Showing posts with label சுகுமாரன். Show all posts
Showing posts with label சுகுமாரன். Show all posts

Thursday, October 20, 2011

தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி - ஸ்தானிஸ்லாவ் திகாத்

ஸ்தானிஸ்லாவ் திகாத் (1914-1978)

போலந்து சிறுகதை தமிழில்: சுகுமாரன்

ஓர் இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தனது கையெழுத்துப் பிரதியில் திருத்திக் கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி.திடீரென்று யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த நேரங் கெட்ட நேரத்தில் எந்த விருந்தாளியும் வருவது வழக்கமில்லை. தனக்கோ ஒரு வேலையாள் கூடக் கிடையாது. பிறகு இந்த அகாலத்தில் யாராக இருக்கும்?

ஆனால் குரலில் கொஞ்சம் கூடப் பரப்பரப்பைக் காட்டாமல் சாதாரணமாகச் சொன்னார். '' வாருங்கள்sukumaran , உள்ளே, வாருங்கள்''.

மடக்குக் கதவுகள் மெதுவாகத் திறக்கப்பட்டன. அறை முழுவதையும் அசாதாரண ஒளியால் நிறைத்துக் கொண்டு ஓர் உருவம் தோன்றியது. முதற் பார்வையிலேயே அது சாதாரண மனிதனல்ல என்று விளங்கியது. நீண்ட தாடியும், கறுத்த மேலங்கியும் தொய்ந்த காலுறைகளும் உணர்த்திய அசாதாரணத்தன்மையை தாஸ்தயேவ்ஸ்கி மனப்பூர்வமாகப் புறக்கணித்தார். விநோதமான எதிலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்று வாழ்க்கை அனுபவங்களிருந்து இதற்குள் அவர் கற்றுக் கொண்டிருந்தார். எனவே எந்த வார்த்தையும் பேசாமல் அறைக்குள் நுழைந்து தன் முன் நிற்கும் விசித்திர உருவத்தைப் பார்த்தும் கூட இதில் இயல்பை மீறியதாக எதுவுமில்லை என்பதுபோல உணர்ச்சியற்றவராக இருந்தார்.

அறிமுகமற்றவரின் தோற்றத்தில் தெரிந்த அசாதாரணத்தன்மையை ஒதுக்கி விட்டு நெடுநாள் பழகிய நபரிடம் சொல்வதுபோலச் சொன்னார் '' உட்காருங்கள், உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?''

அந்தப் பரிச்சயமற்ற மனிதர் அறை நடுவில் ஒரு நடன் ஆசிரியரின் கால் அசைவுகளை நினைவுபடுத்துவதுபோல நின்று கொண்டிருந்தார். தன்னுடைய எதிர்பாராத வருகையும் தோற்றமும் ' குற்றமும் தண்டனையும்' எழுதிய ஆளிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர் கவனித்தார்.

திடீரென்று ஞானோதயம் உண்டானவர்போல முதல் வாசகத்தை உச்சரித்தார். '' நான் காப்ரியேல் தேவதூதன்''.

''சொர்க்கத்துக்கும் பூமிக்கும் அதிபதியானவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்''

சிரமமான எதையோ செய்து முடித்ததைபோல மௌனமானார் அவர். நீண்ட நேரத்துக்குப் பிறகு பின்வருமாறு சொன்னார்:

''அவருக்கு உங்களுடன் சில முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேச விருப்பம். அதற்காக உங்களை அழைத்துச் செல்வது என் கடமை''

தாஸ்தயேவ்ஸ்கி இருக்கையிலிருந்து எழுந்து கோட்டைச் சரி செய்து கொண்டே சொன்னார் '' நான் எப்போதுமே தயார்''

கடவுள் தன்னுடைய அடர்ந்த வெண்நிறத் தாடியை வருடிக் கொண்டே தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் சொல்ல ஆரம்பித்தார்.

'' நண்ப, இங்கே இருக்கும் நாங்கள் எல்லாரும் உன்னதத்தை நோக்கி உங்கள் திறமை பறந்து உயர்வதை அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்''

தாஸ்தயேவ்ஸ்கி அந்தப் பாராட்டுக்குப் பணிவுடம் தலை வணங்கினார்.

''ஆனால்... எனக்கு அதை எப்படி விளக்குவதென்று புரியவில்லை. நான் சொல்ல விரும்புவது... அதாவது... நீங்கள் காட்டுகிற உலகம் இருண்டே இருக்கிறது. நீங்கள் வாழ்க்கையின் கருமையான பக்கத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். அதன் நன்மைகளைப் பார்ப்பதே இல்லை... அதுமட்டுமல்ல... இவற்றையெல்லாம் வெறும் ஆறே நாட்களில் சிருஷ்டித்தேன் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்... கவனக் குறைவால் ஒருவேளை பிசகுகள் நேர்ந்திருக்கலாம்... ஆனாலும்...''

கடவுள் தன்னுடைய நிலைமையை விளக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டி ருந்தார். எனினும் அதற்கிடையிலும் எழுத்தாளரின் மேதைமையைப் பாராட்ட மறந்து விடவில்லை. 'அதிகாரியின் தொனியில் அல்ல; ஆலோசகனின் பரிவுடனேயே இதைச் சொல்கிறேன்' என்பதைப் புரியவைப்பதில் அவர் பிரத்தியேக அக்கறை கொண்டிருந்தார்.

கடவுளின் பரிதாபமான நிலைமை தாஸ்தயேவ்ஸ்கியை சங்கடப்படுத்தியது. அவருக்கு என்னால் என்ன செய்ய முடியும்? அவருக்கு நிச்சயம் ஒரு துணை தேவை.

வீட்டுக்குத் திரும்பிய உடனேயே 'கரமசோவ் சகோதரர்க"ளை எழுத ஆரம்பித்தார் தாஸ்தயேவ்ஸ்கி.

***

கல்குதிரை 1991 தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ்

சீனப் பெருஞ்சுவர் - ஃப்ரான்ஸ் காஃப்கா- தமிழில் : சுகுமாரன்

ஆங்கிலத்தில்: வில்லா, எட்வின் ம்யூர்

சீனப் பெருமதில் அந்த நாட்டின் வடக்கு முனையில் முடிவடைந்திருந்தது. தென் கிழக்கிலிருந்தும் தென் மேற்கிலிருந்தும் இரண்டு பகுதிகளாக வந்து கடைசியில் அங்கே ஒன்று சேர்ந்தது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த இரண்டு தொழிலாளர் அணிகள் பகுதி பகுதியாகக் கட்டி முடிக்கும் கட்டுமான உத்தியை சிறிய அளவில் பயன்படுத்தியிருந்தார்கள். அதை இப்படிச் செய்தார்கள்: இருபதுபேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்தைக்Kafka_last கட்ட வேண்டும். ஐநூறு காதம் என்று வைத்துக் கொள்வோம். அதே போன்ற இன்னொரு குழு முதலில் கட்டி முடித்த பகுதியுடன் இணையும்படி அதே நீளமுள்ள இன்னொரு பகுதியைக் கட்டியது. ஆனால் இந்த இணைப்பிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அதாவது ஆயிரம் காதம் கட்டிய பின்பு, ஆரம்பமாவதல்ல மதிலின் கட்டுமானம் . மாறாக, மறுபடியும் கட்டுமானத்தைத் தொடர்வதற்காக இந்த இரண்டு அணிகளும் முற்றிலும் வேறான சமீபப் பகுதிகளூக்கு மாற்றப்பட்டன. இதனால் ஏராளமான இடைவெளிகள் உண்டாயின. பின்னர் மெல்ல மெல்லவே இந்த இடைவெளிகள் சரி செய்யப்பட்டன. மதில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரையும் சில இடங்களில் முடிக்கப்படவில்லை. உண்மையில் ஒருபோதும் முழுமையாக்கப்படாத இடைவெளிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அது பரிசோதனை செய்யப்பட முடியாததாக இருக்கலாம். அல்லது மதிற் சுவரின் பிரம்மாண்டமான கட்டுமானம் காரணமாக , ஒரு மனிதனால் தன்னுடைய கண்களாலோ அல்லது தீர்மானத்தாலோ பரிசோதனை செய்ய முடியாதது என்று காட்டுவதற்காக எழுப்பப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

மதிற் சுவரைத் தொடர்ச்சியாகக் கட்டியிருந்தாலோ அல்லது இரண்டு பகுதிகளையுமாவது தொடர்ச்சியாகக் கட்டி முடித்திருந்தாலோ எல்லா வகையிலும் வசதியாக இருந்திருக்கும் என்று ஒருவன் முதலில் யோசிக்கலாம். உலகளாவிய ரீதியில் பாராட்டப்படுவது போலவும் அறியப்படுவதுபோலவும், வடக்கிலுள்ள மக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் மதில் திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் தொடர்ச்சியான கட்டுமானம் இல்லாமல் மதிலால் எப்படிப் பாதுகாப்பைத் தரமுடியும்? அப்படிப் பட்ட மதிலால் பாதுகாப்புத் தர முடியாது என்பது மட்டுமல்ல அதில் நிரந்தரமான ஆபத்தும் இருக்கிறது. ஆள் நடமாட்டமில்லாத பிரதேசத்திலிருக்கும் இந்த மதில் சுவரை அந்த நாடோடிகளால் எளிதில் அடுக்கடுக்காகத் தகர்க்க முடியும். இந்த இனத்தவர்கள் கட்டுமான வேலைகளில் அதிகக் கவனமுள்ளவர்கள்,வெட்டுக் கிளிகளைப்போல நம்ப முடியாத வேகத்தில் தங்களுடைய தங்குமிடங்களை மாற்றிக் கொண்டி ருப்பவர்கள் என்பதால்,கட்டுமானக் காரர்களான எங்களை விட மதில் நிர்மாண முன்னேற்றத்தைப் பற்றி மிகவும் தெளிவான அறிவு ஒருவேளை அவர்களுக்கு இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மதிலின் கட்டுமான வேலைகளை வேறு எந்த வகையிலும் தொடர முடியாமலிருந்தது. இது புரிய வேண்டுமென்றால் கீழே சொல்வதைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். மதிற் சுவர் நூற்றாண்டுக் காலங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; ஆகவே, கட்டுமானத்தில் முழுக் கவனமும் அறியப்படும் எல்லாக் காலத்திலும் எல்லா மக்கள் கூட்டத்துக்கும் உரிய கட்டடக் கலை அறிவின் பயன்பாடும் மதிலை எழுப்புகிறவர்களிடம் தன்னலமில்லாத பொறுப்புணர்வும் இருப்பது இந்த வேலைக்குத் தவிர்க்க இயலாதது. சிறு வேலைகளுக்காகச் சாதாரண ஆட்களிலிருந்து அப்பாவிகளையும் பெண்களையும் சிறுவர்களையும் அதிகமான தினக் கூலிக்கு அமர்த்தலாம் என்பது சரிதான். தினக் கூலிக்காரர்கள் நான்கு பேரை மேற்பார்வையிடுவதற்குக் , கட்டடக் கலையில் விற்பன்னரான ஒருவர் தேவைப்பட்டார். ஒப்புக் கொண்ட வேலையை முறையாகச் செய்பவரும் அதில் முழுமையாக ஈடுபாடு கொள்பவருமான ஒருவர் கட்டுமானப் பணிகளுக்குத் தேவை. ஆனால் அப்படியான ஆட்கள் அதிகமில்லை. இருந்தும் அதுபோன்றவர்களூக்கான தேவை அதிகமாக இருந்தது.

இந்தப் பணியை ஆலோசனையில்லாமல் ஒப்புக் கொள்ளவில்லை. முதல் கல் நாட்டப்படுவதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, கட்டடக் கலை, குறிப்பாகக் கல் தச்சு, ஞானத்தின் மிகவும் முதன்மையான துறையாக, மதில் கட்டப்பட வேண்டிய சீனப் பகுதி முழுவதும் பாராட்டப்பட்டிருந்தது. இதனோடு கொண்ட தொடர்பிலிருந்துதான் மற்ற கலைகளூம் அங்கீகாரம் பெற்றன. சரியாகக் காலூன்றி நிற்கக் கூடத் தெரியாத சிறுவர்களான நாங்கள், உருண்டைக் கற்களால் ஆசிரியரின் பூந்தோட்டத்துக்கு மதிற்சுவர்போல ஒன்றை எழுப்ப வேண்டும் என்று அவர் போட்ட கட்டளைக்குப் கீழ்ப்படிந்து பூந்தோட்டத்தில் நிற்பதை என்னால் இப்போதும் துல்லியமாக நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆசிரியர் அவருடைய தளர்ந்த நீள் அங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டு மதிற் சுவரை நோக்கி ஓடி வந்து அதை உதைத்துத் தள்ளினார். நேர்த்தியில்லாத எங்கள் வேலைக்காக எங்களைக் கடுமையாகத் திட்டினார். நாங்கள் அழுது கொண்டே பெற்றோரைத் தேடி நாலாப் பக்கமாக ஓடினோம். ஒரு சாதாரண சம்பவம்தான். ஆனால் அது அந்தக் காலஉற்சாகத்தின் குறிப்பிடத் தகுந்த செயலாக இருந்தது.

இருபதாம் வயதில், நான் கீழ்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றிருந்த சமயத்தில்தான் மதில் சுவரின் கட்டுமான வேலைகள் தொடங்கின என்பதால் நான் அதிருஷ்டசாலி. நான் அதிருஷ்டசாலி என்று சொல்லக் காரணம், கிடைக்கக் கூடியவற்றுள் மிகவும் உன்னதமான கலாச்சாரத்தில் பட்டம் பெற்ற ஏராளமானவர்கள் பல வருடங்களுக்குப் பிறகும் அவர்களுடைய அறிவால் செய்யக் கூடிய எதையும் கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் பிரம்மாண்டமான கட்டடக் கலைத் திட்டங்களுடன் திரிந்தார்கள்; ஆயிரக் கணக்கானவர்கள் அவநம்பிக்கையில் மூழ்கினார்கள். ஆனால். கடைசியில் மேற்பார்வையாளர் பணிக்கு நியமிக்கப்பட்டு வேலை செய்ய வந்தவர்கள், ஒருவேளை தாழ்ந்த பதவியாக இருந்தும் கூட வேலைக்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருந்தார்கள். மண்ணில் பாவிய முதல் கல்லுடன் தாங்களும் மதில் சுவரின் பகுதியே என்று நினைத்தவர்களாக இருந்தார்கள். மதிற் சுவர் நிர்மாணத்தைப் பற்றிச் சிந்திப்பதை முடிக்காமலிருந்ததும் அதைப் பற்றி மேலும் சிந்தித்ததும் அவர்களாகவே இருந்தார்கள். நிச்சயமாக இதுபோன்ற கல் தச்சர்களுக்குத் தங்களுடைய பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை மட்டுமே இருக்கவில்லை. மதிலைக் குற்றம் குறையில்லாமல் அதன் முழு வடிவத்தில் பார்த்து விட வேண்டும் என்ற பொறுமையின்மையும் இருந்தது. தினக் கூலிக்காரர்களிடம் இந்தப் பொறுமையின்மை இல்லை. ஏனெனில்,அவர்களுடைய அக்கறை கூலியில் மட்டுமே இருந்தது. உயர் நிலையிலிருந்த மேலதிகாரிகளாலும் இடை நிலையிலிருந்த மேற்பார்வையாளர்களாலும் நிர்மாணத்தின் வேகமான முன்னேற்றத்தைக் காணமுடிந்தது. அதனால் அவர்களால் தங்களுடைய தன்னம்பிக்கையை உய்ர்த்திக் காட்ட முடிந்தது. ஆனால், அவர்கள் செய்யும் சாதாரணமான பணியைப் பொருத்து மிக உயர்ந்த அறிவுத் திறனுள்ள சிறிய மேற்பார்வையாளர்களை உற்சாகமூட்ட வேறு வழிகளைத் தேடவேண்டியிருந்தது. உதாரணமாக, வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான காதங்கள் தாண்டியிருக்கும் ஆள் வாசமில்லாத மலைப் பிரதேசங்களில் மாதக் கணக்காக அல்லது வருடக் கணக்காக, ஒரு கல்லின் மேல் இன்னொரு கல்லை அடுக்கிக்கொண்டு அவர்கள் நின்றிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நீண்ட வாழ்க்கைக்கு மத்தியில் முடிவை நெருங்கவே செய்யாத அதுபோன்ற கடின உழைப்பு அவர்களை ஏமாற்றத்தில் தள்ளி விடும். அதற்கெல்லாம் அப்பால் அவர்களுடைய செயலூக்கத்தைக் குறைத்து விடும். இந்தக் காரணங்களால்தான் பகுதி பகுதியான கட்டுமானம் போதும் என்று தீர்மானித்தார்கள். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குள் ஐநூறு காதம் கட்டி முடிக்கவேண்டிருந்தது. இந்தச் சமயத்துக்குள் மேற்பார்வையாளர்களுக்கு தங்கள் மேலும் மதில் மேலும் உலகத்தின் மேலுமுள்ள எல்லா நம்பிக்கைகளும் காணாமற் போயிருக்கும். இந்தக் காரணத்தால் மதிற் சுவரின் ஆயிரம் காத நீளம் கட்டி முடிக்கப்பட்டதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கும்போதே அவர்கள் தொலைவிடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். பயணத்துக்கு இடையிடையே அங்குமிங்குமாக மதிலின் பூர்த்தி செய்யப்பட்ட பாகங்களைப் பார்த்தார்கள்; மேலதிகாரிகளின் அதிகாரபூர்வமான இருப்பிடங்களைக் கடந்து போனார்கள்; வெகுமதிகள் வழங்கப்பட்டார்கள்; புதிய தொழிலாளர் குழுக்கள் உற்சாகத் துள்ளலுடன் வருவதைக் கேட்டார்கள்;

மதிலுக்குச் சாரம் கட்டுவதற்காக மரங்கள் வெட்டி அடுக்கப்படுவதைப் பார்த்தார்கள்; மதிற் சுவர் கட்டி முழுமையாக்கப்படப் பிரார்த்தனை செய்யும் விசுவாசிகளின் பிரார்த்தனை மந்திரங்கள் ஒலிப்பதைக் கேட்டார்கள். இவையெல்லாம் அவர்களுடைய பொறுமையின்மையைக் கொஞ்சம் மட்டுப்படுத்தின. அவரவர் வீடுகளின் அமைதியான குடும்ப வாழ்க்கையும் ஓய்வும் அவர்களை சாந்தப்படுத்தின. அவர்களுடைய தகவல்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தவர்களின் பணிவான நடத்தையும் அமைதியானவர்களும் சாதுக்களுமான மக்களின் பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையும் அவர்களுடைய வேகத்தை மீண்டும் முடுக்கி விட்டன. பின்னர், நாட்டின் பெருஞ்சுவர் கட்டுமானப் பணியில் மீண்டும் ஈடுபடுவதற்கான விருப்பதை அடக்க முடியாத அவர்கள், எதையும் நம்பிவிடும் குழ்ந்தைகளைபோலத் தங்கள் குடும்பத்தினரிடம் விடை பெற்றனர். அவர்கள் தேவைப்படும் வேளைக்க்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். கிராம மக்களில் பாதிப் பேர் நீண்ட தூரம் அவர்களுடன் வந்து வழியனுப்பினார்கள். கொடிகளையும் தலைப்பாகைகளையும் வீசிக் கொண்டு எல்லாப் பாதைகளிலும் மக்கள் இருந்ததார்கள். இவ்வளவு மகத்தான. இவ்வளவு அழகான, இவ்வளவு நேசத்துக்குரிய நாடு தங்களுடையது என்பதை அவர்கள் முன்னர் ஒருபோதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. யாருக்காகப் பாதுகாப்பு அரணை ஒருவன் நிர்மாணம் செய்கிறானோ மற்ற பிரஜைகள் எல்லாம் அவனுடைய சகோதரர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீண்டிருக்கும் நன்றியுணர்வு இருப்பதால் தங்களுக்கு உரிய எல்லாவற்ரையும் கொடுக்கவும் தங்களால் செய்ய முடிந்ததையெல்லாம் திரும்பத் தரவும் தயாராக இருந்தார்கள். ஒற்றுமை. ஒற்றுமை. தோளோடு தோள் சேர்ந்த ஒரு சகோதர வட்டம். அது உடலின் குறுகலான சிரைகளில் மட்டும் ஓடும் குருதியோட்டமல்ல; சீனாவின் முடிவற்ற தூரங்களினூடே அமைதியாக ஓடும் குருதியோட்டம்.

அப்படியாகப் பகுதி பகுதியான நிர்மாண முறை நமக்குப் புரிகிறது. ஆனால் இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. நான் இந்தப் பிரச்சனையிலேயே நீண்ட நேரம் உழன்று திரிவதில் பொருத்தமின்மை எதுவுமில்லை. முதற்பார்வையில் முக்கியத்துவ மில்லாததாகத் தென்பட்டாலும் மொத்தமான மதில் நிர்மாணத்திலுள்ள முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்தின் கருத்துகளையும் உணர்வுகளையும் புரியவைக்க வேண்டுமானால் இந்தக் கேள்விக்குள் மேலதிக ஆழத்தில் செல்ல என்னால் ஆகாது.

தெய்வீகமான அங்கீகாரம் இருந்தாலும் கூட, மனிதனின் கணக்குகள் அந்தப் பணியுடன் வலுவாக எதிர்நிலை கொண்டிருந்தாலும் கூட பாபேல் கோபுர நிர்மாணத்தை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல அன்றைய கட்டுமானத் திறமை என்று முதலிலேயே சொல்லித் தீர வேண்டும். நான் இதைச் சொல்வதற்குக் காரணம், நிர்மாணத்தின் ஆரம்பக் காலங்களில் சான்றோர் ஒருவர் மிகத் தெளிவாக ஒப்பீடு செய்து ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார் என்பதுதான். பாபேல் கோபுரம் அதன் இலக்கை எட்டுவதில் தோல்வியடைந்தது, உலகம் முழுவதும் தெரிந்திருக்கும் காரணங்களால் அல்ல; அல்லது அதற்கு மிகவும் முக்கியமான காரணத்தைஏற்றுக் கொள்ளப் பட்ட காரணங்களில் கண்டடைய முடியாது என்பதை அவர் இந்தப் புத்தகத்தில் நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார். எழுதி வைக்கப் பட்ட அதிகாரபூர்வமான ஆவணங்களிலிருந்தோ தகவல்களிலிருந்தோ எடுத்தவையல்ல அவருடைய சான்றுகள். அந்த இடத்துக்கே சென்று ஆராய்ச்சி செய்திருப்பதாகவும் அவர் உரிமை பாராட்டிக் கொள்கிறார். கோபுரம் இடிந்து விழுந்ததாகக் கண்டு பிடித்திருக்கிறார். அஸ்திவாரத்தின் பலவீனத்தால் எப்படியும் கோபுரம் இடிந்து விழுமென்றும் கண்டுபிடித்திருந்தார். எப்படிப் பார்த்தாலும் அந்தப் பழைய காலகட்டத்திலிருந்து நம்முடைய காலகட்டம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. நம்முடைய காலகட்டத்தின் விற்பன்னர்கள் எல்லாருக்கும் கல் தச்சைத் தொழிலாக ஏற்றுக் கொண்டவர்களுக்கும் அடிக்கட்டுமானத்தைப் பொருத்தவரை தவறு நேர்ந்ததில்லை. எதுவாக இருந்தாலும் நம்முடைய சான்றோர்கள் நிரூபிக்க எண்ணியது இதையல்ல; ஏனெனில், மனித சமுதாய வரலாற்றில் முதன் முதலாக இந்தப் பெருஞ்சுவர்தான் புதிய பாபேல் கோபுரத்தைக் கட்டுவதற்குத் தேவையான அஸ்திவாரத்தைக் கொடுக்கும் என்று அவர் நம்பினார். முதலில் இந்தப் பெருஞ்சுவர். இரண்டாவது பாபேல் கோபுரம். அந்தக் காலத்தில் எல்லார் கைகளிலும் அவருடைய புத்தகம் இருந்தது. ஆனால் அவர் இந்த கோபுரத்தை எவ்வாறு யோசித்தார் என்று தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்று நான் இன்றும் ஒப்புக்கொள்கிறேன். கால் அல்லது அரை வட்டமல்லாமல் ஒரு முழு வட்டமாக உருவாக்கப்படாத இந்த மதிற் சுவரால் எப்படி ஒரு கோபுரத்தின் அடிக்கட்டுமானமாக முடியும்? இதற்கு அர்த்தம் ஏற்படுவது ஆன்மீகத்தில் மட்டும் தானே? அப்படியிருக்க, எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கும் பணியின் பலனாக நீண்டு நிற்கும் ஒரு மதில் எதற்காகக் கட்டப்பட வேண்டும்?

ஒருவேளை அந்தக் காலத்தில் மக்களின் தலைக்குள்ளே பண்படுத்தப்படாத ஏராளமான சிந்தனைகள் இருந்திருக்கலாம். இந்தச் சான்றோரின் புத்தகம் அதற்கான உதாரணங்களில் ஒன்று. அதனால்தான் ஒரே நோக்கத்துக்காக தங்களால் முடிந்தவரை அவர்களுடன் இணைந்து கொள்ள ஏராளமான மக்கள் முயற்சி செய்திருந்தார்கள். எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதுதான் மனித இயல்பு.அது புழுதியைபோல நிலையில்லாதது; எந்தக் கட்டுப்பாட்டையும் பொறுத்துக் கொள்ளாதது. அதை அதன் கட்டுக்குள் வைத்தால் எல்லாவற்றையும், துண்டுதுண்டாகும்வரை, சுவரையும் வரம்புகளையும் இடம் கால உணர்வற்றுத் தன்னைத் தானேயும் நொறுக்கத் தொடங்கும்.

பகுதி பகுதியாக மதிலைக் கட்டுவது என்ற முறையைத் தீர்மானித்தபோது மேலதிகாரிகள் இது போன்ற செயல்கள் பெருஞ்சுவர் நிர்மாணத்துக்கே அச்சுறுத்தலாகக் கூடும் என்பதை கவனத்திலிருந்து தள்ளிவிடவில்லை. நாங்கள் - இங்கே நான் பலர் சார்பாகத்தான் பேசுகிறேன் - மேலதிகாரிகளின் கட்டளைகளைக் கவனமாக ஆராயும்வரை இவை எதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.நாங்கள் எல்லாரும் சேர்ந்து செய்து கொண்டிருந்த இந்த மகத்தான பணியில் சாதாரண வேலைகளுக்குக் கூட மேலதிகாரிகள் இல்லாமல், எங்களுடைய படிப்போ அறிவோ மட்டும் போதுமானதாக இருக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தோம். மேலதிகாரிகளின் அலுவலகத்தில் - அது எங்கே இருந்தென்றோ அங்கே யாரெல்லாம் இருந்தார்களென்றோ நான் விசாரித்த யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை - இப்போதும் தெரியாது - எல்லா மானிட யோசனைகளும் ஆசைகளும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன என்பது நிச்சயம். எல்லா மானுட இலட்சியங்களும் நிறைவுகளும் அதற்கு எதிராகச் சுழன்று கொண்டிருந்தன. தெய்வீக உலகங்களின் மகத்துவப் பிரதிபலிப்புகள் அவர்கள் தங்கள் திட்டங்களைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக அவர்களுடைய கைகளில் வந்து விழுந்தன.

இந்தக் காரணத்தால் அதிகாரிகள் ஆத்மார்த்தமாக விரும்பியிருந்தால் தொடர்ச்சியான நிர்மாணப் பணியைத் தடை செய்த இடர்ப்பாடுகளைக் கடந்திருக்க முடியுமென்று உண்மையுணர்வுள்ள ஒரு பார்வையாளனுக்குத் தோன்றும். அப்போது அதிகாரிகள் திட்டமிட்டுத்தான் பகுதி பகுதியான கட்டுமான முறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற முடிவைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிராது. பகுதி பகுதியான கட்டுமானம் தற்காலிகமானது. எனவே பொருத்தமற்றது. அதிகாரிகள் பொருத்தமற்ற ஒன்றையே வேண்டுமென்று விரும்பினார்கள் என்ற முடிவு மட்டும் மிஞ்சுகிறது. விசித்திரமான முடிவு. சரிதான். ஒருவகையில் பார்த்தால் இதைப் பற்றிச் ல்ல ஏராளமாக இருக்கின்றன. இன்று ஒருவர் இதைப் பற்றி ஒருவேளை அச்சமில்லாமல் விவாதிக்கலாம். அந்தக் காலத்தில்,அநேக ஆட்கள் மத்தியில் - அவர்களில் மேன் மக்களும் உட்படுவர் - ரகசியமான ஒரு அறிவுரை இருந்தது. அது இவ்வாறூ;உங்களுடைய சகல திறன்களையும் பயன்படுத்தி மேலதிகாரிகளின் கட்டளைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுவும் ஓர் அளவுக்கு. பின்பு அதை பற்றி நுணுகி யோசிக்காமலிருங்கள். அது தொல்லை என்பதானால் அல்ல; தொல்லையாகத்தான் இருக்கும் என்பதும் நிச்சமல்ல. தொல்லைக்கும் தொல்லையின்மைக்கும் இந்தக் கேள்விக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதற்குப் பதிலாக வசந்த காலத்து நதியைப் பாருங்கள். வலுவடையும் வரை அது உயர்ந்து கொண்டிருக்கிறது. கடலை அடையும்வரை

அதன் நீண்ட வழியை தக்கவைத்துக் கொண்டே நீண்ட வழியின் கரை மண்ணை வளமாக்குகிறது. கடலில் அதற்கு மனமார்ந்த வரவேற்பு காத்திருக்கிறது. ஏனெனில் அது மிகச் சிறந்த உதவியாளன். இதுவரைக்கும் நீங்கள் அதிகாரிகளின் கட்டளைகளைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு நதி கரை புரண்டு ஓடுகிறது. அதற்கு அதன் உருவமும் வரம்புகளூம் இல்லாமற் போகின்றன. நீரொழுக்கின் வேகம் குறைகிறது. மண்ணில் சிறிய சிறிய தீவுகளை உருவாக்கிக் கொண்டு வயல்களை நாசம் செய்து கொண்டு அதன் விதியைப் புறக்கணிக்க முயற்சி செய்கிறது. ஆனால் இந்தப் புதிய விரிவாக்கத்தில் அது நீண்டகாலம் தொடர்ந்து செல்ல முடிவதில்லை; அதன் கரைகளுக்குள் மறுபடியும் திரும்பி வந்தே ஆகவேண்டும். அடுத்து வரும் கோடையில் வற்றி வறண்டு போகவும் வேண்டும். இங்கே நீங்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

இந்த நீதிக் கதைக்கு, பெருஞ்சுவர் நிர்மாண வேளையில் அசாதாரண முக்கியத்துவமும் வலிமையும் இருந்திருக்கலாமென்றாலும் என்னுடைய இந்தக் கட்டுரையில் மிகவும் வரையறுக்கப்பட்ட முக்கியத்துவமே உள்ளது. என்னுடைய விசாரணை முற்றிலும் வரலாற்று ரீதியிலானது; என்றோ மறைந்து போன மேகங்களிலிருந்து இப்போது மின்னல்கள் உருவாவதில்லை. அந்தக் காரணத்தால் பகுதி பகுதியான கட்டுமானத்தைப் பற்றிய அன்றைய மக்களை நிறைவடையச் செய்த ஒரு விளக்கத்தை விட ஆழமாகச் செல்லும் ஒன்றுக்காக நான் கடினமாக முயற்சி செய்யலாம். என்னுடைய சிந்தனைத் திறன் என் மேல் திணிக்கும் வரையறைகள் மிகக் குறுகலானவை; என்றாலும் , இங்கே கடந்து செல்லவேண்டிய இடங்கள் முடிவற்றவை.

யாருக்கு எதிராக இந்தப் பெருஞ்சுவர் அரணாக இருக்க வேண்டியிருந்தது? வடக்கில் உள்ள மக்களுக்கு எதிராக. நான் சீனாவின் தென்கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். வடக்கிலுள்ள மக்கள் எங்களை அங்கே தொந்தரவு செய்ய முடியாது. புராதன நூல்களில் நாங்கள் அவர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். அவர்களுடைய இயற்கையான குணத்தையொட்டி அவர்கள் செய்யும் கொடூரங்களை நினைத்து அமைதியான மரங்களுக்கடியில் நின்று நாங்கள் பெருமூச்சு விட்டிருக்கிறோம். இந்தப் பாழாய்ப் போன இனத்தவர்களின் முகங்களையும் திறந்த வாய்களையும் கூர்மையான பற்களுள்ள தாடையையும் பற்களால் கடித்துக் கீறி விழுங்கு வதற்காக இரையைத் தேடுவதுபோலத் தெரியும் பாதி மூடிய கண்களையும் ஓவியனின் உண்மையாக சித்தரிப்பு காண்பிக்கிறது. எங்கள் குழந்தைகள் அடம் பிடிக்கும்போது நாங்கள் இந்தப் படங்களைக் காட்டுவோம். உடனே அழுது அலறிக் கொண்டு அவர்கள் எங்கள் கைகளைத் தேடி ஓடி வருவார்கள். எனினும் இந்த வடவர்களைப் பற்றி இதை விட அதிகமாக எதுவும் எங்களுக்குத் தெரியாது. அவர்களை நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் எங்களுடைய கிராமத்திலேயே வசித்திருந்தாலும் ஒருபோதும் அவர்களைப் பார்த்ததில்லை. அவர்களுடைய முரட்டுக் குதிரைகளில் ஏறி, அவர்களால் முடிந்த எவ்வளவு வேகத்தில் எங்களை நோக்கிப் பாய்ந்து வந்தாலும் கூட நாங்கள் ஒருபோதும் அவர்களைப் பார்த்திருக்க முடியாது. அவர்களால் எங்களை நெருங்க முடியாத அளவுக்குப் பெரியது எங்கள் நாடு; அவர்கள் அத்துவான இடத்தில் தங்களுடைய பயணத்தை முடித்துக் கொண்டிருப்பார்கள்.

நாங்கள் எங்களுடைய வீடுகளையும் பாலங்களையும் அருவிகளையும் பெற்றோரையும் விசும்பும் மனைவிகளையும் எங்களுடைய பாசத்துக்கு ஏங்கும் பிள்ளைகளையும் விட்டு விட்டு தூரத்திலிருக்கும் நகரத்தில் பயிற்சி பெறுவதற்காக ஏன் போனோம்? அங்கிருந்து பின்னும் தொலைவில் வடக்கேயுள்ள மதில் சுவரை நோக்கிப் பயணம் செய்யும்போது எங்களுடைய சிந்தனைகள் இவையாக இருந்தன. ஏன்? மேலதிகாரிகளிடம் ஒரு கேள்வி. எங்களுடைய தலைவர்களுக்கு எங்கலைத் தெரியும். பிரம்மாண்டமான பதற்றத்தில் மூழ்கியிருக்கும் அவர்களுக்கு எங்களைப் பற்றியும் எங்களுடைய வேலையைப் பற்றியும் தெரியும். நாங்கள் எளிய குடிசைகளில் ஒன்றாக வசிப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் நடுவில் அமர்ந்து குடும்பத் தலைவன் சொல்லும் பிரார்த்தனைகளை அவர்கள் விரும்பலாம்; விரும்பாமலுமிருக்கலாம். மேலதிகாரிகளைப் பற்றி இதுபோன்ற கருத்துகளை விளக்க என்னை அனுமதித்தால் என்னுடைய அபிப்பிராயம் , அது புராதன காலத்திலிருந்தே நிலைபெற்று வருவது என்பதாக இருக்கும். ஆனால் யாரோ ஒருவருடைய அழகான கனவைப் பற்றி விவாதிக்க அவசரமாகக் கூட்டப்பட்டு அவசரமாகக் கலைக்கப்படும் சீன அதிகாரிகளின் குழுக் கூட்டத்தைப் போலக் கூட்டப்பட்ட கூட்டமல்ல இது. மேலதிகாரிகளின் சபை கூடியதனால் அன்று மாலையே, ஏற்கனவே என்ன முடிவு செய்திருந்தார்களோ அதை அமல்படுத்துவதற்காக,அதிகாரிகளுக்கு முன் தினம் மகத்தான ஒரு வரத்தைக் கொடுத்த ஒரு கடவுளுக்குச் செய்யும் சடங்குத்தனமான விளக்கு அலங்காரம் போன்ற ஒன்றாக, எங்களை அழைத்துக் கொண்டு போனார்கள். அதை அமல்படுத்துவதற்காக நாளை தீபாலங்காரங்கள் ஏற்படுத்துவதற்கு முன்பு குறுந்தடிகளால் தாக்கி ஏதோ ஓர் இருண்ட மூலையில் தள்ளுவதற்காகக் மட்டுமே ஆட்களை முரசு அறைந்து படுக்கையிலிருந்து எழுப்பிக் கொண்டு போனார்கள். அநாதி காலம் முதல் சர்வ அதிகார சபை நிலைத்திருந்தது என்று நான் நம்புகிறேன்; பெருஞ்சுவரைக் கட்டும் தீர்மானமும் அதுபோன்றதுதான். தாங்கள்தான் அதற்குக் காரணம் என்று நம்பிக் கொண்டிருந்த வடக்கேயுள்ள முட்டாள் கூட்டம். அதற்குக் கட்டளையிட்டது தானே என்று நம்பிய முட்டாள் பேரரசர். ஆனால், இந்த மதிலைக் கட்டுகிற நாங்கள் அதுஅப்படியல்ல என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோம்; அதனால் வாயை மூடிக் கொள்ளுகிறோம்.

***

பெருஞ்சுவர் கட்டுமான வேளையிலும் அதற்குப் பிறகு இன்று வரையும் மனித இனத்தின் ஒப்பீட்டு வரலாற்றில் - இந்த முறையில் மட்டும் சாராம்சத்தைக் கண்டடைய முடிகிற சில பிரச்சனைகள் இருக்கின்றன - ஆழ்ந்திருந்தேன். சீனர்களான எங்களுக்கு துல்லியமான தனித்தன்மையுள்ள குறிப்பிடத் தகுந்த சமூக அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு பிடித்தேன்.மற்றவை தெளிவின்மையில் தனித்தன்மை கொண்டவை. இந்த நிகழ்வுகளின், குறிப்பாக கடைசி அம்சத்தின் காரணங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் எல்லா சமயத்திலும் என்னுடைய ஆர்வத்தைக் கிளறி விட்டதுண்டு. இப்போதும் கிளறி விடுகிறது. இந்த மதிற் சுவரின் கட்டுமானம் சாராம்சத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.

எங்களுடைய நிறுவனங்களில் மிகவும் பூடகமான அமைப்பு எங்கள் பேரரசுதான். பீக்கிங்கில், பேரரசரின் அவையில் , கற்பனைதான் எனினும் , இந்த விஷ்யத்தைப் பற்றி தெளிவான கருத்து இருக்கிறது. உயர்நிலைப் பள்ளிகளில் அரசியல் கோட்பாடும் வரலாறும் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விஷயங்களில் அதிக ஞானமுள்ளவர்கள் என்றும் அவர்களின் அறிவை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கத் தகுதியானவர்கள் என்றும் பாராட்டப்படுகிறது. கீழ்நிலை வகுப்புகளுக்குச் செல்லும்போது ஆசிரியர்கள், மாணவர்களின் அறிவைப் பற்றிய சந்தேகங்கள் நீங்குவதாகவும் நூற்றாண்டுகளாக மக்களின் மனதுக்குள் அடித்து இறக்கப்பட் சில கருத்துகளைச் சுற்றி மேம்போக்கான ஒரு கலாச்சாரம் ஆகாயம் முட்ட உயர்ந்திருப்பதாகவும் நாம் காணலாம். மரபான அவற்றின் உண்மைகள் எதுவும் காணாமற் போகவில்லை. எனினும் இந்தப் பதற்றத்தின் மூடு பனிக்குள் அந்த உண்மைகள் பார்க்கப்படாமல் போகின்றன.

ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் பேரரசைப் பற்றிய இந்தக் கேள்விக்குத்தான் சாதாரண மக்களைப் பதில் சொல்லும்படிச் செய்ய வேண்டும். என்னவானாலும் பேரரசின் கடைசிப் புகலிடம் அவர்கள்தானே? என்னுடைய சொந்த நாட்டுக்காக இனி ஒருமுறை மட்டுமே என்னால் பேச முடியும் என்று இங்கே வெளிப்படையாகச் சொல்லுகிறேன். என்றென்றும் இவ்வளவு அழகும் வளமுமான மாற்றங்களை ஏற்படுத்தும் இயற்கைக் கடவுள்களையும் அவர்களின் சடங்குகளையும் தவிர்த்தால் நாங்கள் பேரரசரைப்பற்றியே யோசிக்கிறோம். ஆனால் இப்போதைய பேரரசரைப் பற்றியல்ல. அவர் யாரென்றோ அவரைப் பற்றிய தெளிவான தகவல்களோ தெரிந்திருந்தால் ஒருவேளை அவரைப் பற்றி யோசிக்கலாம். சரிதான் - எங்களுடைய ஒரே ஒரு ஆர்வம் இது மட்டுமே இந்த விஷயத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள நாங்கள் எப்போதும் முயன்று கொண்டிருக்கிறோம். இது விசித்திரமானதாகத் தோன்றலாம். எனினும் எங்கள் நாடு முழுக்கவும் அருகிலும் தொலைவிலுமிருக்கும் கிராமங்களிலும் சுற்றித் திரிந்த பயணிகளிடமிருந்தோ எங்கள் நாட்டு நீரோடைகளில் மட்டுமல்லாமல் புனித நதிகளிலும் நீர்வழிப் பயணம் செய்த மாலுமிகளிடமிருந்தோ எதையாவது கண்டுபிடிப்பது அசாத்தியமற்றதாக இருந்தது. ஒருவர் ஏராளமான செய்திகளைக் கேள்விப்படுகிறார் என்பது சரிதான். ஆனால் திட்டவட்டமாக எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

எந்த நீதிக் கதையாலும் நியாயப்படுத்தப்பட முடியாத அளவு, சொர்க்கத்தாலும் பாதுகாக்க முடியாத அளவு விரிந்து கிடப்பது எங்கள் நாடு. பீக்கிங் இதில் ஒரு புள்ளி மட்டுமே. அரண்மனை புள்ளியை விடவும் குறைந்தது. இருந்தாலும் உலகிலுள்ள எல்லா அரச வம்சத்தையும் போல எங்களுடைய பேரரசரும் கீர்த்தி பெற்றவர். ஒப்புக் கொள்கிறேன். இப்போது இருக்கும் சக்ரவர்த்தி நம்மைப் போன்ற ஒரு மனிதர், ஒருவேளை, பெரும் அளவுகள் கொண்ட மஞ்சத்தில் - சிறியதும் குறுகலானதுமான கட்டிலாக இருப்பதற்கான சாத்தியமே அதிகம் - படுத்துக் கிடக்கிறார். நம்மைப்போலவே அவரும் சில சமயம் உடம்பை நிமிர்த்தி முறித்துக்கொள்ளவும் மிகவும் களைப்படையும்போது அழகான வாயால் கொட்டாவி விடவும் செய்கிறார். அவற்றைப் பற்றி ,திபெத்தியப் பீடபூமியின் எல்லைக்கு அருகில் - ஆயிரக்கணக்கான காதங்கள் தொலைவிலுள்ள தென் பகுதியில் - எங்களுக்கு என்ன தெரியும்? அதுமட்டுமல்ல, ஏதாவது தகவல்கள் இங்கே வந்து சேருமானால் கூட - மிகவும் தாமதமாகவே இங்கே வந்து சேரும் - எங்களை வந்தடையும் முன்பே பழையதாகிவிடும். எப்போதும் - விவேக ஞானமுள்ளவர்களெனினும் அரசதிகாரத்துக்கு எதிராகச் செயல் படுபவர்கள், விஷம் தோய்ந்த அம்புகளுடன் ஆட்சியாளரை அவருடைய பதவியிலிருந்து நீக்க என்றென்றும் முயன்றுகொண்டிருப்பவர்கள் என்று அறியப்படாத கனவான்களின் கூட்டம். அரசவை உறுப்பினர்கள் - இவர்களால் சூழப்பட்டிருப்பார் பேரரரசர். பணியாட்கள், நண்பர்கள் வேடம் புனைந்த சதிகாரர்களும் பகைவர்களும் இருப்பார்கள். சாம்ராஜ்ஜியம் நிரந்தரமானது. ஆனால் சக்ரவர்த்தி அரியாசனத்தில் ஆட்டம் கண்டு கொண்டும் இடறிவிழுந்து கொண்டுமிருக்கிறார். கடைசியில் அரச வம்சம் முழுவதுமாக மூழ்கி, மரணப் பதற்றத்தில் இறுதி மூச்சு விடுகிறது. இந்தப் போராட்டங்களைப் பற்றியோ துயரங்களைப் பற்றியோ மக்கள் ஒருபோதும் அறிவதில்லை. தாமதமாக வந்து சேர்ந்தவர்களைப் போலவும் நகரத்துக்கு வந்த அந்நியர்களைப் போலவும் கூடவே கொண்டு வந்திருக்கும் உணவை அருந்திக் கொண்டு ஆட்கள் கூடையிருக்கும் தெருவோரத்தில் அமைதியாக நிற்கும்போது, முன்னால். வெகு தொலைவில் நகரத்தின் இதயப் பகுதியிலிருக்கும் சந்தைத் திடலில் அவர்களுடைய ஆட்சியாளரின் படுகொலை நடந்து கொண்டிருக்கும்.

இந்தச் சூழ்நிலையைச் சிறப்பாக விளக்கும் நீதிக் கதையொன்று உண்டு: அது இப்படிப் போகிறது. சாம்ராஜ்ஜிய சூரியனுக்கு முன்னாலிருந்து மிக மிகத் தொலைவுக்கு ஓடி ஒளியும் முக்கியத்துவமில்லாத நிழலான உனக்கு, வெறும் குடிமகனான உனக்கு சக்ரவர்த்தி ஒரு செய்தியனுப்புகிறார். மரணப் படுக்கையிலிருந்து உனக்காக மட்டும் ஒரு செய்தியனுப்புகிறார். அவர் தூதனிடம் படுக்கை அருகில் முழந்தாளிட்டு உட்காரும்படிக் கட்டளையிட்டு விட்டு செய்தியை ரகசியமாக அவனிடம் சொல்லுகிறார். அவர் அந்தச் செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கற்பித்திருக்கிறார். எனவே, அதை திரும்பத் தன்னுடைய செவியில் ரகசியமாகச் சொல்லும்படி உத்தரவிடுகிறார். பின்பு அது சரிதான் என்று தலையசைத்து ஏற்றுக் கொள்கிறார். ஆம். அவருடைய மரணத்துக்குச் சாட்சி வகிப்பதற்காகக் கூடி நின்றவர்களுக்கு முன்னால் தடையாக இருந்த எல்லாச் சுவர்களும் இடித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன. பெரிய, உயரமான படிகளில் பேரரசின் மகத்தான இளவரசர்கள் ஒண்டி ஒதுங்கி நிற்கிறார்கள். அவர்கள் எல்லார் முன்னிலையிலும் சக்ரவர்த்தி செய்தியைச் சொல்கிறார். தூதன் உடனே புறப்படுகிறான். திடகாத்திரனான, களைப்பே தீண்டாத அந்த மனிதன் வலது கையாலும் இடதுகையாலும் தள்ளிக்கொண்டு கூட்டத்துக்கு மத்தியில் வழியை உண்டாக்குகிறான்; எதிர்ப்புத் தென்படுகிறபோது சூரிய முத்திரை பதித்த மார்பைச் சுட்டிக் காட்டுகிறான். பிற எந்த மனிதனும் உண்டு பண்ணுவதை விடவும் வேகமாக வழியமைத்துக் கொள்கிறான். முடிவில்லாத அளவுக்குப் பெரிய ஆட்கூட்டம். வெட்டவெளியில் வந்திருந்தால் அவன் எவ்வளவு வேகமாகப் போயிருப்பான்? உடனடியாகவே அவனுடைய முட்டியால் தட்டப்படும் வரவேற்கத் தந்த ஓசையை உன்னுடைய கதவில் கேட்டிருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய வலிமையை எவ்வளவு பயன் தராத விதத்தில் பிரயோகிக்கிறான். இருந்தும் அவன் இப்போதும் அரண்மனையின் மிகமிக உள்ளே இருக்கும் அறைகளைத்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறான். ஒருபோதும் அவன் மறு முனையை அடையப் போவதில்லை. அதில் வெற்றியே பெற்றாலும் அவன் எதையும் அடையப் போவதில்லை. இன்னும் மண்டபங்களைக் கடக்க வேண்டும். மண்டபங்களுக்குப் பிறகு அரண்மனை. மீண்டும் இன்னொரு முறை படிக்கட்டுகள்; மண்டபங்கள். இன்னொருமுறை இன்னொரு அரண்மனை. இதுபோல ஆயிரக் கணக்கான ஆண்டுகள். அப்படியாக, கடைசியில் மிகவும் வெளியிலிருக்கும் கோட்டை வாயிலைத் தாண்டினால் - ஆனால் ஒருபோதும், ஒருபோதும் அது நடக்காது - சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை முன்னால் காணலாம். தன்னுடைய குப்பை கூளங்களால் நிறைந்திருக்கும் உலகத்தின் மையம். இறந்த ஒரு மனிதரின் செய்தியுடன் கூட யாரும் அந்த வழியாகச் செல்ல முடியாது. ஆனால் அந்தி மயங்கும்போது நீ உன் ஜன்னலருகில் அமர்ந்து கனவு காண்கிறாய்.

இதுபோல ஆசையுடனும் ஏமாற்றத்துடனும்தான் எங்களுடைய மக்கள் பேரரசரைக் காண்கிறார்கள்.எந்தச் சக்ரவர்த்தி ஆட்சி செய்கிறார் என்று அவர்களுக்குத் தெரியாது. அரச பரம்பரையின் பெயரைப் பற்றிக் கூட சந்தேகங்கள் நிலவுகின்றன. பள்ளிக் கூடங்களில் வரிசைக் கிரமமாக, தேதி வாரியாக அரச பரம்பரையைப் பற்றிக் கற்பிக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்திலுள்ள உலகந்தழுவிய சந்தேகங்கள் பிரம்மாண்டமானவை என்பதால் மிகப் பெரிய அறிஞர்கள் கூட சந்தேகத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விடுகிறார்கள். எங்களுடைய கிராமங்களில் முன்பு எப்போதோ மறைந்து போன சக்ரவர்த்திகள் அரியாசங்களில் அமரவைக்கப்படுகிறார்கள். பாட்டில் மட்டுமே வாழ்ந்திருந்த பேரரசரின் அறிவிப்பு ஒன்று, அண்மைக் காலத்தில் ஒரு பூசகர் மூலம் பலிபீடத்தின் முன்னால் வாசிக்கச் செய்யப்பட்டது. பழைய வரலாறாகிவிட்ட யுத்தங்கள் எங்களுக்குப் புதியவை. பக்கத்து வீட்டுக்காரன் இந்த செய்தியைத் தெரிவிக்க உற்சாகத்துடன் ஓடி வருகிறான். நேசிப்பால் கெடுக்கப்பட்டவர்களும், தந்திரக்காரர்களான அரசவை உறுப்பினர்களால் முறையற்ற வழிகளில் இட்டுச் செல்லப்பட்டவர்களும், ஆசையை அடக்க முடியாதவர்களும் பேராசைக்காரர்களும் அடங்காத காமம் கொண்டவர்களுமான பேரரசிகள் என்றென்றும் வெறுக்கப்படும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். எவ்வளவு காலத்துக்கு முன்பு அவர்கள் புதைக்கப்பட்டார்களோ அந்த அளவு பளபளப்பானவையாக இருந்தன அவர்களைப் பற்றிய வண்ணமயமான கதைகளும். ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய ஒரு வறட்சிக் காலத்தில் ஒரு சக்ரவர்த்தினி தன்னுடைய கணவனின் ரத்தத்தை எப்படிக் குடித்தாள் என்பதை கடும் மனவேதனையில் எழுந்த அழுகையுடன் நாங்கள் கேட்கிறோம்.

அப்படியாக எங்களுடைய மக்கள் இறந்துபோன பேரரசர்களுடன் தொடர்பு கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கும் ஆட்சியாளரை இறந்துபோனவராகத் தவறுதலாக நினைக்கிறார்கள். ஒருமுறை, ஒருவனுடைய வாழ்க்கையில் ஒருமுறை மட்டும், ஓர் அரண்மனை அதிகாரி மாநிலச் சுற்றுப் பயணத்திற்கிடையில் எதிர்பாராமல் எங்களுடைய கிராமத்துக்கு வருவார் என்றால், அரசாங்கத்தின் பெயரால் அறிவிப்புகள் செய்வாரென்றால், வரி விவரப் பட்டியலைப் பரிசோதனை செய்வாரென்றால், பள்ளிச் சிறுவர்களைப் பற்றி ஆய்வு நடத்துவாரென்றால், எங்களுடைய செயல்களையும் பிரச்சனைகளையும் பற்றி பூசகரிடம் விசாரிப்பாரென்றால் பிறகு பல்லக்கில் ஏறுவதற்கு முன்பாக கூடி நிற்கும் ஆட்களிடம் தன்னுடைய அபிப்பிராயத்தை தெளிவில்லாத மொழியில் சொல்லுவாரென்றால் எல்லா முகங்களிலும் ஒரு சிரிப்பு மின்னி மறையும். ஒவ்வொருவரும் பக்கத்திலிருப்பவரைக் கள்ளப் பார்வை பார்த்து அதிகாரி அதைப் பார்த்து விடாமலிருக்கத் தங்களுடைய குழந்தைகளை நோக்கிக் குனிந்து கொள்வார்கள். அவர்கள் இப்படி யோசிக்கிறார்கள்: இறந்துபோன ஒருவரைப் பற்றி உயிரோடு இருப்பதுபோல எதற்காக அவர் விசாரிக்கிறார்? அவருடைய பேரரசர் நெடுங்காலத்துக்கு முன்பே மறைந்து விட்டார். அரச பரம்பரையும் துடைத்து அழிக்கப்பட்டாயிற்று. அதிகாரி எங்களிடம் வேடிக்கை பேசுகிறார். எனினும் அவரைக் கோபப்படுத்தி விடாமலிருக்க நாங்கள் அதைக் கவனிப்பதுபோல காட்டிக் கொள்வோம். ஆனால் நாங்கள் எங்களுடைய இன்றைய அதிகாரிகளைத் தவிர யாருக்கும் கீழ்ப்படிய மாட்டோம். ஏனெனில் அப்படிச் செய்வது குற்றம். விடை பெறும் வாகனத்துக்குப் பின்னால் ஏற்கனவே சிதிலமாகிபோன முதுமக்கள் தாழியிலிருந்து ஏதேனும் ஒருவன் கிராமத்தின் ஆட்சியாளனாக எதேச்சையாக உயர்ந்தெழுகிறான்.

இதைப் போலவே எங்களுடைய மக்கள் நாட்டில் ஏற்பட்ட புரட்சிகளாலும் சமகாலப் போர்களாலும் சிறிது கூட பாதிப்படைவதில்லை. என்னுடைய இளம் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நிலைவு கூர்கிறேன். அண்டையில் இருக்கும், ஆனால் வெகு தூரத்திலிருக்கும் நாட்டில் ஒரு கலகம் வெடித்தது. அதற்கு என்ன காரணம் என்று என்னால் நினைவு கூர முடியவில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அங்கே எந்த வேளையிலும் புரட்சி வெடிக்கலாம்; அங்கே இருந்த மக்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள். அந்தப் பிரதேசத்தைக் கடந்து வந்த ஒரு பிச்சைக்காரன் புரட்சிக்காரர்களால் வெளியிடப்பட்ட ஒரு துண்டறிக்கையை என்னுடைய தந்தையின் வீட்டுக்குக் கொண்டு வந்தான். அது ஓர் உற்சவ தினம். எங்களுடைய அறைகள் விருந்தினர்களால் நிரம்பி இருந்தன. மையமான இடத்தில் உட்கார்ந்திருந்த பூசகர் அந்தத் துண்டறிக்கையை வாசித்தார். திடீரென்று எல்லாரும் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார்கள். இந்த சந்தடியில் துண்டறிக்கை கிழிந்து போனது. முன்னரே தாராளமாகப் பிச்சை பெற்றிருந்த பிச்சைக்காரனை உதைத்து வெளியேற்றி விட்டு அழகான அந்த நாளைக் கொண்டாடுவதற்காக விருந்தாளிகள் கலைந்தார்கள்.எதனால்? இந்த அண்டை நாட்டு எழுத்து வடிவம் சில முக்கிய அம்சங்களில் எங்களுடைய மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது. எங்களுடையது மிகப் புராதனமானது. இந்த வித்தியாசம் துண்டறிக்கையின் சில வாசகங்களிலும் இருந்தன. பூசகர் சிரமப்பட்டு இரண்டு வரி வாசிப்பதற்கு முன்பே நாங்கள் எங்களுடைய தீர்மானத்துக்கு வந்து விட்டிருந்தோம். முன்பு எப்போதோ சொல்லப்பட்ட பழைய வரலாறு. நீண்ட காலத்துக்கு முன்பே அமுங்கிப் போயிருந்த பழைய துக்கங்கள். அங்கே அப்போது நிலவிய பயங்கரத்தை அந்தப் பிச்சைக்காரனால் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரியவைக்க முடிந்ததெனினும் - இப்படித்தான் என் ஞாபகம் - மறுக்கும் விதமாகத் தலையை உலுக்கிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அதை அதிகம் கவனிக்க மறுத்தோம். நிகழ்காலத்தைப் பாழடித்துக் கொள்ள எங்கள் மக்கள்தான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்?

இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து உண்மையில் எங்களூக்கு ஒரு பேரரசரே இல்லை என்ற முடிவுக்கு யாராவது வந்து சேர்வார்கள் என்றால் அவர்கள் உண்மைக்கு வெகுதூரத்தில் இல்லை. மீண்டும் மீண்டும் இது நடந்து கொண்டேயிருக்கும். எங்களைக் காட்டிலும் சக்ரவர்த்தியிடம் விசுவாசம் வைத்திருப்பவர்கள் யாரும் இல்லாமலிருக்கலாம். ஆனால் எங்களுடைய விசுவாசத்திலிருந்து பேரரசர் அவசியமான விதத்தில் எதையும் தேடி அடைவதில்லை. எங்கள் கிராமத்தின் எல்லையில் சிறிய ஒரு கம்பத்தின் மேல்

புனித டிராகனின் உருவம் இப்போதும் இருக்கிறது. மனித இனத்தின் ஞாபகத்தின் தொடக்கத்திலிருந்தே பீக்கிங்கைப் பார்த்து நினைவாஞ்சலியாக தீயாகக் கனலும் சுவாசத்தை விட்டுக்கொண்டிருந்தது என்பதும் சரிதான். ஆனால் எங்கள் கிராமத்து மக்களுக்கு பீக்கிங்கே கூட பரலோகத்தை விட அந்நியமானது. அடுத்தடுத்து வீடுகள் கொண்ட எங்கள் குன்றுகளிலிருந்து பார்த்தால் தெரியும் வயல்வெளிகளை விடப் பெரிய கிராமம் உண்மையில் இருக்கிறதா? இரவு பகலாக இந்த வீடுகளுக்குள்ளே பரபரக்கும் மக்கள் கூட்டம் உண்மையில் அங்கே இருக்கிறதா? பீக்கிங்கை அப்படிப்பட்ட நகரம் என்று யோசிக்கவும் அதுவும் அதன் சக்ரவர்த்தியும் ஒன்று என்று நினைக்கவும் உள்ளதை விட அதிகம் சிரமம் தோன்றுகிறது. யுகம் யுகமாக சூரியனுக்குக் கீழே அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கும் மேகம். இதுபோன்ற அபிப்பிராயங்களை வலியுறுத்துவதன் விளைவுதான் சுதந்திரமும் கட்டுப்பாடற்றதுமான வாழ்க்கை. அது எந்த வகையிலும் நன்னெறிக்குப் புறம்பானதல்ல. என்னுடைய சொந்த கிராமத்திலுள்ளவர்களைப் போன்று இந்த நல்ல குணம்கொண்டவர்களை என்னுடைய பயணங்களில் எந்த இடத்திலும் பார்த்ததேயில்லை. ஆனால் சமகாலத்தன்மை கொண்ட எந்த சட்டத்துக்கும் உட்படாத, புராதன காலங்களிலிருந்து எங்களை வந்தடைந்த உபதேசங்களையும் எச்சரிக்கைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் வாழ்க்கை.

பொதுப்படையாகச் சொல்லுவதைத் தவிர்க்கிறேன். என்னுடைய மாநிலத்திலிருக்கும் எண்ணற்ற கிராமங்கள் எல்லாமும் இப்படியானவைதான் என்றும் நான் எண்ணவில்லை. பிறகு சீனாவிலேயே இருக்கும் ஐநூறு மாநிலங்களின் காரியத்தைச் சொல்ல வேண்டியதுமில்லையே? இருந்தும் இந்த விஷயத்தில் நான் வாசித்த ஏராளமான புத்தகங்கள், எனது தனிப்பட்ட பார்வைக் போக்கு ஆகியவர்றின் அடிப்படையில் இப்படி அபிப்பிராயம் கொள்ள நான் துணிகிறேன். குறிப்பாக, ஏராளமான மனிதர்களுடன் தொடர்புள்ள இந்த மதிலின் நிர்மாணம், நுட்பமான அறிவுள்ள ஒருவனுக்கு, பெரும்பாலும் எல்லா மாநிலங்களும் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்த ஒருவனுக்கு , இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இப்போதைய பேரரசருடன் எங்கள் கிராமம் காட்டும் நடத்தை, அடிப்படை ஒர்றுமையுள்ள ஒன்ரை நினைவுபடுத்துகிறது என்று சொல்ல நான் ஆயத்தமாகிறேன். இந்த நடத்தையை மகத்தானதென்று சித்தரிக்க எனக்கு விருப்பமில்லை. மாறாக நேர் எதிராகவே விரும்புகிறேன். உண்மையில் இதன் முதன்மைப் பொறுப்பு அரசாங்கத்திடம்தான் இருக்கிறது. உலகில் மிகப் புராதனமான சாம்ராஜ்ஜியமான. விரிவடைவதில் வெற்றி காணாத அல்லது விரிவடைவதில் அக்கறை காட்டாத நாட்டின் மிகத் தொலைவிலிருக்கும் எல்லைவரைக்கும் முடிவில்லாத இந்தச் செயல்பாடுகளைக் கொண்டு சேர்க்கிற அரசுதான் களங்கமில்லாத இந்த அரசு என்பது சரியே. மக்களின் நம்பிக்கையிலும் எண்ணத்திலும் ஒரு சோர்வு இருக்கிறது. பேரரசை பீக்கிங்கின் மந்தத்தன்மையிலிருந்து எழுப்பி உயர்த்துவதிலும் நடைமுறையிலிருக்கும் தெளிவான எதார்த்தை மார்போடு சேர்த்துக் கொள்வதிலும் அது - அந்த சோர்வு - தடையாக இருக்கிறது.

நிச்சயமாக இந்த மனோநிலை நல்ல இயல்பல்ல. இந்தக் குறைதான் எங்கள் மக்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமைக்கான முக்கியத் தூண்டுதல்களில் ஒன்று என்பதே உண்மை. இது நாங்கள் வாழும் பூமிதான். இங்கே அடிப்படையான கோளாறு இருக்கிறது என்று நிறுவ முயற்சி செய்வது எங்களுடைய மனசாட்சியை மட்டுமல்ல; அதற்கும் மேலாக எங்கள் கால்களையும் தகர்த்துக்கொள்ளுவதற்குச் சமமானது. இந்தக் காரணங்களால் இந்தக் கேள்விகளுக்குள்ளே என்னுடைய விசாரணையுடன் மேலும் தொடர்ந்து செல்ல மாட்டேன்.

***

The Penguin Complete Short Stories Of Franz Kafka (1983)

Saturday, April 9, 2011

லெனினை வாங்குதல் - மிரோஸ்லாவ் பென்கோ (சுகுமாரன்)

தமிழில்: சுகுமாரன்

மேற்படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டதும் தாத்தா எனக்கு ஒரு விடையளிப்புக் குறிப்பு எழுதினார். 'புழுத்துப்போன முதலாளித்துவப் பன்றியே' என்று தொடங்கியிருந்தது குறிப்பு. 'விமானப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும். அன்புடன், தாத்தா'. 1991 ஆம் வருடத்திய தேர்தலில் விநியோகித்த சிவப்புநிறமான கசங்கிய வாக்குச்சீட்டில் அது எழுதப்பட்டிருந்தது. தாத்தாவின் கம்யூனிஸ்ட் தேர்தல் சேகரிப்பின் ஆதாரப் பொருள்களில் ஒன்று அது. லெனின்கிராடு கிராமத்தைச் சேர்ந்த எல்லாருடைய கையெழுத்தும்miro அதில் இருந்தது.

அதுபோன்ற  கௌரவம் கிடைத்ததில் நான் நெகிழ்ந்து போனேன். அப்படியே உட்கார்ந்து ஒரு டாலர் நோட்டை எடுத்து தாத்தாவுக்குப் பின்வரும் பதிலை எழுதினேன்: 'கம்யூனிஸ்ட் போலியே, கடிதத்துக்கு நன்றி. நாளைக்குப் புறப்படுகிறேன். அங்கே போனதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ  அவ்வளவு சீக்கிரம் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்வேன். அமெரிக்கப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சி செய்வேன். அன்புடன், உங்கள் பேரன்' உயர்நிலைப் பள்ளியில் என்னுடைய முதல் வருடம். என்னுடைய முன்னோடிகள் குடிப்பதிலும் புகைப்பதிலும் கலவியிலும் சூதாட்டத்திலும் பெற்றோரிடம் புளுகுவதிலும் மோட்டார் சைக்கிள்களில் இலவசப் பயணம் செய்வதிலும் கள்ள நோட்டு அடிப்பதிலும் அல்லது கால்பந்தாட்டப் பந்தயங்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதிலும் மும்முரமாக இருந்த போது நான் படித்தேன். ஆங்கிலம். சொற்களையும் இலக்கண விதிகளையும் நெட்டுருச் செய்தேன். கிழக்கு ஐரோப்பியர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பேச்சு வழக்குகளைப் பயிற்சி செய்தேன்.'பணத்தை கவனத்தில் வை' என்ற பேச்சு வழக்கை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன். தெருவிலும் மழையிலும் தூக்கத்திலும் கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன். இதுபோன்ற பிரயோகங்கள் உங்கள் நாக்கை வளைக்க உதவுகின்றன. செவிப்புலனை வளர்க்கின்றன. அப்பார்ட்மெண்டில்  நான் தனியாகத்தான் வசித்தேன். ஏனென்றால் நான் நேசித்த எல்லாரும் அதற்குள்ளாக இறந்து போயிருந்தார்கள். முதலில் பாட்டி. பிறகு அம்மாவும் அப்பாவும். தாத்தா லெனின்கிராட் என்று பெயர் மாற்றப்பட்ட கிராமத்துக்குப் போனார். திரும்ப நகரத்தில்  குடியேறவோ வந்து போகவோ கூட மூர்க்கமாக மறுத்துவிட்டார்.

அபூர்வமான சந்தர்ப்பங்களில், குறிப்பாக நாங்கள் பெரிதாக சண்டை போட்டபோதோ, அதில் மனம் வருந்தியதாக அவர் நடித்தபோதோ மிக மோசமாக எதையாவது நான் சொல்லியிருக்கவேண்டும்.

எனவே என்னுடைய அதிருஷ்டத்தை வேறு எங்காவது தேட முடிவு செய்தேன்.

1999 வசந்த காலத்தொடக்கத்தில் அர்கான்சாஸ் பல்கலைக் கழகத்தில் எனக்கு அனுமதி கிடைத்தது. இலவசச் சலுகைகளும் கிடைத்தன. முழு கல்விக் கட்டணம், அறை, உணவு, விமான டிக்கெட்டு எல்லாம்.  நான் தாத்தாவை அழைத்தேன்.

'என் பேரனே, முதலாளியே' என்று தொடங்கினார். 'நீ என்னிடம் இப்படி நடந்துகொள்வாய் என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் எதையெதையெல்லாம் கடந்து வந்தேன் என்று உனக்குத் தெரியாதா?'

**********

தாத்தா  கடந்து வந்தவை அடிப்படையில் இவைதாம். அது 1944 ஆம் வருடம். தாத்தா அவருடைய இருபதுகளின் நடுவில் இருந்தார். அவர் முகம் இறுக்கமானதாக ஆனால் அழகானதாக இருந்தது. அவருடைய மூக்கு கூர்மையானதாக இருந்தது. புதியதும் மகத்தானதும் உலகத்தையே மாற்றி விடக் கூடியதுமான ஏதோ ஒன்றால் அவருடைய ஆழமான விழிகள்  ஒளிர்ந்தன. அவர் ஏழையாக இருந்தார். என்னிடம் அடிக்கடி சொல்வார்: 'காலைச் சிற்றுண்டிக்கு ரொட்டியையும் க்ரேப் ஆப்பிளையும் சாப்பிடுவேன். பகலுணவுக்கு ரொட்டியும் கிரேப் ஆப்பிளும். இரவு உணவுக்கும் கிரேப் ஆப்பிள். ஏனென்றால் பகலுணவு சமயத்திலேயே ரொட்டி தீர்ந்து போயிருக்கும்'.

அதனால்தான் கம்யூனிஸ்டுகள் உணவுப் பொருட்களைத் திருடுவதற்காகப் பல்கேரியாவிலுள்ள கிராமத்துக்கு வந்தபோது தாத்தா அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அவர்கள் காடுகளுக்குள் ஓடினார்கள்; பதுங்கு குழிகளை வெட்டினார்கள்; வாரக்கணக்காக இரவும் பகலும் அதிலேயே வசித்தார்கள். வெளியே பாசிஸ்டுகள் அவர்களை மோப்பம் பிடிக்க அலைந்தார்கள். வேட்டை நாய்களுடன் அவர்களைத் துரத்த முயற்சி செய்தார்கள்;துப்பாக்கிகளுடனும் வெடிகுண்டுகளுடனும் ஏவுகணைகளுடனும் வேசி மகன்களான ஜார் சந்ததியினர் விரட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் தாத்தா என்னிடம் சொன்னார்: 'ஒரு பதுங்கு குழி குறுகலானது என்று நீ நினைத்தால் நீயாகவே ஒன்றைத் தோண்டு. இல்லை இல்லை நீயாகவே தோண்டி ஒரு வாரம் கூடவே தங்குவதற்காக பதினைந்து பேரைச் சேர்த்துக்கொள். ஒன்றிரண்டு கர்ப்பிணிகளும் இருக்க வேண்டும். ஒரு பசித்த வெள்ளாடும். அதற்கப்புறம் உலகத்திலேயே மிகக் குறுகலானது கல்லறைதான் என்று எல்லாரிடமும் சொல்லித் திரியலாம்' 'கல்லறைதான் இடுங்கியது என்று நான் ஒருபோதும் சொன்னதில்லையே, தாத்தா'

'ஆனால் நீ அப்படி யோசித்துக்கொண்டிருந்தாய்'

ஆகக் கடைசியில் அந்தப் பதுங்கு குழிக்குள் இருக்க முடியாதபடி தாத்தாவுக்குப் பசி முற்றியது. துப்பாக்கியை எடுத்துச் சொருகிக்கொண்டு உணவுக்காக கிராமத்துக்குள் போக முடிவு செய்தார். கிராமத்தை அடைந்தபோது எல்லாமே மாறியிருப்பதைப் பார்த்தார். தேவாலயக் கோபுரத்தின் உச்சியில்  செங்கொடி படபடத்துக் கொண்டிருந்தது. தேவாலயம் மூடப்பட்டு சமூகக்கூடமாக மாற்றப்பட்டிருந்தது. மக்கள் எல்லாரும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆழமான விழிகள் புதியதும் மகத்தானதும் உலகத்தையே மாற்றி விடக் கூடியதுமான ஏதோ ஒன்றால் ஒளிர்ந்தன. தாத்தா முழந்தாளிட்டுச் சரிந்து அழுதார்.தாயகத்தின் மண்ணை முத்தமிட்டார். உடனடியாகக் கட்சியிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. உடனடியாக உள்ளூர் நிர்வாகத்தில் அவருக்கு உயர்ந்த பதவியளிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஏணிமேல் ஏறி வந்து  நகரத்துக்குள் நுழைந்து  இத்தியாதி இத்தியாதி துறையின் இத்தியாதி இத்தியாதியாக ஆனார். அவருக்கு ஒரு வீடு கிடைத்தது. பாட்டியைத் திருமணம் செய்தார். ஒரு வருடத்துக்குப் பிறகு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

**********

அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பு ஒருநாள் தொலைபேசியில் அவரிடம் கேட்டேன். 'அப்படி மோசமான எதையெல்லாம் கடந்து வந்தீர்கள்? உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைதானே அமைந்திருந்திருக்கிறது'.

'முதலாளித்துவவாதிகளை நான் வெறுக்கிறேன். லெனினை நேசிக்கிறேன்' என்றார்.

'என்னை நேசிக்கிறீர்களா?'

'நீ என் பேரனல்லவா?'

'அப்படியானால் நகரத்துக்கு வாருங்கள். என்னுடன் இந்த வீட்டிலிருங்கள்'

'நான் இங்கே செய்து முடிக்க வேண்டியவை ஏராளம். எனக்குப் பொறுப்புகள் இருக்கின்றன' என்றார்.

'சுத்தப்படுத்தக் கல்லறைகள்தான் உங்களுக்கு இருக்கின்றன'

'என்னால் வர முடியாது. என்னால் முடியாதென்று உனக்கும் தெரியும்' என்றார்.

'தெரியும். அதனால்தான் நான் போகிறேன்'

**********

1999 ஆம் வருடம் ஆகஸ்டு 11 தேதி நான் அர்கான்சாஸுக்கு வந்து சேர்ந்தேன். சூட் அணிந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பெண்ணும் என்னை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். சர்வதேச மாணவர் நலனில் அக்கறைகொண்ட ஏதோ அமைப்பிலிருந்து வந்திருந்தார்கள். என்னை அழைத்துச் செல்வதைப் பற்றி முன்கூட்டியே மின்னஞ்சல் செய்திருந்தார்கள்.

'அமெரிக்காவுக்கு நல்வரவு' என்று இதமானதும் நட்பு நிரம்பியதுமான ஒரே குரலில் சொன்னார்கள். அவர்களுடைய முகங்கள் அழகானவை.உண்மையானவை. நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம். பிறகு காரில் போகும்போது ஒரு பைபிளை என்னிடம் தந்தார்கள்.

'இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' நிதானமாகவும் அழுத்தமாகவும் அந்தப் பெண் கேட்டாள்.

'தெரியாது' என்றேன். நியாயமாகவே அவள் மகிழ்ச்சியடைந்ததுபோலத் தோன்றியது.

'நமது மீட்பரின் நற்செயல்கள். நமது தேவனின் வார்த்தைகள்'

'லெனினின் தேர்ந்தெடுத்த நூல்கள்தானே? இது எந்தத் தொகுதி?' என்றேன்.

**********

சிறுவனாக இருந்தபோது என்னுடைய கோடைக் கால நாட்களை கிராமத்தில் தாத்தா பாட்டியுடன் கழிப்பதுதான் வழக்கம். குளிர்காலத்தில் அவர்கள் நகரத்தில் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு பிளாக்குகள் தள்ளி வசித்தார்கள். பருவ நிலையில் வெப்பமேறத் தொடங்கியதும் மூட்டை கட்டிக்கொண்டு கிராமத்துக்குப் போவார்கள்.

சில சமயங்களில் முழு நிலாப் பொழுதுகளில் தாத்தா என்னை கிராமீன் வேட்டைக்குக் கூட்டிக்கொண்டு போவார். கொல்லைபுறத்தில் உட்கார்ந்து பெரிய பைகளைத் தயார் செய்வதிலும் அவற்றின் அடிப்பாகத்தைச் செப்பனிடுவதிலும் கடந்த வேட்டைகளின்போது அவற்றில் விழுந்த ஓட்டைகளை ஒட்டிச் சரிசெய்வதிலும் நாள் முழுவதையும் கழித்தோம். கடைசியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு முற்றத்தில் வந்து உட்கார்ந்து பால்கன் மலைத்தொடரின் சிகரங்களுக்குப் பின்னால் சூரியன் விழுவதைக் கவனித்தோம். தாத்தா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார். சின்னக் கத்தியை எடுத்தார்' மீன்பிடிப்புக்காக வைத்திருந்த வாதுமைப் பட்டைகளில் கீறிக் காட்டினார். நிலா உதிப்பதற்காகக் காத்திருந்தோம். சில சமயங்களில் பாட்டி எங்களுடன் உட்கார்ந்து பாடினாள். அல்லது தாத்தா அவருடைய கம்யூனிஸ்ட் தோழர்களுடன் காட்டில் பதுங்கு குழிக்குள் ஒளிந்திருந்த நாட்களின் கதைகளைச் சொன்னார்.

கடைசியாக நிலா எழுந்து வெளிச்சத்துடன் ஒளிரத் தொடங்கியதும் தாத்தாவின் கால்கள் அரிக்கும்.'அவையெல்லாம்

மேய்ச்சலுக்கு வந்திருக்கும் நாம் போகலாம்' என்பார்.

வழியில் சாப்பிடுவதற்காக பாட்டி சாண்ட்விச்சுகளை காகித நாப்கின்களில் பொதிந்து கொடுத்தாள். அதைப் பிரித்து எடுப்பது எப்போதுமே சிரமமாக இருந்தது. பாட்டி எங்களை வாழ்த்தியனுப்பினாள். வீட்டை விட்டிறங்கி காடுகளுக்கு இடையே மண்பாதையில் நடந்து கிராமத்தைவிட்டு வெளியேறினோம். பைகளையும்  தூண்டில் கழிகளையும் தாத்தா எடுத்திருந்தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். நிலா எங்கள் வழியைப் பிரகாசமாக்கியது. குளிர்ந்த காற்று எங்கள் முகத்தில் இதமாகப் படர்ந்தது. பக்கத்தில் எங்கோ ஆறு கலகலத்துக்கொண்டிருந்தது.

நாங்கள் காட்டைத்தாண்டி வெளியே சமவெளிக்கு வரவேண்டும்; அப்போது எங்களுக்கு மேலே கட்டவிழ்ந்து இரவு நேர வானம் விரிவதைப் பார்க்க முடியும். ஆறும் கிராமீன்களும். ஆறு எப்போதும் இருண்டிருக்கும். குமுறிக்கொண்டிருக்கும். மீன்கள் எப்போதும் கரையோரப் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும்.

நாங்கள் புல்மீது உட்கார்ந்து சாண்ட்விச்சுகளை எடுத்துத் தின்போம். உச்சமான நிலா வெளிச்சத்தில் கிராமீன்களின் ஈர உடல்கள் கனன்றெரியும் நிலக்கரிபோல மின்னிக்கொண்டிருக்கும். இரு கரைகளும் எரியும் அனல்துண்டுகளால் போர்த்தப்பட்டதுபோலத் தெரியும். அவற்றின் சின்னக் கண்கள் இருட்டில் எங்களைக் கவனித்துக்கொண்டிருக்கும். சாப்பிட்டு முடிந்ததும் வேட்டையைத் தொடங்குவோம்.

தாத்தா தூண்டில் கழியையும் பையையும் என்னிடம் தருவார். நூற்றுக்கணக்கான கிராமீன்கள் எங்கள் உள்ளங்கால்களை சுரண்டிக்கொண்டிருக்கும். அவற்றின்  கொடுக்குகளை கழியால் தொடுவோம்.சீண்டுவோம். அவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலமாக கழியைக் கவ்விக்கொள்ளும். அவற்றை அப்படியே தண்ணீரிலிருந்து எடுத்து பைக்குள் உதறக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொன்றாகச் சேகரித்தால் போதுமென்று தாத்தா அடிக்கடி சொல்வார் .

''அவையெல்லாம் எளிதில் மாட்டிக்கொள்ளக் கூடிய இரைகள். நீ ஒன்றை பிடித்தால்கூட மற்றவை ஓடிப் போகாது. நீ கழியை தண்ணீரிலிருந்து எடுக்கும்வரைக்கும்கூட நீ அங்கே இருக்கிறாய் என்பது அவற்றுக்குத் தெரியாது. அப்புறமும் கூடத் தெரியாது. மனித சுபாவத்தைப் பற்றிய பாடத்தை அவை நமக்குக் கற்றுக்கொண்டுக்கின்றன, இல்லையா?'' அது  என்ன பாடமென்று புரிந்துகொள்ளக் கூடிய வயதில்லை எனக்கு. எனவே அதைக் கேட்டுக்கொள்வேன். வேட்டையாடுவேன்.

ஒன்று இரண்டு மூன்று மணிநேரங்கள். நிலா களைத்துப் போய்த் தொடுவானத்தை நோக்கி நீந்துகிறது. கிழக்குத் திசை அனல் சிவப்பாக ஒளிர்கிறது. கிரா மீன்கள் முழு ஒத்திசைவுடன் திரும்பி மெதுவாகவும் அமைதியாகவும் நதியை நோக்கி நகர்கின்றன. நதி அவற்றின் குளிர்ந்த முரட்டு உடல்களைத் திரும்ப எடுத்துக்கொண்டு ஒரு புதிய நாளின் தாலாட்டுக்குள் உறங்கச் செய்தது. நாங்கள் புல்தரையில் உட்கார்ந்திருந்தோம். எங்கள் பை இரைகளால் நிரம்பியிருந்தது. நான் தாத்தாவின் தோளில் சாய்ந்து தூங்கிப்போனேன். அவர் என்னை தூக்கிக்கொண்டு கிராமத்தை நோக்கி நடந்தார்.

கிரா மீன்கள் எல்லாவற்றையும் ஆற்றோடு போக விட்டார்.

**********

என்னுடைய இருப்பிடத்திலிருந்து தாத்தாவை அழைத்தேன். நீண்ட நேரம் தொலைபேசித் தொடர்பே கிடைக்கவில்லை. ஆனால் இணைப்பு இடையே முறிந்தபோது மறுமுனையில் தாத்தாவின் குரல் கேட்டது.

''பேரனே?''

''நான் இங்கே தான் இருக்கிறேன்''

'' நீ அங்கேதன் இருக்கிறாய்''  அவருடைய குரல் அடங்கியதாகவும் தணிவானதாகவும் இருந்தது. அதன் எதிரொலி நாங்கள் ஏதோ சுரங்கத்தின் இரு முனைகளில் நின்றிருப்பதுபோலக் கேட்டது.

''எப்படி இருக்கிறாய்?'' என்றார் அவர்.

''தூங்கப் போகிறேன். சரி, என்னுடைய விடை பெறல் கார்டு கிடைத்ததா?''

''அதை பன்றிகளுக்குத் தீனியாகப் போட்டு விட்டேன். அமெரிக்கப் பணத்தைப் போன்ற பன்றிகளுக்கு''

எங்களுக்கிடையில் தொடர்பு அறுபட்டு காற்று அலைமோதியது.

''தாத்தா, நமக்கு நடுவில் ஏராளமான வெள்ளம் இருக்கிறது. நான் அவ்வளவு விலகியிருக்கிறோம்''

''ஆமாம். விலகித்தான் இருக்கிறோம். ஆனால் சமுத்திரத்தை விட ரத்தம் அடர்த்தியானது என்று நான் நம்புகிறேன்'' என்றார்.

**********

அவருக்கு முப்பது வயதும் இத்தியாதி இத்தியாதிப் பதவியும் கிடைத்தபோதுதான்  தாத்தா தன்னுடையை மனங்கவர்ந்தவளைச் சந்தித்தார். அது ஒரு செவ்வியல் கம்யூனிஸ்ட் காதல் கதையாக இருந்தது. கட்சியின் மாலை நேரக் கூட்ட மொன்றில் அவர்கள் முதன்முதலாகச் சந்தித்தார்கள். பாட்டி தாமதமாக வந்திருந்தாள். மழையில் நனைந்திருந்தாள். தாத்தாவுக்குப் பக்கத்தில் காலியாகக் கிடந்த இருக்கையில் உட்கார்ந்து அவருடைய தோளில் சாய்ந்து தூங்கிப் போனாள். அந்த நொடியில்  கட்சி நடவடிக்கைகளில் அவள் காட்டுகிற அரை குறை ஆர்வத்தை வெறுத்தார். அந்த நொடியில் அவளுடைய வாசனையையும் அவளுடைய முகத்தையும்  தன்னுடைய கழுத்தில் படர்ந்த அவளுடைய சுவாசத்தையும் அவர் காதலித்தார். அதன் பிறகு அவர்கள் இலட்சியங்கள் பற்றியும்  ஒளிமயமான எதிர்காலம் பற்றியும் பேசினார்கள். மேற்கத்திய முதலாளியத்தின் தீமை பற்றியும் சோவியத் யூனியனை ஆதரிப்பது பற்றியும் மிக முக்கியமாக லெனினைப் பற்றியும் பேசினார்கள். இருவரும் ஒரே ஆசையைப் பங்கிட்டுக் கொள்வதையும் விஷயங்களை ஒரே கண்ணோட்டத்தில் நன்றியுணர்வுடனும் போற்றுதலுடனும் அணுகுவதையும் தாத்தா கண்டு பிடித்தார். எனவே, அடுத்த நாள் காலை பாட்டியை  சிவில் அலுவலகத்துக்கு அழைத்துப் போய்த் திருமணம் செய்துகொண்டார்.

பல்கேரியாவில் கம்யூனிசம் அகற்றப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு 1989 இல் பாட்டி மார்பகப் புற்று நோயால்இறந்து போனாள். அப்போது எனக்கு எட்டு வயது. ஆனாலும் எல்லாவற்றையும் தெளிவாக நினைவு கூர முடிகிறது. பாட்டியை அவளுடைய சொந்த கிராமத்தில் அடக்கம் செய்தோம். அவளுடைய சவப் பெட்டியை ஒரு வண்டியில் வைத்தோம். அதை ஒரு டிராக்டருடன் சேர்த்துக் கட்டினோம்.  வண்டியையும் சவப்பெட்டியையும் டிராக்டர் இழுத்துப் போக நாங்கள் எல்லாரும் அதன் பின்னால் போனோம். தாத்தா வண்டிக்குள்ளே சவப்பெட்டிக்குப் பக்கத்தில் பாட்டியின் இறந்த கையைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு மழை பெய்ததாகத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய  நினைவுகளில் மழையையும் மேகங்களையும் காற்றையும் உணர்கிறேன். எனக்குள்ளே மழை பெய்திருக்க வேண்டும். உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களை இழந்து விடும்போது பெய்யும் அதே நிதானமான குளிர் மழை. தாத்தாவுக்குள்ளும் அந்த மழை பெய்திருக்கவேண்டும். இருந்தும் அவர் கண்ணீர் சிந்தவில்லை. அவர் வண்டிக்குள்ளேஉட்கார்ந்திருந்தார். எனது நினைவுகளின் மழை அவர் மேல் பொழிந்து கொண்டிருந்தது. அவருடைய வழுக்கைத் தலை மீதும் திறந்த சவப் பெட்டி மீதும்  பாட்டியின் மூடிய கண்கள் மீதும் பொழிந்து கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றி  ஒபெயேவும் டிரம்பெட்டும் ஈம முரசும் இழைந்த ஆழ்ந்த துக்ககரமான இசை பெருகிக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்டின் இறுதிச் சடங்குக்கு புரோகிதர்  தேவையில்லை. எனவே பாட்டியை கல்லறையில் அடக்கியபோது புரோகிதர் இல்லாமலிருந்தார். லெனினின் தேர்ந்தெடுத்த நூல்களின் பன்னிரண்டாவது தொகுதியிலிருந்து சில பகுதிகளைத் தாத்தா வாசித்தார். அவருடைய சொற்கள் ஆகாயம் வரை உயர்ந்தன. மழை அந்தச் சொற்களை மோதி ஈரச் சிறகுகளைப் போல தரையை நோக்கித் தள்ளியது. அவை  உறுமும் அருவிபோல கல்லறைக் குழியின் விளிம்புகளிலிருந்து ஓடி சேற்றுக் கலங்கலான நதிகளாகப் பெருக்கெடுத்தன.

எல்லாம் முடிந்ததும் தாத்தா சொன்னர் : ''நல்ல இடுகுழி. பதுங்கு குழியைப் போல அவ்வளவு இடுங்கியதல்ல. இல்லையா? ரொம்ப இடுங்கியதல்ல, இல்லையா? அதற்குள்ளே அவள் வசதியாக இருக்கலாம். இல்லையா? வசதியாக இருப்பாள். நிச்சயம் வசதியாக இருப்பாள்''

பாட்டியின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு தாத்தா கிராமத்தை விட்டு நகர மறுத்து விட்டார். ஒரே வருடத்துக்குள் ஒரு மனிதன் இழக்கக் கூடிய எல்லாவற்றையும் அவர் இழந்தார். தன்னுடைய மனங்கவர்ந்தவளை இழந்தார். தன்னுடைய வாழ்வின் காதலான கம்யூனிஸ்ட் கட்சியை இழந்தார்.

''நகரத்தில் எனக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது? '' என்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. ''இந்த துரோகிகளுக்குச் சேவை செய்ய எனக்கு விருப்பமில்லை. இந்த வேசி மகன்களை,அப்பாவிப் பெண்களைக் கொன்றவர்களை முதலாளித்துவம் நாசமாக்கட்டும்''.

கம்யூனிசத்தின் வீழ்ச்சிதான் பாட்டியைக் கொன்றது என்பதில் தாத்தா உள்ளுக்குள்ளே உறுதியாக இருந்தார்.

''அவளுடைய சுத்தமான இலட்சிய வேட்கையுள்ள இதயத்தில் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவுதான் அவளுடைய புற்றுநோய்'' என்று விளக்கம் சொல்லுவார். ''அவளுடைய இலட்சியங்கள் கவிழ்க்கப்படுவதை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவளைப் போன்ற நேர்மையான ஒரு பெண்மணி செய்யச் சாத்தியமானதை அவள் செய்தாள். இறந்து போனாள்''.

பாட்டியின் அருகிலேயே இருக்க வேண்டுமென்பதற்காகவே தாத்தா கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார். நாள் தோறும் பிற்பகல் மூன்று மணிக்கு பாட்டியின் கல்லறைக்குப் போனார். அதன் அருகில் உட்கார்ந்தார்.  லெனினின் தேர்ந்தெடுத்த நூல்கள் - பன்னிரண்டாவது தொகுதியைத் திறந்து உரக்க வாசித்தார். கோடைக் காலமோ குளிர் காலமோ  அவர் அங்கே உட்கார்ந்து வாசித்தார். ஒருநாளைக் கூடத் தவற விட்டதில்லை. அங்கேதான், பாட்டியின் கல்லறை அருகேதான் அவருக்கு அந்த யோசனை தோன்றியது.

ஒரு சனிக்கிழமை அவரைப் பார்க்க வந்திருந்தபோது  என்னிடமும் என் பெற்றோரிடமும் சொன்னார்''எதையும் இழந்துவிடவில்லை. இந்த நாடுகளில் கம்யூனிசம் செத்துப் போயிருக்கலாம். ஆனால் அதன் இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை. நான் அதையெல்லாம் இங்கே இந்த கிராமத்துக்குக் கொண்டு வரப் போகிறேன். எல்லாவற்றையும் முதலிலிருந்து  கட்டியெழுப்பப் போகிறேன். அதன் மூலம் உன் பாட்டியின் கனவு நிறைவேறும். உன் பாட்டி என்னைப் பற்றிப் பெருமைப் படுவாள்''.

1993 பத்தாம் மாதம் இருபத்தி நான்காம் தேதி மகத்தான அக்டோபர் கிராமப் புரட்சி நடந்தது. அமைதியாகவும் தலை மறைவாகவும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமலும் நடந்தது. அந்த சமயத்தில் அறுபது வயதானவர்களும் அல்லது அதை விட குறைந்த வயதானவர்களும்  ஏற்கனவே கிராமத்தை விட்டு வாழ்வதற்காக நகரத்துக்குப் போய் விட்டிருந்தார்கள். ஆக அப்பாவிகளும் மன உறுதியுள்ளவர்களும் அங்கே மிஞ்சியிருந்தார்கள். அவர்களிடையே அந்த இலட்சியம் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது.  மகத்தானதும் உலகத்தையே மாற்றி விடக் கூடியதுமான ஏதோ ஒன்று  அவர்களுடைய ஆழ்ந்தவிழிகளில் ஒளிர்ந்தன. கிராமம் அதிகாரபூர்வமாக இன்னும் பல்கேரியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. தேசிய அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட மேயரும் இருந்தார். அரசாங்கம் தான் கிராமத்தை நிர்வாகம் செய்தது. ஆனால் ரகசியமாகவும் தலைமறைவாகவும் புதிய கம்யூனிஸ்ட் கட்சிதான் கிராமத்தின் விதியைத் தீர்மானித்தது. கிராமத்தின் பெயர் லெனின்கிராடு என்று மாற்றப்பட்டது. தாத்தா ஏகமனதாக அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வோரு மாலையும் கிராமத்தின் பழைய கூடத்தில் கட்சிக் கூட்டம் நடக்கும்.  தாத்தாவுக்குப் பக்கத்து இருக்கைஎப்போதும் காலியாகவே விடப்படும்.  வெளியே மழை பெய்வதுபோன்ற பிரமையை உருவாக்குவதற்காக குழாய் மூலம்  ஜன்னல் கண்ணாடிமேல் தண்ணீர் ஊற்றப்படும்.

ஜன்னல்மேல் தண்ணீர் விடும் முடிவைப் பற்றி கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது ''ஈரப் பதத்தில் கம்யூனிசம் நன்றாகத் தழைக்கும்'' என்று விளக்கம் சொன்னார் தாத்தா. உண்மையில் அவர் பாட்டியைப் பற்றியும் அவர்களுடைய முதல் சந்திப்பின்போது பெய்த மழையையும் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால் லெனின்கிராடில் கம்யூனிசம் நிச்சயமாகவே தழைத்தது.

தாத்தாவும் கிராமவாசிகளும் பல்கேரியாவில் மிஞ்சியிருக்கும் எல்லாக் கம்யூனிஸ்ட் கலைப் பொருட்களையும் மீட்டு லெனின்கிராடுக்கு - கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாழும் அருங்காட்சியத்துக்குக் - கொண்டு வந்து விடத் தீர்மானித்தார்கள். சிவப்பு இலட்சியத்தில் ஊன்றியிருந்த எல்லா நினைவுச் சின்னங்களும் நாடு முழுவதும் தகர்க்கப் பட்டிருந்தன. பதிற்றாண்டுகளுக்கு முன்பு திட்பமானவையாகவும் மகோன்னதப்படுத்துபவையாகவும் நம்பிக்கையூட்டக் கூடியவையாகவும் நிறுவப்பட்டிருந்த சிலைகளெல்லாம் இன்று பெயர்க்கப்பட்டு பழைய உலோகமாக உருக்கப்பட்டன. முன்பு கொண்டாடப்பட்ட கவிஞர்கள் இன்று மறக்கப்பட்டார்கள். அவர்களுடைய காகித உடல்களில் புழுதி படிந்தன. அவர்களுடைய உதிர மை மழை நீரால் கழுவப்பட்டது.

மீட்புப் பணியைச் செய்துதர ஒரு நாடோடிக் கூட்டத்தை கிராமவாசிகள் சம்மதிக்க வைத்திருப்பதாக எனக்கு எழுதிய கடிதத்தில் தாத்தா தெரிவித்திருந்தார். ''தோழர் ஹசன், அவர் மனைவி, அவர்களுடைய பதின்மூன்று நாடோடிப் பிள்ளைகள் எல்லாரும் பிரகாசமான கம்யூனிஸ்ட் இலட்சியங்களால் ஈர்க்கப் பட்டிருக்கிறார்கள். என்ன,  கொஞ்சம் காசுக்கு ஆசைப்படுகிறார்கள். நாங்கள் இரண்டு பன்றிகளைக் கொடுத்தோம். நம்முடைய இரங்கத் தகுந்த நாட்டில் பார்க்கக் கிடைக்கிற எல்லா சிவப்பு கலைப் பொருட்களையும் கிராமத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்று நாடோடித் தோழர்கள் அவர்களுடைய முதல் பரிசை எங்களிடம் கொண்டு வந்தார்கள். பெயரற்ற ரஷ்யச் சிப்பாயின் நினைவுச் சின்னம். துருக்கியர்களிடமிருந்து விடுதலை பெற்றவர். சிலை இடுப்புக்குக் கீழே கொஞ்சம் சிதைந்திருகிறது. ஒரு துப்பாக்கி காணாமற் போயிருக்கிறது. மற்றபடி நல்ல நிலையிலிருக்கிறது. இப்போது அந்தச் சிலை அல்யோஷா, செர்யோஜா, மின்ஸ்கைச் சேர்ந்த பெயரற்ற பணிப்பெண் ஆகியவர்களின் சிலைகளுக்கு அருகில் கம்பீரமாக நிற்கிறது''.

**********

அமெரிக்க வாழ்க்கை நன்றாகவே இருந்தது. நான் வகுப்புகளுக்குப் போனேன். படித்தேன். புதிய நண்பர்களைஏற்படுத்திக்கொண்டேன்.  நான் தாத்தாவுக்குக் கடிதங்கள் எழுதினேன். அல்லது பல்கேரியாவில் விடியற்காலையாக இருக்கும்போது  அவர் விழித்திருப்பாரென்றும் நாற்காலியில் உட்கார்ந்திருப்பாரென்றும் லெனினை வாசித்துக் கொண்டிருப்பாரென்றும் தெரியுமென்பதால் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். மறுபடியும் கெட்ட கனவுகள் காண ஆரம்பித்திருந்தேன். கார் என் தலைமேல் ஏறி ஏறி இறங்குவதாகக் கனவு கண்டு அலறியடித்து விழித்தேன். மறுபடியும் தூங்கியபோது பாட்டி வந்து என் படுக்கையில் உட்கார்ந்து, நான் காய்ச்சலில் விழுந்துவிடும் போதெல்லாம் செய்திருந்ததுபோல, என் நெற்றியை வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். ''உன் தாத்தா செத்துக் கொண்டிருக்கிறார்'' என்று எச்சரித்தாள். ''அவரை சீக்கிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்புறம், என் கண்ணே, தயவுசெய்து அடுத்த முறை நீ அவரோடு பேசும்போது என் கல்லறையில் லெனினை வாசிப்பதை நிறுத்தச் சொல்''.

**********

தாத்தா அமெரிக்கர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினார். அப்படியானால் ஏதாவது புத்தகத்தைப் படிப்பதுதானே,

''என்னால் மனிதர்களை ஆராய்ச்சி செய்ய முடியாது. தப்பான முடிவுகளையே எடுப்பேன்'' என்றேன்.

''பிறகு எதற்காக உளவியல் படிக்கிறாய்?''

அதனால் அமெரிக்கர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்க முயற்சி செய்தேன். ''அவர்கள் வித்தியாசமானவர்கள். நாளைக்கு என்ன சாப்பிடப் போகிறோமென்றோ நாளைக்கு மேஜைமீது உணவு இருக்குமா வென்றோ அவர்கள் யோசிப்பதில்லை. இவையெல்லாம் அவர்கள் வரையில் முடிந்து போய்விட்ட பிரச்சனைகள். நடப்பது போல. நடை ஒரு முடிந்து போன பிரச்சனை என்று நாம் படித்திருக்கிறோம். பரிணாமம் அதை அக்கறையாகத்  தீர்த்து விட்டது. இனிமேல் ஒவ்வொருவரும் எப்படி நடக்க வேண்டுமென்று வகைப் படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இந்தத் தகவலை சரியாகச் செயல்படுத்த மூளைக்கு ஒரு வருடம் போதுமானதாக இருந்தது. அப்புறம் புரிந்து கொண்டது. நீங்கள் காலால் நடக்கிறீர்கள். இங்கே மக்களுக்கு வேறு பிரச்சனைகள். வேறு விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள்'' என்று எழுதினேன்.

கடிதம் கிடைத்த பிறகு தொலைபேசி மூலம் ''என்ன சொல்ல வருகிறாய்?'' என்று கேட்டார் தாத்தா.

''எனக்குத் தெரிந்த இந்தப் பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். சமந்தா. ஒரு மாதமாக மிகவும் மனச் சோர்வுடன் இருக்கிறாள். அவள் அப்பா அவளுக்கு தானியங்கியான  கியரில்லாத ஒரு பிஎம்டபிள்யூ காரைக் கொடுத்தார். என்னால் அதை ஓட்டவே முடியாது. அது கொடுமையாக இருக்கிறது. நான் செத்துப் போகப் போகிறேன் என்று அழுகிறாள்''

''அது கொடுமைதான்'' என்றார் தாத்தா.

''ஆனால் வேறு சிலரின் பிரச்சனைகள் நம்முடையவைபோலத்தான். என்னுடைய அறை நண்பனின் பெற்றோர் மணவிலக்குச் செய்துகொள்ளப் போகிறார்கள். இருபது வருடங்களாக ஒன்றாக இருந்தவர்கள். ஒரு நாள் காலையில் இனிமேல் ஒரே படுக்கையில் விழித்து எழ வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.

மறுமுனையில் தாத்தா இருமினார்.

''ஏழு வருடங்களுக்கு முன்பு இந்த நாளில்தான் உன் பெற்றோர்கள் காலமானார்கள்'' என்றார்.

''தெரியும். என்னுடைய காலண்டரில் குறித்து வைத்திருக்கிறேன்'' என்றேன்.

**********

எனக்கு பன்னிரண்டு வயதாவதற்கு ஒரு வாரம் முன்பு என்னுடைய பெற்றோர்கள் இறந்தார்கள். அவர்கள் எனக்கு ஒரு சைக்கிளைப் பரிசளிப்பதாக இருந்தார்கள். வீட்டின் தரைத்தளத்தில் அதை மறைத்து வைத்திருந்ததை நான் பார்த்திருந்தேன்.  தோல் இருக்கையும் டைனமோவால் எரியும் இரண்டு முகப்பு விளக்குகளும் கொண்ட ஒரு வெள்ளை நிற பி.எம்.எக்ஸ். அம்மா ஏற்கனவே வாழ்த்து அட்டை எழுதி உறையை சைக்கிளில் சொருகியிருந்தாள்.

''எங்கள் அன்பான பையனுக்கு, நீ கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக்கொள்ளும்போது எங்களை நினைத்துக்கொள்'' என்று அட்டையில் இருந்தது.

அவர்கள் இறந்துபோன அந்த இரவை இப்போது நடந்ததுபோல என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிகிறது.தொலைபேசி ஒலித்தபோது அதிகாலை இரண்டரை மணியாக இருந்தது. அப்பா தொலைபேசியை எடுத்து சற்று நேரம் பேசினார். அவருடைய சோகமான முணுமுணுப்பால் விழித்தேன். மறுபடியும் தூக்கத்துக்குள் ஊர்ந்தேன். மறுபடியும் விழித்தேன். அம்மா அப்பாவின் கையைப் பற்றியபடி சோபாவில் அவர்  அருகில் உட்கார்ந்திருந்தாள். இருவரும் நீல இருளில் குளித்தவர்கள்போல இருந்தார்கள். தசை நிழல்கள்போலத் தோன்றினார்கள்.

கடைசியாக அப்பா சொன்னார்.'' நன்றி டாக்டர். நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்''

அம்மா என் படுக்கையில் வந்து உட்கார்ந்தாள். பயத்தால் நடுங்கிக் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

''மிஷே, எழுந்திரு'' என்றாள்.

''தாத்தாவா?'' என்று கேட்டேன். அம்மா  குனிந்து  நெற்றியில் முத்தமிட்டாள்.

''அவருக்கு மாரடைப்பாம். ஆனால் இப்போது நன்றாக இருக்கிறார். எல்லாரும் சேர்ந்து கிராம மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்'' என்றாள்.

''செத்துப் போய் விடுவாரா?''

அப்பா வந்து என்னை முத்தமிட்டார். அவருடைய கண்கள் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னின. என்னைப் போர்வையுடன் அப்படியே சுற்றி தூக்கிக்கொண்டு கதவைத் தாண்டினார். நாங்கள் நெடுஞ்சாலையை அடைந்தபோது நான்கு மணி ஆகியிருந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் இறந்தார்கள்.

**********

என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிவதெல்லாம் எங்களுக்கு நேராக வந்த லாரியின் பிரகாசமான வெளிச்சத்தை மட்டுமே. கார் சாலையிலிருந்து விலகி உருண்டது. மோதல். பிறகு இருட்டு.

என் மார்பில் குழாய்களுடன் விழித்தேன். ''அம்மா? அப்பா?'' என்று கேட்டேன்.

''சின்கோ, என் மகனே, விழித்து விட்டாய்'' என்று கேட்டது. எங்கிருந்தோ தாத்தா தோன்றினார். என் முன்னால் நின்று  அழுதுகொண்டிருந்தார்.

''நீ  விழித்து விட்டாய், விழித்து விட்டாய்'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருந்தார்.

டாக்டர்கள் வந்தார்கள். நர்ஸுகள் வந்தார்கள். அவர்கள் எல்லாரும் ஆச்சரியமடைந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நான் விழித்துக் கிடப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருந்தார்கள்.

''தாத்தா, அம்மா எங்கே?''

''சின்கோ,  நீ  விழித்து விட்டாய்'' திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருந்தார் தாத்தா .

**********

ஒரு வாரத்துக்குப் பிறகு புதிய சமாதியைப் பார்க்க என்னை இடுகாட்டுக்கு அழைத்துப் போனார். மண் மேடாகக் குவிக்கப்பட்டிருந்தது. கறுத்திருந்தது. ஈரமாக இருந்தது. என்  பெற்றோர்கள் ஒரே இடுகுழியில் புதைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் பாட்டி கிடந்தாள்.

''தாத்தா நீங்கள் பொய் சொல்கிறீர்கள்'' என்றேன். மரச் சிலுவைமேல் பொறித்திருந்த என் பெற்றோரின்பெயர்களை உற்றுப் பார்த்தேன். ''நீங்கள் ஒரு புளுகர்''

ஒரு கையை என் தோள்மீது வைத்தார் அவர் .

''இறுதி சடங்கை நீ தவற விட்டதில் எனக்கு மகிழ்ச்சி''

''புளுகர்'' என்று முணுமுணுத்தேன். மண்டியிட்டு உட்கார்ந்து என் உள்ளங்கைகளால் மண்ணைப் பறித்தேன். திரும்பி அதை அவர் முகத்தில் எறிந்தேன். பிறகு அவரைக் கட்டியணைத்துக்கொண்டேன்.

**********

கல்லூரியில் என்னுடைய இரண்டாம் வருடம். எங்களுடைய தொலைதூர அழைப்பு வேளையொன்றில் தாத்தாஎன்னிடம் கேட்டார். ''இ பேயைப் பற்றி உனக்கென்ன தெரியும்?''

''என்ன?''

''இ பே. அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? ''

''ஆமாம். நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்  தெரியும். ஆனால் ஏன்?''

''தோழர் ஹசன் ஆராய்ச்சி செய்திருக்கிறார். சுவாரசியமான சில விஷயங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்''என்று விளக்கினார் தாத்தா. யாரோ லெனினின் சடலத்தை இ பே மூலம் விற்பதாகத் தெரிகிறது.

''இ பேயில் லெனின்?'' ஒரு கணம் தொண்டை வரண்டது. ''தாத்தா உங்களுக்குப் பைத்தியமா?''

''அது தேவையில்லாத விஷயம்'' என்றார். இன்று கட்சி உன்னுடைய உதவியை நாடுகிறது. விளாதிமிர் இலியீச்சை லெனின்கிராடுக்குக் கொண்டு வர நீ உதவ வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்''

'' நீங்கள் என்னைச் சீண்டுகிறீர்கள். உங்களால்...''

''விற்பனையாளருக்குத் தேவை ஒரு கடனட்டை. விசாவோ  மாஸ்டர் கார்டோ அல்லது டிஸ்கவரோ?கிராமத்தில் எங்களில் யாரிடமும் இதில் எதுவும் கிடையாது. அதனால்தான் உன் உதவியைக் கேட்கிறோம். ஆராய்ச்சி செய். நாளைக்கு என்னைக் கூப்பிடு''

நான் என் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இண்டெர்நெட் பிரௌசரைத் திறந்தேன். பிறகு மூடி விட்டேன். பிறகு மறுபடியும் திறந்து இ பேயைத் தேடினேன். 'லெனின்' என்று தட்டச்சு செய்து தேடு பொறியைச் சொடுக்கினேன். 430  இனங்கள். அஞ்சல் அட்டைகள், பாட்ஜுகள், டி ஷர்ட்டுகள். தாத்தா எதைச் சொன்னார்?மார்பளவுச் சிலையையா? தொப்பியையா? அல்லது ஒட்டுத் தாடியையா? விண்டோசை மூடுவதற்குத் தயாராக்கிக் கொண்டிருந்தபோது அதைப் பார்த்தேன். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர் லெனின். பதப்படுத்திய நிலை. 'சீரிய ஏலமெடுப்பவர்களுக்கு மட்டுமே'.

அந்த இணைப்பைத் தொடர்ந்துபோய் அந்தப் பக்கம் பதிவிறங்கக் காத்திருந்தேன். உள்ளடக்கத்தை உரக்க வாசித்தேன்.

''விளாதிமீர் இலியீச் லெனினின் சடலத்தை ஏலம் கோரியிருக்கிறீர்கள்.  உடல் நல்ல நிலையில் உள்ளது.அமெரிக்க வெப்பநிலையிலும் ஐரோப்பிய வெப்பநிலையிலும் இயங்கும்  குளிரூட்டிய சவப்பெட்டியில் அனுப்பப்படுகிறது. சீரிய ஏலமெடுப்பவர்களுக்கு மட்டுமே. வாங்கிய உடன் தொகையைச் செலுத்தவும்.''

பொருள் வைத்திருக்கும் இடம் மாஸ்கோ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் சரக்கு அனுப்பப்படும். விற்பனையாளர் பற்றிய தகவல்களைப் பரிசோதித்தேன். பின்னூட்டம் எதுவுமில்லை. வேறு ஏலம் நடந்ததாகவும் தெரியவில்லை. நிச்சயமாக இது ஒரு புரட்டு. ஏலம் பற்றிய தகவல் பக்கத்துக்குத் திரும்ப வந்தேன். மேலும் ஓரிரு முறை அதை வாசித்தேன். இதுவரையிலும் யாரும் ஏலம் கேட்டிருக்கவில்லை. ஆரம்பத் தொகை 1.99 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான்  ஐந்து டாலருக்கு ஏலம் கேட்டு அதற்கான பித்தானை அமுக்கினேன். பழைய பக்கம் மறைந்து புதிய பக்கம் பதிவிறங்கியது. 'பொருள் முன்பதிவு''என்றிருந்தது. வாழ்த்துக்கள், கம்யூனிஸ்ட்போலி _ 1944. நீங்கள் லெனினை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள்''

**********

மறுநாள் தாத்தாவைக் கூப்பிட்டேன்.

''உங்களுடைய முட்டாள் லெனினுக்காக பத்து டாலர்கள் வீணடித்திருக்கிறேன். உங்களுக்கு சந்தோஷமென்று நினைக்கிறேன்'' என்றேன்.

''பேரா?''

''ஆமாம். நான் அவரை வாங்கி விட்டேன். சடலத்துக்கு ஐந்து டாலர். அனுப்புகிற செலவுக் கட்டணம் ஐந்து டாலர். உங்களுடைய கிராமத்து முகவரியைத்தான் கொடுத்திருக்கிறேன்''

''அப்படியென்றால் ஒரு நினைவு மண்டபத்தை நாங்கள் கட்ட வேண்டும். உடனே கட்டவேண்டும்''

'sukumaran-1 'தாத்தா, இது ஒரு புரட்டு. ஒரு வேடிக்கை. லெனினை விற்கவோ வாங்கவோ யாருக்கும் உரிமையில்லை''

''நாங்கள் கட்டுவோம்''

''நான் என்ன சொல்கிறேன் என்பதையாவது கேட்கிறீர்களா?''

''ஒரு நினைவு மண்டபம். சதுக்கத்தில். அதற்கு வண்ணம் பூச வேண்டும். ஆமாம் சதுக்கத்தை சிவப்பாக்க வேண்டும்''

''தாத்தா, நிறுத்துங்கள்"'

அவர் நிறுத்தினார். பிறகு சொன்னார். ''பேரனே, கவனி. சமாதிகளைச் சுத்தம் செய்து களைத்துப் போய் விட்டேன். சமீப காலமாக கடுமையான தலைவலி வருகிறது. என்னுடைய வலது கை மரத்துப் போய் சும்மா தொங்குகிறது. கால்களில் குத்தலும் குடைச்சலுமாக உணர்கிறேன். அதனால் தயவு செய்து தயவுசெய்து தயவுசெய்து என்னை நிறுத்தச் சொல்லாதே. நான் விரும்பினால் லெனினை வாங்க முடியுமென்று யோசிக்க விரும்புகிறேன். அல்லது ஒரு நினைவு மண்டபம் கட்ட முடியுமென்று அல்லது ஒரு பிரமிடை எழுப்பலாமென்று அல்லது ஒரு ஸ்பிங்க்ஸை நிர்மாணிக்கலாமென்று யோசிக்க விரும்புகிறேன்''.

''மன்னித்து விடுங்கள் தாத்தா''

''பேரா, இன்னும் என் மேல் கோபமா? என்னுடைய  தவறால்தான்   உன் பெற்றோர்கள் இறந்து போனார்கள் என்று  இன்னும் நினைக்கிறாயா?'' என்று கேட்டார்.

**********

என்னுடைய பதினாறாவது பிறந்த நாளன்று அவர் ஒரு சைக்கிளைப் பரிசளித்தபோது நான் அவருடைய தவறுதான் காரணமென்று சொல்லியிருக்கிறேன்.  எங்கள் குடியிருப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். கேக்கும் மெழுகுவர்த்திகளும் பலூன்களும் கொண்டு வந்திருந்தார். அவர் கொண்டு வந்த பரிசுப் பொருட்களின் உறைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் கைகளைத் தட்டிப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்.

''அது ஒரு பி எம் எக்ஸ்.  அதை வாங்குவதற்கு என்னுடைய தொடர்புகளையெல்லாம் பயன்படுத்தினேன்''என்று கண்ணைச் சிமிட்டினார்.

அப்புறம்தான்  நான் வெடித்தேன்.

''எல்லாம் உங்களுடைய தவறு'' அப்பா உங்களைப் பற்றி மிகவும் கவலைப் பட்டார். உங்களுடைய மடத்தனமான மாரடைப்புத்தான் கார்  மோதுவதற்குக் காரணம்'' என்று கத்தினேன்.

கேக்கை தரையில் தட்டி எறிந்தேன். எழுந்து போய் அந்தச் சந்தர்பத்துக்கு முன்பு எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்த படங்கள் எல்லாவற்றையும் கிழித்து வீசினேன். தட்டுகளையும் கோப்பைகளையும்  உடைத்தெறிந்தேன்.

''நீங்கள் செத்துத் தொலைந்திருக்கலாம். தூக்கத்திலேயே செத்துப் போயிருக்கக் கூடாதா என்று நினைத்தேன்'' என்று கத்தினேன்.

''சின்கோ '' என்றார் அவர்.

''சின்கோ என்று கூப்பிடாதீர்கள். உங்கள் பிள்ளை செத்துப் போனார். உங்களால்தான் அவர்கள் இரண்டு பேரும் செத்துப் போனார்கள்'' என்று கத்தினேன்.

மறுநாள் தாத்தா நகரத்தை விட்டுப் போனார். லெனின்கிராடுக்குத் திரும்பிப் போய் உள்ளூர் தலைமறைவுக் கட்சியில் சேர்ந்தார். தினமும் லெனின் தொகுதியை அக்குளில் இடுகிக்கொண்டு கல்லறைக்குப் போனார். அதன் பிறகு மீண்டும் என்னை சின்கோ என்று அவர் கூப்பிடுவதைக் கேட்கவில்லை. ஒரு வருடம் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. அமெரிக்கா வுக்குப் போவதைத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தேன்.

''என் பேரன் ஒரு முதலாளியவாதி. நான் எதையெல்லாம் கடந்து வந்தேன் '' என்றார்.

**********

நாங்கள் லெனினை வாங்கிய ஐந்து மாதங்களுக்குப் பின்பு எங்கள் உரையாடலின்போது தாத்தா சொன்னார்.''அவர் இங்கேதான் இருக்கிறார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர் லெனின் கிராடுக்கு வந்திருந்தார்''

''உங்களுக்குக் கிறுக்கா, தாத்தா?''

''சடலம் நேற்று வந்து சேர்ந்தது. குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியும் இதர சாமான்களுமாக. நினைவு மண்டபத்தின் வேலைகளையெல்லாம் கிட்டத்தட்ட முடித்து விட்டோம். அதுவரைக்கும் லெனின் வீட்டில் தங்கியிருக்கிறார். உன்னுடைய அறையில்தான் தங்கவைத்திருக்கிறோம். உனக்கு ஆட்சேபமில்லையே?''

''உங்களுக்குக் கிறுக்குப் பிடித்து விட்டதென்று நினைக்கிறேன்''

''நானும் அப்படித்தான் நினைக்கிறேன்'' தாத்தா ஒப்புக்கொண்டார்.

''நீங்கள் ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும்''

''அதனால் என்ன பயன்? தலைவலி எப்போதும் கூடவே இருக்கிறது. கைகளில் குடைச்சல். மறுபடியும் கெட்ட கனவுகள் வருகின்றன. பதுங்கு குழியில் கிடந்த மக்களைப் பற்றிய கனவுகள்''

''அவர்களுக்கு என்ன ஆயிற்று?''

''அந்தப் பதுங்கு குழியில் பதினந்துக்கும் மேற்பட்ட ஆட்களுடனும் இரண்டு கர்ப்பிணிகளுடனும் ஒரு பசித்தவெள்ளாட்டுடனும் நான் எப்படி இருந்தேன் என்று உனக்கு நினைவிருக்கிறதா? பசியுடனும் நிராசையுடனும் கிடந்து கடைசியாக கிராமத்துக்குப் போக தைரியத்தை வரவழைத்துக்கொண்டேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா?''

''ஆமாம். நினைவிருக்கிறது''

''மூன்று வருடங்களுக்குப் பிறகு காட்டில் அதே இடத்துக்குத் திரும்பப் போனேன். அந்தப் பதுங்கு குழிக்கு. என்னுடைய சுதந்திரமான கண்களால் அதை இன்னொரு முறை பார்க்க விரும்பினேன். நுழைவு வழியைச் சுத்தப்படுத்தினேன். ஏணிவழியாகக் கீழே இறங்கி அவர்க¨ளைப் பார்த்தேன். பதினைந்து ஆண்கள். இரண்டு பெண்கள். ஒரு வெள்ளாடு. எல்லாரும் இறந்து போயிருந்தார்கள்.''

''பதுங்கு குழியிலா?''

''பதுங்குகுழியில்தான். யுத்தம் முடிந்து விட்டதென்று யாரும் அவர்களிடம் சொல்லவில்லை. அவர்கள் வெளியே வரலாமென்று யாரும் சொல்லவில்லை. அவர்களுக்கு நடப்பதற்கான வலு இருக்கவில்லை. பட்டினி கிடந்தே இறந்துபோனார்கள்''

தொலைபேசியின் ஒலிவாங்கியைக் கையில் பிடித்தபடி என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து அந்த ஆண்களையும் பெண்களையும் ஆட்டையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் சுதந்திரமானவர்கள் என்று எப்படி யாரும் சொல்லாமல் விட்டார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இண்டெர்நெட் மூலம் நாங்கள் வாங்கிய, இப்போது என் அறையில் குளிரூட்டத்துடன் இருக்கிற லெனினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.  அப்படியே வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தேன். நான் சிரிக்கத் தொடங்கியதும் தாத்தாவும் சிரிக்கத் தொடங்கினார். நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய குரல்கள்  தொலைபேசி இணைப்பில் கலந்து கடைசியில் ஒன்றாகக் கேட்கும் வரை சிரித்துக் கொண்டிருந்தோம்.

மறுநாள் மறுபடியும் தாத்தாவை அழைத்தேன். ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. சில மணிநேரங்களுக்குப் பிறகு மறுபடியும் அழைத்தேன். அதற்குச் சில மணிநேரங்களுக்குப் பிறகும். யாரும் பதில் சொல்லவில்லை. இரண்டு வாரங்களாக நாள்தோறும் அழைத்தேன். ஒலிவாங்கியை இறுகப் பிடித்தே  கையில் காய்ப்பு காய்த்து விட்டது. என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து இணைப்பின் மறுமுனை மௌனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே ஒலிக்கும் ஒரே மாதிரியான பீப்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவை என்னுடைய மண்டைக்குள் ஒலிக்கும் துடிப்புகளைப்போல ஒலித்தன. நிதானமாகவும் களைப்புடனும் எனக்கு விடைசொல்லும் துடிப்பொலி. உரக்க அழுதேன். ஒலிவாங்கியைக் கையில் வைத்துக்கொண்டு அறைக்குள் அடிவைத்து நடந்தேன். கூப்பிட்டுக் கொண்டேயிருந்தேன்.  எனக்கு வேறு எண்கள் தெரியாது தாத்தாவின் எண்ணைத் தவிர.

**********

மறுநாள் தபாலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. நீண்ட நேரம் அதைப் பிரிக்காமலே இருந்தேன். அதற்கான தைரியம் இல்லாமலிருந்தது. இரண்டு நாட்கள் அழுதேன். கடைசியாக தேற்றிக்கொண்டு கடிதத்தைப் பிரித்தேன்.

''அன்புள்ள பேரனுக்கு, நான் இப்போது இறந்தவன். என்னுடைய இதயம் அதன் துடிப்பை நிறுத்தியதும் இந்தக் கடிதத்தை உனக்கு அனுப்புமாறு தோழர் பென்கோவிடம் தெரிவித்திருந்தேன்.  அவர் மிகவும் நல்லவர். இதை அனுப்பும் செலவை அவர் ஏற்றுக் கொள்வார்.

பேரனே, நாம், நீயும் நானும் ஒரு கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம். வருடங்களால் அல்ல;மரணங்களால் நமக்கு வயதாகி விட்டிருகிறது. இப்போது நீ ஒரு மரணத்துக்கு மூப்படைந்திருக்கிறாய். இந்தச் சுமையை கௌரவத்துடன் சுமந்து செல்; ஆனால் அது உன் முதுகை முறித்துவிடாமல் பார்த்துக்கொள்.  எல்லாரையும் விடவும் நீ அதிகம் துன்பப் பட்டிருக்கிறாய். ஆனால், மற்றவர்கள் இதை விடப் பெரும் வேதனைகளை அனுபவித்திருக்கிறார்கள். நீ என்னவாக இருக்கிறாயோ அதற்கு நன்றியுடன் இரு. நீ பார்த்தவைகளுக்கும் பார்க்காமல் விட்டவைகளுக்கும் நன்றியுடன் இரு.

கிரா மீன்கள்  எளிதில் மாட்டிக்கொள்ளக் கூடிய இரைகள். நீ ஒன்றை பிடித்தால் மற்றவை ஓடிப் போகாது. நீ கழியை தண்ணீரிலிருந்து எடுக்கும்வரைக்கும்கூட நீ அங்கே இருக்கிறாய் என்பது அவற்றுக்குத் தெரியாது. அப்புறமும் கூடத் தெரியாது. மனித சுபாவத்தைப் பற்றிய பாடத்தை அவை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன,பேரனே, நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாடம். மீன்களுக்கு இடையில் விழும் எல்லாக் கழிகளும் கவ்விப் பிடிக்க வேண்டியவை அல்ல. சில சமயம் தவறான கழியைப் பிடிப்பது உன்னை உன்னுடைய முடிவுக்கே கொண்டுபோய் விடலாம். எனவே, என் அன்பானவனே, எந்தக் கழியைப் பற்றிக் கொள்வது எதை விடுவது என்று எச்சரிக்கையுடன் யோசி. தகுதியான யுத்தங்களில் மட்டும் ஈடுபடு. மற்றவை உன்னைக் கடந்துபோக விடு. கழி உன்னைப் பலமாகத் தாக்கினாலும் அதை மறுபடியும் பற்றிக் கொள்ளாமலிருக்கக் கற்றுக்கொள். என் அன்பானவனே, என்னை மன்னித்து விடு''

கடிதத்தின் முடிவில் தாத்தா நான்கு வார்த்தைகளை எழுதியிருந்தார்.

''சின்கோ, நான் உன்னை நேசிக்கிறேன்''.

****

காலச்சுவடு இதழ் எண் 119 நவம்பர் 2009 இல் வெளியானது.

http://www.facebook.com/miropenkov

http://www.miroslavpenkov.com/bio.html

ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்

Saturday, April 2, 2011

விஷமருந்தி இறந்த பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

தமிழில்: சுகுமாரன்

நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி.புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வாடை இருக்கிறது என்பதைத்தான். அவர் அதை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும்  யாருக்கும் புரியாது. பியூனஸ் அயர்சிலிருந்து வரும் அந்தக் கப்பல் போர் முடிந்த பின்பு முதல்முறையாக சொந்த நாட்டுக்குத் திரும்பும் இத்தாலியர்களால் நிரம்பியிருந்தது. எனினும் எழுபத்திரண்டாம் வயதில் உறவினர்களையும் சொந்த மண்ணையும் விட்டு கொந்தளிக்கும் கடலில் பதினெட்டு நாட்கள் garcia-marquez-300x210 பயணம் செய்த அவருக்கு பெரும் தனிமையோ பயமோ இழப்புணர்வோ எதுவும் தோன்றவில்லை.

விடியற்காலையிலிருந்தே கரை விளக்குகள் தெரிந்து கொண்டிருந்தன. பயணிகள் வழக்கத்தைவிடச் சீக்கிரமாக எழுந்திருந்தார்கள். புத்தாடைகளை அணிந்துகொண்டு கரையிறங்கியதும் நேரக்கூடிய நிச்சமின்மைகளை யோசித்து மனம் கனத்துக்கொண்டிருந்தார்கள். அதனால் கப்பல் தளத்தில் அந்தக் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டும் மொத்தப் பயண நாட்களில் கிடைக்காமற்போன அசலான ஞாயிற்றுக் கிழமைத்தனம் வாய்த்திருந்தது. திருப்பலி பூசையில் கலந்துகொண்ட வெகு சிலரில் திருமதி.புருடென்ஷியா லினெரோவும் ஒருவராக இருந்தார். ஏறக்குறைய இரங்கலுக்குரிய உடைகள் அணிந்து கப்பலில் நடமாடிக்கொண்டிருந்த அவர் வழக்கத்துக்கு மாறாக, இன்று கெட்டியானதும் தளர்ந்ததுமான பழுப்பு நிற ஆடையை அணிந்திருந்தார். புனித பிரான்சிசைப் போல ஒரு கயிறையும் இடுப்பில் கட்டியிருந்தார். புனித யாத்திரிகருடையது போலத் தோற்றம் தராத புதிய முரட்டுத் தோல் செருப்புகளை அணிந்திருந்தார். அது ஒரு முன்னோட்டமாக இருந்தது. ரோமாபுரிக்குப்போய் போப்பாண்டவரைத் தரிசிக்கக்கூடிய பயணம் தனக்கு ஆசீர்வதிக்கப்படுமானால் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் பாதத்தை மறைக்கும் உடைகளையே அணிவேன் என்று கடவுளுக்கு அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த ஆசீர்வாதம் இப்போதே கிடைத்து விட்டதாகவும் நினைத்தார். திருப்பலி பூசை முடிந்தவுடன் கரீபியக் கடலின் புயற்காற்றுகளை சமாளிக்கும் தைரியத்தைக் கொடுத்ததற்கு நன்றிக்கடனாக பரிசுத்த ஆவிக்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். ரியோஹாச்சாவில் காற்று வீசியடிக்கும் வீட்டில், இப்போதும் தன்னைப் பற்றி நினைத்துக் கனவு கண்டு உறங்கும் ஒன்பதுபிள்ளைகளுக்காகவும் பதினான்கு பேரக் குழந்தைகளுக்காகவும் அவர் பிரார்த்தனை செய்துகொண்டார்.

காலையுணவை முடித்துக்கொண்டு மேல்தளத்துக்குப் போனபோது கப்பல் வாழ்க்கையே மாறியிருந்தது.ஆண்டிலிசிலிருக்கும் வசீகரமான சந்தையிலிருந்து இத்தாலியர்கள் வாங்கிக் குவித்த சாமான்கள் நடன அறையில் அடுக்கப்பட்டிருந்தன. மதுவருந்தும் அறையில் பெர்னாம்புக்கோவிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்காக்கஸ் குரங்கை அடைத்து வைத்திருக்கும் ஒரு வார்ப்பிரும்புக் கூண்டும் இருந்தது.ஆகஸ்ட் மாததொடக்கத்தின் நேர்த்தியான காலைப்பொழுது அது.வெளிச்சம் ஒரு புனிதமான வெளிப்படுத்தல் என்று தோன்றச் செய்கிற போருக்குப் பிந்தைய அருமையான ஞாயிற்றுக்கிழமை.சலனமில்லாத நீரில்  நோயாளியின் கடினமான சுவாசம்போல அந்த பெரிய கப்பல் நகர்ந்து கொண்டிருந்தது.அஞ்சௌ பிரபுக்களின் கோட்டை மங்கலான உருவமாக அடிவானத்தில் தெரியத் தொடங்கியது. ஆனால் கப்பல்தளத்தில் நின்றிருந்த பயணிகளிடம் தொலைவில் தெரிந்த பரிச்சய முகங்களை அடையாளம் கண்டு கொண்ட பாவனை இருந்தது.சில பயணிகள் தெளிவாகத் தென்பட முடியாதவர்களுக்கு நேராக விரல்களைச் சுட்டிக்காட்டி தெற்கத்திய மொழிகளில் மகிழ்ச்சியுடன் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். கப்பல் பயணம் முழுவதும் எல்லாருடனும் நட்பு பாராட்டியிருந்த திருமதி. புருடென்ஷியா லினெரோவுக்கு- (பெற்றோர் நடனத்தில் பங்கேற்றிருக்கும்போது குழந்தைகளைக் கவனித்துக் கொண்டார், கப்பலின் தலைமை அதிகாரியின் சட்டையில் பித்தானைத் தைத்துக் கொடுத்தார்) - திடீரென்று அவர்கள் எல்லாரும் அந்நியர்களாகவும் மாறிப்போனவர்களாகவும் தெரிந்தார்கள். இந்த வெப்ப மண்டலத்தில் தோன்றிய வீட்டைப் பிரிந்த ஏக்கத்திலிருந்து தப்பிக்க அவருக்கு உதவிய கூட்டுணர்வும் மானுட இதமும் மறைந்து போயிருந்தன .கரை கண்ணில்பட்டதும் கடலுடன் தோன்றியிருந்த முடிவற்ற காதல் முடிந்து போனது. இத்தாலியர்களின் வாயாடித்தனம் பற்றி திருமதி.புருடென்ஷியா லினெரோவுக்கு அதிகம் தெரியாது. பிரச்சனையின் காரணம் கிடப்பது மற்றவர்களின்மனதிலல்ல;  தன்னுடைய இதயத்தில்தான் என்று நினைத்தார்.சொந்த ஊருக்குத் திரும்புகிறவர்களின் மத்தியில் தான் மட்டுமே வெளிநாட்டுப் பயணி என்று நினைத்தார்.ஒவ்வொரு கப்பல் பயணமும் இப்படித்தான்இருக்கும் என்றும் யோசித்தார்.கப்பல் தளத்தில் கம்பி மீது சாய்ந்து கொண்டு கடலின் ஆழத்தைப் பார்த்தபடி அதில் மூழ்கி மறைந்த உலகங்களைப் பற்றி யோசித்தார்.வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு வெளிநாட்டுக்காரியாக இருப்பதன் வேதனையை உணர்ந்தார்.திடீரென்று பக்கத்தில் நின்றிருந்த அழகிய பெண்ணின் கூச்சல் அவரை நிலைகுலையச் செய்தது.

''அம்மா அம்மா இங்கே பாருங்கள்'' என்று கடல் நீரைச் சுட்டிக் காட்டிக் கத்தினாள்.

அது மூழ்கி இறந்துபோன ஒருவனின் பிணம். திருமதி. புருடென்ஷியா லினெரோ பார்த்தார்.பிணம் மல்லாந்து கிடந்தது.நடுத்தர வயதினன்.வழுக்கைத் தலை.விடியற் காலை வானத்தின் நிறத்தில் திறந்து கிடந்த சந்தோஷமான கண்கள். மாலை விருந்துக்குப் போகிறவனின் உடையணிந் திருந்தான். விலை உயர்ந்தஷூக்களைப் போட்டிருந்தான்.சூட்டில் ஒரு வாடாத கார்டேனியாப் பூ செருகியிருந்தது.வலது கையில் பரிசளிப்புத்தாள் சுற்றிய ஒரு சதுரமான பொட்டலத்தை பிடித்திருந்தான்.வெளிறிய இடதுகை விரல்கள் டையின் முடிச்சைப் பற்றியிருந்தன.மரணவேளையில் அவனுக்குப் பற்றிக்கொள்ளக் கிடைத்தது அதுமட்டுமாக இருக்கலாம்.

''ஏதாவது திருமண விருந்தில் கலந்துகொண்டிருக்கும்போது தவறி விழுந்திருக்கலாம். கோடைக்காலங்களில் அப்படி நடப்பது இங்கே சாதாரணம்'' என்று கப்பல் அதிகாரிகளில் ஒருவர் சொன்னார்.

அந்தக் காட்சி தற்காலிகமானதாக இருந்தது.ஏனெனில் அதற்குள் கப்பல் உட்கடலுக்குள் நுழைந்திருந்தது.தவிர துக்கந்தராத வேறு சில விஷயங்கள் பயணிகளின் கவனத்தைப் பின்னுக்கு இழுத்திருந்தன. ஆனால்,திருமதி.புருடென்ஷியா லினெரோ இறந்துபோன அந்த மனிதனைப் பற்றியும் அவனுடைய நீளமான கோட்டு அலைகளில் மோதிக்கொண்டிருந்ததைப் பற்றியும் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தார்.

கப்பல் துறைமுகத்துக்குள் நுழைந்ததும் உடைசலான ஒரு  படகு கப்பலின் மூக்கைப் பிடித்து இழுத்துக்கொண்டு போக வந்தது. யுத்தத்தில் நாசமடைந்து போயிருந்த ஏராளமான கப்பல்களின் சிதிலங்களாலும் படகுகளின்  சிதிலங்களாலும் கடல் நிரம்பி யிருந்தது.

துருப்பிடித்துக்கொண்டிருக்கும் சிதைவுகளுக்கிடையில் கப்பல் நகர்ந்தபோது தண்ணீர் எண்ணெய் வடிவமாக மாறியது. ரியோஹாச்சாவில் மத்தியான்னம் இரண்டு மணிக்கு அடிக்கிற வெயிலை விட உக்கிரமானவெப்பம்.குறுகிய கால்வாயின் மறுபக்கம் நேப்பிள்ஸ் நகரம் பதினோரு மணி வெயிலில் மின்னியது. நகரத்தின் கனவுத்தோற்றமுள்ள அரண்மனைகளும் பழைய சாயமடித்த குடிசைகளும் குன்றின் மேல் நெருக்கியடித்து நிற்பது தெரிந்தது.அப்போதுதான் கலங்கிய தண்ணீரிலிருந்து சகிக்க முடியாத துர்வாடை எழுந்தது.பின்னர் தன்னுடைய வீட்டு வாசலில் நின்றபோதுதான் அழுகிய நண்டுகளின் நாற்றம் அதுவென்று திருமதி.புருடென்ஷியா லினெரோவுக்குப் புரிந்தது.

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பயணிகள்  படகுத்துறையில் முண்டியடித்து நின்ற கூட்டத்தில் தங்களுடைய உறவினர்களை அடையாளம் கண்டார்கள்.அவர்களில் அதிகமும் நடுத்தர வயதைத் தாண்டிய பெரிய மார்பகங்கள் கொண்ட கிழவிகளாக இருந்தார்கள்.இரங்கலுக்குரிய ஆடைகள் அவர்களை மூச்சுத் திணறச் செய்வதாகத் தோன்றியது.அவர்களுக்கு மிக அழகான குழந்தைகள்

இருந்தார்கள். அவர்களும் எண்ணிக்கையில் அதிகம்.அவர்களின் இளம் கணவர்கள் உழைப்பாளிகளாக இருந்தார்கள்; மனைவி வாசித்த பிறகே பத்திரிகை வாசிக்கும் தொந்தரவு தராத ஜீவிகள்.கடுமையான வெக்கையிலும் கனவான்களான வழக்குரைஞர்கள்போல உடையணிபவர்கள்.

திருவிழா போலிருந்த அந்த ஆரவாரத்துக்கு இடையில் பிச்சைக்காரனின் மேற்சட்டை மட்டுமே அணிந்திருந்த கிழவன் தன்னுடைய கோட்டு பாக்கெட்டுகளிருந்து ஏராளமான கோழிக் குஞ்சுகளை இரண்டுக் கைகளாலும் எடுத்து சுற்றிலும் வீசினான். நொடி நேரத்தில் அவை படகுத்துறை முழுவதும் பரவின. கீ கீ என்று கத்திக்கொண்டு பைத்தியம் பிடித்தவைபோல ஓடித் திரிந்தன.அது மந்திர வித்தை என்பதனால் மனிதர்களிடம் மிதிபட்டும் கோழிக்குஞ்சுகளில் பெரும்பாலானவை தப்பிப் பிழைத்தன.ஆனால் அது ஒரு மந்திரவித்தை என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. வித்தைக்காரன்  தன்னுடையை

தொப்பியைக் கவிழ்த்து வைத்தான்.ஆனால் கம்பிக்கு அப்பால் நின்றிருந்தவர்களில் ஒருவரும் அவனுக்கு ஒரு நாணயத்தைக் கூடப் போடவில்லை.

தன்னை கெளரவப்படுத்துவதற்காகத்தான் அந்த மந்திர ஜாலம் என்று நினைத்த திருமதி.புருடென்ஷியா லினெரோ அதில் வசீகரிக்கப்பட்டார். அதை ரசிக்க ஆரம்பித்தார். அதனால் படகுத்துறையையும் கப்பலையும் இணைக்கும் பாலம் எப்போது பொருத்தப் பட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை.திடீரென்று கடற்கொள்ளைக்காரர்களின் தாக்குதல் போல ஒரு மனிதப் பிரவாகம் கரையிலிருந்து கப்பலுக்குள் புகுந்தது. ஆரவாரக் கொண்டாட்டத்துடன் உள்ளே மோதி நுழைந்த வெங்காய வாடை வீசும் கூட்டம்  திருமதி. புருடென்ஷியா லினெரோவை திணறச் செய்தது.சுமைதூக்குவோர் முட்டி மோதிக்கொண்டு சாமான்களை எடுக்கும் சந்தடியில் கைகலப்பிலும் ஈடுபட்டார்கள். இந்த நெரிசலில் சில கோழிக்குஞ்சுகளுக்கு நேர்ந்த வெட்கம் கெட்ட ரீதியிலான மரணம் தன்னையும் பற்றிக்கொள்ளுமோ என்று அவர் பதறினார்.அந்த நேரத்தில்தான் மூலைகளில் இரும்புப் பட்டைபோட்ட தன்னுடைய மரப்பெட்டி மேல் பயமில்லாமல் உட்காரவும் ஆரம்பித்தார். இந்த அவிசுவாசிகளின் ஊரில் நிகழும் விபத்துகளுக்கும் சச்சரவுகளுக்கும் எதிராக அவர் நிறைய பிரார்த்தனை செய்தார்.சந்தடிகளெல்லாம் ஓய்ந்ததும் கப்பலின் தலைமை அதிகாரி அவரைத் தேடி வந்தார். நடன அரங்கில் கைவிடப்பட்டு மிச்சமிருந்த ஒரே நபர் அவராகவே இருந்தார்.

''இனி இங்கே யாரும் வரமாட்டார்கள் என்று தோன்றுகிறது'' என்று நட்பு நிரம்பிய குரலில் சொன்னார்.''நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?'' என்று கேட்டார்.

''நான் தூதருக்காகக் காத்திருக்கிறேன்'' என்றார் திருமதி. புருடென்ஷியா லினெரோ.

அது உண்மைதான்.அவர் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அவருடைய மூத்த மகன், அம்மா வரும் விவரத்தை நேப்பிள்ஸ் தூதராக இருக்கும்  தன்னுடைய நண்பனுக்குத் தந்தி மூலம் தெரிவித்திருந்தான். துறைமுகத்திலேயே அம்மாவைச் சென்று பார்க்கவேண்டுமென்றும் தொடர்ந்து ரோமில் அம்மாவின் பயணத்துக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டு மென்றும் கேட்டுக்கொண்டிருந்தான்.அம்மா வரும் கப்பலின் பெயரையும் வந்து சேரும் நேரத்தையும் தெரிவித்திருந்தான். தவிரவும் அம்மா புனித பிரான்சிசின் தோற்றத்தில் இருப்பார் என்பதையும் நினைவு படுத்தியிருந்தான். ஏற்கனவே செய்திருந்த இந்த ஏற்பாடுகளில் எந்த சமரசத்துக்கும் இடமில்லாமலிருந்தது. எனவே கப்பற் பணியாளர்களின் பகலுணவு இடைவேளை நெருங்கியிருந்த போதும் தலைமை அதிகாரி இன்னும் சிறிது நேரம் அவர் அங்கேயே உட்கார்ந்திருக்க அனுமதித்தார். அப்போதே நாற்காலிகளையெல்லாம் மேஜைமீது எடுத்து அடுக்கி முதல் தளத்தின் தரையைக் கழுவிச் சுத்தம் செய்யத் தொடங்கி யிருந்தார்கள்.  ஈரமாகி விடாமலிருக்க புருடென்ஷியாவின் பெட்டியை அவர்கள்  பல இடங்களிலும் மாற்றி மாற்றி வைக்க வேண்டியிருந்த்து. எந்த உணர்ச்சி மாற்றமும் இல்லாமல் திருமதி. புருடென்ஷியா லினெரோ இடம் மாறி இடம் மாறி  உட்கார்ந்து தன்னுடைய பிரார்த்தனையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். கடைசியில் பணியாளர்கள் அவரை வெளியே லைஃப் போட்டுகளுக்கு மத்தியில் உட்காரவைத்தார்கள். இரண்டு மணி வாக்கில் தலைமை அதிகாரி மறுபடியும் அவரை அங்கே பார்த்தார்.முரட்டு உடையணிந்து வியர்வையில் ஊறி ஜெப மாலையை உருட்டிக் கொண்டிருந்த அவருக்கு நம்பிக்கை மறைந்து போயிருந்ததது. அழாமலிருக்க அதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

''நீங்கள் இப்படிப் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதில் பயனில்லை'' என்று முன்பிருந்த தோழமை வறண்டுபோன குரலில் அதிகாரி சொன்னார்.

''ஆகஸ்டு மாதத்தில் கடவுள்கூட விடுமுறையில் போய்விடுவார்'' என்றார்.

வெயில் காலத்தில் இத்தாலியில் சரி பாதி மக்களும் கடற் கரையில்தான் இருப்பார்கள்; குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் என்று சொன்னார் அதிகாரி. பொறுப்பை வைத்துப் பார்த்தால் தூதர் விடுமுறையில் போயிருக்க முடியாது.எனினும் திங்கள் கிழமை வரை அவருடைய அலுவலகம் திறந்திருக்க வாய்ப்பில்லை.அதனால் திருமதி.புருடென்ஷியா லினெரோ நியாயமாகச் செய்யக்கூடியது ஏதாவது ஒரு ஹோட்டலில் அறையெடுத்து இரவு நிம்மதியாகத் தூங்கிவிட்டு மறுநாள் தூதருடன் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுவது மட்டுமே. தொலைபேசிக் குறிப்பேட்டில் நிச்சயமாக அவருடைய எண் இருக்கும்.இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வதைத் தவிர திருமதி. புருடென்ஷியாவுக்கு  வேறு வழியில்லை.இமிக்ரேஷன்,கஸ்டம்ஸ், அந்நியச் செலாவணி எல்லாவற்றிலும் அந்த அதிகாரி அவருக்கு ஒத்தாசை செய்தார். ஒரு டாக்சி வரவழைத்துக் கொடுத்ததுடன் அவரை கௌரவமான ஒரு ஹோட்டலில்  கொண்டுபோய் விடவேண்டுமென்றும் டிரைவரிடம் சொல்லி யிருந்தார்.

ஒரு சவ ஊர்தியின் லட்சணங்களுடனிருந்த அந்த டாக்சி ஆள் நடமாட்டமில்லாத தெருக்கள் வழியாக ஊர்ந்து நகர்ந்தது.அந்த ஆவி நகரத்தில் தானும் டிரைவரும் மட்டுமே உயிரோடிருப்பதாக திருமதி. புருடென்ஷியா லினாரோவுக்குத்  தோன்றியது. தெருக்களில்  கொடிக்கம்பிகளில் ஆவிகள் கட்டித் தொங்க விடப்பட்டிருப்பதாகத் தோன்றியது. இத்தனை ஆவேசத்துடனும் வாயாடித்தனத்துடனும் பேசுகிறவன் போப்பாண்டவரைப் பார்ப்பதற்காகக் கடல் கடந்து வந்திருக்கும் தனிமைப் பயணியான தன்னைத் துன்புறுத்தமாட்டான் என்று அவர் நினைத்தார்.

வளைந்து நெளிந்து கிடக்கும் தெருக்கள் வழியான பயணம் அவர்களை மறுபடியும் கடற்கரைக்கே கொண்டுவந்து சேர்த்தது. பளீரென்ற நிறங்களில் சாயமடிக்கப்பட்ட சிறிய ஹோட்டல்கள் இருந்த பளீரென்ற பிரகாசமுள்ள கடற்கரை வழியாகக் கார் நகர்ந்தது.அந்த ஹோட்டல்கலளில் எதன்  முன்னாலும் நிற்காமல் ஓடிய கார் பெரும் பகட்டெதுவுமில்லாத ஒரு ஹோட்டல் வாசலில் நின்றது.ஏராளமான பனை மரங்களும் பச்சை நிறப் பெஞ்சுகளுமிருந்த பூங்காவின் மத்தியில் இருந்தது அந்த ஹோட்டல்.டிரைவர் பெட்டியைக் காரிலிருந்து எடுத்து நிழல் படர்ந்த நடைபாதையில் வைத்தான்.திருமதி புருடென்ஷியா லினெரோவின் சந்தேகத்தைப் பார்த்து அதுதான் நேப்பிள்ஸில் மிக கௌரவமான ஹோட்டல்  என்று உறுதியாகச் சொன்னான்.

அழகானவனும் இரக்கமுள்ளவனுமான ஒரு பணியாள் பெட்டியைத் தோளில் ஏற்றி வைத்துக் கொண்டு அவரை ஹோட்டலுக்குள்ளே அழைத்துச் சென்றான். அவரை அழைத்துக் கொண்டு லிப்டில் நுழைந்தவன் ஒரு புக்கினி பாடலை உரக்கப் பாடத் தொடங்கினான். புதுப்பிக்கப்ப்பட்ட ஒன்பது தளங்களிலும் ஒன்பது ஹோட்டல்கள் இருக்கும் கௌரமான கட்டடம் அது. லிப்ட் சட்டென்று உயரத்தொடங்கியதும் திருமதி.புருடென்ஷியா லினெரோவுக்கு தானொரு கோழிக் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதுபோன்ற மனக் குழப்பம் ஏற்பட்டது.எதிரொலி எழும்பும் சலவைக்கல் படிக்கட்டுகளுக்கு மத்தியில் மேலே போகும்போது வெவ்வேறு விதமான மனிதர்களை அவர்களின் தனிமையான சூழ்நிலைகளில் அவரால் பார்க்க முடிந்தது.வீட்டுக்குள்ளே இருப்பதனால் கிழிந்த உள்ளாடைகள் அணிந்திருப்பவர்களையும் ஏப்பமிடுபவர்களையும் எல்லாரையும். லிப்ட் மூன்றாவது மாடியில் ஒரு உலுக்கலுடன் நின்றது. பணியாள் தன்னுடைய பாட்டை நிறுத்திவிட்டு லிப்டின் கதவைத் திறந்தான்.குனிந்து வணங்கி அவருடைய இடம் வந்துவிட்டது என்றான்.

ஹோட்டலின் தளத்தில் வர்ணக் கண்ணாடிகளாலும் நிழற் செடிகள் வைத்திருக்கும் தாமிர ஜாடிகளாலும் அலங்கரிக் கப் பட்டிருந்த மரத்தாலான கௌண்டருக்குப் பின்னால் கிறக்கமாகத் தெரிகிற ஒரு பதின் பருவத்தினனைப்பார்த்தார்.பார்த்த உடனேயே அவருக்கு அவனைப் பிடித்துப் போயிர்று. ஏனெனில் அவருடைய கடைசிப் பேரனைப் போல அவனுக்கும் அழகான சுருட்டை முடியிருந்தது. ஒரு வெண்கலத் தகட்டில் பதிக்கப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் பெயரும் அவருக்குப் பிடித்திருந்தது.அங்கே பரவியிருந்த கார்பாலிக் அமிலத்தின் வாசனை பிடித்திருந்தது. அங்கே தொங்க விடப் பட்டிருந்த பெரணிச் செடிகளைப் பிடித்திருந்தது.அங்கே நிலவிய அமைதி, சுவர்க் காகிததில் செய்திருந்த சித்திர வேலைப்பாடுகள் எல்லாம் அவருக்குப்பிடித்திருந்தது.ஆனால் லிப்டை விட்டு வெளியே வந்ததும் அவருடைய மனம் அமுங்கிப் போனது. குட்டைச் சராயும் கடற்கரைச் செருப்பும் அணிந்த ஆங்கிலேய சுற்றுலாப் பயணிகளின் கூட்டமொன்று நீண்ட வரிசையிலிருந்த சாய்வு நாற்காலிகளில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். பதினேழு பேர்.பதினேழு பேரும் ஒரே ஆளின் பதினேழு பிரதிபிம்பங்கள் போலக் கிடந்தார்கள். ஒரேபோலத் தோற்றமளிக்கும் எல்லாரையும் திருமதி.புருடென்ஷியா லினெரோ எந்த வித்தியாசமும் தென்படாமல் ஒருமுறை பார்த்தார். கசாப்புக் கொட்டடியில் வரிசையாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட பன்றி மாமிசம்போல வெளிர் சிவப்பான அந்தக் கால்கள் மட்டுமே அவருடைய பார்வையில் பட்டன.கௌண்டரை நோக்கி அடுத்த எட்டு வைக்காமல் லிப்ட் பக்கமாகத் திரும்பி நடந்தார் அவர்.

''வேறு மாடிக்குப் போகலாம்'' என்றார்.

''சாப்பாட்டு அறையுள்ள ஒரே இடம் இதுதான்'' என்றான் பணியாள்.

''அது பரவாயில்லை'' என்றார்.

பணியாள் அதை ஏற்றுக்கொண்டதாக சமிக்ஞை செய்துவிட்டு அவருடன் லிப்டில் நுழைந்து கதவை மூடினான். ஐந்தாம் தளத்திலிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சேரும்வரை மீதிப் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தான்.

அந்த ஹோட்டலில் எதுவும் சீராக இருக்கவில்லை. அதன் உரிமையாளர் அருமையாக ஸ்பானிஷ் மொழி பேசத் தெரிந்த ஸ்பிரிங்க் போன்ற நடுத்தர வயது பெண்மணி. ஹோட்டல் வரவேற்பறையில் யாரும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க வில்லை.அங்கே சாப்பாட்டு அறையும் இருக்கவில்லை. ஆனால் அங்கே தங்கியிருப்பவர்களுக்கு பக்கத்திலிருக்கும் உணவகத்திலிருந்து குறைந்த செலவில் உணவைக் கொண்டு வந்து தருவதற்கான ஏற்பாடுகளை ஹோட்டல் செய்திருந்தது. எனவே, அன்றைய இரவை அங்கே கழிப்பதென்றுதிருமதி. புருடென்ஷியா லினெரோ தீர்மானித்தார்.ஹோட்டல் உரிமையாளரின் பேச்சும் இணக்கமும் மட்டுமல்ல வரவேற் பறையில் படுத்துத் தூங்கும் எந்த ஆங்கிலேயனின் சிவந்த தொடைகளையும் பார்க்க வேண்டியிராது என்பதும் அவரை அங்கேயே தங்கிவிடத் தூண்டியது.

பிற்பகல் மூன்று மணியானதும் அவர் ஜன்னல் திரைகளை இழுத்து விட்டார்.அறைக்குள் மங்கலான வெளிச்சம் மறைவான தோப்பின் குளிர்ச்சியைத் தேக்கிவைத்திருந்தது.அழுவதற்குப் பொருத்தமான இடம். அறைக்குள் தனித்து விடப்பட்டதும் திருமதி.புருடென்ஷியா லினெரோ கதவை மூடித் தாழிட்டார்.குளியலறைக்குள் புகுந்து அன்றைக்கு முதன் முதலாக ஒன்றுக்கிருந்தார். மெல்லிய பீச்சலாக இடைவெளிவிட்டுப் பெருகிய மூத்திரக் கழிப்புக்குப் பிறகு அந்தப் பயணம் முழுவதும் அவர் இழந்து விட்டிருந்த சுயம் திரும்பக் கிடைத்ததுபோல உணர்ந்தார். அதன் பிறகு அவர் செருப்புகளைக் கழற்றினார். இடுப்பில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தார். அப்புறம் அகலமான அந்த இரட்டைக் கட்டிலில் இடது பக்கமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெள்ளத்தைத் திறந்து விட்டார்.

ரியோஹாச்சாவை விட்டு அவர்  வெளியே தங்குவது இதுதான் முதன் முறை. பிள்ளைகள் திருமணம் முடிந்து தனியாக வாழத் தொடங்கிய பிறகும், செருப்புப் போடாத இரண்டு இந்தியப் பெண்களின் உதவியுடன் நடைப் பிணமாகக் கிடந்த கணவரைப் பராமரித்தபோதும் அவர் தனியாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் முதல் முறையாக வீட்டை விட்டு விலகியிருப்பது இப்போதுதான். அவர் வாழ்நாளில் நேசித்த ஒரே ஆண் மகனும் முப்பது வருடங்களுக்கு மேலாக நினைவிழந்து கிடப்பவருமான கணவனின் உடல் கிடந்த படுக்கையறைக்கு எதிரிலிருந்த அறையில்தான் அவருடைய வாழ்க்கையின் பாதியும் கழிந்திருந்தது. இளமைக் காலத்தில் காதலைக் கொண்டாடிய அதே அறையில் அதே ஆட்டுத்தோல் படுக்கையில் அந்த உடல்கிடந்திருந்தது.

கடந்த அக்டோபரில் உயிருள்ள பிணமாகக் கிடந்த அவர் திடீரென்று கண் விழித்தார்.குடும்ப நபர்களை இனங்கண்டு கொண்டார்.ஒரு புகைப்படக்காரரை அழைத்துவரச் சொன்னார். துருத்தி வைத்த உலை மாதிரியான பழைய காமிராவையும் வீட்டுக்குள் படமெடுப்பதற்கான மக்னீசியம் தகடையும் வைத்திருந்த ஒரு கிழவனை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.எந்த மாதிரிப் புகைப்sukumaran-3 படங்கள் எடுக்கவேண்டும் என்பதையும் நோயாளிதான் முடிவு செய்தார்.''வாழ்க்கை முழுவதும் அன்பையும் மகிழ்ச்சியையும் எனக்குக்கொடுத்த புருடென்ஷியாவுக்காக ஒன்று'' என்றார். முதலாவது மக்னீஷிய வெளிச்சத்தில் அந்தப் படம் எடுக்கப்பட்டது. ''என்னுடைய அருமை மகள்கள் புருடென்சிடாவுக்கும், நடாலியாவுக்குமாக இரண்டு''என்றார். அவையும் எடுக்கப்பட்டன.''அடுத்த இரண்டும் என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும். தங்களுடைய அன்பாலும் நியாய உணர்வாலும் இந்தக் குடும்பத்துக்கு உதாரணமாக இருப்பவர்கள்''.என்றார்.புகைப்படக்காரர் வீட்டுக்கு ஓடிப்போய் பிலிமும் காகிதமும் எடுத்து வரவேண்டியவரைக்கும் படமெடுப்பது நீண்டது. மாலை நான்கு மணியானதும் மக்னீஷியச் சுடரின் புகையும் புகைப்படமெடுப்பதற்காகவும் எடுத்த  புகைப்படங்களை வாங்குவதற்காகவும் நிரம்பியிருந்த  உறவினர்களின் கூட்டமும் படுக்கையறைக்குள்ளிருந்த காற்றை சுவாசிக்கமுடியாததாக்கியிருந்தது.அதற்குள் படுக்கையில் கிடந்த நோயாளிக்கு நினைவு தப்பியது. கப்பலின் மேல்தளத்திலிருந்து விடை பெறும் ஒருவரைப் போல ஒவ்வொருவருக்கும் கையசைத்து வாழ்விலிருந்து விடை பெற்றுக்கொண்டார்.

எல்லாரும் நம்பியதுபோல அவருடைய மரணம் அந்த விதவைக்கு ஆறுதலாக இருக்கவில்லை. நேர் மாறாக பெரும் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரை சமாதானப்படுத்த தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பிள்ளைகள் கேட்டார்கள். ரோமுக்குப் போய்ப் போப்பாண்டவரைப் பார்க்க விரும்புவதாக அவர் பதில் சொன்னார்.

''நான் தனியாகவே போய்க்கொள்ளுகிறேன்.புனித பிரான்ஸிசின் உடையில் .அப்படி ஒரு வேண்டுதல் இருக்கிறது'' என்று அவர்களிடம் தெரிவித்தார்.

கணவரைப் பராமரித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு மிஞ்சியிருந்த  ஒரே ஆறுதல் அழுவதிலுள்ள மகிழ்ச்சி மட்டுந்தான். கப்பலில் அவருடைய காபினைப் பகிர்ந்து கொண்டவர்களில் மார்செய்ஸ்வரை பயணம் செய்த இரண்டு கிளாரிசின் கன்னியாஸ்திரீகளும் இருந்தார்கள்.யாரும் பார்க்காமல் அவர் குளியலறைக்குப் போய் அழுவார். அதனால் ரியோஹாச்சாவை விட்டு வந்த பின்பு நேப்பிள்ஸ் ஹோட்டலுக்குள் புகுந்த பிறகே மனநிறைவுடன் அழ அவரால் முடிந்தது.அடுத்த நாளும் அவர் தொடர்ந்து அழுது கொண்டிருந்திருக்கலாம். ஆனால் மறுநாள் அவர் ரயிலில் ரோமுக்குப் போகவேண்டியிருந்தது. ஏழு மணிக்கெல்லாம் ஹோட்டல் உரிமையாளர் கதவைத் தட்டி தாமதம் செய்யாமல் பக்கத்திலுள்ள உணவகத்துக்குப் போகவில்லையென்றால் பட்டினி கிடக்கவேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தார்.

பணியாள் அவருடன் வந்தான்.கடலிலிருந்து மெல்லிய காற்று வீசத் தொடங்கியிருந்தது. ஏழு மணீ வெயிலிலும் சில குளியல் காரர்கள் கடற்கரையில் இருந்தார்கள்.திருமதி.புருடென்ஷியா லினெரோ செங்குத்தாகவும் குறுகலாகவும் இருந்த தெருக்களில் பணியாளைப் பின் தொடர்ந்தார்.ஞாயிற்றுக் கிழமை அரைத் தூக்கத்திலிருந்து நகரம் அப்போதுதான் விழிக்கத் தொடங்கி யிருந்தது. கடைசியில் நிழல் பரவியிருந்த குடில் போன்ற உணவகத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.மேஜைகளில் சிவப்புக் கட்டங்கள் போட்ட விரிப்புகள் இருந்தன.கூஜாக்களில் பூக்களைச் செருகி பூ ஜாடிகளாக வைத்திருந்தார்கள். அந்தக் காலை வேளையில் அவருடன் சாப்பிடுவதற்கு அந்த உணவகத்தின் பணியாட்களும் பணிப்பெண்களும் மட்டுமே இருந்தார்கள். பின்னால் ஒரு மேஜையருகில் அப்பாவிப் பாதிரியார் ஒருவர் வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு ரொட்டியைத் தின்று கொண்டிருந்தார்.திருமதி.புருடென்ஷியா லினெரோ நுழைந்ததும் எல்லாருடைய பார்வையும் அவருடைய தவிட்டு நிற உடை மீது பதிந்தது.ஆனால் அது அவரைப் பாதிக்கவில்லை. மற்றவர்களின் கேலியும் தன்னுடைய பாவ பரிகாரத்தின் பாகம் என்று அவருக்குத் தெரியும். ஆனால் அங்கே பார்த்த அழகான பணிப்பெண் அவருக்குள் இரக்கத்தை உண்டாக்கினாள்.அவள் அழகாக இருந்தாள். மாநிறம். அவள் பேச்சே பாட்டுப் பாடுவது போல இருந்தது.போருக்குப் பின் இத்தாலியில் நிலைமைகள் மோசமாகியிருக்கவேண்டும்.இல்லையென்றால் அவளைப் போன்ற ஒருத்தி எதற்காக உணவகத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்யவேண்டும்? ஆனாலும்  பூக்கள் நிரம்பிய அந்த குடில் அவருக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.பகல் நேரப் பதற்றங்கள் போக்கடித்திருந்த அவருடைய பசியைத் தூண்டி விட பே இலைகள் போட்ட ஸ்டூ வாசனையால் முடிந்தது. நீண்ட நாட்களில் முதல் முறையாக அவருக்கு அழவேண்டுமென்ற ஆசையில்லாமலிருந்தது.

இருந்தாலும் ஆசைப்பட்டதுபோல அவரால் சாப்பிட முடிய வில்லை. மாநிறமான அந்தப் பணிப்பெண் அன்பாகவும் பொறுமையாகவும் இருந்தபோதும் அவளுடன்  கருத்துப் பரிமாற்றம் நடத்த அவரால் முடியவில்லை என்பது ஒரு காரணம்.இன்னொரு காரணம் ரியோஹாச்சாவில் கூண்டுகளில் வைத்து வீட்டில் வளர்க்கப்படும் ஒருவகை  பாடும் பறவைகள்தான் அங்கே கிடைக்கும் மாமிச உணவாக இருந்தது. மூலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பாதிரியார் மொழி பெயர்ப்பாளராக மாறி அவருக்கு உதவினார். விஷயங்களை அவருக்குப் புரியவைக்க முயற்சி செய்தார்.ஐரோப்பாவில் அப்போதும் போர்க்கால நெருக்கடிகள் தீர்ந்து விடவில்லை என்றும் இந்தப் பறவைகளின் இறைச்சி சாப்பிடக் கிடைப்பதே அதிசயமென்றும் சொன்னார். ஆனால் அவர் அந்தத் தட்டைத் தள்ளி வைத்தார்.

''என்னைப் பொறுத்தவரை இதைச் சாப்பிடுவது என்னுடைய குழந்தைகளைத் தின்பதுபோல'' என்றார்.

அதனால் கொஞ்சம் சேமியா சூப்பையும் பன்றி மாமிசம் சேர்த்து வேகவைத்த பூசணித் துண்டுகளையும் கல் மாதிரி இருந்த ஒரு துண்டு ரொட்டியையும் அருந்தி திருப்திப்பட வேண்டியிருந்தது. அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பாதிரியார் அவருடைய மேஜைக்கருகில் வந்து தர்மத்தின் பேரால் தனக்கு ஒரு கப் காப்பி வாங்கித் தரும்படிக் கேட்டுக்கொண்டே அவரருகில் உட்கார்ந்தார். யூகோஸ்லாவியரான அவர் பொலிவியாவில் ஊழியம் செய்தவர்.

திக்கித் திக்கி ஸ்பானிய மொழி பேசினார்.திருமதி புருடென்ஷியா லினெரோவுக்கு அவர் எந்தவிதமான தெய்வாம்சமும் இல்லாத சாதாரண மனிதராகவே  தோன்றினார்.அவருடைய கைகள் பிய்ந்துபோன அசுத்தமான நகங்களுடன் அருவருப்பாக இருப்பதைக் கவனித்தார்.தவிர அவருடைய சுவாசத்தில் வெங்காய வாடை ஒரு குணம்போல நிரந்தரமாக இருந்தது.

இருந்தாலும் அவர் தேவ ஊழியம் செய்பவர்.அதுமட்டுமல்லாமல் வீட்டை விட்டு இவ்வளவு தொலைவில் தன்னுடைய மொழியில் பேசக் கூடிய ஒருவரைப் பார்த்ததே மகிழ்ச்சிக்குரியது என்று தோன்றியது.

தானியக் கிடங்குகளிலிருந்து வந்த இரைச்சல் அவர்களைச் சுற்றி வந்து தொந்தரவு செய்தும் அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். பக்கத்து மேஜைகளில் ஆட்கள் வந்து நிறைந்து கொண்டி ருந்தார்கள். திருமதி. புருடென்ஷியா லினெரோவுக்கு ஏற்கனவே இத்தாலியைப் பற்றி அபிப்பிராயம் உருவாகி விட்டிருந்தது. அவருக்கு இத்தாலி பிடிக்கவில்லை.அங்குள்ள ஆட்கள் கொஞ்சம் முறைகேடர்களா இருக்கிறார்கள் என்பது ஒரு காரணம். பாடும் பறவைகளைத் தின்கிறார்கள் என்பது இன்னும் கொஞ்சம் அதிகம். ஆனால் இறந்த மனிதனைத் தண்ணீரிலேயே மிதக்கவிடும்

தந்திர புத்திக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான காரணம்.

பாதிரியார் காப்பியுடன் திருமதி.புருடென்ஷியா லினெரோவின் செலவில் ஒரு கிராப்பாவையும் வாங்கிக் கொண்டு அவருடைய அபிப்பிராயம் மேலோட்டமானது என்பதைப் புரியவைக்க முயன்றார்.போர்க்காலங்களில்  நேப்பிள்ஸ் வளைகுடாக்களில் மிதக்கும் சடலங்களை கண்டுபிடித்து அடையாளம் காணவும் மரியாதையுடன் அடக்கம் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் இருக்கின்றன.

'' இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான் என்பதைநூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தாலியர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனால் அதை எவ்வளவு சிறப்பாக வாழ முடியுமோ அப்படி வாழ முயற்சி செய்கிறார்கள். அதனால் அவர்கள் வாயாடிகளாகவும் கணக்குப் பார்க்கிறவர்களாகவும் மாறிவிட்டார்கள்.அதே சமயம் அதுதான் அவர்கள் மத்தியில் கொடூரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறது'' என்று முடித்தார் பாதிரியார்.

''ஆனால் அவர்கள் கப்பலை நிறுத்தவே இல்லையே?'' என்றார் திருமதி. புருடென்ஷியா லினெரோ.

''துறைமுக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதுதான் அவர்கள் வேலை. இதற்குள் அவர்கள் அந்த சடலத்தை எடுத்து கடவுளின் பெயரால் நல்லடக்கம் செய்திருப்பார்கள்'' என்றார் பாதிரியார்.

இந்த விவாதம் இருவர் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. திருமதி.புருடென்ஷியா லினெரோ சாப்பிட்டு முடித்திருந்தார்.அப்போதுதான் எல்லா சாப்பாட்டு மேஜைகளும் நிறைந்திருப்பதை உணர்ந்தார். பக்கத்திலிருந்த  மேஜைகளில் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த  சுற்றுலாப் பயணிகள் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சில ஜோடிகள் உணவருந்தாமல் முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.பின்னால் பாருக்குப் பக்கத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் பகடை விளையாடிக்கொண்டும் நிறமில்லாத ஒயினைக் குடித்துக்கொண்டுமிருந்தார்கள். அந்த சுவாரசியமில்லாத நாட்டுக்கு வர தனக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது என்று திருமதி.புருடென்ஷியா லினெரோ புரிந்து கொண்டார்.

''போப்பாண்டவரைப் பார்ப்பது சிரமமென்று நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார்.

''கோடைக்காலமாக இருந்தால் அது சுலபமாக இருந்திருக்கும்'' என்றார் பாதிரியார். காண்டோல்ஃபோ கோட்டையில் கோடைக் காலத்தைக் கழிப்பதற்காக போப்பாண்டவர் வந்திருந்தார். ஒவ்வொரு புதன் கிழமையும் பிற்பகலுக்கு அப்புறம் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வரும் புனித யாத்திரீகர்களுக்கு அவர் பொது தரிசனம் கொடுப்பது வழக்கம் என்று சொன்னார் பாதிரியார்.அதற்கான அனுமதிக் கட்டணம் ரொம்ப மலிவு: இருபது லிராக்கள்.

''ஒருவரின் பாவ மன்னிப்பைக் கேட்க எவ்வளவு கட்டணம் ஆகும்?'' என்று கேட்டார் திருமதி.புருடென்ஷியா லினெரோ.

''பரிசுத்த தந்தையானவர் யாருடைய பாவ மன்னிப்பையும் கேட்க மாட்டார்'' என்றார்.கொஞ்சம்  புரளிபோல'' அரசர்கள் போன்ற சிலரைத் தவிர'' என்றும் சொன்னார்.

''தூரத்திலிருந்து வரும்  என்னைப் போன்ற ஒரு அப்பாவியை உதாசீனம் செய்வது ஏனென்று எனக்குப் புரியவில்லை'' என்றார்.

''சில அரசர்கள், அவர்கள்  அரசர்களாக இருந்தபோதும் காத்திருந்தே இறந்து போயிருக்கிறார்கள்'' என்றார் பாதிரியார். பிறகு,''சொல்லுங்கள் புனிதத் தந்தையை நேரில் பார்த்து பாவ மன்னிப்புக் கோருவதற்காகவே  தனியாக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்.அப்படியென்றால் நீங்கள் கொடிய பாவம் செய்திருக்க வேண்டும். இல்லையா?'' என்று கேட்டார்.

திருமதி.புருடென்ஷியா லினெரோ ஒரு நொடி யோசித்தார்.முதல் முறையாக அவர் புன்னகைப்பதைப் பாதிரியார் பார்த்தார்.

''தேவ மைந்தனின் தாயே! அவரை சும்மா பார்த்தாலே எனக்கு திருப்தி '' என்று உயிரிலிருந்து எழுந்தது போன்ற பெருமூச்சுடன் சொன்னார். ''அது என்னுடைய வாழ்நாள் கனவு''

உண்மை என்னவென்றால் அவர் இன்னும் பயத்துடனும் துக்கத்துடனும்தான் இருந்தார்.அந்த உணவகத்தை விட்டு வெளியேற விரும்பினார், அதேபோல தாமதமில்லாமல் இத்தாலியைவிட்டும். எதிர்பார்ப்பில் ஆழ்ந்திருக்கும் அந்த பெண்மணியிடமிருந்து தனக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைத்தாயிற்று என்று பாதிரியார் யோசித்திருக்க வேண்டும். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு இன்னொரு மேஜைக்கு அருகில்போய் அங்கிருந்தவர்களிடம் தர்மத்தின் பேரால் தனக்கு ஒரு கப் காப்பி வாங்கித் தரும்படி இரந்து கொண்டிருந்தார்.

உணவகத்திலிருந்து வெளியே வந்தபோது திருமதி.புருடென்ஷியா லினெரோ மாறிப் போயிருந்த நகரத்தைப் பார்த்தார்.ஒன்பது மணிக்கும் இவ்வளவு சூரிய வெளிச்சம் இருப்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.அதே நேரம் மாலைக் காற்றை அனுபவிக்க தெருக்களில் இறங்கியிருந்த கூட்டத்தின் ஆரவாரம் அவரைப் பயமுறுத்தியது.ஏராளமான வெஸ்பா ஸ்கூட்டர்களின் கிறுக்குத்தனமான இயந்திர ஓசைகள் வாழ்க்கையை சகிக்க முடியாததாக்கின.திறந்த மார்பைக் காட்டியபடி அவற்றை ஓட்டும் ஆண்களின்  இடுப்பைக் கட்டிக்கொண்டு அழகிகள் உட்கார்ந்திருந்தார்கள். தொங்கிக் கொண்டிருக்கும் பன்றிஇறைச்சிகளுக்கும் தர்பூசணிப் பழங்கள் அடுக்கியிருந்த மேஜைகளுக்கும் நடுவில் தாறுமாறாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.

அது ஒரு திருவிழாக் கோலமாக இருந்தது.ஆனால் திருமதி. புருடென்ஷியா லினெரோவுக்கு அது ஒரு அபாயமாகத் தோன்றியது.அவர் வழி தவறி ஒழுங்கீனமான ஒரு தெருவுக்கு வந்து சேர்ந்திருந்தார். வாசலில் சிவப்பு விளக்குகள் பொருத்திய ஒரே மாதிரியான வீடுகள்; அவற்றின் முன்னால் ஒப்பனை செய்து மௌனமாகக் காத்திருக்கும் பெண்கள்.அந்தக் காட்சி அவரை பயத்தில் நடுங்கச் செய்தது. நன்றாக உடையணிந்து கையில் கனமான மோதிரம்  போட்டு டையில் வைரம் பதித்திருந்த ஒருவன் சிறிது தூரம் அவரைப் பின் தொடர்ந்து வந்தான். முதலில் இத்தாலியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலுமாக என்னவோ சொல்லிக்கொண்டே வந்தான்.பதில் கிடைக்காமல் போனதும் சட்டைப் பையிலிருந்து ஒரு கத்தை பட அட்டைகளை எடுத்து அதில் ஒன்றை அவரிடம் காட்டினான்.அதை ஒரு தடவை பார்த்ததுமே தான் நரகத்தில் நடந்துகொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார்.

பெரும் பயத்துடன் அவர் அங்கேயிருந்து ஓடினார். தெரு முடிகிற இடத்தில் அந்தி மாலைக் கடல் தெரிந்தது.ரியோஹாச்சா துறைமுகத்தில்  பழக்கப்பட்டிருந்த அதே அழுகிய நண்டுகளின் வாடை துளைத்தது.அத்தோடு அவருடைய இதயம் அதன் இடத்துக்குத் திரும்பியதாகத் தோன்றியது.

ஆள் நடமாட்டமில்லாத கடற்கரையோரமிருக்கும் சாயமடித்த ஹோட்டல்களையும் சவ ஊர்திகளையும் விரிந்த வானத்தில் முதல் நடத்திர வைரத்தையும் அவரால் அடையாளம் காண முடிந்தது.நடுக்கடலில் அவர் வந்த பிரம்மாண்டமான கப்பல் தனியாக நின்றுகொண்டிருந்தது.அந்தக் கப்பலுக்கும் தனக்கும் இப்போது எந்தத் தொடர்புமில்லை என்று அவருக்குத் தோன்றியது. தெரு முனைக்கு வந்ததும் இடது பக்கமாகத் திரும்பப் பார்த்தார்.ஆனால் மக்கள் கூட்டத்தை படை வீரர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.அவருடைய ஹோட்டல் கட்டடத்தின் முன்னால் வரிசையாக ஏராளமான ஆம்புலன்ஸ் வண்டிகள் கதவைத் திறந்து வைத்துக் காத்திருந்தன.

கால் கட்டை விரலில் ஊன்றி நின்று ஆட்களின் தோள்களுக்கு மேலிருந்து அவர் எட்டிப்பார்த்தார்.அந்த ஆங்கிலேயப் பயணிகளை திருமதி.புருடென்ஷியா லினெரோ மறுபடியும் பார்த்தார்.அவர்களை ஒவ்வொருவராக ஸ்டிரெட்சரில் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அசைவில்லாமலிருந்தாலும்கௌரவமானவர்களாக இருந்தார்கள்.இரவு உணவுக்கான உடையில் ஒருவரே பல மடங்காக இருப்பதுபோல இருந்தார்கள். பிளானல் டிரௌசர்கள், குறுக்குக் கோடுகள் போட்ட டை, டிரினிட்டி கல்லூரியின் இலச்சினை பதித்த அடர்ந்த நிறக் கோட்டுகள்.அவர்களை வெளியே கொண்டுவருவதைப் பார்த்து அண்டையிலிருப்பவர்கள் தங்களுடைய மாடிகளிலிருந்தும், தடுத்து  நிறுத்தப்பட்ட மக்கள் தெருவிலிருந்தும் எண்ணிக் கொண்டிருந்தார்கள் – ஒரு விளையாட்டு அரங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது போல பதினேழு சடலங்கள்.ஒரு ஆம்புலன்சில் இரண்டு என்று ஏற்றப்பட்ட பின்பு சைரன் ஒலித்துக் கொண்டு ஆம்புலன்சுகள் நகர்ந்தன.

மனம் பேதலிக்கச் செய்யும் இந்த அனுபவங்களால் அதிர்ந்துபோன திருமதி.புருடென்ஷியா லினெரோ, மற்ற ஹோட்டல்களில் தங்கியிருக்கும் விருந்தினாரால் நிரம்பிய லிப்டில் ஏறி மேலே போனார். லிப்டுக்குள்ளே இருந்தவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டிருந்தார்கள்.மூன்றாவது தளத்தைத் தவிர எல்லாத் தளத்திலும் ஆட்கள் இறங்கினார்கள். திறந்து கிடந்த அந்த தளத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கௌண்டருக்கு அருகில் யாரும் இல்லை.அவர் பார்த்தபோது வெளிர்சிவப்புத் தொடைகள்  தெரிய பதினேழு ஆங்கிலேயர்கள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த வரவேற் பறையின் சாய்வு நாற்காலிகளில் இப்போது யாருமில்லை. ஐந்தாவது மாடியில் ஹோட்டல் உரிமையாளர் கட்டுப்படுத்த முடியாத ஆவேசத்துடன் விபத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

''எல்லாரும் இறந்து போய்விட்டார்கள்'' என்று ஸ்பானிய மொழியில் சொன்னாள். '' அவர்கள் செத்துப்போனது இரவு உணவுடன் சாப்பிட்ட சிப்பி சூப்பில் விஷம் கலந்திருந்ததனாலாம். யோசித்துப் பாருங்கள். ஆகஸ்டு மாதத்தில் சிப்பி சூப்''

அந்தப் பெண்மணி அறைச் சாவியைதிருமதி.புருடென்ஷியா லினெரோவிடம் கொடுத்து விட்டு அவரைக் கவனிக்காமல் மற்ற விருந்தாளிகளுடன்  அவளுடைய மொழியில் சொன்னாள்: ”இங்கே உணவகம் இல்லாததனால் தூங்குவதற்காகப் படுப்பவர்கள் உயிரோடு எழுந்திருக்கிறார்கள்.'' தொண்டைக்குள் சிக்கிய கண்ணீர் முடிச்சுடன் திருமதி.புருடென்ஷியா லினெரோ, அறைக்குள் புகுந்து கதவை மூடித் தாழிட்டார்.அதற்குப் பிறகு சிறிய எழுத்து மேஜையையும் சாய்வு நாற்காலியையும் தன்னுடைய பெட்டியையும் இழுத்து கதவையொட்டி தடுப்புச் சுவர்போலப் போட்டார். ஒரே நேரத்தில் அநேக கொடூரங்கள் நடந்த ஒரு நாட்டிலிருந்து பாதுகாப்புத் தேடியே அந்த தடுப்புச் சுவரை ஏற்படுத்தியிருந்தார். பிறகு விதவைக்குரிய இரவு உடையை அணிந்து படுக்கையில் மல்லாந்து படுத்தார். விஷ மருந்தி  இறந்த பதினேழு ஆங்கிலேர்களுக்காக ஜெபமாலையை உருட்டி பதினேழு முறை பிரார்த்தனை செய்தார்.  

(ஏப்ரல் 1980)

ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்