Showing posts with label ஆண்டன் பாவ்லொவிச் செகாவ். Show all posts
Showing posts with label ஆண்டன் பாவ்லொவிச் செகாவ். Show all posts

Thursday, March 31, 2011

நாடகக்காரி - ஆண்டன் செகாவ்

தமிழில் - புதுமைப்பித்தன்

     அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில்லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ் என்பவனுக்குத்தான் அவள் வைப்பாக இருந்து வந்தாள்.

     அன்று அவளும் கோல்ப்பக்கோவும் முன்னறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். Anton_Chekhov வெயில் சகிக்க முடியவில்லை. கோல்ப்பக்கோவ், அப்பொழுதுதான் சாப்பிட்டுவிட்டு மிகவும் மட்ட ரகமான போர்ட் ஒயின் பாட்டிலைக் காலி செய்ததினால், சிடுசிடு என்று பேசிக் கொண்டிருந்தான். இருவருக்குமே அன்று பேச்சில் லயிப்பில்லை. வெயில் தணிந்தால் வெளியே சென்று காற்று வாங்கிவிட்டாவது வரலாம் என்ற நினைப்புத்தான் இருவருக்கும்.

     திடீரென்று வெளிக்கதவை யாரோ படபடவென்று தட்டி உடைத்தனர். கோல்ப்பக்கோவ், பக்கத்து நாற்காலியில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டை எடுத்துக்கொண்டு, வேறு அறைக்குச் செல்லலாம் என்று எழுந்தான். அவன் முகக்குறி, "வெளியில் யார்?" என்று பாஷாவைக் கேட்பது போல் இருந்தது.

     "தபால்காரன், அல்லது வேறே யாராவது நம்ம குட்டிகள்" என்றாள் பாஷா.

     தபால்காரனாவது அல்லது பாஷாவின் ஸ்திரீ நண்பர்களாவது தன்னை அங்கு கண்டுகொள்வதை, கோல்ப்பக்கோவ் பொருட்படுத்தவில்லை. ஆனால், எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருப்பதற்காகவே, துணிமணிகளைச் சேர்த்து வாரிக்கொண்டு, மற்றொரு அறைக்கு சென்றான்.

     பாஷா முன் பக்கம் சென்று வெளிக் கதவைத் திறந்தாள்.

     அவள் கதவைத் திறந்ததும், எதிரில் தான் முன்பின் அறியாத அந்நிய ஸ்திரீ நிற்பதைக் கண்டு, ஆச்சரியத்துடன் பார்த்தாள். பாஷாவின் முன் நின்றவள் வாலிப நங்கை; அவளுடைய உடையிலும் நின்ற நிலையிலும் குடும்ப ஸ்திரீ என்று ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

     வந்தவள், முகம் வெளிறிப் போயிருந்தது; 'மூசுமூசு' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். அவள் நெடுந்தூரம் ஓடி வந்தவள் போல் தென்பட்டாள்.

     "என்ன வேண்டும்?" என்றாள் பாஷா.

     வந்தவள் உடனே பதில் சொல்லவில்லை. முன் ஒரு அடி எடுத்து வைத்து அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்பு சோர்ந்தவள் போல உள்ளே வந்து உட்கார்ந்தாள்; அவளது வெளிறிய உதடுகள் பேசுவதற்கு முயன்று அசைந்தன. ஆனால் அவளால் பேச முடியவில்லை.

     நெடு நேரம் கழித்து வந்தவள் தனது சிவந்த கண்களால் பாஷாவின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள். பின்பு, "என் புருஷன்; - அவர் இங்கு வந்தாரா?" என்றாள்.

     "புருஷனா?..." என்று ஈனஸ்வரத்தில் எதிரொலித்தாள் பாஷா. அவளது கைகளும் கால்களும் குளிர்ந்து விறைத்தன.

     "எந்த புருஷன்?" என்றாள் பாஷா மறுபடியும்.

     "என் புருஷன் நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்" என்றாள் அந்த ஸ்திரீ.

     "தெ...ரி...யா...து! அம்மா! நான் ஒருவருடைய புருஷனையும் பார்க்கவில்லை" என்றாள் பாஷா.

     ஒரு வினாடி இருவரும் மௌனமாக இருந்தனர். அந்த அந்நிய ஸ்திரீ, தனது கைக்குட்டையால் முகத்தைத் துடைத்து, விம்மிக்கொண்டுவரும் அழுகையைக் கைக்குட்டையால் அடக்க முயன்றாள். அவளது முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பாஷாவிற்கும் பயம் அதிகரித்தது. கல்லாய்ச் சமைந்தது போல் நின்றாள்.

     "அவர் இங்கே இல்லையென்று சொல்லுகிறாயாக்கும்?" என்றாள் அவள் மறுபடியும். இப்பொழுது அவளது அழுகை அடங்கிவிட்டது; குரல் கணீரென்றது. உதட்டில் ஒருவிதமான புன்சிரிப்பு நிலவியது.

     "நீங்கள் யாரைப் பற்றிக் கேட்கிறீர்கள்? ஒன்றும் தெரியவேயில்லையே!" என்றாள் பாஷா.

     "சீ! நீ ஒரு மோசமான தரித்திரம் பிடித்த கழுதை!" என்றாள் வந்தவள்.

     அவளது முகக் குறி பாஷாவை எப்படி வெறுக்கிறாள் என்பதைக் காண்பித்தது.

     "நீ... நீ ஒரு மோசமான கழுதை! கடைசியாக உன் மூஞ்சிக்கி நேரே இதைச் சொல்லுவதற்குச் சமயம் கிடைத்ததே!"

     பாஷாவிற்குப் புதிதாக வந்த ஸ்திரீ சொல்லுவது மனத்தில் தைத்தது. உண்மையிலேயே தான், மோசமாக, பார்ப்பதற்கு விகாரமாக இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. உப்பிய கன்னமும், அம்மை வடு நிறைந்த முகமும், என்ன சீவினாலும் பணியாது முகத்தில் வந்து விழும் தலை முடியும், பார்ப்பதற்கு விகாரமாகத்தான் இருக்கும் என்று அவள் மனத்தில் பட்டது. இதனால் வெட்கினாள். சிறிது ஒல்லியாக, நெற்றியில் வந்து விழாத கூந்தலுள்ளவளாக, முகத்தில் நிறைய பவுடர் அப்ப வேண்டாதவளாக இருந்தால், தானும் ஒரு குடும்ப ஸ்திரீ போல் பாவனை செய்ய முடியும் என்று நினைத்தாள். எதிரில் நிற்கும் அந்நிய ஸ்திரீயின் முன்பு நிற்கவும் வெட்கப்பட்டாள் பாஷா.

     "என் புருஷன் எங்கே! அவர் இங்கு இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையே கிடையாது. ஆனால் ஒன்று சொல்லுகிறேன், கேள். பணம் காணாமற் போய்விட்டது. அதற்காக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவரைக் கைது செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். இவ்வளவும் உன் வேலைதான், தெரிந்ததா?" என்றாள் கோல்ப்பக்கோவின் மனைவி.

     அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து அங்குமிங்கும் உலாவினாள். அவளைப் பார்ப்பதற்கே பாஷாவிற்குப் பயமாக இருந்தது. அவளுக்கு இன்னதென்றே புரியவில்லை.

     "இன்று அவரைக் கண்டுபிடித்து ஜெயிலில் அடைத்து விடுவார்கள்!" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ். அதை நினைக்கும் பொழுதே அவளுக்குத் துக்கமும் கோபமும் நெஞ்சையடைத்தன. "அவரை இந்தக் கதிக்கு ஆளாக்கினது யார்? மோசமான மூதேவி! பண ஆசை பிடித்த ஜடமே!". அவள் மூக்கும் உதடும் தாங்க முடியாத துர்நாற்றத்தை ஏற்றதுபோல நெளிந்து மடிந்தன. "எனக்கு வேறே விதியில்லை! கேட்கிறாயா? எனக்கு வேறே வழியில்லை. இப்பொழுது உன் பக்கத்திலேதான் பலம் இருக்கிறது. ஆனால் உதவியில்லாத என் குழந்தை குட்டிகளைப் பதுகாக்கத் தெய்வம் இருக்கிறது! அவருக்குத் தெரியும். அவர் உனக்குத் தகுந்த கூலி கொடுப்பார்! அனாதை விட்ட கண்ணீர் நிலத்தில் மறையாது. காலம் வரும். அப்பொழுது நீ என்னை நினைப்பாய்!"

     பிறகு அந்த அறையில் நிசப்தம் குடிகொண்டது. ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ் கையை நெறித்துக்கொண்டு அறையில் அங்கும் இங்கும் நடந்தாள். பாஷா, பயத்தால் அப்படியே விறைத்துப் போய், தலையில் அப்பொழுதே இடிவிழுமோ என்று நடுங்கி நின்றாள்.

     "எனக்கு ஒன்றும் தெரியாது அம்மா!" என்றாள் பாஷா. இந்தக் கோடையிடி போன்ற சூடான வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. மாலை மாலையாகக் கண்ணீர் வடித்து, குலுங்கிக் குலுங்கிக் கதறினாள்.

     "புளுகாதே! எனக்கு எல்லாம் தெரியும்! ரொம்பக் காலமாகத் தெரியும்! போன மாசம் முழுவதும் இங்கேதான் வந்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியும்" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்; அவளது கண்கள் தணல் வீசின.

     "ஆமாம்! அதற்கென்ன? எத்தனையோ பேர் வருகிறார்கள்! நான் என்ன கையைப் பிடித்தா இழுக்கிறேன்! அது அவரவர்கள் இஷ்டம்!" என்றாள் பாஷா.

     "நான் சொல்வதைக் கேள்! ஆபீசில் பணத்தைக் காணவில்லை. அவர் பணத்தைத் திருடிவிட்டார். தரித்திரம் பிடித்த உன் மூஞ்சிக்காக அவர் ஆபீசிலே குற்றத்தைச் செய்திருக்கிறாரே! உனக்கு நியாயம், கட்டுப்பாடு, ஒழுங்கு ஒன்றும் கிடையாது. உன் வாழ்க்கையே மற்றவர்களைக் கஷ்டப்படுத்டுவதுதான். ஆனால் கொஞ்சமாவது இரக்கம் இல்லாமல் உன் நெஞ்சு வெந்து உலர்ந்து போயிருக்காது! அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் உண்டு. அவரைத் தண்டித்து நாடு கடத்திவிட்டால் (ரஷ்யாவில் ஜாரரசன் ஆட்சியில் திருட்டுக் குற்றத்திற்காகவும் ஸைபீரியா என்ற குளிர்ப் பாலைவனத்திற்கு நாடு கடத்திவிடுவார்கள்) அவர் குழந்தைகளும் நானும் தெருவிலே கிடந்து பட்டினியால் மடிய வேண்டியதுதான். அதை உணர்ந்து கொள்! அவர்களை இந்தக் கதியிலிருந்து தப்புவிக்க ஒரே வழியிருக்கிறது. இன்றைக்கு நான் 900 ரூபிள் (ருஷிய நாணயம்) சம்பாதித்தால் அவரை விட்டுவிடுவார்கள். 900 ரூபிள்கள் தான்!"

     "என்ன, 900 ரூபிள்களா?... எனக்குத் தெரியாது... எடுக்கவில்லை" என்றாள் பாஷா.

     "நான் உன்னிடம் 900 ரூபிள்கள் கேட்க வரவில்லை, உன்னிடம் பணமில்லை என்று எனக்குத்  தெரியும்... மேலும் உன் காசு எனக்கு வேண்டாம்! நான் கேட்பது வேறு! உன்னைப் போன்ற பெண்களுக்கு ஆண் பிள்ளைகள் விலையுயர்ந்தவற்றைப் பரிசளிப்பார்கள். என் புருஷன் உனக்குக் கொடுத்தவைகளை மட்டிலும் திருப்பிக் கொடுத்துவிடு!"

     "அம்மா! உன்னுடைய புருஷன் எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லை" என்று பாஷா கதறினாள். அப்பொழுதுதான் அவளுக்குச் சிறிது புரிய ஆரம்பித்தது.

     "கொடுத்த பணம் எல்லாம் எங்கே? அவர் பணத்தையும், என் பணத்தையும் எங்கு கொண்டு தொலைத்தார்? கேள்! உன் காலில் விழுந்து பிச்சையாகக் கேட்கிறேன். கோபத்திலே கண் தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னித்துக்கொள். நீ என்னை வெறுப்பாய்; அது எனக்கு தெரியும். ஆனால் என் நிலைமையை யோசித்து, கொஞ்சம் இரங்கு. காலில் விழுந்து கேட்கிறேன், அவர் கொடுத்த சாமான்களை மட்டும் திருப்பிக் கொடுத்துவிடு."

     "உம்" என்று தோளை குலுக்கினாள் பாஷா.

     "உனக்குக் கொடுக்கறதில் சந்தோஷந்தான். கடவுள் சாட்சியாகச் சொல்லுகிறேன், உன் புருஷன் எனக்கு வெகுமதி கொடுத்தது கிடையாது. நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுகிறேன். என்னை நம்பு; இருந்தாலும் நீ சொல்வதிலும் கொஞ்சம் உண்மையிருக்கிறது. அவர் ஒன்றிரண்டு சாமான்களை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவைகளை வேண்டுமானால் கொடுத்து விடுகிறேன்," என்றாள் பாஷா.

     உடனே மேஜையைத் திறந்து, அதிலிருந்து ஒரு ஜதை தங்க வளையலையும் ஒரு சிவப்புக்கல் பதித்த மோதிரத்தையும் எடுத்தாள்.

     "இந்தா!" என்று வந்தவளிடம் அவற்றைக் கொடுத்தாள்.

     கோல்ப்பக்கோவ் மனைவியின் முகம் சிவந்து, உதடுகள் துடித்தன. பாஷாவின் நடத்தையால் அவளுக்குக் கோபம் வந்தது.

     "என்னிடம் எதைக் கொடுக்கிறாய்? நான் உன்னிடம் தானம் கேட்க வரவில்லை. நியாயமாக உனக்குப் பாத்தியதை இல்லாத, உன் சந்தர்ப்பத்தை வைத்து அவரிடம் கசக்கிப் பிடுங்கிய நகைகளைக் கேட்கிறேன். அன்றைக்கு வியாழக்கிழமை, என் புருஷனுடன் துறைமுகத்திற்கு வந்தாயே; அப்பொழுது நீ போட்டுக்கொண்டிருந்த விலையுயர்ந்த புரூச்சுகளும் கை வளைகளும் எங்கே? ஒன்று மறியாதவள் போல் என்னிடம் பாசாங்கு பண்ணாதே! கடைசியாகக் கேட்கிறேன். அந்த நகைகளைக் கொடுப்பாயா, மாட்டாயா?"

     "நல்ல வேடிக்கைக்காரியாக இருக்கிறாய்!"

     இப்பொழுது பாஷாவிற்கும் சிறிது கோபம் வந்தது.

     "உனது நிக்கோலாய் பெட்ரோவிச்சிடமிருந்து ஒரு நகையாவது நான் பெற்றதில்லை. அவன் வரும்பொழுதெல்லாம் பட்சணந்தான் வாங்கி வருவான்."

     "பட்சணமா?" என்று சிரித்தாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.

     "வீட்டிலே குழந்தைகளுக்கு வயிற்றிற்கு ஒன்றும் கிடையாது. பட்சணமா உனக்கு; நன்றாக இருக்கிறது? அவர் கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்க முடியுமா, முடியாதா?"

pudu5     பதில் ஒன்றும் பெறாததினால், அவள் மௌனமாக உட்கார்ந்து யோசித்தாள். கண்கள் வெறிச்சென்று பார்த்தபடி இருந்தன.

     "இனி என்ன செய்வது? நான் 900 ரூபிள் சம்பாதிக்காவிட்டால் அவர் கதி அதோகதிதான்... பின்... குழந்தைகள், நான்... எல்லோருக்கும் அந்தக் கதிதான்! அவளைக் கொல்லட்டுமா? காலில் விழட்டுமா?" என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.

     அவளுக்கு அழுகை பொருமிக்கொண்டு வந்தது. கைக்குட்டையை எடுத்து வாயை அமுக்கிக் கொண்டாள்.

     விம்மல்களுக்கிடையே, "நான் உன் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீதான் என் புருஷனை நாசப்படுத்தி விட்டாய். அவரைக் காப்பாற்று! அவர் மீது இரக்கமில்லையானால் இந்தக் குழந்தைகளுக்காவது கொஞ்சம் தயவு பண்ணு! குழந்தைகள் உனக்கு என்ன செய்தன?"

     குழந்தைகள் ஆதரவற்றுப் பசியால் தெருவில் நின்று கதறுவதுபோல் பாஷாவின் மனக்கண் முன்பு தோன்றியது. குழந்தைகளை நினைத்ததும் பாஷாவிற்கும் துக்கம் வந்தது. அவளும் விம்மியழுதாள்.

     "என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்? நான் மோசமானவள், நிக்கோலாய் பெட்ரோவிச்சை நாசப்படுத்தியதாகச் சொல்லுகிறாய்! சத்தியமாக, தெய்வத்தின் மீது ஆணையாக சொல்லுகிறேன் - அவரிடமிருந்து நான் ஒன்றும் பெற்றது கிடையாது. எங்கள் நாடகக் கம்பெனியில் ஒரு பெண்ணைத்தான் பணக்காரன் ஒருவன் வைத்திருக்கிறான்; மற்றவர்கள் எல்லாருக்கும் தினசரி சாப்பாட்டுக்கே கஷ்டம்! நிக்கோலாய் பெட்ரோவிச் படித்தவர், மரியாதைக்காரர், பெரிய மனிதர். அதனால் அவரை வரவேற்றேன். பெரிய மனிதர்கள் எல்லாருக்கும் வரவேற்பளிப்பது எங்கள் கடமை."

     "நான் அந்த நகைகளைக் கேட்கிறேன். அவற்றைக் கொடு. நான் உன் காலில் விழுந்து கண்ணீர் விடுகிறேனே. சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டுமானாலும் செய்கிறேன்!"

     அவள் குனிவதைக் கண்டு பாஷா பயந்து வீரிட்டாள். இந்தத் தெய்வம் போன்ற ஸ்திரீ நாடகக்காரியின் காலில் விழுவதால் பன்மடங்கு உயர்ந்து விளங்குவதாக மனத்தில் நினைத்தாள்.

     "சரி இந்தா நான் கொடுத்து விடுகிறேன்!" என்று பாஷா கண்ணைத் துடைத்துக் கொண்டு மேஜையண்டை ஓடினாள்.

     "இந்தா! ஆனால், இவற்றை நிக்கோலாய் பெட்ரோவிச் கொடுக்கவில்லை! வேறொரு பெரிய மனிதர் தந்தார்!" என்று மேஜையுள்ளிருந்த வைர புரூச்சையும், பவள மாலையையும், மோதிரம், கை வளையல் முதலியவற்றையும் எடுத்துக்கொடுத்தாள்.

     "இந்தா எல்லாவற்றையும் எடுத்துக் கொள்! ஆனால் இவைகளை உன் புருஷன் கொடுக்கவில்லை. இவைகளை எடுத்துக் கொண்டு போய்ப் பணக்காரராகுங்கள்!" பாஷாவிற்கு, அவள் 'காலில் விழுவேன்' என்றதில் பெருத்த கோபம். "நியாயமாக நீ அவர் மனைவியாக இருந்தால், இவைகளை நீயே கட்டாயம் எடுத்துக்கொண்டு போக வேண்டும்! நீயே வைத்துக்கொள்ள வேண்டும்! அப்படித்தான்! நீயே வைத்துக்கொள்ள வேண்டும்! நான் அவரைக் கூப்பிடவில்லை. அவராக வந்தார்!"

     கண்களில் பார்வையை மறைக்கும் கண்ணீர் வழியாகக் கொடுக்கப்பட்ட நகைகளைக் கவனித்து, "இன்னும் பாக்கியிருக்கிறது. இங்கிருப்பவை 500 ரூபிள் கூடப் பெறாது!" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.

     உடனே பாஷா மேஜையிலிருந்த தங்கக் கைக் கடிகாரம், சிகரெட் பெட்டி, பொத்தான்கள் எல்லாவற்றையும் எடுத்து எறிந்து, "இவ்வளவுதான்! இனி வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது. வேண்டுமானால் சோதனை போட்டுக் கொள்ளு!" என்றாள்.

     ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ், ஒரு பெரிய பெருமூச்செறிந்து, நகைகளை எல்லாம் கைக்குட்டையில் சேர்த்து முடிந்து கொண்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாது, வெளியே சென்று விட்டாள். உள் கதவு திறந்தது. கோல்ப்பக்கோவ் அங்கு வந்தான். அவன் முகம் வெளிறியிருந்தது. கசப்பு மருந்தை விழுங்கியவன் போல் தலையை அசைத்துக் கொண்டு நின்றான். அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது.

     "நீ எனக்கு என்ன கொடுத்தாய்? எப்பொழுதுதான் வெகுமதி கேட்பதற்கு அனுமதித்தாய்" என்று பாஷா அவன் மீது சீறி விழுந்தாள்.

     "வெகுமதி! அதைப் பற்றி இப்பொழுதென்ன? தெய்வமே! உன் காலிலா அவள் விழ வேண்டும்!"

     "நீ எனக்கு என்ன வெகுமதி கொடுத்தாய் என்று கேட்கிறேன்" என்று பாஷா மறுபடியும் சீறினாள்.

     "தெய்வமே! பெருமையையும் மதிப்பையும் விட்டுவிட்டு இவள் காலில் விழவா! நானல்லவோ அதற்குக் காரணம். இவ்வளவையும் நான் அனுமதித்தேனே!"

     கோல்ப்பக்கோவ், தன் தலையைக் கையில் பிடித்துக் கொண்டு, வேதனையால் முனகினான்.

     "இதற்கு மன்னிப்பு உண்டா? என்னால் என்னை மன்னித்துக் கொள்ள முடியாது. கிட்ட வராதே! மூதேவி" என்று பாஷாவை உதறித் தள்ளிவிட்டு, "உன் காலிலா விழ வேண்டும்! உன் காலில்! ஐயோ தெய்வமே! உன் காலில்" என்று முனகிக்கொண்டே, அவசர அவசரமாக உடுத்திக் கொண்டு, கதவைத் திறந்து வெளியேறினான்.

     பாஷா கீழே விழுந்து புரண்டு ஓலமிட ஆரம்பித்தாள். அவசரத்தில் முட்டாள்தனமாக நகைகளைக் கொடுத்தற்காக வருத்தப்பட்டுக் கொண்டாள். அவளை அவள் மனமே இடித்தது. மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி தன்னைக் காரணமில்லாது அடித்தது ஞாபகம் வந்தது. அதை நினைத்துக் கொண்டும் இன்னும் அதிகமாக ஓலமிட்டு
அழுதாள்.

***

ஆங்கிலத்தில் படிக்க இங்கே

Saturday, March 26, 2011

பரிசுச்சீட்டு -ஆண்டன் பாவ்லொவிச் செகாவ்

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன்

இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான்.

மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி 'இன்னிக்குப் பேப்பரைப் பார்க்கவே விட்டுட்டது' anton_pavlovich_chekhov என்றாள். 'குலுக்கல் முடிவு வந்திருக்கா பாருங்க.'

'ஆமா, இருக்கு,' என்றான் டிமிட்ரிச். 'ஆனா உன் சீட்டு காலாவதியாவல்லியா?'

'இல்லல்ல, வட்டியெடுக்க நான் செவ்வாயன்னிக்குதானே போயிருந்தேன்...'

'நம்பர் என்ன?'

'வரிசை 9499 - எண் 26'

'சரி... பாத்திர்லாம். 9499 அப்புறம் 26...'

பரிசுக் குலுக்கல் அதிர்ஷ்டத்தில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. பொதுவாக குலுக்கல் முடிவுகளை அவன் சட்டை செய்வதும் கிடையாது. ஆனாலும், இப்போது வேறு செய்ய எதுவும் இல்லாததாலும், கையில் பேப்பர் இருக்கிறதாலும், பரிசு பெற்ற எண் வரிசையில் விரலைக் கீழ்நோக்கி ஓட்டினான். அவனது அசிரத்தையைக் கிண்டலடிக்கிற மாதிரி, மேலிருந்து இரண்டாவது வரியிலேயே அவன் கண்கள் சிக்கிக் கொண்டன. 9499! அசந்து விட்டான் அவன். தன் கண்ணையே நம்ப இயலாமல் கை நடுங்கி மடியில் விழுந்தது செய்தித்தாள். மேற்கொண்டு எண்ணைப் பார்க்க முடியவில்லை. உள்ளே சிலீரென யாரோ தண்ணியைக் கொட்டினாப் போல ஒரு குளிர். வயிற்றில் கிச்சு கிச்சு. இதமான அபாரமான தளும்பல்.

''அடி மாஷா 9499 இருக்கு'' மெல்லச் சொன்னான்.

வெலவெலத்துப்போன திகைப்பான அந்த முகத்தை அவன் பெண்டாட்டி பார்த்தாள். அவர் முகம் பொய் பேசினாப்போல இல்லை.

''9499-தா?'' மேசை விரிப்பைத் தவற விட்டபடி அவள் முகம் வெளிறக் கேட்டாள்.

''ஆமாண்டி ஆமா. நிசம்மா, இருக்குடி இருக்கு!''

''சரி, நம்ம நம்பர்... அது இருக்கா பாருங்க...''

''ஆமாமா. நம்ம சீட்டின் நம்பர், அதுவும்... ஆனால், இரு. இல்லடி... பார்க்கறேன் பார்க்கறேன். ஆனாக்கூட நம்ம வரிசை - அது இருக்கு. அத்தோட... புரியுதா?...''

பரந்த, அர்த்தம் இல்லாத அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி மனைவியைப் பார்த்தான் டிமிட்ரிச். ஜோரான விளையாட்டு சாமானைப் பார்த்ததும் குழந்தை அப்படித்தான் சிரிக்கும். பெண்டாட்டியும் புன்னகை சிந்தினாள். அவள் வாங்கிய வரிசையில் பரிசு வந்திருக்கிறது, என்றாலும் குறிப்பிட்ட அவள் எண்ணுக்குப் பரிசு பற்றித் தேட அவசரப்படவில்லை அவன். ஒராளைக் கிண்டலும் கவலையுமான காத்திருப்புக்கு உட்படுத்தி அதிர்ஷ்டம் சார்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தினா, என்ன சுகம். என்ன சுவாரஸ்யம்...

ஒரு நீண்ட மெளனம். ''நம்ம வரிசைக்குப் பரிசு'' என்றான் டிமிட்ரிச். ''ஆக நாம பரிசு அடிக்க வாய்ப்பு இருக்கு. ஒரு யூகம்தான்... ஆனா அந்த வாய்ப்பு... அது இருக்கத்தான் இருக்கு!''

''நல்லதுய்யா, மேல பாரும்...''

''பொறுமை1 நாம ஏமாற இன்னும் நிறைய நேரம் இருக்கு. மேலயிருந்து ரெண்டாவது வரி - ஆக பரிசு 75000. அது வெறும் துட்டு இல்லடி. சக்தி! மூலாதாரம்! இதோ பட்டியலைப் பாத்திர்றேன். ஆ இதோ 26! - அதானா? நாம நெஜமா ஜெயிச்சா எப்பிடி இருக்கும்?''

புருஷனும் பெண்டாட்டியும் ஒருத்தரை ஒருத்தர் மெளனமாய்ப் பார்த்தபடி புன்னகை செய்து கொண்டார்கள். ஜெயிக்கிற அந்த சமாச்சாரமே அவர்களைத் திக்குமுக்காட்டியது. அந்த 75000 துட்டு அவர்களுக்கு எதற்கு? அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் வாங்க, எங்கேயெல்லாம் போய்வர... என்றெல்லாம் அவர்கள் பேசவில்லை. கனவு கூடக் காணவில்லை. வெறும் 9499 என்ற எண், மற்றும் 75000 என்ற எண் அவற்றை மாத்திரமே மனதில் நினைத்துப் பார்த்தார்கள். என்னவோ, அந்த எண்கள் கொண்டு வரப் போகிற சந்தோஷங்களை, அதன் விரிவான சாத்தியங்களை அவர்கள் நினைக்கவே இல்லை.

டிமிட்ரிச் செய்தித்தாளைக் கையில் பிடித்தபடி அறையில் மூலைமுதல் மூலைவரை நடை பயின்றான். மெல்ல நிதானப்பட ஆரம்பித்தபோதுதான் மெல்ல அவனில் கனவுகாண ஆரம்பித்தான்.

''பரிசு மட்டும் விழுந்திட்டிருந்தா...'' என்றான். ''வாழ்க்கையே புதுசா ஆயிரும். எல்லாமே பூரா மாறிப்போகும். பரிசுச் சீட்டு உன்னிது. என்னிதா இருந்தா, மொதல் காரியமா - ஒரு 25000 எடுத்து பண்ணைநிலம் நீச்சுன்னு போடணும். உடனடிச் செலவுன்னு ஒரு பத்தாயிரம். புது கட்டில், பீரோ, மேஜை... அப்புறம் உல்லாசப் பயணம்... கடன் கிடன் அடைக்க, இந்த மாதிரி. மிச்ச 40000 ஒரு வங்கில போட்டுட்டா வட்டி கிடைக்கும்...''

''ஆமாம், ஒரு பண்ணை - அது நல்ல விஷயம்...'' உட்கார்ந்தவண்ணம் மடியில் கை வைத்தபடி அவள் பேசினாள்.

''துலா அல்லது ஓர்யோல் மாகாணப் பக்கம் எங்கியாவது... இப்ப சத்திக்கு நமக்கு கோடைவாசஸ்தலம்லாம் தேவையிராது. நம்ம தங்காட்டியும், வாடகை கீடகைன்னு வருமானம் வருமில்ல?''

வீட்டில் மாட்டியிருக்கும் அழகழகான புகைப்படங்களை மனசில் பார்த்தான் அவன். முதல் படத்தை விடவும் அடுத்தது சூப்பர் என்கிற தினுசில், எல்லாத்திலும் அவன் அத்தனை அம்சமா ஆரோக்கியமா கொழுகொழுன்னு இருந்தான். அப்பிடி நினைக்கவே நல்ல வெதுவெதுப்பு. அட உடம்பே சூடாயிட்டது.

அந்தக் கோடை இரவில் சில்லிட்டுப் போன சூப் அப்போதுதான் குடித்து முடித்திருந்தான். மனசினால் அவன் இருந்த இடமே வேறு - நதிக்கரையன்றின் கதகதப்பான மணலில் மல்லாக்கக் கிடக்கிறான். அல்லது தோட்டத்து எலுமிச்சை மரத்தடி.. இப்போதும் என்ன வெக்கை! பையனும் பெண்ணும் அருகே மண்ணை அளைந்தபடியோ, அல்லது பச்சைப்புல்தரையின் சிறு பூச்சிகளைப் பிடித்தபடியோ. இனிமையான அரைத்து¡க்கம். ஒரு யோசனையுங் கிடையாது. இன்னிக்கு அலுவலகம் போக வேணாம் என்கிறாப்போல அவிழ்த்துவிட்ட நிலை. இன்னிக்கு மாத்திரங் கூட இல்லை. நாளை - நாளைமறுநாள் கூட போக வேண்டியதில்லை. சும்மா கெடந்துருள அலுத்துப் போச்சா, வைக்கப்படப்பு பக்கம் போகிறான். காடுகளில் குடைக்காளான் தேடிப் போகிறான். வலைவீசி சம்சாரிகள் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறதை வேடிக்கை பார்க்கிறான். சூரியன் அடையுதா, துண்டும் சோப்பும் எடுத்துக்கறான்... குளியல் மறைவுக்குள் புகுந்து கொள்கிறான். நிதானமா உடைகளைக் கழற்றிக் கொள்கிறான். மெதுவா நெஞ்சை விரல்களால் நீவிக்கொண்டே தண்ணீரில் இறங்குகிறான். நுரைத்து வழியும் சோப்பு. சிறு மீன்கள் பதறி விலகினாப் போல... நீர்க்கொடிகள் லேசாய் ஆடுகிறாப் போல. குளியலைத் தொடர்ந்து, தேநீர். கூட கடித்துக் கொள்ள பால் மற்றும் கிரீம் பிஸ்கெட்டுகள். அதற்கப்பால் ஒரு உலாவல், அல்லது பக்கத்து¡ட்டு மனுஷாளோடு அரட்டை.

''ஆமாமா, பண்ணை வாங்கறது நல்ல விஷயம்'' என்றாள் பெண்டாட்டி. பார்க்கவே அவளும் கனவுலோகத்தில் மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இவான் டிமிட்ரிச் இலையுதிர் காலம் மற்றும் அதன் மழை பற்றி எண்ணமிட்டான். குளிரான அந்த மாலைப்பொழுதுகள். அதைத் தொடரும் இந்தப் பக்கத்து வேனில். இக்காலங்களில் அவன் தனது தோட்டத்தில் மற்றும் நதிப்பக்கமாக அதிகம் நடந்து உடற்பயிற்சி கொள்ள வேண்டியதிருக்கும். அப்போதுதான் உடம்பு முழுசும் தகிப்படங்கும். அதையடுத்து பெரிய டம்ளரில் ஓட்கா மது. சாப்பிட உப்புபோட்ட காளான். பொடிசு பொடிசா நறுக்கிய வெள்ளிரிப் பிஞ்சு... திரும்ப இன்னொரு டம்ளர்... சமையல் அறைப் பக்கத்துச் சிறு தோட்டம். பிள்ளைகள் அங்கிருந்து கேரெட்டோ முள்ளங்கியோ மண்வாசனையுடன் பிடுங்கி வருகிறார்கள். இவன் நல்லாக் கால்நீட்டி சோபாவில் படுத்தபடி, படம்லாம் போட்ட பத்திரிகைகளைப் புரட்டுதல். அதாலேயே முகத்தை மூடிக்கொண்டு இடுப்பு இறுக்கங்களைத் தளர்த்திக்கிட்டு ஹாயான குட்டித் து¡க்கம்.

வேனில் ஓய, வருகிறது மேக மூட்டமான பருவம். ராப்பகலான விடாக்கண்டன் மழை. மொட்டை மரங்கள் திணறும். காற்று சிலீரென வீசும். நாயும் குதிரையும் கோழிகளும் எல்லாமே நனைஞ்சு நொந்து நு¡லய் அசமந்தமாய்க் கெடக்கும். நாள்க் கணக்கா வெளிய வர முடியாது. உலாப் போக இடங் கிடையாது. சாத்திக் கிடக்கிற ஜன்னலைப் பார்த்துக்கிட்டு வீட்டுக்குள்ளியே நடை. மகா இம்சை!

சுதாரித்துக் கொண்டு இவான் டிமிட்ரிச் மனைவியைப் பார்த்தான்.

''நான் வெளிநாடு கூடப் போலாம் மாஷா?'' என்றான் அவன்.

இலையுதிர்கால முடிவில் வெளிநாட்டுப் பயணம் - பிரான்சின் தென்பகுதிகள்... இத்தாலி... இந்தியா!... என்றெல்லாம் யோசனை நீண்டது.

''நானும் நிச்சயம் வெளிநாடெல்லாம் போணும்'' என்றாள் பெண்டாட்டி. ''ஆனா பரிசு விழுந்த எண்ணைப் பாருங்க...''

''பொறு! பொறு!''

திரும்ப அறைக்குள் நடக்க ஆரம்பித்தபடி நினைவை நீளவிட்டான். இவளா... வெளிநாடு போயி என்ன பண்ணுவா இவ? தனியாத்தான் நான் போகணும். அல்லது அந்தந்தக் கணங்களுக்காக வாழ்கிற ஸ்திரீகளுடன் போகலாம். சில பெண்கள் பிரயாணம் பூராவும் தொணதொணத்துக்கிட்டே வரும். வாய் ஓயாமல் வேற பேச்சே பேசாமல் தன் பிள்ளைங்களைப் பத்தியே சொல்லிச் சொல்லி அலுத்துக்கும். எதுக்கெடுத்தாலும் விதி விதின்னுக்கிட்டே வரும். இவான் டிமிட்ரிச் தன் பெண்டாட்டி ரயிலில் தன்கூட வருவதாக யோசித்தான். சுத்தி வர பைகள், கூடைகள், பொட்டலங்கள். ஸ்ஸப்பா - என ஒரு சலிப்பு. இந்த ரயிலுல வந்ததுல தலைவலி மண்டையப் பொளக்குது. எம்மாஞ் செலவுடியம்மா... ஸ்டேஷன்ல வண்டி நிக்குதோ இல்லியோ வெந்நித் தண்ணிக்கு, ரொட்டிக்கு வெண்ணைக்குன்னு ஓடணும் அவன். ராப்பொழுதுக்கு அவள் சாப்பாடு சாப்பிட மாட்டாள். ஸ்டேஷன்ல நல்ல சாப்பாடு கிடைக்காதில்லையா?.

என்னியப் போட்டு நப்பி எடுத்துருவா, என அவளைப் பார்த்தபடியே நினைத்துக் கொண்டான் அவன். ஆ - பரிசுச்சீட்டு அவளிது, என்னிதில்ல. அதிருக்கட்டும், இவ வெளிநாடு போயி என்ன செய்யப்போறா! அங்க அவளுக்கு என்ன இருக்குன்னு நினைக்கிறா? எதாவது ஹோட்டல்ல போயி முடங்கிக்குவா. வெளிய வரவே மாட்டா. என்னியும் வெளிய விடமாட்டா... எனக்குத் தெரியும்!

தன் வாழ்க்கையிலேயே முதன்முதலா அவன் தன் பெண்டாட்டியை எதுக்கும் லாயக்கில்லாத கிழவியாக நினைத்தான். அவ கிட்ட போனாலே சமையல் நெடி. நான் எப்பிடி இளமையா ஆரோக்கியமா மல்ர்ச்சியா இருக்கிறேன்! இன்னிக்கும் மாப்ளையாகலாமே...

ஆனா அதெல்லாம் மடத்தனமான கற்பனை, என நினைத்தான். என்னாத்துக்கு அவ வெளிநாடு போறா? அங்க அவளுக்கு என்ன இருக்கு?... ஆனாலுங் கூட அவ போவாள். உண்மையிலேயே நேப்பிள்ஸோ கில்ன்னோ... எல்லா இடமும் அவளுக்கு ஒண்ணுதான். தானும் அனுபவிக்க மாட்டா. என்னையும் அனுபவிக்க விட மாட்டா... ஒண்ணொண்ணுத்துக்கும் நான் அவகிட்ட கையேந்தி நிக்கணும்! எனக்குத் தெரியும் - எல்லாப் பொம்பளைகளையும் போலவே அவளும் கைக்குப் பணம் வந்ததும் எல்லாத்தையும் அப்டியே போட்டு அமுக்கி வெச்சிக்குவா. தன் சொந்தக்காரன் சேக்காளின்னு கவனிச்சுக்குவா. என்னையத் தான் போட்டு நோண்டுவா...

அவளது சொந்தக்காரர்களைப் பற்றி இவான் டிமிட்ரிச் நினைத்தான். அண்ணந்தம்பி அக்காதங்கச்சி அத்தைமாமா... எல்லாச் சென்மங்களும் பரிசு விழுந்திருக்குன்னு கேள்விப்ட்டாப் போறும் உருண்டுபொரண்டு ஓடி வந்துருவாங்க. பிச்சைக்காரச் சிரிப்பும் கெஞ்சலும். கேடுகெட்ட சனியன்கள். கண்றாவிக் கும்பல்... எதும் குடுத்தியா இன்னுங் குடுன்னுவாங்க. குடுக்கலியா வண்டை வண்டையாத் திட்டுவாங்க. நாசமாப் போன்னு சாபம் விடுவாங்க...

தன் சொந்தக்காரர்களிடம் இவான் டிமிட்ரிச் முன்பு வேற்றுமுகம் காட்டாதவன், இப்போது அவர்களை வெறுப்போடும் எதிர்ரிகளாகவும் பார்த்தான். எல்லாம் மனுஷாளோடவே சேர்த்தி கிடையாது... என்று நினைத்துக் கொண்டான்.

தன் பெண்டாட்டி முகம் கூட அவனுக்குப் பிடிக்காமலும் வெறுப்பேத்தக் கூடியதாகவும் இருந்தது. அவளையிட்டும் உள்ளே ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது. கடுப்பான கடுப்பு. பணத்தைப் பத்தி இவளுக்கு என்னா தெரியும். பிசினாறிப் பொம்பளை. பரிசு அடிச்சா அவ எனக்கு ஒரு நு¡று ரூபிள் தருவா. சொச்சத்தப் பெட்டில போட்டுப் பூட்டிக்குவா.

இப்போது பெண்டாட்டியை கடுமையுடன் வெறுப்புடன் அவன் பார்த்தான். அவளும் அவனை அதே மாதிரியான எதிர்ப்புணர்வுடன் பார்த்தாள். அவளுக்குமே தன் பகல்கனாக்களும், திட்டங்களும், ஆசை அபிலாஷைகளும் இருந்தன. தன் கணவனின் கனவுகள் அவளுக்குத் தெளிச்சியாகத் தெரிந்தது. பரிசுன்னு விழுந்தா அவளிடமிருந்து மொதல்ல யார் லபக்-கிக்குவாங்க என்று அவளுக்குத் தெரிந்தது!

பிறத்தியாள்க் காசில் பகல்கனவுன்னா நல்லாத்தான் இருக்கு இல்லே?... அவள் கண்கள் அதைச் சொல்லிக் காட்டின. அதென்ன அத்தனை தினாவெட்டு இந்தாளுக்கு?

பார்வைக்குப் பார்வை பதிலாய் அமைந்தது அவனுக்கும் புரிந்து விட்டது. அதுவே அவன் ஆத்திரத்தை இன்னும் து¡ண்டிவிட்டது. அவளைப் போட்டுத் தாக்குகிற ஆவேசத்துடன் அவன் நாலாம் பக்கம் செய்தித்தாளை அவசர நோட்டம் விட்டான். உற்சாகமாக வாசித்தான்.

''வரிசை 9499. எண் 46! இருபத்தியாறு இல்லை...''

வெறுப்பு மற்றும் நம்பிக்கை - இரண்டுமே அந்தக் கணமே அவர்களிடம் இருந்து மறைந்தன. அவர்கள் ரெண்டு பேருக்குமே சட்டென்று அந்த அறைகள் சிறியதாகவும் தலையிடிக்கும் கூரையுடனும் இருளடித்துப் போயும் இருப்பதாகப் பட்டன. அவர்களின் ராச்சாப்பாடு பிரயோஜனமேயில்லை. செரிப்பதேயில்லை... நகரவே நகராத அலுப்பான மாலைப் பொழுதுகள்.

''இதெல்லாம் என்ன?''- இவான் டிமிட்ரிச் திரும்ப வெறுப்புடன் பேசினான். ''உள்ளாற வந்தாலே து¡சி தும்பு கிழிச்சிப் போட்ட காகிதம். அறையைப் பெருக்கினாத்தானே? ஆளையே வெளிய வெரட்டிருது... வங்கொடுமையப்பா. நான் செத்துத் தொலையிறேன். வெளியபோயி மொதல் பார்க்கிற மரத்தில் நாண்டுக்கிட்டு சாகறேன்...!''

>>>

the lottery ticket - shortstory by anton chekhov

ஆங்கிலத்தில் படிக்க இங்கே

Sunday, March 20, 2011

சொல்லின் செல்வன்-ஆண்டன் பாவ்லொவிச் செகாவ்

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன்

கிரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லுாரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில் பரவலாக அறியப் பட்டபடி இரு துன்பங்களில் - மோசமான மனைவி மற்றும் போதைப் பழக்கம் - அவர் இறந்து போனார். அவரantChekhovது இறுதி ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து கல்லறை நோக்கிக் கிளம்பவும், அவருடன் பணியாற்றும் நண்பரான போப்லாவ்ஸ்கி நண்பன் ஒருவனைத் தேடி வாடகைக் கார் ஒன்றில் தாவியேறிப் போனார். கிரிகோரி பெட்ரோவிச் ஜபோய்க்கின் என்கிற அந்த நண்பன் இளைஞனேயானாலும் புகழ் மிக்கவன். மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது - என்னுடைய வாசகர்கள் அவனை அறிவார்கள் - ஜபோய்க்கின்  முன்தாயரிப்பே இல்லாமல் கல்யாணங்களிலும், பெருவிழாமேடைகளிலும், இழவு நிகழ்ச்சிகளிலும் உரையாற்ற வல்லவன். துாக்கமா, காலி வயிறா, மொடாக்குடியா, அட, கடும் காய்ச்சலா... எந்த நிலையிலும் நினைச்சால் அவனால் பேச முடியும். சீராகவும் மென்மையாகவும் வார்த்தைகள், ஏராளமான வார்த்தைகள் அவனிடம் இருந்து வழியும், குழாயில் இருந்து தண்ணீர் போல. அவனது பேச்சகராதியில் நெகிழ்ச்சிகரமாய் எராளமான, உணவு விடுதி ஈக்களைக் காட்டிலும் அதிகப்படியான, வார்த்தைகள் இருந்தன. உணர்வுபூர்வமாக நீண்ட உரையாகவே எப்போதும் பேசினான். அதனால் என்ன ஆகிப் போகுமென்றால், சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக சில வியாபாரிகளின் கல்யாணங்களில், அவன் பேச்சை நிறுத்த போலிசை வரவழைக்க வேண்டியதாகிவிடும்.

'உம்மைத் தேடித்தான் வந்தேன் பெரிய மனுஷா... ' போப்லாவ்ஸ்கி அவனது வீட்டில் நுழைந்தார். 'கோட்டும் தொப்பியும் போட்டுக்கோ. உடனே கிளம்பு. நம்மாள் ஒருத்தர் இறந்துட்டார். அந்தாளை மேலுலகத்துக்கு அனுப்பிட்டிருக்கோம். அவரை வழியனுப்ப நீயும் உன்னாலான உபசாரம் செய்யணும்... கூட்டத்தில் எங்க நம்பிக்கை நட்சத்திரமே நீதான். ஆள் ஏப்ப சாப்பையா இருந்தா உன்னைக் கூப்பிடற அளவுக்குப் பெரிய விஷயமா இராது. ஆனா பாரு... நம்ம செயலாளர் சாமி. ஒருவகையில் எங்க அலுவலகத்துத் துாண் மாதிரி. அத்தாம் பெரியாளை ஒரு நாலுவார்த்தை இல்லாம அடக்கம் செய்தா அசிங்கம் இல்லியா ? '

'ஓ செயலாளரா... ' என வாயைப் பிளந்தான் ஜபோய்க்கின். 'விடாக் குடியன்... அவரா ? '

'ஆமாம். நொறுக்குத் தீனி, மதியச் சாப்பாடு எல்லாம் உனக்குக் கிடைக்கும்.... வாடகைக்கார் செலவும் பாத்துக்குவோம். கிளம்பு அருமைப் பையா. வழக்கமான கல்லறை உரைபோல வந்து அடிச்சி நொறுக்கு.... ஊரே மூக்குல வெரல் வைக்கப் போறாங்க. '

ஜபோய்க்கின் உடனே ஒத்துக் கொண்டான். தலையைச் சரி செய்தான். முகத்தில் சிறிது பவுடர் பூச்சு. போப்லாவ்ஸ்கியுடன் தெருவில் இறங்கி நடந்தான்.

'உங்க செயலாளர்... எனக்குத் தெரியும் அவரை... ' காரில் ஏறியபடி அவன் சொன்னான். 'உள்ளொண்ணு வெச்சி வெளியே வேற மாதிரிப் பேசுவான். ரெளடிப்பயல். மிருகஜாதி... சொர்க்கவாசல் திறக்கட்டும் அவனுக்கு - அவனை மாதிரியாளுங்களை சாதாரணமா பாக்கவே முடியாது. '

'பாருப்பா, செத்தவர்களைத் திட்டுறது சரியில்லை... '

'ஆமாமா. செத்தவங்களை முடிஞ்சா பாராட்டு, இல்லியா விட்ரு...ன்னு வசனம். ஆனாக்கூட.... அவன் அயோக்கியனய்யா. '

இறுதி ஊர்வலத்தை எட்டிக் கடந்து அத்தோடு இணைந்து கொண்டார்கள். சவப்பெட்டி மெதுவாக வந்து கொண்டிருந்தது. பெட்டி கல்லறைக்கு வந்து சேர்வதற்குள் மூன்று முறை அவர்கள் - இறந்தவனின் ஆரோக்கியத்துக்காக என்றபடி - 'தாகசாந்தி ' செய்து கொண்டார்கள்.

ஊர்வலம் கல்லறை அருகே வந்தது. மாமியாரும், சம்சாரமும், மைத்துனி ஒருத்தியும் சம்பிரதாயப்படி கதறி அழுதார்கள். சவப்பெட்டி குழிக்குள் இறக்கப்பட்டபோது சம்சாரம், 'நானும் போயிர்றேன்... ' என கீச்சிட்டாள். ஆனால் போகவில்லை. ஓய்வூதியப் பணம் நினைவு வந்திருக்கக் கூடும். ஜபோய்க்கின் எல்லா சமாச்சாரமும் அடங்கட்டும் எனக் காத்திருந்துவிட்டு, முன்னால் வந்து நின்று, வந்திருந்த எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆரம்பித்தான்.

'என் கண்களையே, காதுகளையே நம்புவதா வேணாமா ? இந்தக் கல்லறை, இந்த அழுதுசிவந்த முகங்கள், இந்த முனகல்கள், இந்தத் துயரங்கள்... எல்லாம் கொடூரமான கனவுதானே ? ஆ - இது கனவு அல்ல. நம் கண்கள் நம்மை ஏமாற்றவும் இல்லை... சற்று முன்வரைகூட நாம் பார்த்தவர், மகா துணிச்சல்கார மனிதர், இளமைப் புத்துயிர்ப்பும் துாய்மையுமானவர், ஒரு தேனிபோல அபார சுறுசுறுப்புடன் நமது சமுதாயம் என்னும் தேன்கூட்டுக்காகப் பாடுபட்டவர்... மேலும்... ஆ அவர் இப்போது மண்ணோடு துாசியாகிப் போய்விட்டார். மாயக் கானல்நீராகிப் போனார். மீளமுடியாத மரணத்தின் கொடூரக் கரம் அவர் மேல் விழுந்து விட்டது. தொண்டுகிழ வயோதிகத்திலும் அவர் உற்சாகமும் பலமும் கொண்டிருந்தார். சாவு பற்றி நினைக்கவே இல்லை. ஈடு செய்யவே முடியாத இழப்பு இது! அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வல்லார் யார் ? அரசுப் பணியாளர்களில் நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் புரோகோஃபி ஒசிபிச் தனித்தன்மைக்காரர். சுத்த சுயம்பு. தன் நேர்மையான பணியில் அவர் அடிமனதின் ஆழத்தில் இருந்து செயல்பட்டார். இரவு வெகுநேரம்வரை கூட அவர் அயராமல் பணிபுரிந்தார். ஆனாலும் ஆரோக்கியம் கெடாமல் இருந்தார். லஞ்ச லாவண்யங்களை அவர் சட்டை செய்ததும் இல்லை. ஆர்வப் பட்டதும் இல்லை.

லஞ்சம் வாங்க அவரைத் துாண்டியவர்களை அவர் எத்தனை வெறுத்தார். சிறு சிறு லெளகிகக் கையூட்டுகளால் தமது கடமைக்கு துரோகம் செய்ய அவரை இழுத்த நபர்களை அவர் ஒதுக்கினார். ஆமாமாம், நம்ம கண்ணு முன்னாடியே புரோகோஃபி ஒசிபிச் தமது சிறு மாத ஊதியத்தை, தம்மிலும் ஏழைபாழையான தம் அலுவலகப் பணியாளர்களோடு பகிர்ந்து கொண்டார். அவருடைய உதவி உபகாரத்தில் வாழ்ந்த அனாதைகளின், விதவைகளின் ஆழ்ந்த துக்கக் குரல்களை இப்போது நீங்களே கேட்டார்கள். தமது அலுவலகக் கடமையிலும் வேலையின் சிரத்தை மிகுதியிலும் அவர் தன் வாழ்வின் இன்பங்களையே ரெண்டாம் பட்சமாக்கினார். இல்வாழ்க்கையையே அவர் துறந்தார். உங்க எல்லாருக்குமே தெரியும்- தன் கடைசி நாள்வரை அவர் பிரம்மச்சாரி. ஆ தொழிற்சங்கத் தோழராக அவரை நிரப்ப யார் இருக்கிறார்கள் ? சவரம் செய்த அன்பான அவரது முகம்... அதன் மெல்லிய முறுவல்... இப்போதும் மனசால் நான் பார்க்க முடிகிறது. மிருதுவான சிநேகபூர்வமான அவரது குரல்... என்னால் கேட்க முடிகிறது. உங்க ஆத்மா சாந்தியடைக, புரோகோஃபி ஒசிபிச்... நேர்மையாளரே... புனிதமானவரே... உழைப்பாளரே... '

ஜபோய்க்கின் தொடர்ந்து பேசினான். ஆனால் கூட்டத்தில் ஜனங்கள் தங்களுக்குள் குசுகுசுக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாரையும் அவனது உரை திருப்திப் படுத்தவே செய்தது. சிலர் கொஞ்சம்போல அழக்கூட செய்தார்கள். ஆனால் அந்த உரை பலவிதங்களில் விசித்திரமாய் இருந்தது அவர்களுக்கு. முதல் விஷயம், இறந்து போனவரை பேச்சாளர் ஏன் புரோகோஃபி ஒசிபிச் என்று குறிப்பிட வேண்டும் ? மரித்தவர் கிரில் இவனோவிச் அல்லவா ? ரெண்டாவது, தொட்டுத் தாலி கட்டிய சம்சாரத்தோடு அவர் காலம்பூராவும் காள்பூளென்று கத்திக் கொண்டிருந்தார்... அவரை பிரம்மச்சாரி என்று எப்படிச் சொல்வ முடியும் ? மூணாவது, அவருக்கு செமத்தியான சிவப்பில் தாடி உண்டு. அதை அவர் எடுத்ததாக சரித்திரமே கிடையாது. ஆக ஒருத்தருக்கும் பேச்சாளர் சொன்ன, சவரம் எடுத்த முகம்... என்ற அடையாளம் விளங்கவில்லை. எல்லாரும் மண்டையைப் பிய்ச்சிக் கிட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் பாத்துக் கிட்டு, தோளைக் குலுக்கிக் கொண்டார்கள்.

'புரோகோஃபி ஒசிபிச்... ' பேச்சாளன் தொடர்ந்தான். கல்லறையைப் பார்த்துக்கொண்டே அழுத்தமான பாதிப்புடன் பேசினான். 'துப்புரவான, எதையும் வெளிக்காட்டாத முகம். நீங்கள் பிடிவாதமான கண்டிப்புடன் செயல்பட்டார்கள். ஆனால் எங்க எல்லாருக்குமே தெரியும்... வெளிப் பார்வைக்கு எப்பிடி இருந்தாலும், உங்களுக்குள்ள இருந்தது நேர்மை தவறாத, சிநேகபூர்வமான அந்த இதயம். '

கொஞ்ச நேரத்தில் அந்தப் பேச்சில் மாத்திரம் அல்ல, பேச்சாளனிடத்திலேயே ஏதோ கோளாறு என ஜனங்கள் உணர்ந்தார்கள். ஓர் இடத்தில் அவன் குறிப்பாய்ப் பார்த்... லேசா அதிர்ந்து... அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டான். அந்தமேனிக்குப் பேச்சையே நிறுத்தி விட்டான். திக்குமுக்கிக்கிட்டு திரும்பி போப்லோவ்ஸ்கியைப் பார்த்தான்.

'அட அந்தாளு இருக்காருய்யா... ' என்றான் திகிலடிச்சிப்போய்.

'யாரு இருக்காருன்றே ? '

'ஏன் ? புரோகோஃபி ஒசிபிச்... அந்தா நிக்கிறாரு. அந்த கல்வெட்டு பக்கத்தில்... '

'அவரு சாகவே இல்ல. கிரில் இவானோவிச்தான் செத்திட்டாரு... '

'கிரில் இவானோவிச்தான் எங்க செயலாளர். நீ போட்டுக் கலக்கிட்டியே எல்லாத்தையும் பேமானி. புரோகோஃபி ஒசிபிச்சும் முன்ன எங்க செயலாளரா இருந்தவரு. அது நிஜம்தான். ஆனா ரெண்டு வருஷம் முன்ன அவர் தலைமை குமாஸ்தாவா செகண்ட் டிவிஷனுக்குப் போயிட்டாரு. '

'ஐய சாத்தானே நான் இப்ப என்ன பேச ? '

'நீ ஏன் நிறுத்தறே ? நீ பேசு. விவகாரம் அசிங்கமாயிரும்ல... '

ஜபோய்க்கின் கல்லறைப் பக்கம் திரும்பிக் கொண்டான். தொடர்ந்து அவன் விட்ட இடத்தில் இருந்து பேச்சை எடுத்தான். புரோகோஃபி ஒசிபிச் என்ற, மழுங்க சவரம் எடுத்த முகத்தார், அந்தப் பழைய குமாஸ்தா வாஸ்தவத்தில் அந்த இடத்தில் ஒரு நினைவுக் கல்வெட்டின் அருகில் நின்றிருந்தார். பேச்சாளனை அவர் பார்த்தபடி ஆத்திரத்துடன் உருமினார்.

அவரது சக ஊழியர்கள் 'வசம்மா மாட்டிக்கினியாக்கும் ' என்கிற தினுசில் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள். எல்லாரும் ஜபோய்க்கின்னுடன் சடங்குகள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். 'ஒராள உயிரோட புதைச்சாச்சி! '

'கடுப்படிச்சிட்டியே தம்பி ' என்று முணுமுணுத்தார் புரோகோஃபி ஒசிபிச். 'செத்தவனைப் பத்தி நீ அப்பிடிச் சொல்றது சரிதான். ஆனா உசிரோட இருக்கிறவன் அப்பிடி இருக்கறதாச் சொன்னா குசும்புக்கார கிண்டல்தான் அது. என்னத்தை நீ சொல்லிட்டிருந்தே ? லஞ்சம் வாங்க மாட்டார். அவருகிட்ட லஞ்சத்தை நீட்ட முடியாது. லஞ்சம் வாங்க இஷ்டப்படாதவர்... எவனையாவது போட்டுத் தாளிக்கணும்னா, அப்பிடிச் சொல்றதுதான். யாராவது உன்ட்ட என் முகத்தை விவரிக்கச் சொன்னாங்களா ? துப்புரவான, உணர்ச்சி தெறிக்காத... அட இருந்துட்டுப் போட்டும்யா. நான் பொறுமைசாலின்னு எல்லார் முன்னாடியும் சொல்லி அவமானப் படுத்திட்டியே... '

---

THE ORATOR by Anton Chekhov

நன்றி: திண்ணை

Saturday, March 19, 2011

வான்கா- ஆண்டன் பாவ்லொவிச் செகாவ்

    

ஒன்பது வயது சிறுவன் வான்கா ழூக்கவ் வேலை பயிலுவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எசமானும் எசமானியும் முதுநிலை வேலைப் பயிற்சியாளர்களும் கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்தான்;பிறகு அலமாரியிருந்து மசிப்புட்டியையும் துருபிடித்த முனை கொண்ட பேனாக் கட்டையையும் எடுத்து வந்து, கசஙிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு எழுத்த் தயாராகிவிட்டான். முதலாவது எழுத்தை வரைanton_pavlovich_chekhovயு முன் நெஞ்சு  படபடக்க இரண்டொரு தரம் வாயிற் கதவையும் ச்ன்னலையும் பார்த்துக்கொண்டான். புதைமிதி அச்சுக்கட்டை அடுக்குத் தட்டுகளுக்கு நடுவிலிருந்த சாமிப் படத்தை உற்று நோக்கியவாறு விக்கிச் செறுமிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான். காகிதம் பெஞ்சின்மேல் இருந்த்து, வான்கா பெஞ்சின் பக்கத்தில் தரையில் ம்ண்டியிட்டு அமர்ந்திருந்தான்.

     “அன்புக்குரிய தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச்!” என்று எழுதினான். ”உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன்.கிறிஸ்மஸ் வாழ்த்துககள் அனுப்பிகிறேன்,ஆண்டவன் உனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.எனக்கு அப்பாவும் இல்லை,அம்மாவும் இல்லை;உன்னை தவிர யாருமே இல்லை எனக்கு.”

இருண்ட சன்னல் கண்ணாடியை நோக்கி வான்கா கண்களை உயர்த்தினான். மெழுகுவத்தியின் பிம்பம் சன்னல் கண்ணாடியில் ஆடித் துடித்தது. அவனுடைய மனக் கண்முன் தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச்தெளிவாய்த் தோற்றமளித்தார். ழிவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் அவர் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார். மெலிந்து சிறியவரான கிழவர் அவர், வயது சுமார் அறுபத்தைந்து இருக்கும். ஆனால் குறிப்பிடத்தக்க துடிப்பும் விறுவிறுப்பும் வாய்ந்தவர், சிரித்த முகமும் குடிபோதை கொண்டு மங்கிய கண்களுமுடையவர். பகற்பொழுதில் பின்கட்டு சமையலறையினுள் தூங்குவார், அல்லது சமையற்காரிகளோடு வேடிக்கையாய் பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து சடசடப்பியை ஆட்டி ஒலித்தவாறு பண்ணையைச் சுற்றி நடப்பார். அவருக்குப் பின்னால் கிழட்டு கஷ்கான்காவும் விலாங்கு என்ற இன்னொரு நாயும் தலையைத் தொங்க போட்டுக்கொண்டு செல்லும்.அதன் கரிய நிறத்துக்காகவும் நீளமான நீர்நாயை ஒத்த உடலுக்காகவும் அதற்கு விலாங்கு என்று பெயர். இந்த விலாங்கு பணிவு மிக்கதாய்  அருமையாய் வாலைக் குழைத்துக்கொண்டு வரும்; தெரிந்தவர்களாயினும் தெரியாதவர்களாயினும் எல்லோரையும் அன்பு ஒழுகும் அதே பார்வை கொண்டுதான் உற்று நோக்கும்.ஆயினும் யாராலும் அதை நம்ப முடியாது.அதன் அடக்கமும் பணிவும் வெளிவேஷமே தவிர மெய்யானவையல்ல; அதன் கள்ளத்தனத்தையும் குரோதத்தையும் மூடிமறைக்கவே பயண்பட்டன இவை.திருட்டுத்தனமாய் அணுகி வந்து காலைக் கடிப்பதிலும் , யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக்குஞ்சுகளைக் கவர்ந்து கொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங்கால்களில் எத்தனையோ தரம் வெட்டு காயம் பட்டிருக்கும், இருமுறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள், வாரம் தவராமல் நையப் புடைத்து உயிர் போகும் நிலையில் விட்டுச் சென்றார்கள். ஆனால் அது யாவற்றையும் சமாளித்துக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்தது.

தாத்தா இந்நேரங்களில் அனேகமாய் வெளி வாயில் அருகே நின்று கண்களைச் சுளித்துக்கோண்டு,கோயில் சன்னல்களிலிருந்து சென்னிறத்தில் பளிச்சிடும் ஒளியைப் பார்ப்பார்;ஒட்டுக்கம்பளப் பொதிமிதிகளைக் கால்களில் மாட்டிக்கொண்டு தத்துப்புத்தென நடந்து வேலையாட்களோற்டு கும்மாள மடிப்பார். அவருடைய சடசடப்பி இடுப்பு வாரில் தொங்கும். குளிராயிருக்கிறது என்று சொல்லிக் கைகளை விரித்துத் தன்னைத்தானே கட்டிப்பிடித்துக் கொள்வார். அல்லது யாராவது சமையல் காரியையோ பணிப்பெண்ணையோ கிள்ளிவிட்டு கிளுகிளுத்துக் கிழட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்.

   “ஒரு சிமிட்டா எடுத்துக்கொள்” என்று அந்தப் பெண்களிடம் தனது பொடி டப்பாவைக் காட்டுவார்.

ஒரு சிமிட்டா எடுத்து மூக்கினுள் இழுத்து உடனே தும்முவார்கள் அந்தப் பெண்கள். தாத்தாவுக்கு ஆனந்தம் தாங்க முடியாது, வயிறு குலுங்கச் சிரிப்பார்.

    “உறைந்து போன மூக்குக்கு நல்லது! என்று கூவுவார்.”

நாய்களுக்குங்கூட மூக்குப்பொடி கொடுப்பார். கஷ்தான்கா தும்மிவிட்டுத் தலையை ஆட்டி ஆட்சேபித்தவாரு விலகிச் செல்லும். ஆனால் பணிவடக்கம் மிகுந்த விலாங்கு தும்முவது சரியல்ல என்று வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும். வானிலை அற்புதமாயிருந்தது.காற்று அசங்காது அமைதியாய்,பளிங்கு போல் தெளிவாய், மாசு மறுவற்றியிருந்தது. கரிய இரவென்றாலும் கிராமத்தின் வெண்ணிறக் கூரைகளும், புகைபோக்கிகளிலிருந்து எழும் புகையும், உறைபனிக் கவசமிட்டு வெள்ளிபோல் பளபளத்த மரங்களும், வெண்பனிப் பெருக்குகளும் தெட்டத் தெளிவாய்க் கண்ணுக்குத் தெரிந்தன. ஒய்யாரமாய்க் கண் சிமிட்டும் விண்மீன்கள் வானத்தில் வாரியிறைக்கப் பட்டிருந்தன. பால்வெளி மண்டலம் விழா நாளுக்காகக் கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு வெண்பனியால் தேய்த்து மெருகிடப்பட்டது போல் கண்ணைப் பறிக்கும்படி எடுப்பாய் தெரிந்தது…..

வான்கா பெருமூச்சு விட்டவாறு பேனாவால் மசியைத்தொட்டு, மேலும் எழுதிச் சென்றான்:

     ”நேற்று என்னை அடித்து நொறுக்கிவிட்டார்கள். முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச்சென்று கடிவாள வாரால் நையப்புடைத்தார். காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கிவிட்டேன். சென்ற வாரத்தில் ஒரு நாள் எசமானி என்னைக் கெண்டை மீனைச் சுத்தம் செய்யச் சொன்னாள். நான் வால் பக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். உடனே எசமானி அந்த மீனைப் பிடுங்கி அதன் தலையை என் முகத்திலே வைத்து தேய்த்தாள். ஏனைய வேலைப் பயிற்சியாளர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள், மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள், எசமானுடைய வெள்ளரிக் காய்களை திருடி வரும்படிக் கூறுகிறார்கள்.எசமான் கைக்குக் கிடைப்பதை எடுத்து என்னை அடித்து கொல்லுகிறார். சாப்பிட இங்கே எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. காலையில் ரொட்டி தருகிறார்கள். மத்தியானத்துக் கஞ்சியும் இரவில் மீண்டும் ரொட்டியும் கொடுக்கிறார்கள். தேநீரோ, முட்டைக்கோஸ் சூப்போ எதுவும் எனக்குக் கிடப்பதில்லை, யாவற்றையும் அவர்களே தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள். என்னை நடையிலே படுக்கச் சொல்கிறார்கள், அவர்களுடைய குழந்தை கத்தும் போது நான் தூங்கக்கூடாது, அதை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். எனது அருமைத் தாத்தா, உனக்கு புண்ணியம் உண்டு, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு, கிராமத்துக்கு கூட்டிச் சென்றுவிடு, என்னால் இனி பொறுக்க முடியாது. தாத்தா உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்,எந்நாளும் மறக்காமல் உனக்காக பிரார்த்தனை செய்வேன், என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு,இல்லையேல் நான் செத்துதான் போவேன்…..”

வான்காவின் உதடுகள் துடித்தன, கரிபிடித்த முட்டிக்கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு செறுமினான்.

     ”உனக்கு மூக்குப் பொடி இடித்து தருவேன்” என்று தொடர்ந்து எழுதினான்.

“உனக்காக ஆண்டவனை வேண்டிக் கொள்வேன். நான் எதாவது குறும்பு செய்தால் நீ எவ்வளவு வேண்டுமானாலும் என்னை உதைக்கலாம். எனக்கு அங்கே இருக்காதென நீ நினைத்தால், நான் காரியக்காரரிடம்  போய் என் மீது இரங்கக் கொள்ளும்படிக் கேட்பேன், புதைமிதிகளுக்குப் பாலிஷ் போடும் வேலையை எனக்குத் தரும்படி வேண்டுவேன்.அல்லது ஃபெத்யாவுக்குப் பதில் நான் ஆடு மேய்க்கப்போவேன். எனது அன்புக்குரிய தாத்தாவே, என்னால் சகிக்கமுடியவில்லை, எனக்கு உயிர் போகிறது. இங்கிருந்து ஓடிவிடலாம், நடந்தே கிராமத்துக்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்.ஆனால் எனக்கு புதைமிதிகள் இல்லை, கொடுங்குளிர் தாங்கவே முடியாதே என்று பயந்து கொண்டு சும்மாயிருந்தேன். நான் பெரியவனானதும் உன்னைக் கருத்துடன் கவனித்துக் கொள்வேன். யாரும் உன்னைத் துன்புறுத்த விடமாட்டேன். நீ இறந்த பின் உன்னுடைய ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்காகப் பிரார்த்திக்கிறேனே அதே போல செய்வேன் உனக்காகவும்.

     ”மாஸ்கோ மிகப் பெரிய ஊர், கனவான்களது வீடுகளுக்குக் கணக்கே இல்லை, குதிரைகளும் ஏராளம்.ஆனால் ஆடுகள் இல்லை, நாய்கள் கொஞ்சங்கூட மூர்க்கமின்றி சாதுவாய் இருக்கின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பையன்கள் நட்சத்திரம் எடுத்துச் செல்வதில்லை. கோயிலில் நம்மை பாட விடமாட்டேன்கிறார்கள். தூண்டில் முட்கள் அப்படியே தூண்டில் நூல்களும் கோல்களும் அடங்கலாய்க் கடையில் விற்கப்படுவதை முன்பு ஒரு தரம் பார்த்தேன் நான். எந்த மீன் வேண்டுமானாலும் பிடிப்பதற்க்கு ஏற்றவையாய் விதம் விதமாய் நன்றாய் இருந்தன, ஒரு பூடு எடையுள்ள பெரிய தோப்பா மீனைத் தாங்கக்கூடிய ஒன்று கூட இருந்தது. ப்ண்ணை வீட்டில் எசமான் வைத்திருக்கிறாரே அந்த மாதிரி துப்பாக்கியும் இன்னும் பலவிதமான துப்பாக்கிகளும் கடைகளில் விற்கிறார்கள், நான் பார்த்தேன்.ஒவ்வொன்றும் நூறு ரூபிகளுக்கு குறையாது. கசாப்புக் கடைகளில் காட்டுக் கோழிகளும் உள்ளான்களும் முயல்களும் இருக்கின்றன, ஆனால் கடையில் இருப்பவர்கள் இவை எங்கே சுடப்பட்டவை என்று சொல்ல மாட்டேன்கிறார்கள்.

     ”அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப் பெட்டியில் பத்திரமாய் வை. திருமதி ஓல்கா இக்னத்யென்னாவிடம் கேட்டு வாங்கு,வான்காவுக்கு என்று சொல்லு.”

நெடுமூச்சு விட்டு மீண்டும் சன்னல் கண்ணாடியை உற்றுப் பார்த்தான் வான்கா. பண்ணை விட்டு கணவான்களுக்கு கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காக பேரனையும் அழைத்துக்கொண்டு தாத்தா புறப்பட்டுச் சென்றது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆகா அப்போதெல்லாம் காலம் எவ்வளவு இன்பகரமாய் இருந்தது! தாத்தா கெக்கலித்துக் கொள்வார், உறைபனி மூடிய தோப்பும் கெக்கலிக்கும், இதைப் பார்த்துவான்காவும் கெக்கலித்துக் கொள்வான். பிர் மரத்தை வெட்டத் தொடங்குமுன் தாத்தா புகைக் குழாயைப் பற்ற வைத்துப் புகைபிடிப்பார், ஒரு சிமிட்டா பொடி எடுத்து மூக்கில் வைத்து நெடுநேரம் உறிஞ்சுவார், குளிரில் நடுங்கும் வான்காவை பார்த்துச் சிரிப்பார்….உறைபனிக் கவசம் பூண்ட பிர் மரங்கள் தம்மில் சாவுக்காகக் குறிக்கப்பட்டிருப்பது யாராய் இருக்குமோ என்று ஆடாமல் அசையாமல் காத்திருந்தன. அப்பொழுது திடுமென ஒரு முயல் வெண்பனிப் பெருக்கைத் தாவி அம்பு போல் பாய்ந்து ஓடிற்று….தாத்தா இருப்பு கொள்ளாமல் துடிதுடித்துக் கத்துவார்:

     ”நிறுத்து அதை! நிறுத்து அதை!... நிறுத்து! ஓ! குட்டை வாலுச் சைத்தான்!”

மரத்தைத் தாத்தா பண்ணைவீட்டுக்கு இழுத்து வருவார், அவர்கள் அதைச் சிங்காரிக்கத் தொடங்குவார்கள்….திருமதி ஓல்கா இக்னத்தியெவ்னுதான் வான்காவுக்கு மிக்கப் பிடித்தவர், யாவரையும் விட முன்னிலையில் நின்று ஓடியாடி வேலைகள் செய்வார். வான்காவின் தாயாகிய பெலகெயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்தபோது ஓல்கா இக்னத்தியெவ்னா வான்காவுக்கு மிட்டாய் தருவது வழக்கம். அவனுக்கு அவர் எழுதவும் படிக்கவும் நூறு வரை எண்ணவும் சொல்லிக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்க்குக்கூட கற்றுத் தந்தார். ஆனால் பெலகேயா இற்ந்த பிறகு,அனாதையாகி விட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தத்தாவிடம் அனுப்பப்பட்டுவிட்டான். அங்கிருந்து மாஸ்கோவுக்கு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டு வந்து விடப்பட்டான்…..

     ”தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு” என்று மேலும் எழுதினான் வான்கா. “ ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்றுவிடு, உன்னை நான் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். அனாதைச் சிறுவன் நான், துன்புறுகிறேன், எனக்கு கருணை காட்ட வேண்டும்.எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள், எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன். துன்பம் தாங்க மாட்டாமல் எந்நேரமும் இங்கு நான் அழுது கொண்டிருக்கிறேன். புதைமிதி அச்சுக் கட்டையால் எசமான் என் மண்டையில் அடித்தார்.அப்படியே கிழே விழுந்த நான் மீண்டும் எழுந்திருக்கப் போவதில்லை என்றே நினைத்தேன். இங்கு எனது நிலை நாயினும் கேடானதாய் இருக்கிறது….அல்யோனாவுக்கும் ஒற்றைக் கண் எகோருக்கும் கோச் வண்டிக்காரனுக்கும் என் அன்பைத் தெரிவிக்கிறேன். என்னுடைய கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே. உன்னுடைய பேரன் இவான் ழூக்கவ். அருமைத் தாத்தா, வா என்னிடம்.”

காகிதத்தை நான்காய் மடித்தான், ஒரு கப்பேக்கு கொடுத்து அதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத்திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான்…பிறகு சற்று சிந்தனை செய்து விட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான்: “தாத்தா- தலையைச் சொறிந்து கொண்டு மீண்டும் சிந்திட்டுவிட்டு எழுதினான்:

கன்ஸ்தந்தீன் மக்காடிச். கிராமம்.

யாரும் குறுக்கிட்டு தன்னை எழுத விடாமல் தடுக்கவில்லையென மனம் மகிழ்ந்தவனாய்க் குல்லாவை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டான். கோட்டு போட்டுக் கொள்ளாமலே வெறுஞ் சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.

முந்திய நாளன்று அவன் விசாரித்த போது, கசாப்புக் கடையில் இருந்தவர்கள் கடிதங்களைத் தபாற் பெட்டிகளில் போட வேண்டும். இந்தப் பெட்டிகளிலிருந்து அவை மூன்று குதிரைகளையும் குடிமயக்கம் கொண்ட வண்டிக்காரர்களையும் கணகணத்து ஒலிக்கும் மணிகளுமுடைய கோச் வண்டிகள் மூலம் உலகெங்கும் அனுப்பப்படுகின்றன என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். யாவற்றிலும் அருகாமையிலிருந்த தபாற் பெட்டியிடம் ஓடி மதிப்பிடற்கரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான்…..

இதன்பின் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் இனிய நம்பிக்கைகள் இதமாய்த் தட்டிக் கொடுத்து அவனைத் தூங்க வைத்தன….அவனுடைய கனவில் ஒரு கணப்படுப்பு தோன்றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையல்காரிகளுக்குப் படித்துக் காட்டினார்….கணப்படுப்புக்கு முன்னால் விலாங்கு தனது வாலைக் குழைத்துக் கொண்டு மேலும் கீழுமாய் நடை போட்டது….

1886