ம வரிசைக்குப் பரிசு'' என்றான் டிமிட்ரிச். ''ஆக நாம பரிசு அடிக்க வாய்ப்பு இருக்கு. ஒரு யூகம்தான்... ஆனா அந்த வாய்ப்பு... அது இருக்கத்தான் இருக்கு!''

''நல்லதுய்யா, மேல பாரும்...''

''பொறுமை1 நாம ஏமாற இன்னும் நிறைய நேரம் இருக்கு. மேலயிருந்து ரெண்டாவது வரி - ஆக பரிசு 75000. அது வெறும் துட்டு இல்லடி. சக்தி! மூலாதாரம்! இதோ பட்டியலைப் பாத்திர்றேன். ஆ இதோ 26! - அதானா? நாம நெஜமா ஜெயிச்சா எப்பிடி இருக்கும்?''

புருஷனும் பெண்டாட்டியும் ஒருத்தரை ஒருத்தர் மெளனமாய்ப் பார்த்தபடி புன்னகை செய்து கொண்டார்கள். ஜெயிக்கிற அந்த சமாச்சாரமே அவர்களைத் திக்குமுக்காட்டியது. அந்த 75000 துட்டு அவர்களுக்கு எதற்கு? அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் வாங்க, எங்கேயெல்லாம் போய்வர... என்றெல்லாம் அவர்கள் பேசவில்லை. கனவு கூடக் காணவில்லை. வெறும் 9499 என்ற எண், மற்றும் 75000 என்ற எண் அவற்றை மாத்திரமே மனதில் நினைத்துப் பார்த்தார்கள். என்னவோ, அந்த எண்கள் கொண்டு வரப் போகிற சந்தோஷங்களை, அதன் விரிவான சாத்தியங்களை அவர்கள் நினைக்கவே இல்லை.

டிமிட்ரிச் செய்தித்தாளைக் கையில் பிடித்தபடி அறையில் மூலைமுதல் மூலைவரை நடை பயின்றான். மெல்ல நிதானப்பட ஆரம்பித்தபோதுதான் மெல்ல அவனில் கனவுகாண ஆரம்பித்தான்.

''பரிசு மட்டும் விழுந்திட்டிருந்தா...'' என்றான். ''வாழ்க்கையே புதுசா ஆயிரும். எல்லாமே பூரா மாறிப்போகும். பரிசுச் சீட்டு உன்னிது. என்னிதா இருந்தா, மொதல் காரியமா - ஒரு 25000 எடுத்து பண்ணைநிலம் நீச்சுன்னு போடணும். உடனடிச் செலவுன்னு ஒரு பத்தாயிரம். புது கட்டில், பீரோ, மேஜை... அப்புறம் உல்லாசப் பயணம்... கடன் கிடன் அடைக்க, இந்த மாதிரி. மிச்ச 40000 ஒரு வங்கில போட்டுட்டா வட்டி கிடைக்கும்...''

''ஆமாம், ஒரு பண்ணை - அது நல்ல விஷயம்...'' உட்கார்ந்தவண்ணம் மடியில் கை வைத்தபடி அவள் பேசினாள்.

''துலா அல்லது ஓர்யோல் மாகாணப் பக்கம் எங்கியாவது... இப்ப சத்திக்கு நமக்கு கோடைவாசஸ்தலம்லாம் தேவையிராது. நம்ம தங்காட்டியும், வாடகை கீடகைன்னு வருமானம் வருமில்ல?''

வீட்டில் மாட்டியிருக்கும் அழகழகான புகைப்படங்களை மனசில் பார்த்தான் அவன். முதல் படத்தை விடவும் அடுத்தது சூப்பர் என்கிற தினுசில், எல்லாத்திலும் அவன் அத்தனை அம்சமா ஆரோக்கியமா கொழுகொழுன்னு இருந்தான். அப்பிடி நினைக்கவே நல்ல வெதுவெதுப்பு. அட உடம்பே சூடாயிட்டது.

அந்தக் கோடை இரவில் சில்லிட்டுப் போன சூப் அப்போதுதான் குடித்து முடித்திருந்தான். மனசினால் அவன் இருந்த இடமே வேறு - நதிக்கரையன்றின் கதகதப்பான மணலில் மல்லாக்கக் கிடக்கிறான். அல்லது தோட்டத்து எலுமிச்சை மரத்தடி.. இப்போதும் என்ன வெக்கை! பையனும் பெண்ணும் அருகே மண்ணை அளைந்தபடியோ, அல்லது பச்சைப்புல்தரையின் சிறு பூச்சிகளைப் பிடித்தபடியோ. இனிமையான அரைத்து¡க்கம். ஒரு யோசனையுங் கிடையாது. இன்னிக்கு அலுவலகம் போக வேணாம் என்கிறாப்போல அவிழ்த்துவிட்ட நிலை. இன்னிக்கு மாத்திரங் கூட இல்லை. நாளை - நாளைமறுநாள் கூட போக வேண்டியதில்லை. சும்மா கெடந்துருள அலுத்துப் போச்சா, வைக்கப்படப்பு பக்கம் போகிறான். காடுகளில் குடைக்காளான் தேடிப் போகிறான். வலைவீசி சம்சாரிகள் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறதை வேடிக்கை பார்க்கிறான். சூரியன் அடையுதா, துண்டும் சோப்பும் எடுத்துக்கறான்... குளியல் மறைவுக்குள் புகுந்து கொள்கிறான். நிதானமா உடைகளைக் கழற்றிக் கொள்கிறான். மெதுவா நெஞ்சை விரல்களால் நீவிக்கொண்டே தண்ணீரில் இறங்குகிறான். நுரைத்து வழியும் சோப்பு. சிறு மீன்கள் பதறி விலகினாப் போல... நீர்க்கொடிகள் லேசாய் ஆடுகிறாப் போல. குளியலைத் தொடர்ந்து, தேநீர். கூட கடித்துக் கொள்ள பால் மற்றும் கிரீம் பிஸ்கெட்டுகள். அதற்கப்பால் ஒரு உலாவல், அல்லது பக்கத்து¡ட்டு மனுஷாளோடு அரட்டை.

''ஆமாமா, பண்ணை வாங்கறது நல்ல விஷயம்'' என்றாள் பெண்டாட்டி. பார்க்கவே அவளும் கனவுலோகத்தில் மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இவான் டிமிட்ரிச் இலையுதிர் காலம் மற்றும் அதன் மழை பற்றி எண்ணமிட்டான். குளிரான அந்த மாலைப்பொழுதுகள். அதைத் தொடரும் இந்தப் பக்கத்து வேனில். இக்காலங்களில் அவன் தனது தோட்டத்தில் மற்றும் நதிப்பக்கமாக அதிகம் நடந்து உடற்பயிற்சி கொள்ள வேண்டியதிருக்கும். அப்போதுதான் உடம்பு முழுசும் தகிப்படங்கும். அதையடுத்து பெரிய டம்ளரில் ஓட்கா மது. சாப்பிட உப்புபோட்ட காளான். பொடிசு பொடிசா நறுக்கிய வெள்ளிரிப் பிஞ்சு... திரும்ப இன்னொரு டம்ளர்... சமையல் அறைப் பக்கத்துச் சிறு தோட்டம். பிள்ளைகள் அங்கிருந்து கேரெட்டோ முள்ளங்கியோ மண்வாசனையுடன் பிடுங்கி வருகிறார்கள். இவன் நல்லாக் கால்நீட்டி சோபாவில் படுத்தபடி, படம்லாம் போட்ட பத்திரிகைகளைப் புரட்டுதல். அதாலேயே முகத்தை மூடிக்கொண்டு இடுப்பு இறுக்கங்களைத் தளர்த்திக்கிட்டு ஹாயான குட்டித் து¡க்கம்.

வேனில் ஓய, வருகிறது மேக மூட்டமான பருவம். ராப்பகலான விடாக்கண்டன் மழை. மொட்டை மரங்கள் திணறும். காற்று சிலீரென வீசும். நாயும் குதிரையும் கோழிகளும் எல்லாமே நனைஞ்சு நொந்து நு¡லய் அசமந்தமாய்க் கெடக்கும். நாள்க் கணக்கா வெளிய வர முடியாது. உலாப் போக இடங் கிடையாது. சாத்திக் கிடக்கிற ஜன்னலைப் பார்த்துக்கிட்டு வீட்டுக்குள்ளியே நடை. மகா இம்சை!

சுதாரித்துக் கொண்டு இவான் டிமிட்ரிச் மனைவியைப் பார்த்தான்.

''நான் வெளிநாடு கூடப் போலாம் மாஷா?'' என்றான் அவன்.

இலையுதிர்கால முடிவில் வெளிநாட்டுப் பயணம் - பிரான்சின் தென்பகுதிகள்... இத்தாலி... இந்தியா!... என்றெல்லாம் யோசனை நீண்டது.

''நானும் நிச்சயம் வெளிநாடெல்லாம் போணும்'' என்றாள் பெண்டாட்டி. ''ஆனா பரிசு விழுந்த எண்ணைப் பாருங்க...''

''பொறு! பொறு!''

திரும்ப அறைக்குள் நடக்க ஆரம்பித்தபடி நினைவை நீளவிட்டான். இவளா... வெளிநாடு போயி என்ன பண்ணுவா இவ? தனியாத்தான் நான் போகணும். அல்லது அந்தந்தக் கணங்களுக்காக வாழ்கிற ஸ்திரீகளுடன் போகலாம். சில பெண்கள் பிரயாணம் பூராவும் தொணதொணத்துக்கிட்டே வரும். வாய் ஓயாமல் வேற பேச்சே பேசாமல் தன் பிள்ளைங்களைப் பத்தியே சொல்லிச் சொல்லி அலுத்துக்கும். எதுக்கெடுத்தாலும் விதி விதின்னுக்கிட்டே வரும். இவான் டிமிட்ரிச் தன் பெண்டாட்டி ரயிலில் தன்கூட வருவதாக யோசித்தான். சுத்தி வர பைகள், கூடைகள், பொட்டலங்கள். ஸ்ஸப்பா - என ஒரு சலிப்பு. இந்த ரயிலுல வந்ததுல தலைவலி மண்டையப் பொளக்குது. எம்மாஞ் செலவுடியம்மா... ஸ்டேஷன்ல வண்டி நிக்குதோ இல்லியோ வெந்நித் தண்ணிக்கு, ரொட்டிக்கு வெண்ணைக்குன்னு ஓடணும் அவன். ராப்பொழுதுக்கு அவள் சாப்பாடு சாப்பிட மாட்டாள். ஸ்டேஷன்ல நல்ல சாப்பாடு கிடைக்காதில்லையா?.

என்னியப் போட்டு நப்பி எடுத்துருவா, என அவளைப் பார்த்தபடியே நினைத்துக் கொண்டான் அவன். ஆ - பரிசுச்சீட்டு அவளிது, என்னிதில்ல. அதிருக்கட்டும், இவ வெளிநாடு போயி என்ன செய்யப்போறா! அங்க அவளுக்கு என்ன இருக்குன்னு நினைக்கிறா? எதாவது ஹோட்டல்ல போயி முடங்கிக்குவா. வெளிய வரவே மாட்டா. என்னியும் வெளிய விடமாட்டா... எனக்குத் தெரியும்!

தன் வாழ்க்கையிலேயே முதன்முதலா அவன் தன் பெண்டாட்டியை எதுக்கும் லாயக்கில்லாத கிழவியாக நினைத்தான். அவ கிட்ட போனாலே சமையல் நெடி. நான் எப்பிடி இளமையா ஆரோக்கியமா மல்ர்ச்சியா இருக்கிறேன்! இன்னிக்கும் மாப்ளையாகலாமே...

ஆனா அதெல்லாம் மடத்தனமான கற்பனை, என நினைத்தான். என்னாத்துக்கு அவ வெளிநாடு போறா? அங்க அவளுக்கு என்ன இருக்கு?... ஆனாலுங் கூட அவ போவாள். உண்மையிலேயே நேப்பிள்ஸோ கில்ன்னோ... எல்லா இடமும் அவளுக்கு ஒண்ணுதான். தானும் அனுபவிக்க மாட்டா. என்னையும் அனுபவிக்க விட மாட்டா... ஒண்ணொண்ணுத்துக்கும் நான் அவகிட்ட கையேந்தி நிக்கணும்! எனக்குத் தெரியும் - எல்லாப் பொம்பளைகளையும் போலவே அவளும் கைக்குப் பணம் வந்ததும் எல்லாத்தையும் அப்டியே போட்டு அமுக்கி வெச்சிக்குவா. தன் சொந்தக்காரன் சேக்காளின்னு கவனிச்சுக்குவா. என்னையத் தான் போட்டு நோண்டுவா...

அவளது சொந்தக்காரர்களைப் பற்றி இவான் டிமிட்ரிச் நினைத்தான். அண்ணந்தம்பி அக்காதங்கச்சி அத்தைமாமா... எல்லாச் சென்மங்களும் பரிசு விழுந்திருக்குன்னு கேள்விப்ட்டாப் போறும் உருண்டுபொரண்டு ஓடி வந்துருவாங்க. பிச்சைக்காரச் சிரிப்பும் கெஞ்சலும். கேடுகெட்ட சனியன்கள். கண்றாவிக் கும்பல்... எதும் குடுத்தியா இன்னுங் குடுன்னுவாங்க. குடுக்கலியா வண்டை வண்டையாத் திட்டுவாங்க. நாசமாப் போன்னு சாபம் விடுவாங்க...

தன் சொந்தக்காரர்களிடம் இவான் டிமிட்ரிச் முன்பு வேற்றுமுகம் காட்டாதவன், இப்போது அவர்களை வெறுப்போடும் எதிர்ரிகளாகவும் பார்த்தான். எல்லாம் மனுஷாளோடவே சேர்த்தி கிடையாது... என்று நினைத்துக் கொண்டான்.

தன் பெண்டாட்டி முகம் கூட அவனுக்குப் பிடிக்காமலும் வெறுப்பேத்தக் கூடியதாகவும் இருந்தது. அவளையிட்டும் உள்ளே ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது. கடுப்பான கடுப்பு. பணத்தைப் பத்தி இவளுக்கு என்னா தெரியும். பிசினாறிப் பொம்பளை. பரிசு அடிச்சா அவ எனக்கு ஒரு நு¡று ரூபிள் தருவா. சொச்சத்தப் பெட்டில போட்டுப் பூட்டிக்குவா.

இப்போது பெண்டாட்டியை கடுமையுடன் வெறுப்புடன் அவன் பார்த்தான். அவளும் அவனை அதே மாதிரியான எதிர்ப்புணர்வுடன் பார்த்தாள். அவளுக்குமே தன் பகல்கனாக்களும், திட்டங்களும், ஆசை அபிலாஷைகளும் இருந்தன. தன் கணவனின் கனவுகள் அவளுக்குத் தெளிச்சியாகத் தெரிந்தது. பரிசுன்னு விழுந்தா அவளிடமிருந்து மொதல்ல யார் லபக்-கிக்குவாங்க என்று அவளுக்குத் தெரிந்தது!

பிறத்தியாள்க் காசில் பகல்கனவுன்னா நல்லாத்தான் இருக்கு இல்லே?... அவள் கண்கள் அதைச் சொல்லிக் காட்டின. அதென்ன அத்தனை தினாவெட்டு இந்தாளுக்கு?

பார்வைக்குப் பார்வை பதிலாய் அமைந்தது அவனுக்கும் புரிந்து விட்டது. அதுவே அவன் ஆத்திரத்தை இன்னும் து¡ண்டிவிட்டது. அவளைப் போட்டுத் தாக்குகிற ஆவேசத்துடன் அவன் நாலாம் பக்கம் செய்தித்தாளை அவசர நோட்டம் விட்டான். உற்சாகமாக வாசித்தான்.

''வரிசை 9499. எண் 46! இருபத்தியாறு இல்லை...''

வெறுப்பு மற்றும் நம்பிக்கை - இரண்டுமே அந்தக் கணமே அவர்களிடம் இருந்து மறைந்தன. அவர்கள் ரெண்டு பேருக்குமே சட்டென்று அந்த அறைகள் சிறியதாகவும் தலையிடிக்கும் கூரையுடனும் இருளடித்துப் போயும் இருப்பதாகப் பட்டன. அவர்களின் ராச்சாப்பாடு பிரயோஜனமேயில்லை. செரிப்பதேயில்லை... நகரவே நகராத அலுப்பான மாலைப் பொழுதுகள்.

''இதெல்லாம் என்ன?''- இவான் டிமிட்ரிச் திரும்ப வெறுப்புடன் பேசினான். ''உள்ளாற வந்தாலே து¡சி தும்பு கிழிச்சிப் போட்ட காகிதம். அறையைப் பெருக்கினாத்தானே? ஆளையே வெளிய வெரட்டிருது... வங்கொடுமையப்பா. நான் செத்துத் தொலையிறேன். வெளியபோயி மொதல் பார்க்கிற மரத்தில் நாண்டுக்கிட்டு சாகறேன்...!''

>>>

the lottery ticket - shortstory by anton chekhov

ஆங்கிலத்தில் படிக்க இங்கே

Friday, March 25, 2011

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடு - ஜூலியோ கொத்தஸார்

தமிழில்: ராஜகோபால்

  நாங்கள் அந்த வீட்டை விரும்பினோம், ஏனெனில் அதன் பழைமையும் விஸ்தாரமான இடமும் நீங்கலாக, அது (இப்பொழுதெல்லாம் பழைய வீடுகளின் கட்டுமானப் பொருட்கள் ஏலத்தில் அதிக விலைக்குப் போகின்றன) எங்களுடைய முன்னோரின், தந்தை வழி பாட்டனாரின், பெற்றோரின், எங்களுடைய குழந்தைப் பருவ ஞாபகங்களைத் தன்னுள்ளே கொண்டிருந்தது.

ஒருவருடைய வழியில் மற்றவர் குறுக்கிடாமல் எட்டு மனிதர்கள் வரை தாராளமாகப் புழங்கும் வசதியுடைய வீடு அது. அதில்தான் நானும் ஐரினும் வசிக்கப் பழகியிருந்தோம். உண்மையிjulio_cortazarல் அது வினோதமானதே. காலையில் ஏழு மணிக்கு விழித்தெழும் நாங்கள் வீட்டைத் துப்புரவு செய்யத் தொடங்குவோம். பதினோரு வாக்கில் சுத்தம் செய்யப்படாத அறைகளை ஐரினிரின் பொறுப்பில் விட்டுவிட்டு நான் சமையலறைக்குச் செல்வேன். துல்லியமாக மதியம் பன்னிரெண்டு மணிக்கு நாங்கள் மதிய உணவிற்கு அமருவோம். பின, கழுவ வேண்டிய சில எச்சில் தட்டுகளைத் தவிர பிற வேலையேதும் மிஞ்சியிருக்காது. வெறுமை சூழ்ந்து, அமைதி தவழும் அவ்வீட்டோடு உறவாடியபடி உணவருந்துவது எங்களுக்கு உவப்பான விஷயம். மேலும், அவ்வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் எங்களுக்கு எளிதாகத்தான் இருந்தது. எது எங்களைத் திருமணம் செய்து கொள்ளவிடாமல் தடுத்தது என்று யோசிக்கும் வேளையிலெல்லாம் நாங்கள் யோசிப்பதை நிறுத்திக்கொள்வோம். ஐரின், குறிப்பிடத்தக்க காரணங்கள் ஏதுமின்றி இரண்டு காதலர்களை நிராகரித்திருந்தாள். என்னை விட்டுச்சென்ற மரியா எஸ்தரோ, நாங்கள் ஒருவாறு சமாளித்து நிச்சயம் கொள்வதற்கு முன்னமே என் கரங்களில் மரித்தாள். எங்கள் முன்னோர்களால் நிறுவப்பட்ட குலத்தொடர்ச்சி உடைய இவ்வீட்டில் பகிர இயலாத மெüனம் நிறைந்து வழிந்தது. முதலில் தங்கை தமையனான எங்களுடைய எளிய திருமணத்தின் மூலம் இந்த மெüனம் முடிவுற்றுவிடும் என்ற எண்ணம் எங்களுக்கு நிலவியது. ஆனால் நாங்களோ சோர்வுற்றபடி நாற்பதுகளில் நகர்ந்துகொண்டிருந்தோம். என்றேனும் நாங்கள் மரிக்கலாம்; நாங்கள் அறியாத எங்கள் தூரத்து உறவினர்கள் இவ்விடத்தை மரபுரிமையாகப் பெற்று, இவ்விடத்தைச் சிதைத்து, செங்கற்களை விற்று, இம்மனையின் மூலம் வசதி பெறலாம் அல்லது நாங்களேகூட இதைச் சிறப்பாகச் சிதைத்து விற்கலாம்.

ஐரின் எவரையும் தொந்தரவு செய்வதில்லை. காலையில் வீட்டு வேலைகள் முடிந்தவுடன் எஞ்சிய மணித்துளிகளைப் படுக்கறையில் உள்ள சாய்விருக்கையில் அமர்ந்தவாறு பின்னல் வேலையில் ஈடுபட்டபடி கழிக்கத் தொடங்குவாள். அவள் ஏன் பின்னல் வேலையில் அதிகம் ஈடுபட்டாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. செய்வதற்கு வேலைகள் ஒன்றும் இல்லாதபோது இது பெரிய தப்பித்தலாக இருப்பதைப் பெண்கள் கண்டறிந்திருக்கலாம். ஆனால் அவள் அப்படிப்பட்ட பெண் அல்ல. தேவைகளின் பொருட்டே குளிர்காலத்துக்கு ஏற்ற கம்பளிகள், கால் உறைகள், காலையில் அணிவதற்கு ஏற்ற மேலங்கிகள், அவளுக்கென்று சில படுக்கை உறைகள் போன்றவற்றை நெய்து வந்தாள். சில சமயம் அவள் மேலங்கி ஒன்று பின்னத் தொடங்குவாள். மனதிற்கு உவப்பற்ற விஷயத்தை அதில் பார்த்தவுடன் நெய்வதை நிறுத்திவிடுவாள். போரில் தோல்வியைடந்ததுபோல் குவியலாக காட்சியளிக்கும் அந்தக் கம்பளியிழைகள் அதன் மெய் உருவை அடைவதற்கு முயன்றுகொண்டிருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கும். சனிக்கிழமைகளில் நான் கம்பளியிழைகள் வாங்குவதற்கு வெளியில் செல்வது வழக்கம். ஐரினுக்கு என்னுடைய ரசனைகளில் மிகுந்த நம்பிக்கை இருந்தது. நான் தேர்ந்தெடுத்த வண்ணங்கள் அவளுடைய மனத்திற்கு உவப்பூட்டியுள்ளதால் நான் ஒரு நூற்கண்டைக் கூடத் திருப்பியளிக்க நேர்ந்ததில்லை. இப்படி வெளியில் செல்வதைப் பயன்படுத்தி புத்தகங்கள் ஏதேனும் அவர்களிடம் உள்ளதா என்று கேட்பதும் என்னுடைய வழக்கமாக இருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தி ஒன்பதுக்குப் பிறகு அர்ஜென்டினாவிலிருந்து குறிப்பிடும்படியாக ஒன்றும் வெளிவரவில்லை.

ஆனால் இவ்வீட்டைப் பற்றித்தான் நான் பேச விரும்புகிறேன். குறிப்பாக ஐரின் பற்றியும் வீடு பற்றியுமே. இங்கு நான் முக்கியமில்ல. இப்பின்னல் வேலைகள் இல்லையென்றால் ஐரின் என்ன செய்திருப்பாள்? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒரு புத்தகத்தை ஒருவரால் திரும்பவும் வாசிக்க முடியும். ஆனால், ஒரு கம்பளிச் சட்டையைப் பின்னி முடித்த பிறகு அதை மீண்டும் பின்ன இயலாதே. இயலுமாயின் அது ஒருவகை மடத்தனமே. ஒருநாள், நிலைப்பெட்டியின் கீழ் அடுக்கு கற்பூர உருண்டைகளாலும் பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு நிற சால்வைகளாலும் நிறைந்து கிடப்பதைப் பார்த்தேன். கற்பூர வாசனைக்கு மத்தியில் அவை குவியலாகக் கிடந்ததைப் பார்த்தபோது அதுவொரு கடைபோல் காட்சியளித்தது. இவற்றைக் கொண்டு அவள் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாள் என்பதைக் கேட்கும் துணிச்சலை நான் இழந்திருந்தேன். நாங்களோ பொருள் ஈட்ட வேண்டிய அவசியமற்று இருந்தோம். ஒவ்வொரு மாதமும் பண்ணையிலிருந்து அதிக வருமானம் வந்துகொண்டிருந்தது. பணமும் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. ஆனால் ஐரினோ பின்னல் வேலையில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தாள். அவளிடம் அசாத்தியத் திறமையிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே என் நேரம் கழிந்து கொண்டிருந்தது. குறும்புக்காரச் சிறுவனை ஒத்த வெண்ணிறக் கைகளும் , பிரகாசமான ஊசிகளும் தரையில் கிடக்கும் ஓரிரு பின்னற் கூடைகளும், உருண்டோடும் நூலிழைகளும் பார்ப்பதற்குக் கவித்துவமானதுதான் இல்லையா?

அவ்வீட்டின் வடிவமைப்பை எப்படி நினைவுகூராமல் இருக்க முடியும்? சமையலறை, திரைச்சீலைகளோடு கூடிய வரவேற்பறை, மற்றும் ஒரு நூலகம். பின்கட்டிலுள்ள மூன்று படுக்கையறைகளில் ஒன்று ரோட்டி ரிகிஸ் பினோவைப் பார்த்திருக்கும். நடைக்கூடத்திலுள்ள பெரிய கருவாலி மரக் கதவு வாயிற் முகப்பை அவ்விடத்திலிருந்து பிரிக்கும். முன்கட்டில்தான் குளியலறை, சமையலறை, கூடம் மற்றும் எங்களுடைய படுக்கையறைகள் அமைந்துள்ளன. இனாமல் பூச்சு கொண்ட, டைல்கள் பதிக்கப்பட்ட முன்னறையின் வழியாக ஒருவர் மெல்லிரும்பு கொண்ட கிராதிக் கதவு தம்மை வரவேற்பறைக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க முடியும். முன்னறையின் வழியாக நுழைந்து வரவேற்பறையைக் கடந்தால் எங்கள் படுக்கையறைகளுக்குச் செல்லும் கதவுகளை இருபுறத்திலும் பார்க்கலாம். அதற்கு எதிர்ப்புறத்திலுள்ள நடைக்கூடம் வீட்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்லும். அந்நடைக்கூடம் வழியாகவே சென்று எதிர்ப்படும் கருவாலி மரக் கதவைத் திறந்தால் வீட்டின் மற்றொரு பகுதிக்குச் சென்றடைந்துவிடலாம். அக்கதவிற்குச் சற்றுமுன் தென்படும் இடப்புற வழி சமையலறைக்கும் குளியலறைக்கும் இட்டுச் செல்லும். அக்கதவு திறந்திருக்கும்பொழுதுதான் வீட்டின் விஸ்தீரணத்தை ஒருவரால் உணரமுடியும். அக்கதவு மூடியிருப்பின் இப்போதெல்லாம் கட்டப்படுகிற, நகருவதற்குப் போதுமான அறைகள் அற்ற அடுக்குமாடிக் குடியிருப்பை ஞாபகமூட்டும். ஐரினும் நானும் வீட்டின் இப்பகுதியில்தான் எப்போது வசித்து வந்தோம். அரிதாகத்தான் இக்கருவாலி மரக்கதவைத் தாண்டியச் செல்வோம்; அதுவும்கூட இடத்தைச் சுத்தம் செய்வதற்காகத்தான். தட்டுமுட்டுச் சாமான்களில் படியும் தூசியின் அளவு நம்ப முடியாத அளவிற்கு இருக்கும். புயனஸ் அயர்ஸ் சுத்தமான நகரமாக இருக்கலாம். அது மக்கள் தொகையோடு சரி. காற்றில் தூசி நிரம்பி வழிகிறது. சலைவக் கல் தளத்தின் மேற்புறத்திலும்; வைர வடிவங்கொண்ட தோற்கருவியினால் ஆன மேஜைத் தொகுதியின் மேற்புறத்திலும் மெல்லிய இளங்காற்றானது தூசியை வாரி இறைக்கிறது. சிறகுகளாலான துடைப்பானைக் கொண்டு இவற்றைச் சுத்தம் செய்வதற்கு மிகுந்த உழைப்பு தேவைப்படும். காற்றில் தூசிகள் மேலெழுந்து பறக்கும். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பியோனோவின் மேலும் தட்டுமுட்டுச் சாமான்களின் மேலும் தூசி படிந்துவிடும்.

இப்படிப்பட்ட ஞாபகங்கள் எப்போதும் என்னிடம் உண்டு. காரணம் இவை எவ்வித அமளியும் இல்லாமல் எளிதாக நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. ஐரின் அவளுடைய படுக்கையறையில் இருந்தவாறு பின்னிக்கொண்டிருந்தாள். அப்போது இரவு எட்டு மணியிருக்கும். திடீரென்று "மாட்' பானம் அருந்தலாம் என்று தீர்மானித்தேன். மாட் பானம் தயாரிக்க தண்ணீர் தேவைப்பட்டது. நடைக்கூடம் வழியாக கருவாலி மரக்கதவு நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவு சிறிது திறந்திருந்தது. கூடத்தில் நுழைந்து சமையலறை நோக்கி நூலகத்திலிருந்தோ சமையலறையிலிருந்தோ சப்தம் கேட்கும் மட்டும் நடந்துகொண்டிருந்தேன்; ஒரு நாற்காலி கார்பெட்டின் மேல் நகர்த்தப்படுவதுபோல அல்லது கீழ்ஸ்தாயியில் முணுமுணுக்கப்படும் ஓர் உரையாடல் போலவோ அச்சப்தம் தெளிவற்றுக் கேட்டது. அந்நேரமோ அல்லது அந்நேரத்திற்குப் பிறகோ அவ்விரண்டு அறைகளிலிருந்தும் விலகிக் கதவை நோக்கிச் செல்லும் நடைக்கூடத்தின் முடிவில் அதை நான் மீண்டும் கேட்டேன். உடன் என்னையே கதவிற்கு எதிராக எறிந்துகொண்டு, உடல் எடையின் துணைகொண்டு கதவைச் சாத்தி மூடினேன். அதிர்ஷ்டவசமாக சாவி எங்களுடைய பகுதியிலிருந்தது. மேலும் பாதுகாப்பின் பொருட்டு அவ்விடத்தில் பெரிய தாழ்ப்பாள் ஒன்றையும் போட்டேன்.

சமையலறைக்குத் திரும்பி கொதிகலத்தைக் கொதிக்கவிட்டு மாட் இலை வடிசலைத் தட்டில் வடித்தபடி அறைக்குத் திரும்பியபோது நான் ஐரினிடம் சொன்னேன்:

""நடைகூடத்திற்குச் செல்லும் கதவை மூட வேண்டியதாயிற்று. அவர்கள் பின்கட்டை ஆக்கிரமித்துவிட்டார்கள்.''

பின்னல் வேலையைக் கைவிட்டவள் சோர்வுற்ற கூர்மையான கண்களால் என்னைப் பார்த்தாள்.

""உறுதியாகத் தெரியுமா?''

ஆமோதித்தேன்

""அப்படியென்றால் ...?'' ஊசிகளைத் திரும்பவும் எடுத்தவள்,

""இனி இப்பகுதியில் தான் நாம் வாழ வேண்டும்'' என்றாள்.

மிகுந்த கவனத்தோடு மாட் பானத்தைப் பருகத் தொடங்கினேன். ஆனால் அவளோ வேலையை மீண்டும் தொடங்கியிருந்தாள். ஒரு சாம்பல் நிறச் சட்டையை அவள் பின்னிக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. அச்சட்டையை நான் மிகவும் விரும்பினேன்.

முதலில் ஒரு சில தினங்கள் துயரம் தருவதாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் இருவரும் பல பொருட்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் விட்டுவிட்டு வந்திருந்தோம். உதாரணத்திற்கு என்னுடைய பிரெஞ்சு இலக்கியத் தொகுதிகள் அந்நூலகத்தில்தான் இருக்கின்றன. ஐரினோ பல பொருட்களோடு, அவளுடைய ஒரு ஜோடிக் காலணிகளையும் விட்டுவிட்டு வந்துவிட்டாள். பனிக்காலத்தில் அவற்றைத் தான் அவள் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். நான் காட்டு ரோஜாவில் செய்யப்பட்ட புகைக் குழாயை இழந்ததற்கும் ஐரின் பழைமையேறி ஹேஸ் பிரிடின் குப்பியை இழந்ததற்குமாக வருந்திக்கொண்டிருந்தோம். இவை தொடர்ச்சியாக நிகழத் தொடங்கியது. (ஆனால், முதல் ஒரு சில தினங்கள் மட்டுமே இவை நிகழ்ந்தன.) நாங்கள் ஏதேனும் மேஜையையோ, இழுப்பறை பெட்டியையோ மூடும்போது ஒருவரை ஒருவர் சோகத்தோடு பார்த்துக்கொள்வது வழக்கமாயிற்று.

""இது இங்கில்லை''

நாங்கள் இழந்தவற்றோடு மேலும் ஒன்று சேர்ந்துகொள்ளும். ஆனால் இதிலும் சில அனுகூலங்கள் இருந்தன. வீட்டைச் சுத்தம் செய்வது எளிதாயிற்று. நாங்கள் நேரம் கழித்து விழித்தெழுந்தாலும்... உதாரணத்திற்கு ஒன்பதரை மணிக்கு அல்லது பதினோரு மணிக்கு எழுந்தாலும் கைகளைக் கட்டியபடி வெறுமனே உட்கார்ந்திருப்போம். ஐரின் மதிய உணவு தயாரிக்க உதவும்பொருட்டு என்னோடு சமையலறைக்கு வரத் தொடங்கினாள். நாங்கள் சிலவற்றைப் பற்றி ஆலோசித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தோம். நான் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருக்கும்போது, மாலையில் நாங்கள் உணவு அருந்துவதற்கு ஏற்ற உணவு வகைகளை ஐரின் தயாரிக்க வேண்டும். இவ்வேற்பாட்டின் வழி எங்களுக்கு மகிழ்ச்சி திரும்பியது. காரணம், சாயுங்கால வேளைகளில் படுக்கையறைகளை விட்டுவந்து சமைக்கத் தொடங்குவது எப்போதும் தொல்லை தருவதாகவே இருந்தது. இப்போது ஐரினின் அறையிலுள்ள மேஜையில்தான் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான விஷயங்களால் ஐரினின் பின்னல் வேலைகளுக்கு அதிக நேரம் கிடைத்தது. அவன் மனநிறைவோடிருந்தாள். என்னுடைய புத்தகங்களால் சிறிது ஈர்ப்புணர்விற்கு நான் ஆட்பட்டிருந்தேன். இருப்பினும் அவற்றை என் சகோதரியின் மீது திணிக்கவில்லை. என் தந்தையுடைய தபால்தலைச் சேகரிப்புகளை ஒழுங்குபடுத்தத் தொடங்கினேன். அது என்னுடைய நேரத்தைக் கொல்லத் தொடங்கியது. அதிக வசதிகளை உடைய ஐரினின் படுக்கையறையில் நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கு ஒருவர் அவரவர் பிரத்யேக விஷயங்களால் மனநிறைவு அடையும்படி எங்களுக்கு நாங்களே மகிழ்ச்சியூட்டிக் கொண்டோம். எப்போதாவது ஐரின் இப்படிச் சொல்வாள்:

""இந்த வடிவத்தைப் பார், இப்போதுதான் கண்டுபிடித்தேன். இது கிளாவர் போல் இருக்கிறது இல்லையா?''

ஓரிரு கணங்களுக்குப் பின், சிறிய சதுர வடிவக் காகிதத்தை அவள் முன் தள்ளுவேன். அதன் வழி ஏதேனும் ஒரு ஸ்டாம்பையோ அல்லது யுப்பன் இட் மல்மேடிலிருந்தோ வந்த மற்றொன்றின் சிறப்பையோ அவள் பார்ப்பாள். நாங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம்.சிறிது சிறிதாக, சிந்திப்பதை நிறுத்திக்கொண்டோம். சிந்திக்காமலும் உங்களால் வாழ முடியுமே.

(எப்போதெல்லாம் ஐரின் உறக்கத்தில் முணுமுணுக்கத் தொடங்குகிறாளோ அப்போதெல்லாம் நான் உடன் விழித்துக்கொள்கிறேன். பின் விழித்தபடிதான் நேரம் கழியும். தொண்டையில் இருந்தல்ல கிளியிடமிருந்தோ சிலையிடமிருந்தோ வெளிப்படும் ஒரு குரலிற்கு அல்லது கனவிலிருந்து வெளிப்படும் ஒரு குரலிற்கோ நான் பழக்கப்பட்டவன் அல்லன். ஐரினோ, உறக்கத்தில் நான் கட்டிலையும் படுக்கை விரிப்புகளையும் அபரிமிதமாக உலுக்குவதாகத் தெரிவிக்கிறாள். எங்களுக்கிடையில் வரவேற்பறை ஒன்று இருந்தபோதும் எங்களால் வீட்டில் நிகழும் யாவற்றையும் கேட்க முடிகிறது. இருவராலும் உறங்க முடிவதில்லை என்பதால் ஒருவருக்கு ஒருவர் மற்றவரின் சுவாசத்தையும் இருமலையும் வெளிச்சம் வேண்டி ஒருவர் விளக்கு போடச் செல்வத்தையும் பார்க்க முடிகிறது.

இரவிற்குரிய சப்தங்களைத் தவிர்த்துவிட்டால் வீடானது அமைதியோடிக் கிடக்கும். பகலிலோ, ஒரு வீட்டிற்குரிய சப்தங்களோடு பின்னல் வேலையில் ஈடுபடும் உலோக ஊசியின் சப்தம், ஸ்டாம்பு ஆல்பத்தைப் புரட்டுவதால் ஏற்படும் சலசலப்பொலி போன்றவற்றை ஒருவரால் கேட்க இயலும். அந்தக் கருவாலி மரக் கதவோ மிகப் பெரியது. இதை முன்பே உங்களிடம் தெரிவிக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை ஒட்டியுள்ள சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ நாங்கள் உரக்கப் பேச முற்படுவது வழக்கம். ஐரின் தாலாட்டுப் பாடல்களைப் பாடத் தொடங்குவாள். எப்போதும் அதிக சப்தங்களால் நிறைந்திருக்கும் சமையலறையில், தட்டுகளின், குவளைகளின் சப்தங்களோடு பிற சப்தங்களின் குறுக்கீடும் இருக்கும். அபூர்வமாகத்தான் நாங்களும் அங்கு மெüனத்தைக் கைக்கொள்வோம். ஆனால் எங்கள் அறைகளுக்கோ வரவேற்பறைக்கோ திரும்பும் சமயம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தோடு மிக மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து நடக்கும்போது மங்கிய வெளிச்சத்தில் வீடு அமைதியில் மூழ்கிக் கிடக்கும். ஐரின் அவளுடைய உறக்கத்தில் முணுமுணுக்கத் தொடங்கியவுடன் தவிர்க்க இயலாமல் நான் விழித்துக்கொள்கிறேன்.)
விளைவுகளைத் தவிர்த்துவிட்டால், இது ஒரே ஒரு காட்சி மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கு ஒப்பானதே. அன்றைய இரவில் நான் மிகுந்த தாகத்தோடு இருந்தேன். நாங்கள் உறங்கச் செல்வதற்கு முன் ஒரு குவளைத் தண்ணீருக்காகச் சமையலறைக்குப் போகிறேன் என்பதை ஐரினிடம் தெரிவித்தேன். படுக்கையறைக் கதவுக்கு அருகிலிருந்த (அவள் பின்னிக் கொண்டிருந்தாள்) சமலையலறையிலிருந்து ஒரு சப்தம் வெளிப்பட்டது. சமையலறையாக இல்லாவிடின் அது குளியலறையாக இருக்கலாம். நடைக் கூடத்தின் அமைப்பு, சப்தத்தைத் தெளிவற்றதாக்கி இருந்தது. திடீரென்று நான் தயங்கி நிற்பதை ஐரின் கவனித்தாள். சபதம் ஒன்றும் எழுப்பாமல் என்னருகில் வந்து நின்றாள். நாங்கள் அச்சப்தத்தைக் கவனிக்கத் தொடங்கினோம். எங்கள் பகுதியில் கருவாலி மரக் கதவிற்கு அருகில் அவர்கள் நிற்கிறார்கள் என்பதை ருசுப்படுத்துவதற்கு ஏற்ப சப்தம் மேலும்மேலும் வலுக்கத் தொடங்கியது. சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ அல்லது நடைக்கூடத்தின் வளைவிலோ நான் நின்று கொண்டிருந்தேன். ஏறக்குறைய எங்களுக்கு மிக அருகில்தான் அவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட அவகாசமில்லை. வலுக்கட்டாயமாக ஐரினின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு எஃகுக் கிராதிக் கதவை நோக்கி ஓடினேன். எங்களுக்குப் பின்னே உள்ளடங்கிய ஆனால் வலுத்த சப்தத்தை ஒருவரால் கேட்க முடியும். இரும்புக் கிராதியை அறைந்து சாத்தினேன். கூடத்திற்கு வந்த பிறகே நாங்கள் ஓட்டத்தை நிறுத்தினோம். இப்போது ஒன்றும் கேட்கவில்லை.
""அவர்கள் நம் பகுதியை ஆக்கிரமித்துவிட்டார்கள்'' என்றாள் ஐரின். பின்னற்கூடை அவளுடைய கைகளிலிருந்து நழுவி விழுந்தது. நூலிழைகள் கதவை நோக்கி ஓடி மறைந்தன. நூல் பந்துகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கிடப்பதைப் பார்த்த அவள், அவற்றைச் காணச் சகிக்காமல் பின்னுவதைக் கைவிட்டாள்.

""எதையேனும் எடுப்பதற்கு நேரம் உள்ளதா?'' நம்பிக்கையற்றவாறுதான் கேட்டேன்.

""இல்லை. ஒன்றுமில்லை.''

எங்கள் கைகளில் இருந்ததுதான் எங்களுக்கு மிஞ்சியது. என் படுக்கையறை அலமாரியில் பதினைந்தாயிரம் பிசோக்கள் இருந்ததை நினைகூர்ந்தேன். இப்போது நேரம் கடந்துவிட்டது.
மிஞ்சியிருந்த என் கைகடிகாரத்தைப் பார்த்தேன். மணி இரவு பதினொன்று ஆகிவிட்டிருந்தது. ஐரினின் இடையைச் சுற்றி அணைத்துக்கொண்டேன் (அவள் அழுதுகொண்டிருந்தாள் என்று நினைக்கிறேன்). இப்படித்தான் நாங்கள் தெருவுக்கு வந்து சேர்ந்தோம். அவ்விடத்தை விட்டுக் கிளம்பியபோது என் உடல் ஒரு கணம் நடுங்கியது. முன்கதவை இறுக்கமாகத் தாழிட்டுச் சாவியை சாக்கடையை நோக்கி எறிந்தேன். அந்நேரம் மட்டும் அப்படி ஒரு சாத்தான் நுழைந்து வீட்டை ஆக்கிரமித்துக்கொள்ளாவிட்டால் நான் இதைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது.

********

நூல்: இந்த நகரத்தில் திருடர்களே இல்லை (லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்) தமிழில்: ராஜகோபால். விலை ரூ.80

ஜோர்ஜ் லூயி போர்ஹே, கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ், ஃபிலிஸ் பெர்டோ ஹெர்னாண்டெஸ், ஜுலியோ ரோமன் ரிபியோரா, லூயிஸô வெலின்சுலா, ஆல்பெர்தோ சிம்மல் போன்றோர் சிறுகதைள் உள்ளடக்கிய நூல்.

வெளியீடு: நிழல் 12/28 இராணி அண்ணாநகர் கே.கே.நகர் சென்னை  - 78 தொலைபேசி: 9444484868

ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும் (Translated by Paul Blackburn)

ஜூலியோ கொத்தஸார்

1940-ஆம் ஆண்டு கோடையில் ஒரு மதியம். புயனஸ் அயர்ஸிலிருந்து ரகசியமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியரை ஓர் இளைஞன் சந்திக்கிறான். அவனுடைய முதல் சிறுகதையை அவரிடம் கொடுக்கிறான். இதழ் ஆசிரியர் பத்து தினங்கள் கழித்து வந்து அவரைப் பார்க்கும்படிச் சொல்கிறார். பத்து தினங்கள் கழித்து இளைஞன் மீண்டும் வருகிறான். இதழ் ஆசிரியர் கதை பிடித்திருப்பதாகவும், அச்சுக்குக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார். 'ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடு' என்னும் தலைப்பைக் கொண்டுள்ள அச்சிறுகதை நோரா போர்ஹஸின் கோட்டோவியங்களோடு அவ்விதழில் பிரசுரமாகிறது. வருடங்களுக்குப் பிறகு அவ்விதழ் ஆசிரியரைச் சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை வேண்டி அந்த இளைஞன் அணுகுகிறான். அப்போது அக்கதையைப் பிரசுரித்ததற்கான காரணத்தை அவ்விதழ் ஆசிரியர் எழுதுகிறார். அச்சிறுகதையைப் பிரசுரித்த இதழ் ஆசிரியர் பெயர்: ஜோர்ஜ் லூயி போர்ஹே. அந்த இளைஞனின் பெயர் ஜூலியோ கொத்தஸார். இங்கு பிரசுரமாகியுள்ள இச்சிறுகதை ஜூலியோ கொத்தஸாரின் Blow up and other stories என்னும் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

http://en.wikipedia.org/wiki/Julio_Cort%C3%A1zar

 

 

 

 

 

 

 

 

 

 

நன்றி: தாவரம்

Thursday, March 24, 2011

விருந்தாளி -ஆல்பெர் காம்யு

தமிழில்: க.நா.சுப்ரமண்யம்

சரிவான பாதையிலே தூரத்தில் தன்னை நோக்கி ஏறி வந்த இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றார் ஆசிரியர். ஒருவன் குதிரை மேல் வந்தான்; மற்றொருவன் நடந்து வந்தான். இன்னும் செங்குத்தான குன்றை அவர்கள் அடையவில்லை. அதைத் தாண்டியே அவர்கள் பள்ளிக்கூடத்தை அடைய முடியும். ஏறி வருவது சிரமமான காரியம்தான். பனி வேறு பெய்ததால் சற்று மெதுவாகவே வந்தனர் அவர்கள். மனித சஞ்சாரமேயற்ற சரிவு அது. காலடியிலிருந்த கற்களில் குதிரை அடிக்கடி இடறிற்று. காதில் எதுவும் விழவில்லை - ஆனால் குதிரையின் மூச்சுக்காற்று வெண்மையான பனிப்படலமாகத் தெரிந்தது. ஒருவனுக்கு வழி தெரியும்போல இருந்தது. இரண்டு நாட்களுக்குAlbert Camus - 74_lg முன்னரே பனிக்கடியில் பாதை மூடிவிட்டது. எனினும் பாதை தெரிந்தே வந்தனர் அவர்கள். குன்றேறி வர அவர்களுக்கு அரைமணி நேரமாவது ஆகும் என்று எண்ணினார் ஆசிரியர். குளிராக இருந்ததால் உள்ளே போய், தனக்கு அணிந்துகொள்ள ஒரு ஸ்வெட்டர் எடுத்து வந்தார். குளிர்ந்து காலியாக இருந்த வகுப்பறையைத் தாண்டினார். கரும்பலையில் நாலு வர்ணங்களில் ஃபிரான்சு தேசத்து நாலு நதிகளும் மூன்று நாட்களாகக் கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. எட்டு மாதங்களாக மழையோ, மேகமோ இல்லாதிருந்தது - திடீரென்று மூன்று நாட்களுக்கு முன் பனிப்புயல் வீசியது - அக்டோபர் மத்தியில் சுற்று வட்டத்து மலைச்சரிவுகளிலே வசித்த இருபது மாணவர்களும் வருவதையே நிறுத்தி விட்டார்கள். பனி ஓய்ந்த பின் அவர்கள் வருவார்கள். தனக்கு வசிக்க இருந்த ஒரே அறையில் மட்டும் கணப்பு மூட்டி உஷ்ணமாக்கி வைத்திருந்தார் ஆசிரியர் டாரு. வகுப்பறைக்குப் பக்கத்து அறை அது. மலைமேல் போக கிழக்கே வாசல் இருந்தது. வகுப்பறை ஜன்னல்கள் போலவே அவர் அறை ஜன்னல்களும் தெற்கு நோக்கியிருந்தன. பனியில்லாத தெளிவான நாட்களில் மலைத்தொடருக்கப்பால் பாலைவனம் போகும் பள்ளத்தாக்கு தெரியும் - அந்த ஜன்னல் வழியாக.

அறையில் உஷ்ணக் கதகதப்பு ஏறியதும் டாரு முதலில் அந்த இரண்டு மனிதர்களைக் கண்ட ஜன்னலுக்குத் திருப்பினார். அவர்கள் இப்போது கண்ணில் படவில்லை. கடைசிக் குன்று ஏறத் தொடங்கியிருப்பார்கள். வானம் அவ்வளவு இருட்டாக இல்லை - பனி விழுவது சற்றே நின்றிருந்தது. அழுக்குப் படிந்த ஒளியோடு தொடங்கிய காலைப் பொழுது, மேகங்கள் அகன்றும் இருட்டாகவே தான் இருந்தது - ஒளி கூடவில்லை. மாலை இரண்டு மணிக்கும் கூட அப்போதுதான் பொழுது விழுந்ததுபோல இருந்தது. ஆனாலும் முந்திய மூன்று நாட்களையும் விட இது தேவலை. இருளும் அடர்ந்து பனியும் விழுந்து கொண்டிருந்தது அந்த மூன்று நாட்களும். காற்றும் விட்டுவிட்டு விசிறி விசிறி அடித்துக் கொண்டிருந்தது. தன் அறையிலேயே நெடுநேரம் டாரு முடங்கிக் கிடக்க வேண்டியதாக இருந்தது - வேறு எதுவும் செய்வதற்கில்லை. அவசியமானால் கணப்புக்குக் கரி கொணரவோ அல்லது கோழிக்குஞ்சுகளுக்குத் தீனி வைக்கவோ போனார் கொட்டகைக்கு. அதிருஷ்டவசமாக டாஜ்டிட்டிலிருந்து சாமான்கள் கொண்டு வரும் ட்ரக் இரண்டு நாட்களுக்கு முன்தான் வந்து போயிருந்தது. வடக்கே அருகிலுள்ள கிராமம் டாஜ்டிட்தான். இன்னும் இரண்டு நாள் கழித்து டிரக் மேலும் தேவையான சாமான்களைக் கொண்டு வரும்.

தவிரவும் அங்கு ஒரு முற்றுகை நேர்ந்துவிட்டால் கூடச் சமாளித்துக் கொள்வதற்கும் போதுமான உணவுப் பண்டங்கள் இருந்தன. மழை பெய்யாத காரணத்தால் விளைச்சல் காணவில்லை. விளைச்சல் காணாது பட்டினி கிடக்க வேண்டி வந்துவிட்ட அவர் மாணவர்களின் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு என்று பள்ளி ஆசிரியருக்கு அரசாங்கம் தந்திருந்த கோதுமை மூட்டைகள் அந்தச் சின்ன அறையிலே அங்குமிங்குமாக அடைத்துக் கொண்டு கிடந்தன. உண்மையில் அவர்கள் எல்லோருமே ஏழைகள் என்பதனால் பஞ்சத்திலடிக்கப்பட்டவர்கள்தான். ஒவ்வொரு நாளும் டாரு குழந்தைகளுக்குத் தானியத்தை அளந்து - இவ்வளவென்று - தருவார். இந்த மூன்று நாட்களும் அது கிடைக்காததால் அவர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள். யாராவது பெற்றவனோ, சகோதரனோ தானியம் வேண்டும் என்று மாலையில் வந்தாலும் வருவான். அடுத்த அறுவடை வரையில் அவர்கள் சமாளிக்க வேண்டுமே! கப்பல் கப்பலாக ஃபிரான்சிலிருந்து கோதுமை வந்தது. பஞ்சத்தின் மோசமான நாட்கள் தீர்ந்து விட்டன. ஆனால் அந்தக் கடும் ஏழ்மையை மறப்பது என்னவோ சிரமம்தான். சூரிய ஒளியிலே கந்தலாடை உடுத்தி கண்குழி விழுந்த பட்டினிப் பட்டாளத்தை மறக்க இயலுமா? மழையில்லாமல் தீய்ந்து கருகிய நிலமும், புழுதி எழுப்பிய வயல்களும் காலடியிலே கல்லு கூடப் பொடியாகும் நிகழ்ச்சியும் மறப்பதற்கில்லை. ஆயிரக்கணக்கான ஆடுகள் இறந்தன. சில மனிதர்களும்தான் -எத்தனை, எங்கே என்று ஒருவருக்கும் தெரியாது.

இந்த ஏழ்மையோடு ஒப்பிடும்போது இத்தனை தனிமையான இடத்தில் பள்ளிக்கூடம் நடத்திக்கொண்டிருந்த தன்னை ஒரு பிரபு என்றுதான் சொல்ல வேண்டும். தனக்குக் கிடைத்தது,இருந்தது போதுமென்ற மனத்துடன் வாழ்ந்தார் அவர். இந்தக் கடினமான வாழ்வு அவருக்கு உகந்ததாக இருந்தது. அவர் சுவர்கள் வெள்ளை வைத்திருந்தன. படுத்து உறங்க குறுகிய கட்டில் - வர்ணம் தீட்டாத மர அலமாரிகள் -பின் பக்கத்துக் கிணறு - வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களும் குடிநீரும் - இதுதான் அவர் வாழ்வு . திடீரென்று பனிபெய்யத் தொடங்கியது - மழை என்கிற சுவடேயில்லாமல். இந்தப் பிராந்தியமே அப்படித்தான். இங்கு வாழ்க்கை மகா கடினமானது. மனிதர்களும் மோசந்தான். அவர்கள் இருப்பதால் இப்பிரதேசத்து வாழ்வு சுலபமாகி விடுவதில்லை. ஆனால் டாரு இந்த வாழ்க்கைக்கே பிறந்தவர் - அவர். மற்றவர்களைத்தான் அந்நியப் பேர்வழிகளாக உணர்ந்தார்; வேறு இடத்துக்குப் போனால் தன்னை அந்நியனாக உணர்ந்தார்.

பள்ளிக் கட்டிடத்து வெளி வராண்டாவில் வந்து நின்றார் அவர். குன்றில் பாதிவழி ஏறி வந்து கொண்டிருந்தனர் இருவரும். குதிரை மேல் வந்தது பால்டுச்சி - போலீஸ்காரன். அவனை வெகுநாட்களாகவே அவருக்குப் பழக்கமுண்டு. இரண்டாவது பேர்வழி ஒரு அராபியன் - அவனைக் கயிற்றில் பிணைத்துக் கயிற்றின் ஒரு கோடியைத் தன் கையில் பிடித்திருந்தான் பால்டுச்சி; அராபியனின் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன; தலை குனிந்தபடியே குதிரைக்குப் பின் நடந்து வந்தான் அவன். டாருவைப் பார்த்துக் கையை ஆட்டினான் போலீஸ்காரன் - அதற்குப் பதில் சைகை செய்யவில்லை அவர். வெளிரிட்ட நீல ஜெல்லாபா சட்டை அணிந்து, காலில் செருப்புகளுடன், ஆனால் கனமான கம்பளி ஸôக்ஸ் அணிந்து தலையில் சேச்சே முண்டாசு கட்டியிருந்த அந்த அராபியனையே பார்த்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவராக நின்றார் டாரு. அவர்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். அராபியனை வேகமாக இழுத்துக் குதிரை துன்புறுத்தாத வண்ணம் அதை அடக்கிப் பிடித்துக்கொண்டு மெதுவாகவே வந்தான் போலீஸ்காரன்.

கூப்பிடு தூரத்தில் வந்ததும் பால்டுச்சி உரக்கச் சொன்னான். ""எல் அமேரிலிருந்து இந்த மூன்று கிலோ மீட்டர்களையும் கடக்க ஒரு மணி நேரமாயிற்று'' என்று கூவினான். டாரு பதில் தரவில்லை. தடித்த ஸ்வெட்டரை அணிந்துகொண்டு குள்ளமாக, சற்று தூரமாகக் காட்சியளித்தபடி நின்ற அவர் அவர்கள் தன்னை அணுகுவதைக் கவனித்துக் கொண்டே நின்றார். அராபியன் ஒரு தடவை கூடத் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. பள்ளிக் கட்டிட வாசலை அவர்கள் அடைந்ததும், ""ஹலோ'' என்றார் டாரு. ""உள்ளே வாருங்கள். குளிருக்கு அடக்கமாக, கதகதப்பாக இருக்கும்'' என்றார். கையில் பிடித்திருந்த கயிறு முனையை விட்டுவிடாமல் கீழே குதித்தான் பால்டுச்சி. அவன் கால்களில் வலி கண்டிருந்தது போலும். குத்திட்டு நின்ற மீசைக்குக் கீழே அவன் உதடுகள் டாருவைக் கண்டு புன்சிரிப்பால் மலர்ந்தன. பழுப்பேறிய நெற்றிக்குக் கீழே சிறிய இருண்ட கண்கள். முகவாய்க்கட்டை உதடுகளைச் சுற்றி பல சுருக்கங்கள் விழுந்திருந்தன. தோற்றத்தில் அவன் ஒரு ஆராய்ச்சி மாணவன். புஸ்தகப்புழு என்று கூடச் சொல்லலாம் போல இருந்தது. டாரு குதிரை லகானைப் பிடித்து அதைப் பின்பக்கம் கொட்டகைக்கு இழுத்துச் சென்றார். பிறகு வந்து இருவருடனும் பள்ளியில் அறையில் சேர்ந்து கொண்டார். பின்னர் அவர்களைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். ""வகுப்பறையை உஷ்ணமாக்குகிறேன். இதைவிட அது செüகரியமாக இருக்கும் நமக்கு'' என்றார். மீண்டும் அவர் தன் அறைக்குள் வந்தபோது, பால்டுச்சி ஆசனத்தில் வீற்றிருந்தான். அராபியனுடன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டிருந்தான். அராபியன் கணப்பருகில் குந்தியிருந்தான். அவன் கைகள் இன்னமும் கயிற்றால் கட்டப்பட்டேயிருந்தன. "சேச்சே' முண்டாசை சற்று மேலுக்குச் சாய்ந்தாற் போலத் தள்ளியிருந்தான். ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் டாருவின் கண்களில் பட்டது அவனுடைய தடித்த உதடுகள்தான். வழுவழுப்பாக நீக்ரோ உதடுகள் போலத் தடித்திருந்தன அவை. முண்டாசுக்குக் கீழே இருந்த நெற்றி அவன் பிடிவாதக்காரன் என்பதை அறிவுறுத்தியது. குளிரால் வர்ணம் சற்றுப் போன தடித்ததோல், அவன் முகத்திலே ஒரு அமைதியின்மையும், புரட்சி பாவமும் இருந்தது என்று டாரு கவனித்தார். தன்னை நேருக்கு நேர் நிமிர்ந்து அந்த அராபியன் பார்த்தபோது அப்படித்தான் டாருவுக்குத் தோன்றியது.

""அடுத்த அறைக்குப் போ''.

""நான் உனக்குக் கொஞ்சம் மிண்ட் தேநீர் தயாரித்துத் தருகிறேன்'' என்றார் டாரு.

""தாங்க்ஸ்'' என்றான் பால்டுச்சி. ""என்ன தொல்லை இந்த வேலையிலே? எப்படா ரிடையர் ஆகப் போகிறேன் என்று இருக்கிறது.'' தனது கைதியை நோக்கி அராபிய மொழியில் கூறினான். ""வா! வா! நீயும்தான்'' என்றான்.

அராபியினும் எழுந்தான்; மெதுவாகக் கட்டப்பட்ட தன் கைகளை முன்னால் நீட்டிக் கொண்டு வகுப்பறைக்குள் சென்றான். தேநீருடன் டாரு ஒரு நாற்காலியையும் கொண்டு வந்தார். ஆனால் பால்டுச்சி மிகவும் அருகிலிருந்த ஒரு மாணவனுடைய சரிவு மேசையின் மேல் வீற்றிருந்தான் -கணப்பைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். கணப்போ மேஜைக்கும் ஜன்னலுக்கும் இடையில் இருந்தது. கைதியின் பக்கம் தேநீரை நீட்டுகிறபோது டாரு அவன் கட்டப்பட்ட கைகளைக் கண்டு சற்று தயங்கினார்.

""கட்டை அவிழ்த்துவிடலாமே!''

""அவிழ்த்துவிடலாம். பிரயாணத்தை உத்தேசித்துக் கட்டியதுதான்'' என்றான் பால்டுச்சி.

அவன் எழுந்திருக்க முயன்றான். அதற்குள் டாரு அந்த அராபியன் பக்கத்தில் மண்டியிட்டு, தேநீர்க் கோப்பையைத் தரையில் வைத்துவிட்டு, கைகளைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டார். ஒரு வார்த்தையும் பேசாமல், ஜுரம் அடித்தவனுடையது போன்ற கண்களுடன் அராபியன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். கைகள் விடுவிக்கப்பட்டதும் கட்டின் இறுக்கத்தால் வீங்கியிருந்த மணிக்கட்டுகளைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான். தேநீர்க் கோப்பையை எடுத்து சூடான தேநீரை அவசர அவசரமாக விழுங்கினான்.

""நல்லது'' என்றார் டாரு. ""நீ எங்கே கிளம்பினாய்?'' தேநீர்க் கோப்பையிலிருந்து மீசையை வெளியே எடுத்தான் பால்டுச்சி.

""இங்கேதான் ஐயனே!''

""வேடிக்கையான மாணவர்கள்தான்! இரவு இங்கு தங்குவீர்களா?'' ""இல்லை. நான் அல்மேருக்குத் திரும்பிப் போகிறேன். ஆசாமியை நீ டாஜ்டிட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவனைப் போலீஸ் தலைமைக் காரியாலயத்தில் எதிர்பார்க்கிறார்கள்.''

பால்டுச்சி டாருவைப் பார்த்து ஒரு தோழமையுடன் சிரித்தான் ""இது என்ன கதை இது? என்னிடம் விளையாடுகிறாயா நீ?'' என்றார் டாரு.

""இல்லை ஐயனே! எனக்குக் கிடைத்த உத்தரவு இதுதான்.''

""உத்தரவா! யாருக்கு? எனக்கா?'' டாரு தயங்கினார். அந்தக் கிழட்டுக் கார்ஸிகன் போலீஸ்காரனுக்கும் வருத்தம் தர அவர் விரும்பவில்லை. ""அதாவது, அது என் வேலையில்லையே!''

""என்ன? அப்படியென்றால் என்ன அர்த்தம்? யுத்த காலத்தில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியதுதான்.''

""யுத்த காலம் வரும் வரையில் நான் காத்திருக்கிறேன்.''

பால்டுச்சி தலையை ஆட்டினான்.

""அது சரி. ஆனால் உத்தரவு இருக்கிறது - உன் அளவிலும்தான். ஏதோ விசேஷம் இருக்கிறது என்று தோன்றுகிறது. புரட்சி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு அம்சத்தில் யுத்த காலம்தான்.''

டாரு இன்னமும் பிடிவாதமாகவே காணப்பட்டார்.

""கேளும் ஐயனே!'' பால்டுச்சி சொன்னான். "" எனக்கு உன்னைப் பிடிக்கும், இருந்தாலும் நீ விஷயத்தைப் புரிந்து கொள்ள முயலவேண்டும். எல் அமேரில் நாங்கள் ஒரு டஜன் பேர்வழிகள்தான் இருக்கிறோம். பொறுப்பு பூராவும் எங்களுடையது. ஆகவே நான் அதிகநேரம் அங்கிருந்து அப்பால் போய்விட முடியாது. இந்த மனிதனை உன்னிடம் ஒப்புவித்து விட்டு தாமதமன்னியில் திரும்பச் சொல்லி எனக்கு உத்தரவு. அங்கு அவனை வைத்திருக்க இயலாது - அவன் கிராமத்தவர் அசையத் தொடங்கிவிட்டனர். அவனை விடுவித்துக் கொண்டு போக அவர்கள் தயாராக இருந்தனர். நாளை மாலைக்குள் அவனை டாஜ்டிட்டில் கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டும். உன்னைப் போல பலசாலிக்கு இருபது கிலோ மீட்டர்கள் பற்றிக் கவலை என்ன வந்தது? அதற்குப் பிறகு உன் மாணவர்களை நாடி உன் செüக்கியமான வாழ்வுக்குத் திரும்பிவிடலாம்.''

சுவருக்கு அப்பால் குதிரை கனைப்பதும், பூமியைக் காலால் உதைப்பதும் காதில் விழுந்தது. டாரு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். பனி மூட்டம் விலகி, மலைகள் மேல் வெய்யில் ஒளிபடரத் தொடங்கிவிட்டது. பனிப்புயல் அகன்றுவிடும். பனியெல்லாம் உருகிய பின்னர், மீண்டும் சூரியன் ஆட்சி தொடங்கிவிடும். மனிதன் வரமுடியாத பிரதேசமாகி விடும் அது மீண்டும்.

""அது சரி - அவன் என்ன செய்தான்?'' என்று பால்டுச்சியைப் பார்த்துக் கேட்டார் டாரு. ஆனால், போலீஸ்காரன் பதில் சொல்ல வாயைத் திறக்கும்முன், ""அவன் ஃபிரெஞ்சு பேசுவானா?'' என்றார்.
""தெரியாது - ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அவனை ஒரு மாதமாகத் தேடிக் கொண்டிருந்தோம். } அவன் கிராமத்தார் அவனை ஒளித்து வைத்திருந்தனர். அவன் தனது உறவினன் ஒருவனைக் கொன்றுவிட்டான்.''

""நமக்கு எதிரியா அவன்?''

""இல்லை என்று எண்ணுகிறேன். ஆனால் இதெல்லாம் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.''

""எதற்காகக் கொன்றான்?''

""ஏதோ குடும்பத் தகராறு. ஒருவன் மற்றவனுக்குத் தானியம் தர வேண்டுமாம். அப்படி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு அரிவாளால் சீவிவிட்டான் - கழுத்தை வெட்டிவிட்டான். "சதக்' என்று ஆட்டின் கழுத்தைச் சீவுவதைப் போல.''

தன் கழுத்தில் கை வைத்து எப்படி என்று இழுத்துக் காட்டினான் பால்டுச்சி. இதைக் கண்ட அராபியன் கவலையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். டாருவுக்குத் திடுதிப்பென்று கோபம் வந்தது - அழுகிப் போன வஞ்சம் என்றும், சகமனிதனிடம் வெறுப்பு என்றும், ரத்த வெறி கொண்டும் செயல்படுகிற மனிதர்கள் மேல் வெறுப்புத் தோன்றியது.

ஆனால் அடுப்பின் மேலே கெட்டில் பாடியது. பால்டுச்சிக்கு மேலும் தேநீர் தந்தார். சற்றுத் தயங்கி விட்டு அரேபியனுக்கும் மீண்டும் தேநீர் தந்தார். இரண்டாவது தடவை கிடைத்த தேநீரையும் அவசரம் அவசரமாகப் பருகினான் அந்த அராபியன். அவன் கைகளைத் தூக்கியபோது சட்டை விலக, அவனுடைய மெலிந்த தசைநார் வலுவான மார்பு பிரதேசத்தையும் டாரு பார்த்தார்.

""தாங்க்ஸ் ஐயனே! நான் கிளம்புகிறேன் இப்போது'' என்றான் பால்டுச்சி.

எழுந்து அந்த அராபியனை அணுகியபடியே தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு கயிரை எடுத்தான்.

""என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார் டாரு அமுத்தலாக. பால்டுச்சி தடுமாறியவனாகத் தன் கையிலிருந்த கயிறைத் தூக்கிக் காட்டினான்.

""வேண்டாம். கட்டாதே.''

""உன் இஷ்டம். உன்னிடம் துப்பாக்கியிருக்கிறதா?''

""என் ஷாட்டுகன் இருக்கிறது.''

""எங்கே?''

""என் பெட்டியில் இருக்கிறது.''

""படுக்கையருகே தயாராக வைத்திருக்க வேண்டும் நீ அதை.''

""எதற்காக? நான் எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?''

""பைத்தியக்காரன் நீ! புரட்சி வந்துவிட்டால் ஒருவரும் ஆபத்தில்லாதவர்கள் இல்லை. எல்லோருக்கும் ஒரு கதிதான்.''

""என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். அவர்கள் அணுகுவதை வெகு தூரத்துக்கப்பாலிருந்தே நான் காண முடியும்.''

பால்டுச்சி சிரிக்க ஆரம்பித்தான். பிறகு தன் மீசையால் தன் பற்களைக் கெட்டியாக மூடிக் கொண்டான். ""நேரம் இருக்குமா?'' அதுசரி. அதைத்தான் சொன்னேன் நானும். நீ அரைப் பைத்தியம். அதனால்தான் உன்னிடம் நான் பிரியம் வைத்திருக்கிறேன். என் மகன் கூட அப்படித்தான் இருந்தான்.''

அதேசமயம் அவன் தன் ரிவால்வரை எடுத்து மேசைமேல் வைத்தான். ""இதை வைத்துக்கொள். இங்கிருந்து எல் அமேர் போவதற்கு இரண்டு துப்பாக்கி எனக்குத் தேவையில்லை.''

கறுப்பு வர்ணம் அடித்திருந்த மேஜை மேல் ரிவால்வர் பளபளத்தது. போலீஸ்காரன் தன் பக்கம் திரும்பியபோது பள்ளி ஆசிரியர் தோல், குதிரை இவற்றின் வாடையை உணர்ந்தார்.

""கேள் பால்டுச்சி'', என்றார் டாரு திடீரென்று, ""இந்த விஷயத்தில் எதுவும் எனக்குக் கசப்புத் தராதது இல்லை. இந்த அராபியனைக் கண்டாலே எனக்குக் கரிக்கிறது. ஆனால் அவனை நான் போலீஸ் காரியாலயத்தில் கொண்டு போய் விடமாட்டேன். சண்டை போட வேண்டுமா - அவசியமானால் போடுகிறேன். அது மட்டும் வேண்டாம், பாவம்!''

கிழட்டு போலீஸ்காரன் அவர் எதிரில் நின்று அவரைக் கடுமையாகப் பார்த்தான்.

""நீ முட்டாள்'' என்றான் மெதுவாக. ""எனக்கு மட்டும் அவனைப் பிடித்து ஒப்படைக்கப் பிடிக்கிறதா? எனக்கும் பிடிக்கவில்லைதான். ஒரு மனிதனைக் கட்டிப் போடுவது என்பது எத்தனை வருஷம் பழக்கமானாலும் பிடிக்காத விஷயம்தான் - வெட்கமாகக்கூட இருக்கிறது. ஆனால் அதற்காக அவர்கள் இஷடப்படி நடக்கவும் விட்டுவிட முடியாதே?''

""நான் அவனைக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைக்க மாட்டேன்'' என்றார் டாரு மீண்டும் ஒரு தரம்.

""அது ஒரு உத்தரவு. நான் திருப்பிச் சொல்கிறேன் உத்தரவை. அவ்வளவுதான்.''

""அது சரி நான் சொன்னதை அவர்களிடம் சொல்லிவிடு; நான் அவனைக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைக்க மாட்டேன்.''

சிந்திக்க முயன்றான் பால்டுச்சி. அராபியனைத் திரும்பிப் பார்த்தான். டாருவைப் பார்த்தான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். ""மாட்டேன். நான் அவர்களுக்கு எதையும் சொல்ல மாட்டேன். உன்னைக் காட்டித் தர மாட்டேன். கைதியை இங்கு கொணர்ந்து உன்னிடம் விடச் சொல்லி எனக்கு உத்தரவு. அதை நடத்திவிட்டேன். இதோ இதில் கையெழுத்துப் போட்டுக் கொடு.''

""அதற்கு அவசியமில்லை. நீ உன் உத்தரவை நிறைவேற்றிவிட்டாய் என்பதை நான் மறைக்கவே மாட்டேன்.''

""என்னிடம் கோபித்துக் கொள்ளாதே! நீ உண்மையைச் சொல்வாய் என்று எனக்குத் தெரியும். நீ இந்தப் பக்கத்து மனிதன் - அதுவும் ஆண்மகன். ஆனால் கையெழுத்திட்டுத் தா } சட்டம் இதுதான்'' என்றான் பால்டுச்சி.

அதற்கு மேல் ஆட்சேபிக்கவில்லை டாரு. தனது மேஜை டிராயரை இழுத்து ஒரு சதுர உருவமான இங்க் புட்டியை எடுத்து, கையெழுத்து எழுதிக்காட்ட வைத்திருந்த பெரிய பேனாவினால் பர்பிள் மசியால் கையெழுத்திட்டுக் கொடுத்தார். போலீஸ்காரன் பால்டுச்சி அந்தக் கடிதத்தை மடித்துத் தன் தோல் பைக்குள் சொருகிக் கொண்டான். வாசல் பக்கம் நகர்ந்தான்.

""இரு வந்து வழியனுப்புகிறேன்'' என்றா டாரு.

""வேண்டாம்'' என்றான் பால்டுச்சி. ""நீ என்னை அவமதித்துவிட்டாய். இப்போது மட்டும் மரியாதை என்ன வந்தது?''

இருந்த இடத்திலேயே அசையாது கிடந்த அந்த அராபியனை ஒரு விநாடி திரும்பிப் பார்த்தான். முகத்தை சிணுக்கிக் கொண்டே மூக்கை இழுத்தான். வாசல் பக்கம் திரும்பினான். ""வரேன் மகனே'' என்றான். கதவைத் திறந்து சாத்திக் கொண்டு வெளியே போனான். ஜன்னல் வழியாக ஒரு கணம் கண்ணில் பட்டான்; பிறகு மறைந்துவிட்டான். பனி கிடந்த பாதையிலே அவன் காலடிச் சத்தம்கூடக் கேட்கவில்லை. சுவருக்கப்பால் குதிரைக் குளம்பொலி கேட்டது. சில கோழிக்குஞ்சுகள் சிறகடித்து வழியை விட்டுப் பறப்பதும் காதில் விழுந்தது. அடுத்த விநாடி ஜன்னலுக்கு வெளியே பால்டுச்சி மறுபடியும் கண்ணில் பட்டான். குதிரையை லகானால் பிடித்துக் கொண்டு வந்தான். சிறு குன்றுப் பக்கம் குதிரை பின்தொடர நடந்து, ஒரு தரம்கூடத் திரும்பிப் பார்க்காமல் நகர்ந்து விட்டான். உருட்டிவிடப்பட்டு ஒரு பெரிய கல் பாதையிலிருந்து கீழே உருண்டோடுவது காதில் விழுந்தது. டாரு கைதியின் பக்கம் திரும்பி நடந்து அவனை அணுகினார். அவரை விட்டுக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த கைதியிடம், ""இரு'' என்று அரபி மொழியில் சொல்லிவிட்டுத் தன் படுக்கையறைக்குள் போனார். கதவைத் தாண்டும்போது வேறு ஒரு யோசனை வரவே திரும்பி வந்து மேஜை மேல் கிடந்த ரிவால்வரை எடுத்துத் தன் சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே போனார். திரும்பிப் பார்க்காமல் தன் அறைக்குள் சென்றார்.

சிறிது நேரம் தனது படுக்கையில் படுத்து வானம் இருண்டு வந்து மூடிக் கொள்வதைக் கவனித்தார். மெüனத்தை ரசித்தார். யுத்தத்துக்குப் பிந்திய முதல் நாட்களில் இந்த மெüனம்தான் அவருக்குச் சகிக்க முடியாததாக இருந்தது. பாலைவனத்திலிருந்து உயரமான பீடபூமியைப் பிரிக்கும் பள்ளத்தாக்கு நகர் எதிலாவது உத்தியோகம் வேண்டுமென அவர் கேட்டார். அங்கு பாறையாலான குன்றுகள் வடக்கே பச்சையும், கறுப்புமாக, தெற்கே இளஞ்சிவப்பும் லவண்டருமாக நித்தியமான கோடைக்கு அரண் செய்யும். பீடபூமி மேட்டிலேயே வடக்கே வெகு தூரத்துக்கப்பால் அவருக்கு வேலை உத்தரவாகியது. ஆரம்பத்தில் இந்த வீணான பிரதேசங்களில் பெரும்பாறைகள் தவிர வேறு உயிர்ல்லாத இடத்தில் மெüனமாக இருப்பது சிரமமாக இருந்தது அவருக்கு. சில சமயம் பாறைகள் எங்காவது ஓரிடத்தில் வெட்டப்பட்டிருக்கும் - பயிரிடுவதற்காக அல்ல. வீடு கட்ட ஒருவிதக் கல் அங்கு கிடைத்ததால் வெட்டப்பட்டிருந்தது. இங்கு பயிராவது கற்பாறைகள் மட்டும்தான். சிறுசிறு கிராமத்துத் தோட்டங்களில் மண் வேண்டி மலை சரிவிலே சேர்ந்த கொஞ்ச மண்ணையும் தோண்டி எடுத்துப் போய் விடுவார்கள். இந்தப் பிராந்தியத்துக்குப் போக்கு இதுவே; முக்கால்வாசிப் பகுதியில் கற்கள்தான் நிறைந்திருந்தன. சில நகரங்கள் தோன்றின. சில நாட்கள் வளர்ந்தன. பிறகு மறைந்துவிட்டன. மனிதர்கள் இப்படி அப்படி வந்தவர்கள், ஒருவரை ஒருவர் நேசித்தார்கள், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டார்கள்; பின் இறந்து போனார்கள். அல்லது மறைந்து போனார்கள். தானோ தனது விருந்தாளியோ பற்றி இந்த நாட்டுக்கு பாலைவனத்துக்குச் சிறிதும் கவலை கிடையாது. அவர்கள் எவ்விதத்திலும் முக்கியஸ்தர்கள் அல்ல. இருந்தும்... இருந்தும் இந்தப் பாலைவனத்துக்கு அப்பால், இதற்கு வெளியே அவர்களால் உயிர் வைத்துக் கொண்டிருந்திருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கை இதுதான்.

அவர் எழுந்தபோது பள்ளி அறையில் சப்தமேயில்லை. அராபியன் ஓடிப் போயிருக்கலாம் என்கிற எண்ணம் அவருக்கு மகிழ்ச்சியையே அளித்தது - கலப்பற்ற மகிழ்ச்சி அது என்று உணர்ந்தார். அவன் ஓடிப்போயிருந்தால் எவ்விதத் தீர்மானமும் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு இராது. ஆனால் கைதி அங்கேயேதான் இருந்தான். மாணவன் மேஜைக்கும், கணப்புக்கும் இடையே கால் நீட்டிக் கொண்டு அவன் படுத்துக்கொண்டிருந்தான். கண்கள் திறந்திருந்தன - அரைக் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்படிக் கிடந்த அவன் உதடுகள் அதிகமாகக் கவனிக்கத் தக்கவையாகத் தெரிந்தன. கனமான உதடுகள் பிதுங்குகிற மாதிரி இருந்தன. ""வா'' என்று டாரு கூப்பிட்டார். அராபியன் எழுந்து அவர் பின் வந்தான். தன் படுக்கையறையில் ஜன்னலுக்கடியில் இருந்த மேஜையருகில் கிடந்த நாற்காலியை டாரு காண்பித்தார். டாருவை விட்டுக் கண்களை எடுக்காமலே அராபியன் உட்கார்ந்தான்.

""பசிக்கிறதா?''

""ஆமாம்'' என்றான் கைதி.

டாரு இருவருக்கும் மேசை மேல் உணவு எடுத்து வைத்தார். மாவும், எண்ணெயும் எடுத்து வட்டிலில் ஒரு கேக் செய்தார். புட்டியிலிருந்த காஸ் அடுப்பைப் பற்ற வைத்தார். கேக் வெந்து கொண்டிருக்கும்போது அவன் பக்கம் கொட்டகைக்குள் சென்று சீஸ், முட்டைகள், பேரீச்சை, கண்டென்ஸ்ட் பால் முதலியன எடுத்து வந்தார். கேக் வெந்ததும் அது குளிர ஜன்னல் படியில் வைத்தார். பாலைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சினார். சில முட்டைகள் உடைத்துப் போட்டு ஆம்லெட் செய்தார். ஒரு சமயம் அவர் கை வலது சட்டைப்பையில் இருந்த ரிவால்வரில் பட்டது. கையிலிருந்த கிண்ணத்தை வைத்து விட்டுத் தன் படிப்பு அறைக்குப் போய் ரிவால்வரைத் தன் மேஜை டிராயரில் வைத்துவிட்டு வந்தார். அவர் அறைக்குள் திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டது. விளக்கைப் போட்டு விட்டு, அராபியனுக்கு உணவு எடுத்துக் கொடுத்தார். ""சாப்பிடு'', என்றார். கேக்கில் ஒரு பகுதியை அவசரம் அவசரமாக எடுத்த அராபியன் அதை வாயில் போட்டுக் கொள்ளும்முன் நிதானித்து, ""நீங்கள்?'' என்றான்.

""சாப்பிடு. நானும் உன்னோடு சாப்பிடுவேன்'' என்றார்.

தடித்த உதடுகள் சற்றே திறந்தன - ஏதோ சொல்ல. உடனே மூடின. கேக்கை வாயில் போட்டு மென்றான் அராபியன்.

சாப்பாடு முடிந்ததும், அராபியன் டாருவை நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்; ""நீங்கள்தான் நீதிபதியா?''

""இல்லை. இல்லை. நான் நாளை வரை உன்னை இங்கு வைத்திருப்பேன். அவ்வளவுதான்.''

""எதற்காக என்னோடு உணவருந்தினீர்கள்?''

""எனக்கும் பசித்தது.''

அராபியன் மெüனமானான். டாரு எழுந்து வெளியே போனார். கொட்டகையிலிருந்து ஒரு மடக்குக் கட்டிலை மேஜைக்கும், கணப்புக்கும் இடையில் போட்டார் - தன் படுக்கையை ஒட்டின மாதிரி ஒரு பெரிய பெட்டியிலிருந்து இரண்டு கம்பளிகளை எடுத்துக் கட்டிலில் விரித்தார். வேறு என்ன? வேறு எதுவும் செய்வதற்கில்லை. தன் படுக்கையில் உட்கார்ந்து கைதியைப் பார்த்தார். அந்த அராபியனின் முகம் கோபத்தால் பெருகி கொலை வெறியால் மாறுவதைக் கற்பனை செய்ய முயன்றார் - பார்த்தபடியே; முடியவில்லை. மிருகத்தின் வாய் போன்ற உதடுகளையும், கறுத்துப் பளபளத்த கண்களையும் தவிர வேறு எதையும் அவரால் காண இயலவில்லை.

""அவனை எதற்காக நீ கொன்றாய்?'' - தன் குரலில் இருந்த அதட்டல் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அராபியன் வேறு பக்கம் பார்த்தான். "" அவன் ஓடி விட்டான். அவனைத் துரத்திக் கொண்டு ஓடினேன்.''

""உனக்குப் பயமாக இருக்கிறதா?''

நிமிர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான் அராபியன்.

""செய்து விட்டது குறித்து வருந்துகிறாயா நீ?''

வாய்ப்பிளக்க அராபியன் அவரையே பார்த்தான். உண்மையில் டாருவினுடைய கேள்வி அவனுக்குப் புரியவில்லை என்பது தெரிந்தது. டாருவுக்கு எரிச்சலாக இருந்தது - எரிச்சல் வளர்ந்தது. அதே சமயம் இப்படி உட்கார்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது பற்றி வெட்கமாகவும், என்னவோபோலவும் இருந்தது.

""அங்கே படு'' என்றார். ""அதுதான் உனக்குப் படுக்கை.''

அராபியன் அசையவில்லை. அவன் டாருவை, ""எனக்குச் சொல்லுங்கள் ஐயா'' என்றான்.

ஆசிரியர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

""போலீஸ்காரன் நாளை வருவானா?''

""எனக்குத் தெரியாது.''

""நீங்கள் எங்களோடு வருவீர்களா?''

""அதுவும் தெரியாது ஏன்?''

கைதி எழுந்து கம்பளி மேல் படுத்தான். ஜன்னல் பக்கம் அவன் காலிருந்தது. டாருவின் கால்மாட்டில் இருந்தது அவன் படுக்கை. விளக்கு ஒளி அவன் கண்களில் பட்டது. உடனே கண்களை மூடிக்கொண்டான்.

""ஏன்?'', என்று தன் படுக்கையருகில் நின்றபடியே கேட்டார் டாரு.

விளக்கு ஒளி கண்ணில் பட கண்களைத் திறந்தான் அராபியன். கண்ணைச் சிமிட்டாமல் இருக்க முயன்று கொண்டே ""எங்களோடு வந்து விடும்'' என்றான்.

நள்ளிரவு ஆகிவிட்டது. டாருவால் தூங்க இயலவில்லை. துணிகளை எடுத்துப் போட்டு விட்டு வழக்கப்படியே நிர்வாணமாகத் தூங்க முயன்றார் டாரு. நிர்வாணமாக இருப்பது அசெüகரியமாக இருக்குமோ என்று நள்ளிரவில் தயங்கினார். பிறகு எதிரி சண்டைக்கு வந்தால் அவனைத் தோற்கடிக்க ஒரு விநாடியில் தன்னால் இயலும் என்று எண்ணிப் பார்த்தார். துணிகளை அணிந்து கொள்ளலாமா என்று ஒரு கணம் யோசித்தார். பிறகு அது குழந்தைத்தனம் என்று அந்தச் சிந்தனையிலிருந்து ஒதுங்கி விட்டார். தன் படுக்கையிலிருந்த படியே கைதி கண்களை மூடிக் கொண்டிருப்பதை அவர் காண முடிந்தது. டாரு விளக்கை அணைத்தபோது இருட்டு கவ்விக் கொண்டதுபோல இருந்தது. பின்னர் ஜன்னலில் இரவு உருவெடுத்திருப்பது தெரிந்தது - நட்சத்திரங்களற்ற இரவு மெதுவாகப் புரண்டு கொடுப்பது போல இருந்தது. சிறிது நேரத்தில் காலடிக் கட்டிலில் உருவம் கிடந்தது, டாருவின் கண்களுக்குப் புலனாயிற்று. அராபியன் இன்னும் அசையவில்லை - அவன் கண்கள் திறந்திருந்தன போலும். பள்ளியைச் சுற்றி இலேசாகச் காற்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காற்று மேகங்களை விரட்டி விடலாம் - சூரியன் மீண்டும் நாளை தோன்றலாம்.

இரவிலே நேரம் ஆக ஆகக் காற்றின் ஊளை வேகம் அதிகரித்தது. கோழிகள் படபடத்து அடங்கின அராபியன் தன் கட்டிலில் டாருவுக்கு முதுகுப்பக்கம் தெரியப் புரண்டு படுத்தான். அவன் லேசாக முனகுவது டாருவின் காதில் விழுந்தது. தன் விருந்தாளியின் தூக்க மூச்சு ஒழுங்காக, கனமாக வருவதைக் கவனித்தார் டாரு. அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டே தூங்க மாட்டாமல் திணறினார். இந்த அறையில் ஒரு ஆண்டுக்கும் அதிகமாக அவர் மட்டுமே தனியாகத் தூங்கித்தான் அவருக்குப் பழக்கம். அராபியன் அருகில் இருப்பது அவரை என்னவோ செய்தது. இந்தக் கால அளவில் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரு சகோதரத்தவத்தை அவன் அருகில் இருப்பது தன் மேல் திணிப்பதாக அவர் உணர்ந்தார். ஒரே அறையில் படுத்துறங்க வேண்டிய சகோதரத்தவத்தை அவர் பழக்கப்பட்டவர்தான் - போர் வீரர்கள், கைதிகள் ஒரே அறையில் படுத்துறங்கும்போது, ஒரு கனவுலக, களைப்புலக சகோதரத்தவத்தை ஏற்கின்றனர். டாரு அந்த நினைவுகளிலிருந்து தன்னை உதறி அகற்றிக் கொண்டார். இப்படி நினைப்பது பிடிக்கவில்லை - தூங்குவதும் அவருக்கு அவசியம்.

சிறிது நேரம் கழித்து அராபியன் லேசாக அசைந்த போதும் அவர் தூங்கிய பாடில்லை. கைதி இரண்டாவது அசைவு காட்டியதும் கவனமாக இருந்தார் - உஷாரானார். தூக்கத்தில் நடப்பவன் போல அவன் படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து டாரு பக்கம் தலையைத் திருப்பாமல் ஏதோ கவனித்துக் கேட்பவன் போல உற்றுக் கவனித்தான். டாரு அசையவில்லை; தன் மேஜை டிராயரில் ரிவால்வர் இருந்தது நினைவுக்கு வர டாருவுக்கு உடனே எழுந்து ஏதாவது செய்வது நல்லது என்று தோன்றியது. ஆனாலும் கைதியைக் கவனித்துக் கொண்டே படுத்திருந்தார். சப்தமே செய்யாமல் கைதி காலைக் கீழேவிட்டு எழுந்து நின்று மறுபடியும் கவனித்தான். டாரு குரல் கொடுக்கலாம் என்று எண்ணுகிற விநாடியில், மிகவும் சாவதானமாக, சப்தமே செய்யாமல் அராபியன் நடக்கத் தொடங்கினான். அறைக் கோடியிலிருந்த கொட்டகைக்குள் போகும் கதவுப்பக்கம் நகர்ந்தான். ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்துகொண்டு கதவைத் தனக்குப் பின்னால் மூடித் தாளிட்டு விடாமல் வெளியே போனான். டாரு அசையவில்லை. ""அவன் ஓடிப்போகப் போகிறான்'' என்று எண்ணினார் அவர். ""சனியன் தொலைந்தது.'' இருந்தும் கவனித்துக் கேட்டார். கோழிகள் படபடக்கவில்லை. கைதி குன்றின் மேல் போயிருக்க வேண்டும். ஏதோ நீர் சப்தம் கேட்டது. அது என்ன என்று முதலில் புரியவில்லை. பிறகு கதவு வழியாக அராபியன் சப்தமே செய்யாமல் வருவதைக் கண்ட பிறகுதான் புரிந்தது. கதவை ஜாக்கிரதையாகச் சாத்திவிட்டு வந்து சப்தமே செய்யாமல் படுத்துவிட்டான் கைதி. பிறகு "டாருவும் திரும்பிப் படுத்துச் தூங்கிவிட்டார். தூக்கத்திலே ஏதோ காலடிச் சப்தம் கேட்டதுபோல இருந்தது. "நான் கனவு காண்கிறேன். நான் கனவு காண்கிறேன்' என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டார்.

அவர் கண் விழிக்கும்போது, வானம் தெளிந்துவிட்டது. ஜன்னல் வழியாகக் காலை ஒளியும், இளஞ் சீரிய கிரணங்களும் உள்ளே வந்தன. அராபியன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் வாய் திறந்திருந்தது. கவலை எதுவும் அற்றவன் போலத் தூங்கினான், அவன். ஆனால் டாரு அவனை உலுக்கி எழுப்பியபோது தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. மிகவும் பயந்தவன் மாதிரி, டாரு யார் என்று அறியாதவன் மாதிரி மிரள மிரள விழித்தான். டாரு நாலடி பின் வாங்கி, ""பயப்படாதே. நான் நீ சாப்பிட வேண்டாமா?'' என்றதும் அந்த அராபியன் தலையை ஆட்டினான். ""ஆமாம் சாப்பிட வேண்டும்'' என்றான். அவன் முகத்தில் அமைதி கண்டது. ஆனால் அவன் "பாவம்' ஒரு தினுசாக எதிலும் ஈடுபாட்டில்லாததாகத்தான் இருந்தது.

காபி தயாராகியது. கேக் துண்டுகளை மென்று கொண்டே தங்கள் படுக்கைகளில் உட்கார்ந்தபடியே காபியை அருந்தினர். பின்னர் டாரு அராபியனை கொட்டகைக்குள் அழைத்துச் சென்று குழாய் இருந்த இடத்தைக் காட்டினார். அவன் கழுவிக் கொண்டான். தன்னறைக்குள் போய்க் கம்பளிகளை எடுத்து மடித்து வைத்துவிட்டுத் தன் படுக்கையையும் சீர் செய்தார். வகுப்பறை வழியாக வெளியே திறந்த மேடைக்குச் சென்றார். நீலவானத்தில் சூரியன் தோன்றி உயர ஏறிக் கொண்டிருந்தது. மனித சூன்யமான மேடான பீடபூமியிலே பிரகாசமான ஒளி படர்ந்து கொண்டிருந்தது. குன்றுச் சரிவுகளில் பல இடங்களில் பனி உருகத் தொடங்கிவிட்டது. கற்கள் மீண்டும் தோன்றத் தொடங்கிக் கொண்டிருந்தன. தன் மேடையில் பதுங்கியபடியே மனித சூன்யமான அந்தப் பிரதேசத்தைப் பார்த்தார் டாரு. பால்டுச்சியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். அவனுக்கு வருத்தம் தந்துவிட்டது பற்றி டாரு வருந்தினார். யாருக்கும் வருத்தம் தர அவர் விரும்பவில்லை. போலீஸ்காரன் விடைபெற்றுக் கொண்டுபோன விதம் அவரைத் துயரத்தில் ஆழ்த்தியது அப்படி யாருக்கும் விரோதியாக இருக்க அவர் விரும்பியதேயில்லை. தன்னுள் எதுவும் இல்லாமல் காலியாகிய மாதிரி உணர்ந்தார் அவர். தன்னை யாரோ காயம் பண்ணிவிட்ட மாதிரி உணர்ந்தார். அதே சமயம் உள்ளேயிலிருந்து கைதி இருமுவது காதில் விழுந்தது. தன்னையும் அறியாமலே டாரு அதைக் கவனித்தார். கோபம் கோபமாக வந்தது அவருக்கு. அவருள் கோபம் பிரமாதமாக எழுந்து வளர்ந்தது. ஒரு கூழாங்கல்லை எடுத்துக் கை கொண்ட மட்டும் விசிறி எறிந்தார். அது தூரத்தில் போய்ப் பனிச்சகதியில் அமுங்குவதைப் பார்த்தார். அந்த மனிதனுடைய அசட்டுத்தனமான குற்றம் அவரை எரிச்சல் கொள்ளச் செய்தது - ஆத்திரத்தை அவருக்கு ஊட்டியது. ஆனால் அதற்காக அவனைப் போலீஸôரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது தன் மதிப்பு உகக்காத விஷயம். தன் தாழ்வையும், பலஹீனத்தையும் உணரச் செய்ததும் அந்தக் காரியம் பற்றிய சிந்தனையே. இந்த அராபியனைத் தன்னிடம் அனுப்பி வைத்த தன் மக்களைச் சபித்தார் - அத்துடன் ஒரே மூச்சில் கொலை செய்யத் துணிந்து, தப்பித்துக் கொள்ளாமல் மாட்டிக்கொண்ட அராபியனையும் சபித்தார் டாரு. எழுந்து வளையமாக மேடை மேல் நடந்து வந்தார். பிறகு பள்ளிக் கட்டிடத்திற்குள் சென்றார்.

கொட்டகையில் சிமெண்டுத் தரையில் குனிந்து வாய்க்குள் இரண்டு விரல்களை விட்டுப் பல் தேய்த்துக் கொண்டிருந்தான் அராபியன். டாரு அவனைப் பார்த்து ""வா'' என்றார். கைதிக்கு முன் நடந்து அறையை அடைந்தார். தன் மேல் ஒரு வேட்டைக்காரன் சட்டையை அணிந்து கொண்டார். நின்றார். அராபியன் தனது "சேச்சே' குல்லாயைத் தலையிலும், செருப்புக்களைக் காலிலும் போட்டுக் கொள்ளும் வரை காத்திருந்தார். வகுப்பறைக்கு இருவரும் சென்றனர். வெளியே போகும் வழியைக் காட்டி, ""போ'' என்றார். அவன் நகரவில்லை. ""நானும் வருகிறேன்'', என்றார் டாரு. அதற்குப் பிறகுதான் கைதி கிளம்பினான். அராபியன் வெளியேறியதும் டாரு தன் அறைக்குள் போய் பிஸ்கெட்டுகள், பேரீச்சம்பழம், சர்க்கரை முதலியவற்றை எடுத்துப் பொட்டலம் கட்டினார். ""அதுதான் வழி'' என்று சுட்டிக் காட்டினார். கிழக்கு நோக்கிக் கிளம்பினார் - கைதி பின் தொடர கொஞ்ச தூரம் போனதும் பார்த்தார். ஏதோ சப்தம் கேட்பதுபோல இருக்கிறது என்று சுற்றிலும் பார்த்தார். நிர்மானுஷ்யமாகவே இருந்தது. யாரும், எதுவும் கண்ணில் படவில்லை. புரியாதவன் மாதிரி அவரையே கவனித்துக் கொண்டு நின்றான் அராபியன். ""வா, போவோம்'' என்றார் டாரு.

ஒரு மணிநேரம் நடந்திருப்பார்கள். ஒரு செங்குத்தான சுண்ணாம்புக்கல் ஒன்றின் ஓரத்திலே சிறிது நேரம் தங்கி இளைப்பாறினார்கள். பனி அதிவேகமாக உருகி மறைந்து கொண்டிருந்தது } சூரிய வெப்பத்திலே பனி உருகிய ஈரமும், சிறு குட்டைகளும் மிகத் துரிதமாகக் காய்ந்து கொண்டிருந்தன.

மேலான பீடபூமி முழுவதுமே சூரியவொளி தாக்கியது - காற்றைப் போலவே அதிலும் உஷ்ணம் ஏறிக்கொண்டிருந்தது. அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கியபோது, காலடியில் "விண்விண்' என்று கட்டாந்தரையாக ஒலித்தது. ஆனந்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு எப்போதாவது ஒரு பறவை அவர்கள் முன் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது. விடியற்காலை ஒளியைப் பார்த்தவாறே டாரு இன்பத்துடன் நகர்ந்தார். பழக்கமான அந்தப் பரப்பிலே ஒரு பரவசம் உண்டாகியது டாருவுக்கு. நீலவான வளைவும் அடியில் மஞ்சள் நிற மணலும், கல்லும் - ஆஹா என்ன அற்புதம்! மேலும் ஒரு மணிநேரம் நடந்தனர் - தெற்கு நோக்கிச் சரிவிலே இறங்கினர். காலடியிலே பொடியான கரளைக்கற்கள் நிறைந்த சம நிலத்தை எட்டினர். அதற்குப்பால் கிழக்கு நோக்கிச் சரிவு இறங்கிற்று. தாழ்ந்த சமவெளி வரும் - அதிலே இலை அதிகமில்லாத முறுக்கேறிய மரங்கள் தோன்றும்; தெற்கே பார்த்தால் ஒரே குழப்பமான சித்திரம் போல கற்கள் காட்சி அளிக்கும்.

டாரு இரண்டு பக்கமும் பார்த்தார். வானத்தைத் தவிர, அடி வானம் பூமியை எட்டும் வரை எந்தப் பக்கத்திலும் யாரும் இல்லை. அராபியனைப் பார்த்தார். தன் கையிலிருந்த பொட்டலத்தை அவனிடம் தந்தார். ""எடுத்துக் கொள். அதில் பேரீச்சை, ரொட்டி, சர்க்கரை இருக்கிறது. இரண்டு நாளுக்குக் காணும். இதோ ஒரு ஆயிரம் பிராங்குகளும் இருக்கின்றன'' - அராபியன் இரண்டையும் வாங்கிக் கொண்டான். ஆனால் அவற்றை என்ன செய்வது என்று அறியாதவன் போல மார்போடு தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றான்.

""இதோ பார்'' என்றார் டாரு. கிழக்குப் பக்கம் கையைக் காட்டினார்; ""அதோ அந்தப் பக்கம் போனால் டிங்கியூட் - இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். அங்கே நீ போனால் போலீஸ் காரியாலயம், நீதிபதி எல்லாம் இருப்பதைக் கண்டு கொள்வாய். அவர்கள் உன்னை எதிர்பார்க்கிறார்கள்.''

அராபியன் கிழக்கு நோக்கிப் பார்த்தான். அவன் கையில் மார்போடு அணைக்கப்பட்டு டாரு தந்த பணமும், பொட்டலமும் இருந்தன. டாரு அவன் தோள்பட்டையைப் பிடித்து தெற்கு நோக்கி அவன் முகத்தைத் திருப்பினார். குன்றின் அடிவாரத்திலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதை தெற்கே ஓடுவது லேசாகத் தெரிந்தது. ""அந்தப் பாதை வழியே நீ பீடபூமியைக் கடக்கலாம். ஒரு நாள் நடந்தாயானால் புல்வெளிகளையும், அராபியர்களையும் சந்திப்பாய் நீ! அவர்கள் நீதிப்படி உன்னை வரவேற்பார்கள்.''

அராபியன் இப்போது "டாரு'வைத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களிலே ஒரு பீதி குடி கொண்டிருந்தது தெரிந்தது அவருக்கு. ""கேளுங்கள்'' என்று அவன் ஆரம்பித்தான்.

""சும்மா இரு! நீ சொல்வதை நான் கேட்கப் போவதில்லை'' என்று அவனை அதட்டினார் டாரு. ""பேசாதிரு. நான் உன்னை இங்கே விட்டு விட்டுப் போகப் போகிறேன்.''

உடனேயே திரும்பி, இரண்டு நீள எட்டு எடுத்து வைத்தார். அவர்கள் வந்த வழியிலே குழப்பத்துடன் நின்ற அராபியனை சற்றே திரும்பிப் பார்த்தார். மீண்டும் வேகமாகத் திரும்பி வந்த வழியே தன் பள்ளிக்கூடம் நோக்கிக் கிளம்பினார். சில நிமிஷங்கள் வரை அவர் காலடிச் சப்தத்தைத் தவிர வேறு சப்தம் கேட்ட போதும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால், இன்னும் ஒரு நிமிஷம் கழித்துத் திரும்பிப் பார்த்தார். அந்த அராபியன் அவர் விட்டு வந்த இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கைகள் பொட்டலம், பணத்துடன் தொங்கவிட அவன் டாருவையே பார்த்துக் கொண்டு நின்றான். "டாரு'வின் தொண்டையை ஏதோ அடைப்பது போல இருந்தது. ஆனால், பொறுமையற்றவராக உலகையெல்லாம் சபித்துக் கொண்டே, தன் கையைத் தூக்கி ஆட்டிவிட்டு மீண்டும் கிளம்பித் தன் வழி நடந்தார். சிறிது தூரம் போய்விட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது அராபியன் அங்கில்லை - எந்தப் பாதையிலோ நகர்ந்து விட்டான்.

டாரு தயங்கினார். வானத்திலே உச்சியை எட்டி விட்டது சூரியன். சூரிய உஷ்ணம் நேராக அவர் தலையைத் தாக்கியது. முதலில் தயங்கியவராக, மெதுவாகத் திரும்பி நடந்தார். பிறகு வேகமாக நடந்து கைதியை விட்டுவிட்டு வந்த குன்றின் உச்சியை அடைந்தார். மூச்சு வாங்கியது அவருக்கு. நீலவானத்தை முட்டிய கற்குன்றுகள் தெற்கே கிடந்தன. கிழக்கு நோக்கின பாதையிலே. பனிப்படலம் போலவே ஒளிப்படலமும் ஒரு மறைவுத் திரையாகக் கிடந்தது. அந்தப் பாதையிலேயே சிறையையும் நீதிபதிகளையும் போலீஸ்காரனையும் நோக்கித்தான் அராபியன் நடந்துகொண்டிருந்தான் என்று கனக்கும் உள்ளத்துடன் கவனித்தார் டாரு. மெதுவாகவே நடந்துகொண்டிருந்தான் அவன்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு டாரு தன் படிப்பு அறையில், ஜன்னலில் வெளியே பார்த்துக்கொண்டு நின்றார். பீடபூமி பூராவும் சூரியவெளியிலே குளித்துக் கொண்டிருந்தது - அதை அவர் கவனித்தார் என்று சொல்ல இயலாது. ஃபிரான்சு தேசத்து நதிகள் வளைந்து வளைந்து செல்லும், கலர் சாக்கால் எழுதிய நதிகளுக்கிடையே சற்று முன் அவர் படித்த புதிய வார்த்தைகள் காணப்பட்டன. ""நீ எங்கள் சகோதரனைப் போலீஸில் ஒப்படைத்தாய். அதற்கான தண்டனை உனக்குண்டு. நாங்கள் உன்னைக் கவனித்துக் கொள்வோம்'' என்று கோணல்மாணலாக எழுதியிருந்தது. டாரு வானத்தை அண்ணாந்து பார்த்தார்; பீடபூமியை நேராகப் பார்த்தார். கண்ணுக்கெட்டாத பல பிரதேசங்கள் அதற்கப்பால் இருந்தன. இந்தப் பரந்த நிலப்பரப்பிலே அவர் தனியானவர்; ஒருத்தர்.

******

வெளியீடு: ஞானச்சேரி; வருடம்: 1989

ஆங்கிலத்தில் Translated by Justin O'Brien : http://www.braungardt.com/Literature/Camus/Guest.htm

ஆல்பெர் காம்யு பற்றி க.நா.சு எழுதியது:

பிரான்ஸ் நாட்டின் சிந்தான வரலாற்றில் மறுக்க முடியாத ஓர் இடத்தைப் பெறுபவர் ஆல்பெர் காம்யு. ழான் பால் சார்த்தரின் இருத்தலியல் (Existentialism) கோட்பாட்டுடன் இவரது சிந்தனைகள் பெரிதும் பிணைக்கப்பட்டிருந்தாலும், "தான் ஒரு கலைஞன்' என்று மட்டும் இவர் உணர்த்திக்கொண்டேயிருந்தார். மனிதம் சிதைந்து தன் மேன்மையை இழந்து வந்த ஒரு காலகட்டத்தில் வாழ்வை அதன் சகல பரிமாணங்களிலும் தீவிரமாக வாழ்ந்துவிட முனைந்த இந்த மனிதன் ஒரு கலைஞனாகவும் ஒரு தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர்.  ka_na_su

1913-ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் ப்ரெதன் - ஸ்பானிஷ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தார். முப்பது ஆண்டுகள் அல்ஜீரியா எனப்படும் வட ஆப்பிரிக்காவில் பல்வேறு தொழில்கள் செய்து (அல்ஜீரியர்ஸ் கால்பந்துக் குழுவிற்கு கோல் கீப்பராக இருந்ததும் இதில் அடங்கும்- வாழ்ந்து வந்தார்.

பிரான்ஸில் குடியேறிய பின்னர் ஜெர்மானிய ஆதிக்கத்தின் போது எழுந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிர பங்காற்றினார். "Combat' என்ற ரகசிய வெளியீட்டுப் பத்திரிகையின் ஆசிரியரானார். பின்னர் பத்திரிகைத் துறையை விட்டு விலகி முழுதுமாய் எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1937}இல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. அந்நியன் (þThe outsider 1942) இவரது முதல் நாவல். தொடர்ந்து வீழ்ச்சி (þthe fall) "பிளேக்' (The plague) என்ற நாவல்களும், காலிகுலா (Caligula) முதலிய நாடகங்களும் சிசிபஸின் புராணம் (The myth of sysyphus) புரட்சிக்காரன்(The Rebel) போன்ற தத்துவக் கட்டுரைகளும் இவரது முக்கியமான படைப்புகளாகும்.

இன்றைய மனிதனின் மனசாட்சிப் பிரச்னைகளுக்கு தீர்மானமான கலை  வடிவம் தந்தவர் என்ற அடிப்படையில் 1957-ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது நாற்பது.

இலக்கியவாதியாகவும், தத்துவவாதியாகவும் வாழ்ந்த காம்யு சிறந்த நாடக ஆசிரியரும், நாடக இயக்குநரும்கூட. 1940-ல் பாரிஸ் நகரில் அரங்கேறிய பல உன்னத நாடகங்களில் இவரது பங்கும் குறிப்பிடத்தக்கது.

ஆல்பெர் காம்யுவின் மொத்த சிந்தனா அமைப்பையும் புரிந்துகொள்ள நீண்ட தேடல் அவசியம். சில நேரங்களில் முரண்பாடுகளின் உச்சியில் தன் படைப்புகளில் காணக் கிடைக்கும் காம்யு சில நேரங்களில் அவநம்பிக்கை வாதியாகவும் (Pessimist) தோன்றுகிறார். என் பால்ய கால வறுமை எனக்குத் துரதிருஷ்டவசமாக இருந்ததில்லை என்று சொல்லியபோதும் வறுமை காம்யுவின் சிந்தனையைப் பாதித்த ஒரு முக்கியமான வாழ்நிலை உண்மை. இந்த வறுமைதான் அவரை அவநம்பிக்கைவாதியாக நமக்குக் காண்பிக்கிறது. எனினும் இதையெல்லாம் தாண்டி நிற்கும் இவரது தீவிரமான வாழ்வும், கலையும்தாண் இந்த நூற்றாண்டின் "மேற்கத்திய மனசாட்சி'யைப் பிரதிபலிக்கிறது.

தமிழில் வெளியாகியுள்ள ஆல்பெர் காம்யு நூல்கள்:

1. அந்நியன் - (தமிழில்: வெ.ஸ்ரீராம்) க்ரியா பதிப்பகம்
2. கொள்ளை நோய் - (தமிழில்: ச.மதனகல்யாணி) ஆனந்தா பதிப்பகம், புதுச்சேரி
3. நியாயவாதிகள் (நாடகம்) - சந்தியா பதிப்பகம்
4. மரண தண்டனை என்றொரு குற்றம் - (தமிழில் } வி.நடராஜ்) வெளியீடு: பரிசல்

http://en.wikipedia.org/wiki/Albert_Camus

சிறு குறிப்பு:

இரண்டு முறை இச்சிறுகதையைப் படித்திருந்த நிலையில் என்னுடைய "குழிவண்டுகளின் அரண்மனை' - கவிதை நூலுக்கு மதிப்புரை கேட்டு கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் தயக்கத்துடன், ""நீங்கள் சிறுகதை எழுதியிருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். எழுதிக் கொண்டிருந்ததாகவும், ஆல்பெர் காம்யுவின் "விருந்தாளி' சிறுகதையைப் படித்ததில் இருந்து, "எழுதினால் இதைப்போன்றதொரு சிறுகதையை எழுத வேண்டும்' என்று விட்டுவிட்டதாகவும் கூறினார். (ஆல்பெர் காம்யுவின் வேறுபல சிறுகதைகளை ஆங்கிலத்தில் படித்திருப்பதாகவும் சுகுமாரன் கூறினார்.)அன்றிலிருந்து ஆல்பெர் காம்யுவோடு சேர்ந்தவிட்ட பிம்பமாகவே எனக்குள் கவிஞர் சுகுமாரனும் இருந்து வருகிறார். ஆல்பெர் காம்யு பெயரை எழுதுகிறபோதுகூட அவர் நினைவும் வந்துவிடுகிறது. சுகுமாரன் குறிப்பிட்டதற்குப் பிறகு இன்னும் கூடுதல் கவனத்துடன் இந்தச் சிறுகதையைப் படித்து வருகிறேன். -த.அரவிந்தன்

நன்றி: தாவரம்

Wednesday, March 23, 2011

வாளின் வடிவம்-போர்ஹே

தமிழில்: பிரம்மராஜன்

ஒரு வன்மம் மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது. ஒரு முனையில் அவன் நெற்றிப் பொட்டுக்கும் மற்றொன்றில் கன்னத்துக்குமாக சுருக்கங்கள் ஏற்படுத்திய அது ஏறத்தாழ முழுமையடைந்த அரைவட்டமாகவும், சாம்பல் நிறத்திலும் இருந்தது. அவனின் உண்மையான பெயர் முக்கியமல்ல: டாகு ரெம்போவில் இருந்த எல்லோரும் அவனை கொலரோடோவிலிருந்து வந்த ஆங்கிலேயன் என்று அழைத்தார்கள். அந்த வயல்களின் சொந்தக்காரனான கார்டோசோ அவற்றை விற்க மறுத்தான்: எதிர்பார்த்திராத ஒரு விவாதத்திற்கு அந்த ஆங்கிலேjorge-luis-borges2யன் இட்டுச்  சென்றிருக்க வேண்டும்: அவன் கார்டோசோவிடம் தன் வடுவின் ரகசியத்தைக் கூறியிருக்க வேண்டும். ரியோ கிராண்ட் டேல் சர் என்ற பகுதியிலிருந்து, எல்லைப் புறத்திலிருந்து அந்த ஆங்கிலேயன் வந்தான். அவன் ஒரு கடத்தல்காரனாக பிரேஸிலில் இருந்தவன் என்று சொல்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அந்த வயல்கள் புல் மண்டிக்கிடந்தன: நீர்ச்சுனைகள் உப்புக்கரித்தன: இந்தக் குறைபாடுகளை சரியாக்கும் பொருட்டு அந்த ஆங்கிலேயன் நாள் முழுவதும் தன் வேலையாட்களைப் போலவே கடினமாக உழைத்தான். கருணையின்மையின் எல்லைக்கு அவன் கண்டிப்பானவன் என்றும் துல்லியமான நியாயவாதி என்றும் அவனைப் பற்றிச் சொன்னார்கள்: ஒரு வருடத்தின் சில சமயங்களில் தன்னை ஒரு மாடி அறையில் வைத்துப் பூட்டிக்கொண்டான். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு போரிலிருந்தோ, ஒரு தலை சுற்றலில் இருந்தோ வெளிப்படுவது போல வெளுத்துப் போய், நடுங்கியபடி, குழம்பிப்போய் ஆனால் முன்பைவிட அடக்கி ஆள்பவனாக அவன் வெளிப்பட்டான். அந்தக் கண்ணாடி போன்ற கண்கள், சக்திமிக்க மெல்லிய உடல், மற்றும் நரைத்துப்போன மீசை ஆகியவை எனக்கு ஞாபகம் வருகின்றன. அவன் எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவன் பேசிய ஸ்பானிய மொழி மிக அரிச்சுவடித்தனமானதும் ப்ரேஸீல் மொழிக் கலப்பு மிக்கதும் எனபதும் உண்மை. ஏதாவது ஒரு துண்டுப் பிரசுரம் அல்லது ஒரு வியாபார சம்பந்தமான கடிதம் தவிர அவனுக்கு எந்தக் கடிதங்களும் வருவதில்லை.

வடக்குப் பிராந்தியங்கள் வழியாக நான் சென்றமுறை பயணம் செய்தபோது கராகுவடா அருவியின் எதிர்பாராத பொங்கி வழிதல் என்னை ஒரு இரவு கொலரோடாவில் தங்கும்படி கட்டாயப்படுத்தியது. சில கணங்களுக்குள் என் வரவு அங்கு சமயப் பொறுத்தமற்றுப் போனதை என்னால் உணர முடிந்தது.

என்னை அந்த ஆங்கிலேயனுக்கு உவப்பாக்கிக் கொள்ள முயன்றேன். சிறிதும் பகுத்து அறிதல் அற்ற பற்றுக்களில் ஒன்றை நான் பயன்படுத்தினேன்: தேசப்பற்று. இங்கிலாந்துபோன்ற வெல்ல முடியாத உணர்வுடைய ஒரு நாட்டினை என்னுடையதாகக் கூறினேன். என் நண்பன் ஒப்புக்கொண்டு ஆனால் தான் ஒரு ஆங்கிலேயன் இல்லை என்றான். அவன் அயர்லாந்தில் டங்கர்வான் பகுதியைச் சேர்ந்தவன். இதைக் கூறிய பிறகு, அவன் ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டது போல திடீரென்று நிறுத்தினான்.

இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் வானத்தைப் பார்க்க வெளியே சென்றோம். வானம் தெளிவாகி இருந்தது. ஆனால் தாழ்ந்த மலைகளுக்கு அப்பால் தெற்கு வானம் மின்னலால் கீறப்பட்டு, ஆழ்ந்து பிளக்கப்பட்டு, இன்னொரு புயலை கருக் கொண்டிருந்தது. சுத்தம் செய்யப்பட்ட உணவருந்தும் அறையில், இரவு உணவு பரிமாறிய பையன் ஒரு பாட்டில் ரம் கொண்டு வந்து வைத்தான். கொஞ்ச நேரம் நாங்கள் மௌனமாக அருந்தினோம்.

எனக்கு போதை ஏறிவிட்டதை நான் உணர்ந்தபோது என்ன நேரம் என்று தெரியவில்லை. என்னுடைய புத்துணர்ச்சியா, அல்லது சோர்வா, அல்லது பெருமகிழ்ச்சியா–அந்த வடுவைப் பற்றிக் குறிப்பிடச்செய்தது எது என்று தெரியவில்லை. ஆங்கிலேயனின் முகம் மாறுதல் அடைந்தது. அவன் என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளப்போகிறான் என்று சில வினாடிகள் நினைத்தேன். விரிவாக, தன் சாதாரண குரலில் அவன் கூறினான்:

“என் வடுவைப் பற்றிய வரலாற்றை ஒரு நிபந்தனையின் பேரில் நான் சொல்கிறேன்: அந்த பெரும் அவமானத்தை, இழிவான சந்தர்ப்பங்களின் தீவிரத்தை சற்றும் குறைக்கப் போவதில்லை.”

நான் ஒப்புக்கொண்டேன். அவனுடய ஆங்கிலத்தில் ஸ்பானிய மொழியையும், போர்ச்சுகீசிய மொழியையும் கலந்து அவன் சொன்ன கதை இதுதான்:

கிட்டதட்ட 1922இல் கன்னாட் நகரங்களில் ஒன்றில், அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரில் நானும் ஒருவன். என்னுடைய தோழர்களில் சிலர்– தங்களை அமைதியான காரியங்களில் ஈடுபடுத்தியபடி இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்: மற்றவர்கள், புரிந்து கொள்ள முடியாத வகையில் பாலைவனத்திலும் கடலிலும் ஆங்கிலக்கொடியின் கீழ் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; தகுதிவாய்ந்த மற்றொருவன் விடியல் நேரத்தில், ராணுவ வீரர்களின் குடியிருப்பு முற்றத்தில், தூக்கம் நிரம்பிய மனிதர்களால் சுடப்பட்டு இறந்தான். இன்னும் பலர் (மிகவும் அதிர்ஷ்டமற்றவர்கள் அல்ல) பெயரற்ற, உள்நாட்டுப் போரின் ரகசிய மோதல்களில் தங்கள் முடிவுகளை எதிர்கொண்டனர். நாங்கள் தேசீயவாதிகள்; கத்தோலிக்கர்கள்; நாங்கள் ரொமாண்டிக்குகள் என்று கூட சந்தேகப்படுகிறேன். .. அயர்லாந்து எங்களுக்கு நிறைவேற்றம் காணமுடியாத எதிர்காலமாக மட்டுமின்றி பொறுத்துக்கொள்ள முடியாத நிகழ்காலமாகவும் இருந்தது. அது ஒரு கசப்பான, போற்றிப் பாதுகாத்த புராணிகம்; அது வட்ட வடிவக் கோபுரங்களாகவும் சிவப்பு சதுப்பு நிலங்களாகவும் இருந்தது. பார்னலின் மறுதலிப்பாக இருந்தது. மாபெரும் காவியப் பாடல்களாக அவை காளைகளைக் களவாடிய நிகழ்வுகளைப் பாடின. இவை இன்னொரு பிறவியில் நாயகர்களாகவும் மற்றும் சிலவற்றில் மீன்களாகவும், மலைகளாகவும். . . . ஒருநாள் மதியம், நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். மன்ஸ்டர் நகரத்திலிருந்து வந்த கூட்டாளி எங்களுடன் சேர்ந்தான்: ஒரு ஜான் வின்சென்ட் மூன்.

அவன் இருபது வயது நிரம்பாதவன். அவன் ஒரே சமயத்தில் மெலிந்தும், தொங்கும் சதைப்பற்று உடலுடனும் காணப்பட்டான்;முதுகெலும்பு இல்லாத பிராணியொன்றினைப் போல அசௌகரியமான மனப்பதிவை ஏற்படுத்தினான். அவன் தீவிரத்துடனும், தற்பெருமையுடனும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்திருந்தான்–கடவுளுக்குத்தான் தெரியும் என்ன கம்யூனிஸ்ட் புத்தகங்கள் என்று. எவ்விதமான விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அவன் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்தினான். ஒருவன் மற்றவனை வெறுப்பதற்கு அல்லது விரும்புவதற்கு எல்லையற்ற காரணங்கள் கொண்டிருக்கலாம்: மூன் பிரபஞ்சத்தின் வரலாற்றையே மிக மோசமான ஒரு பொருளாதார பிரச்சனைக்குச் சுருக்கினான். புரட்சியானது வெற்றி யடையும்படி முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூறினான். ஒரு நாகரீகமான மனிதனுக்கு இழந்தபோன நோக்குகள் மட்டுமே கவர்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்று நான் அவனிடம் சொன்னேன். . . இரவு வந்துவிட்டிருந்தது; எங்களுடைய கருத்துமாறுபாடுகளை, கூடத்தில், மாடிப்படிகளில், தெளிவில்லாத தெருக்களில் தொடர்ந்தோம். அவன் வெளிப்படுத்திய தீர்மானங்களை விட அவற்றின் மறுக்க இயலாத, நிறுவப்பட்ட தன்மையே என்னைக் கவர்ந்தது. புதிய தோழன் விவாதிக்கவில்லை. உதாசீனத் துடனும் வெறுப்புடனும் தன் கருத்துக்களைக் கட்டளைத்தொனியில் தெரிவித்தான்.

“வெளிப்பகுதியில் அமைந்திருந்த வீடுகளுக்குப் பக்கத்தில் நெருங்கும் போது, சற்றும் எதிர்பார்க்காத துப்பாக்கிச் சத்தம் எங்களை ஸ்தம்பிக்க வைத்தது. (இதற்கு முன்பு அல்லது பிறகு ஒரு தொழிற்சாலையின் வெற்றுச் சுவரையோ அல்லது ராணுவவீரர்களின் குடியிருப்பையோ சுற்றி வந்தோம்)கற்கள் பாவப்படாத ஒரு தெருவில் நுழைந்தோம்; பற்றி எரியும் குடிசை ஒன்றிலிருந்து, நெருப்பு வெளிச்சத்தில் பூதாகரமாய்த் தெரிந்த ஒரு ராணுவ வீரன் வெளிப்பட்டான். உரக்கக் கத்தியபடி, எங்களை நிற்கச்சொல்லி உத்தரவிட்டான். என் நடையை துரிதமாக்கினேன்; என் தோழன் கூட வரவில்லை.நான் திரும்பினேன்: ஜான் வின்சென்ட் மூன் பயத்தினால் நித்தியப்படுத்தப்பட்டவன் போல ஈர்க்கப்பட்டு அசைவற்று நின்றான். நான் பின்னால் திரும்பி ஓடி ராணுவ வீரனை ஒரே அடியில் கீழே தள்ளி, வின்சென்ட் மூனை அவமானப் படுத்தி, என்னைத் தொடர்ந்து வர உத்தரவிட்டேன். நான் அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டியதாயிற்று; பயம் என்ற உணர்ச்சி அவனை ஏதும் செய்ய இயலாதவனாக்கி விட்டிருக்கிறது. ஒளிப்பிழம்புகளால் ஊடுருவப்பட்ட இரவின் ஊடாக நாங்கள் தப்பித்தோம். துப்பக்கிக் குண்டுகள் ஏராளமாய் எங்களை நோக்கியபடி வந்தபோது, அதில் ஒன்று மூனின் வலது தோளைக் காயப்படுத்தியது. பைன் மரங்களுக்கிடையில் நாங்கள் தப்பித்துச் சென்றபோது அவன் ஒரு பலவீனமான தேம்பலை வெளிப்படுத்தினான்.

“1923ஆம் வருடத்தின் இலையுதிர்காலத்தில் நான் ஜெனரல் பார்க்லியின் கிராமத்து வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருந்தேன். (இதுவரை என்றும் நான் பார்த்திராத) அந்த ஜெனரல் நிர்வாகக் காரியமாற்றுவதற்கோ எதற்கோ பெங்கால் சென்றிருந்தார்; அந்த வீட்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் குறைவாகத்தான் வயதாகியிருக்கும். ஆனால் அது சிதைலமடைந்தும் நிழல் நிரம்பியும் இருந்தது. புரிபடாத வராந்தாக்களிலும் அர்த்தமற்ற பின் கூடங்களிலும் அது விரிவடைந்திருந்தது. காட்சிக் கூடமும், மாபெரும் நூலகமும் முதல் மாடியை ஆக்கிரமித்திருந்தன. சர்ச்சை மிகுந்த, உவப்பில்லாத புத்தகங்கள்–அவை ஒரு வகையில் 19ஆம் நூற்றாண்டின் வரலாறாக இருந்தன; நிஷாபூரின் அகன்ற முனைக் கொடுவாள்கள்–அவற்றின் உறைந்த வளைவுகளில் இன்னும் போரின் கொடூரமும் காற்றும் நிலைத்திருப்பது மாதிரியாகத் தோன்றியது. நாங்கள் பின்பக்கத்திலிருந்து (நான் நினைவு கொள்வது மாதிரி) நுழைந்தோம். மூன் நடுங்கியபடி, வாய் உலர்ந்து, அந்த இரவின் நடப்புகள் சுவாரஸ்யமானதென்று முணுமுணுத்தான்; நான் அவனின் காயத்திற்குக் கட்டுப்போட்ட பின் ஒரு கோப்பை தேநீர் கொண்டுவந்தேன்: என்னால் அவனின் “காயம்”’ மேலோட்டமானது என்று தீர்மானிக்க முடிந்தது. குழம்பிய நிலையில் அவன் திடீரென்று உளறினான்:

“உனக்குத் தெரியுமா நீ ஈடுபட்டது மிக ஆபத்தான காரியம்”.

அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று நான் அவனுக்குச் சொன்னேன். (உள்நாட்டுப் போரின் பழக்கம், நான் எவ்வாறு இயங்க விரும்பினேனோ அவ்வாறு செயல்படத் தூண்டியது; மேலும் ஒரு நபர் பிடிபட்டாலும் கூட எங்கள் நோக்கத்திற்கு ஆபத்து ஏற்படும்).

“அடுத்த நாள் மூன் தன் நிதானத்தை அடைந்திருந்தான் ஒரு சிகரெட்டை ஏற்றுக் கொண்டு “நம் புரட்சிகர கட்சியின் பொருளாதார வழிமுறைகள்”’குறித்து என்னை ஒரு கடுமையான விசாரணைக்கு ஆளாக்கினான். அவன் கேள்விகள் மிகத் தெளிவாய் இருந்தன: நான் (உள்ளபடி) நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினேன். ஆழ்ந்த துப்பாக்கி வெடி ஓசைகள் தெற்கைக் குலுக்கின. நம் தோழர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள் என்று மூனிடம் சொன்னேன். என்னுடைய மேல்கோட்டும் கைத்துப்பாக்கியும் என் அறையில் இருந்தன; நான் திரும்பியபோது மூன் கண்களை மூடியபடி சோபாவில் நீட்டிப் படுத்திருப்பதைப் பார்த்தேன். அவனுக்குக் காய்ச்சல் என்று அவன் கற்பனை செய்து கொண்டான். வலிமிக்க துடிப்பு ஒன்றினைத் தன் தோளில் அவன் வரவழைத்துக் கொண்டான்.

அந்த கணத்தில் அவனின் கோழைத்தனம் சரி செய்யவேமுடியாதது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவனைப் பத்திரமாக இருக்கும்படி குலைந்த தொனியில் வேண்டிக்கொண்டு நான் வெளியே கிளம்பினேன். இந்த பயந்த மனிதன் என்னை அவமானத்துக்கு உள்ளாக்கினான். வின்சென்ட் மூன் அன்றி ஏதோ நான்தான் கோழை என்பது போல. ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும், அது எல்லா மனிதர்களும் செய்ததைப் போலத்தான். அந்தக் காரணத்துக்காக தோட்டத்தில் இழைக்கப்பட்ட ஒரு துரோகம் மனித இனத்தையே மாசுபடுத்துவது தவறானாதல்ல. அந்தக் காரணத்துக்காக, அதைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு தனிப்பட்ட யூதனை சிலுவையில் அறைந்தது போதுமானது என்பது நியாயமற்றதாகாது. ஒருவேளை ஷோப்பன்ஹீரீன் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும், எந்த மனிதனும் எல்லா மனிதனே, ஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.

“ஜெனரலின் பிரம்மாண்டமான வீட்டில் ஒன்பது நாட்கள் கழிந்தன. போரின் அவசங்களையும் வெற்றிகளையும் பற்றி நான் பேசப் போவதில்லை:என்னை அவமானப்படுத்தும் அந்த வடுவின் வரலாற்றைக் கூற முயல்கிறேன். என் ஞாபகத்தில் அந்த ஒன்பது நாட்கள், கடைசி நாளின் முந்திய தினத்தைத் தவிர, ஒரே நாளாகத்தான் இருக்கிறது. அன்று எங்கள் ஆட்கள் ராணுவக் குடியிருப்புக்களில் நுழைந்தனர். எல்ஃபின் பிராந்தியத்தில் யந்திரத் துப்பாக்கிகளுக்கு இறையாகிப் போன எங்கள் பதினாறு தோழர்களுக்கு ஈடாய் மிகச்சரியாக வஞ்சம் தீர்க்க முடிந்தது அன்று. விடியற்காலையின் தெளிவின்மையில், காலை உதிக்கும் முன் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன். இரவு கவியும் சமயத்தில் திரும்பினேன். மேல் மாடியில் என் தோழன் எனக்காகக் காத்திருந்தான்: அவனின் காயம் அவனை வீட்டின் கீழ்ப்பகுதிக்கு இறங்க அனுமதிக்க வில்லை. எஃப்.என்.மாட் என்பவரோ அல்லது க்ளாஸ்விட்ஸ் என்பவரோ எழுதிய யுத்த தந்திரம் பற்றிய தொகுதி ஒன்றை அவன் கையில் வைத்திருந்தது என் நினைவுக்கு வருகிறது. “தரைப்படையே எனக்குப்பிடித்த ஆயுதம்”’ என்று ஒரு இரவு என்னிடம் மனம் திறந்து கூறினான். எங்களுடைய திட்டங்களைப் பற்றி விசாரித்தான்: அவற்றை விமர்சிக்கவோ அல்லது மாறுதல் செய்யவோ விரும்பினான். “நமது படுமோசமான பொருளாதார அடிப்படை”யை’அவன் கண்டனம் செய்யப் பழகியிருந்தான். வறட்டு கொள்கைக்காரனாகவும் கலகலப்பற்றவனாகவும் இருந்த அவன் ஒரு அழிவிற்கான முடிவை முன்னறிவித்தான். “அது ஒரு கொழுந்துவிட்டு எரியும் விவகாரம்”’ என்று முணுமுணுத்தான். உடல் அளவில் அவன் ஒரு கோழை என்பதை அசட்டை செய்ய வேண்டி அவனின் மன ஆணவத்தைப் பெரிதாக்கிக் காட்டினான். நல்லதற்கோ, கெட்டதற்கோ, இவ்வாறு ஒன்பது நாட்கள் கழிந்தன.

பத்தாவது நாள் நகரம் இறுதியாக வேட்டை நாய்களிடம் சிக்கியது. உயரமான, மௌனமான குதிரை வீரர்கள் சாலையில் திரிந்து கண்காணித்தார்கள். சாம்பலும் புகையும் காற்றில் மிதந்தது: ஒரு சதுக்கத்தின் மையத்தில் வீரர்கள் தங்கள் குறிக் கூர்மையை முடிவற்று பயிற்சி செய்துகொண்டிருந்த ஒரு போலி மனித உருவை விட மெலிதான மனப்பதிவே இருக்கக் கூடிய அளவில், தரையின் ஒரு மூலையில் மனிதச் சடலம் வீசப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தேன். . . . வானில் விடியல் தெரியும் நேரம் நான் கிளம்பினேன்: மதியத்திற்கு முன் நான் திரும்பிவிட்டேன். நூலகத்தில் மூன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்; அவன் குரலின் தொனி அவன் தொலைபேசியில் பெசிக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிவித்தது. பிறகு என் பெயர் காதில் விழுந்தது; பிறகு நான் ஏழு மணிக்குத் திரும்புவேன் என்பதும், பிறகு நான் தோட்டத்தைக் கடந்து வரும்போது அவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற குறிப்புணர்த்தலும். என்னுடைய நியாயமான நண்பன் என்னை நியாயமான வகையில் விற்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு தன் சுயபாதுகாப்பு பற்றிய உறுதி தரவேண்டும் என்று கேட்டதும் என் காதில் விழுந்தது.”

“இந்த இடத்தில் என் கதை தெளிவற்றுத் தொலைகிறது. மயக்கமடையச் செய்யும் ஆழ்ந்த படிக்கட்டுகள் வழியாகவும், பயம் கொள்ளத்தகுந்த கூடங்கள் வழியாகவும் என்னைக் காட்டிக் கொடுத்தவனைப் பின் தொடர்ந்தேன் என்பது எனக்குத் தெரியும். மூன் அந்த வீட்டை மிக நன்றாக, என்னைவிட நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். வீரர்கள் என்னை நிறுத்துவதற்கு முன்பு அவனை மடக்கினேன். ஜெனரலின் ஆயுதச் சேர்ப்புக்களில் ஒரு வளைந்த குறுவாளைப் பிடுங்கி எடுத்தேன். அந்த அரைச் சந்திரனால் அவனுடைய முகத்தில் என்றென்றைக்குமாக ரத்தத்தினால் ஆகிய அரைச்சந்திரனைச் செதுக்கினேன்.”

“போர்ஹே, ஒரு அந்நியரான உங்களிடம் இந்த மனந்திறப்பினைச் செய்திருக்கிறேன். உங்களின் வெறுப்பு அவ்வளவாய் என்னை வருந்தச் செய்யவில்லை.”

இங்கு கதை சொன்னவன் நிறுத்தினான். அவன் கைகள் நடுங்குவதை நான் கவனித்தேன்.

“அப்புறம் அந்த மூன்?”’நான் கேட்டேன் அவன் காட்டிக் கொடுத்துக் பெற்ற பணத்தை எடுத்துக் கொண்டு பிரேஸீலுக்கு ஓடிவிட்டான். அந்த மதியம், சதுக்கத்தில் ஒரு போலி மனித உரு சில குடிகாரர்களால் சுடப்படுவதை அவன் பார்த்தான்.

நான் பலனின்றி கதையின் மிச்சத்திற்காகக் காத்திருந்தேன். இறுதியில் அவனை தொடர்ந்து சொல்லச் சொன்னேன்.

அப்பொழுது ஒரு கேவல் அவன் உடம்பை உலுக்கியது: ஒரு மெலிந்த மென்மையுடன் அவனின் வெண்மையான வளைந்த வடுவைச் சுட்டிக் காட்டினான்.

“நீங்கள் நம்பவில்லையா? அவன் திக்கினான். என் முகத்தின் மீது பெரும் பாதகத்தின் குறி எழுதப்பட்டு நான் அதைச் சுமந்து திரிவதை நீங்கள் பார்க்கவில்லையா? கதையின் இறுதிவரை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு கூறினேன். என்னைப் பாதுகாத்தவனைப் புறக்கணித்தேன் நான். நான்தான் வின்சென்ட் மூன். இப்பொழுது என்னைப் பழியுங்கள்.”

Translated by Donald A.Yates.

ஆங்கிலத்தில் http://www.coldbacon.com/writing/borges-sword.html

http://en.wikipedia.org/wiki/Jorge_Luis_Borges