Showing posts with label ரா.கிரிதரன். Show all posts
Showing posts with label ரா.கிரிதரன். Show all posts

Sunday, March 20, 2011

ஆகஸ்ட் மாதப் பேய்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

தமிழில்: ரா.கிரிதரன்

 

காப்ரியல் கார்ஸியா மார்க்கெஸ் தமிgarcia-marquez-300x210ழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். கொலம்பியாவைச் சேர்ந்த தென்னமெரிக்க எழுத்தாளர். மாய யதார்த்தக் கதைகளின் பிதாமகராகக் கருதப்படுபவர். ‘One Hundred Years of Solitude’, ‘Love in the Time of Cholera ’ ஆகியவை இவரெழுதிய பிரபலமான புதினங்கள். 1982-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. இவருடைய ‘The Ghosts of August’ என்ற பிரபலமான சிறுகதையை ரா.கிரிதரனின் மொழிபெயர்ப்பில் படிக்கலாம்.

நடுப்பகலுக்கு சற்று முன்பாகவே நாங்கள் அரேட்சோ வந்து சேர்ந்துவிட்டோம். கடந்த இரண்டு மணிநேரங்களாக வெனிசுலாவைச் சேர்ந்த எழுத்தாளர் மிகைல் ஒடேரோ சில்வா வாங்கியிருந்த மாளிகையை அற்புதமான டஸ்கன் பகுதியில் தேடிக்கொண்டிருந்தோம். அது உக்கிரமான ஆகஸ்ட் வெயில் தினம். சுற்றுலாவுக்கு வந்த ஜனத்திரள் மட்டுமே இருந்ததால், அந்த இடத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் யாருமே இல்லை. பல வீணான முயற்சிகளுக்குப் பிறகு எங்கள் காருக்குத் திரும்பினோம். ஸைப்ரஸ் மரங்கள் வரிசையாக இருந்த, திசைக் காட்டும் பலகைகள் இல்லாத ஒரு தெருவைக் கடந்து நகரத்தை விட்டு வெளியே வந்தோம்.

அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.

நடுப்பகல் பேய்களை நம்பாத என் மனைவியும் நானும் அவளின் அறியாமையைக் கண்டு சிரித்தோம். ஆனால், ஒன்பது மற்றும் ஏழு வயதான என் இரு மகன்களும் பேயை நேரில் சந்திக்கப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ந்தனர்.

எங்களுக்காக மறக்கமுடியாத அற்புதமான மதிய உணவுடன் காத்துக்கொண்டிருந்த மிகைல் ஒரு தேர்ந்த உணவு ரசிகர் மட்டுமல்லாது ஓர் அற்புதமான எழுத்தாளரும் ஆவார். நேரம் கடந்து வந்ததால் மாளிகைக்கு உள்ளே பார்க்க முடியாமல் மேஜையில் சாப்பிட உட்கார்ந்துவிட்டோம். பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட மொட்டை மாடியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்கள் முன் படர்ந்து விரிந்திருந்த நகரம் இயல்பை சற்றே தளர்த்தியது. மேலும் மாளிகையில் வெளிப்புறத் தோற்றத்தில் பயப்படும்படியாக ஒன்றுமே இல்லை.தொண்ணூறாயிரம் பேர் மட்டுமே கொண்ட அந்த மலையிலிருந்து பல அற்புதமான மேதாவிகள் பிறந்தார்கள் என்பதை நம்பமுடியவில்லை. அவர்களனைவரும் அரேட்சோவில் பிறந்தவர்களில்லை என அவருக்கே உரித்த கரிபியன் ஹாஸ்யத்துடன் மிகைல் ஒடேரோ சில்வா கூறினார்.

`லுடோவிகா எல்லாரைவிடவும் சிறந்தவர்` எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

குடும்பப்பேரைக் குறிப்பிடாது வெறும் லுடோவிகா: இந்த மாளிகையை ஆசையோடு கட்டிய அவர் கலைகளுக்கும் போர்களுக்கும் பெரிய ரசிகர். சாப்பிடும்போது லுடோவிகாவின் பிரம்மாண்டமான வலிமை, குழப்பங்களிலான அவர் காதல், குரூரமான அவர் இறப்பு என பலவற்றைப் பற்றி மிகுவேல் கூறினார். தன் மனைவியுடன் கலவிக்குப் பின் பைத்தியம்போல் படுக்கையிலேயே அவளைக் கத்தியால் குத்திவிட்டு, தன் மேலேயே உக்கிரமான வேட்டை நாய்களை ஏவி, உடம்பின் பகுதிகள் கிழிய அவர் இறந்ததையும் குறிப்பிட்டார். தன் காதலின் பாவங்களுடன் சமாதானம் செய்ய இரவு லுடோவிகா இதே மாளிகையில் பேயாக உலாத்துவதை அவர் உறுதிப்படுத்தினார்.

மாளிகையின் உட்புறம் பெரிதாக, அமானுஷமாக இருந்தது. நல்ல வெளிச்சமான பகல் பொழுதில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, நிறைந்த மனத்துடன் கேட்ட இந்த கதைகள், விருந்தாளிகளை உற்சாகப்படுத்த உண்டாக்கப்பட்ட வழிகளில் ஒன்றாக எனக்குத் தோன்றியது. எங்கள் சிரமபரிகாரத்திற்குப் பிறகு பல எஜமானர்களால் மாற்றியமைக்கப்பட்ட அறைகளை அமானுஷம் பற்றிய பயமில்லாமல் நடந்து பார்த்தோம். புதுமையான படுக்கையறை, அழகான பளிங்குத் தரை, நேர்த்தியான குளியல் தொட்டி மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் என முதல் தளம் மிகைலால் முழுவதாக மாற்றப்பட்டிருந்தது. நாங்கள் மதியம் உணவருந்திய மொட்டை மாடியும் மிகைலால் அழகான பூக்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது தளத்தில் பலநூறு வருடங்களாக உபயோகப்படாமலிருந்த அறைகள் பல வடிவங்களில் இருந்தன. அந்த அறைகளின் அலங்காரங்கள் அவற்றின் போக்கிற்கு கை விடப்பட்டிருந்தன. ஆனால் மேல்தளத்தில், காலம் கூட நுழைய முடியாத அறையில், லுடோவிகாவின் படுக்கையறை எந்த மாற்றமுமில்லாமல் பழையபடியே இருந்ததைப் பார்த்தோம்.

அது அற்புதமான மாயக்கணம். தங்க நூல்களாலான விரிப்புடனிருந்த படுக்கை லுடோவிகா பலியிட்ட காதலியின் ரத்தத்தால் உறைந்திருந்தது.

அந்த அறையில் தங்கக் கேடயங்களுடன் இருந்த வாளும், கணப்புப் பிறையில் இருந்த சாம்பல் சரடுகளும், கல்லாய் மாறிய மரத்துண்டும் இருந்தன. வாழும் காலத்தில் அதிர்ஷ்டமில்லாமல் வாழ்ந்த ஒரு ஃப்ளோரெண்டீன்  பகுதிக் கலைஞரால் தங்க வேலைப்பாடுகளுடன் வரையப்பட்ட எண்ணெய் ஓவியம் ஆழ்ந்து யோசிக்கும் வீரனின் மன ஓட்டத்தை பிரதிபலித்தது. விவரிக்க இயலாத ஒருவித பழத்தின் மணம் அங்கே பரவியிருந்தது. அந்த மணம் என்னை மிகவும் பாதித்தது.

டஸ்கனியில் பகல் பொழுது நீண்டதாகவும் நிதானமாகவும் இருந்தது. சூரியன் இரவு ஒன்பது மணிவரை மறையவில்லை. மாளிகைக்குள் நடந்து முடிக்க மாலை ஐந்து மணியானது. அதன் பின்னர், ஸான் ஃபிரான்ஸ்கோவின் திருச்சபையில் பியரோ டெல்லா ஃப்ரான்செஸ்கா வரைந்த ஓவியங்களைப் பார்க்க மிகைல் வற்புறுத்தினார். சதுக்கத்தில் காபி குடித்துச் சற்று பொழுது போக்கிவிட்டு பெட்டிகளை எடுக்க மாளிகைக்குத் திரும்பும்போது இரவு உணவு தயாராக இருந்தது.  அதனால் சாப்பிடுவதற்காகத் தங்கினோம்.

நட்சத்திரங்கள் குழுமியிருந்த வானத்தின் கீழே நாங்கள் சாப்பிடும் போது, பிள்ளைகள் விளக்கின் உதவியுடன் மாடி அறைகளின் இருளை ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். முரட்டுக் குதிரைகளைப் போல் சத்தமிட்டுக்கொண்டே படிகளில் ஓடினர். என் பிள்ளைகள், லுடோவிகாவின் அறைகளுக்குள் அவர் பெயரை சந்தோஷமாக உரக்கக் கத்திக்கொண்டிருந்தது கேட்டது. அந்த மாளிகையிலேயே தூங்கலாமென்ற தந்திர யோசனையைக் கூறியதும் அந்த இருவர் தான். சந்தோஷத்துடன் மிகைலும் அவர்களை வழிமொழிய, விருந்தோம்பலின் கோட்பாட்டுக்கு மரியாதை கொடுக்கும் விதமாய் நாங்களும் மறுக்கவில்லை.

பயந்ததற்கு எதிர்மறையாய் என் மனைவியும் நானும் முதல் தள படுக்கையறையிலும், பிள்ளைகள் அதற்கு அடுத்த அறையிலும் நன்றாகவே தூங்கினோம். புதிதாக வடிவமைக்கப்பட்டிருந்ததால், இரண்டு அறைகளும் எந்தவிதமான அமானுஷத்தன்மையும் இல்லாமலிருந்தன.

உறக்கம் வரக் காத்திருக்கும்போதுதான் வரவேற்பறையின் கடிகாரத்திலிருந்து வந்த தூக்கமிலா பனிரெண்டு மணியோசை, அந்த பாட்டியின் மோசமான எச்சரிக்கையை எனக்கு ஞாபகப்படுத்தியது. மிகவும் களைப்பிலிருந்ததால் நாங்கள் இடரில்லாத ஆழமான தூக்கத்திலாழ்ந்தோம். காலை ஏழு மணிக்குப் பிறகு சூரிய ஒளி எங்கள் ஜன்னலின் வழியாக ஊடுருவிய போதுதான் நான் கண்விழித்தேன். மனைவி என் பக்கத்தில் அப்பாவித்தனமான உறங்கிக்கொண்டிருந்தாள். `இந்த காலத்திலும் பேய்களை நம்புவது என்ன மடத்தனம்` எனக் கூறிக்கொண்டேன்.

அப்போதுதான் அந்த பழங்களின் வாசனை என்னை அடைந்தது. உறைந்த சாம்பல்களும், கல்லாய் மாறிய மரத்துண்டுகளும், சோக வீரனின் தங்க வேலைப்பாடு மிகுந்த ஓவியமும் மூன்று அடி தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஏனென்றால், நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தது முதல் மாடி படுக்கையிலில்லை; மாறாக அழுக்கான படுக்கை விரிப்பின் மேல், காதலியின் சூடான ரத்தத்தில் உறையாமல் ஊறிப்போயிருந்த - லுடோவிகாவின் படுக்கை.

***

நன்றி: சொல்வனம்