Showing posts with label ஃபிரான்ஸ் காஃப்கா. Show all posts
Showing posts with label ஃபிரான்ஸ் காஃப்கா. Show all posts

Monday, December 19, 2011

தீர்ப்பு - ஃபிரான்ஸ் காஃப்கா :தமிழில்- சி.மோகன்

ஆங்கில மொழிபெயர்ப்பு : வில்லா - எட்வின்மூர்

அது, வசந்த காலம் உச்சத்திலிருந்த ஒரு ஞாயிறு காலை. இளம் வியாபாரியான ஜார்ஜ்பெந்தெமன், ஆற்றின் அருகே பரந்து விரிந்திருந்த, பராமரிப்பின்றிப் பழுதடைந்திருந்த, நீண்ட வரிசையிலான சிறிய வீடுகளொன்றின் முதல் மாடியில் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். உயரத்தாலும் வண்ணத்தாலும் மட்டுமே வித்தியாசப்பட்டு, மற்றபடி ஒன்றுக்கொன்று துளி வேறுபாடுமின்றி அந்தkafka_by_warh வீடுகள் அமைந்திருந்தன. தற்சமயம் வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் தன் பழைய நண்பனுக்கு அவன் அப்போதுதான் கடிதமொன்றை எழுதி முடித்துவிட்டு, கனவுப் பாங்கான பாணியில், மிக மெதுவாக, அதற்கான உறையில் அதைப் போட்டுவிட்டு, எழுது மேஜை மீது முழங்கைகளை ஊன்றியபடி, ஜன்னல்களின் வழியாக ஆற்றையும் பாலத்தையும் தொலைதூரக் கரையில் இளம்பசுமையோடு காணப்பட்ட குன்றுகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சொந்த நாட்டில் தனக்கு இருக்கக்கூடிய எதிர்கால வாய்ப்புகள் குறித்த அதிருப்தி காரணமாக, சில வருடங்களுக்கு முன்பு, ரஷ்யாவுக்கு ஓடிப் போய்விட்ட தன் நண்பனைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் புரிந்துவரும் தொழிலானது, ஆரம்பத்தில் செழித்திருந்தபோதிலும் பல காலமாக இறங்குமுகத்தில்தான் இருக்கிறதென்று, அவன் வருகையின் இடைவெளி அதிகரித்து, அவன் வருவதே அபூர்வமாகிவிட்ட தருணங்களில் குறைப்பட்டுக் கொண்டது விரயமாகிவிட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து ஜார்ஜ் நன்கு அறிந்திருந்த அவன் முகம், புதிதாய் வளர்த்திருந்த முழுமையான தாடியில் புதைந்து போகவில்லை என்றாலும் வித்தியாசமான தோற்றமளித்தது. உள்ளுறைந்திருக்கும் ஒரு நோயின் தடயமாக, அவனின் தோல் நிறம் மிகவும் மஞ்சளாக மாறிவிட்டிருந்தது. தனக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பிரம்மச்சாரி வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கென்றே தன் சகநாட்டவர் வசிக்கும் காலனியுடன் சீரான தொடர்பு வைத்துக் கொள்ளாததோடு, ரஷ்யக் குடும்பங்களோடும் நெருங்கிய உறவேதும் கொள்ளாமல் தனித்திருப்பதாக அவன் கூறியிருந்தான்.

பக்கத்துணைகளின்றிப் பரிதவிக்கும் அத்தகையதோர் மனிதனுக்கு ஒருவன் என்னதான் எழுத முடியும்? அத்தகைய மனிதனுக்கு அனுதாபம் காட்டலாமே தவிர அவனுக்கு உதவி செய்ய முடியாது. சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து வேரூன்றிக் கொள்வதோடு, மீண்டும் பழைய நட்புகளைப் புதுப்பித்துக் கொண்டு - அவ்வாறு அவனைச் செய்ய விடாமல் தடுக்கக் கூடியதாக எதுவுமில்லை - நண்பர்கள் உதவியைச் சார்ந்திருக்கும்படி அவனுக்கு ஒருவன் ஆலோசனை கூற முடியுமா? ஆனால் அப்படிச் சொல்வதானது, அவன் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் திசை தப்பிவிட்டதால், வழி தவறிச் சென்று மனம் திருந்தித் திரும்பி வந்தவனாக அவனை எல்லோரும் வியந்து பார்ப்பதை ஏற்றுக்கொண்டு, சொந்த நாட்டிலேயே வெற்றிகரமானவர்களாகவும் குடும்ப வாழ்வைச் செம்மையாக நடத்துபவர்களாகவும் இருக்கும் தராதரம் அறிந்த அவனுடைய நண்பர்களின் வழிகாட்டுதலின்படி, வளர்ந்துவிட்ட பெரியதோர் குழந்தையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு நடந்துகொள்ள வேண்டுமெனச் சொல்வதாக ஆகிவிடும். இதை மிகக் கனிவாகச் சொன்னாலும் கடுமையாகவே தெரியும். இதெல்லாம் ஒருபுறமிக்க, அந்த அளவுக்குச் சிரமமெடுத்து அவனை வற்புறுத்தினாலும் அந்த நோக்கம் நிறைவேறும் என்பது என்ன நிச்சயம்? அவனைத் தன் சொந்த நாட்டுக்கு வர வைப்பதே கூட சாத்தியமில்லாமல் போகலாம்; தன் சொந்த நாட்டின் வணிகப் போக்கோடு தற்சமயம்தான் தொடர்பிழந்துவிட்டதாக அவனே சொல்லியிருக்கிறான். அதன்பிறகு, அவன் வெளிநாட்டில் ஒரு அந்நியனாகவே தனித்து விடப்படுவதோடு மட்டுமல்லாமல், நண்பர்களின் ஆலோசனைகளினால் மனம் நொந்துபோய், நட்பு பாராட்டிய அவர்களிடமிருந்து முன்னைவிடவும் ஒதுங்கும் படியாக வேறு ஆகிவிடும். ஆனால், அவர்களின் ஆலோசனையை அவன் ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, ஒருவேளை அவனால் சொந்த நாட்டில் முரண்டு காரணமாக என்றில்லை, சந்தர்ப்பங்களின் ஆற்றல் காரணமாகத் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாது போய்விடுமானால், நண்பர்களோடு ஒத்துப்போகவும் முடியாமல் அவர்களிடமிருந்து ஒதுங்கவும் முடியாமல் அவமானத்துக்கு ஆளாகி விடுவானென்றால், இனி ஒருபோதும் தனக்கென்று நாடோ நண்பர்களோ இல்லையென்று உணரும்படி ஆகிவிடுமென்றால், அவன் இப்போது இருக்கிறபடியே வெளிநாட்டில் இருந்துவிடுவது அவனுக்கு உகந்ததாகாதா? இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் சொந்த நாட்டில் அவன் வெற்றிகரமானதோர் வாழ்க்கையை நடத்துவான் என ஒருவனால் எப்படி நிச்சயமாகக் கருத முடியும்?

இத்தகைய காரணங்களினாலேயே, அவனோடு தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பும் ஒருவனால், மிக லேசாகத் தெரிந்த ஒருவரிடம் சொல்ல முடிவது போலக்கூட எத்தகைய உண்மையான செய்திகளையும் அவனுக்குத் தெரியப்படுத்தமுடியாது. அவன் கடைசியாக வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கு அவன், ரஷ்யாவின் அரசியல் நிலைமை மிகவும் ஸ்திரமற்றியிருக்கிறது என்றும் லட்சக்கணக்கான ரஷ்யர்களை வெளி நாடுகளுக்கு அமைதியாகப் பயணம் செய்ய அனுமதிக்கும் அதேசமயம் ஒரு மிகச் சிறிய வியாபாரியைச் சில நாள்களுக்கு வெளியில் செல்லக்கூட அனுமதிக்கவில்லை என்றும் நொண்டிச் சமாதானம் சொன்னான். ஆனால் இந்த மூன்று வருடங்களில் ஜார்ஜின் வாழ்நிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனுடைய அம்மா இறந்துவிட்டாள்; அதிலிருந்து அவனும் அவன் தந்தையும் வீட்டைச் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்கள். இவ்விஷயம் அவனுடைய நண்பனுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவனும் தன் அனுதாபத்தை வறட்டுத்தனமான வார்த்தைகளால் அமைந்த ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தான். அப்படியான ஒரு சம்பவம் தரக்கூடிய வேதனையைத் தூரதேசத்திலிருந்து உணர முடியாது என்ற முடிவுக்கே இதிலிருந்து வர முடிகிறது. அந்தச் சமயத்திலிருந்து, எது எப்படியிருந்தபோதிலும், வியாபாரத்திலும் சரி, மற்ற எல்லா விஷயங்களிலும் சரி, ஜார்ஜ் மிகுந்த முனைப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

ஒருவேளை, அம்மா உயிரோடிருந்த வரை தொழில்ரீதியான ஒவ்வொரு விஷயத்திலும் தனதான வழிமுறைகளைத் தந்தை வலியுறுத்திக் கொண்டிருந்ததால், சுயமாய் முயற்சிகளெடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்ள அவனுக்கு முடியாமல் போயிருக்கலாம். அம்மா இறந்ததற்குப் பிறகு, தந்தை தொழிலில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் அவரின் தீவிரம் மட்டுப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம்; ஒருவேளை அது, பெரும்பாலும், தற்செயலாகக் கூடிவந்த நல்ல காலத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். அநேகமாக இதுதான் அதிகப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும், இந்த இரண்டு வருடங்களில் தொழில் சற்றும் எதிர்பாராத வகையில் வளர்ச்சி அடைந்தது; பணியாளர் எண்ணிக்கை இரு மடங்காகியது; விற்பனை ஐந்து மடங்காகப் பெருகிறது; மேலும் அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியங்கள் அண்மையில் இருக்கின்றன- சந்தேகமே இல்லை.

ஆனால், இந்த வளர்ச்சி பற்றிய எவ்வித முகாந்திரத்தையும் ஜார்ஜின் நண்பன் அறிந்திருக்கவில்லை. முந்தையை வருடங்களில், கடைசி முறையாக அது அவனின் அனுதாபக் கடிதத்திலாக இருக்கலாம் - ஜார்ஜை ரஷ்யாவுக்கு வந்துவிடும்படி அவன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். குறிப்பாக, ஜார்ஜின் தொழிற்கிளை அங்கு வெற்றிகரமாக அமைவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக முன்வைத்திருந்தான். ஜார்ஜ் தற்சமயம் எட்டியிருக்கும் எல்லையோடு ஒப்பிடும்போது, அவன் எடுத்துக்காட்டியிருந்த கணக்குகள் கடுகளவே. எனினும், தன் தொழிலின் வெற்றி குறித்து நண்பனுக்குத் தெரியப்படுத்த அவன் தயங்கினான். நடந்து முடிந்தவற்றை இப்போது தெரியப்படுத்தினால் அது நிச்சயம் விசித்திரமாகவே படும்.

ஆக, அமைதியான ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவன் எதையாவது சும்மா யோசித்துக் கொண்டிருக்கும்போது, மேலெழுந்த வாரியாக எழும் நினைவுகளான, முக்கியத்துவமற்ற வம்பு விவகாரங்களையே தன் நண்பனுக்குத் தெரிவிப்பதென்று அவன் வரையறுத்துக் கொண்டிருந்தான். தன் நண்பன், தனது சொந்த ஊர் பற்றி, இந்த நீண்ட இடைவெளியில், தன் விருப்பத்திற்கேற்ப எப்படியெல்லாம் கற்பனைக் கோட்டை எழுப்பியிருப்பானோ அதற்குக் குந்தகம் நேராமல் பார்த்துக் கொள்வதையே அவன் விரும்பினான். அதற்கேற்ப அவன், தன் நண்பனுக்கு, சற்றே விரிவாக எழுதிய மூன்று வெவ்வேறு கடிதங்களில் எவ்வித முக்கியத்துவமுமற்ற ஒருவனுக்கும், அது போன்றதொரு பெண்ணுக்கும் ஏற்பாடாகியிருந்த நிச்சயதார்த்தம் குறித்து மூன்று முறையும் எழுதினான். இதுவரையான அவனது தீர்மானங்களுக்கு முற்றிலும் மாறாக, அவனுடைய நண்பன் இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி குறித்துக் கொஞ்சம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான்.

எனினும், ஜார்ஜ் இப்படியான விஷயங்களை எழுத முன் வந்தானே தவிர, ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென் ஃபெல்டு என்ற வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு தனக்கு ஒரு மாதத்துக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதைத் தெரிவிக்க முன்வரவில்லை. அவன், தன் மணப்பெண்ணிடம், இந்த நண்பனைப் பற்றியும் பரிமாற்றங்களின் மூலம் அவர்களுக்கிடைய உருவாகியிருந்த விசித்திரமான உறவு பற்றியும் அவ்வப்போது பகிர்ந்துகொண்டான். "ஆக, அவர் நம்முடைய திருமணத்துக்கு வரமாட்டார்'' என்றாள் அவள். "எனினும், உங்கள் நண்பர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு உரிமை இருக்கிறது.'' "என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்'' ஜார்ஜ் பதில் சொன்னான். "நான் அவனுக்குத் தொந்தரவு தர விரும்பவில்லை. ஒருவேளை அவன் வரக்கூடும், குறைந்தபட்சம் நான் அப்படி நினைக்கவாவது செய்கிறேன். ஆனால் தன்னைப் பிடித்து இழுத்து வந்துவிட்டதாகத்தான் அவன் நினைப்பான். மேலும், அவன் அதற்காக வருத்தப்படுவான்; ஒருவேளை அவன் என்மீது பொறாமை கொள்ளவும் கூடும்; நிச்சயம் அவன் அதிருப்தி கொள்வான். தன் அதிருப்தி குறித்து எதுவும் செய்ய இயலாத நிலையில் அவன் தனியனாகவே திரும்பிப் போக வேண்டியிருக்கும். தனியன் - அதற்கு என்ன அர்த்தமென்று உனக்குத் தெரியுமா?'' "அதுசரி, ஆனால் நம் திருமணம் பற்றி வேறு எந்த வகையிலாவது அவர் கேள்விப்படமாட்டாரா?'' "எனனால் அதைத் தடுக்க முடியாது என்பதென்னவோ உண்மைதான்; ஆனால் அவன் வாழும் விதத்தைப் பார்க்கும்போது அநேகமாக அப்படியேதும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.'' "உங்கள் நண்பர்கள் அப்படியிருக்கும்பட்சத்தில், ஜார்ஜ், நீங்கள் ஒருபோதும், நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருக்கக்கூடாது.'' "அது சரி, ஆனால் அதற்கு நம் இருவரையும் தானே குறை சொல்ல வேண்டும். இப்போது என்னால் வேறொன்றும் செய்ய முடியாது.'' அதன் பிறகு, அவனின் முத்தங்களால் வேகவேகமாக மூச்சு வாங்கிய அவள், "எல்லாமே ஒன்றுதான்; நானும்கூட மனம் குலைந்துதான் இருக்கிறேன்.'' ஒருவேளே, தானே தன் நண்பனுக்குத் தகவல் தெரிவித்தாலும் அதனால் தனக்கொன்றும் தொந்தரவு வந்துவிடாது என்று அவன் நினைத்தான். "என் சுபாவம் அப்படி, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் அவன் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். "அவனுக்கு ஏற்றபடி என்னை நான் வேறுவிதமாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.''

ஆனால், உண்மை என்னவென்றால், அந்த ஞாயிற்றுக்கிழமை காலை, அவன் எழுதிய நீண்டதோர் கடிதத்தில் தன் நிச்சயதார்த்தம் பற்றித் தன் நண்பனுக்கு இத்தகைய வார்த்தைகளில் தெரியப்படுத்தி இருந்தான்: "ஒரு நல்ல செய்தியைக் கடைசியாக எழுதலாமென்று இருந்தேன். ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென்ஃபெல்டு என்ற வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு எனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நீ ஊரை விட்டுப் போய் வெகு காலத்துக்குப் பின் இங்கு வசிக்க வந்தவள் அவள். எனவே, அவளைப் பற்றி உனக்கு எதுவுமே தெரிந்திருக்காது. அவளைப் பற்றி மேலும் பல விஷயங்களைச் சொல்ல பின்னர் அவகாசமிருக்கும். நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை மட்டும் இன்று சொல்கிறேன். உன்னையும் என்னையும் பொறுத்தவரை நம் உறவில் ஏற்பட்டிருக்கும் ஒரே மாறுதல், மிகச் சாதாரணமானவனாய் இருந்ததற்குப் பதிலாக, ஒரு சந்தோஷமான நண்பனாக இன்று நான் உன்னில் இருக்கிறேன் என்பதுதான். இது ஒருபுறமிருக்க, நான் மணக்கவிருக்கும் பெண், தன் உளம் கனிந்த வாழ்த்துகளை உனக்குத் தெரிவிக்கிறாள். மேலும், அவளே உனக்கு வெகு விரைவில் கடிதம் எழுத இருக்கிறாள். இதன் மூலம் நீ ஒரு உண்மையான தோழியைப் பெறுகிறாய். ஒரு பிரமச்சாரிக்கு இதைவிட வேறென்ன வேண்டும். எங்களைப் பார்ப்பதற்கு உன்னால் வர முடியாது என்பதற்கான பல்வேறு காரணங்களையும் நான் அறிவேன். ஆனால் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு நீ இங்கு வருவதற்கு இது ஒரு சரியான தருணமாக அமையாதா? எனினும், என்னவாகவும் இருக்கட்டும், உன்னுடைய சொந்த நலன்களைத் தவிர வேறெதையும் பொருட்படுத்தாது, உனக்கு எது நல்லதென்று படுகிறதோ அதையே செய்.''

ஜார்ஜ் இக் கடிதத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு, எழுது மேஜையின் முன் முகம் ஜன்னலைப் பார்த்துத் திரும்பியிருக்க, வெகுநேரம் உட்கார்ந்திருந்தான். தெருவில் கடந்துபோன அறிமுகமான ஒருவர் அவனைப் பார்த்துக் கையசைத்ததை அவன் வெறுமனே புன்சிரிப்பின்றி ஏற்றுக்கொண்டான்.

கடைசியாக அவன், அந்தக் கடிதத்தைத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அறையைவிட்டு வெளியேறி, சிறிய தாழ்வாரத்தைக் கடந்து, பல மாதங்கள் அவன் நுழைந்திராத, தன் தந்தையின் அறைக்குள் சென்றான். அவன் தினமும் வியாபார ஸ்தலத்தில் தன் தந்தையைப் பார்ப்பதாலும், அவர்கள் இருவரும் ஒரு உணவு விடுதியில் ஒன்றாகவே மதிய உணவைச் சாப்பிடுவதாலும் உண்மையில் அங்கு செல்ல அவனுக்கு எந்தவித அவசியமும் இருக்கவில்லை. மாலை நேரத்தை அவர்கள் தங்கள் விருப்பப்படி கழிப்பார்கள். பெரும்பாலும் , ஜார்ஜ் தன் நண்பர்களோடு வெளியில் செல்வான். சமீப நாட்களாக அவன் தன் மணப் பெண்ணைச் சந்திக்கச் சென்றான். மற்றபடி, பொதுவாக அவர்கள், வீட்டின் பொது அறையில் அவரவரின் செய்தித்தாளோடு சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.

சூரிய வெளிச்சம் நிறைந்த அந்தக் காலை நேரத்தில்கூட, தந்தையின் அறை இருட்டாக இருந்தது ஜார்ஜ்க்கு வியப்பளித்தது. குறுகலான வராந்தாவுக்கு மறுபுறமிருந்த உயரமான சுவரும் சேர்ந்து அந்த அறையில் இருளை நிரப்பியிருந்தது. ஜார்ஜின் இறந்துபோன அம்மாவின் பல்வேறு ஞாபகார்த்தச் சின்னங்களைத் தாங்கிய ஜன்னலருகே ஒரு மூலையில் உட்கார்ந்தபடி அவனுடைய தந்தை பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். பார்வைக் கோளாறைச் சமாளிக்கும் வகையில் அவர் அந்தப் பத்திரிகையைத் தன் கண்களினருகே ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்துக் கொண்டிருந்தார். மேஜையின் மீது அவரின் காலை உணவு, அதன் பெரும்பகுதி சாப்பிடப்படாமல் மிச்சம் வைக்கப்பட்டிருந்தது.

"ஆ, ஜார்ஜ்'' என்றபடி அவனுடைய தந்தை அவனைச் சந்திப்பதற்காக சட்டென எழுந்தார். அவர் நடந்து வந்தபோது, அவருடைய கனத்த அங்கி பிரிந்து அசைந்தாடியபடி அவரைச் சூழ்ந்தது. "என் தந்தை இப்போதுகூட ஒரு பிரும்மாண்டமான மனிதர்தான்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"இங்கு இருள் சகிக்க முடியாதபடி இருக்கிறது'' என்று அவன் சத்தமாகச் சொன்னான்.

"ஆம், இருட்டாகத்தான் இருக்கிறது'' அவனுடைய தந்தை பதில் சொன்னார்.

"மேலும் நீங்கள் ஜன்னலை வேறு சாத்தியிருக்கிறீர்கள்.''

"அது அப்படி இருப்பதையே நான் விரும்புகிறேன்.''

ஏதோ தான் முன்னர் சொன்னதன் தொடர்ச்சியாகவே சொல்வதுபோல, "நல்லது, வெளியே மிகவும் கதகதப்பாக இருக்கிறது'' என்று கூறியபடி ஜார்ஜ் உட்கார்ந்தான்.

அவனுடைய தந்தை காலை உணவுத் தட்டுகளை அப்புறப்படுத்தி அவற்றை உரிய இடத்தில் அடுக்கி வைத்தார்.

அந்த வயதான மனிதரின் சலனங்களை வெறுமையாகத் தொடர்ந்து கவனித்தபடி ஜார்ஜ் சொல்லத் தொடங்கினான்: "என் நிச்சயதார்த்தம் பற்றிய தகவலை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு நான் இப்போது தெரியப்படுத்த இருப்பதை உங்களிடம் சொல்லிவிடவே உண்மையில் நான் விரும்பினேன்.'' தன் பாக்கெட்டிலிருந்து கடிதத்தத்தைச் சற்றே வெளியிலெடுத்துவிட்டு மீண்டும் அதை உள்ளேவிட்டுக் கொண்டான்.

"செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கா?'' தந்தை கேட்டார்.

"அங்குள்ள என் நண்பனுக்கு.'' தந்தையின் கண்களைச் சந்திக்க முயற்சித்தவாறு ஜார்ஜ் சொன்னான். வியாபார நேரங்களில் அவர் முற்றிலும் வேறு மாதிரி இருப்பார் என்று அவன் நினைத்தான். தன் கைகளை குறுக்காக மடித்துக்கொண்டு எவ்வளவு நிதானமாக அவர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்.

"ஓ, அப்படியா. உன் நண்பனுக்கா'' என்று அவனுடைய தந்தை விநோதமான அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.

"ஆம், தந்தையே. என் நிச்சயதார்த்தம் குறித்து முதலில் நான் அவனுக்குச் சொல்ல விரும்பவில்லை. அவன் நிலைமையைக் கணக்கில் கொண்டதுதான் இதற்கான ஒரே காரணம். அவன் அசாதரணமான மனிதன் என்பது உங்களுக்கே தெரியும். என் நிச்சயதார்த்தம் பற்றி வேறு யாரேனும் அவனுக்குச் சொல்லி விடுவார்கள் என்று எண்ணினேன். அது அப்படி நடக்க முடியாத அளவுக்கு அவன் அசாத்தியமான நபர் என்ற போதிலும் - அப்படி நடப்பதை என்னால் தடுக்க முடியாது - நானாக அவனிடம் சொல்லப் போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.''

"நீ இப்போது உன் மனதை மாற்றிக்கொண்டுவிட்டாய், இல்லையா?'' என்றபடி அவனுடைய தந்தை, தனது கனத்த செய்தித்தாளை ஜன்னல் விளிம்பில் வைத்துவிட்டு அதன் மீது தன் கண்ணாடியை வைத்து அதை ஒரு கையால் பொத்திக் கொண்டார்.

"ஆம், அதுபற்றி நான் மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். அவன் என்னுடைய நல்ல நண்பனாக இருக்கும்பட்சத்தில், என் நிச்சயதார்த்தம் எனக்கு சந்தோஷம் தந்திருப்பதுபோல அவனையும் சந்தோஷப்படுத்தும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எனவே, இனியும் அவனுக்குத் தெரியப்படுத்துவதை நான் தள்ளிப் போடக்கூடாது. ஆனால் அதை அஞ்சல் செய்வதற்கு முன்னால் உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டுமென விரும்பினேன்''

"ஜார்ஜ்'' தன் பொக்கை வாயை விரித்தபடி, அவனுடைய தந்தை சொன்னார். "நான் சொல்வதைக் கேள்! இந்த விஷயம் குறித்து என்னுடன் கலந்து பேச நீ வந்திருக்கிறாய். நீ வைத்திருக்கும் மதிப்பை அது உணர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீ என்னிடம் முழு உண்மையையும் சொல்லாத பட்சத்தில் இது ஒரு விஷயமே இல்லை சும்மா இருப்பதைவிட இது மோசமானது. இங்குக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லாத விஷயங்களை எல்லாம் நான் கிண்டிக் கிளற விரும்பவில்லை. நம் அன்பான அம்மா இறந்து போனதற்குப் பிறகு, முறையற்ற பல காரியங்கள் நடந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி நாம் பேசவேண்டிய நேரம் வரும். நாம் எதிர்ப்பார்ப்பதை விடவும் சீக்கிரமாகவே அது வரக்கூடும். எனக்குத் தெரியவராமல் வியாபாரத்தில் பல காரியங்கள் நடக்கின்றன; என் முதுகுக்குப் பின்னால் அவை நடக்காமல் இருக்கலாம். என் முதுகுக்குப் பின்னால் நடக்கின்றன என்று நான் சொல்லப்போவதில்லை. இனியும் என்னால் காரியங்களோடு போட்டி போட்டுக்கொண்டிருக்க முடியாது; என் ஞாபக சக்தியும் மங்கி வருகிறது. இனி மேற்கொண்டு பல்வேறு காரியங்களை என்னால் கண்காணிக்க முடியாது. அதற்குக் காரணம், முதலாவதாக இயற்கையின் கதி; இரண்டாவதாக, நம் அன்பான அம்மாவின் மரணம் உன்னைவிடவும் என்னை அதிகமாகப் பாதித்திருக்கிறது என்பது. ஆனாலும் நாம் இதைப் பற்றி, இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். ஜார்ஜ், என்னை ஏமாற்றாதே. உனக்கு அப்படியொரு நண்பன் உண்மையிலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருக்கிறானா?''

தர்மசங்கடத்துக்குள்ளான நிலையில் ஜார்ஜ் எழுந்தான். "என் நண்பர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். ஓராயிரம் நண்பர்கள் சேர்ந்தாலும் என்னைப் பொறுத்தவரை, அவர்கள் என் தந்தைக்கு ஈடாக மாட்டார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களைக் கவனித்துக் கொள்வதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை. ஆனால் முதுமையில் கண்டிப்பாகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இல்லாமல் என்னால் வியாபாரத்தைக் கவனிக்க முடியாது; அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் அந்த வியாபாரம் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் என்றால் நாளைக்கே அதை ஒரேடியாக இழுத்து மூடிவிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படப் போவதில்லை. உங்கள் வாழ்க்கை முறையில் நாம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியாக வேண்டும். ஒரு தீவிரமான மாறுதல். நீங்கள் இங்கு இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள். வரவேற்பறையில் இருந்தால் போதுமான வெளிச்சம் கிடைக்கும். உங்களின் வலிமையை முறையாகப் பேணுவதற்குப் பதில் காலை உணவாக ஏதோ கொஞ்சம் கொறிக்கிறீர்கள். ஜன்னலை மூடிவிட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். ஆனால் காற்று உங்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கும், இல்லை அப்பா! நான் மருத்துவரை வரவழைக்கிறேன். நாம் அவர் சொல்லுகிறபடி கேட்போம். நாம் உங்கள் அறையை மாற்றுவோம். நீங்கள் முன்னறைக்குச் சென்று விடுங்கள்; நான் இங்கு வந்துவிடுகிறேன். உங்களுக்கு மாற்றம் தெரியாது; உங்கள் பொருள்களனைத்தும் உங்களோடு வந்துவிடும். ஆனால் அதையெல்லாம் செய்யப் பின்னர் அவகாசமிருக்கிறது.

இப்போது கொஞ்ச நேரம் உங்களைப் படுக்க வைக்கிறேன். உங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு அவசியம். வாருங்கள், உங்கள் பொருள்களை எடுத்துக்கொள்ள நான் உதவி செய்கிறேன். என்னால் அதைச் செய்ய முடிவதை நீங்கள் பார்க்கலாம். அல்லது, உடனடியாக நீங்கள் முன்னறைக்குப் போவதாக இருந்தால், இப்போதைக்கு அங்கு நீங்கள் என் படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். அதுதான் மிகச் சரியானதாக இருக்கும்.''

குலைந்து கிடந்த நரைமுடிகளோடு தலை தாழ்த்தியிருந்த தந்தைக்கு நெருக்கமாக ஜார்ஜ் நின்றுகொண்டிருந்தான்.

சற்றும் அசையாமல், மெதுவான குரலில், "ஜார்ஜ்'' என்றார் தந்தை.

உடனடியாக ஜார்ஜ் தந்தைக்கருகே மண்டியிட்டான். சோர்வுற்றிருந்த அந்த வயதான மனிதரின் முகத்தை அவன் பார்த்தபோது, மிகப் பெரிய கருவிழிகள் கண்களின் ஓரங்களிலிருந்து தன்னை நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.

"உனக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஒரு நண்பன் இருக்கிறான். நீ எப்போதுமே காலை வாரி விடுபவன்; என் காலை வாரவும் நீ தயங்கவில்லை. உனக்கு அங்கு எப்படி ஒரு நண்பன் இருக்க முடியும்! நான் அதை நம்பவில்லை.''

"பழையவற்றைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், அப்பா'' என்றான் ஜார்ஜ். நாற்காலியிருந்து அவரை எழும்பி நிற்கச் செய்து, அவருடைய அங்கியைச் கழற்றியபோது அவர் பலஹீனமாய் நின்றுகொண்டிருந்தார். "என்னுடைய நண்பன் கடைசியாக நம்மைப் பார்க்க வந்து அநேகமாக மூன்று வருடங்களாகப் போகின்றன. உங்களுக்கு அவனை அவ்வளவாகப் பிடிக்காது என்பது எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு முறையாவது, உண்மையில் அவன் அப்போது என்னோடு என் அறையில்தான் இருந்தான் என்றபோதிலும், அவனைப் பார்க்க விடாது உங்களைத் தடுத்திருக்கிறேன். அவனை உங்களுக்குப் பிடிக்காது என்பதை நான் மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருந்தேன்; என் நண்பனுக்கென்று சில சுபாவங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் பிறகு, பிந்தைய நாட்களில் நீங்கள் அவனோடு மிக நன்றாகவே பழகினீர்கள். நீங்கள் அவன் சொல்வதைக் கேட்டபடி தலையசைத்தது மட்டுமல்லாமல், அவனிடம் கேள்விகளும் கேட்டபோது நான் பெருமிதமடைந்தேன். நீங்கள் மறுபடியும் யோசித்துப் பார்த்தால் நிச்சயம் அது உங்கள் நினைவுக்கு வரும். ரஷ்யப் புரட்சி பற்றி மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய கதைகளை அவன் நமக்குச் சொல்வது வழக்கம். உதாரணமாக ஒரு முறை அவன் வியாபார நிமித்தமாக கீவ்வுக்குப் போனபோது அங்கு கலவரம் தொடங்கியிருந்தது. ஒரு மதகுரு பால்கனியில் நின்றுகொண்டு, தன் உள்ளங்கையில் ஒரு பெரிய சிலுவையைக் கீறி, ரத்தம் தோய்ந்த கையை உயர்த்தி, ஜனத்திரளிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்தது.

அதற்குப் பின்னர், நீங்களேகூட அந்தக் கதையை ஓரிரு முறை கூறியிருக்கிறீர்கள்.''

இதற்கிடையே, ஜார்ஜ் தன் தந்தையைத் திரும்பவும் மெதுவாகத் தாழ்த்தி உட்கார வைத்துவிட்டான். மேலும், லினன் உள்ளாடைக்கு மேலாக அவர் அணிந்திருந்த கம்பளி உள்ளாடைகளையும், காலுறைகளையும் கவனமாகக் கழற்றினான். அந்த உள்ளாடை சுத்தமாக இல்லாததற்கு தனது உதாசீனமே காரணமென்று தன்னைத்தானே கடிந்து கொண்டான். தன் தந்தை உள்ளாடைகளை மாற்றிக்கொள்ளும் வகையில் கவனம் எடுத்துக் கொள்வதைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் தன் தந்தைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி அவன் தன் மணப்பெண்ணிடம் இதுவரை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவில்லை.

அந்த வயதான மனிதர் அந்தப் பழைய வீட்டிலேயே தொடர்ந்து தனியாக வசிப்பார் என்று அவர்கள் தங்களுக்குள்ளாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது, எதிர்காலத்தில் தான் குடிபுக இருக்கும் தன்னுடைய இடத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டுமென அவன் தீர்மானமான உடனடி முடிவொன்றை எடுத்தான். அங்கே தன் தந்தையை வெகுவாகச் சீராட்டிப் பராமரிக்க வேண்டுமென்று அவன் எடுத்த முடிவானது மிக உன்னிப்பாக அவதானித்தபோது, காலம் கடந்து எடுக்கப்பட்டதாகவே கிட்டத்தட்ட தோன்றியது.

அவன் தன் தந்தையைப் படுக்கைக்குத் தூக்கிச் சென்றான். அந்த வயதான மனிதரைத் தன் நெஞ்சோடு தாங்கி, படுக்கையை நோக்கி சில எட்டுகள் தூக்கிச் சென்றபோது, அவர் தன் கடிகாரம் செயினுடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்த அவன் அச்சமடைந்தான். அவரைப் படுக்கையில் கிடத்த அவனால் ஒரு கணம் முடியாமல் போகுமளவுக்கு அவர் கடிகாரச் செயினை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் படுக்கையில் படுத்துவிட்ட உடனே, எல்லாமே நல்லபடியாக நடந்துவிட்டதுபோல் தோன்றியது. அவர் தன்னைப் போர்த்திக் கொண்டதோடல்லாமல், போர்வையை வழக்கத்துக்கு மாறாக, தோளுக்கு மேலாக இழுத்து விட்டுக்கொண்டார். ஜார்ஜை நிமிர்ந்து கடுமையின்றிப் பார்த்தார்.

"நீங்கள் என் நண்பனை இப்போது நினைவுபடுத்திக் கொண்டிருப்பீர்கள் இல்லையா?'' என்று அவரை உற்சாகப்படுத்தும் வகையில் தலையசைத்தவாறே ஜார்ஜ் கேட்டான்.

கால்கள் சரியாகப் போர்த்தப்பட்டிருக்கின்றனவா என்பதைத் தன்னால் பார்க்க முடியாமலிருக்கிறது என்பதுபோல, "இப்போது நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை கேட்டார்.

"ஆக, படுக்கையின் கதகதப்பை உணரத் தொடங்கிவிட்டீர்கள்'' என்றான் ஜார்ஜ். மேலும், கம்பளியை அவரைச் சுற்றி இன்னும் நெருக்கமாகப் போர்த்திவிட்டான்.''

"நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை ஏதோ அதற்கான பதிலில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது என்பதுபோல மீண்டுமொரு முறை கேட்டார்.

"கவலைப்படாதீர்கள். நீங்கள் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறீர்கள்.''

"இல்லை!'' என்று கத்தியபடி அவனுடைய தந்தை, ஜார்ஜை பதில் பேசவிடாமல், ஒரு நொடியில் எல்லாவற்றையும் பறக்கடிக்கும் வகையில், கம்பளிகளைப் பலமாக உதறி எறிந்து விட்டு, குதித்தெழுந்து படுக்கையில் நிமிர்ந்து நின்றார். அவரை ஸ்திரப்படுத்துவதற்காக ஒரே ஒரு கை மட்டும் லேசாக உத்தரத்தைத் தொட்டது.

"எனக்குத் தெரியும், என் இளம் குருத்தே! நீ என்னை மூடி விட விரும்புகிறாய். ஆனால் நான் மூடப்படுவதற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது. ஒருவேளை, இதுதான் என் கடைசித் துளி பலமென்றாலும் கூட உன்னைச் சமாளிக்க இதுவே அதிகம். உன் நண்பனை எனக்குத் தெரியும் என்பது உண்மைதான். அவன் எனக்கு மகனாகப் பிறந்திருக்க வேண்டும் என்று நான் மனதார நினைக்கிறேன். அதனால்தான் நீ இவ்வளவு வருடங்களாக அவனோடு ஒரு பொய்யான விளையாட்டு விளையாடி வந்திருக்கிறாய். வேறென்னவாக இருக்க முடியும்? அவனுக்காக நான் வருத்தப்படவில்லை என்று நீ நினைக்கிறாய்? அதன் காரணமாகத்தான் உன்னையே நீ உன் அலுவலகத்தில் பூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று - தலைமையாளர் மிகவும் முக்கியமான அலுவலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது - அப்போதுதானே உன்னால் பொய்யான சிறு கடிதங்களை ரஷ்யாவுக்கு எழுத முடியும். ஆனால், நல்ல வேளையாக, மகனின் உள்நோக்கங்களை அறிந்துகொள்ள ஒரு அப்பாவுக்கு எவரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது அவனைக் கீழே தள்ளிய பிறகு, எந்த அளவுக்குத் தள்ளினால் அவன்மீது அமர்ந்து கொண்டு அவனை நகரவிடாமல் செய்ய முடியுமோ அந்த அளவுக்குத் தள்ளிவிட்ட பிறகு, என் அருமை மகன் திருமணம் செய்து கொள்ளத் தன் மனதைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.''

தந்தை தன் மந்திர சக்தியால் உருவாக்கிய பிசாசை ஜார்ஜ் வெறித்துப் பார்த்தான். செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் அவனுடைய நண்பன் - திடீரென அவனை அவனுடைய தந்தைக்கு நன்கு தெரிந்திருந்தது - முன் எப்போதும் தோன்றியிராத வகையில் இப்போது கற்பனையில் தெரிந்தான். ரஷ்யாவின் விரிந்து பரந்த பரப்பில் தோற்றுப் போனவனாகத் தெரிந்தான். சூறையாடப்பட்டுக் காலியாகக் கிடந்த கிடங்கின் வாசலில் அவனைக் கண்டான். சரக்கு அலமாரிகளின் சேதங்களுக்கிடையே, சிதறிக் கிடந்த மிச்சமீதி சரக்குகளுக்கிடையே வாயுக் குழாய்கள் நொறுங்கி வீழ்ந்துகொண்டிருக்க அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். இவ்வளவு தொலை தூரத்துக்கு அவன் ஏன் போயிருக்க வேண்டும்!

"முதலில் நான் சொல்வதைக் கேள்!'' அவனுடைய தந்தை கத்தினார். எல்லாவற்றையும் எடுத்து வைப்பதற்காகப் படுக்கையை நோக்கி ஓடிய ஜார்ஜ், கிட்டத்தட்ட தடுமாறிய நிலையில், பாதி வழியில் நிற்க வேண்டியதாயிற்று.

"அவள் தன் பாவாடையைத் தூக்கியதற்காக'' அவன் தந்தை மீண்டும் தொடங்கினார்.

"அவள், அந்த அசிங்கமான பிறவி, தன் பாவாடையை இப்படித் தூக்கியதற்காக.'' அவளைப் போன்று பாவனை செய்தபடி, யுத்தத்தின்போது அவருக்குத் தொடையில் ஏற்பட்டிருந்த காயத்தை ஒருவரால் பார்க்க முடியுமளவுக்கு, தன் சட்டையை மிக

உயரமாகத் தூக்கினார்.

"அவள் தன் பாவாடையை இப்படித் தூக்கியதும் நீ அவளிடம் மயங்கியதோடு

மட்டுமல்லாமல் அவளோடு எவ்விதத் தொல்லையுமின்றி சுதந்திரமாக சல்லாபம் செய்வதற்காக உன் அம்மாவின் ஞாபகார்த்தத்துக்கு ஊறு விளைவித்ததோடு, உன் நண்பனுக்கும் துரோகம் இழைத்தாய்; உன் அப்பாவையும், அவரால் எழுந்து நடமாட முடியாதபடி படுக்கையில் கிடத்தினாய், ஆனால் அவரால் நடமாட முடியும்; முடியாதா

என்ன?''

எவ்வித உறுதுணையுமின்றி அவர் எழுந்து நின்று தன் கால்களை உதறிக் கொண்டார். அவரின் உள்ளொளி அவரைப் பிரகாசிக்கச் செய்தது.

ஜார்ஜ் ஒரு மூலையில், தந்தையிடமிருந்து எந்த அளவுக்கு விலகி நிற்க முடியுமோ அந்த அளவு தள்ளி, ஒடுங்கி நின்றான். மறைமுகத் தாக்குதலின்போது-பின்னாலிருந்தோ, மேலிருந்தோ நிகழும் திடீர்ப் பாய்ச்சலின்போது - தான் திகைத்துப் போய்விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு சிறு அசைவையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பழகிக்கொள்ள வேண்டுமென வெகு காலத்துக்கு முன்பு அவன் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டிருந்தான். இந்தக் கணத்தில் அவன் தன் பழைய மறந்துபோன தீர்மானத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து திரும்பவும் மறந்து போனான் - ஊசிமுனையில் நூல் கோக்கும் ஒருவனைப் போல.

"ஆனால் அப்படியெல்லாம் உன் நண்பனுக்குத் துரோகம் இழைக்கப்பட்டு விடவில்லை'' என்று கத்தியபடியே அவனுடைய தந்தை அதை வலியுறுத்தும் வகையில் தன் ஆள்காட்டி விரலால் குத்திக் குத்திக் காட்டினார். "இங்கு, இந்த இடத்தில் அவனுக்குப் பதிலாக நானிருக்கிறேன்.''

"இதென்ன கோமாளித்தனம்.'' நறுக்கென்று பதில் சொல்வதை ஜார்ஜால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் கணமே நடந்துவிட்ட தவறை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டான். அவன் கண்களில் பயம் தெரிந்தது. வேதனையில் முழங்கால்கள் தள்ளாடின.

"ஆம், நான் கோமாளித்தனம்தான் புரிகிறேன். கோமாளித்தனம்! அது ஒரு சரியான வெளிப்பாடு! மனைவியை இழந்துவிட்ட ஒரு பாவப்பட்ட கிழவனுக்கு வேறென்ன சௌகர்யம் எஞ்சியிருக்க முடியும்? சொல் - நீ பதில் சொல்லும்போது, உயிரோடிருக்கும் என் மகனாகவே இருந்து சொல் - விசுவாசமற்ற ஊழியர்களால் பீடிக்கப்பட்டு, எலும்பும் சதையுமாக வற்றிப்போய், பின்புற அறையில் கிடக்கும் எனக்கு வேறென்னதான் மிச்சமிருக்கிறது? ஆனால் என் மகனோ இந்த உலகினூடே பகட்டாய் நடைபோட்டு, நான் அவனுக்காகத் தயாரித்துக் கொடுத்திருந்த வணிக ஒப்பந்தங்களை முடித்துவிட்டு, வெற்றிக் களிப்பில் எக்காளமிட்டபடி, ஒரு மரியாதைக்குரிய வர்த்தகப் பிரமுகரின் இறுகிய முகத்தோடு தன் தந்தையிடமிருந்து கம்பீரமாக விலகிச் செல்கிறான்! நான் உன்னை நேசிக்கவில்லை என்றா நீ நினைக்கிறாய். நானா! நீ யாரிடமிருந்து குதித்து வந்தாய்?''

இப்போது அவர் முன்பக்கமாகச் சாய்ந்து விடுவார் என்று ஜார்ஜ் நினைத்தான். அப்படியே குப்புற விழுந்து அவர் தன்னைத் தானே சிதைத்துக் கொண்டால் என்ன! இந்த வார்த்தைகள் அவன் மனதிற்குள் சீறும் சப்தமாய் நுழைந்தன.

அவன் தந்தை முன்பக்கமாகச் சாய்ந்தபோதிலும் குப்புற விழவில்லை. அவர் எதிர்பார்த்தபடி ஜார்ஜ் கொஞ்சம்கூட அருகில் வராததால் தானாகவே தன்னை நிமிர்த்திக் கொண்டார்.

"நீ இருக்குமிடத்திலேயே இரு, உன் உதவி எனக்குத் தேவையில்லை! என்னருகே வருவதற்குரிய பலம் உனக்கிருப்பதாகவும், உன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பின்னால் நின்று கொண்டிருப்பதாகவும் நீ நினைக்கிறாய். ரொம்பவும் நினைத்துக் கொள்ளாதே! நம் இருவரில் இப்பவும் நான்தான் அதிக பலசாலி. நான் மட்டுமே தனியாக இருந்திருந்தால் ஒதுங்கி வழி விட்டிருப்பேன்; ஆனால் உன் தாயார் அவளுடைய சக்தி முழுவதையும் எனக்குத் தந்திருப்பதால் நான் உன் நண்பனுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதோடு, உன் வாடிக்கையாளர்களையும் இங்கே என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.''

"அவர் தன் சட்டையில்கூட பாக்கெட்டுகள் வைத்துக் கொண்டிருக்கிறார்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான். மேலும், இந்தக் குறிப்பின் மூலம் உலகின் முன் அவரை ஒன்றுமில்லாதவராக ஆக்கிவிட முடியுமென்று நம்பினான். ஆனால் எல்லாவற்றையும் அவன் உடனுக்குடன் மறந்து கொண்டிருந்ததால், ஒரு கணம்தான் அப்படி

யோசித்தான்.

"நீ மட்டும் உன் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு என் வழியில் குறுக்கிட முயற்சி செய், பார்க்கலாம்! உன்னிடமிருந்தே அவளை ஒதுக்கித் தள்ளிவிடுவேன். எப்படி என்பது உனக்குத் தெரியாது!''

நம்பிக்கையின்றி ஜார்ஜ் முகம் சுளித்தான். தன் வார்த்தைகளின் உண்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஜார்ஜ் இருந்த திசையை நோக்கி அவனுடைய தந்தை தலையை மட்டும் அசைத்தார்.

"உன் நிச்சயதார்த்தம் பற்றி உன் நண்பனுக்குத் தெரிவிக்கலாமா என்று என்னிடம் கேட்பதற்கு வந்ததாக நீ இன்று என்னிடம் எப்படி ஒரு விளையாட்டுக் காட்டினாய். அவனுக்கு முன்பே தெரியும்; முட்டாளே, அவனுக்கு எல்லாமே தெரியும்! நான் அவனுக்கு எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் - என்னிடமிருந்து என் எழுதுபொருள்களை

எடுத்துவிட நீ மறந்துவிட்டாய். அதனால்தான் அவன் வருடக்கணக்காக இங்கு வரவில்லை; உனக்குத் தெரிந்திருப்பதை விட அவனுக்கு எல்லாமே நூறு மடங்கு நன்றாகத் தெரியும். தன் வலது கையில் என் கடிதங்களைப் படிப்பதற்காகப் பிடித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், தன் இடது கையால் அவன் உன் கடிதங்களைப்

பிரிக்காமலேயே கசக்கி எறிவான்!''

உற்சாக மிகுதியில் தன் தலைக்கு மேலாகக் கையை அசைத்தாட்டினார்.

"அவனுக்கு எல்லாமே ஆயிரம் மடங்கு நன்றாகத் தெரியும்!'' அவர் கத்தினார்.

"பத்தாயிரம் மடங்கு'' என்று தந்தையைக் கேலிக்குள்ளாக்கும் நினைப்பில் ஜார்ஜ் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவன் நாவிலேயே மிகவும் மனப்பூர்வமானவையாக உருமாறி விட்டன.

"இது போன்றதொரு கேள்வியோடு நீ வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்தேன்! நான் வேறெதிலாவது என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன் என்று நீ நினைக்கிறாயா? நான் என் பத்திரிகைகளைப் படிக்கிறேன் என்றா நீ நினைக்கிறாய்? பார்!'' அவர் எப்படியோ தன்னோடு படுக்கைக்கு எடுத்துக்கொண்டு வந்திருந்த ஒரு பத்திரிகைத் தாளை ஜார்ஜிடம் எறிந்தார். அதன் பெயரைக்கூட ஜார்ஜ்

கேள்விப்பட்டிராத அளவுக்கு அது ஒரு பழைய பத்திரிகை.

"நீ வளர்ந்து ஆளாவதற்குத்தான் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாய்! உன் அம்மா, சந்தோஷமான நாளைப் பார்க்காமலேயே இறக்க வேண்டியதாயிற்று. ரஷ்யாவில் உன் நண்பன் தூள் தூளாக நொறுங்கிக் கொண்டிருக்கிறான்; மூன்று வருடங்களுக்கு முன்பே தூக்கியெறிப்படும் அளவு மஞ்சளாகி விட்டிருந்தான். என்னைப் பொறுத்தவரை, நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை நீயே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இதையெல்லாம் பார்க்க உனக்கு உன் தலையில் கண்கள் இருக்கின்றன!''

"ஆக, படுத்தபடியே எனக்காகக் காத்துக் கொண்டு இருந்திருக்கிறீர்கள்!'' ஜார்ஜ் கத்தினான்.

அவன் தந்தை இரக்கத்தோடு, முன்தீர்மானம் ஏதுமின்றிச் சொன்னார் : "நீ இதை விரைவில் சொல்ல விரும்புகிறாய் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அது ஒரு விஷயமில்லை.'' பின்னர் உரத்த குரலில் : "ஆக உன்னைத் தவிரவும் உலகில் வேறென்ன எல்லாம் இருக்கின்றன என்பதை இப்போது நீ அறிந்து கொண்டிருப்பாய்; இவ்வளவு காலமும் நீ உன்னைப் பற்றி மட்டுமே தெரிந்து கொண்டிருந்தாய்! ஒன்றுமறியாக் குழந்தை! உண்மைதான், நீ அப்படித்தான். ஆனால் அதை விடவும் பேருண்மை நீ ஒரு மனிதப் பிசாசாக இருந்திருக்கிறாய் என்பது. எனவே நீ குறித்துக் கொள்; நீரில் மூழ்கி நீ உயிர்விட வேண்டுமென நான் தீர்ப்பு வழங்குகிறேன்.''

அறையை விட்டு உடனடியாக வெளியேறி விட அவன் மனம் பரபரத்தது. அவனுக்குப் பின்னால் அவனுடைய தந்தை பொத்தென்று படுக்கையில் விழுந்த சப்தம், அவன் வெளியேறிய போது காதுகளில் விழுந்திருந்தது. படிக்கட்டுகளில் அவன், ஏதோ அந்தப் படிகள் சரிவான தளம் கொண்டிருப்பதைப் போல இறங்கியபோது, காலை

நேர சுத்தப்படுத்தலுக்காக மாடி அறையை நோக்கி மேலேறிக் கொண்டிருந்த அவனுடைய வேலைக்காரியைக் கடந்தான். 'ஏசுவே' என்று கத்தியபடி அவள் முகப்புத் துணியால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். ஆனால் அதற்குள் அவன் சென்றுவிட்டிருந்தான். முன்வாசல் வழியாக, சாலையைக் கடந்து, தண்ணீரை நோக்கி உந்தப்பட்டு அவன் விரைந்தான். ஏற்கெனவே அவன் பாலcmohanத்தின் கிராதிகளை, பசியால் வாடும் மனிதன் உணவை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதுபோல, பற்றியிருந்தான். ஒரு உடற்பயிற்சி வித்தைக்காரனைப் போல - அவனே அப்படியான ஒரு ஆளாக தன் இளமையில் ஒரு சமயம், பெற்றோர்கள் பெருமிதப்படும்படி இருந்திருக்கிறான் - அவன் அதன்மீது ஊசலாடினான். பிடிமானம் தளர்ந்து, அவன் இன்னமும் பற்றிக் கொண்டிருந்த சமயத்தில், பஸ் ஒன்று வருவதை,

அவன் விழுவதால் ஏற்படும் சத்தத்தை அது சுலபமாக அமுக்கி விடுமென்பதை, கிராதிகளுக்கிடையே ரகசியமாக அறிந்ததும், தாழ்ந்த குரலில் : "அன்புப் பெற்றோரே, நான் எப்போதுமே உங்களை நேசித்திருக்கிறேன் - ஒரே மாதிரியாக'' என்று கூறியபடி குதித்தான்.

இந்தச் சமயத்தில் பாலத்தின்மீது முடிவுறாத போக்குவரத்து தொடர்வரிசையாக தன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

*******

ஃப்ரன்ஸ் காஃப்கா (1883 - 1924)

இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய படைப்பாளி காஃப்கா. பகட்டுகளற்ற, ஆனால் புதிர்கள் நிறைந்த மொழி இவருடையது.

1883- ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி செக்கோஸ்லோவாகியா நாட்டின் தலைநகரான ப்ராகில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். யூதர், தாய்மொழி ஜெர்மன். அவருடைய மொழி செக் நாட்டவரிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தியது. அவரின் இனமும் மதமும் ஜெர்மானியர்களிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தின. 'தனிமை', அவருடைய

படைப்புலக ஆதாரங்களில் ஒன்று.

ரகசியம், பயம், குழப்பம், அதிகாரம், குற்றம், தோல்வி, தனிமை, காதல் என தன் வாழ்வில் அனுபவித்த பிரத்யேக நிலைகளினூடாகவே தம் படைப்புலகை உருவாக்குகிறார். அதன் மூலம் தம் கால மனித வாழ்வில், அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களைப் படைப்பில் உறைய வைக்கிறார். இந்த முகங்களில் தெரியும்

தன்னுடைய சாயல்களை, அவருடைய படைப்புலகோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாய் உணர்கிறான்.

1917-ஆம் ஆண்டு அவரை பீடித்த எலும்புருக்கி நோய் காரணமாக, 1924 - ஜூன் 3-இல் இறந்தார். அவருடைய வாழ்நாளில் சிறிய படைப்புகள் மட்டுமே வெளிவந்திருந்தன. முற்றுப் பெறாத மூன்று நாவல்களும் அவரின் மரணத்திற்குப் பின்னரே வெளிவந்தன.

'தீர்ப்பு' - காஃப்காவின் முழுமையான முதல் படைப்பு. இக்கதையை, 1912-ஆம் வருடம் செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிவரை ஒரே மூச்சி எழுதி முடித்தார். இது, அவருடைய படைப்புலகின் அடிப்படை அம்சங்களனைத்தும் ஒன்று திரண்டு அடர்த்தியாக உருக்கொண்ட கதை. மேலும் இக்கதையில் அவரின் படைப்புலகப் பிரச்சனைகளில் ஒன்றான "தந்தை - மகன் போராட்டம்' அதன் ஆழத்தைத் தொட்டிருக்கிறது.

காஃப்காவுக்கும் அவரின் தந்தைக்கும் இடையேயான நிஜ உலக உறவின் தன்மைகள் இப்புனைவில் இலக்கிய முகம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, காஃப்காவுக்கு மிகவும் பிடித்த கதை இது.

காஃப்காவின் மற்றொரு கதையான 'கிராம மருத்துவர்', நனவுலகும் கனவுலகும் முயங்கி முகிழ்த்த பிரத்யேகமான காஃப்கா உலகக் கதை. 1919-ஆண்டு எழுதப்பட்டது.

- சி.மோகன்

நூல்: கதையின் திசைகள் (10 உலகச் சிறுகதைகள்) - தமிழில் சி.மோகன், வெளியீடு: அகல்

விலை ரூ.90

நன்றி: தாவரம்

Thursday, October 20, 2011

சீனப் பெருஞ்சுவர் - ஃப்ரான்ஸ் காஃப்கா- தமிழில் : சுகுமாரன்

ஆங்கிலத்தில்: வில்லா, எட்வின் ம்யூர்

சீனப் பெருமதில் அந்த நாட்டின் வடக்கு முனையில் முடிவடைந்திருந்தது. தென் கிழக்கிலிருந்தும் தென் மேற்கிலிருந்தும் இரண்டு பகுதிகளாக வந்து கடைசியில் அங்கே ஒன்று சேர்ந்தது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த இரண்டு தொழிலாளர் அணிகள் பகுதி பகுதியாகக் கட்டி முடிக்கும் கட்டுமான உத்தியை சிறிய அளவில் பயன்படுத்தியிருந்தார்கள். அதை இப்படிச் செய்தார்கள்: இருபதுபேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்தைக்Kafka_last கட்ட வேண்டும். ஐநூறு காதம் என்று வைத்துக் கொள்வோம். அதே போன்ற இன்னொரு குழு முதலில் கட்டி முடித்த பகுதியுடன் இணையும்படி அதே நீளமுள்ள இன்னொரு பகுதியைக் கட்டியது. ஆனால் இந்த இணைப்பிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அதாவது ஆயிரம் காதம் கட்டிய பின்பு, ஆரம்பமாவதல்ல மதிலின் கட்டுமானம் . மாறாக, மறுபடியும் கட்டுமானத்தைத் தொடர்வதற்காக இந்த இரண்டு அணிகளும் முற்றிலும் வேறான சமீபப் பகுதிகளூக்கு மாற்றப்பட்டன. இதனால் ஏராளமான இடைவெளிகள் உண்டாயின. பின்னர் மெல்ல மெல்லவே இந்த இடைவெளிகள் சரி செய்யப்பட்டன. மதில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரையும் சில இடங்களில் முடிக்கப்படவில்லை. உண்மையில் ஒருபோதும் முழுமையாக்கப்படாத இடைவெளிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அது பரிசோதனை செய்யப்பட முடியாததாக இருக்கலாம். அல்லது மதிற் சுவரின் பிரம்மாண்டமான கட்டுமானம் காரணமாக , ஒரு மனிதனால் தன்னுடைய கண்களாலோ அல்லது தீர்மானத்தாலோ பரிசோதனை செய்ய முடியாதது என்று காட்டுவதற்காக எழுப்பப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

மதிற் சுவரைத் தொடர்ச்சியாகக் கட்டியிருந்தாலோ அல்லது இரண்டு பகுதிகளையுமாவது தொடர்ச்சியாகக் கட்டி முடித்திருந்தாலோ எல்லா வகையிலும் வசதியாக இருந்திருக்கும் என்று ஒருவன் முதலில் யோசிக்கலாம். உலகளாவிய ரீதியில் பாராட்டப்படுவது போலவும் அறியப்படுவதுபோலவும், வடக்கிலுள்ள மக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் மதில் திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் தொடர்ச்சியான கட்டுமானம் இல்லாமல் மதிலால் எப்படிப் பாதுகாப்பைத் தரமுடியும்? அப்படிப் பட்ட மதிலால் பாதுகாப்புத் தர முடியாது என்பது மட்டுமல்ல அதில் நிரந்தரமான ஆபத்தும் இருக்கிறது. ஆள் நடமாட்டமில்லாத பிரதேசத்திலிருக்கும் இந்த மதில் சுவரை அந்த நாடோடிகளால் எளிதில் அடுக்கடுக்காகத் தகர்க்க முடியும். இந்த இனத்தவர்கள் கட்டுமான வேலைகளில் அதிகக் கவனமுள்ளவர்கள்,வெட்டுக் கிளிகளைப்போல நம்ப முடியாத வேகத்தில் தங்களுடைய தங்குமிடங்களை மாற்றிக் கொண்டி ருப்பவர்கள் என்பதால்,கட்டுமானக் காரர்களான எங்களை விட மதில் நிர்மாண முன்னேற்றத்தைப் பற்றி மிகவும் தெளிவான அறிவு ஒருவேளை அவர்களுக்கு இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மதிலின் கட்டுமான வேலைகளை வேறு எந்த வகையிலும் தொடர முடியாமலிருந்தது. இது புரிய வேண்டுமென்றால் கீழே சொல்வதைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். மதிற் சுவர் நூற்றாண்டுக் காலங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; ஆகவே, கட்டுமானத்தில் முழுக் கவனமும் அறியப்படும் எல்லாக் காலத்திலும் எல்லா மக்கள் கூட்டத்துக்கும் உரிய கட்டடக் கலை அறிவின் பயன்பாடும் மதிலை எழுப்புகிறவர்களிடம் தன்னலமில்லாத பொறுப்புணர்வும் இருப்பது இந்த வேலைக்குத் தவிர்க்க இயலாதது. சிறு வேலைகளுக்காகச் சாதாரண ஆட்களிலிருந்து அப்பாவிகளையும் பெண்களையும் சிறுவர்களையும் அதிகமான தினக் கூலிக்கு அமர்த்தலாம் என்பது சரிதான். தினக் கூலிக்காரர்கள் நான்கு பேரை மேற்பார்வையிடுவதற்குக் , கட்டடக் கலையில் விற்பன்னரான ஒருவர் தேவைப்பட்டார். ஒப்புக் கொண்ட வேலையை முறையாகச் செய்பவரும் அதில் முழுமையாக ஈடுபாடு கொள்பவருமான ஒருவர் கட்டுமானப் பணிகளுக்குத் தேவை. ஆனால் அப்படியான ஆட்கள் அதிகமில்லை. இருந்தும் அதுபோன்றவர்களூக்கான தேவை அதிகமாக இருந்தது.

இந்தப் பணியை ஆலோசனையில்லாமல் ஒப்புக் கொள்ளவில்லை. முதல் கல் நாட்டப்படுவதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, கட்டடக் கலை, குறிப்பாகக் கல் தச்சு, ஞானத்தின் மிகவும் முதன்மையான துறையாக, மதில் கட்டப்பட வேண்டிய சீனப் பகுதி முழுவதும் பாராட்டப்பட்டிருந்தது. இதனோடு கொண்ட தொடர்பிலிருந்துதான் மற்ற கலைகளூம் அங்கீகாரம் பெற்றன. சரியாகக் காலூன்றி நிற்கக் கூடத் தெரியாத சிறுவர்களான நாங்கள், உருண்டைக் கற்களால் ஆசிரியரின் பூந்தோட்டத்துக்கு மதிற்சுவர்போல ஒன்றை எழுப்ப வேண்டும் என்று அவர் போட்ட கட்டளைக்குப் கீழ்ப்படிந்து பூந்தோட்டத்தில் நிற்பதை என்னால் இப்போதும் துல்லியமாக நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆசிரியர் அவருடைய தளர்ந்த நீள் அங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டு மதிற் சுவரை நோக்கி ஓடி வந்து அதை உதைத்துத் தள்ளினார். நேர்த்தியில்லாத எங்கள் வேலைக்காக எங்களைக் கடுமையாகத் திட்டினார். நாங்கள் அழுது கொண்டே பெற்றோரைத் தேடி நாலாப் பக்கமாக ஓடினோம். ஒரு சாதாரண சம்பவம்தான். ஆனால் அது அந்தக் காலஉற்சாகத்தின் குறிப்பிடத் தகுந்த செயலாக இருந்தது.

இருபதாம் வயதில், நான் கீழ்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றிருந்த சமயத்தில்தான் மதில் சுவரின் கட்டுமான வேலைகள் தொடங்கின என்பதால் நான் அதிருஷ்டசாலி. நான் அதிருஷ்டசாலி என்று சொல்லக் காரணம், கிடைக்கக் கூடியவற்றுள் மிகவும் உன்னதமான கலாச்சாரத்தில் பட்டம் பெற்ற ஏராளமானவர்கள் பல வருடங்களுக்குப் பிறகும் அவர்களுடைய அறிவால் செய்யக் கூடிய எதையும் கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் பிரம்மாண்டமான கட்டடக் கலைத் திட்டங்களுடன் திரிந்தார்கள்; ஆயிரக் கணக்கானவர்கள் அவநம்பிக்கையில் மூழ்கினார்கள். ஆனால். கடைசியில் மேற்பார்வையாளர் பணிக்கு நியமிக்கப்பட்டு வேலை செய்ய வந்தவர்கள், ஒருவேளை தாழ்ந்த பதவியாக இருந்தும் கூட வேலைக்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருந்தார்கள். மண்ணில் பாவிய முதல் கல்லுடன் தாங்களும் மதில் சுவரின் பகுதியே என்று நினைத்தவர்களாக இருந்தார்கள். மதிற் சுவர் நிர்மாணத்தைப் பற்றிச் சிந்திப்பதை முடிக்காமலிருந்ததும் அதைப் பற்றி மேலும் சிந்தித்ததும் அவர்களாகவே இருந்தார்கள். நிச்சயமாக இதுபோன்ற கல் தச்சர்களுக்குத் தங்களுடைய பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை மட்டுமே இருக்கவில்லை. மதிலைக் குற்றம் குறையில்லாமல் அதன் முழு வடிவத்தில் பார்த்து விட வேண்டும் என்ற பொறுமையின்மையும் இருந்தது. தினக் கூலிக்காரர்களிடம் இந்தப் பொறுமையின்மை இல்லை. ஏனெனில்,அவர்களுடைய அக்கறை கூலியில் மட்டுமே இருந்தது. உயர் நிலையிலிருந்த மேலதிகாரிகளாலும் இடை நிலையிலிருந்த மேற்பார்வையாளர்களாலும் நிர்மாணத்தின் வேகமான முன்னேற்றத்தைக் காணமுடிந்தது. அதனால் அவர்களால் தங்களுடைய தன்னம்பிக்கையை உய்ர்த்திக் காட்ட முடிந்தது. ஆனால், அவர்கள் செய்யும் சாதாரணமான பணியைப் பொருத்து மிக உயர்ந்த அறிவுத் திறனுள்ள சிறிய மேற்பார்வையாளர்களை உற்சாகமூட்ட வேறு வழிகளைத் தேடவேண்டியிருந்தது. உதாரணமாக, வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான காதங்கள் தாண்டியிருக்கும் ஆள் வாசமில்லாத மலைப் பிரதேசங்களில் மாதக் கணக்காக அல்லது வருடக் கணக்காக, ஒரு கல்லின் மேல் இன்னொரு கல்லை அடுக்கிக்கொண்டு அவர்கள் நின்றிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நீண்ட வாழ்க்கைக்கு மத்தியில் முடிவை நெருங்கவே செய்யாத அதுபோன்ற கடின உழைப்பு அவர்களை ஏமாற்றத்தில் தள்ளி விடும். அதற்கெல்லாம் அப்பால் அவர்களுடைய செயலூக்கத்தைக் குறைத்து விடும். இந்தக் காரணங்களால்தான் பகுதி பகுதியான கட்டுமானம் போதும் என்று தீர்மானித்தார்கள். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குள் ஐநூறு காதம் கட்டி முடிக்கவேண்டிருந்தது. இந்தச் சமயத்துக்குள் மேற்பார்வையாளர்களுக்கு தங்கள் மேலும் மதில் மேலும் உலகத்தின் மேலுமுள்ள எல்லா நம்பிக்கைகளும் காணாமற் போயிருக்கும். இந்தக் காரணத்தால் மதிற் சுவரின் ஆயிரம் காத நீளம் கட்டி முடிக்கப்பட்டதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கும்போதே அவர்கள் தொலைவிடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். பயணத்துக்கு இடையிடையே அங்குமிங்குமாக மதிலின் பூர்த்தி செய்யப்பட்ட பாகங்களைப் பார்த்தார்கள்; மேலதிகாரிகளின் அதிகாரபூர்வமான இருப்பிடங்களைக் கடந்து போனார்கள்; வெகுமதிகள் வழங்கப்பட்டார்கள்; புதிய தொழிலாளர் குழுக்கள் உற்சாகத் துள்ளலுடன் வருவதைக் கேட்டார்கள்;

மதிலுக்குச் சாரம் கட்டுவதற்காக மரங்கள் வெட்டி அடுக்கப்படுவதைப் பார்த்தார்கள்; மதிற் சுவர் கட்டி முழுமையாக்கப்படப் பிரார்த்தனை செய்யும் விசுவாசிகளின் பிரார்த்தனை மந்திரங்கள் ஒலிப்பதைக் கேட்டார்கள். இவையெல்லாம் அவர்களுடைய பொறுமையின்மையைக் கொஞ்சம் மட்டுப்படுத்தின. அவரவர் வீடுகளின் அமைதியான குடும்ப வாழ்க்கையும் ஓய்வும் அவர்களை சாந்தப்படுத்தின. அவர்களுடைய தகவல்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தவர்களின் பணிவான நடத்தையும் அமைதியானவர்களும் சாதுக்களுமான மக்களின் பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையும் அவர்களுடைய வேகத்தை மீண்டும் முடுக்கி விட்டன. பின்னர், நாட்டின் பெருஞ்சுவர் கட்டுமானப் பணியில் மீண்டும் ஈடுபடுவதற்கான விருப்பதை அடக்க முடியாத அவர்கள், எதையும் நம்பிவிடும் குழ்ந்தைகளைபோலத் தங்கள் குடும்பத்தினரிடம் விடை பெற்றனர். அவர்கள் தேவைப்படும் வேளைக்க்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். கிராம மக்களில் பாதிப் பேர் நீண்ட தூரம் அவர்களுடன் வந்து வழியனுப்பினார்கள். கொடிகளையும் தலைப்பாகைகளையும் வீசிக் கொண்டு எல்லாப் பாதைகளிலும் மக்கள் இருந்ததார்கள். இவ்வளவு மகத்தான. இவ்வளவு அழகான, இவ்வளவு நேசத்துக்குரிய நாடு தங்களுடையது என்பதை அவர்கள் முன்னர் ஒருபோதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. யாருக்காகப் பாதுகாப்பு அரணை ஒருவன் நிர்மாணம் செய்கிறானோ மற்ற பிரஜைகள் எல்லாம் அவனுடைய சகோதரர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீண்டிருக்கும் நன்றியுணர்வு இருப்பதால் தங்களுக்கு உரிய எல்லாவற்ரையும் கொடுக்கவும் தங்களால் செய்ய முடிந்ததையெல்லாம் திரும்பத் தரவும் தயாராக இருந்தார்கள். ஒற்றுமை. ஒற்றுமை. தோளோடு தோள் சேர்ந்த ஒரு சகோதர வட்டம். அது உடலின் குறுகலான சிரைகளில் மட்டும் ஓடும் குருதியோட்டமல்ல; சீனாவின் முடிவற்ற தூரங்களினூடே அமைதியாக ஓடும் குருதியோட்டம்.

அப்படியாகப் பகுதி பகுதியான நிர்மாண முறை நமக்குப் புரிகிறது. ஆனால் இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. நான் இந்தப் பிரச்சனையிலேயே நீண்ட நேரம் உழன்று திரிவதில் பொருத்தமின்மை எதுவுமில்லை. முதற்பார்வையில் முக்கியத்துவ மில்லாததாகத் தென்பட்டாலும் மொத்தமான மதில் நிர்மாணத்திலுள்ள முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்தின் கருத்துகளையும் உணர்வுகளையும் புரியவைக்க வேண்டுமானால் இந்தக் கேள்விக்குள் மேலதிக ஆழத்தில் செல்ல என்னால் ஆகாது.

தெய்வீகமான அங்கீகாரம் இருந்தாலும் கூட, மனிதனின் கணக்குகள் அந்தப் பணியுடன் வலுவாக எதிர்நிலை கொண்டிருந்தாலும் கூட பாபேல் கோபுர நிர்மாணத்தை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல அன்றைய கட்டுமானத் திறமை என்று முதலிலேயே சொல்லித் தீர வேண்டும். நான் இதைச் சொல்வதற்குக் காரணம், நிர்மாணத்தின் ஆரம்பக் காலங்களில் சான்றோர் ஒருவர் மிகத் தெளிவாக ஒப்பீடு செய்து ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார் என்பதுதான். பாபேல் கோபுரம் அதன் இலக்கை எட்டுவதில் தோல்வியடைந்தது, உலகம் முழுவதும் தெரிந்திருக்கும் காரணங்களால் அல்ல; அல்லது அதற்கு மிகவும் முக்கியமான காரணத்தைஏற்றுக் கொள்ளப் பட்ட காரணங்களில் கண்டடைய முடியாது என்பதை அவர் இந்தப் புத்தகத்தில் நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார். எழுதி வைக்கப் பட்ட அதிகாரபூர்வமான ஆவணங்களிலிருந்தோ தகவல்களிலிருந்தோ எடுத்தவையல்ல அவருடைய சான்றுகள். அந்த இடத்துக்கே சென்று ஆராய்ச்சி செய்திருப்பதாகவும் அவர் உரிமை பாராட்டிக் கொள்கிறார். கோபுரம் இடிந்து விழுந்ததாகக் கண்டு பிடித்திருக்கிறார். அஸ்திவாரத்தின் பலவீனத்தால் எப்படியும் கோபுரம் இடிந்து விழுமென்றும் கண்டுபிடித்திருந்தார். எப்படிப் பார்த்தாலும் அந்தப் பழைய காலகட்டத்திலிருந்து நம்முடைய காலகட்டம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. நம்முடைய காலகட்டத்தின் விற்பன்னர்கள் எல்லாருக்கும் கல் தச்சைத் தொழிலாக ஏற்றுக் கொண்டவர்களுக்கும் அடிக்கட்டுமானத்தைப் பொருத்தவரை தவறு நேர்ந்ததில்லை. எதுவாக இருந்தாலும் நம்முடைய சான்றோர்கள் நிரூபிக்க எண்ணியது இதையல்ல; ஏனெனில், மனித சமுதாய வரலாற்றில் முதன் முதலாக இந்தப் பெருஞ்சுவர்தான் புதிய பாபேல் கோபுரத்தைக் கட்டுவதற்குத் தேவையான அஸ்திவாரத்தைக் கொடுக்கும் என்று அவர் நம்பினார். முதலில் இந்தப் பெருஞ்சுவர். இரண்டாவது பாபேல் கோபுரம். அந்தக் காலத்தில் எல்லார் கைகளிலும் அவருடைய புத்தகம் இருந்தது. ஆனால் அவர் இந்த கோபுரத்தை எவ்வாறு யோசித்தார் என்று தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்று நான் இன்றும் ஒப்புக்கொள்கிறேன். கால் அல்லது அரை வட்டமல்லாமல் ஒரு முழு வட்டமாக உருவாக்கப்படாத இந்த மதிற் சுவரால் எப்படி ஒரு கோபுரத்தின் அடிக்கட்டுமானமாக முடியும்? இதற்கு அர்த்தம் ஏற்படுவது ஆன்மீகத்தில் மட்டும் தானே? அப்படியிருக்க, எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கும் பணியின் பலனாக நீண்டு நிற்கும் ஒரு மதில் எதற்காகக் கட்டப்பட வேண்டும்?

ஒருவேளை அந்தக் காலத்தில் மக்களின் தலைக்குள்ளே பண்படுத்தப்படாத ஏராளமான சிந்தனைகள் இருந்திருக்கலாம். இந்தச் சான்றோரின் புத்தகம் அதற்கான உதாரணங்களில் ஒன்று. அதனால்தான் ஒரே நோக்கத்துக்காக தங்களால் முடிந்தவரை அவர்களுடன் இணைந்து கொள்ள ஏராளமான மக்கள் முயற்சி செய்திருந்தார்கள். எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதுதான் மனித இயல்பு.அது புழுதியைபோல நிலையில்லாதது; எந்தக் கட்டுப்பாட்டையும் பொறுத்துக் கொள்ளாதது. அதை அதன் கட்டுக்குள் வைத்தால் எல்லாவற்றையும், துண்டுதுண்டாகும்வரை, சுவரையும் வரம்புகளையும் இடம் கால உணர்வற்றுத் தன்னைத் தானேயும் நொறுக்கத் தொடங்கும்.

பகுதி பகுதியாக மதிலைக் கட்டுவது என்ற முறையைத் தீர்மானித்தபோது மேலதிகாரிகள் இது போன்ற செயல்கள் பெருஞ்சுவர் நிர்மாணத்துக்கே அச்சுறுத்தலாகக் கூடும் என்பதை கவனத்திலிருந்து தள்ளிவிடவில்லை. நாங்கள் - இங்கே நான் பலர் சார்பாகத்தான் பேசுகிறேன் - மேலதிகாரிகளின் கட்டளைகளைக் கவனமாக ஆராயும்வரை இவை எதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.நாங்கள் எல்லாரும் சேர்ந்து செய்து கொண்டிருந்த இந்த மகத்தான பணியில் சாதாரண வேலைகளுக்குக் கூட மேலதிகாரிகள் இல்லாமல், எங்களுடைய படிப்போ அறிவோ மட்டும் போதுமானதாக இருக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தோம். மேலதிகாரிகளின் அலுவலகத்தில் - அது எங்கே இருந்தென்றோ அங்கே யாரெல்லாம் இருந்தார்களென்றோ நான் விசாரித்த யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை - இப்போதும் தெரியாது - எல்லா மானிட யோசனைகளும் ஆசைகளும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன என்பது நிச்சயம். எல்லா மானுட இலட்சியங்களும் நிறைவுகளும் அதற்கு எதிராகச் சுழன்று கொண்டிருந்தன. தெய்வீக உலகங்களின் மகத்துவப் பிரதிபலிப்புகள் அவர்கள் தங்கள் திட்டங்களைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக அவர்களுடைய கைகளில் வந்து விழுந்தன.

இந்தக் காரணத்தால் அதிகாரிகள் ஆத்மார்த்தமாக விரும்பியிருந்தால் தொடர்ச்சியான நிர்மாணப் பணியைத் தடை செய்த இடர்ப்பாடுகளைக் கடந்திருக்க முடியுமென்று உண்மையுணர்வுள்ள ஒரு பார்வையாளனுக்குத் தோன்றும். அப்போது அதிகாரிகள் திட்டமிட்டுத்தான் பகுதி பகுதியான கட்டுமான முறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற முடிவைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிராது. பகுதி பகுதியான கட்டுமானம் தற்காலிகமானது. எனவே பொருத்தமற்றது. அதிகாரிகள் பொருத்தமற்ற ஒன்றையே வேண்டுமென்று விரும்பினார்கள் என்ற முடிவு மட்டும் மிஞ்சுகிறது. விசித்திரமான முடிவு. சரிதான். ஒருவகையில் பார்த்தால் இதைப் பற்றிச் ல்ல ஏராளமாக இருக்கின்றன. இன்று ஒருவர் இதைப் பற்றி ஒருவேளை அச்சமில்லாமல் விவாதிக்கலாம். அந்தக் காலத்தில்,அநேக ஆட்கள் மத்தியில் - அவர்களில் மேன் மக்களும் உட்படுவர் - ரகசியமான ஒரு அறிவுரை இருந்தது. அது இவ்வாறூ;உங்களுடைய சகல திறன்களையும் பயன்படுத்தி மேலதிகாரிகளின் கட்டளைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுவும் ஓர் அளவுக்கு. பின்பு அதை பற்றி நுணுகி யோசிக்காமலிருங்கள். அது தொல்லை என்பதானால் அல்ல; தொல்லையாகத்தான் இருக்கும் என்பதும் நிச்சமல்ல. தொல்லைக்கும் தொல்லையின்மைக்கும் இந்தக் கேள்விக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதற்குப் பதிலாக வசந்த காலத்து நதியைப் பாருங்கள். வலுவடையும் வரை அது உயர்ந்து கொண்டிருக்கிறது. கடலை அடையும்வரை

அதன் நீண்ட வழியை தக்கவைத்துக் கொண்டே நீண்ட வழியின் கரை மண்ணை வளமாக்குகிறது. கடலில் அதற்கு மனமார்ந்த வரவேற்பு காத்திருக்கிறது. ஏனெனில் அது மிகச் சிறந்த உதவியாளன். இதுவரைக்கும் நீங்கள் அதிகாரிகளின் கட்டளைகளைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு நதி கரை புரண்டு ஓடுகிறது. அதற்கு அதன் உருவமும் வரம்புகளூம் இல்லாமற் போகின்றன. நீரொழுக்கின் வேகம் குறைகிறது. மண்ணில் சிறிய சிறிய தீவுகளை உருவாக்கிக் கொண்டு வயல்களை நாசம் செய்து கொண்டு அதன் விதியைப் புறக்கணிக்க முயற்சி செய்கிறது. ஆனால் இந்தப் புதிய விரிவாக்கத்தில் அது நீண்டகாலம் தொடர்ந்து செல்ல முடிவதில்லை; அதன் கரைகளுக்குள் மறுபடியும் திரும்பி வந்தே ஆகவேண்டும். அடுத்து வரும் கோடையில் வற்றி வறண்டு போகவும் வேண்டும். இங்கே நீங்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

இந்த நீதிக் கதைக்கு, பெருஞ்சுவர் நிர்மாண வேளையில் அசாதாரண முக்கியத்துவமும் வலிமையும் இருந்திருக்கலாமென்றாலும் என்னுடைய இந்தக் கட்டுரையில் மிகவும் வரையறுக்கப்பட்ட முக்கியத்துவமே உள்ளது. என்னுடைய விசாரணை முற்றிலும் வரலாற்று ரீதியிலானது; என்றோ மறைந்து போன மேகங்களிலிருந்து இப்போது மின்னல்கள் உருவாவதில்லை. அந்தக் காரணத்தால் பகுதி பகுதியான கட்டுமானத்தைப் பற்றிய அன்றைய மக்களை நிறைவடையச் செய்த ஒரு விளக்கத்தை விட ஆழமாகச் செல்லும் ஒன்றுக்காக நான் கடினமாக முயற்சி செய்யலாம். என்னுடைய சிந்தனைத் திறன் என் மேல் திணிக்கும் வரையறைகள் மிகக் குறுகலானவை; என்றாலும் , இங்கே கடந்து செல்லவேண்டிய இடங்கள் முடிவற்றவை.

யாருக்கு எதிராக இந்தப் பெருஞ்சுவர் அரணாக இருக்க வேண்டியிருந்தது? வடக்கில் உள்ள மக்களுக்கு எதிராக. நான் சீனாவின் தென்கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். வடக்கிலுள்ள மக்கள் எங்களை அங்கே தொந்தரவு செய்ய முடியாது. புராதன நூல்களில் நாங்கள் அவர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். அவர்களுடைய இயற்கையான குணத்தையொட்டி அவர்கள் செய்யும் கொடூரங்களை நினைத்து அமைதியான மரங்களுக்கடியில் நின்று நாங்கள் பெருமூச்சு விட்டிருக்கிறோம். இந்தப் பாழாய்ப் போன இனத்தவர்களின் முகங்களையும் திறந்த வாய்களையும் கூர்மையான பற்களுள்ள தாடையையும் பற்களால் கடித்துக் கீறி விழுங்கு வதற்காக இரையைத் தேடுவதுபோலத் தெரியும் பாதி மூடிய கண்களையும் ஓவியனின் உண்மையாக சித்தரிப்பு காண்பிக்கிறது. எங்கள் குழந்தைகள் அடம் பிடிக்கும்போது நாங்கள் இந்தப் படங்களைக் காட்டுவோம். உடனே அழுது அலறிக் கொண்டு அவர்கள் எங்கள் கைகளைத் தேடி ஓடி வருவார்கள். எனினும் இந்த வடவர்களைப் பற்றி இதை விட அதிகமாக எதுவும் எங்களுக்குத் தெரியாது. அவர்களை நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் எங்களுடைய கிராமத்திலேயே வசித்திருந்தாலும் ஒருபோதும் அவர்களைப் பார்த்ததில்லை. அவர்களுடைய முரட்டுக் குதிரைகளில் ஏறி, அவர்களால் முடிந்த எவ்வளவு வேகத்தில் எங்களை நோக்கிப் பாய்ந்து வந்தாலும் கூட நாங்கள் ஒருபோதும் அவர்களைப் பார்த்திருக்க முடியாது. அவர்களால் எங்களை நெருங்க முடியாத அளவுக்குப் பெரியது எங்கள் நாடு; அவர்கள் அத்துவான இடத்தில் தங்களுடைய பயணத்தை முடித்துக் கொண்டிருப்பார்கள்.

நாங்கள் எங்களுடைய வீடுகளையும் பாலங்களையும் அருவிகளையும் பெற்றோரையும் விசும்பும் மனைவிகளையும் எங்களுடைய பாசத்துக்கு ஏங்கும் பிள்ளைகளையும் விட்டு விட்டு தூரத்திலிருக்கும் நகரத்தில் பயிற்சி பெறுவதற்காக ஏன் போனோம்? அங்கிருந்து பின்னும் தொலைவில் வடக்கேயுள்ள மதில் சுவரை நோக்கிப் பயணம் செய்யும்போது எங்களுடைய சிந்தனைகள் இவையாக இருந்தன. ஏன்? மேலதிகாரிகளிடம் ஒரு கேள்வி. எங்களுடைய தலைவர்களுக்கு எங்கலைத் தெரியும். பிரம்மாண்டமான பதற்றத்தில் மூழ்கியிருக்கும் அவர்களுக்கு எங்களைப் பற்றியும் எங்களுடைய வேலையைப் பற்றியும் தெரியும். நாங்கள் எளிய குடிசைகளில் ஒன்றாக வசிப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் நடுவில் அமர்ந்து குடும்பத் தலைவன் சொல்லும் பிரார்த்தனைகளை அவர்கள் விரும்பலாம்; விரும்பாமலுமிருக்கலாம். மேலதிகாரிகளைப் பற்றி இதுபோன்ற கருத்துகளை விளக்க என்னை அனுமதித்தால் என்னுடைய அபிப்பிராயம் , அது புராதன காலத்திலிருந்தே நிலைபெற்று வருவது என்பதாக இருக்கும். ஆனால் யாரோ ஒருவருடைய அழகான கனவைப் பற்றி விவாதிக்க அவசரமாகக் கூட்டப்பட்டு அவசரமாகக் கலைக்கப்படும் சீன அதிகாரிகளின் குழுக் கூட்டத்தைப் போலக் கூட்டப்பட்ட கூட்டமல்ல இது. மேலதிகாரிகளின் சபை கூடியதனால் அன்று மாலையே, ஏற்கனவே என்ன முடிவு செய்திருந்தார்களோ அதை அமல்படுத்துவதற்காக,அதிகாரிகளுக்கு முன் தினம் மகத்தான ஒரு வரத்தைக் கொடுத்த ஒரு கடவுளுக்குச் செய்யும் சடங்குத்தனமான விளக்கு அலங்காரம் போன்ற ஒன்றாக, எங்களை அழைத்துக் கொண்டு போனார்கள். அதை அமல்படுத்துவதற்காக நாளை தீபாலங்காரங்கள் ஏற்படுத்துவதற்கு முன்பு குறுந்தடிகளால் தாக்கி ஏதோ ஓர் இருண்ட மூலையில் தள்ளுவதற்காகக் மட்டுமே ஆட்களை முரசு அறைந்து படுக்கையிலிருந்து எழுப்பிக் கொண்டு போனார்கள். அநாதி காலம் முதல் சர்வ அதிகார சபை நிலைத்திருந்தது என்று நான் நம்புகிறேன்; பெருஞ்சுவரைக் கட்டும் தீர்மானமும் அதுபோன்றதுதான். தாங்கள்தான் அதற்குக் காரணம் என்று நம்பிக் கொண்டிருந்த வடக்கேயுள்ள முட்டாள் கூட்டம். அதற்குக் கட்டளையிட்டது தானே என்று நம்பிய முட்டாள் பேரரசர். ஆனால், இந்த மதிலைக் கட்டுகிற நாங்கள் அதுஅப்படியல்ல என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோம்; அதனால் வாயை மூடிக் கொள்ளுகிறோம்.

***

பெருஞ்சுவர் கட்டுமான வேளையிலும் அதற்குப் பிறகு இன்று வரையும் மனித இனத்தின் ஒப்பீட்டு வரலாற்றில் - இந்த முறையில் மட்டும் சாராம்சத்தைக் கண்டடைய முடிகிற சில பிரச்சனைகள் இருக்கின்றன - ஆழ்ந்திருந்தேன். சீனர்களான எங்களுக்கு துல்லியமான தனித்தன்மையுள்ள குறிப்பிடத் தகுந்த சமூக அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு பிடித்தேன்.மற்றவை தெளிவின்மையில் தனித்தன்மை கொண்டவை. இந்த நிகழ்வுகளின், குறிப்பாக கடைசி அம்சத்தின் காரணங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் எல்லா சமயத்திலும் என்னுடைய ஆர்வத்தைக் கிளறி விட்டதுண்டு. இப்போதும் கிளறி விடுகிறது. இந்த மதிற் சுவரின் கட்டுமானம் சாராம்சத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.

எங்களுடைய நிறுவனங்களில் மிகவும் பூடகமான அமைப்பு எங்கள் பேரரசுதான். பீக்கிங்கில், பேரரசரின் அவையில் , கற்பனைதான் எனினும் , இந்த விஷ்யத்தைப் பற்றி தெளிவான கருத்து இருக்கிறது. உயர்நிலைப் பள்ளிகளில் அரசியல் கோட்பாடும் வரலாறும் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விஷயங்களில் அதிக ஞானமுள்ளவர்கள் என்றும் அவர்களின் அறிவை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கத் தகுதியானவர்கள் என்றும் பாராட்டப்படுகிறது. கீழ்நிலை வகுப்புகளுக்குச் செல்லும்போது ஆசிரியர்கள், மாணவர்களின் அறிவைப் பற்றிய சந்தேகங்கள் நீங்குவதாகவும் நூற்றாண்டுகளாக மக்களின் மனதுக்குள் அடித்து இறக்கப்பட் சில கருத்துகளைச் சுற்றி மேம்போக்கான ஒரு கலாச்சாரம் ஆகாயம் முட்ட உயர்ந்திருப்பதாகவும் நாம் காணலாம். மரபான அவற்றின் உண்மைகள் எதுவும் காணாமற் போகவில்லை. எனினும் இந்தப் பதற்றத்தின் மூடு பனிக்குள் அந்த உண்மைகள் பார்க்கப்படாமல் போகின்றன.

ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் பேரரசைப் பற்றிய இந்தக் கேள்விக்குத்தான் சாதாரண மக்களைப் பதில் சொல்லும்படிச் செய்ய வேண்டும். என்னவானாலும் பேரரசின் கடைசிப் புகலிடம் அவர்கள்தானே? என்னுடைய சொந்த நாட்டுக்காக இனி ஒருமுறை மட்டுமே என்னால் பேச முடியும் என்று இங்கே வெளிப்படையாகச் சொல்லுகிறேன். என்றென்றும் இவ்வளவு அழகும் வளமுமான மாற்றங்களை ஏற்படுத்தும் இயற்கைக் கடவுள்களையும் அவர்களின் சடங்குகளையும் தவிர்த்தால் நாங்கள் பேரரசரைப்பற்றியே யோசிக்கிறோம். ஆனால் இப்போதைய பேரரசரைப் பற்றியல்ல. அவர் யாரென்றோ அவரைப் பற்றிய தெளிவான தகவல்களோ தெரிந்திருந்தால் ஒருவேளை அவரைப் பற்றி யோசிக்கலாம். சரிதான் - எங்களுடைய ஒரே ஒரு ஆர்வம் இது மட்டுமே இந்த விஷயத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள நாங்கள் எப்போதும் முயன்று கொண்டிருக்கிறோம். இது விசித்திரமானதாகத் தோன்றலாம். எனினும் எங்கள் நாடு முழுக்கவும் அருகிலும் தொலைவிலுமிருக்கும் கிராமங்களிலும் சுற்றித் திரிந்த பயணிகளிடமிருந்தோ எங்கள் நாட்டு நீரோடைகளில் மட்டுமல்லாமல் புனித நதிகளிலும் நீர்வழிப் பயணம் செய்த மாலுமிகளிடமிருந்தோ எதையாவது கண்டுபிடிப்பது அசாத்தியமற்றதாக இருந்தது. ஒருவர் ஏராளமான செய்திகளைக் கேள்விப்படுகிறார் என்பது சரிதான். ஆனால் திட்டவட்டமாக எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

எந்த நீதிக் கதையாலும் நியாயப்படுத்தப்பட முடியாத அளவு, சொர்க்கத்தாலும் பாதுகாக்க முடியாத அளவு விரிந்து கிடப்பது எங்கள் நாடு. பீக்கிங் இதில் ஒரு புள்ளி மட்டுமே. அரண்மனை புள்ளியை விடவும் குறைந்தது. இருந்தாலும் உலகிலுள்ள எல்லா அரச வம்சத்தையும் போல எங்களுடைய பேரரசரும் கீர்த்தி பெற்றவர். ஒப்புக் கொள்கிறேன். இப்போது இருக்கும் சக்ரவர்த்தி நம்மைப் போன்ற ஒரு மனிதர், ஒருவேளை, பெரும் அளவுகள் கொண்ட மஞ்சத்தில் - சிறியதும் குறுகலானதுமான கட்டிலாக இருப்பதற்கான சாத்தியமே அதிகம் - படுத்துக் கிடக்கிறார். நம்மைப்போலவே அவரும் சில சமயம் உடம்பை நிமிர்த்தி முறித்துக்கொள்ளவும் மிகவும் களைப்படையும்போது அழகான வாயால் கொட்டாவி விடவும் செய்கிறார். அவற்றைப் பற்றி ,திபெத்தியப் பீடபூமியின் எல்லைக்கு அருகில் - ஆயிரக்கணக்கான காதங்கள் தொலைவிலுள்ள தென் பகுதியில் - எங்களுக்கு என்ன தெரியும்? அதுமட்டுமல்ல, ஏதாவது தகவல்கள் இங்கே வந்து சேருமானால் கூட - மிகவும் தாமதமாகவே இங்கே வந்து சேரும் - எங்களை வந்தடையும் முன்பே பழையதாகிவிடும். எப்போதும் - விவேக ஞானமுள்ளவர்களெனினும் அரசதிகாரத்துக்கு எதிராகச் செயல் படுபவர்கள், விஷம் தோய்ந்த அம்புகளுடன் ஆட்சியாளரை அவருடைய பதவியிலிருந்து நீக்க என்றென்றும் முயன்றுகொண்டிருப்பவர்கள் என்று அறியப்படாத கனவான்களின் கூட்டம். அரசவை உறுப்பினர்கள் - இவர்களால் சூழப்பட்டிருப்பார் பேரரரசர். பணியாட்கள், நண்பர்கள் வேடம் புனைந்த சதிகாரர்களும் பகைவர்களும் இருப்பார்கள். சாம்ராஜ்ஜியம் நிரந்தரமானது. ஆனால் சக்ரவர்த்தி அரியாசனத்தில் ஆட்டம் கண்டு கொண்டும் இடறிவிழுந்து கொண்டுமிருக்கிறார். கடைசியில் அரச வம்சம் முழுவதுமாக மூழ்கி, மரணப் பதற்றத்தில் இறுதி மூச்சு விடுகிறது. இந்தப் போராட்டங்களைப் பற்றியோ துயரங்களைப் பற்றியோ மக்கள் ஒருபோதும் அறிவதில்லை. தாமதமாக வந்து சேர்ந்தவர்களைப் போலவும் நகரத்துக்கு வந்த அந்நியர்களைப் போலவும் கூடவே கொண்டு வந்திருக்கும் உணவை அருந்திக் கொண்டு ஆட்கள் கூடையிருக்கும் தெருவோரத்தில் அமைதியாக நிற்கும்போது, முன்னால். வெகு தொலைவில் நகரத்தின் இதயப் பகுதியிலிருக்கும் சந்தைத் திடலில் அவர்களுடைய ஆட்சியாளரின் படுகொலை நடந்து கொண்டிருக்கும்.

இந்தச் சூழ்நிலையைச் சிறப்பாக விளக்கும் நீதிக் கதையொன்று உண்டு: அது இப்படிப் போகிறது. சாம்ராஜ்ஜிய சூரியனுக்கு முன்னாலிருந்து மிக மிகத் தொலைவுக்கு ஓடி ஒளியும் முக்கியத்துவமில்லாத நிழலான உனக்கு, வெறும் குடிமகனான உனக்கு சக்ரவர்த்தி ஒரு செய்தியனுப்புகிறார். மரணப் படுக்கையிலிருந்து உனக்காக மட்டும் ஒரு செய்தியனுப்புகிறார். அவர் தூதனிடம் படுக்கை அருகில் முழந்தாளிட்டு உட்காரும்படிக் கட்டளையிட்டு விட்டு செய்தியை ரகசியமாக அவனிடம் சொல்லுகிறார். அவர் அந்தச் செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கற்பித்திருக்கிறார். எனவே, அதை திரும்பத் தன்னுடைய செவியில் ரகசியமாகச் சொல்லும்படி உத்தரவிடுகிறார். பின்பு அது சரிதான் என்று தலையசைத்து ஏற்றுக் கொள்கிறார். ஆம். அவருடைய மரணத்துக்குச் சாட்சி வகிப்பதற்காகக் கூடி நின்றவர்களுக்கு முன்னால் தடையாக இருந்த எல்லாச் சுவர்களும் இடித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன. பெரிய, உயரமான படிகளில் பேரரசின் மகத்தான இளவரசர்கள் ஒண்டி ஒதுங்கி நிற்கிறார்கள். அவர்கள் எல்லார் முன்னிலையிலும் சக்ரவர்த்தி செய்தியைச் சொல்கிறார். தூதன் உடனே புறப்படுகிறான். திடகாத்திரனான, களைப்பே தீண்டாத அந்த மனிதன் வலது கையாலும் இடதுகையாலும் தள்ளிக்கொண்டு கூட்டத்துக்கு மத்தியில் வழியை உண்டாக்குகிறான்; எதிர்ப்புத் தென்படுகிறபோது சூரிய முத்திரை பதித்த மார்பைச் சுட்டிக் காட்டுகிறான். பிற எந்த மனிதனும் உண்டு பண்ணுவதை விடவும் வேகமாக வழியமைத்துக் கொள்கிறான். முடிவில்லாத அளவுக்குப் பெரிய ஆட்கூட்டம். வெட்டவெளியில் வந்திருந்தால் அவன் எவ்வளவு வேகமாகப் போயிருப்பான்? உடனடியாகவே அவனுடைய முட்டியால் தட்டப்படும் வரவேற்கத் தந்த ஓசையை உன்னுடைய கதவில் கேட்டிருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய வலிமையை எவ்வளவு பயன் தராத விதத்தில் பிரயோகிக்கிறான். இருந்தும் அவன் இப்போதும் அரண்மனையின் மிகமிக உள்ளே இருக்கும் அறைகளைத்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறான். ஒருபோதும் அவன் மறு முனையை அடையப் போவதில்லை. அதில் வெற்றியே பெற்றாலும் அவன் எதையும் அடையப் போவதில்லை. இன்னும் மண்டபங்களைக் கடக்க வேண்டும். மண்டபங்களுக்குப் பிறகு அரண்மனை. மீண்டும் இன்னொரு முறை படிக்கட்டுகள்; மண்டபங்கள். இன்னொருமுறை இன்னொரு அரண்மனை. இதுபோல ஆயிரக் கணக்கான ஆண்டுகள். அப்படியாக, கடைசியில் மிகவும் வெளியிலிருக்கும் கோட்டை வாயிலைத் தாண்டினால் - ஆனால் ஒருபோதும், ஒருபோதும் அது நடக்காது - சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை முன்னால் காணலாம். தன்னுடைய குப்பை கூளங்களால் நிறைந்திருக்கும் உலகத்தின் மையம். இறந்த ஒரு மனிதரின் செய்தியுடன் கூட யாரும் அந்த வழியாகச் செல்ல முடியாது. ஆனால் அந்தி மயங்கும்போது நீ உன் ஜன்னலருகில் அமர்ந்து கனவு காண்கிறாய்.

இதுபோல ஆசையுடனும் ஏமாற்றத்துடனும்தான் எங்களுடைய மக்கள் பேரரசரைக் காண்கிறார்கள்.எந்தச் சக்ரவர்த்தி ஆட்சி செய்கிறார் என்று அவர்களுக்குத் தெரியாது. அரச பரம்பரையின் பெயரைப் பற்றிக் கூட சந்தேகங்கள் நிலவுகின்றன. பள்ளிக் கூடங்களில் வரிசைக் கிரமமாக, தேதி வாரியாக அரச பரம்பரையைப் பற்றிக் கற்பிக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்திலுள்ள உலகந்தழுவிய சந்தேகங்கள் பிரம்மாண்டமானவை என்பதால் மிகப் பெரிய அறிஞர்கள் கூட சந்தேகத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விடுகிறார்கள். எங்களுடைய கிராமங்களில் முன்பு எப்போதோ மறைந்து போன சக்ரவர்த்திகள் அரியாசங்களில் அமரவைக்கப்படுகிறார்கள். பாட்டில் மட்டுமே வாழ்ந்திருந்த பேரரசரின் அறிவிப்பு ஒன்று, அண்மைக் காலத்தில் ஒரு பூசகர் மூலம் பலிபீடத்தின் முன்னால் வாசிக்கச் செய்யப்பட்டது. பழைய வரலாறாகிவிட்ட யுத்தங்கள் எங்களுக்குப் புதியவை. பக்கத்து வீட்டுக்காரன் இந்த செய்தியைத் தெரிவிக்க உற்சாகத்துடன் ஓடி வருகிறான். நேசிப்பால் கெடுக்கப்பட்டவர்களும், தந்திரக்காரர்களான அரசவை உறுப்பினர்களால் முறையற்ற வழிகளில் இட்டுச் செல்லப்பட்டவர்களும், ஆசையை அடக்க முடியாதவர்களும் பேராசைக்காரர்களும் அடங்காத காமம் கொண்டவர்களுமான பேரரசிகள் என்றென்றும் வெறுக்கப்படும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். எவ்வளவு காலத்துக்கு முன்பு அவர்கள் புதைக்கப்பட்டார்களோ அந்த அளவு பளபளப்பானவையாக இருந்தன அவர்களைப் பற்றிய வண்ணமயமான கதைகளும். ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய ஒரு வறட்சிக் காலத்தில் ஒரு சக்ரவர்த்தினி தன்னுடைய கணவனின் ரத்தத்தை எப்படிக் குடித்தாள் என்பதை கடும் மனவேதனையில் எழுந்த அழுகையுடன் நாங்கள் கேட்கிறோம்.

அப்படியாக எங்களுடைய மக்கள் இறந்துபோன பேரரசர்களுடன் தொடர்பு கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கும் ஆட்சியாளரை இறந்துபோனவராகத் தவறுதலாக நினைக்கிறார்கள். ஒருமுறை, ஒருவனுடைய வாழ்க்கையில் ஒருமுறை மட்டும், ஓர் அரண்மனை அதிகாரி மாநிலச் சுற்றுப் பயணத்திற்கிடையில் எதிர்பாராமல் எங்களுடைய கிராமத்துக்கு வருவார் என்றால், அரசாங்கத்தின் பெயரால் அறிவிப்புகள் செய்வாரென்றால், வரி விவரப் பட்டியலைப் பரிசோதனை செய்வாரென்றால், பள்ளிச் சிறுவர்களைப் பற்றி ஆய்வு நடத்துவாரென்றால், எங்களுடைய செயல்களையும் பிரச்சனைகளையும் பற்றி பூசகரிடம் விசாரிப்பாரென்றால் பிறகு பல்லக்கில் ஏறுவதற்கு முன்பாக கூடி நிற்கும் ஆட்களிடம் தன்னுடைய அபிப்பிராயத்தை தெளிவில்லாத மொழியில் சொல்லுவாரென்றால் எல்லா முகங்களிலும் ஒரு சிரிப்பு மின்னி மறையும். ஒவ்வொருவரும் பக்கத்திலிருப்பவரைக் கள்ளப் பார்வை பார்த்து அதிகாரி அதைப் பார்த்து விடாமலிருக்கத் தங்களுடைய குழந்தைகளை நோக்கிக் குனிந்து கொள்வார்கள். அவர்கள் இப்படி யோசிக்கிறார்கள்: இறந்துபோன ஒருவரைப் பற்றி உயிரோடு இருப்பதுபோல எதற்காக அவர் விசாரிக்கிறார்? அவருடைய பேரரசர் நெடுங்காலத்துக்கு முன்பே மறைந்து விட்டார். அரச பரம்பரையும் துடைத்து அழிக்கப்பட்டாயிற்று. அதிகாரி எங்களிடம் வேடிக்கை பேசுகிறார். எனினும் அவரைக் கோபப்படுத்தி விடாமலிருக்க நாங்கள் அதைக் கவனிப்பதுபோல காட்டிக் கொள்வோம். ஆனால் நாங்கள் எங்களுடைய இன்றைய அதிகாரிகளைத் தவிர யாருக்கும் கீழ்ப்படிய மாட்டோம். ஏனெனில் அப்படிச் செய்வது குற்றம். விடை பெறும் வாகனத்துக்குப் பின்னால் ஏற்கனவே சிதிலமாகிபோன முதுமக்கள் தாழியிலிருந்து ஏதேனும் ஒருவன் கிராமத்தின் ஆட்சியாளனாக எதேச்சையாக உயர்ந்தெழுகிறான்.

இதைப் போலவே எங்களுடைய மக்கள் நாட்டில் ஏற்பட்ட புரட்சிகளாலும் சமகாலப் போர்களாலும் சிறிது கூட பாதிப்படைவதில்லை. என்னுடைய இளம் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நிலைவு கூர்கிறேன். அண்டையில் இருக்கும், ஆனால் வெகு தூரத்திலிருக்கும் நாட்டில் ஒரு கலகம் வெடித்தது. அதற்கு என்ன காரணம் என்று என்னால் நினைவு கூர முடியவில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அங்கே எந்த வேளையிலும் புரட்சி வெடிக்கலாம்; அங்கே இருந்த மக்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள். அந்தப் பிரதேசத்தைக் கடந்து வந்த ஒரு பிச்சைக்காரன் புரட்சிக்காரர்களால் வெளியிடப்பட்ட ஒரு துண்டறிக்கையை என்னுடைய தந்தையின் வீட்டுக்குக் கொண்டு வந்தான். அது ஓர் உற்சவ தினம். எங்களுடைய அறைகள் விருந்தினர்களால் நிரம்பி இருந்தன. மையமான இடத்தில் உட்கார்ந்திருந்த பூசகர் அந்தத் துண்டறிக்கையை வாசித்தார். திடீரென்று எல்லாரும் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார்கள். இந்த சந்தடியில் துண்டறிக்கை கிழிந்து போனது. முன்னரே தாராளமாகப் பிச்சை பெற்றிருந்த பிச்சைக்காரனை உதைத்து வெளியேற்றி விட்டு அழகான அந்த நாளைக் கொண்டாடுவதற்காக விருந்தாளிகள் கலைந்தார்கள்.எதனால்? இந்த அண்டை நாட்டு எழுத்து வடிவம் சில முக்கிய அம்சங்களில் எங்களுடைய மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது. எங்களுடையது மிகப் புராதனமானது. இந்த வித்தியாசம் துண்டறிக்கையின் சில வாசகங்களிலும் இருந்தன. பூசகர் சிரமப்பட்டு இரண்டு வரி வாசிப்பதற்கு முன்பே நாங்கள் எங்களுடைய தீர்மானத்துக்கு வந்து விட்டிருந்தோம். முன்பு எப்போதோ சொல்லப்பட்ட பழைய வரலாறு. நீண்ட காலத்துக்கு முன்பே அமுங்கிப் போயிருந்த பழைய துக்கங்கள். அங்கே அப்போது நிலவிய பயங்கரத்தை அந்தப் பிச்சைக்காரனால் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரியவைக்க முடிந்ததெனினும் - இப்படித்தான் என் ஞாபகம் - மறுக்கும் விதமாகத் தலையை உலுக்கிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அதை அதிகம் கவனிக்க மறுத்தோம். நிகழ்காலத்தைப் பாழடித்துக் கொள்ள எங்கள் மக்கள்தான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்?

இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து உண்மையில் எங்களூக்கு ஒரு பேரரசரே இல்லை என்ற முடிவுக்கு யாராவது வந்து சேர்வார்கள் என்றால் அவர்கள் உண்மைக்கு வெகுதூரத்தில் இல்லை. மீண்டும் மீண்டும் இது நடந்து கொண்டேயிருக்கும். எங்களைக் காட்டிலும் சக்ரவர்த்தியிடம் விசுவாசம் வைத்திருப்பவர்கள் யாரும் இல்லாமலிருக்கலாம். ஆனால் எங்களுடைய விசுவாசத்திலிருந்து பேரரசர் அவசியமான விதத்தில் எதையும் தேடி அடைவதில்லை. எங்கள் கிராமத்தின் எல்லையில் சிறிய ஒரு கம்பத்தின் மேல்

புனித டிராகனின் உருவம் இப்போதும் இருக்கிறது. மனித இனத்தின் ஞாபகத்தின் தொடக்கத்திலிருந்தே பீக்கிங்கைப் பார்த்து நினைவாஞ்சலியாக தீயாகக் கனலும் சுவாசத்தை விட்டுக்கொண்டிருந்தது என்பதும் சரிதான். ஆனால் எங்கள் கிராமத்து மக்களுக்கு பீக்கிங்கே கூட பரலோகத்தை விட அந்நியமானது. அடுத்தடுத்து வீடுகள் கொண்ட எங்கள் குன்றுகளிலிருந்து பார்த்தால் தெரியும் வயல்வெளிகளை விடப் பெரிய கிராமம் உண்மையில் இருக்கிறதா? இரவு பகலாக இந்த வீடுகளுக்குள்ளே பரபரக்கும் மக்கள் கூட்டம் உண்மையில் அங்கே இருக்கிறதா? பீக்கிங்கை அப்படிப்பட்ட நகரம் என்று யோசிக்கவும் அதுவும் அதன் சக்ரவர்த்தியும் ஒன்று என்று நினைக்கவும் உள்ளதை விட அதிகம் சிரமம் தோன்றுகிறது. யுகம் யுகமாக சூரியனுக்குக் கீழே அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கும் மேகம். இதுபோன்ற அபிப்பிராயங்களை வலியுறுத்துவதன் விளைவுதான் சுதந்திரமும் கட்டுப்பாடற்றதுமான வாழ்க்கை. அது எந்த வகையிலும் நன்னெறிக்குப் புறம்பானதல்ல. என்னுடைய சொந்த கிராமத்திலுள்ளவர்களைப் போன்று இந்த நல்ல குணம்கொண்டவர்களை என்னுடைய பயணங்களில் எந்த இடத்திலும் பார்த்ததேயில்லை. ஆனால் சமகாலத்தன்மை கொண்ட எந்த சட்டத்துக்கும் உட்படாத, புராதன காலங்களிலிருந்து எங்களை வந்தடைந்த உபதேசங்களையும் எச்சரிக்கைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் வாழ்க்கை.

பொதுப்படையாகச் சொல்லுவதைத் தவிர்க்கிறேன். என்னுடைய மாநிலத்திலிருக்கும் எண்ணற்ற கிராமங்கள் எல்லாமும் இப்படியானவைதான் என்றும் நான் எண்ணவில்லை. பிறகு சீனாவிலேயே இருக்கும் ஐநூறு மாநிலங்களின் காரியத்தைச் சொல்ல வேண்டியதுமில்லையே? இருந்தும் இந்த விஷயத்தில் நான் வாசித்த ஏராளமான புத்தகங்கள், எனது தனிப்பட்ட பார்வைக் போக்கு ஆகியவர்றின் அடிப்படையில் இப்படி அபிப்பிராயம் கொள்ள நான் துணிகிறேன். குறிப்பாக, ஏராளமான மனிதர்களுடன் தொடர்புள்ள இந்த மதிலின் நிர்மாணம், நுட்பமான அறிவுள்ள ஒருவனுக்கு, பெரும்பாலும் எல்லா மாநிலங்களும் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்த ஒருவனுக்கு , இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இப்போதைய பேரரசருடன் எங்கள் கிராமம் காட்டும் நடத்தை, அடிப்படை ஒர்றுமையுள்ள ஒன்ரை நினைவுபடுத்துகிறது என்று சொல்ல நான் ஆயத்தமாகிறேன். இந்த நடத்தையை மகத்தானதென்று சித்தரிக்க எனக்கு விருப்பமில்லை. மாறாக நேர் எதிராகவே விரும்புகிறேன். உண்மையில் இதன் முதன்மைப் பொறுப்பு அரசாங்கத்திடம்தான் இருக்கிறது. உலகில் மிகப் புராதனமான சாம்ராஜ்ஜியமான. விரிவடைவதில் வெற்றி காணாத அல்லது விரிவடைவதில் அக்கறை காட்டாத நாட்டின் மிகத் தொலைவிலிருக்கும் எல்லைவரைக்கும் முடிவில்லாத இந்தச் செயல்பாடுகளைக் கொண்டு சேர்க்கிற அரசுதான் களங்கமில்லாத இந்த அரசு என்பது சரியே. மக்களின் நம்பிக்கையிலும் எண்ணத்திலும் ஒரு சோர்வு இருக்கிறது. பேரரசை பீக்கிங்கின் மந்தத்தன்மையிலிருந்து எழுப்பி உயர்த்துவதிலும் நடைமுறையிலிருக்கும் தெளிவான எதார்த்தை மார்போடு சேர்த்துக் கொள்வதிலும் அது - அந்த சோர்வு - தடையாக இருக்கிறது.

நிச்சயமாக இந்த மனோநிலை நல்ல இயல்பல்ல. இந்தக் குறைதான் எங்கள் மக்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமைக்கான முக்கியத் தூண்டுதல்களில் ஒன்று என்பதே உண்மை. இது நாங்கள் வாழும் பூமிதான். இங்கே அடிப்படையான கோளாறு இருக்கிறது என்று நிறுவ முயற்சி செய்வது எங்களுடைய மனசாட்சியை மட்டுமல்ல; அதற்கும் மேலாக எங்கள் கால்களையும் தகர்த்துக்கொள்ளுவதற்குச் சமமானது. இந்தக் காரணங்களால் இந்தக் கேள்விகளுக்குள்ளே என்னுடைய விசாரணையுடன் மேலும் தொடர்ந்து செல்ல மாட்டேன்.

***

The Penguin Complete Short Stories Of Franz Kafka (1983)

Monday, March 21, 2011

ஃபிரான்ஸ் காஃப்கா (1883-1924)ஓர் அறிமுகம்-பிரம்மராஜன்

ஃபிரான்ஸ் காஃப்காவின் பெயர் ஆஸ்திரிய-ஐரோப்பிய நவீனத்துவத்தில், குறிப்பாக நாவல் இலக்கியத்தில் ஸ்திரமாக நிலைபெற்றிருக்கிறது. ராபர்ட் மியூசில், தாமஸ் மன், ஸ்ஃடெபன் ஸ்வெய்க், ஹெர்மன் ப்ரோக் ஆகிய எழுத்தாளர்களுக்கு மத்தியில் காஃfranz-kafka1ப்காவின் எழுத்து தனித்து தெரிகிறது. நீட்ஷேவுக்குப் பிறகு வந்த எழுத்தாளர்களில்–குறிப்பாக புனைகதை எழுதியவர்களில்–தனித்த இடத்தைப் பெறக்கூடியவராக இருப்பவர் ஃபிரான்ஸ் காஃப்கா. காஃப்காவின் நம்பிக்கை இழப்பை மட்டும் இங்கு நாம் தனிப்படுத்திச் சொல்லவில்லை.  காஃப்காவின் வாழ்வியல் பார்வை  அவரது நாவல்களிலும் சிறுகதைகளிலும் வெளிப்படும் விதம் பீதிக் கனவுத்தன்மையானது. பொறுத்துக் கொள்ளமுடியாத மனிதச் சூழ்நிலைகளை உருவாக்கி அதில் வாசகனைச் சிக்கவைப்பவர்  காஃப்கா. ஷோப்பன்ஹீர் மற்றும் நீட்ஷே ஆகிய ஜெர்மானிய தத்துவவாதிகள் அவர் மீது தனித்த ஆளுமை செலுத்தியிருக்கின்றனர். ஆனால் காஃப்கா  அதிகம் சுயசரிதைத் தன்மை உடைய புதினங்களை விரும்பிப் படித்தார். இந்தப் பட்டியலில் வருபவர்கள் Goethe, Dostoyevsky, August Strindberg, Grillparzer, Kleist  மற்றும் Kierkegaardஆவர். செக் நாவலாசிரியரான Knut Hamsenஇன் நூல்கள் மீது காஃப்காவுக்கு தனிப்பட்ட விருப்பம் இருந்தது.

ஃபிரான்ஸ் காஃப்காவின் பிரதான படைப்புகள் எதுவும் அவருடைய இறப்புவரை வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.  அவருடைய ஆரம்ப கதைகளான The Judgement (1912), Metamorphosis ( 1916 ), In the Penal Colony (1919)  மூன்றினையும் Punishments என்ற தலைப்பில் அவர் வாழ்நாளுக்குள் ஒரு தொகுதியாக ஆக்கிப்பார்க்க விரும்பினார். ஆனால் விருப்பம் நிறைவேற வில்லை. அவருக்குப் புகழ் தேடித்தந்த The Trial மற்றும்  The Castle ஆகிய நாவல்கள் அவர் இறந்த பிறகே நூல் வடிவம் பெற்றன. தனது நண்பரும் இலக்கியவாதியுமான Max Brod என்பவரிடம் காஃப்கா   எழுதிய எல்லா சிறுகதை, நாவல்கள் மற்றும் அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளையும் தீயிட்டு எரித்துவிட வேண்டும் என்ற கடைசி விருப்பத்தினை தெரிவித்துச் சென்றார். 1921ல் காஃப்கா எழுதிய உயிலிலும்  இதை அழுத்தமாக எழுதியிருக்கிறார். Max Brod  அவரது நண்பரின் கடைசி விருப்பத்தைப் பூர்த்தி செய்திருந்தால் இன்று எவருக்கும் காஃப்கா என்ற முதல்தர  நவீனத்துவ எழுத்தாளனைத் தெரியாமலேயே போயிருக்கும். அவரே குறிப்பிட்டது போல இந்த வாழ்க்கையை ” borderland between loneliness and fellowship” என்ற அளவிலேயே வாழ்ந்துவிட்டுப் போன காஃப்கா இலக்கியத்தை ஒரு நிறுவனமாகப் பார்க்க விரும்பவில்லை. அவர் அந்தக் கருத்தை நம்ப மறுத்தார்.

இந்த வாழ்உலகினை மீறிச் சென்றுவிட வேண்டுமென்ற மனிதனின் அடக்க முடியாத ஆன்மீகத் தூண்டல் காஃப்காவின் எழுத்துக்களில் காணப்படுகிறது. பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட, மதவியல் தேடல்களை நோக்கிப் பயணங்களை மேற்கொள்பவர்கள் போல காஃப்காவின் பாத்திரங்கள் தோன்றினாலும் கூட ”ஆஸ்திரிய மனதின் நோயுற்ற தன்மை”யையும்  ”ஆன்மீகக் குழப்பத்தையும்” வெளிக்காட்டுபவர்களாகவும் இருக்கின்றனர். விசாரணை என்கிற தாட்சண்யமற்ற செயல்பாடு பெரும்பான்மையான சமயங்களில் முக்கிய கதாபாத்திரங்களை மௌனமாக்குவதற்கே பயன்பட்டது. காஃப்காவின் The Trial  நாவலில் வரும் Joseph.K இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. பிற நாவலாசிரியர்களான Musil, Schnitzler, Broch ஆகியோர் சமூகத்தின் கூட்டு நோய்க்கூற்றுத் தன்மையை குவிமையப்படுத்த விரும்பியபோது காஃப்கா ஒரு தனிநபரிடம் இத்தன்மை இயங்கும் விதத்தை மிகுந்த உக்கிரத்துடன் தனது நாவல்களில் பதிவு செய்தார்.

காஃப்கா எழுதியவற்றிலேயே America (1927)என்ற நாவல் மாத்திரம் வெளிச்சம் நிரம்பியதாயும், மகிழ்ச்சி நிரம்பியதாயும் இருக்கிறது. காரணம் இதில் தனிநபரை வதைக்க வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவதில்லை. மேலும் முதல் இரண்டு நாவல்களின் (விசாரணை, கோட்டை) இடம்பெறும் நாயகர்களின் பெயர்களுக்குப் பதிலாக சுருக்கப்பட்ட முதல் எழுத்துக்களே பெயர்களாய்த் தரப்பட்டுள்ளன. இதற்கு மாறாக ”அமெரிக்கா” நாவலில் வரும் நாயகனின் பெயர் Karl Rossman.

ஒரு ஆன்மீகத் தேடலில் ஈடுபடக்கூடிய அருகதை மனிதனுக்கு உண்டா என்ற கேள்வியையும் காஃப்காவின் நாயகர்கள் எழுப்பத்தான் செய்கின்றனர். மனிதத்தோல்வியும் மனித நிராசையும் காஃப்காவின் கதைகளிலும் நாவல்களிலும் சகஜமாகக் காணப்படுபவை.  வாழ்தலின் பயங்கரங்களை மிக எளிமையான மொழியில் மிகவும் பரிச்சயமான சூழ்நிலைகளில் சாதாரண நபர்களைக் கொண்டு காஃப்கா சித்தரிக்கிறார். நிறுவனங் களிடமிருந்து இவர்கள் அந்நியமாகிப் போவது மட்டுமன்றி, அவை இயங்கும் விதத்தினை எந்த அறிவார்த்தக் கருவிகளைக் கொண்டும் இந்தக் கதாபாத்திரங்களால் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை. வாழ்வின் நச்சரிப்பும், இருத்தல் பற்றிய அர்த்தக்குழப்பங்களும் நெட்டித் தள்ளும்போது இவர்களில் சிலர் (கிரெகர் ஸாம்ஸாவைப் போல) திடீரென்று ஒரு நாள் காலையில் பூச்சியாக மாறிவிடுகின்றனர்.

ஃபிரான்ஸ் காஃப்கா 1883ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி ப்ராக் நகரில் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் பிறந்தார். சட்டம் படித்துப் பட்டம் பெற்று பல ஆண்டுகள் (அவரது காச நோய் முற்றிய நிலையில் அவர் வேலையை விட வேண்டி வந்தது ) Workers Accident Insurance Companyயில் தொடர்ந்து பணியாற்றினார். ஆனால் அவரது நிஜமான விருப்பம் எழுதுவதற்காக கூடுதலான நேரத்தை கண்டுபிடித்துக் கொள்வதற்காகவோ அல்லது உண்டாக்கிக் கொள்வதற்காகவோ இருந்தது. ஒரு வேலையில் இருந்து பணம் சம்பாதித்தல்-என்பது போன்ற புறவயமான கட்டாயங்கள் மிக அகவயமான எழுதுதலுடன் முரண்பட்டு ஒருவித முடிவற்ற மன உளைச்சலை காஃப்காவுக்கு உண்டாக்கின. இந்த முரண்பாடுகளுக்கிடையிலும், பிறகு அவருக்கு ஏற்பட்ட காசநோயின் துன்புறுத்தல்களுக்கு இடையிலும்தான் அவரது எழுத்துச் சாதனைகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதைவிடக் கடுமையான முரண்பாடாய் இருந்தது காஃப்காவின் தந்தைக்கு இலக்கியத்தின் மீதும் எழுத்தின் மீதும் இருந்த வெறுப்பு.   மிக வெளிப்படையாகவே காஃப்காவின் தந்தை, காஃப்கா எழுதக் கூடாது என்று தடை விதித்தார். ஒரு முறை அவர் காஃப்காவை ஒரு ”பூச்சி”  என்று வைதுவிட்டார். இதன் விளைவாக, ஒரு மௌன எதிர்வினையாக உருவானதுதான் காஃப்காவின் Metamorphosis என்று கருதுபவர்களும் உண்டு. (Franz Kuna : Vienna and Prague 1890-1928 )

அக மற்றும் புற உலக முரண்பாடுகளுடன் வாழ்வில் ஈடுபடும் கலைஞர்களுக்கு, இருத்தலின் சிதைமானம் மிக நெருக்கமான அர்த்தத்துடன் புரிந்து விடுகிறது. காஃப்காவின் புதினம் சாராத எழுத்துக்களும் அவருடைய நாவல்கள் அளவுக்கே முக்கியத்துவம் உடையவை. அவற்றில் காஃப்காவின் டயரிகளும், அவருடைய காதலிகளுக்கும் பெண்நண்பிகளுக்கும் எழுதிய கடிதங்களும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆயினும் அவர் பிற ஐரோப்பிய எழுத்தாளர் களைப் போல விமர்சனக் கட்டுரைகள் ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. காஃப்கா அவருடைய தந்தைக்கு எழுதிய Letter to His Father மிக விஷேசமானது. இந்தக் கடிதத்திற்கு நிறைய மனோவியல் விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் காஃப்கா மனோவியல் விளக்கமுறைகள் பற்றி நம்பிக்கையின்மையையும் சந்தேகத்தையும் கொண்டிருந்தார். காஃப்காவின் எழுத்துக்களின் மூலமாக விளக்கமுறும் மதரீதியான வடிவாக்கம் குறித்து Max Brod காஃப்காவின் வாழ்க்கை வரலாற்று நூலில் வியாக்கியானம் தந்திருக்கிறார். Max Brodஇன் கூற்றுப்படி ஒரு முழுமுற்றான  உலகத்தில் காஃப்காவுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த முழுமை புரிந்து கொள்ளப்படாத அளவுக்கு மனிதனும் கடவுளும் ஒரு முடிவற்ற தவறான புரிந்து கொள்ளலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

காஃப்காவுக்கு யூத மதத்தில் முழுமையான நம்பிக்கை இருந்தது என்பதையும் மதக்கூட்டங்களில் இறுதிவரை அவர் பங்கேற்றுக் கொண்டார் என்ற தகவலையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டிய அவசியம் இருக்கிறது. எனினும் யூத மதத்தின் மீதாக தனக்கிருந்த நம்பிக்கை குறித்தும் காப்ஃகாவுக்கு ஐயங்கள் தோன்றிக் கொண்டிருந்தானிருந்தன என்பது அவர் மேக்ஸ் பிராடுக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரிகிறது.

எக்சிஸ்டென்ஷியலிஸ்டுகள் காஃப்காவை தமக்கு உகந்த வகையில் விளக்கமளித்துப் புரிந்து கொண்டனர். தனி மனிதன் தனக்கு உவப்பில்லாத ஒரு உலகில் யதேச்சைத்தன்மையுடன் தள்ளப் பட்டிருக்கிறான் என்கிற கருத்து ஓரளவுக்கு The Trialமற்றும் The Castle நாவல்களில் வெளிப்பட்டாலும், இந்த நாவல்களின் அர்த்தப்பாடுகள் இங்கு முடிந்து விடுவதில்லை. சர்ரியலிஸ்டுகளும் தம் பங்குக்கான விளக்கத்தைத் தந்தனர். சர்ரியலிஸ்டுகள் கொடுத்த விளக்கங்களுக்கும் காஃப்காவின் எழுத்துக்களுக்கும் எந்த உறவும் இருக்கவில்லை.

மார்க்சிஸ்டுகளும் தங்களுக்கு ஏற்றவாறு காஃப்காவை விளக்கம் தந்து பயன்படுத்திக் கொண்டனர். நிறுவனங்களின் மனித விரோதத்தன்மை பற்றிக் கூறும்போது ஒற்றை எழுத்து மட்டுமே பெயராகக் கொண்ட காஃப்காவின் நாயகர்களை வதைத்த அதிகார வர்க்கம் பற்றிய சாடல்களாக மார்க்சிஸ்டுகள் காஃகாவின் புதினங்களை அர்த்தப்படுத்திக் கொண்டனர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னதென்று அறியாமல், நிரூபணம் ஆகாமல் கத்தியால் குத்தப்பட்டு ஒரு நாய்போல இறந்துபோகிறான் Joseph.K.. இவன் ஒரு நிஜமான மனிதனின் அரூப வடிவமாக இருப்பவன். Joseph.K.வுக்கு ஏற்பட்டது போன்ற விதிவசமான நடப்புகள் எந்த சாதாரண மனிதனுக்கும் ஏற்படலாம். அதிகாரவர்க்கத்தின் மீதான கிண்டல்களாகவும் காஃப்காவின் நாவல்கள் பார்க்கப்பட்டன. The Castleநாவலில் இடம் பெறும் கோட்டையின் அதிகாரிகள் தங்களது கோப்புகளுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் தருகிறார்களே ஒழிய அந்தக் கோப்புகளில் என்ன தகவல்கள் இருக்கின்றன என்று அவர்களுக்கே தெரிவதில்லை. யாரால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன  என்றும் எப்பொழுது என்றும் எவருக்கும் தெளிவாகத் தெரிவதில்லை.

காஃப்காவின் அப்பா, காஃப்காவின் காதலிகள், காஃப்காவின் உடல்நலக் கோளாறு, காஃப்காவின் எழுத்து ஆகிய நான்கு அம்சங்களும் ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பிணைந்தவை. இருப்பினும் இதில் நடுநாயகமாக நிற்பவர் அவரின் தந்தை. அவருடைய தந்தை காஃப்காவுக்கு ஒரு சர்வாதிகாரியாகவே தோற்றமளித்தார். வெல்ல முடியாத வலிமைமிக்க வெண்கல மனிதன் ஒருவனைப் பற்றியும் காஃப்கா தனது டையரியில் குறிப்பிடுகிறார். அவருடைய தந்தையின் மற்றொரு வடிவமாக இந்த வெண்கல மனிதனைக் கூறலாம்.  எழுத்து இல்லை என்றால் அவரது இருப்புக்கே அர்த்தமில்லை என்று நினைத்தவர் காஃப்கா. ஆனால் அவருடைய  அப்பா காஃப்காவை எழுதக் கூடாது என்று சொன்னவர். காஃப்காவின் அப்பாவுக்கும் காஃப்காவின் நாவலில் இடம் பெறும் பலரின் விதிகளைத் ஒரு கோப்பின் இறுதியில் இடும் கையெழுத்தில் வைத்திருக்கிற, மனிதமையற்ற அதிகாரிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. காஃப்காவின் புனைகதைகளில் இடம் பெறும் உதவியாளர்கள் மற்றும் தகவலாளர்கள் படைப்பில் முழுமையடையாது கந்தவர்களை ஒத்திருப்பதாக அபிப்பிராயப்படுகிறார் வால்ட்டர் பெஞ்சமின் என்ற விமர்சகர்.

Felice Bauer, Julie Wohryzeck, Milena Jeseneska, Grete Bloch, Dora Dymant ஆகிய பெண்கள் காஃப்காவின் வாழ்க்கையில் மிக நெருக்கமாக இருந்தவர்கள். இவர்களில் இருவர்-Felice Bauer, Milena Jeseneska-Pollock-காஃப்காவைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நெருங்கி வந்திருக்கின்றனர். திருமண ஒப்பந்தம்  செய்யப்பட்டு பிறகு அந்த ஒப்பந்தம் இரண்டு முறை முறிந்து போயிற்று. Grete Bloch என்ற பெண் Milenaவின் போலந்துத் தோழியாவார். இவ்விருவரும் நாஜிகளின் சித்திரவதை முகாம்களில் இறந்து போனார்கள். இதில் Milena ஒரு எழுத்தாளர். Dora Dymant காஃப்கா நோயின் பிடியில் கிடந்த இறுதி வருடங்களில் அர்ப்பணிப் புடன் அவரைக் கவனித்துக் கொண்டவர். இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் நோராவைத் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் தந்தையிடம் காஃப்பாக அனுமதி கேட்டதாகவும் அறிகிறோம். தன் தந்தையைப் கண்டு பயப்பட்டதைப் போலவே காஃப்கா திருமணம் பற்றியும் பயப்பட்டார். திருமணம் என்கிற நிறுவனம் அவருடைய எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டு விடும் என்று அஞ்சினார்.

எழுதுவது என்பதே ”இயற்கையான வகையில் வயோதிகத்தை அடைவதாகும்” என்று காஃப்கா தனது டயரிகளில் குறிப்பிடுகிறார். ஒருவகையில் தன் அப்பாவை ஜெயிக்க வேண்டுமானால் காஃப்கா கல்யாணம் செய்து கொண்டு தான் சுதந்திரமானவன், தன்னால் தனியாக ஒரு குடும்பத்தை இயக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் கல்யாணம் என்கிற ஏற்பாட்டிற்கு ஒத்துப்போவ தென்பது அவரது அப்பாவைப் போலவே காஃப்காவும்  ஆகிவிடுவதற்கு சமமாகிவிடும்.

காஃப்காவின் எழுத்து வாழ்க்கையில் குறுக்கிட்டு இறுதிவரை துன்புறுத்தியது அவரது காசநோய். அவரைப் பொறுத்தவரை இரவு என்பது எழுதுவதற்காகவே ஒதுக்கப்பட்ட பிரத்தியேகக் காலம். மேலும் சர்வசகஜமாக கல்யாணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று, குடும்பம் அமைத்துக் கொள்வதை, ஏதோ பிறப்புரிமை மாதிரி பலர் செய்து கொண்டிருக்கும் காரணத்தால் தான் பின்பற்ற வேண்டாம் என்றும் நினைத்தார். மேலும் அவர் ஒரு தந்தையாக ஆவது அவருக்கு ஒரு பீதியூட்டும் செயலாகப்பட்டது. எழுதுவதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட உக்கிரத்தனிமையுடன் கல்யாணம்-குடும்பம் என்கிற நிறுவனம் என்றைக்கும் ஒத்துப்போகாது என்று காஃப்கா நம்பினார். இரவில் மட்டும் எழுதிக்கொண்டு, தீவிரத் தனிமையில் இருந்து கொண்டு, மிக லேசான சப்தங்களைக் கூடப் பொறுத்துக் கொள்ள இயலாத காஃப்காவை மணந்து கொள்வது தனது கடமையுடன் பிணைக்கப்பட்ட ஒரு சமய பிக்குவை கல்யாணம் செய்து கொள்வதற்குச் சமமாகிவிடும் என Feliceக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார். [Letters to Felice].  ஒவ்வொரு படைப்பாளியிலும் ஒருவித கவிஞனும்  ஒரு பலிகடாவும் இருக்கிறான் என்று நவீன ஆங்கில நாவலாசிரியரான Graham Greene குறிப்பிட்டார்.  இந்தப் படைப்பாளன்-பலிகடா தீராத Obession கொண்டவனாய் இருக்கிறான்.  காப்ஃகாவைப் பொறுத்தவரை இந்த Obession,  குறைபாடு, தோல்வி மற்றும் பாவம் செய்த உணர்வு ஆகியவற்றின் தொகுப்பாக அவரை அலைக்கழித் திருக்கிறது. காஃப்கா தன் மெலிந்த உடல் அமைப்பைப் பற்றி எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார். இதையும் தன் அப்பாவுடன் அவர் ஒப்புமைப் படுத்தி தன்னைப் பலவீனனாக உணர்ந்தார். ஒரே இரவில் எழுதி முடிக்கப்பட்ட கதைதான் The Judgement (1912). ஆஸ்கார் பொலாக் என்ற மற்றொரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் காஃப்கா எழுதுகிறார்:

””நமக்கு அவசியமான புத்தகங்கள், நம் மீது ஒரு துரதிர்ஷ்டத்தினைப் போலவோ, நம்மை விட நாம் அதிகம் நேசிக்கும் ஒருவரின் மரணத்தைப் போலவோ, தற்கொலையின் விளிம்பில் நாம் இருப்பதைப் போலவோ, மனித சஞ்சாரமே இல்லாத ஒரு         தூரத்துக் காட்டில் இருப்பதைப் போலவோ நம் மீது இயங்க வேண்டும்; நமக்குள் உறைந்து கிடக்கும் ஒரு சமுத்திரத்தினை வெட்டிப் பிளக்கக் கூடிய ஒரு கோடறி போலவோ பயன்பட வேண்டும்.”"

Metamorphosis, The Hunger Artist, Letter to an Academy, Investigations of a Dog, Josephine the Singer or The Mouse people ஆகிய கதைகளில் விலங்குத்தன்மை, அல்லது விலங்குகள் பற்றிய அணுகுமுறைகள் முழுமையாக இடம் பெறுகின்றன.  இந்த விலங்குத்தன்மை காஃப்காவின் எழுத்துக்களில் தலையாய முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு மனிதன் தன்னை விலங்காகவோ பூச்சியாகவோ பார்க்க வேண்டிய கட்டாயம் எப்போது வருகிறது? Milena  வுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் காஃப்கா எழுதுகிறார்:

”நான் காட்டில் வாழ்ந்திராத காட்டு விலங்கு. . . என் பயத்தை மிஞ்சியும் கூட உன் இருப்பிற்குள் வந்தேன். நீ எவ்வளவு நல்லவளாக இருந்தாய். நான் உன் காலடியில் கிடந்து உன் கைகளுக்குள் என் முகத்தை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெருமிதப்பட்டேன். சுதந்திரமாய், சக்திவாய்ந்து,  இயல்பாய் இருந்தேன். . . ஆனால் இது எல்லாவற்றுக்கும் அடியில் நான் ஒரு விலங்காகவே இருந்தேன். நான் காட்டுக்குச் சொந்தமானவன். நான் இங்கே வாழ்ந்ததெல்லாம் உன் கருணை என்னும் சூர்ய ஒளியில். . .ஆனால் அது நீடிக்காமல் போய் விட்டது.”

Letter to an Academy என்ற சிறுகதைகயில் ஒரு மனிதக் குரங்கு விஞ்ஞானிகளின் குழு ஒன்றுக்கு உரையாற்றுகிறது–விலங்கு உலகிலிருந்து மனித உலகத்திற்கு வந்த பாதையைப் பற்றி. அது பிடிக்கப்படும் நாள் வரை பலவிதமான வெளியேறும் வழிகள் இருந்ததாகவும் திடீரென இப்போது ஒரு கூண்டிலிருப்பதால் எந்த வழியும் தெரியவில்லை என்கிறது அந்தக் குரங்கு. இப்போது அதற்கு வேண்டியது ”சுதந்திரம்” அல்ல. மாறாக வெளியேறுவதற்கான ஒரு வழி மாத்திரமே. தன் கூண்டுக்கு வெளியே மனிதர்கள் நடந்து செல்வதைப் பார்த்த பிறகு மனிதர்களைப் போல் நடந்து கொள்வது நல்லதென அதற்குத் தோன்றுகிறது. மனிதரின் அங்கஅசைவுகளை பிரயத்தனத்துடன் கற்றுக் கொண்டு இறுதியில் பேச்சையும் கற்றுக் கொள்கிறது.

எழுதுவதற்கான உந்தம் குறித்தும் காஃப்கா அவரது காதலிகளில் ஒருத்தியான ஃபெலிஸ்-க்கு எழுதும்போது குறிப்பிடுகிறார்: எழுதுதல் என்பது விநோதமானது, மர்மமானது, ஆபத்தானது. அது கொலைகாரர்களின் வரிசையிலிருந்து தாவித் தப்புவது. மெய்யாக நடப்பதை நிஜமாகப் பார்ப்பது. ஒரு வித உயர்நிலை நுட்பக் கவனம். இந்த கவனம் எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ அந்த அளவு குறிப்பிட்ட வரிசையின் பிடியிலிருந்து தப்பி சுதந்திரமாய் இருக்கலாம்.

The strange, mysterious, perhaps dangerous, perhaps saving comfort that there is writing: it is the leap out of murderers’ row; it is a seeing of what is really taking place. This occurs by a higher type of observation, a higher, not a keener type, and the higher it is and the less within  reach of the row, the more independent it becomes, the more obedient to its own laws of motion, the more incalculabe, the more joyful, the ascendant its course.

(Letters to Felice)

பெரும்பாலானவர்கள் படிக்கக் கூடிய காஃப்காவின் புதினங்களை மொழிபெயர்த்தவர்கள் Edwin Muirமற்றும் Willa Muirஆகிய ஆங்கிலேயத் தம்பதிகள். எட்வின் ம்யூர் அவரது தனிப்பட்ட திறன்களிலேயே ஒரு நவீன ஆங்கிலக் கவிஞராவார். இந்தத் தம்பதிகள் அவர்கள் பார்த்ததுக் கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு ஐரோப்பாவுக்கு சென்று ஜெர்மன் மொழி கற்றுக் கொண்டு முழுநேர மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்கள். ஆங்கிலம் பேசும் உலகிற்கு காஃப்காவை அறிமுகம் செய்தவர்கள். இருப்பினும் இவர்கள் செய்திருக்கும் மொழிபெயர்ப்பின் குறைகள் சமீபமாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.

Mark Harmann என்பவர் ”கோட்டை” நாவலை முழுமையாக புதிய மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவர் அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்த்த மூலஜெர்மன் வடிவம் 1982ஆம் ஆண்டு ஜெமன்இயல்வாதியான  மால்கம் பாஸ்லி என்பவர் காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளை எடிட் செய்து வெளியிட்டது. ம்யூர் தம்பதிகள் அடிப்படையாக எடுத்துக் கொண்டது காஃப்காவின் நண்பர் மேக்ஸ் பிராட் 1924ஆம் ஆண்டு எடிட் செய்து வெளியிட்டது.

காஃப்காவின் மொழி தெளிவானது அலங்காரங்கள் அற்றது. ஆஸ்திய-ஜெர்மானிய சட்டவியல் பிரயோகங்களைக் கொண்டது. ஓரளவு தட்டையாகவும் பல இடங்களில் சலிப்பேற்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பது. எனவே மொழிரீதியான வானவேடிக்கைகளுக்காக காஃப்காவைப் படிப்பவர்கள் ஏமாறுவது உறுதி.

*****

நன்றி: மீட்சி காலண்டிதழ்