Saturday, April 9, 2011

ஹெர்மன் ஹெஸே: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி

ஹெர்மன் ஹெஸே எழுதிய ‘சித்தார்த்தா’வின் திரைப்படத்தில், ஓர் இந்தி நடிகை அம்மணமாக நடித்ததை ஒட்டி ஏற்பட்ட பரபரப்பில், இந்திய ‘அறிவாளி’களின் மத்தியில் இந்hermann_hesseத ஆசிரியரின் பெயரும் கொஞ்சம் அடிபட்டது. புத்த நிர்வாணத் தத்துவத்தில் வெகுவாக ஈடுபாடு கொண்ட ஆசிரியருக்கு இந்த விதமாய் புகழ் வந்து சேர்ந்தது! இந்த விளம்பரத்துக்கு முன்னாலும் அவர் சில குறிப்பிட்ட வட்டங்களில் தெரிய வந்தவர்தான். ஹெர்மன் ஹெஸே இந்தியாவின் மீதும், இந்திய ஆத்மீகத் தத்துவங்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருடைய மிக நெருங்கிய உறவினர்கள் கிறிஸ்துவ மதப் பணியில் மிக நீண்டகாலம் இந்தியாவில் செயல்பட்டிருக்கிறார்கள்.  இவர் மிக விரும்பிப் படித்த புத்தகங்களில் பகவத் கீதையும் ஒன்று. வெளிநாட்டு அறிஞர் ஒருவர் இந்தியாவின் மீது இவ்வளவு ஆழ்ந்த அக்கறை கொண்டு விட்டாரென்றால் ஒரு பதில் உபகாரமாய் அவரை சற்று கவனிப்பது இந்திய அறிவாளிகளின் பண்புகளில் ஒன்றல்லவா. மார்க்ஸ் முல்லர், எமர்சன், தோரோ, எலியட், ரோமா ரோலண்ட் ஆகியோர் அடங்கிய பட்டியலில் ஹேஸேயும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்திய ஆத்மீக சிந்தனை வெளிநாட்டில் கொடிகட்டிப் பறப்பதை பற்றி பீத்திக்கொள்ளும்போது பிற ஆசிரியர்களுடன் இவருடைய பெயரும் அவர்களுக்கு நினைவில் வரும்.  ஹெஸேயின் புத்தகத்தையும் படித்துப் பார்க்கலாம்தான். அவை மிக உயர்ந்தவை. ஆனால் படிப்பது, பொறுப்புடன் படிப்பது, அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. பெயர் உதிர்ப்போ செல்லுபடியாகிக் கொண்டும் இருக்கிறது.

ஹெஸேயைத் தமிழில் படிக்க வேண்டும் என்றால் ‘சித்தார்த்தா’ இருக்கிறது. திருலோக சீதாராம் மொழி பெயர்த்திருக்கிறார். ‘கவித்துவ’ நடையில் செய்து தந்திருக்கிறார். இந்த ‘கவித்துவ’ நடையும் ஆத்மீக விஷயமும் இந்திய நாவலை படிப்பது போன்ற தன்மையை ஏற்படுத்துவதால் சிலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள். பலர் படிக்க வேண்டும். ஒரு சிறந்த நாவல் இது.

இவர் ஜெர்மனியில் பிறந்தவர். ஜெர்மன் மொழியில் எழுதியவர். மத நம்பிக்கை ஊறிப்போன குடும்பம் அவருடையது. சிறுவயதில் இவரும் பாதிரிப் படிப்புக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் படித்து முடிக்கவில்லை. பாதியில் நிறுத்திக்கொண்டு விட்டார். இவர் பல வேலைகள் பார்த்திருக்கிறார். ஒரு மெக்கானிக்காக, புத்தக விற்பனையாளராக, புராதன கலைப் பொருட்களின் விற்பனையாளராக.

150px-Hermann_Hesse_-_Siddhartha_(book_cover) இவர் பிரயாணம் செய்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவர். பல தேசங்களில் சுற்றி இருக்கிறார். இத்தாலியும், இந்தியாவும் அவருக்கு பிடித்த தேசங்கள். ஹெஸேயை வசனத்தில் எழுதிய கவி என்று சொல்ல வேண்டும். இவருடைய படைப்புகளும் உள்நோக்கியது. மதங்களோ தத்துவங்களோ மனிதப் புதிருக்கு, துக்கத்திற்கு விடை கற்றுத் தரவில்லை என்று மனிதன் இன்னும் அவனுடைய துக்கத்திற்கு அவனே விடைதேடி கண்டுபிடித்துக் கொள்ளும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறான் என்றும், அவர் எண்ணுவது போல் தோன்றுகிறது, அவருடைய நாவல்களை படிக்கும்போது.

‘சித்தார்த்தா’ 1922-ல் எழுதியது. ஆத்ம ஞானத்தைத் தேடி அலைகிறான் ஒரு இளைஞன். அவன் சீரும் செழிப்புமாய் வாழ்ந்தவன். சுற்றத்தையும், செல்வத்தையும் துறந்து ஊர் ஊராக அலைகிறான். தவ வாழ்க்கையை மேற்கொள்கிறான். அதில் அலுப்புற்று மனந்திரும்பி பெண்ணுறவில் திளைக்கிறான். மீண்டும் ஆத்மீக வாழ்க்கைக்கே திரும்புகிறான். ஒரு சமயம் புத்த பகவானை இவன் நேரில் சந்திக்க நேருகிறது. உண்மைத் தேடலுக்கு பிறர் தரும் தத்துவங்கள் பயன்படா என்றும் ஒவ்வொருவனும் அவனே நொந்து, அறிந்து, ஆராய்ந்தே சத்திய தரிசனத்தை அடைய முடியும் என்றும் கூறி, இவன் புத்த பகவானை விட்டு விலகிச் செல்கிறான்.

இவருக்கு 1946-ம் வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர் எழுதிய பிற நாவல்கள் டெமியன், ஸ்டெப்பன் வூல்ப், நார்ஸிஸ் அன்டு கோல்டுமண்ட், மாஜிஸ்டர் லூடி ஆகியவையாகும்.

ஆங்கிலம் அறிந்தோர் படிக்க வசதியாய் இவருடைய நாவலின் மொழிபெயர்ப்புகள் காகித அட்டையில் கிடைக்கின்றன.

- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.

http://en.wikipedia.org/wiki/Hermann_Hesse

கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 comments:

Post a Comment