Showing posts with label சா.தேவதாஸ். Show all posts
Showing posts with label சா.தேவதாஸ். Show all posts

Friday, April 1, 2011

போர்ஹேயுடன் ஒரு சந்திப்பு –பகுதி 2

(நேர்காணல் 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பதிவு செய்யப்பட்டது)

தமிழில் : சா.தேவதாஸ்

 நேர்காணல்  பகுதி 1  இங்கே

 

போர்னே: படைப்பாளர் போர்ஹேயும், மொழிபெயர்ப்பாளர் போர்ஹேயும் முற்றிலும் வேறானவர்களா? 

போர்ஹே: ஆமாம், வேறானவர்களே. மொழிபெயர்க்கும்போது அத்துமீறாதிருக்க முயலுகின்றேன். நல்லதொரு மொழியாக்கம் செய்ய, அத்துடன் கவிஞராக இருக்கவும் முயலுகிறேன்.

போர்னே: உங்களது படைப்புகளில் அர்த்தமெதனையும் பொதிந்து வைத்திவிட நீங்கள் முயன்றதில்லை என்றீர்கள்.

போர்ஹே: என்னை ஒரு அறவியல் சார்பாளராகவே கருதிக் கொள்கிறேன். porgeஆனால் அறநெறிகளை போதிக்க முயலுவதில்லை. என்னிடம் செய்தி கிடையாது. சமகால வாழ்வு பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தினசரிகள் எதையும் வாசிப்பதில்லை. அரசியலையும், அரசியல்வாதிகளையும் வெறுக்கிறேன். எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை.என் அந்தரங்க வாழ்க்கை அந்தரங்கமானதே; புகைப்படத்தையும் விளம்பரத்தையும் தவிர்க்கவே முயலுகிறேன். என் தந்தைக்கும் இதே எண்ணம் இருந்தது. 'நான் வெல்ஸின் புலப்படாத மனிதனாக விரும்புகிறேன்' என்பார். அது குறித்து பெருமிதப்படுவார். ரியோ டி ஜெனிரோவில் என் பெயரை யாரும் அறியார். அங்கே புலப்படாதிருப்பதை உணர்ந்தேன். ஒரு வழியாக விளம்பரம் என்னைக் கண்டுகொண்டுவிட்டது. அதுபற்றி நான் என்ன செய்யக்கூடும்? அதனை நான் தேடுவதில்லை. என்னை அது தேடிக் கொண்டது, ஒருவருக்கு எண்பது வயதாகிறது, கண்டறியப்படுகிறார், துப்பறியப்படுகிறார். போர்னே: உங்களது படைப்பின் அர்த்தம், அர்த்தமின்மை தொடர்பாக; காஃப்காவின் படைப்பெங்கும் குற்றணர்வு ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களது படைப்பில் ஒவ்வொன்றும் குற்ற உணர்வைத் தாண்டியதாக இருக்கிறது . போர்ஹே: ஆமாம், அது சரிதான் காஃப்காவுக்கு குற்றவுணர்வு இருந்தது. என்னிடம் இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் நான் செய்திருப்பவை செய்யப்பட்டுள்ளன.; எனக்காக அல்லது என் மூலமாக. ஆனால் உண்மையிலேயே நான் அதனைச் செய்திருக்கவில்லை. ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, என்னால் குற்றவுணர்வு கொள்ள முடியாது.

போர்னே: பஞ்சபூதங்களால் ஆன வரம்புக்குட்பட்ட சேர்க்கை மட்டுமே உண்டு. எனவே கருத்துக்களை உருவாக்குவதென்பது கடந்த காலம் பற்றிய மறு கண்டுபிடிப்பே - என்னும் உங்களது கூற்றுடன் இதைத் தொடர்புபடுத்திப் பார்க்கலாமா?

போர்ஹே: பார்க்கலாம் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு தலைமுறையும் கடந்த காலத்துப் புத்தகங்களை மீளவும் எழுதிக் கொள்ள வேண்டியுள்ளது. அதனைச் சுற்று வித்தியாசமாக செய்கிறது என்று எண்ணுகிறேன். ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டுவிட்ட கவிதை ஒன்று என்னால் எழுதப்படுகிறது. அதாவது என்னால் மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இதுவே என் தார்மீகப் பணி. இலேசான மாறுதல்களையே நாம் செய்கிறோம். ஆனால் மொழியினை ஒன்றும் செய்ய முடியாது என்றே கருதுகிறேன். அவ்வாறு செய்திட ஜாய்ஸ் முயன்றார். அவர் சில நேர்த்தி மிகு வரிகளை எழுதிய போதும் தோற்றுவிட்டார்.

போர்னே; மீண்டும்மீண்டும் எழுதப்பட்ட இக்கவிதைகளை எல்லாம் புதிர்பாதையில் ஒரே சுவரிடம் வந்து சேருதல் போன்றது என்பீர்களா? போர்ஹே: அப்படியே, அது நல்ல உருவகம். ஆமாம், நிச்சயமாக.

போர்னே: உள்ளூர் வண்ணத்தைப் பயன்படுத்துவது எப்போது சரியாக இருக்கும்; எப்போது சரியாக இருக்காது என்பதற்கான வழிகாட்டு நெறிகளைக் கூறுவீர்களா? போர்ஹே: தடைப்படுத்தாத விதத்திலே செய்ய முடியுமானால் நல்லது. ஆனால் அழுத்திக் கூறினால், எல்லாம் செயற்கையாகிவிடும். ஆனால் அது பயன்படுத்தப்பட வேண்டும். அது விலக்கப்பட்டதல்ல என்கிறேன். அதனை அழுத்த வேண்டியதில்லை. போனஸ் அயர்ஸில் ஒருவித கொச்சை மொழியினை உருவாக்கியிருக்கிறோம். அதனை எழுத்தாளர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அதிகப்படியாக பயன்படுத்துகின்றனர். ஆனால் மக்களுக்கு அதனால் பயனேதும் கிடையாது. இருபது நிமிடத்திற்கொரு கொச்சை வழக்கில் வார்த்தை ஒன்றினை அவர்கள் கூறலாம். ஆனால் எப்போதும் கொச்சை மொழி பேசிட யாரும் முயலுவதில்லை.

போர்னே: வட அமெரிக்க எழுத்தாளர் யாரேனும் உள்ளூர் வண்ணத்தை திறம்பட கையாண்டுள்ளனரா; அப்பண்பாட்டிற்கு அந்நியர் என்ற முறையிலே உங்களுக்கு அதனை ஆற்றலுடன் வெளிப்படுத்தியிருப்பவர் என யாரைக் கருதுகிறீர்கள்? போர்ஹே: மார்க் ட்வைன். ரிங் லார்ட்னர் சிறிது வழங்கியிருப்பதாக எண்ணுகிறேன். அவரை மிகமிக அமெரிக்கத் தன்மை கொண்டவராக எண்ணுகிறீர்கள் இல்லையா?

போர்னே: மற்றும் நகர்ப்புறத்தன்மை வாய்ந்தவர்.

போர்ஹே: மிகவும் நகர்ப்புறத் தன்மை. மற்ற எழுத்தாளர் யார்? ப்ரெட் ஹார்டியை வாசித்திருக்கிறேன். ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளராக இருந்தார் என எண்ணுகிறேன். ஹெமிங்வேயை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. தவறான முறையிலே கதையைச் சொல்வதும், காலக் கிரமத்தைக் கலந்து போடுவதுமாக இருந்தபோதும் ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளரே.

போர்னே: ஃபாக்னரின் ûwild palms-யை மொழிபெயர்த்தீர்கள்.

போர்ஹே: ஆம், ஆனால் அந்நூல் அவ்வளவாகப் எனக்குப் பிடிக்காது. light in august மிக நல்ல புத்தகம். ஆனால் அது அவருக்குப் பிடிக்காது. sanetuary- குறிப்பிடத்தக்க படைப்பே. அதுவே நான் படித்த முதல் ஃபாக்னர் புத்தகம். பிறகு மற்ற புத்தகங்களைப் படிக்கலானேன். அவரது கவிதையினையும் படித்தேன்.

போர்னே: ஃபாக்னரையும் அவரது உள்ளூர் வண்ணத்தையும் நீங்கள் மொழிபெயர்க்கும்போது, நேரடியான ஸ்பானிஷில் கொண்டு வந்தீர்களா அல்லது உள்ளூர் ஸ்பானிஷ் வகையொன்றில் மாற்றிட முயன்றீர்களா?

போர்ஹே: இல்லை, கொச்சை வழக்கை மொழிபெயர்க்க வேண்டுமாயின், நேரடியான ஸ்பானிஷில்தான் செய்ய வேண்டும். இல்லாதுபோனால் வேறுவிதமான உள்ளூர் வண்ணம் கிடைக்கும். உதாரணமாக El gavcho marti fierro என்றழைக்கப்படும். கவிதை மொழிபெயர்ப்பு எங்களிடமுண்டு. இப்போது அது கெüபாய் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது தவறு என்பேன். ஏனெனில் இதில் கெüபாய்கள் பற்றித்தான் நினைக்க முடிகிறதேயொழிய, தென் அமெரிக்க இடையர்களை எண்ணிப் பார்க்க இயலவில்லை. மார்ட்டின் ஃபைரோவை என்னால் முடிந்த அளவுக்கு தூய ஆங்கிலத்திலே மொழியாக்கம் செய்வேன். கெüபாயும், தென் அமெரிக்க இடையரும் ஒரேவித மனிதர்தான் என்றபோதும், அவர்களை வேறுபடுத்தித்தான் எண்ணுகிறோம். உதாரணமாக, கெüபாய் என்றதும் துப்பாக்கிகளை எண்ணிப் பார்க்கிறோம். ஆனால், தென்அமெரிக்க இடையனை நினைக்கும்போது குறுவாள்களும், நேருக்கு நேர் மோதல்களுமே நினைவுக்கு வரும். எழுபத்தைந்து அல்லது சற்று அதிகமான வயதுடைய கிழவன், இளைஞன் ஒருவனை நேருக்கு நேர் மோதலுக்கு சவால் விட்டதைப் பார்த்திருக்கிறேன். பயங்கரமாகத் தோன்றும் இரு குறுவாள்களை எடுத்து வந்தான். ஒன்று வெள்ளிப் பிடி கொண்டிருந்தது. ஒன்று மற்றதைவிடப் பெரியதாக இருந்தது. இரண்டும் ஒரே அளவினதாய் இல்லை. அவற்றை மேசை மீது வைத்துவிட்டு, ""சரி இப்போது உன் ஆயுதத்தை எடுத்துக்கொள்'' என்றான். ""நீ பெரியதை எடுத்துக் கொள்ளலாம், அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை'' என்ற பொருள் அப்பேச்சில் இருந்தது. அப்போது இளைஞன் மன்னிப்புக் கேட்டான். கிழவனது வீட்டில் பல குறுவாள்கள் இருந்தன. ஆனால் அவை இரண்டையும் வேண்டுமென்றே தெரிவு செய்தான். ""இக்கிழவனுக்கு குறுவாளைக் கையாளத் தெரியும், ஏனெனில் இன்னொன்றை அவனால் தெரிவு செய்ய இயலும்'' என்று அக்குறுவாள்கள் கூறின.

போர்னே: அது உங்கள் கதையை நினைவுபடுத்துகின்றன...

போர்ஹே: அம்மையக் கருத்தை என் கதையில் பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு நபரின் அனுபவத்தைச் சொல்வதிலிருந்து கதைகள் பிறக்கின்றன.

போர்னே: அதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், அவ்வார்த்தையைக்குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. என்ன நிகழ்ந்தது என்பதைச் சொன்னால் போதுமானது.

போர்ஹே: அதன் பொருள்: அவன் ஒரு போக்கிரி, மோசடிக்காரன். அதே வேளையில் அவனுக்கென்று ஒரு நெறி உண்டு. எச்சரிக்கை இல்லாது யாரையும் தாக்குவது பற்றி அவன் எண்ணிப் பார்த்ததில்லை. ஒட்டுமொத்த காரியமும் மிக மெதுமெதுவாக நிகழ்ந்தது. இன்னொருவரைப் புகழ்வதன் வாயிலாக ஒரு தொடங்கலாம். அப்போது, யாருக்கும் சண்டையிடத் தெரியாத பிரதேசத்திலிருந்து வந்தவன் அவன் என்று நாம் சொல்ல விரும்பலாம். ஒருவேளை அவனுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அதன்பிறகு மற்றவரை புகழ்ச்சிச் சொற்களால் இடைமறித்து, "தெருவிற்குள் போவோம், உனது ஆயுதத்தைத் தெரிவு செய்துகொள்' என்பது போன்று கூறலாம். ஆனால் இது முழுவதும் மிக மிக மெதுவாக நிறைவேற்றப்பட்டது. அத்தகைய விவரிப்பு நழுவிவிட்டதோ என்று ஆச்சரியப்படுகிறேன். இப்போதெல்லாம் துப்பாக்கிகளை, சுழல் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். அந்த அறநெறியெல்லாம் போய்விட்டது. தொலைவிலிருந்தே ஒருவரைச் சுட்டுவிடலாம்.

போர்னே: கத்திச்சண்டை மிக நெருக்கமானது.

போர்ஹே: நெருக்கமானது, ஆமாம். அவ்வார்த்தையைப் பயன்படுத்தினேன்; ஒரு கவிதையின் இறுதியிலே அதனைப் பயன்படுத்தினேன், ஒருவனது தொண்டை அறுபட இருக்கிறது. "நெருக்கமாக கத்தி அதன் கழுத்தில் மேல்' என்கிறேன்.

போர்னே: பழைய வடிவங்களையும் ஸ்தாபிதமாகிவிட்ட எழுத்தாளரையும்போல் எழுதிப்பார்த்து புது எழுத்தாளர்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள்.

போர்ஹே: இது நேர்மை சார்ந்த பிரச்னை என்று எண்ணுகிறேன். இல்லையா? எதையாவது புதுப்பிக்க விரும்பினால், ஏற்கனவே செய்யப்பட்டுள்ளவற்றை உங்களால் செய்துகாட்ட இயலும் என்று காட்டியாக வேண்டும். புது முயற்சி மூலம் ஆரம்பிக்கவியலாது. உதாரணமாக சுயேச்சையான கவிதை மூலம் தொடங்க முடியாது. சிற்றுணர்ச்சிப் பாடல் ஒன்றை முயன்று பார்க்க வேண்டும், அல்லது வேறுவிதமான செய்யுள் வகையைப் பரீட்சித்து, அப்புறம் புது விஷயங்களுக்குப் போக வேண்டும்.

போர்னே: விலகி வெட்டிச் செல்லும் நேரம் எது? புது முயற்சியில் இறங்குவது எப்போது என்று நீங்கள் உணர்ந்ததை உங்கள் அனுபவத்திலிருந்து கூறுங்களேன்?

போர்ஹே: முடியாது, நான் தவறு செய்துவிட்டேன். சுயேச்சையான கவிதையிலிருந்து தொடங்கினேன். அதனைக் கையாள்வது எப்படி என நான் அறிந்திருக்கவில்லை. மிகச் சிரமமானது, சாஸ்திரிய வடிவங்களை எழுதுவது எளிதானது. ஏனெனில் உங்களுக்கு உதவிடும் வகை மாதிரி அவற்றில் இருக்கிறது என்பதை பின்னரே கண்டுகொண்டேன். ஆனால் சுயேச்சை கவிதையில் உங்களுக்கென ஒருவகை மாதிரியை உருவாக்க வேண்டியிருக்கிறது, மற்றும் அதனை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். நல்லது, உரைநடை வருவது கவிதைக்குப் பின்னர்தான். உரைநடை மிகச் சிரமமானது. எனக்குத் தெரியாது. உள்ளுணர்வால் எழுதியிருக்கிறேன். பிரக்ஞைபூர்வமாக கவியாக என்னை நான் கருதவில்லை.

போர்னே: மரபார்ந்த வடிவங்களுடன் தொடங்க வேண்டும் என்கிறீர்கள்? இது பார்வையாளர் சார்ந்த பிரச்னை இல்லையா?

போர்ஹே: இல்லை. பார்வையாளரை நான் நினைத்ததேயில்லை. எனது முதல் நூலை அச்சிட்டதும், அதனை புத்தகக் கடைகளுக்கோ, மற்ற எழுத்தாளர்களுக்கோ அனுப்பவில்லை. நண்பர்களுக்குத் தந்துவிட்டேன். 300 பிரதிகளை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். அவை விற்பனைக்காக இருந்ததில்லை. அந்நாட்களில் ஓர் எழுத்தாளர் புகழ்பெறுவது அல்லது வெற்றி } தோல்வி பற்றி யாரும் நினைத்ததில்லை. 1920, 1930- களில் அக்கருத்துக்கள் எங்களுக்குத் தொலைதூரமானவை. வெற்றி, தோல்வி - புத்தகங்களை விற்பது என்ற ரீதியில் யாரும் எண்ணிப் பார்த்ததில்லை. எழுதுவதை பொழுதுபோக்கு அல்லது ஒருவித விதியாக நாங்கள் எண்ணினோம். டிக்வென்ஸியின் சுயசரிதத்தை நான் படித்தபோது, தன்னுடைய வாழ்க்கை இலக்கிய வாழ்க்கையாக இருக்கும் என்பதை அவர் அறிந்து கொண்டிருந்தார் எனக்

நூல்: மணல் பிரதி தொகுப்பு: தளவாய் சுந்தரம்

நன்றி: தாவரம்

போர்ஹேயுடன் ஒரு சந்திப்பு –பகுதி 1

(நேர்காணல் 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பதிவு செய்யப்பட்டது)

தமிழில் : சா.தேவதாஸ்

போர்ஹே: : முதலில் சொல்லிவிடுகிறேன், எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் வேண்டாம். ஏனெனில் எதிர்காலங்கள் பலவாயும் ஒன்றிலிருந்து மற்றது மாறுபட்டதாயும் உள்ளது எனக் கருதுகிறேன். jorge-luis-borges2

டேனியல் போர்னே: அப்படியானால் உங்களது கடந்த காலம், தாக்கங்கள் பற்றிக் கூறுங்கள்.

போர்ஹே: : நல்லது, எனக்குக் கிடைத்த தாக்கங்களைப் பற்றிக் கூற முடியுமேயொழிய பிறரிடம் நான் செலுத்தியவைப் பற்றிக் கூற இயலாது. அது பற்றி அறியேன், அது பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் முதலாவதாக என்னை ஒரு வாசகனாகவும் அப்புறம் எழுத்தாளனாகவும் கருதிக் கொள்கிறேன். அது அனேகமாகப் பொருத்தமற்றது; என்னை ஒரு நல்ல வாசகனாகக் கருதுகிறேன். பல மொழிகளில் நல்ல வாசகன், குறிப்பாக ஆங்கிலத்தில் - ஏனெனில் கவிதை, ஆங்கிலம் மூலமாகவே என்னை வந்து சேருகிறது. ஸ்வின்பர்ன், டென்னிஸன், கீட்ஸ், ஷெல்லி மீதான என் தந்தையின் நேசத்தால் - என் தாய்மொழி மூலமாக, ஸ்பானிஷ் மூலமாக அல்ல. ஒரு வித மயக்கமாக என்னிடம் வந்தது. அதனைப் புரிந்துகொள்ளவில்லை யெனினும் உணர்ந்து கொண்டேன். தன் நூலகத்தைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு என் தந்தை விட்டுவிட்டார். என் சிறுபிராயத்தை எண்ணிப் பார்க்கையில், நான் வாசித்த புத்தகங்களின் ரீதியிலேயே எண்ணிப் பார்க்கிறேன்.

போர்னே: உண்மையிலேயே நீங்கள் புத்தக மனிதர்தான். நீங்கள் நூலகராக இருந்ததும், தொன்மையானவை மீது உங்களுக்கு மோகம் இருப்பதும் சேர்ந்து, புதியவை படைத்தலுக்கு எப்படி உதவியுள்ளன என்று கூற முடியுமா?

போர்ஹே: : என் எழுத்தில் புதுமையேதும் உள்ளதா என்று அதிசயிக்கிறேன். அடிப்படையில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே என்னை எண்ணிக் கொள்கிறேன். கடந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டில் (1899) பிறந்தேன். சம காலத்து எழுத்தாளர்களையும் படிக்கிறவன் என்றாலும் டிக்கன்ஸ், பைபிள் அல்லது மார்க் ட்வெய்ன் படித்து வளர்ந்தவன். கடந்த காலத்தில் நான் ஈடுபாடு கொண்டுள்ளேன். நம்மால் கடந்த காலத்தை உருவாக்க முடியாது, மாற்ற முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். நிகழ்காலத்தை இல்லாமல் ஆக்குவது அரிதானது என்ற பொருளில் கூறுகிறேன். ஆனால் கடந்த காலம் என்பது வெறுமனே ஒரு நினைவு, ஒரு கனவு. நினைத்துப் பார்க்கையில் அல்லது எனக்குச் சுவாரஸ்யமானவற்றை வாசித்துக் கொண்டிருக்கையில், என் கடந்த காலம் தொடர்ந்து மாறுவதாகத் தோன்றும். நான் படித்த எழுத்தாளர்களுக்கு அல்லது தமது மொழியின் அங்கமாக, தம் மரபின் அங்கமாக இருந்த எழுத்தாளர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். மொழி தன்னளவிலேயே ஒரு மரபாயிருக்கிறது.

ஸ்டீபன் கேப்: உங்களது கவிதையைப் பார்ப்போமா?

போர்ஹே: : நானொரு அழையா விருந்தாளி, கவிதை எழுத முயலுகையில் நான் எழுதுவதே இல்லை என்கின்றனர் என் நண்பர்கள். ஆனால் உரைநடை எழுதும் என் நண்பர்கள் உரைநடை எழுத முயலுகையில் நான் எழுத்தாளரே கிடையாது என்கின்றனர். எனவே என்ன செய்வதென்றே தெரியாமல் தர்மசங்கடமான மனோநிலையில் இருக்கிறேன்.

கேப்: கேரிஸ்னைடர் என்னும் நவீன கவி riprap என்னும் சிறு கவிதையில் தன் கவிக் கோட்பாட்டை விளக்குகிறார். அவரது கருத்துகள் உங்களது கவிதையுடன் சில அம்சங்களில் ஒத்திருப்பதாகத் தோன்றுகிறது. கவிதையிலுள்ள வார்த்தைகளின் பாலான அவரது அணுகுமுறையை விவரிக்கும் அதன் சிறுபகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

போர்ஹே: : சரி. சிறுபகுதியென்ன, பெரிய பகுதியாகவே கூறலாம், இல்லையா? இக்காலைப் பொழுதில் அதனை ரசிக்க விரும்புகிறேன். (riprap - தொகுப்பிலிருந்து கவிதையை கேப் வாசிக்கிறார்.)

கேப்: ரிப்ரேப் என்னும் இத்தலைப்பு. சறுக்கலான மலைப் பகுதியில் குதிரைகள் செல்வதற்காக அமைக்கப்படும் கல்பாதையைக் குறிக்கும்.

போர்ஹே: : வெவ்வேறான உருவகங்களுடன் அவர் எழுதுகிறார், நான் அப்படி எழுதுவதில்லை. எளிய முறையில் எழுதுகிறேன். விளையாட அவரிடம் ஆங்கிலமிருக்கிறது. எனக்கு இல்லை.

கேப்: ஒவ்வொரு கல்லும் இருபுறமுள்ள ஒவ்வொரு கல்லையும் சார்ந்திருக்கின்ற, பிணைப்புக் கொண்டுள்ள இப்பாதையுடன், கவிதையில் வார்த்தைகளை இடம்பெறச் செய்வதனை ஒப்பிடுவதாகத் தோன்றுகிறது அவரது கருத்து. கவிதை கட்டுமானத்தில் இவ்வணுகுமுறை உங்களுக்கு ஏற்புடையதா அல்லது பலமுறைகளில் இதுவும் ஒன்றுதானா?

போர்ஹே: : 'ஆதிவாசிகளின் பாடல் புனைய அறுபத்தொன்பது வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொன்று சரியானவைதான்' என்று கிப்ளிங் கூறியதுபோல, சரியான முறைகளுள் அதுவும் ஒன்றாகலாம் என்றே எண்ணுகிறேன். ஆனால் என்னுடைய முறை அது போன்றதல்ல - அது ஒருவித உறவு, இருண்டதான ஒன்று. ஒரு கருத்து எனக்குக் கிடைக்கும்போது அது ஒரு கதையாகலாம், கவிதையாகலாம், எனக்குக் கிடைத்திருப்பது தொடக்கமும் இலக்கும்தான். இடையே நிகழ வேண்டியதை நான் கண்டறிய வேண்டும் - இட்டுக்கட்ட வேண்டும், அப்போது என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறேன். ஆனால் பொதுவாக அது போன்றதொரு உத்வேகம் வரும்போது, அதனைத் தடுத்திட என்னால் ஆன மட்டும் பார்ப்பேன்; அதையும் மீறி நீடித்தால், எப்படியாவது எழுதியாக வேண்டியிருக்கும். ஒருபோதும் விஷயங்களைத் தேடுவதில்லை. டீக்கடையிலோ, தூங்க முயலும்போதோ, தூங்கி எழும்போதோ விஷயங்கள் கிடைத்துவிடும்; போனஸ் அயர்ஸின் வீதிகளிலோ அல்லது வெறெங்கோ எந்த நேரத்திலும் கிடைத்துவிடும். உதாரணமாக ஒரு வாரத்திற்கு முன் ஒரு கனவு வந்தது. தூங்கி எழுந்தபோது அது தீங்கனவாயிருந்தது. அது சொல்லத் தகுதியானதல்ல என்றிருந்தேன்; ஆனால் அதில் ஒரு கதை மறைந்திருப்பதாய் எண்ணுகிறேன். அதனைக் கண்டறிய விரும்புகிறேன். அதனைக் கண்டுவிட்டதாக எண்ணும் இப்போது, அயந்து - ஆறு மாதங்களில் எழுதிவிடுவேன். நேரம் எடுத்துக் கொள்வேன். ஆதலின் என்னிடம் வேறுபட்டதான முறை இருக்கிறது எனலாம். நிச்சயமாக ஒவ்வொரு கைவினைக் கலைஞனிடமும் அவனுக்கே உரிய முறையில் உள்ளது; நான் அதனைப் போற்றுவேன்.

கேப்: பகுத்தறிதலின் தலையீடு ஏதுமின்றி, தன் மனநிலையை அப்படியே வாசகனுக்கு மாற்றிட முயலுகிறார் ஸ்டைனர்; உணர்தலை நேரடியாக மாற்றிட விரும்புகிறார். இது சற்று அதீதமாய் உங்களுக்குத் தோன்றுகிறதா?

போர்ஹே: : இல்லை. ஆனால் அவர் மிகவும் எச்சரிக்கைக் கொண்ட கவியாகத் தோன்றுகிறார். நானோ வயதானவன், கள்ளங்கபடமற்றவன், மனம் போனபடி பிதற்றுகிறேன், என் பாதையை அறிந்திட முயலுகிறேன். உதாரணமாக என்ன செய்தி வைத்திருக்கிறேன் என மக்கள் கேட்கின்றனர்; ஏதுமில்லை என அஞ்சுகிறேன். நல்லது இங்கே கதையொன்று இருக்கிறது. அதன் நீதி என்ன? எனக்குத் தெரியாதென்றே அஞ்சுகிறேன். நான் வெறுமனே கனவு காண்பவன்தான்; அப்புறம்தான் எழுத்தாளன். எனது சந்தோஷகரமான தருணங்கள், நான் வாசகனாயிருக்கும் போதுதான்.

கேப்: விளைவுகள், பொதிந்துள்ளவனாக வார்த்தைகளைக் கருதுகிறீர்களா? அல்லது படிமங்களைத் தாங்கி நிற்பதாகக் கருதுகிறீர்களா?

போர்ஹே: : நல்லது ஆமாம். உதாரணமாக, சிற்றுணர்ச்சிப் பாடலொன்றை (sonnet) உருவாக்க குறைந்தது ஸ்பானிய மொழியில் சில வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஓரிரு ஒளியியைபுகளே உண்டு. அவற்றை உருவகங்களாக, வினோதமான உருவகங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் சொல்வேன். இது அதிரடி வாசகமே. ஆங்கிலத்தில் MOON லத்தீன் - ஸ்பானிய வார்த்தையான "LUNA' விலிருந்து வேறுபட்டதான சொல்லிலிருந்து உருவாகிறது. "MOON என்னும் சொல் ரீங்காரிக்கும் சப்தமாயுள்ளது, அழகான வார்த்தை. ஃப்ரெஞ்ச் சொல்லும் அழகானதே , "LUNA". ஆனால் பழைய ஆங்கிலச் சொல் "MONA ' இரு அசைவுகளைக் கொண்டுள்ள இது அழகாயில்லை. அப்புறம், கிரேக்க வார்த்தை இன்னும் மோசமானது. மூன்றசை கொண்ட "CELENA'. ஆனால் "MOON" என்பது அழகிய சொல். இச்சப்தத்தை ஸ்பானிய வார்த்தைகளில் காண முடியாது. என்னால் வார்த்தைகளில் சஞ்சரிக்க இயலும்; வார்த்தைகள் உத்வேகம் தருபவை; தமக்கென்று ஜீவன் கொண்டவை.

கேப்: வார்த்தை தனக்கெனக் கொண்டுள்ள ஜீவன், குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அது தரும் அர்த்தத்தைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறதா?

போர்ஹே: : அர்த்தங்கள் அநேகமாய் பொருத்தமற்றவை என்றே எண்ணுகிறேன். முக்கியமானது எதுவெனில், அல்லது நான் குறிப்பிட வேண்டிய இரு முக்கிய அம்சங்கள், உணர்வும், உணர்விலிருந்து எழும் வார்த்தைகளுமே. உணர்ச்சியற்ற விதத்திலே எழுதக் கூடும் என்று நான் எண்ணவில்லை. அப்படி முயன்று பார்த்தால், அது செயற்கையானதாகயிருக்கும். அது போன்ற எழுத்தை நான் விரும்புவதில்லை. ஒரு கவிதை தன்னைத் தானாகவே எழுதிக் கொண்டது என்று நாம் எண்ணும்போதுதான் உண்மையிலேயே அது உயர்ந்த கவிதை என்று கருதுகிறேன். அது ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

கேப்: ஒரு கவிஞரிடமிருந்து இன்னொருவரிடம் போகும்போது ஒருவகையான தொன்மங்கள் இன்னொரு விதமானவற்றால் இடமாற்றம் செய்யப்படக் கூடியவையா, அப்போதும் அதே விளைவு கிடைக்குமா?

போர்ஹே: : ஒவ்வொரு கவியும் தனக்கேயான தொன்மவியலைக் கொண்டிருக்கிறான் என்றே கருதுகிறேன். அதனை அவன் அறியாதிருக்கலாம். வரிப்புலிகள், கத்திகள், புதிர்ப் பாதைகள் குறித்த தனிப்பட்ட தொன்மவியலை நான் உருவாக்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகின்றனர். அது எனக்குத் தெரியாது. என் வாசகர்கள் இதனைக் கண்டறிகின்றனர். ஆனால் அது கவிஞனின் வேலை என்று நினைக்கிறேன். நான் அமெரிக்காவை எண்ணுந்தோறும் அதனை வால்ட் விட்மன் சார்ந்ததாகவே எண்ணுகிறேன். "மன்ஹாட்டன்' என்னும் வார்த்தை அவருக்கென கண்டுபிடிக்கப்பட்டது, இல்லையா?

கேப்: ஆரோக்கியமான அமெரிக்கா குறித்த ஒரு படிமம்?

போர்ஹே: : ஆமாம், அதேவேளையில் வால்ட் விட்மனே ஒரு தொன்மம்தான்; மிகவும் துரதிருஷ்டம் வாய்ந்தது. மிகவும் தனிமைப்பட்டு எழுதியவர் குறித்த ஒரு தொன்மம். எனினும், தன்னை ஓர் அழகிய நாடோடியாக ஆக்கிக் கொண்டவர். பூமியில் தன்னை ஒரு தொன்மவியல் மானுடனாக படைத்துக் கொள்ள முடிந்த ஒரே எழுத்தாளன் வால்ட் விட்மின்தான் என்று சுட்டிக் காட்டியிருக்கிறேன். TRINITY- யில் உள்ள மூவரில் ஒருவர் வாசகர்தான். ஏனெனில் நாம் வால் விட்மனை வாசிக்கும்போது நாம் வால்ட் விட்மனாகி விடுகிறோம். அதனைச் செய்து காட்டிய விசித்திரமான நபர் அவர் ஒருவரே. உலகெங்கும் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறதுதான்; குறிப்பாக நியூ இங்கிலாந்து மாநிலம். ஒதுக்கிவிட முடியாத எழுத்தாளர்களைத் தந்துள்ளீர்கள். உதாரணமாக, போ, விட்மன், மெல்வின், ஹென்றி ஜேம்ஸ் போன்றோர் இல்லாது போனால், நிகழ்கால இலக்கியம் இத்தகையதாக இருக்க இயலாது. ஆனால் தென்னமெரிக்காவைப் பொறுத்தவரை, எங்களுக்கும் ஸ்பெயினுக்கும் முக்கியமானதாக நிறைய உண்டு. எஞ்சிய மற்ற உலகத்திற்கு முக்கியமாக இராது. மிக நேர்த்தியானதாகவே ஸ்பானிய இலக்கியம் தொடங்கிற்று என்று கருதவே செய்கின்றேன். பின்னர் எப்படியோ க்யூவெடோ, கோங்கோரா என்னும் எழுத்தாளர்களுடன் எதுவோ விறைத்திருப்பதை உணர்கிறோம். முன்புபோல அம்மொழி ஓடிக்கொண்டிருப்பதில்லை.

போர்னே: 20-ம் நூற்றாண்டுக்கும் இது பொருந்துமா? உதாரணமாக லோர்கா இருக்கிறார்.

போர்ஹே: : ஆனால், லோர்காவை நான் அதிகம் விரும்புவதில்லை. இது என்னிடம் உள்ள பலவீனம். காட்சி ரீதியிலான கவிதைகளை நான் வெறுக்கிறேன். அவர் எப்போதும் காட்சி ரீதியிலானவர். விசித்திரமான உருவங்களைத் தேடுபவர். ஆனால் அவர் மிகவும் மதிக்கப்படுவர் என்பதை அறிவேன். தனிப்பட்ட முறையில் அவரை நான் அறிந்தவன்; நியூயார்க்கில் ஓராண்டு வாழ்ந்தார். ஓராண்டு இருந்தும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட அறிந்து கொள்ளாதது மிக விசித்திரமானது. ப்யூனஸ் அயர்ஸில் ஒரே ஒரு முறையே சந்தித்தேன். அதன்பிறகு அவரது அதிர்ஷ்டம் தூக்கிலிடப்பட்டு விட்டார். கவிஞருக்கு நேரக்கூடிய உயர்ந்த விஷயம், நேரிய சாவு இல்லையா? கச்சிதமான மரணம். பின்னர் அவரைப் பற்றி ஆண்டனியோ முசாரோ அழகான கவிதை எழுதினார்.

கேப்: ஹோபி இந்தியர்கள் பலமுறை உதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்தம் மொழியின் தன்மை, அம்மொழியும் சொற்கோவை எவ்விதம் உருப்பெற்றது என்பதன் காரணமாக.

போர்ஹே: : அதுபற்றி எனக்குத் தெரியாது. பாம்பாஸ் இந்தியர்கள் பற்றி என் பாட்டி கூறியிருக்கிறார். தன் வாழ்க்கையை ஜீனினில் கழித்தவர்- அது நாகரீகத்தின் மேற்கு முனையாகும் - அவர்களது கணிதம் இப்படிப் போவதாக என்னிடம் கூறினார். ஒரு கையை உயர்த்திக் கொண்டு "பாம்பஸ் இந்தியரின் கணிதத்தைக் கற்றுத் தருகிறேன்'' என்றாள். "எனக்குப் புரியாது'' என்றேன். "உனக்குப் புரியும், என் கைகளை கவனி. 1, 2, 3, 4 பல.'' முடிவின்மை அவள் பெருவிரலில். தூரம் பற்றி மக்களுக்குச் சொற்பமாகவே தெரியும் என்று இலக்கியவாதிகள் கூறுவதையும் கவனித்திருக்கிறேன். அவர்கள் மைல், லீக் ரீதியில் எண்ணுவதேயில்லை.

போர்னே: கெண்டுகியிலிருந்து வரும் நண்பன் ஒருவன் ஒரு மலை, இரு மலைகள் என அவர்கள் தூரத்தைக் குறிப்பிடுகின்றனர் என்றான்.

போர்ஹே: : நிஜமாகவா? எவ்வளவு புதிராயிருக்கிறது.

கேப்: ஸ்பானிஷலிருந்து ஆங்கிலத்திற்கும் ஜெர்மனுக்கும் அல்லது பழைய ஆங்கிலத்திற்கும் மாறுவது, உலகை நோக்குவதற்கான வெவ்வேறான வழிமுறைகளைத் தருவதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

போர்ஹே: : மொழிகள் ஒரே தன்மையானவையென கருதவில்லை. ஸ்பானிய மொழியில் விஷயத்தை ஓடச் செய்வது சிரமமானது. ஏனெனில், அதன் வார்த்தைகள் மிக நீளமானவை. ஆனால் ஆங்கிலத்தில் 'SLOWLY', 'QUICKLY' என்று குறிப்பிட்டால் அவ்வார்த்தைகள் பொருள் மிக்கதான பகுதியைக் கேட்க முடியும். SLOW-LY, QUICK-LY. SLOW, QUICK- னைக் கேட்கலாம். ஆனால் ஸ்பானிஷில், SEIY LENTAMENTE, RAPIDAMENTE என்கிறோம். கேட்பது என்னவோ - MENTE என்பது. என் நண்பன் ஒருவன் ஷேக்ஸ்பியரின் சிற்றுணர்ச்சிப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தான். ஒரு ஆங்கிலப் பாடலுக்கு இரு ஸ்பானியப் பாடல்கள் தேவைப்படும் என்றேன் - ஏனெனில் ஆங்கில வார்த்தைகள் குறுகியவை, நேரிடையானவை, ஸ்வானிய வார்த்தைகளோ மிக நீளமானவை. ஆங்கிலத்திற்கு பெüதிகப் பண்புமுண்டு. கிப்ளிங்கின் "The Ballad of East And West' - இல் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் ஆஃப்கானத்து குதிரைத் திருடனைப் பின் தொடர்ந்து கொண்டிருப்பார். இருவரும் குதிரை மீதிருப்பர். "தாழ்ந்துவிட்ட நிலவினை அவை விண்ணிலிருந்து ஓட்டிவிட்டன. அவற்borges றின் குளம்புகள் விடியலை முரசடித்து எழுப்புகின்றன'' என்று கிப்ளிங் எழுதுகிறார். ஸ்பானிஷில் தாழ்ந்துவிட்ட நிலவினை விண்ணிலிருந்து ஓட்டிவிட முடியாது. விடியலை முரசடித்து எழுப்ப முடியாது. அவ்வாறு செய்ய இயலாது. அவன் விழுந்தான், எழுந்து கொண்டான் என்பதுபோன்ற எளிய வாக்கியங்களைக்கூட அப்படியே ஸ்பானிஷில் கூற இயலாது. தன்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு எழுந்தான் அல்லது இதுபோன்ற கருத்துச் சுருக்கத்தால் குறிப்பிட வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் வினைச் சொற்களைக் கொண்டும் அசைச் சொற்களைக் கொண்டும் நிறைய உண்டாக்கலாம். Dream away your life live upto , something you have to live down என்றெல்லாம் எழுத முடியும். இவை ஸ்பானிஷில் சாத்தியமில்லை. சொல்ல இயலாதவை. அடுத்து, கூட்டு வார்த்தைகள். உதாரணமாக world smith ஸ்பானிஷில் இது பகட்டாரவாரம் கொண்டதாக, நயமற்றதாக un herrero de palabras என்று வரும். ஆனால் ஜெர்மானிய மொழியில் எளிதாய் வரும். ஆங்கிலத்தை விடவும் சிறப்பானதாய் ஜெர்மனியில் இருக்கும். ஏனெனில் ஜெர்மனியில் எப்போதும் வார்த்தைகளை உருவாக்க இயலும். ஆங்கிலத்தில் அவ்வாறு இயலாது. ஆங்கிலோ - சாக்ஸன்கள் பெற்றிருந்த சுதந்திரம் நமக்கு அனுமதிக்கப்படவில்லை. உதாரணமாக, úúôþ úsige fole அல்லது victorious people என்னும் பழைய வார்த்தை. பழைய ஆங்கிலத்தில் இவற்றை செயற்கையானதாக கருத இயலாது. ஆனால் ஸ்பானிஷில் இதனைக் குறிப்பிட இயலாது. அழகானவை என ஸ்பானிஷில் நான் கருதுவது நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது... ஒலிகள் மிகத் தெளிவானவை. ஆங்கிலத்திலோ திறந்த உயிரொலிகள் இல்லாது போய்விட்டன.

கேப்: ஆங்கிலோ - சாக்ஸன் கவிதையின்பால் ஈர்த்தது எது?

போர்ஹே: : அர்ஜெண்டினாவின் தேசிய நூலகத்தின் தலைமை நூலகராக நான் நியமிக்கப்பட்டபோது, வாசிக்க முடியாதபடி பார்வையை இழந்து விட்டேன். வளைந்து கொடுக்கப்போவதில்லை, பின் வாங்க மாட்டேன், தன்னிரக்கத்திற்கு இடந்தர மாட்டேன் என்றேன். பிறிதொரு விசயத்தை முயன்று பார்த்தேன். அப்போது வீட்டிலே ஸ்வீட்டின் Anglo - saxon reader மற்றும் saxon chronicles இருப்பது நினைவுக்கு வந்தது. ஆங்கிலோ - சாக்ஸனைக் கற்றுப் பார்ப்போம் என்று தொடங்கினேன். கையேடுகள் மூலமாக கற்றேன். இரு வார்த்தைகள் மூலம் இதனுடன் காதல் வயப்பட்டேன். இன்னும் நினைவில் நிற்கின்ற அவ்விரு வார்த்தைகள் london, londonbur hand மற்றும் rome, romeoburh. இப்போது , பழைய ஆங்கிலத்தைக் காட்டிலும் சிறந்த இலக்கியத்தைப் பெற்றிருக்கும் பழைய நோர்ஸ் மொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கேப்: இருபதாம் நூற்றாண்டின் தொன்மவியலை, எழுத்தாளர்களுக்குக்கென எவ்விதம் விளக்குவீர்கள்?

போர்னே: அது ஒரு பெரும் கேள்வி.

போர்ஹே: : பிரக்ஞைபூர்வமாகச் செய்யப்படக் கூடியதென நான் நினைக்கவில்லை. உடனிகழ் காலத்தவராக இருந்திட முயற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே உடன் நிகழ்காலத்தவராகவே இருக்கிறோம். எக்காலத்திலும் உருவாகி வந்து கொண்டிருப்பதே தொன்மவியலில் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கிரேக்க பழைய நோர்ஸ் தொன்மவியலை என்னால் விளக்கக் கூடும்.

சார்லஸ் சிலுவர்: உங்களைப் பாதித்திருக்கும் வகையிலே நீங்கள் மேற்கொண்ட அனுபூதியான - மதத்தன்மையிலான வாசிப்புகள் ஏதேனும் உண்டா என்று வியப்புறுகிறேன்.

போர்ஹே: : நிச்சயமாக உண்டு. ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் சூஃபிகள் பற்றி கொஞ்சம் வாசித்திருக்கிறேன். நான் சாவதற்குள் ஸ்வீடன் இயற்கை விஞ்ஞானியான ஸ்வீடன் போர்க் பற்றிய நூலொன்றை எழுதுவதில் என்னால் ஆனதைச் செய்வேன் என எண்ணுகிறேன். எமர்ஸனின் representative மூலமாக அவர் அறிமுகமானார். ப்ளேக்கும் ஒரு அனுபூதியாளரே. ஆனால் ப்ளேக்கின் தொன்மவியல் எனக்குப் பிடிப்பதில்லை; அது மிகவும் செய்கையானது.

போர்னே: 'விட்மனை வாசிப்பவர் விட்மனாகிறார்' என்றீர்கள். நீங்கள் காப்ஃகாவை மொழியாக்கம் செய்தபோது நீங்கள் ஏதாவதொரு அம்சத்தில் காஃப்காவாக இருந்தீர்கள் என்று உணர்ந்தீர்களோ என ஆச்சரியப்படுகிறேன்.

போர்ஹே: : காஃப்காவுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். உண்மையில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன். செஸ்டர்ன், காஃப்கா, சர் தாமஸ் ப்ரெüன் போன்றோர் முன்னிலையில் நான் வெறும் வார்த்தையே. நான் அவரை விரும்புகிறேன்; பதினேழாம் நூற்றாண்டு ஸ்பானிஷில் மொழிபெயர்தேன். அது நன்றாக வந்தது. urne: Buriall- விலிருந்து ஓர் அத்தியாயத்தை க்யூவெடோவின் ஸ்பானிஷில் மொழிபெயர்த்தோம். அது நன்றாக இருந்தது. அதே காலகட்ட, லத்தீனை வேறொரு மொழியில் எழுதுவது, லத்தீனை ஆங்கிலத்தில் மற்றும் ஸ்பானிஷில் எழுதுவது, என்னும் அதே கருத்துகள் எல்லாம் இருந்தன.

போர்னே: காஃப்காவை ஸ்பானிஷில் மொழிபெயர்த்தவர்களுள் நீங்களும் ஒருவர். நீங்கள் அவரை மொழியாக்கும்போது சேவையுணர்வு கொண்டிருந்தீர்களா?

போர்ஹே: : இல்லை, வால்ட் விட்மனின் song of myself- னை மொழிபெயர்க்கும்போது அவ்வாறு உணர்ந்தேன். " நான் செய்து கொண்டிருப்பது முக்கியத்துவம் கொண்டது' என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். விட்மனை மனப்பாடமாகத் தெரியும்.

போர்னே: நீங்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புகளுள் ஏதாவதொன்று, உங்களது படைப்பினைப் புரிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் உதவியிருப்பதாக, நீங்களே செய்திருப்பவற்றை நியாயப்படுத்துவதாக எப்போதாவது உணர்ந்தீர்களா?

போர்ஹே: : இல்லை, என்னுடைய படைப்பு பற்றி நான் எண்ணவில்லை.

போர்னே: நீங்கள் மொழிபெயர்க்கும்போது?

போர்ஹே: : இல்லை, ப்யூனஸ் அயர்ஸிலுள்ள என் வீட்டை வந்து பாருங்கள், என் நூலகத்தைக் காட்டுகிறேன். என்னுடையதோ என்னைப் பற்றியோ ஒரு புத்தகம்கூட இருக்காது. இது நிச்சயமானது. என் புத்தகங்களை தெரிவு செய்கிறேன். சர் தாமஸ் ப்ரெü அல்லது எமர்ஸனுக்கு அருகிலே இடம் பிடித்துக்கொள்ள நான் யார்? ஒன்றுமில்லாதவன்.

கண்டுகொண்டேன். - மில்டனும், கோல்ரிட் ஜீம் அப்படியே அறிந்திருந்தனர் என எண்ணுகிறேன். தம் வாழ்க்கை இலக்கியத்திற்கும் வாசிப்புக்கும் எழுதுவதற்கும் அர்ப்பணிக்கப்படும் என்பதனையறிந்தனர்.

போர்னே: Borges and I என்னும் சிறு கட்டுரையும் The watcher என்னும் கவிதையும் இரட்டை Double- யின் பாலான உங்களது ஆர்வத்தைக் காட்டுகிறது. எழுத்தாளர் அல்லாத போர்ஹேயை சிறிது நேரம் பேசவிட்டு, தான் விரும்பினாலும் விரும்பாது போனாலும் எழுத்தாளர் போர்ஹேயின் மதிப்பீட்டைத் தரச் செய்யலாமா?

போர்ஹே: : அவ்வளவாக நான் விரும்புவதில்லை. மூலப் பிரதியைகளே தெரிவு செய்வேன். செஸ்டர்னையும் காஃப்காவையும் தேர்ந்தேடுப்பேன்.

போர்னே: அர்ஜென்டினாவிலுள்ள உங்களது நூலகத்தில் உங்கள் நூல்கள் இடம்பெறாது. எழுத்தாளர் அல்லாதவரின் முடிவென்று நினைக்கிறீர்களா?

போர்ஹே: : ஆம், நிச்சயமாக.

போர்னே: அச்சூழலில் தன்னை உணருமாறு செய்து கொண்டாரா?

போர்ஹே: : ஆமாம், அவர் செய்துகொண்டார். ஆமாம் என்னைச் சுற்றிலும் அவரின் எந்த நூலையும் காண முடியாது உங்களால். ஏனெனில் நான் நோயுற்றவன், ஓய்ந்து போனவன் என்று அவருக்கு எச்சரிக்கை செய்தேன். நான் உணரும் விதம் குறித்து அவரை எச்சரிக்கை செய்தேன். நான் உணரும் விதம் குறித்து அவரை எச்சரித்தேன். நல்லது போர்ஹே: மீண்டும் இங்கே இருக்கிறார். நான் என்ன செய்யக்கூடும்? ஒத்துப் போக வேண்டியதுதான். நான் அனுமானிப்பது போலவே ஒவ்வொருவரும் உணருகின்றனர்.

போர்னே: ழான் பால் சார்த்தரின் ஒரு வாசகம் என்னை எப்போதும் வசீகரிக்கப்படுத்தும். அவர் குறிப்பிட்டார்: Man is wizard unto manó. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்றுக் கொள்கிறீர்களா?

போர்ஹே: : Man is wizard ?

போர்னே: கருத்துக்களை இட்டுக் கட்டுகிறான். பிரபஞ்ச விதிகளை உருவாக்குகிறான். சகமனிதர்கள் அவற்றை நம்புமாறு செய்கிறான். அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

போர்ஹே: : குறிப்பாக அது கவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் பொருந்தக் கூடியது என்று கருதுகிறேன். இல்லையா? மற்றும் இறைவியலாளருக்கும் பொருந்துவது Trinity பற்றி எண்ணிப் பார்த்தோமானால், அது எட்கர் ஆலன்போவைவிட புதிரானதாய் இருக்கும். பிதா, சுதன், பரிசுத்த ஆவி. அவை ஒன்றாகி விடுகின்றன. மிக மிகப் புதிரானது. ஆனால் யாரும் அதனை நம்புவதில்லை. குறைந்தபட்சம் நான் நம்புவதில்லை.

போர்னே: ஆற்றல் வாய்ந்தவையாக தொன்மங்கள் இருந்திட அவை நம்பவேண்டிய அவசியமில்லை.

போர்ஹே: : இல்லை, இருந்தும் வியப்படைகிறேன். உதாரணமாக, நம் கற்பனை centaur- னை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பூனைமுகம் கொண்ட எருதினை ஏற்பதில்லை. இல்லை, அது சரியானது இல்லை, நயமற்றது. ஆனால் momptain, centaurகளை ஏற்றுக்கொள்கிறோம். அவை அழகாயிருப்பதால் , குறைந்தபட்சம் அவை அழகியவை என்று எண்ணுகிறோம். நிச்சயமாக அவை மரபின் அங்கமாயுள்ளன. ஆனால் வரலாற்றுச் சின்னங்களையும் நாணயங்களையும் அறிந்திராத தாந்தே, லத்தீன் எழுத்தாளர்கள் மூலமாக கிரேக்க தொன்மங்களை அறிவார். தாடியுடன் கூடிய மனித முகம் கொண்ட எருதாக minolaur-னை எண்ணினர். மிக அருவருப்பானது, எருதின் முகம் கொண்ட மனிதனாக அவனை நினைத்துக் கொள்ளும்போது, தாந்தேயின் பல பதிப்புகளில் அதுபோன்ற minolaur -னைப் பார்க்கலாம். ஆனால், தாந்தே, பாதி எருதை, பாதி மனிதனை வாசித்திருந்ததால், அவனை அப்படியாக எண்ணினார். நம் கற்பனை அதை ஏற்பதில்லை. ஆனால் பல தொன்மங்களை நாம் எண்ணிடும்போது, மிகவும் கேடான தொன்மம் என்று இருக்கிறது. அது தேசங்கள் பற்றின தொன்மம் நான் ஒரு சிலி தேசத்தவன் அல்ல, உருவகுவே நாட்டவன் அல்ல, அர்ஜென்டினாவைச் சேர்ந்தவன் என்று ஏன் நான் நினைத்துக் கொள்ள வேண்டும்? நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.நம்மீது நாமே திணித்துக்கொள்ளும் அத்தொன்மங்கள், வெறுப்பையும், யுத்தத்தையும் குரோதத்தையும் உண்டாக்கும் மிகக்கொடியவை. நாளடைவில் அரசாங்கங்களும் தேசங்களும் இல்லாது போய் நாமெல்லோம் சர்வதேசப் பிரஜைகளாகி விடுவோம்.

******

நேர்காணல் தொடர்கிறது…. பகுதி 2  இங்கே

நூல்: மணல் பிரதி தொகுப்பு: தளவாய் சுந்தரம்

நன்றி: தாவரம்