Saturday, March 19, 2011

மூன்று உறக்க நடையாளர்களின் துக்கம்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: பிரம்மராஜன்.


  இப்பொழுது வீட்டின் ஒரு மூலையில் அவளை விட்டிருந்தோம். அவளுடைய உடைமைகளான, சேற்றில் நடப்பதற்கான லேசான காலணிகள், புதியதாய்  வெட்டப்பட்ட மரத்தின் வாgarcia_marquez_gabriel1சனை வீசும் உடைகள் ஆகியவற்றை நாங்கள் இங்கு கொண்டு வருவதற்கு முன்பே யாரோ கூறினார்கள். இங்கு அவளின் முதுகை அழுத்தும், வேட்டில் மரத்தால் ஆன தனிமை தவிர, எவ்வித ஈர்ப்பும், இனிமையான சுவைகளும் இல்லாத ஊர்ந்து நகரும் வாழ்க்கைக்கு அவளால் பழகிக்கொள்ள முடியாதென்று. யாரோ சொன்னார்கள் எங்களிடம்  அதை ஞாபகப்படுத்திக்கொள்வதற்கு முன் ஏராளமாய் காலம் கழிந்துவிட்டிருந்தது  அவளுக்கும் ஒரு குழந்தைப் பிராயம் இருந்ததென்று. அப்பொழுது ஒரு வேளை அதை நாங்கள் நம்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது,  வீட்டின் ஒரு மூலையில் பீதியடைந்த கண்களுடன், ஒருவிரலைத் தன் உதடுகளின் மீது வைத்திருக்கும் அவளைப் பார்க்கும்போது, ஒரு காலத்தில் அவளுக்கும் குழந்தைப் பிராயம் இருந்திருக்கும் என்ற உண்மையை ஒப்புக்கொண்டோம். எதிர்பார்ப்பதற்கு முன்னரே குளிர்வித்துவிடும் மழையின் சீதளத்தின் உணர்தல்மிக்க தொடுதல் ஒரு காலத்தில் அவளுக்கும் இருந்திருக்கக்கூடும் என்பதையும், மேலும் அவள் உடலின் ஒரு பக்கத் தோற்றத்தில் எதிர்பார்த்திராத ஒரு நிழலை அவள் எப்போதும் கொண்டிருந்தாள் என்பதையும் உணர்ந்தோம்.

இவை எல்லாவற்றையும், மேலும் இன்னும் கூடுதலாய், அந்த மதியப்பொழுதில் நாங்கள் உணர்ந்தோம். அவளின் பயங்கரம் மிகுந்த அடிமன உலகிற்குமேல் அவள் முற்றிலும் மனிதத்துவத்துடன் இருந்தாள் என்பதையும் நம்பினோம். உள்ளுக்குள் ஒரு கண்ணாடி உடைந்தது போல் துன்புறும் கத்தல்களை அவள் உண்டாக்கியபோது நாங்கள் திடீரெனக் கண்டு கொண்டோம்; அவள் எங்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தாள். கண்ணீருக்கிடையே பேசிக்கொண்டிருந்தாள், நாங்கள் அவளருகில் அமரும் வரை; நாங்கள் கைகளைத் தட்டியடி பாடத் தொடங்கினோம். எங்களின் உரத்த குரல்கள், உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளை ஒன்று சேர்த்துவிடும் என்பதுபோல. அந்த சமயத்தில்தான் அவளும் குழந்தைப் பிராயத்தை உணர்ந்திருக்கிறாள் என்பதை நம்புவதற்கு முடிந்தது. அது எப்படியோ ஒருவகையில், அவளின் கத்தல்கள் ஒரு புதிரின் விடுவிப்பெனத் தோன்றியது. அந்தக் கத்தல்களில் ஞாபகப்படுத்தப்பட்ட ஏராளமான மரங்களும், ஆழ்ந்த நதியும் உள்ளடங்கியிருந்தன என்பது போலிருந்தது. அவள் எழுந்தபோது, சற்றே சாய்ந்தவாறு இன்னும் தன் முகத்தை அங்கியால் மூடிக்கொள்ளாமலும், இன்னும் மூக்கைச் சிந்தாமலும், இன்னும் கண்ணீருடனும் அவள் எங்களிடம் சொன்னாள் :

‘‘நான் இனி என்றுமே புன்முறுவல் செய்யப்போவதில்லை.’’

நாங்கள் மூவரும், பேச்சின்றி, வெளியில் முற்றத்துக்கு வந்தோம்; நாங்கள் ஒரு பொதுவான சிந்தனையை சுமந்து கொண்டிருந்திருக்கக்கூடும். வீட்டுக்குள் விளக்குகள் எதையும் போடாமல் இருப்பது சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைத்திருக்கலாம். இருண்ட மூலையில் உட்கார்ந்தபடி, விலங்கின் நிலைக்கான யாத்திரையில் நிலைத்திருக்கக்கூடிய ஒரே பொருளாகத் தோன்றிய மிக இறுதியான பின்னலைப் பின்னியபடி, அவள் தனிமையில் இருக்க விரும்பினாள். இருந்திருக்கலாம்.

வெளியில், முற்றத்தில், பூச்சிகளின் நிறைந்த ஆவிக்குள் மூழ்கிப்போய் நாங்கள் அவளைப் பற்றிச் சிந்திக்க, தரையில் அமர்ந்தோம். இதைப் பலமுறை நாங்கள் இதற்கு முன்பு செய்திருக்கிறோம். எங்களின் ஒவ்வொரு நாள் வாழ்விலும் என்ன காரியத்தைச் செய்துகொண்டிருந்தோமோ அதையே செய்துகொண்டிருந்ததாக நாங்கள் சொல்லியிருக்கக்கூடும்.

எனினும் அந்த இரவு வேறு மாதிரியாக இருந்தது. அவள் இனி என்றுமே சிரிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறாள். அவளை அவ்வளவு நன்றாக அறிந்திருந்த நாங்கள் அந்த பயங்கரம் நிஜமாகப் போகிறது என்பதில் உறுதியானோம். நாங்கள் முக்கோண வடிவில் அமர்ந்தபடி, அரூபமென, செயல் இழந்துபோய், அவள் தூசியாய் மாறிக்கொண்டிருப்பதை அளவிட்டு அறிவித்தபடி இருந்த எண்ணற்ற கடிகாரங்களின் நுண்ணிய துடிப்புகளைக் கூடக் கேட்பதற்கு சக்தியற்று போயிருந்த அவள் வீட்டினுள்ளே இருப்பதைக் கற்பனை செய்தோம். நாங்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் நினைத்தோம்.

நமக்கு மட்டும் அவளின் மரணத்தை விழையும் துணிவாவது இருந்தால்? ஆனால் நாங்கள் அவள் அப்படியே இருப்பதை விரும்பினோம்  அசிங்கமாக, சலனங்கள் உறைந்துபோய், எங்களின் மறைக்கப்பட்ட குறைபாடுகளில் ஒரு கீழ்மையான பங்களிப்பாக.

நாங்கள் வாலிபப் பருவத்தினராய் இருந்திருக்கிறோம்  நிறைய காலத்திற்கு முன்பு  எனினும் அவள் எல்லா வகையிலும், வீட்டிலேயே முதிய நபராக இருந்தாள். அங்கே, எங்களுடன் அமர்ந்தபடி, நட்சத்திரங்களின் அளவிடப்பட்ட துடிப்புகளை உணர்ந்த வண்ணம், அதே இரவு ஆரோக்கியமான மகன்களால் சூழப்பட்டு அவளால் இருக்கமுடிந்தது. நகரின் முக்கிய நபரின் மனைவியாகவோ, அல்லது தவறாமல் வருகை புரியும் ஒரு மனிதனின் வைப்பாட்டியாகவோ இருந்திருப்பாளானால் வீட்டின் மரியாதைக்குரிய பெண்மணியாக அவள் இருந்திருக்கமுடியும். ஆனால் அவள் ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே வாழ்வதற்குப் பழகி விட்டிருந்தாள்  ஒரு நேர் கோட்டினைப் போல. ஒருவேளை அவளின் நற்குணங்களும் அல்லது துர்குணங்களும் ஒரு பக்கத் தோற்றத்தில் பார்ப்பதற்கு முடியாதபடி இருந்திருக்கலாம். அதை நாங்கள் நிறைய வருடங்களாகவே அறிந்திருந்தோம். காலையில் எழுந்த பிறகு ஒரு நாள் நாங்கள் ஆச்சரியப்படக்கூட இல்லை.  முற்றத்தில் முகம் கவிழ்ந்து, ஒரு கடினமான, அதீத சந்தோஷமான முறையில் வாயில் மண்ணை கவ்வியபடி அவள் கிடந்தாள். அப்பொழுது அவள் புன்முறுவல் செய்து மீண்டும் எங்களைப் பார்த்தாள்; இரண்டாவது மாடியின் ஜன்னலின் இருந்து முற்றத்தின் கடினமான களிமண் மீது வீழ்ந்து விட்டிருக்கிறாள். ஈரக் களிமண் மீது இறுகலாய், கான்க்ரீட்டைப் போல, வீழ்ந்த நிலையிலேயே முகம் கவிழ்ந்து கிடந்திருக்கிறாள். தூரங்களைப் பற்றிய பயம் ஒன்றினை மாத்திரமே, வெளிகளைப் பார்த்தவுடன் உண்டாகும் இயற்கையான பீதிஇதை மாத்திரமே அவள் சிதையாமல் வைத்துக்கொண்டிருந்தாள் என்பதைப் பிறகு நாங்கள் தெரிந்துகொண்டோம். அவளுடைய தோள்களைப் பற்றித் தூக்கினோம்; எங்களுக்கு முதலில் தோன்றிய அளவுக்கு அவள் இறுகலாக இருக்கவில்லை. மாறாக, அவளின் அங்கங்கள் தொளதொளவென்றும் அவளின் மனத்தீர்மானத்திலிருந்து விடுபட்டும், இன்னும் விரைக்கத் தொடங்கியிராத ஒரு அறைகுறை வெதுவெதுப்பு கொண்ட பிணத்தைப் போலவும் இருந்தன.

அவள் கண்கள் திறந்திருந்தன. அவளுக்கு அதற்குள்ளாக ஒரு சுடுகாட்டுப் படிவின் சுவையைத் தந்திருக்க வேண்டும் அவளின் வாய் அசுத்தமாகி விட்டிருந்தது. நாங்கள் அவளைப் புரட்டி சூரியனைப் பார்த்து கிடத்தியவுடன் அது ஏதோ அவளை ஒரு நிலைக்கண்ணாடியின் முன்னால் வைத்தது போலத் தோற்றம் தந்தது.

அவள் எங்களை எல்லாம் ஒரு உயிர்ப்பற்ற, பால் பிரிவற்ற பார்வையுடன் நோக்கினாள். அவளை இப்பொழுது என் கைகளில் தாங்கியபடி இருந்தபோது, அவளின் இன்மையின் அளவினைத் தந்தாள். யாரோ சொன்னார்கள் அவள் இறந்துவிட்டாள் என்று. மேலும் இதற்குப் பிறகு, இரவு வேளைகளில் வீட்டுக்குள்ளே தூங்காமல் நடக்கும்போது எந்த மௌனமான, உணர்ச்சிக் கலப்பற்ற முறுவலிப்புடன் இருப்பாளோ அந்தப் புன்முறுவலுடன் இருக்கத் தொடங்கினாள். அவள் எங்ஙனம் முற்றத்தை அடைந்தாள் என்று அவளுக்குத் தெரியவில்லை என்று கூறினாள். மிகவும் வெப்பமாய் உணர்ந்ததாகவும், அவளின் அறைச்சுவரையே இடித்துத் தள்ளிவிடும் எனத் தோன்றிய ஒரு வெட்டுக்கிளியின் துளைக்கும், கூர்மையான சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் சொன்னாள். மேலும் அவளின் கன்னம் சிமெண்ட்டுத் தரையில் அழுந்த, ஞாயிற்றுக்கிழமை ஜபங்களை நினைவுபடுத்திக்கொள்ள தன்னைத் தயார் செய்துகொண்டதாகவும் கூறினாள்.

எவ்வாறாயினும், அவளால் எந்த ஜபத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள இயலாதென்று நாங்கள் அறிந்திருந்தோம். வெட்டுக்கிளி வெளிப்பக்கமிருந்து உந்தித்தள்ளிய சுவரின் உள்பக்கத்தைப் பிடித்தவாறு அவள் உறங்கிப் போனாள் என்று சொன்னபோதும், மேலும், அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது யாரோ அவளின் தோள்களைப் பற்றித் தூக்கி, சுவரை அகற்றி வைத்துவிட்டு சூரியனை நோக்கி அவளை மல்லாக்கப் படுக்க வைத்தார்கள் என்று கூறியபோதும் காலப்பிரக்ஞையை அவள் இழந்துவிட்டாள் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

அவள் மீண்டும் புன்முறுவல் செய்யமாட்டாள் என்பதை அந்த இரவு முற்றத்தில் அமர்ந்தபடி நாங்கள் உணர்ந்திருந்தோம். அவளின் இருள் போன்ற, அவளே தேர்ந்துகொண்ட மூலையிலான வாழ்வு, அவளுடைய வெளிப்படுத்த முடியாத தீவிரத்தன்மை போன்ற யாவும் முன்கூட்டியே எங்களை வருத்தியது. இப்போது அவள் அமர்ந்திருக்கும் மூலையில் அவள் அமர்ந்த நாளில் நாங்கள் எவ்வளவு வருந்தினோமோ அதே அளவு இப்போதும் வருந்தினோம்; மேலும் வீட்டுக்கு உட்புறம் தான் இனித் திரியப்போவதில்லை என்று சொன்னதையும் கேட்டோம். முதலில் எங்களால் அவளை நம்பமுடியவில்லை. மாதங்கள் பலவாக, நாளின் எல்லா நேரங்களிலும் அறைகளின் வழியாக, அவளின் தலை திடமாகவும், தோள்பட்டைகள் தொங்கியபடியும், குனிந்துவிடாமலும், என்றும் சலிக்காமலும் அவள் நடப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். இரவு நேரத்தில், இரண்டு இருள்களுக்கிடையில் அவளின் உடலின் அடர்ந்த சப்தம், அசைந்து உராய்ந்து செல்வதைக் கேட்டிருக்கிறோம். மேலும் எங்கள் படுக்கைகளில் தூக்கம் விழித்து, பல நேரங்களில் அவளுடைய ரகசியமான நடையை, வீட்டின் எல்லா இடங்களிலும் எங்கள் காதுகளால் பின் தொடர்வோம். ஒருமுறை, முகம் பார்க்கும் கண்ணாடிக்குள், ஸ்தூலமான உள்ளீட்டுத் தெளிவில், புதைந்து, அழுந்திப்போன வெட்டுக்கிளியைப் பார்த்ததாக எங்களிடம் கூறினாள். அது கண்ணாடியின் மேற்பரப்பைக் கடந்து அவளை நெருங்கி வந்ததாகவும் சொன்னாள். அவள் என்ன சொல்ல முயல்கிறாள் என்பதை நிஜமாக எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு தண்ணீர்த் தொட்டிலிருந்து வெளிப்பட்டவளைப் போல உடம்போடு அவளின் ஆடைகள் எல்லாம் நனைந்துபோய் ஒட்டிக்கொண்டு இருந்தது. நிகழ் முறையை விளக்கிச் சொல்வதற்கு முடியாமல், வீட்டிலிருந்த எல்லாப் பூச்சிகளையும் ஒழிப்பதற்குத் தீர்மானித்தோம். அவளை பயப்படுத்திய பொருள்களை எல்லாம் அழிப்பது என்று முடிவு கட்டினோம். சுவர்களைச் சுத்தப்படுத்த ஏற்பாடு செய்தோம்.

முற்றத்தில் வளர்ந்து கிடந்த எல்லாத் தாவரங்களையும் வெட்டி எறியச் சொன்னோம்  ஏதோ இரவு அமைதியின் பிசிறு பிசிறான எச்சங்களை எல்லாம் சுத்தப்படுத்துவது போல. ஆனால் இதற்குப் பிறகு அவள் நடக்கும் சப்தங்களை நாங்கள் கேட்கவில்லை. மீண்டும் அவள் வெட்டுக்கிளியைப் பற்றிப் பேசவில்லை. கடைசியாக ஒருநாள் இறுதி உணவுக்குப் பிறகு எங்களைப் பார்த்தபடியே இருந்தாள். சிமெண்டுத்தரையில் உட்கார்ந்த பிறகும் எங்களைப் பார்த்தபடியே சொன்னாள். ‘‘நான் இங்கே இருக்கப்போகிறேன். உட்கார்ந்தபடி!’’ நாங்கள் நடுங்கிப்போனோம்  காரணம் அவள் ஏற்கெனவே முழுமையான மரணத்தைப் போன்ற ஒரு தோற்றத்தைத் கொடுக்கத் தொடங்கியிருந்தாள்.

இது நடந்து வெகுநாட்கள் ஆகிவிட்டிருந்தன. அவளை அங்கே பார்ப்பதற்குப் பழகிவிட்டிருந்தோம். அவளின் இயற்கையாக இருக்கும் தன்மையை இழந்துவிட்ட போதிலும், தலைப்பின்னல் பாதி முடியப்பட்டு அவள் அவ்விடத்தில் உட்கார்ந்திருப்பது எங்களுக்குப் பழகிப்போயிருந்தது. அதனால்தான் இப்போது நாங்கள் அவள் இனி என்றுமே சிரிக்கப்போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டோம். ஏன் என்றால் இனி என்றுமே தான் நடக்கப்போவதில்லை என எந்த ஒரு தீர்மானமான, தன்னிறைவுமிக்க தொனியில் கூறினாளோ அதே மாதிரி இதைக் கூறிவிட்டாள். அவள் எங்களிடம், ‘‘நான் இனி என்றும் பார்க்கப்போவதில்லை’’ என்றுமோ, அல்லது ‘‘என்றும் காதால் கேட்கப்போவதில்லை’’ என்றுமோ சொல்வாள் என்பது பற்றி நாங்கள் தீர்மானமாகிவிட்டது போலத் தோன்றியது. அவள் உடலின் இன்றியமையாத இயக்கங்களை தானே விரும்பி அழிப்பதற்குப் போதுமான அளவு மனிதத்தன்மை உடையவளாக இருந்தாள் என்பதை உணர்ந்திருந்தோம். மேலும் இயல்பெழுச்சியுடன் புலன் உணர்வு, அடுத்த இன்னொரு புலன் உணர்வாக அழித்துக்கொண்டு போய், ஒருநாள் முதன் முதலாக உறங்கிப் போனவளைப் போல சுவரில் சாய்ந்தபடி இருப்பதைப் பார்க்கப்போகிறோம். ஒருவேளை இது நடப்பதற்கு இன்னும் நிறைய காலம் மிச்சமிருக்கலாம். ஆனால் முற்றத்தில் அமர்ந்திருந்த நாங்கள் மூவரும் அவளின் தீவிரத் தெள்ளிமை கொண்ட, திடீரென கண்ணாடிகள் உடைந்தது போலவரும் அழுகையை, அந்த இரவில் கேட்க விரும்பியிருப்போம்  ஒருவிதமான பிரமையை... ஒரு குழந்தை... ஒரு பெண் குழந்தை, இந்த வீட்டில் பிறந்துவிட்டது போன்ற பிரமையைத் தருவதற்காக, அவள் மீண்டும் மறு உயிர்ப்படைந்து பிறந்துவிட்டாள் என்பதை நம்பும் பொருட்டு.

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 comments:

Post a Comment