Tuesday, May 31, 2011

கிரேசியா டெலடா:அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி

கிரேசியா டெலடா (1871 - 1936)

கிரேசியா டெலடா என்ற இத்தாலிய ஆசிரியையின், நன்றாகத் தெரியவரப்பட்டுள்ள ‘தாய்’ என்ற நாவல், தி. ஜானகிராமனால் அருமையாக மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் வெளிவந்துள்ளது. இதை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சGrazia_Deledda_1926ம். இப்பகுதியில், இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் நாவல்களின் மொழிபெயர்ப்பை, நம் அருமை வாசகர்கள் எந்த அளவுக்குப் படித்திருப்பார்களோ, அந்த அளவுக்கு இம்மொழிபெயர்ப்பையும்  படித்திருப்பார்கள் என நாம் உறுதியாக நம்பலாம்.

இத்தாலியின் மேற்குப் பகுதியில், சார்டீனியா தீவில், உத்தமக் கிறிஸ்துவர் பெரிய படிப்பாளி என்ற பெயர் பெற்ற, புத்தகங்கள் சேர்ப்பதில் நம்பிக்கையுள்ள, பெரிய நூல்நிலையம் வைத்துக் கொண்டிருந்த மேயர் ஒருவரின் பெண்ணாகப் பிறந்தவர், டெலடா. பெண்கள் படிக்காத அக்காலத்தில், மேயர் தன் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து, புத்தக உலகத்திலும் அவளை நகர்த்தி விட்டார்.

டெலடா தனது பதினேழாவது வயதில் ‘சார்டீனியா பூக்கள்’ என்று ஒரு புத்தகம் எழுத, அது வாசகர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போக, விழுந்து விழுந்து அவர்கள் படிக்க, எக்கச்சக்கம் பிரதிகளும் அழிந்தன. டெலடா பின்னால் சொன்னார்: ‘இந்த நூலின் உரிமையை எனக்கு வைத்துக்கொள்ளத் தெரியவில்லை. வைத்துக்கொள்ளத் தெரிந்திருந்தால் கோடீசுவரி ஆகியிருப்பேன்.’

கோடீசுவரி ஆகத் தெரியாவிட்டாலும், எழுதத் தெரிந்திருந்தது டெலடாவுக்கு. தொடர்ந்து எழுதினார். நன்றாக எழுதியிருக்கிறார்; ஓஹோ என்று சொல்லமுடியாவிட்டாலும். ‘எகிப்துக்கு ஒரு பயணம்’ என்ற இவருடைய நாவலும் முக்கியமானது. தம் எழுத்து பற்றி இவர் சொன்னது: ‘நான் வாழ்ந்த தீவை நேசிக்கிறேன். அங்குள்ள மனிதர்களும், மலைகளும், வயல் வெளிகளும் என் வாழ்வின் பகுதிகள். நான் கண்ணைத் திறந்து பார்க்கப் பார்க்க,  மனித வாழ்க்கை ஒரே அதிசயமாகவும் நாடகங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. புத்தகங்களை உண்டு பண்ண, தூரத் தொலைவிலுள்ள அடிவானத்தைப் பார்த்து நான் தியானம் செய்வதில்லை.’

டெலடாவின் எழுத்து, துன்பத்தின் சாயல் படிந்தது. தன் தந்தையான மேயரிடம், ஊர்வாசிகள் முறையிட்டுக் கூறிய சங்கடங்கள், சின்னப்பெண்ணாக நின்று கேட்டுக்கொண்டிருந்த டெலடாவின் மனதை ரொம்பவும் பாதித்துவிட்டதாம். சார்டீனியா மக்களின் வாழ்க்கையைப் பற்றி நல்லது, கெட்டது என்று பார்க்காமல், அப்பட்டமாகவும், சூட்சுமமாகவும் இவர் எழுத, ஊர் ரொம்பவும் கொதித்ததாம். ஊரின் தன்மானக் கொதிப்பை விட, உண்மை கொஞ்சம் உயர்ந்தது என்ற எண்ணம் இவருக்கு இருந்ததால், இலக்கிய நோக்கில் ஏதும் சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து எழுதினார். விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்டு, 1926-ல் நோபல் பரிசு பெற்று, பெருமையும், புகழும் இவர் அடைந்தபோது, ‘எங்க ஊர்க்காரி’ என்று இவருடைய ஊரும் இவரைக் கொண்டாடிற்று.

‘தாய்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசகர்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். கொஞ்சம் தீவிரமாக ஒன்றிரண்டு ஆண்டுகள் தேடினால், புத்தகப் பிரதி, ஏதேனும் ஒரு நூல்நிலையத்தின் மூலையிலிருந்தோ, அல்லது பழைய புத்தகக் கடையிலிருந்தோ (அதிக வாய்ப்பு இங்குதான்) கிடைக்காமல் போகாது.

- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.

http://en.wikipedia.org/wiki/Grazia_Deledda

கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 comments:

Post a Comment