Sunday, May 1, 2011

யாரும் சிரிக்க மாட்டார்கள் - மிலன் குந்தேரா (பகுதி 1)

செக் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் : சூசனா ராப்பபோர்ட்  தமிழில்: ராஜகோபால்

“சிலிவோவுட்ஸ்யை* கொஞ்சம் ஊற்று” என்றாள் கிளாரா. எனக்கு அதில் ஆட்சேபனையில்லை. எப்போதாவதுதான் நாங்கள் ஒரு பாட்டிலைத் திறக்கிறோம். இம்முறை எங்களுக்கு ஒரு நியாயமான காரணம் இருந்தது. அன்று பெரிய கட்டுரை ஒன்றிற்காகக் கலை இலக்கியப்  பத்திரிகையொன்றிலிருந்து நான் நல்ல சன்மானம் பெற்றிருந்தேன்.

அந்தக் கட்டுரையைப் பிரசுரிப்பது அத்தனை எளிதாக இருக்க­வில்லை. நான் எழுதியிருந்த கருத்துக்கள் சர்ச்சையைத் தூண்டும் விதத்திலிருந்தன. அதனால்Milankundera_big என்னுடைய கட்டுரை­யைக் காட்சிக்கலை (Visual Arts) நிராகரித்திருந்தது. அதன் ஆசிரியர்கள் வயோதிகர்கள். எச்சரிக்கையுணர்வு மிகுந்தவர்கள். பிறகு ஒரு­வழி­யாகச் சற்று முக்கியத்துவம் குறைந்த பத்திரிகையொன்றில் அது பிரசுரிக்கப்பட்டது. அதன் ஆசிரியர்கள் இளைஞர்கள். சாதூர்யம் குறைந்தவர்கள்.

தபால்காரன் பணத்தைப் பல்கலைக்கழகத்திற்கு எடுத்து­வந்திருந்­தான். ­கூடவே ஒரு கடிதமும் இருந்தது. அது முக்கியமான கடித­மில்லை. காலையில் சந்தோசம் வழிந்தோடிக்­கொண்டிருந்ததால் அதை மறந்துவிட்டிருந்தேன். ஆனால் இப்போது, வீட்டில் நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குவளை ஏறக்குறைய காலியாகி விட்டதால் எங்களை மகிழ்ச்சியூட்டிக்­கொள்ள மேஜையிலிருந்த அந்த கடிதத்தை எடுத்தேன்.

“மரியாதைக்குரிய காம்ரேட் – இப்படி அழைப்பதற்கு நீங்கள் என்னை அனுமதித்தால் – தோழரே!..” கிளாராவிற்காகச் சப்தமாகப் படிக்கத் தொடங்கினேன். “நீங்கள் ஒருபோதும் சந்தித்திராத ஒரு மனிதர் உங்களுக்குக் கடிதம் எழுதுவதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இக்கடிதத்தோடு நான் இணைத்துள்ள கட்டுரையை நீங்கள் படித்துப் பார்க்கவேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு உங்களைத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் என் மரியாதைக்குரியவராக இருப்பதற்குக் காரணம், என்னுடைய நீண்ட ஆய்வின் விளைவாக நான் கண்டடைந்த முடிவுகளோடு ஆச்சரியமூட்டும் விதத்தில் தங்களுடைய அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் ஒத்திசைந்து செல்கிறது. மொத்தத்தில் நான் பிரமித்துவிட்டேன்... ” பின் வந்த வரிகளில் நான் வெகுவாகப் புகழப்பட்டிருந்தேன். இறுதியாக ஒரு கோரிக்கை வைக்கப்­பட்டிருந்தது: காட்சிக் கலைக்காக அவருடைய கட்டுரையை மதிப்பீடு செய்து ஒரு விஷேச மதிப்புரை நான் எழுதித்தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். கடந்த ஆறுமாத காலமாகக் காட்சிக்கலை அவருடைய கட்டுரையைக் குறைவாக மதிப்பிட்டு நிராகரித்து வருகிறது. நண்பர்கள் என்னுடைய அபிப்பிராயம் தெளிவாக இருக்குமென்று அவரிடம் சிபாரிசு செய்திருக்கிறார்கள். ஆதலால் தான், நான் அவ்வெழுத்தாளரின் ஒரே நம்பிக்கையாகிப் போனேன். அவருடைய சிறுவெளிச்சக் கீற்று நான். நான் இல்லையேல் அவர் முழு இருட்டில் மூழ்கவேண்டியதுதான்.

திரு.ஸ்ட்டுருஸ்கியை நாங்கள் கேலி செய்தோம். பகட்டான அவரது பெயர் எங்களை வசீகரித்தது. ஆனால் அது வெறும் கேலி மட்டுமே. மட்டுமீறி என்னைப் புகழ்ந்தற்காகச் செய்யப்பட்ட கேலி. ஒருவரை­யும் அது துன்புறுத்தாது. அருமையான சிலிவோவிட்ஸ் என்னை மென்மையானவனாக மாற்றிவிட்டிருந்தது. எத்தகையை மென்மை­யான­வன் என்றால், சிலிவோவிட்ஸ் காரணம், மறக்க முடியாத அந்த கணத்தில் முழு உலகையுமே நான் நேசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆதலால்­தான் அக்கணத்தில் இவ்வுலகிற்குப் பரிசளிப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லாதபோது கிளாராவிற்கு கொஞ்சம் வெற்று நம்பிக்கை­களைப் பரிசளித்தேன்.

கௌரவமான குடும்பத்திலிருந்து வந்த கிளாராவிற்கு இருபது வயதாகிறது. என்ன சொன்னேன்? கௌரவ­மான குடும்பமென்றா? இல்லை, மிகச்சிறந்த குடும்பம். அவளுடைய தந்தை ஒரு வங்கி மேலாளர். 1950ஆம் ஆண்டு வாக்கில், மேல் மத்தியவர்க்கத்தின் பிரதிநிதியான அவளது தந்தையை, பிராக்கிற்கு(Prague) அருகிலிருந்த சிலாகோவிட்ஸ் கிராமத்திற்குக் கட்சி நாடு கடத்தி­யது. அதன் விளைவாக கிளாராவின் கட்சிப்பதிவேடு மோசம­டைந்தது. பிராக்கிலிருந்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் அவள் தையல்காரியாகப் பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. அவளைக் களிப்பூட்டுவதற்காக என் தொடர்புகளின் வழியாகக் கிடைக்கவிருக்கும் ஒரு வேலையின் அனுகூலங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். அவளைப்போன்ற ஒரு அழகி இப்படித் தையல் வேலைகளில் அழகைப் பாழ்படுத்திக் கொள்வது எத்தகைய அபத்தம் என்பதை விளக்கினேன். அவளை ஒரு மாடல்(Model) ஆக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

கிளாரா ஆட்சேபிக்கவில்லை. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்ததால் இரவு சந்தோசமாக கழிந்தது.

2

நிகழ்காலத்தை நாம் கண்ணை மூடிக்கொண்டு கடக்கிறோம். அனுபவங்களை உய்த்துணரவும் அதைப் பற்றி யோசிப்பதற்குமே நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். கண்கட்டை அவிழ்த்த பிறகு­தான் நம்மால் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்க்க முடிகிறது. நாம் என்னவிதமான அனுபவத்திற்கு ஆட்பட்டிருந்தோம், அதற்கு என்ன அர்த்தம்? என்றெல்லாம் பிறகுதான் யோசிக்கிறோம்.

அன்று மாலை, என் வெற்றிக்காகத்தான் நான் குடித்துக் களித்து கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். ஆனால் அது, என் அழிவுக்கான சிறிய முன்னறிவிப்பு என்பதை, அப்போது நான் உணர்ந்திருக்க­வில்லை.

மறுநாள், எது குறித்தும் நான் சந்தேகபடவில்லை என்பதால், நல்ல மனநிலையோடு கண்விழித்தேன். கிளாரா, அருகில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். கடிதத்தோடு இணைந்திருந்த கட்டுரையை எடுத்தேன். அசட்டையாக ஒரு பார்வைப் பார்த்தேன்.

அது மிகோலஸ் அலஸ்** செக் ஓவியத்துறையின் தலைவன் என்று
தலைப்­பிடப்­பட்டிருந்தது. அரைமணி நேர அக்கறைக்கு கூட அது பெறுமதியற்றது. நான் அதற்குச் செலவழித்தது வீணாயிற்று. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்பில்லாத வெற்றுவரிகளால் நிரப்பப்பட்டிருந்த கட்டுரையில் எளிய சிந்தனைக்கான சுவடு கூடத் தென்படவில்லை.

மிகத் தெளிவாக உளறல் என்று தெரிந்தது. அன்றுதான் டாக்டர் கிளாசெக் – காட்சிக்கலையின் ஆசிரியர் (பிற விஷயங்களில் மிக மோசமாக எரிச்சலுட்டுகிற மனிதர்) தொலைபேசியில் அழைத்து என் அபிப்பிராயத்தை உறுதி செய்துகொண்டார். பல்கலைக்கழகத்திற்கு அழைத்து: ஸ்ட்டுருஸ்கியின் கட்டுரை கிடைத்ததா? அதற்கு ஒரு மதிப்புரை எழுதித் தா. இதுவரை அவனுடைய ஐந்து கட்டுரைகளை நிராகரித்துவிட்டோம். இருந்தாலும் அவன் தொல்லை செய்கிறான். அவன் தலைக்குள் நீ தான் நம்பிக்கைக்குரிய ஒரே மனிதன் என்ற எண்ணம் புகுந்து விட்டது. இரண்டே வரிகளில் அது எப்படிப்பட்ட குப்பை என்று எழுது. எப்படி எழுதுவது என்று உனக்குத் தெரியும். அது அவன் தலைக்குள் இறங்க வேண்டும். பிறகு நாமெல்லாம் நிம்மதியாக இருக்கலாம்.

ஆனால் எனக்குள் இருந்த ஏதோவொன்று எதிர்ப்பு தெரிவித்தது. நான் எதற்குத் திரு.ஸ்ட்டுருஸ்கியைத் தூக்கிலிடவேண்டும்? அதற்கு, அந்த ஆசிரியரைப் போல் நான் ஏதாவது ஊதியம் வாங்குகிறேனா? அத்தோடு, என் கட்டுரையை அதீத ஜாக்கிரதையுணர்வோடு அவர்கள் நிராகரித்திருந்தது நினைவிற்கு வந்தது. வேறு என்ன வேண்டும்..? திரு.ஸ்ட்டுருஸ்கியின் பெயரோ என் மனதில் அழகான மாலை, கிளாரா, சிலிவோவிட்ஸோடு தொடர்புடையதாகப் பதிவாகி­யிருந்தது. இறுதியில், அவரிடம் நான் அதை மறுக்கவில்லை. அது மனிதமாகாது - என்னை நம்பகமான ஆள் என்று ஒருவர் சொல்வதை நான் எதற்கு மறுக்கவேண்டும்? எதற்காக அந்த ஒன்றையும் நான் இழக்க­வேண்டும்?

புத்திசாலித்தனமாக அந்தப் பேச்சை முடித்துக் கொண்டேன். கிளாசெக்கிற்கோ அது ஒரு வாக்குறுதி. எனக்கோ அது ஒரு மழுப்பல். ரிசீவரைக் கீழே வைத்தபோது திரு.ஸ்ட்டுருஸ்கியைப் பற்றி எந்த­வொரு கட்டுரையும் எழுதக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டேன். ஆனால், அதற்கு மாறாக, பெட்டியிலிருந்து ஒரு காகிதத்­தை ­எடுத்து உடனேயே திரு.ஸ்ட்டுருஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதினேன். கடிதத்தில், அவருடைய ஆய்வு பற்றிய என் அபிப்பிராயத்தை மறைத்துவிட்டு, பொதுவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓவியக்கலை பற்றிய என்னுடைய பார்வைகள் குளறுபடியானவை என்றும், அவருடைய ஆய்வைப் பற்றிய என்னுடைய பரிந்துரை – குறிப்பாக காட்சிக்கலையின் ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கே சாதகமாக அமையும் என்றும், திரு.ஸ்ட்டுருஸ்கிக்குச் சாதகமாக அமைவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்திருந்தேன். அதே சமயம் திரு.ஸ்ட்டுருஸ்கியோடு நட்பார்ந்த ரீதியில் சற்று வம்பளந்திருந்ததால் என் நிலை கண்டு அவருக்குப் பரிவு ஏற்படாதவாறும் பார்த்துக்கொண்டேன்.

தபால்பெட்டியில் கடிதத்தைப் போட்டதோடு அதை மறந்துவிட்டேன். ஆனால் திரு.ஸ்ட்டுருஸ்கியோ என்னை மறக்கவில்லை.

3

ஒருநாள் என் விரிவுரையை முடிக்கும் சமயம் - பல்கலைக்கழகத்தில் நான் கலை வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருக்கிறேன் - யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. அது மேரி. எங்கள் காரியதரிசி. இரக்கச் சுபாவம் மிகுந்தவள். வயதாகி விட்டது. அவ்வப்போது எனக்கு காபி கலந்து தருவாள். தொலைபேசியில் எனக்கு விருப்ப­மில்லாத பெண் குரல்களைக் கேட்டால் நான் வெளியே சென்றிருப்பதாகச் சொல்லிவிடுவாள். அவள் கதவிடுக்கில் தலையை நீட்டி, என்னை காண ஒரு கனவான் வந்திருப்பதாக சொன்னாள்.

கனவான்களைக் கண்டு எனக்கு பயமில்லை. ஆதலால் மாணவர்­களிடம் விடைபெற்றுக்கொண்டு அவரைக் காணக் கிளம்பினேன். காரிடாரில் நுழைந்தபோது, வெள்ளைச் சட்டையும் நைந்த கருப்பு சூட்டும் அணிந்த ஒரு குள்ளமனிதர், எனக்கு வணக்கம் தெரிவித்தார். மிகுந்த மரியாதையோடு தன்னைத் திரு.ஸ்ட்டுருஸ்கி என்று அறிமுகப்படுத்திக் ­கொண்டார்.

அந்தப் பார்வையாளரை அழைத்துக்கொண்டு ஒரு காலி அறைக்குள் நுழைந்தேன். இருக்கையைக் காட்டினேன். பிறகு, எல்லாவற்றையும் பற்றிச் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தோம். உதாரணமாக, இந்தக்கோடை எவ்வளவு மோசமாகயிருக்கிறது; பிரேக்கில் எங்கெங்கு பொருட்காட்சிகள் நடக்கின்றன.. என்றெல்லாம் பலவற்றை பற்றி பேசிக்கொண்டோம். திரு.ஸட்ருஸ்கி நாகரிகமாக என்னுடைய பேச்சையெல்லாம் ஒத்துக்கொண்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே என்னுடைய பேச்சையெல்லாம் அவருடைய கட்டுரையோடு சேர்த்து புரிந்துகொள்ள முயன்றார். அது கண்ணுக்குப் புலனாகாதபோதும், தவிர்க்க­முடியாத காந்தத்தைப் போல் இருவரையும் பிணைக்க­தொடங்கியது.

இறுதியில், உங்கள் கட்டுரைக்கு மதிப்புரை எழுவதுபோல் சந்தோசம் தரக்கூடியது எதுவுமில்லை,என்றேன். ஆனால், கடிதத்தில் குறிப்பி­ட்டுள்ளது போல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் செக் ஓவியங்களைப் பற்றிய என்னுடைய புரிதல்கள் அரைகுறையானவை. மேலும், தற்சமயம், காட்சிக்கலையின் ஆசிரியர்களோடு எனக்கு நல்ல உறவில்லை. என்னை வறட்டு மார்க்சிஸ்ட் என்று கருதுகிறார்கள். இம்மாதிரியான சூழ்நிலையில் என்னுடைய மதிப்புரை உங்களுக்குக் கெடுதல் விளைவிக்க வாய்ப்பிருக்கிறது, என்றேன்.

ஓ! நீங்கள் மிகவும் தன்னடக்கத்தோடு நடந்துகொள்கிறீர்கள் என்றார் திரு. ஸ்ட்டுருஸ்கி. உங்களால் எப்படி இவ்வாறான தன்னடக்கத்தோடு நடந்துகொள்ள முடிகிறது...? நீங்கள் ஒரு நிபுணர். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. அந்த அலுவலகத்தில் எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது என்றார்கள். நீங்கள் நினைத்தால் அது பிரசுரமாகிவிடும். உங்களை விட்டால் எனக்கு வேறு போக்கிடம் கிடையாது. இந்தக் கட்டுரைக்காக மூன்று வருடம் கடுமையாக உழைத்திருக்கிறேன். நிறையப் படித்திருக்கிறேன். இப்போது எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது.

ஒரு மனிதர் எப்படியெல்லாம் சாக்குபோக்குகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள்! திரு.ஸ்ட்டுருஸ்கிக்கு எப்படி பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் எதேச்சையாக அவருடைய முகத்தை அவதானித்தேன். களங்கமற்ற சிறிய, பழமையான கண்கள் என்னை வெறித்துக் கொண்டிருந்தன. நெற்றியில் ஆழமான சுருக்கம் ஒன்று விழுந்திருந்தது. ஓரிரு வினாடிகள் யோசித்த போது என் முதுகுத்தண்டு சில்லிட்டது. இந்தச் சுருக்கம் உறுதியானது; ஆழமானது. மிக்கோலஸ் அலிஸின் ஓவியங்களூடாக அதன் எஜமான பயணித்ததால உண்டான வேதனையை, துரோகத்தை மட்டும் அது தெரியப்படுத்தவில்லை, மாறாக ஒரு அசாத்திய மனவலிமையையும் வெளிப்படுத்தியது. மனம் மிகவும் சோர்ந்துவிட்டது. புத்திசாலித்தனமான சாக்குபோக்கு ஒன்றையும் அப்போது என்னால் சொல்ல முடியவில்லை. அந்த மதிப்புரையை என்னால் எழுத முடியாது என்று எனக்குத் தெரிந்து விட்டது. அதே சமயம் அந்தப் பரிதாபகரமான முகத்தைப் பார்த்து அதைச் சொல்லவும் முடியவில்லை.

பிறகு சிரித்து மழுப்ப தொடங்கினேன். திரு.ஸ்ட்டுருஸ்கி எனக்கு நன்றி தெரிவித்தார். விரைவில் சந்திப்போம் என்றார். நாங்கள் புன்னகைத்துப் பிரிந்தோம்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் என்னை தேடி வந்தார். நான் புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்தேன். மறுநாள், என்னைத் தேடிக்கொண்டு அவர் மீண்டும் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. கெட்ட காலம் தொடங்கிவிட்டதை உணர்ந்துகொண்டேன். தக்க நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும என்று புரிந்தது. மேரியைத் தேடிச் சென்றேன்.

மேரி டியர், உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அந்த மனிதன் என்னைத் தேடிக்கொண்டு மீண்டும் வந்தான் என்றால், ஆராய்ச்சிக்காக நான் ஜெர்மனி போயிருப்பதாகச் சொல்லிவிடு. உனக்குத் தெரியும், செவ்வாயும் புதனும்தான் என்னுடைய வகுப்புகள். அதை ரகசியமாக வியாழன் வெள்ளிக்கு மாற்றி விடுகிறேன். இது என் மாணவர்களுக்கு மட்டும்தான் தெரியவேண்டும். எவருக்கும் தெரியக்கூடாது. அட்டவணையைத் திருத்தாதே. நான் கொஞ்சம் தலைமறைவாக வாழ வேண்டி இருக்கிறது.

4

எதார்த்தத்தில் நான் எதிர்பார்த்தைவிட வேகமாக திரு.ஸ்ட்டுருஸ்கி திரும்பியிருந்தார். என்னுடைய காரியதரிசி நான் திடீரென்று ஜெர்மனி கிளம்பி விட்டதாகத் தெரிவித்தபோது மனிதர் நொடிந்து விட்டார். இது சாத்தியமில்லை. பேராசிரியர் என்னைப் பற்றி ஒரு மதிப்புரை எழுதியாக வேண்டும். அவரால் எப்படிப் போகமுடியும்?

எனக்குத் தெரியாது, என்றாள் மேரி. எப்படியிருந்தாலும் அவர் ஒரு மாதத்தில் திரும்பி விடுவார்.” “என்ன ஒரு மாசமா?...திரு.ஸ்ட்டுருஸ்கி புலம்பத் தொடங்கிவிட்டார். உங்களுக்கு ஜெர்மனியில் அவரிருக்கும் முகவரி தெரியுமா? ” “தெரியாது என்றாள் மேரி. பிறகு ஒருமாதம் எனக்கு நிம்மதியாகக் கழிந்தது.

ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வேகமாக அம்மாதம் முடிந்துவிட்டது. திரு. ஸ்ட்டுருஸ்கி மீண்டும் என் அலுவலகத்தில் தோன்றினார். இல்லை, அவர் இன்னமும் திரும்பவில்லை என்றாள் மேரி. பிறகு வேறொரு காரியத்தை முன்னிட்டு நாங்கள் சந்தித்துக்கொண்ட போது என்னிடம் மன்றாடும் விதத்தில் கேட்டுக் கொண்டாள்: உங்களுடைய மனிதர் மீண்டும் வந்திருந்தார். தயவுசெய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். மேரி, மஞ்சள் காமாலை வந்து ஜெனெயிலுள்ள மருத்துவமனையில் நான் கிடக்கிறேன் என்று சொல்லிவிடு. மருத்துவமனையிலா! –திரு.ஸ்ட்டுருஸ்கி கத்தியேவிட்டார் - ஓரிரு நாட்களுக்கு பிறகு மேரி அவரிடம் இக்கதையை சொன்னபோது. இது சாத்தியமேயில்லை. என்னைப் பற்றி அவர் ஒரு மதிப்புரை எழுதியாக வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” “மிஸ்டர். ஸ்ட்டுருஸ்கி என்னுடைய காரியதரிசி அவரை வசைப்பாடினாள். எங்கோ வெளிநாட்டில் ஒரு மனிதர் மருத்துவமனையில் கிடக்கிறார் என்கிறேன். நீங்கள் உங்கள் மதிப்புரையைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். திரு.ஸ்ட்டுருஸ்கி அமைதியாகத் திரும்பிச் சென்றார். ஆனால் இரு வாரம் கழித்து மீண்டும் என் அலுவலகத்தில் தோன்றினார். ஜெனேயிலுள்ள மருத்துவமனைக்கு ஒரு பதிவுத்தபால் அனுப்பினேன். கடிதம் திரும்பி விட்டது என்றார். மறுநாள் மேரி, உன்னுடைய குள்ளன் என்னை ரொம்ப தொந்தரவு செய்கிறான்என்றாள். நீ என்னிடம் கோபப்படக் கூடாது என்னால் என்ன செய்ய முடியும்? நீ திரும்பி விட்டதாகச் சொல்லிவிட்டேன். நீயே அவனைக் கவனித்துக்கொள்.

மேரியிடம் எனக்குக் கோபமில்லை. அவளால் என்ன செய்யமுடியுமோ அதை அவள் செய்து விட்டார். தவிர, இதில் தோல்வியடைய நான் விரும்பவில்லை.. பிடிபடக் கூடாது என்று முடிவெடுத்தேன். எல்லா நேரமும் தலைமறைவாக நடமாடினேன். வியாழனும் வெள்ளியும் ரகசியமாக வகுப்பெடுத்தேன். ஒவ்வொரு செவ்வாயும் புதனும் அந்த வரலாற்றுப் பேராசிரியர் வாசலில் பதுங்கியிருந்ததை கண்டு­கொண்டேன். நான் எப்போது வருவேன் என்று, ஆசிரியர் கட்டிடத்திற்கு வெளியே அவர் காத்திருந்ததைப் பார்த்தபோது எனக்குச் சந்தோசம் உண்டாயிற்று. பொய்த் தாடியும் தொப்பியும் அணிந்து நடமாடினேன். என்னை ஷெர்லாக் ஹோம்ஸாக, மிஸ்டர். ஹய்டாக, நகரத்திற்குள் நடமாடித் திரியும் கண்ணுக்குப் புலப்படாத மனிதனாக உணரத் தொடங்கினேன். சிறு பையனின் குதூகலம் என்னை தொற்றிக்­கொண்டது.

தொடர்ந்து கண்காணித்துவந்த திரு.ஸ்ட்டுருஸ்கி சோர்ந்து போய் மேரியிடம் ஒருநாள் எரிந்து விழுந்தார்: காம்ரேட்! பேராசிரியருடைய வகுப்புகள் எங்கு நடக்கிறது?

சுவரைச் சுட்டிக்காட்டி பட்டியல் அங்கிருக்கிறது, என்றாள் மேரி. அதில் எல்லா பேராசிரியருடைய வகுப்புகளும் தெளிவாக அச்சிடப்பட்டி­ருந்தது.

திரு.ஸ்ட்டுருஸ்கியும் விட்டுக்கொடுக்காமல் ஏற்கனவே அதைப் பார்த்துவிட்டேன் என்றார். செவ்வாயும் புதனும் நம் பேராசிரியர் மட்டும் வகுப்பெடுப்­பதில்லையே. உடம்புக்கு ஏதாவது..?

மேரி சற்று தயங்கி ஒன்றுமில்லை,என்றாள்.

பேராசிரியர் மீண்டும் எரிந்து விழுந்தார். பட்டியலிலுள்ள குழப்பத்திற்கு அவள்தான் காரணம் என்று ஏசினார். எல்லா பேராசிரியர்களுடைய நேரமும் தெரிந்திருந்த அவளுக்கு இதுமட்டும் எப்படித் தெரியாமல் போயிற்று என்று குறுக்கு விசாரணை செய்தார். அவளைப் பற்றி புகார் செய்யப்போவதாக மிரட்டினார். கூச்சலிட்டார். வகுப்பெடுக்க வேண்டிய பேராசிரியர் வகுப்புக்கு வராமல் இருப்பதுப் பற்றி புகார் செய்யப் போவதாகத் தெரிவித்தார். துறைத்தலைவர் இருக்கிறாரா என்று கேட்டார்.

துரதிர்ஷ்டவசமாக துறைத்தலைவர் அன்று இருந்தார்.

திரு.ஸ்ட்டுருஸ்கி கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றார். பத்து நிமிடத்திற்குப் பின் மேரியின் அலுவலகத்திற்குள் நுழைந்து என் முகவரியைக் கொடுக்கும்படி நிர்பந்தித்தார்.

இருபது ஸ்கல்நிகோவா தெரு, லிதொம்சில், என்றாள் மேரி.

லிதொம்சில்?

பிராக்கில் (Prague) பேராசிரியருக்கு தற்காலிக முகவரிதான் இருக்கிறது. அதைப் பிறர் தெரிந்துகொள்வதை அவர் விரும்புவதில்லை-

குரல் நடுங்க அந்தக் குள்ளமனிதர், உங்களை பிரேக்கிலுள்ள அப்பார்ட்மெண்டின் முகவரியைத் தரும்படி கேட்டேன் என்றார்.

எவ்வாறோ மேரியும் தன்நிலை இழந்திருந்தாள். நான் பிடிபட வசதியாக என்னுடைய வீட்டின், என்னுடைய சிறிய புகலிடத்தின் முகவரியை அவரிடம் கொடுத்தாள்.

5

ஆம். லிதொம்சில்தான் என்னுடைய நிரந்தர முகவரி இருக்கிறது. என் அப்பாவின் நினைவுகளும் என் அம்மாவும், அங்குதான் வசிக்கிறார்கள். அவ்வப்போது – சமயம் வாய்க்கிறபோதெல்லாம் – நான் பிராக்கிலிருந்து அந்த வீட்டிற்குப் பறந்துவிடுவேன். அம்மாவுடைய அந்தச் சிறிய அப்பார்ட்மெண்டில் வைத்துதான் நான் எழுதுவது வழக்கம். அதனால் தான் அதை நிரந்தர முகவரியாக்கி கொண்டேன். பிராக்கில் நான் நல்ல அறை எடுக்க முயற்சி செய்யவில்லை – பேச்சிலர்கள் அவ்வாறு எடுப்பது வழக்கம் – மாறாக வாடகைக்கு ஒரு சிறிய மாடியறை எடுத்துக்கொண்டு அதை எவ்வளவு ரகசியமாக வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு ரகசியமாக வைத்துக்கொண்டேன். அதற்குக் காரணம் இருந்தது. என்னுடையப் பெண் விருந்தினர்கள் மாறிக்கொண்டேயிருந்தார்கள். நான் விரும்பாத மனிதர்களுடைய சந்திப்புகளைத் தள்ளிப் போட முடிந்தது.

தற்போது நான் வசிக்கிற வீட்டில் இந்தக் காரணங்களால் தான் எனக்கு மரியாதை குறைவாகயிருந்தது. மேலும், லிதொம்சில் நான் தங்குகிறபோதெல்லாம் சொகுசான அந்த அறையைப் பலமுறை நண்பர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறேன். அங்குதான், வீட்டிலிருக்கிற மனிதர்களைத் துளிக்கூட தூங்கவிடாமல் அவர்களும் சந்தோசத்தை அனுபவித்தார்கள். இப்படியான என் ஊழல்களால் அங்கிருப்பவர்கள் என் மீது பனிப்போர் தொடுக்கும்படி ஆகிவிட்டது. அவர்களுடைய கமிட்டி கூடுகிறபோதெல்லாம் என்னைப் பற்றிய மோசமான அபிப்பிராயங்கள் உலவத் தொடங்கும். பிறகு ஒரு சமயம், என்னைப் பற்றி வீட்டு வசதி வாரியத்தில்கூட புகார் கொடுத்ததாக அறிந்தேன்.

அந்நேரத்தில் தான், கிளாராவிற்கு சிலாகோவிட்ஸிலிருந்து வேலைக்குச் சென்று வருவது அசௌகரியமாக இருந்தது. அதனால் சில பின்னிரவுகளை அவள் அங்கு கழிக்க நேர்ந்தது. அபூர்வமாகத்தான் அவள் அங்கு தங்குவது வழக்கம். முதலில் கூச்சப்பட்டுக் கொண்டே தான் தங்கினாள். ஒரே ஒரு உடையை மட்டும் விட்டுச் சென்றாள். பிறகு ஓரிரு உடைகள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பார்த்தால், என்னுடைய இரண்டு சூட்கேஸ்களும் மூலையில் கிடந்தன. சின்ன அறை ஒரு சீமாட்டியின் அறையாக மாறிவிட்டிருந்தது.

நான் உண்மையிலேயே கிளாராவை விரும்பினேன். அவள் அழகு. நாங்கள் வெளியில் செல்லும் போதெல்லாம் ஆட்கள் தலையைத் திருப்பி அவளைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும், அவளுக்கு என்னைவிட வயது குறைவாகத்தான் இருக்கும். அது மாணவர்களிடம் எனக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது. அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால் அவள் என்னோடுதான் இருக்கிறாள் என்பதைப் பிறர் தெரிந்துகொள்வதை மட்டும் நான் விரும்பவில்லை. எங்களைப் பற்றிய கிசு கிசுக்களும் வதந்திகளும் அப்பார்ட்மெண்டில் உலவிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்குப் பயமாக இருந்தது. மேலும், எவரேனும் வயதான என் வீட்டின் சொந்தக்காரரிடம் தொல்லை கொடுக்க ஆரம்பித்தால் – அவர் விழிப்பான ஆள் தான் - இருப்பினும் அவர் என்னைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை – கனத்த இதயத்தோடு என்னை தேடிக்கொண்டு வந்து, அவருடைய நற்பெயரைக் கருத்தில் கொண்டாவது நான் அவளை அனுப்பி விட வேண்டும் என்று கேட்டால் என்ன செய்வது என்று பயந்தேன்.

யார் வந்து கதவைத் தட்டினாலும் கண்டிப்பாகக் கதவைத் திறக்கக்கூடாது என்று கிளாராவிற்கு ஆணையிட்டிருந்தேன்.

ஒருநாள் வீட்டில் அவள் தனித்திருந்தாள். அன்று கடும் வெக்கை. அறையில் புழுக்கம் நிலவியது. படுக்கையறையில், ஏறக்குறைய நிர்வாணமாக, கூரையை ஆராய்ந்தபடி அவள் உலாத்திக் கொண்டிருந்தாள்.

திடீரென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

கிளாரா இதை எதிர்பார்க்கவில்லை. என்னிடம் அழைப்பு மணி எதுவும் இல்லாததால் வருபவர் எவராக இருந்தாலும் கதவைத்தான் தட்டியாக வேண்டும். கிளாரா சப்தத்தை அலட்சியப்படுத்தி விட்டு கூரையை மீண்டும் ஆராயத் தொடங்கினாள். ஆனால் தட்டல் நின்றபாடில்லை. மாறாக, சற்றும் அசாராமல் அது தொடர்ந்தது. கிளாராவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதட்டம் அதிகரித்தது. கதவுக்குப் பின்னால் நிற்கும் மனிதன் தன் ஜாக்கெட்டைத் திறந்து அவனுடைய அடையாள அட்டையைக் காட்டிவிட்டு, ஏன் கதவைத் திறக்கவில்லை? எதை மறைத்துக் கொண்டிருந்தாய்? நீ இந்த வீட்டைச் சார்ந்தவள்தானா? என்று விசாரணை செய்யத் தொடங்கிவிடுவானோ என்று கற்பனை செய்தாள். உடன் கொஞ்சம் குற்ற உணர்வுக்குள்ளானாள். கூரையில் நிலைத்திருந்த அவளது பார்வையைத் தழைத்து உடையை எங்கு விட்டேன் என்று யோசிக்கத் தொடங்கினாள். தட்டல் அதிகரித்துக்கொண்டேயிருந்ததால் குழப்பத்தில் அவளால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. என் ரெயின் கோட் தொங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்து அதை எடுத்து அணிந்துகொண்டாள். பின் கதவைத் திறந்தாள்.

விசாரணையை மேற்கொள்ளப்போகும் ஒரு கெட்ட முகம் அங்கிருப்பதற்குப் பதிலாக ஒரு குள்ளமனிதர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர் வணக்கம் தெரிவித்தார். பேராசிரியர் வீட்டில் இருக்கிறாரா? என்று கேட்டார்.

இல்லை, அவர் வீட்டிலில்லை.” “இது பெரிய ஏமாற்றம்தான். அவளைத் தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டார். விஷயம் என்னவென்றால், பேராசிரியர் என்னைப் பற்றி ஒரு மதிப்புரை எழுதியாகவேண்டும். எனக்கு அவர் உறுதி அளித்திருந்தார். மேலும், அது அவசரமும் கூட. நீங்கள் அனுமதித்தால் அவருக்கு ஒரு தகவல் விட்டுச் செல்வேன்.

கிளாரா அவருக்கு பேப்பரும் பென்சிலும் எடுத்துக் கொடுத்தாள். அன்று மாலை, மிகோலஸ் அலீஸின் கட்டுரையும் அதன் விதியும் என் கையிலேயே தங்கிவிட்டதையும் திரு.ஸ்ட்டுருஸ்கி மதிப்புரைக்காக என்னைத் தேடி மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடும் என்பதையும் அறிந்தபோது சோர்ந்து போனேன்.

6

மறுநாள், மேரி என்னிடம் வந்து, திரு.ஸ்ட்டுருஸ்கி எப்படி அவளை மிரட்டினார் என்றும், அவளுக்கு எதிராக எப்படி புகார் செய்ய முயன்றார் என்றும் விளக்கினாள். அவளுடைய குரல் நடுங்கியது. அழுது விடுவாளோ என்று தோன்றினாள். எனக்குக் கடும் கோபம் வந்தது. தற்சமயம் வரை என் கண்ணாம்பூச்சி விளையாட்டைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த என் காரியதரிசியின் உணர்வுகள் (என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்லமுடியும். எனக்கு அவள் உதவியதற்குக் காரணம் வெறும் விளையாட்டல்ல. என் மீதுள்ள பரிவு) காயப்படுத்தப்பட்டு விட்டதையும், நானே அவளுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்றும் அவள் தவறாகப் புரிந்துகொண்டாள். அத்தோடு என் புகலிடத்தை அவர் தெரிந்துகொண்ட விதமும் கிளாராவைப் பயமுறுத்தும் வகையில், என்னுடைய அறையின் கதவைத் தொடர்ச்சியாகத் தட்டியதையும் சேர்த்துக் யோசித்தபோது என்னுடைய கோபம் கட்டுக்கடங்காத வெறியாக மாறிற்று.

கடும் கோபத்தோடு உதட்டைக் கடித்துக்கொண்டு எப்படிப் பழிவாங்குவது என்று யோசித்தவாறு அறையில் நடமாடிக்­கொண்டிருந்தேன். அறையின் கதவைத் திறந்து கொண்டு திரு.ஸ்ட்டுருஸ்கி­ தோன்றினார்.

என்னைப் பார்த்தவுடன் அவருடைய முகத்தில் சந்தோசத்தின் கீற்று படரத் தொடங்கியது. வணக்கம் தெரிவித்துவிட்டு என்னை வரவேற்றார்.

என் கோபத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது என்று நான் யோசித்து முடிப்பதற்கு முன்னமேயே அவர் வந்து சேர்ந்திருந்தார்.

நேற்று அவர் விட்டுச் சென்ற தகவல் கிடைத்ததா என்று கேட்டார்.

நான் அமைதியாக இருந்தேன்.

அவருடைய கேள்வியை நினைவூட்டினார்.

கிடைத்தது,என்றேன்.

உங்களால் மதிப்புரை எழுத முடியுமா?

என் முன்நின்றுக் கொண்டிருந்த அவரைப் பார்த்தேன்: பிடிவாதம், பரிதாபம், மன்றாட்டம் எல்லாமிருந்தது. அவருடைய நெற்றியிலிருந்த சுருக்கத்தைப் பார்த்தபோது எரிச்சல் எழுந்தது. முரட்டுப் பிடிவாதத்தை வெளிப்படுத்துவதாக அது எனக்குத் தோன்றியது. அந்தச் சுருக்கத்தை ஆராய்நதபோது அது இரு புள்ளிகளுக்கு இடையிலிருக்கும் (ஒன்று அவருடைய கட்டுரை, மற்றொன்று என்னுடைய மதிப்புரை) நீண்டகோடு என்பதாகப் புரிந்துகொண்டேன். மேலும், கிறுக்குத்தனமான அந்தக் கோடு அவருக்கு ஒரு துறவு மனப்பான்மையை அளிப்பதாகவும் எனக்குத் தோன்றியது. சட்டென்று என்னுள் ஒரு கெட்ட எண்ணம் எழுந்தது.

நேற்று நடந்த விஷயங்களுக்குப் பிறகு நான் உங்களிடம் பேச முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்என்றேன் நான்.

புரியவில்லைஎன்றார்.

நடிக்காதீர்கள் அவள் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். எனக்கு ஒன்றும் தெரியாது என்று நீங்கள் சொல்ல முடியாது.

அந்தக் குள்ளமனிதர் எனக்குப் புரியவில்லை, என்றார். இம்முறை அது அழுத்தமாக ஒலித்தது.

என் குரலை இயல்பாக வைத்துக்கொண்டேன். பாருங்கள் திரு. ஸ்ட்டுருஸ்கி, நான் உங்களை குற்றம் சாட்டப் போவதில்லை. நானும் ஒரு ஸ்திரிலோலன்தான். உங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அம்மாதிரியான ஒரு சூழ்நிலையில் உங்களுடைய நிலையில் நான் இருந்தால்கூட, ஒரு ரெயின் கோட்டுக்குக் கீழே நிர்வாணமாக இருக்கும், அம்மாதிரியான அழகியை பார்த்தால் நானும்தான் கெடுக்க முயற்சிப்பேன்.

இது அநியாயம், என்றார் அவர். முகம் வெளுத்து விட்டது.

இல்லை, அதுதான் உண்மை.

அந்தப் பெண்ணா இதைச் சொன்னாள்?

அவள் என்னிடம் எதையும் மறைப்பதில்லை.

காம்ரேட் இது அநியாயம். நான் திருமணமானவன். எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள். குழந்தை இருக்கிறது... அவர் ஒரு அடி முன்னோக்கி நகர்ந்தார். நான் ஒரு அடி பின்னகர்ந்தேன்.

திரு.ஸ்ட்டுருஸ்கி உங்கள் தகுதிக்கு இது ரொம்ப இழுக்கு.

என்ன சொல்லுகிறீர்கள்? என்ன இழுக்கு?

ஸ்திரிலோலர்களுக்குத் திருமணமாகிவிட்டால் இம்மாதிரியான சூழ்நிலைகள் எரிச்சலூட்டத்தான் செய்யும்.

திரு.ஸ்ட்டுருஸ்கி அச்சுறுத்தும் தொனியில், வார்த்தையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள், என்றார்.

சரி. அப்படியே இருக்கட்டும், என்றேன் நான். திருமணமானவர்களுக்கு எப்போதும் ஒரு எரிச்சலூட்டும் சூழ்நிலை தேவைப்படுகிறது. சிலவேளைகளில் அது உதவியாகவும் இருக்கிறது. சிலவேளைகளில், மன்னித்துக் கொள்ளுங்கள் ஸ்திரிலோலேரே.. ஒரு வகையில் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. நான் முன்னமே சொன்னது போல் எனக்கு உங்கள்மீது வருத்தமில்லை. என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒரு விஷயம் தான் எனக்குப் புரியவில்லை. ஒருவருடைய காதலியைக் கெடுக்க முயற்சித்துவிட்டு அவரிடமே எப்படி ஒரு மதிப்புரையை எதிர்பார்க்கிறீர்கள்?

காம்ரேட் காட்சிக்கலையின் ஆசிரியர் டாக்டர்.கிளாசெக் தான் உங்களிடம் மதிப்புரை கேட்க சொன்னார். நீங்கள் கண்டிப்பாக இதை எழுதியாக வேண்டும்.

மதிப்புரையா? பெண்ணா? உங்களால் இரண்டையும் தேர்ந்தெடுக்கமுடியாது?

காம்ரேட், என்ன இது? ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்?, திரு.ஸ்ட்டுருஸ்கி கடும் கோபத்தில் கத்தத் தொடங்கினார்.

இதிலுள்ள வினோதமான விஷயம் என்னவென்றால், திடீரென்று நானும் திரு.ஸ்ட்டுருஸ்கி கிளாராவைக் கெடுக்க முயன்றதாக நம்ப தொடங்கினான். உடன் கொதித்தெழுந்து நானும் கத்தினேன். இதைச் சொல்வதற்கு..என்ன தைரியம்? இப்போதே நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவும் என் காரியதரிசியின் முன்பு.

திரு.ஸ்ட்டுருஸ்கிக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நின்றுகொண்டேன். அவர் குழம்பிப்போய் விட்டார். தடுமாறினார்.

சரி,கடும் பிரச்சாரத்திற்குப் பிறகு வெற்றியடைந்த ஜெனரலைப்போல் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன். பின் மேரியைப் பார்த்து, இனி அவருக்கு என்னுடைய மதிப்புரை தேவைப்படாது, என்றேன்.

சில கணங்களுக்குப் பிறகு, மெல்ல சிரித்தபடி, மேரி, சங்கோஜப் பட்டுக்கொண்டே, என்னிடம் எதற்காக அந்த மதிப்புரையை எழுதமாட்டேன் என்கிறீர்கள்? என்று கேட்டாள்.

டியர், எதற்காக என்றால் அவர் எழுதி உள்ளது எல்லாம் வெறும் குப்பை.

பிறகென்ன, உங்கள் மதிப்புரையில் அதைக் குப்பை என்று சொல்லிவிட வேண்டியதுதானே?

எதற்கு எழுதவேண்டும்? எதற்காக ஆட்களின் வெறுப்பை நான் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்?

மேரி என்னைப் பார்த்து விஷமமாகச் சிரித்தாள். அப்போது, கதவைத் திறந்துகொண்டு கையை உயர்த்தியபடி, திரு.ஸ்ட்டுருஸ்கி உள்ளே நுழைந்தார். குரல் நடுங்க, அது நானில்லை, நீங்கள்தான். நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்கபோகிறீர்கள் என்று கத்திவிட்டு மீண்டும் மறைந்துவிட்டார்.

பகுதி 2 வாசிக்க இங்கே செல்லவும்

--------------------------

* செக் தேசத்து மது – ஒருவகை ப்ளம் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பிராந்தி.

** மிகோலஸ் அலஸ் – 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல செக்கோஸ்லோவிய ஓவியர்.

ஆங்கில மூலம் இங்கே

http://en.wikipedia.org/wiki/Milan_Kundera

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 comments:

Post a Comment