Showing posts with label இடாலோ கால்வினோ. Show all posts
Showing posts with label இடாலோ கால்வினோ. Show all posts

Tuesday, June 7, 2011

ஒரு தம்பதியின் சிக்கல்கள் -இடாலோ கால்வினோ

 

தொழிலாளி ஆர்த்துரோ மஸொலோரி ஒரு தொழிற்சாலையில் காலை ஆறு மணிக்கு முடிவுறும் ஷிப்டில் வேலை செய்தான். வீட்டைச் சென்றடைய அவன் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. நல்ல சீதோஷ்ணத்தில் அவன் இத்தூரத்தை சைக்கிளிலும் மழை மற்றும் குளிர் காலத்தில் ட்ராம் வண்டியிலும் கடந்து சென்றான். ஆறே முக்காலிலிருந்து ஏழு மணிக்குள் ஏதோ ஒரு நேரத்தில் அவன் வீட்டை அடைந்தான். பொதுவாக அவன் மனைவி எலைட்டை எழுப்ப கடியாரத்தின் அலாரம் ஒலிப்பதற்கு சில சமயங்களில் முன்பாகவும் சில வேளைகளில் பின்பும் வீட்டிற்குள் நுழைவான்.

பல சமயங்களில் இரண்டு சப்தங்கள் - அலாரம் மற்றும் உள்ளே நுழையும் அவனுடைய italo காலடிச் சத்தம் எலைட்டின் மூளையில் ஒன்றின் மேல் ஒன்றாகப் பதியும். தலையணையில் முகம் புதைந்து மேலும் ஒரு சில விநாடிகளுக்குக் கச்சிதமான காலை நேர உறக்கத்தைப் பிழிந்தெடுக்க முயலும் அவளுடைய உறக்கத்தின் ஆழத்தை அத்தகைய சப்தம் சென்றடைந்தது. அவள் சடக்கென்று படுக்கையிலிருந்து எழுந்து, தன்னிச்சையாகத் தனது கைகளை உடையினுள் நுழைத்துக்கொண்டு கண்ணை மறைத்து விழுந்திருந்த முடியை ஒதுக்கிக்கொண்டாள். சமையலறைக்குள் நுழைந்திருந்த ஆர்த்துரோவின் எதிரில் அவள் அந்தத் தோற்றத்திலேயே காட்சியளித்தாள். அவன் தான் வேலைக்கு எடுத்துச் செல்லும் பையிலிருந்து காலி பாத்திரங்களான சாப்பாடு டப்பி, பிளாஸ்கை வெளியே எடுத்து கழுவுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியினுள் வைத்தான். அதற்குள்ளாகவே அவன் ஸ்டவ்வைப் பற்ற வைத்து காபி தயாரிக்க ஆரம்பித்திருந்தான். அவன் அவளைப் பார்த்ததும் அவள் இயல்பாக ஒரு கையால் தலைமுடியைக் கோதிக் கொண்டு கண்களை அகலத் திறந்தாள்.

தன் கணவன் வீட்டிற்கு வந்ததும் காணும் முதல் காட்சியாக, எப்போழுதுமே தாறுமாறான பாதி உறக்கத்தைத் தேக்கியவாறு தன் முகம் அமைந்ததற்காக அவள் ஒவ்வொரு முறையும் வெட்கப்படுவதைப்போலத் தோன்றியது. இருவர் இணைந்து உறங்கியிருந்தால் அது வேறு மாதிரி } காலையில் இருவரும் அதே தூக்கத்திலிருந்து விழிப்பின் மேல் தளத்தைத் தொடும்போது ஒரே சமனின் இருப்பார்கள். சில சமயங்களில் அவன் அலாரம் ஒலியெழுப்புவதற்குச் சற்று முன்பாகவே அவளை எழுப்ப, ஒரு சிறிய கோப்பை காப்பியுடன் படுக்கையறைக்குள் வருவான். பிறகு எல்லாமே மிக இயல்பாகப்படும். தூக்கத்திலிருந்து வெளிப்படும் போதிருக்கும் முகச்சுளிப்பு ஒருவிதமான சோம்பலான இனிமையாக மாறிப்போகும். சோம்பல் முறிக்க நீளும் நிர்வாணமான கைகள் அவன் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்ளும்.

எலைட் அவனைத் தழுவிக் கொண்டாள். ஆர்த்துரோ மழை புகாத மேல் கோட் ஒன்றை அணிந்திருந்தான். அவனை அவ்வளவு நெருக்கமாக உணரும்போது வானிலை எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் எந்த அளவிற்கு நனைந்தும் ஜில்லிட்டுப் போயும் இருக்கிறான் என்பதைப் பொறுத்து, வெளியே மழையா அல்லது பனிமூட்டமா அல்லது பனி விழுகிறதா என்பதை அவள் புரிந்துகொள்வாள். ஆனாலும் அவள் அவனைக் கேட்டாள்: "சீதோஷ்ண நிலை எப்படியிருக்கிறது?''

அவன் வழக்கமான பாணியில் முணுமுணுப்போடு எதிர்கொண்ட சிரமங்களையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, பாதி கேலியுடன் கடைசியிலிருந்து துவங்கி சொல்ல ஆரம்பித்தான்: சைக்கிளில் செய்த பயணம், தொழிற்சாலையிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட வானிலை, இதற்கு முந்தைய மாலையிலிருந்த சீதோஷ்ணத்திற்கும் இதற்குமிருந்த வேறுபாடு, வேலையின் கஷ்டங்கள்,வேலைப் பிரிவில் உலவும் வதந்திகள் இப்படியாக.

அந்நேரத்தில் வீடு சிறிதளவே சூடாக்கப்பட்டிருந்தது. ஆனால் எலைட் முழுவதுமாக ஆடைகளைக் களைந்து சிறிய குளியலறையில் குளிக்கத் துவங்கியிருந்தாள். பிறகு அவன் சந்தடியின்றி உள்ளே நுழைந்து ஆடைகளைக் களைந்து தொழிற்சாலையின் தூசு மற்றும் கிரீஸ் பிசுக்கினை மெதுவாகத் தேய்த்து அகற்றியபடி குளிக்க ஆரம்பித்தான். இருவரும் ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாய், சிறிது மரத்துப் போய், ஒருவரையொருவர் சமயங்களில் இடித்துக்கொண்டு ஒருவரிடமிருந்து ஒருவர் சோப்பு, பற்பசையை வாங்கியபடி நின்றுகொண்டிருந்தனர். பரிமாறிக் கொள்ளப்பட வேண்டிய செய்திகளைக் கூறும்போது நெருக்கத்தின் க்ஷணம் உருவானது. ஒருவர் முதுகை ஒருவர், ஒருவர் மாற்றி ஒருவர் உதவிகரமாகத் தேய்த்து விடும்போது ஒரு சிறு தழுவல் இடைப்புகுந்து பிறகு அணைப்பில் முடிந்தது.

ஆனால் திடீரென எலைட் உரத்த குரலில் கத்தினாள். "கடவுளே! நேரம் என்னவாயிற்று பாருங்கள்.'' அவள் தனது காலுறை கட்டும் பெல்ட்டையும் பிரஷ்ஷால் நீவி சீராக்கிக்கொண்டு, கொண்டை ஊசிகளை உதடுகளுக்கிடையில் பிடித்தபடி முகம் பார்க்கும் கண்ணாடிக்குத் தன் முகத்தைக் காட்டினாள். ஆர்த்துரோ அவன் பின்னால் வந்தான். ஒரு சிகரெட் அவன் வாயில் புகைந்து கொண்டிருந்தது. நின்றபடி அவன் புகைத்துக் கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். தான் ஒரு உதவியும் செய்ய முடியாத நிலையிலிருப்பதை நினைத்து சில சமயங்களில் சங்கடமாக உணர்ந்தான். எலைட் தயாராகி, நடைவழியில் மேல் கோட் ஒன்றை அணிந்தவுடன் இருவரும் ஒரு முத்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். அப்புறம் அவள் கதவைத் திறந்து படிகளில் இறங்கி ஓடிச்செல்வது கேட்டது.

ஆர்த்துரோ தனியனாக இருந்தான். படியிறங்கிச் செல்லும் அவளது காலடிச் சத்தத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்தான். அவளது காலடிச் சத்தத்தை இனியும் கேட்க முடியாதுபோது, அவளை அவன் எண்ணங்களில் பின் தொடர்ந்தான். அவளது அந்த விரைவான சிற்றடிகளை முற்றத்தின் வழியாகக் கட்டிடத்தின் வெளிக் கதவின் வழியாக, நடைபாதை மீது, ட்ராம் நிறுத்தம் வரை தொடர்ந்தான். இதற்கு மாறாக, ட்ராமின் சப்தத்தை அவனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ட்ராம் க்ரீச்சொலியிட்டபடி நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு பயணியும் படியை மிதித்து ஏறும் சப்தத்தைக் கேட்டான். அதோ அவள் ட்ராமைப் பிடித்து விட்டாள் என நினைத்தான். அவளைத் தினந்தோறும் தொழிற்சாலைக்கு இட்டுச்செல்லும் பதினொன்றாம் நெம்பர் ட்ராமில் ஆண்கள், பெண்கள், தொழிலாளர் கும்பல்களுக்கு மத்தியில் தன் மனைவி, ட்ராம் கைப்பிடியைத் தொற்றிக்கொண்டு நிற்பதை அவனால் காட்சிப்படுத்த முடிந்தது. அவன் சிகரெட் துண்டை அணைத்த பின் ஜன்னல் ஷட்டர்களை இழுத்து மூடி, அறையை இருட்டாக்கி, படுக்கையில் விழுந்தான்.

எலைட் எழுந்தபோது, எப்படி விட்டுச்சென்றாளோ அப்படியே இருந்தது படுக்கை. ஆனால் அவனுடைய படுக்கைப் பகுதி மட்டும் இப்போதுதான் விரிக்கப்பட்டது போல கசங்கலில்லாமல் இருந்தது. அவன் படுக்கையின் தனது பகுதியில் சரியாகப் படுத்துக் கொண்டான். ஆனால் சிறிது நேரத்தில் படுக்கையில் தன் மனைவி விட்டுச் சென்ற, வெதுவெதுப்பு நிலைத்திருந்த பகுதிக்கு ஒரு காலை அவன் நீட்டினான். பிறகு இன்னொரு காலையும் அங்கே நீட்டினான். எனவே, சிறிது சிறிதாக அவன் எலைட் படுத்திருந்த பகுதிக்கு, இன்னமும் அவளுடைய உடலின் வடிவத்தைத் தக்க வைத்துக்கொண்டிக்கிற அந்தக் கதகதப்பின் குழிவிற்குள் முழுவதுமாக நகர்ந்தான். எலைட்டின் தலையணைக்குள் அவளுடைய வாசத்திற்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டே அவன் உறங்கிப் போனான்.

எலைட் மாலையில் வீடு திரும்புகிற நேரத்தில் ஆர்த்துரோ சுறுசுறுப்பாக வீட்டில் வளைய வந்துகொண்டிருந்தான். ஸ்டவ்வைப் பற்றவைத்துவிட்டு எதையோ சமைத்துக்கொண்டிருந்தான். படுக்கையை ஒழுங்குபடுத்துவது, வீட்டைப் பெருக்குவது, அழுக்குத் துணிகளை ஊற வைப்பது போன்ற சில வேலைகளை இரவு உணவிற்கு முன்பாக அவன் செய்து முடிப்பான். இவை எல்லாவற்றையும் எலைட் விமரிசிப்பாள். ஆனால் ஆர்த்துரோ, உண்மையில் இந்த வேலைகளைச் செய்ய மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. மாறாக அவன் அவளுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் செய்யும் ஒருவிதச் சம்பிரதாயங்கள் அவை, வீட்டின் சுவர்களுக்குள் இருந்தபடியே அவளை அவன் பாதி வழியில் எதிர்கொண்டு சந்திப்பதைப் போன்று. மாலையில் கடைகளுக்குச் செல்ல முடிகிற பெண்கள் வசிக்கும் அந்தச் சுற்று வட்டாரத்தின் தெருவிளக்குகள் எரியத் தொடங்கும்போது, தாமதமாகத் துவங்கிய பரபரப்பான சூழலினூடே, எலைட் கடைகளைக் கடந்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஆரத்துரோ இவ்வேலைகளைச் செய்வான்.

இறுதியில் மாடிப்படிகளில் ஏறும் அவளுடைய காலடிச் சத்தத்தை அவன் கேட்டான். இச்சத்தம் காலையில் இருந்ததைவிட முற்றிலும் வேறாக கனமாகக் கேட்டது. ஏனெனில், எலைட் ஒரு நாளைய உழைப்பிற்குப் பின் களைத்துப் போயும் கடைகளில் வாங்கிய பொருட்களின் கனத்தைச் சுமந்தபடியும் மாடிப்படியேறி வந்தாள். ஆர்த்துரோ மாடிப்படிகளின் மட்டப் பகுதிக்குச் சென்று பொருட்கள் நிறைந்த பையை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு பேசியவாறே அவளுடன் வீட்டினுள் நுழைந்தான். எலைட் தன் கோட்டைக் கூட கழற்றாமல் சமையலறையின் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தாள். அவன் பையிலிருந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தான். பிறகு எலைட் ""சரி, நாமிருவரும் சற்று சுதாரித்துக்கொள்வோம்'' என்றாள். அவன் எழுந்து நின்று மேல் கோட்டைக் கழற்றி வீட்டினுள் அணியும் அங்கியைப் போட்டுக்கொண்டாள். அவர்கள் உணவைத் தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்களிருவருக்குமான இரவு உணவு, தொழிற்சாலையில் இரவு ஒரு மணி இடைவேளையில் அவன் சாப்பிட எடுத்துச் செல்லும் உணவு மற்றும் அவன் தூங்கி எழும்போது தயாராக இருக்கப்போகும் காலை பலகாரம் ஆகியவற்றைத் தயாரித்தனர்.

அவன் விட்டுவிட்டுச் சிறுசிறு வேலைகளைச் செய்தபின் சற்று நேரம் நாற்காலியில் உட்கார்ந்து அவன் என்ன வேலை செய்ய வேண்டும் எனக் கூறினாள். இதற்கு மாறாக அவனைப் பொறுத்தவரை அவன் ஓய்வாக உணர்ந்தான். தீர்மானத்தோடு காரியங்களைச் செய்தான். ஆனால் எப்போதுமே சிறிய மறதியாய், அவன் மனது பிற விஷயங்களில் ஈடுபட்டவாறிருந்தது. இத்தகைய சமயங்களில் ஒருவர் மற்றவரை எரிச்சலடையச் செய்து, கடுமையான வசைகளைப் பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனெனில் அவன் செய்யும் காரியங்களில் மேலும் அதிக கவனம் கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினாள். அல்லது அவன் தன்னிடம் மேலும் பிணைப்பாகவும், நெருக்கமாகவும் இருந்து தன்னை அதிகப்படியாக ஆறுதல்படுத்த வேண்டுமென்று அவள் விரும்பினாள். ஆனால் எலைட் வீட்டிற்குள் நுழைந்த போதிருந்த முதல் உத்வேகத்திற்குப்பிறகு, அவனுடைய மனம் அதற்குள்ளாகவே வீட்டிற்கு வெளியே அலை பாய்ந்தது. அவன் சிறிது நேரத்தில் வேலைக்குச் சென்றாக வேண்டியிருப்பதால் தன்னைத் துரிதப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தான்.

உணவருந்துவதற்கான மேசையைத் தயார் செய்து, பின்னர் அவர்கள் மேசையிலிருந்து எழவேண்டியில்லாதபடிக்கு, சமைக்கப்பட்ட உணவுகளைக் கைக்கெட்டும் தூரத்தில் மூழ்கடித்த கணம். இருவரும் சேர்ந்திருக்கும் நேரம் மிகக்குறைவானது என்ற சிந்தனையினாலும் அவ்விடத்திலேயே இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துகொள்ள வேண்டுமென்ற தவிப்பினாலும் உணவு நிரம்பிய ஸ்பூனை வாயருகே கொண்டு செல்வது கூடச் சிரமமாக இருந்தது.

ஆனால் பாத்திரத்தில் காபி பொங்கி வழிவதற்கு முன்பாகவே அவன் தன் சைக்கிளினருகே சென்று எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். பிறகு இருவரும் இறுகத் தழுவிக் கொண்டனர். அப்போதுதான், தன் மனைவி எவ்வளவு மிருதுவாகவும் கதகதப்பாகவும் இருக்கிறாளென்பதை ஆர்த்துரோ உணர்ந்த மாதிரி தோன்றியது. ஆனால் உடனே அவன் சைக்கிளைத் தோளில் சுமந்து எச்சரிக்கையுடன் படியிறங்கிப் போனான்.

எலைட் பாத்திரங்களைக் கழுவினாள். வீடு முழுவதையும் மேற்பார்வையிட்டாள். மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்து ஆர்த்துரோ செய்துவிட்டுச் சென்ற வேலைகளை மறுபடியும் சீர்படுத்தினாள். இப்பொழுது அவன் விளக்குகள் குறைவான தெருக்களின் வழியே விரைந்து சென்று கொண்டிருந்தான். ஒருவேளை அவன் அதற்குள்ளாக காஸ் டாங்கைக் கடந்து சென்றிருக்கக் கூடும்.

எலைட் படுக்கையில் படுத்து விளக்கையணைத்தாள். தனது பகுதியில் படுத்திருந்த அவள் கணவனுடைய கதகதப்பைத் தேடி, ஒரு காலை அவன் படுக்கும் பகுதிக்கு நகர்த்தினாள். ஆனால் ஒவ்வொரு முறையும் தான் உறங்கும் இடம்தான் அதிக கதகதப்பாக இருப்பதை உணர்ந்தாள். ஆர்த்துரோவும் அங்கே உறங்கியதற்கான அடையாளத்தினால் அவள் பெரும் மன நெகிழ்ச்சியை உணர்ந்தாள்.

*******

நூல்: மஞ்சள்பூ
(இடாலோ கால்வினோ, டொனால்ட் பார்த்தெல்மே, இஸபெல் ஆலெண்டே, கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ், ஜூலியோ கொர்த்தஸôர் சிறுகதைகள்)   தொகுப்பு: தளவாய்சுந்தரம் வெளியீடு: சந்தியா பதிப்பகம்

நன்றி: தாவரம்

Monday, March 21, 2011

பெட்ரோல் நிலையம்-இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

அது பற்றி நான் முன்பே யோசித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. பன்னிரண்டரை மணிக்கு மேலாகிவிட்டது. நான் நிரப்பிக் கொள்ள மறந்துவிட்டேன். சேவை நிலையங்கள் மூன்று மணிவரை மூடியிருக்கும். ஒவ்வொரு வருடமும் பூமியின் பாறை மடிப்புகளில், லட்சக்கணக்கான நூற்றாண்டுகளாய் மணல் மற்றும் களிமண் படிவங்களுக்கு இடையிலாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு மில்லியன் கச்சா எண்ணெய் மேலே கொண்டு வரப்படுகிறது. இப்பொழுது நான் புறப்பட்டால் பாதி வழியில் தீர்ந்துபோய் விடும் ஆபத்Calvino-italo து இருக்கிறது. எச்சரிக்கை அளவைமானி கொஞ்ச நேரமாகவே டேங்க் ரிசர்வ்வில் இருக்கிறது என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறது. பூமிக்கு அடியிலான உலகளாவிய சேமிப்புகள் இருபது சில்லரை வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று அவர்கள் கொஞ்ச காலமாகவே எச்சரித்து வந்திருக்கிறார்கள். அது  பற்றி  சிந்திப்பதற்கு  எனக்கு நிறைய நேரம்  இருந்தது.  எப்போதும்  போல  பொறுப்பில்லாமல்  நான் இருந்திருக்கிறேன். டேஷ்போர்டில் சிவப்பு விளக்கு மினுங்கி எரியத் தொடங்கும் பொழுது நான் கவனம் செலுத்துவதில்லை அல்லது விஷயங்களைத் தள்ளிப்போடுகிறேன். பயன்படுத்துவதற்கு முழு சேமிப்பும் இன்னமும் மிச்சமிருக்கிறது என்று எனக்கு  நானே  சொல்லிக் கொள்கிறேன் பிறகு மறந்து போய் விடுகிறேன். இல்லை, ஒரு வேளை, அதுதான் கடந்த காலத்தில், காற்று அளவுக்கே பெட்ரோல் அபரிமிதமாக இருந்த அந்த நாட்களில் நடந்திருக்கக் கூடும்.  கவனக் குறைவாக இருந்து விட்டு பிறகு அதைப் பற்றி மறந்து விடுவது. இப்பொழுது அந்த மினுங்கல்  வெளிச்சம்  வரும்  பொழுது அது ஒரு அபாயகரத்தையும், பெரும் அச்சுறுத்தலையும், ஒரே சமயத்தில் தெளிவின்றியும் ஆனால் நடந்து விடக்கூடியது என்கிற மாதிரியும் பரிமாற்றம் செய்கிறது.  பலவிதமான  பதற்றம்  நிறைந்த  சமிக்ஞைகள்  என எனது பிரக்ஞையின் மடிப்புகளுக்கிடையே படிந்து விடும் அவற்றுடன்  அந்த  செய்தியையும்  நான் எடுத்துப் பதிவு செய்து கொள்கிறேன். இது எனது ஒருவிதமான மனோநிலையில் கரைந்து விடுகிறது. அந்த மனோநிலையில் அதை என்னால் உதறிவிட முடிவதில்லை. அதே சமயம் அது அதன் விளைவானதொரு கச்சிதமான நடைமுறைக் காரியம் செய்வதற்கு என்னைத் தூண்டுவதில்லை. எடுத்துக் காட்டாக நான்  காண்கிற  முதல்  பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி நிரப்பிக் கொள்வதற்கு.  அல்லது  சேமிப்பதற்கான உள்ளுணர்வு என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறதா–ஒரு அனிச்சையான  கஞ்சத்தனம்?  என்னுடைய டேங்க் தீர்ந்து போகப் போகிறது என்பதை  நான்  உணர்கிற  மாதிரியே  எண்ணெய்  சுத்தகரிப்பு கையிருப்புகள் குறைந்து வருவதையும், எண்ணெய்க் குழாய்களின் போக்குகள் பற்றியும், மேலும் எண்ணெய்க் கப்பல்கள் பாரங்களுடன் கடல்களை உழுது செல்வதையும் உணர்கிறேன். டிரில் பிட்டுகள் பூமியின் ஆழங்களைத் துழாவுகின்றன.  ஆனால்  அழுக்கு  நீரைத்  தவிர  வேறு எதையும் மேலே கொண்டு வருவதில்லை.  ஆக்ஸிலேட்டரின் மீதான  எனது கால் நமது பூமிக்கோளம் சேமித்து வைத்திருக்கும் கடைசி பீற்றுதாரை சக்தியை அதன் மிக எளிய அழுத்தம் கூட எரித்து விடக் கூடும் என்ற உண்மையை உணர்வதாகிறது. என்னுடைய கவனம் கடைசி சொட்டு எரிபொருளை உறிஞ்சுவதில் நிலை கொள்கிறது. டேங்க் ஏதோ ஒரு  எலுமிச்சைப்  பழம்  என்பது  போலவும்  அதிலிருந்து  ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பிழியப்பட வேண்டும் என்பது போலவும் நான் பெடலை அழுத்துகிறேன். நான்  வேகத்தைக்  குறைக்கிறேன்.  இல்லை.  அதிகப்படுத்துகிறேன். என் உள்ளுணர்வு பூர்வமான எதிர்வினை, நான் எந்த அளவுக்கு வேகமாகச் செல்கிறேனோ அந்த அளவுக்கு தூரமாக எனது பிழிதலில் இருந்து எனக்குக் கிடைக்கும் என்பதாக இருக்கிறது. மேலும் அது கடைசியானதாய் இருக்கவும் கூடும்.

நிரப்பிக் கொள்ளாமல் நகரத்தை விட்டுச் செல்லும் ஆபத்தில் நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. நிச்சயமாக  திறந்திருக்கும் ஒரு பெட்ரோல் நிலையத்தை நான் கண்டுபிடிப்பேன். நிழல்மரச் சாலைகளில் காரை ஓட்டிக் கொண்டு, வேறுபட்ட பெட்ரோலிய கம்பெனிகளின் வர்ண அறிவிப்புப் பலகைள் முளைத்து நிற்கும் நடைபாதைகளையும், மலர்ப்படுகைளையும் தேடிக் கொண்டு செல்கிறேன். முன்பு அவை இருந்த ஆக்கிரமிப்புடன் இன்றில்லை–அந்த நாட்களில் புலிகளும் பிற விலங்குகளும் நமது என்ஜின்களுக்குள்  தீப்பிழம்புகளை உமிழ்ந்த காலத்தில் போல.  மீண்டும் மீண்டும் நான் திறந்திருக்கிறது  என்ற  அறிவிப்புப்  பலகையைப்  பார்த்து முட்டாளாகிறேன். அதற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையம் வழமையான நேரத்தில்  திறந்திருக்கும் எனவே மதிய இடைவேளையின் போது மூடியிருக்கும்.  சில  நேரங்களில்  ஒரு பெட்ரோல்  நிலைய  உதவியாளன்  ஒரு மடக்கு  நாற்காலியில் அமர்ந்தபடி  சாண்ட்விச்சை  சாப்பிட்டுக் கொண்டோ, அல்லது,  அரைத் தூக்கத்திலோ இருக்கிறான். மன்னிப்பு கோரும் தோரணையில் அவன் கைகளை விரித்தும் காட்டுகிறான் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுதான் — எனது கேள்வி கேட்கும் சைகைகள்  நான் அவை அவ்வாறு ஆகும் என்று அறிந்திருந்தவாறு பயனற்றவையாகின்றன. சகலமும்  எளிமையாகத் தோன்றிய காலம் முடிந்து விட்டது, அதாவது மனித சக்தியானது இயற்கை சக்தியைப் போலவே நிபந்தனையற்றும் தீராவே தீராமலும் உங்கள் சேவையில் இருக்கிறது என நீங்கள் நம்ப முடிந்த காலம். அப்போது பெட்ரோல் நிலையங்கள் எல்லாமும் உங்கள் வழியில், வரிசையாக கவர்ச்சியுடன் முகிழ்த்தவாறு, அவற்றின் உதவியாளன் பச்சை அல்லது நீலம் அல்லது கோடுபோட்ட தொளதொள முழு அங்கியை அணிந்தவாறு வண்டுகள் கூட்டத்தின் அரைபடலால் காரின் முன்பக்கத்துக் கண்ணாடி அசுத்தப்பட்டுப் போனதைத் துடைப்பதற்குத் தயாராக நீர் சொட்டும் ஸ்பாஞ்சினை கையில் வைத்துக் கொண்டிருப்பான்.

அல்லது, மாறாக. ஒரு சில வேலைகளை மேற்கொண்டிருந்த சிலர் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை செய்து கொண்டிருந்த  காலங்களின்  முடிவுக்கும்,  சிலவித  பொருள்கள் என்றைக்குமே தீர்ந்து போகாது  என்று  நீங்கள்  கற்பனை செய்திருந்த காலங்களின் முடிவுக்கும் இடையில் ஒரு முழு வரலாறே இருக்கிறது–அதன் நீளம் ஒரு நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்  வேறுபடுகிறது, ஒரு தனிநபருக்கும்  இன்னொரு  தனிநபருக்கும் கூட.  அதனால் நான் சொல்கிறேன் இந்த கணத்தில் செழுமைச் சமுதாயங்கள் என்று  அழைக்கப் பட்டவற்றின்  எழுச்சியையும்,  உச்சத்தையும்  வீழ்ச்சியையும்  நான்  ஒரே  சமயத்தில்  அனுபவம்  கொள்கிறேன்– ஒரு சுழலும் டிரில் கருவி ஒரு கணத்தில் பிளியோசீனிய, கிரெடீசிய, டீரசீய படிவப் பாறைகளின் ஊடாக ஒரு மில்லினியத்திலும் அடுத்த மில்லினியத்திலும் நுழைவதைப் போல.

கிலோமீட்டர்மானி தந்திருக்கிற தகவல்களை உறுதி செய்து கொண்டு காலம் மற்றும் புவி வெளியில் எனது நிலைமையைக் கணக்கெடுக்கிறேன். இப்பொழுதான் முள் பூஜ்யத்திற்கு வந்து நிற்பதையும், எரிபொருள் மானி இப்பொழுது நிலையாக பூஜ்யத்தில் நிற்பதையும் காலக் கடிகாரத்தின் சிறிய மணிக்கை இன்னும் மேற்புற கால்வட்டத்தில் நிற்பதையும் பார்க்கிறேன். மதிய வேளைகளில் தண்ணீருக்கான ஒப்பந்தம் தாகமாக இருக்கும் புலியையும் மானையும் கலங்கிய ஒரே குட்டைக்குக் கொண்டு வந்தது போல என்னுடைய கார் அதன் எண்ணெய் ஒப்பந்தம் அதை, ஒரு பெட்ரோல் நிலையம் அடுத்து மற்றொன்றுக்கு ஓடச் செய்யும் பொழுது  பயனின்றி புத்துணர்ச்சிக்காகத் தேடுகிறது. கிரெடீசிய உயிர்களின் உச்சிவேளைப் பொழுதுகளில் கடலின் மேற்பரப்பில் பொங்கிப் பரவின–வாழ் உயிரிகள் நுண்ணிய பாசிக்கூட்டங்கள்  நுண்ணிய பாசிகளின் அடர்ந்த கூட்டம், ப்ளாங்க்டன்களின் மெல்லிய ஓடுகள், மிருதுவான கடல் பஞ்சுகள், கூர்மையான பவளப் பாறைகள்–அவற்றினூடாய் ஒரு வாழ்வு சாவைத் தொடரும் நீண்ட சுழற்சியில் தொடர்ந்து கொதித்து, அவற்றினூடாய் வாழ்ந்து கொண்டேயிருக்கும்  சூரியனைக் கொண்டிருக்கும் அவை. இவை ஒரு கனமற்ற விலங்கு மற்றும் தாவரக் கசடுகளின் மழையாய் மாற்றப்படும் பொழுது,  மேலோட்டமான நீர்களில் படிந்து, பிறகு சகதியில் அமிழ்ந்து, பின் கடந்து செல்லும் பிரளயங்களினால் வழியாக அவை கால்கரீயப் பாறைகளின் தாடைகளில் மெல்லப்பட்டு,  சின்க்லைன் மற்றும் ஆன்ட்டிக்கிளைன் ஆகிய மடிப்புகளில் செரிக்கப்பட்டு, அடர்த்தியான எண்ணெய்யாக மாற்றப்பட்டு, இருண்ட, பூமியின் அடியிலான போரோசைட்டு களின் வழியாக மேலே உந்தித் தள்ளப்படுகின்றன–அவை பாலைவனங்களுக்கு மத்தியில் பீச்சி அடிக்கும் வரை. பின்பு பிழம்புகளாக வெடித்து மீண்டும் ஒரு முறை பூமியின் தளத்தை ஒரு புராதன மதியம் போல கண்கூசும் ஒளியால் சூடாக்குகின்றன.

மேலும், இங்கே மதியத்தின் மத்தியில் உள்ள நாகரீக பாலைவனத்தில் ஒரு திறந்திருக்கும் சேவை நிலையத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கார்களின் கூட்டம் ஒன்று அதைச் சுற்றி பரபரத்துக் கொண்டிருக்கிறது. உதவியாளர்கள் ஒருவருமில்லை. பணநோட்டுக்களை மெஷின்களில் எடுத்துக் கொள்ளக் கூடிய சுய சேவை நிலையங்களில் ஒன்றுதான் அது. குரோம் நிற பம்ப் நாஸில்களை அவற்றின் உறைகளில் இருந்து வெளியில் எடுத்தபடி சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இயக்கக் குறிப்புகளை வாசிப்பதற்காக அவர்களின் கையசைவுகளை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். தானாகவே உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய ரப்பர் பம்ப்புகள் பாம்புகள் போல வளைகின்றன.  மாறுதல்களின் காலத்தில் உருவான,  எனது கைகள், எனது உயிர் பிழைப்புக்கான அத்தியவாசிய செயல்பாடுகளை வேறு கைகள் நிகழ்த்துவதற்குக் காத்திருந்து பழகிவிட்ட அந்த என்னுடைய கைகள் பம்ப்புடன் தடுமாறுகின்றன. இந்த நிலைமை நிலையானதல்ல என்பதை நான் எப்போதோ கொள்கை ரீதியில் அறிந்திருந்தேன். கோட் பாட்டளவில் என் கைகள் மனித இனத்தின் உடல் ரீதியான இயக்கங்கள் அனைத்தையும் மீட்டுக் கொள்வது தவிர வேறு எதையும் செய்ய விரும்பாது. பழங்காலத்தில் சீற்றம் மிகுந்த இயற்கையை இரண்டு வெறுங்கைகளால் மாத்திரம் நேர் கொண்டது மாதிரி இன்று காட்டுமிராண்டித்தனமான  இயற்கையை  விட அதிகம் எளிதாய், சந்தேகத்திற்கிடமின்றி இயக்கி விட முடியக் கூடிய யந்திர உலகத்தினை நாம்  எதிர் கொண்டிருக்கிறோம்.  நமது கைகள் இனி தமக்குத் தாமாகவே சமாளித்துக் கொண்டாக வேண்டிய, நமது தினசரி வாழ்வு சார்ந்திருக்கிற யந்திர உழைப்பினை பிற கைகளுக்கு மாற்றிக் கொடுக்க  இனி இயலாத உலகத்தில் இருக்கிறோம்.

நிஜத்தில் எனது கைகள் சிறிது ஏமாற்றம் அடைந் திருக்கின்றன.  பயன்படுத்துவதற்கு பம்ப் மிக எளிதாக இருக்கிறது.  சுயசேவை  நிலையங்கள்  ஏன்  பல  ஆண்டுகளுக்கு முன்னரே  சர்வ சாதாரணமாக ஆகவில்லை என வியக்க வைக்கிறது. ஆனால், ஒரு தானியங்கி சாக்லேட் விநியோக யந்திரத்தைப் பயன்படுத்துவதில் இருப்பதை விடவும் அல்லது வேறு எந்த பணம் எண்ணும் இயந்திரத்தை  இயக்குவதால் வருவதை விடவும் இதில் நீங்கள் கூடுதலான சந்தோஷத்தை பெறவில்லை. சிறிது கவனம் தேவைப்படும் ஒரே செயலாக்கம் பணம் செலுத்துவதில் அடங்கியிருக்கிறது. ஒரு சிறிய இழுப்பறையில் நீங்கள் ஒரு ஆயிரம் லயர் நோட்டை சரியாக வைக்க வேண்டும்–அதன் எலக்ட்ரிக் ஒளிக்கண் ‘குய்செப் வெர்டி’யின் தலை உருவப்பொறிப்பினை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு ஏற்றவாறு, அல்லது, ஒவ்வொரு வங்கி நோட்டின் குறுக்காகச் செல்லும் மெல்லிய உலோகப்பட்டியை அடையாளம் காணுமளவுக்கு குறுக்காகச் செல்லும்படி. அந்த நோட்டு விழுங்கப்படும் போது ஒரு வெளிச்சம் கிளம்பும்.  அப்பொழுது நான் விரைய வேண்டும், பம்ப்பின் நுனியை டேங்கின் வாயில் நுழைத்து  கச்சிதமாக, நடுங்கியபடி வரும் ஜெட்டை உள்ளே பொங்கிப் பீறிட நுழைக்க வேண்டும்.  இந்தப் பரிசினை நான் அனுபவிக்க விரைய வேண்டும். இது எனது அறிவுணர்வுகளை சந்தோஷப் படுத்துவதற்கு தகுதியற்றது எனினும் எனது போக்குவரத்து வழியாக இருக்கும் எனது உடற்பகுதிகள் அதற்கு ஆர்வத்துடன் ஏங்குகின்றன.  இவை எல்லாவற்றையும் சிந்தித்து முடித்ததுதான் தாமதம். அப்பொழுது ஒரு கூர்மையான ‘க்ளிக்’ ஓசையுடன் பெட்ரால் வருவது நின்று போய் சமிக்ஞைவிளக்குகள் அணைந்து போகின்றன. சில விநாடிகளுக்கு முன்பாக இயக்கி விடப்பட்ட சிக்கலான கருவி ஏற்கனவே இயக்கமற்று நிறுத்தப்பட்டுவிட்டது.  எனது சடங்குகள் உயிர் கொடுத்த நிலவுலகம் சார்ந்த சக்திகளின் நகர்வுகள் ஒரு கணத்திற்கு மேலாக நீடிக்கவில்லை.வெறும்  உலோகப் பட்டிகையாகக்  குறைக்கபட்ட ஆயிரம் லயர் நோட்டுக்கு மாற்றாக பம்ப் மிகக் குறைந்த அளவு பெட்ரோலையே தரும். கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை பதினோரு டாலர்.

நான் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். வேறு ஒரு நோட்டு, பிறகு மற்றது, ஒரு தடவைக்கு ஒரு ஆயிரம் என தர வேண்டும். பணமும் பாதாள லோகமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அவை நீண்டகாலம் பின்னோக்கிச் செல்கின்றன. அவற்றின் உறவு ஒரு பிரளம் அடுத்து மற்றொரு பிரளயமாக வெளிப்பாடு காண்கிறது–சில நேரங்களில் மந்தமாகவும், சில நேரங்களில்  மிகத்  திடீரென்றும். எனது டேங்கை சுயசேவை நிலையத்தில் நிரப்பிக் கொண்டிருக் கையில் பாரசீக வளைகுடாவில் புதையுண்டிருக்கும் ஒரு கருப்பு ஏரியில் ஒரு வாயுக் குமிழி வீங்கி உயர்கிறது. ஒரு எமீர் மௌனமாக தனது அகன்ற வெண்ணிற சட்டையில்  மறைக்கப்பட்ட கைகளை உயர்த்தி தனது மார்புக்கு குறுக்காக மடிக்கிறார். ஆகாயத்தைத் தொடும் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் எக்ஸான் கம்ப்யூட்டர் ஒன்று எண்களை மெல்லுகிறது. கடலில் மிகத் தொலைவில் ஒரு சரக்குக்கப்பல் அது வேறு திசையில் செல்ல வேண்டும் என்ற ஆணையைப் பெறுகிறது. எனது பாக்கெட்டுகளில் நான் துழாவுகிறேன். காகிதப் பணத்தின் நோஞ்சான் சக்தி ஆவியாகிப் போகிறது.

என்னைச் சுற்றிலும் நான் பார்க்கிறேன். ஆளற்ற பம்ப்புகளுக்கிடையில் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன்.  இந்த நேரத்தில்  திறந்திருக்கும் ஒரே பெட்ரோல்  நிலையத்தைச் சுற்றியிருந்த கார்களின் முன்வருதலும் பின்போதலும் எதிர்பாராத விதத்தில் நின்று போயிற்று.  ஏதோ மிகச் சரியான இந்தக் கணத்தில் பதுங்கிக் கொண்டிருந்த பிரளயங்களின் ஒருமிப்பு திடீரென்று அந்த உச்சபட்சமான பிரளயத்தை உருவாக்கி விட்டதைப் போல–ஒரே சமயத்தில்  பம்ப்புகள், கார்புரேட்டர்கள், மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் எண்ணெய்க் கிணறுகளின் குழாய் வழிகள் போன்ற சகலமும் வறண்டு போகின்றன. முன்னேற்றம் அதற்கான ஆபத்துக்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது, இதில் பொருட்படுத்தப்பட வேண்டியது என்னவென்றால் நீங்கள் இதையெல்லாம் முன்னரே எதிர்நோக்கி விட்டீர்கள் என்று சொல்ல முடிவதுதான். இப்பொழுது சமீப காலமாக எதிர்காலத்தை என்னால் அச்சமின்றி கற்பனை செய்ய முடிகிறது. என்னால் ஏற்கனவே வரிசை வரிசையான, நூலாம்படை படிந்த, கைவிடப்பட்ட கார்களைப் பார்க்க முடிகிறது.  இந்த நகரம் ஒரு பிளாஸ்டிக் காயலான் கடையாக சிறுத்துப் போவதையும், முதுகின் மேல் சாக்குகளுடன் திரியும் மனிதர்கள் எலிகளால் துரத்தப்படுவதையும்  இப்பொழுதே என்னால் பார்க்க முடிகிறது.

திடீரென்று இந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்ற ஏக்கத்தால் நான் பீடிக்கப்படுகிறேன். ஆனால், எங்கே போவது? எனக்குத் தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. ஒரு வேளை  சக்தியின் எந்தச் சிறு மிச்சம் விடப்பட்டிருக்கிறதோ அதை எரித்து சுழற்சியை முற்றுப் பெறச் செய்ய விரும்புகிறேனாக இருக்கலாம். இன்னும் ஒரு தாரைப் பெட்ரோலை வடித்து விட நான் கடைசி ஆயிரம் லயர் நோட்டைத் தோண்டி எடுக்கிறேன்.

ஒரு ஸ்போர்ட்ஸ் கார் பெட்ரோல் நிலையத்தில் வந்து நிற்கிறது. அதன் ஓட்டுநர் ஒரு இளம்பெண். அவளுடைய வழிந்தோடும் கூந்தல் சுழற்சிகளினாலும், கழுத்தை இறுக்கிப் பிடிக்கிற மாதிரி ஸ்வெட்டராலும் ஸ்கார்ஃபாலும் சுற்றப்பட்டு தெரிகிறாள். இந்த சிக்கு விழுந்த குவியலில் இருந்த ஒரு சிறிய மூக்கினை உயர்த்தியபடி சொல்கிறாள்: ”அவளை நிரப்பு”

நான் அங்கே பெட்ரோல் நிரப்பும் நாஸிலுடன் நின்று கொண்டிருக்கிறேன்.  நான் நிகழ்த்தும் இயக்கங்கள், நான் பயன்படுத்தும் பொருட்கள்,  நான் எதிர்பார்க்கும் மீட்பு என சகலமும் கவர்ச்சியில்லாமலிருக்கும் ஒரு உலகத்தில் குறைந்த பட்சம் அவை எரியும் பொழுது மகிழ்ச்சிகரமான ஞாபகங்களையாவாது விட்டுச் செல்லட்டும் என்பதற்கு வேண்டி இந்தக் கடைசி ஆக்டேன்களை அவளுக்கு அர்ப்பணம் செய்யலாம். ஸ்போர்ட்ஸ் காரின் எரி பொருள் செலுத்தும் மூடியைக் கழற்றுகிறேன். பம்ப்பின் வளைந்த மூக்கினை உள்ளே நுழைத்து பித்தானை அழுத்துகிறேன். அந்தப் பிரவாகம் உள்ளே செல்வதை உணர்கையில் இறுதியாக ஒரு தூரத்துச் சுகிப்பின் ஞாபகமொன்றினை அனுபவம் கொள்கிறேன். ஒரு உறவினை உருவாக்கக் கூடிய ஒரு விதமான வீர்ய சக்தி, ஒரு திரவ ஒழுகலோட்டம் எனக்கும் கார் ஸ்டீயரிங் வளையத்திற்கு முன்னால் அமர்ந்திருக்கும் அந்த அந்நியளுக்கும் இடையே நிகழ்கிறது.

அவள் என்னைப் பார்க்க வேண்டி திரும்புகிறாள். அவளது மூக்குக் கண்ணாடியின் பெரிய சட்டங்களை உயர்த்துகிறாள். அவளுக்கு ஒளிகசியும் ஊடுருவல் மிகுந்த பச்சைக் கண்கள் இருக்கின்றன: ”ஆனால் நீங்கள் பெட்ரோல் நிலைய உதவியாளர் இல்லையே. . .என்ன செய்கிறீர்கள் நீங்கள். . .ஏன்?” என் பக்கத்து காதலின் அதீதமான செயல்பாடு இது என அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனித இனம் தன்னுடையதென சொந்தம் கொண்டாடிக் கொள்ளக் கூடிய வெப்பத்தின் கடைசி வெடித்தலில் அவளை நான் இணைக்க விரும்புகிறேன். அந்த செயல்பாடு ஒரு காதல் செயலாக இருக்கையில் வன்முறைச் செயலாகவுமிருக்கும், ஒருவிதமான வன்புணர்ச்சி, பாதாள சக்திகளின் ஆளை அழிக்கும் உக்கிரத் தழுவல்.

bramarajanஅ வளைக் ‘கப்சிப்’ என்று இருக்கச் சொல்லி சைகை செய்கிறேன். காற்றில் என் கையைக் கொண்டு கீழ் நோக்கிச் சுட்டுகிறேன். இந்த மயக்குநிலை எந்த கணத்தில் வேண்டுமானாலும் துண்டிக்கப் பட்டுவிடலாம் என எச்சரிப்பதற்கு என்பது போல. பிறகு நான் ஒரு விதமான வட்டவடிவக் கையசைப்பினைச் செய்கிறேன்–பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை என்று சொல்வது போல. மேலும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்  என் மூலமாக கருப்பு நிற புளூட்டோ பாதாள உலகிலிருந்து மேலே வருகிறான், அவள் வழியாக ஒரு சுடர் விடும் பெர்ஸிஃபோன்*þஐ தூக்கிச் செல்ல. ஏனெனில் அவ்வாறுதான் வாழும் வஸ்துக்களை கருணையற்று விழுங்குபவளான பூமி தன்னுடைய சுழற்சியை மீண்டும் தொடங்குகிறாள்.

தனது கூர்மையான, இளமையான முன்பற்களை வெளிக் காட்டியபடி அவள் சிரிக்கிறாள். அவள் தீர்மானமில்லாதவளாக இருக்கிறாள். காலிஃபோர்னியாவில் எண்ணெய்ப் படிவு களுக்காக மேற்கொள்ளப்பட்ட தேடல் அதில் வாள் வடிவப் பற்களையுடைய புலியும் அடக்கம்–கரிய ஏரிக்குழியின் மேற்புறமிருக்கும் நீர்ப்பரப்பால்தான் அந்த மிருகம் கட்டாயமாக ஈர்க்கப் பட்டிருக்கும். அந்த நீர்ப்பரப்பு அதை உறிஞ்சி உட்கொண்டு விட்டது.

ஆனால் எனக்கு அளிக்களிக்கப்பட்ட குறைந்த நேரம் முடிந்துவிட்டது.  பெட்ரோல் வருவது நின்று விட்டது. பம்ப் சலனமில்லாதிருக்கிறது. அணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மனித இனத்தின் சுழற்சி வாழ்வு நின்று போய், எல்லா இடங்களிலும் சகல என்ஜின்களும் எரிப்பதை நிறுத்திவிட்ட மாதிரி ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது.  இந்த பூமியின் மேல் ஓடு இந்த நகரங்களை மறுபடி உள்ளிழுத்துக் கொள்ளும் நாளில், மனித இனமாக இருந்த இந்த ப்ளாங்க்டன் படிவம் ஒரு மில்லியன் வருடங்களில் ஆஸ்பால்ட் மற்றும் சிமிண்ட்டின் புவியியல் அடுக்குகளால் மூடப்பட்டு விடும்  அது எண்ணெய்ப் படிவுகளாய்ப் பெருகும். யார் பொருட்டு என்று நாம் அறியோம்.

அவளுடைய கண்களுக்குள் நான் பார்க்கிறேன்: அவள் புரிந்து கொள்வதில்லை. ஒரு வேளை அப்பொழுதான் பயப்படத் தொடங்கியிருக்கிறாள்  போலும்.  நல்லது.  நான் நூறு வரை எண்ணுவேன். மௌனம் தொடர்ந்தால், நான் அவள் கையைப் பற்றுவேன். பிறகு நாங்கள் ஓடத் தொடங்குவோம்

.• .• .•

_______________________________________________

*பெர்ஸிஃபோன் பாதாள உலகத்தின் தேவதை. கிரேக்கப் புராணிகத்தின்படி ஒரு வருடத்தின் மூன்றில் ஒரு பகுதியில் பாதாள உலகத்திலும் ஒரு பகுதியில் பூமியிலும் வாழ்கிறாள். ரோமானியர்கள் Prosperina என்று இவளை அழைத்தனர். விதைகள் பூமியில் முளைக்கக் காரணம் என்று கருதப்படுகிறவள். எனினும் விதைமுளைப்புச் சடங்குகளில் பெர்சிஃபோனின் பெயரைச் சொல்லக் கூடாது என்ற ஐதீகம் இருந்தது.

Petrol Pump-Numbers in the Dark [1999] Vintage Edition, New York translated by  Tim Parks

Saturday, March 19, 2011

ஆதாம், ஒரு பிற்பகல்- இதாலோ கால்வினோ

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஆர்ச்சிகால்குஹான் பெகிரைட்

தமிழில்: சி.மோகன்

 

இதாலோ கால்வினோ (1923 - 1985)     

இருபதாம் நூற்றாண்டு இத்தாலியப் புனைவுலகில் மகத்தான கலைஞன். பத்திரிகையாளர், சிறுகதை-நாவல் படைப்பாளி. கட்டுரையாளர், கற்பனையும் அற்புதமும் இழையோடும் இவருடைய நவீன தேவதைக் கதைகள் 20 ஆம் நூற்றாண்டு உரைநடைக்குப் புதுமெருகூட்டின. யதார்த்த உலகின் வாசலிலிருந்து விரிந்து பரவும் வெட்டவெளி விந்தை உலகம் இவருடையது.

1923 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி கியூபா நாட்டில பிறந்தார். இளமையில் இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியப் படையில்italo இணைந்தார். உலகப் போர் முடிந்ததும் கம்யூனிச இதழொன்றில் பணியாற்றியவாறே இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்தார். 1959-66 வரை இடதுசாரி இதழொன்றின் எடிட்டராக இருந்தார்.

இவருடைய ஆரம்ப காலப் படைப்புகள் இத்தாலியப் படையில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து பிறந்தவை. 50களில் விந்தைக் கதைகள், உருவகக் கதைகள் என தீர்மானமான கலை உத்வேகத்தோடு இவருடைய படைப்புலகம் வடிவம் பெற்று உலகின் கவனத்தை ஈர்த்தது.

1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இத்தாலியில் காலமானார்.

'ஆதாம், ஒரு பிற்பகல்' இவருடைய ஆரம்ப காலச் சிறுகதைகளில் ஒன்று. எனினும் பின்னாளில் இவர் உருவாக்கிய புனைவுலகின் அழகிய சாயல்கள் இக்கதையில் அமைந்திருக்கின்றன.

 


புதிய தோட்டக்காரரின் மகனுக்கு நீண்ட தலைமுடி. ஏதோ ஒன்றைத் தலையில் சுற்றி, நீள முடியை ஒரு சிறு வளையத்தின் மூலம் சீராகக் கட்டியிருந்தான். ஒரு கையால் விளிம்பு வரை நிறைந்திருந்த தண்ணீர் வாளியைச் சுமந்தபடி, மறு கையைப் பக்கவாட்டில் நீட்டிச்சமன் செய்தவாறு தோட்டப் பாதையில் அவன் நடந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு செடியின் அடிப்பாக மண்ணும் மிருதுவான கருப்புச் சாயலாகக் கரையும் வரை, மிக மெதுவாகவும், கவனமாகவும், ஏதா காஃபியையும் பாலையும் ஊற்றுவதுபோல, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். போதுமான ஈரப்பதமானதும் நீர் வாளியைத் தூக்கிக் கொண்டு அடுத்த செடிக்குச் சென்றான். அடுப்படி ஜன்னலிலிருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்த மரியா - நுன்ஸியாதா, தோட்டப் பராமரிப்பு என்பது எவ்வளவு அருமையான, நிம்மதியான வேலை என்று நினைத்துக் கொண்டாள். அவன் அரைக்கால் டவுசர் அணிந்திருந்போதிலும், அவனுடைய நீண்ட தலைமுடி பெண்ணின் தோற்றத்தை அவனுக்குத் தந்திருந்த போதிலும் அவன் வளர்ந்த ஒரு இளைஞன் என்பதை அவளால் அறிய முடிந்தது. அவள் பாத்திரங்கள் கழுவுவதை நிறுத்திவிட்டு, ஜன்னலில் தட்டினாள்.

''ஏ, பையா!'' அவள் அழைத்தாள்.

தோட்டக்காரரின் பையன் தலையை நிமர்த்தி, மரியா-நுன்ஸியாதாவைப் பார்த்து, புன்னகை செய்தான். அவள் பதிலுக்கு அவனைப் பார்த்து சிரித்தாள். இவ்வளவு நீள முடியோடு ஒரு பையனையோ, அவன் தலையிலிருந்ததைப் போன்றதொரு வளையத்தையோ அவள் இதுநாள் வரை பார்த்திராததும் சிரிப்புக்குக் காரணம். தோட்டக்காரரின் பையன் அவளை அழைக்கும் வகையில் ஒரு கையால் சைகை செய்தான். அவனுடைய வேடிக்கையான செய்கையைப் பார்த்து மரியா-நுன்ஸியாதா விடாமல் சிரித்ததோடு, பாத்திரங்கள் கழுவ வேண்டி இருக்கிறது என்று பதிலுக்குச் சைகை செய்தாள். ஆனால் அந்தப் பையன் மறுபடியும் சைகை மூலம் அழைத்ததோடு, மறு கையால் பன்னிறப் பூச்செடித் தொட்டியைச் சுட்டிக் காட்டினான். அவன் ஏன் அந்தப் பூச்செடித் தொட்டிகளைச் சுட்டிக் காட்டுகிறான்? மரியா-நுன்ஸியாதா ஜன்னலைத் திறந்து தலையை வெளியே நீட்டினாள்.

''அங்கே என்ன இருக்கிறது?'' என்று கேட்டபடி அவள் மீண்டும் சிரித்தாள்.

''அருமையான ஒன்றை நீ பார்க்க வேண்டாமா?''

''என்ன அது?''

''அருமையான ஒன்று. வந்து பார். சீக்கிரம்.''

''என்னதென்று சொல்.''

''நான் அதை உனக்குத் தருவேன். மிக அருமையான அதை நான் உனக்குத் தருகிறேன்.''

''நான் பாத்திரங்கள் கழுவ வேண்டும். வீட்டுக்கார அம்மா என்னைத் தேட ஆரம்பித்துவிடுவார்.''

'உனக்கு வேண்டுமா, வேண்டாமா? உடனே வா.''

''ஒரு செகண்ட் பொறு'' என்ற மரியா-நுன்ஸியாதா ஜன்னலை மூடினாள்.

அடுப்படிக் கதவு வழியாக அவள் வெளியே வந்தபோது, தோட்டக்காரரின் பையன் செடிக்குத் தண்ணீர் ஊற்றியபடி அங்கேயே இருந்தான்.

''ஹலோ'' என்றாள் மரியா-நுன்ஸியாதா.

அவள் அணிந்திருந்த குதி உயர்ந்த ஷூக்கள் காரணமாக இயல்பை விடவும் உயரமாகத் தெரிந்தாள். வேலையின் போது அவற்றை அணிந்திருப்பது பரிதாபம்தான் என்றாலும் அவற்றை அணிவதில் அவளுக்கு மிகுந்த விருப்பம். கரும் குழிவுகளால் அவளுடைய சிறிய முகம் நிரம்பியிருந்தபோதிலும், அதையும் மீறி குழந்தையினுடையதைப் போல இருந்தது. அவளுடைய உடல் மேலாடையின் மடிப்புகளுக்குள் உருண்டு திரண்டு இருந்த போதிலும், கால்கள் குச்சியாகவும் குழந்தையினுடையதைப் போன்றும் இருந்தன. மற்றவர்களின் பேச்சுக்காக அல்லது அவளுக்குள்ளேயே நிகழும் பேச்சுக்காக என்று அவள் எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

''ஹலோ'' என்றான் தோட்டக்காரரின் பையன். அவனுடைய முகம், கழுத்து, மார்பு எல்லாம் கருப்பழுப்பு நிறத்தில் இருந்தன. அவன் இப்போதுபோல் எப்போதுமே அரை நிர்வாணத்தில் இருப்பதால் அப்படி ஆகியிருக்கலாம்.

''உன் பெயர் என்ன?'' மரியா-நுன்ஸியாதா கேட்டாள்.

''லீபெர்சோ'' என்றான் தோட்டக்காரரின் பையன்.

மரியா-நுன்ஸியாதா சிரித்தபடியே, ''லீபெர்சோ... லீபெர்சோ.. என்ன வேடிக்¨காயன பெயர் லீபெர்சோ'' என்றாள்.

''எஸ்பெராந்தோவில் புழங்கும் பெயர் இது. இதற்கு எஸ்பெராந்தோவில் 'விடுதலை' என்று அர்த்தம்'' என்றான்.

''எஸ்பெராந்தோ'' என்றாள் மரியா. ''நீ எஸ்பெராந்தோவைச் சேர்ந்தவனா?''

''எஸ்பெராந்தோ என்பது மொழி'' லீபெர்சோ விளக்கினான். ''என் அப்பா எஸ்பெராந்தோ பேசுவார்.''

''நான் காலாபிரியான்'' என்று சத்தமாகச் சொன்னாள் மரியா-நுன்ஸியாதா.

''உன் பெய்ர என்ன?''

''மரியா-நுன்ஸியாதா'' என்று சொல்லியபடி சிரித்தாள்.

''நீ ஏன் எதற்கெடுத்தாலும் சிரிக்கிறாய்?''

''நீ எதற்கு கூப்பிட்டாய் எஸ்பெராந்தோ?''

''எஸ்பொரந்தோ இல்லை. லீபெர்சோ.''

''ஏன்?''

''உனக்கு ஏன் மரியா-நுன்ஸியாதா என்று பெயர்?''

''அது மடோனாவின் பெயர். அதனால் அப்படி வைத்திருக்கிறார்கள். என் சகோதரனுக்கு செயின்ட் ஜோசப்பின் பெயர்.''

''சென் சோசப்?''

மரியா-நுன்ஸியாதா குலுங்கி சிரித்தாள். ''சென் சோசப்! சென் சோசப் இல்லை, செயின்ட் ஜோசப், லீபெர்சோ.''

''என் சகோதரன் பெயர் ஜெர்மினால், என் சகோதரி பெயர் ஒம்னியா.''

''அருமையான ஒன்று என்று ஏதோ சொன்னாயே, அதை எனக்குக் காண்பி'' என்றாள் மரியா-நுன்ஸியாதா.

''சரி, வா!'' என்றான் லீபெர்சோ. தண்ணீர் வாளியைக் கீழே வைத்துவிட்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

மரியா-நுன்ஸியாதா தயங்கினாள்.''முதலில் அது என்னவென்று சொல்.''

''காண்பிக்கிறேன். ஆனால் அதைக் கவனமாகப் பராமரிக்க நீ எனக்கு உறுதி அளிக்க வேண்டும்.''

''நீ அதை எனக்குத் தருவாயா?''

''ஆம், நான் அதை உனக்குத் தருவேன்.'' தோட்டச்சுவரின் மூலைக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கு தொட்டிகளில் பன்னிறப் பூச்செடிகள் அவர்கள் உயரத்துக்கு வளர்ந்திருந்தன.

''அங்கே இருக்கிறது.''

''என்ன அது?''

''பொறு.''

அவனுடைய தோள் வழியாக மரியா-நுன்ஸியாதா கூர்ந்து பார்த்தாள். லீபெர்சோ குனிந்து ஒரு தொட்டியை நகர்த்திவிட்டு, மற்றொன்றை எடுத்துச் சுவரின்மேல் வைத்துவிட்டுத் தரையைச் சுட்டிக் காட்டினான்.

''அங்கே'' என்றான் அவன்.

''என்ன அது?'' என்றாள் மரியா-நுன்ஸியாதா. அவளுக்கு எதுவும் தெரியவில்லை. அந்த மூலை ஈர இலைகளாலும் மண் குவியலாலும் நிறைந்து நிழல் அப்பியிருந்தது.

''அதோ பார், அது நகர்கிறது'' என்றான் பையன். நகரும் கல் அல்லது இலை போன்ற ஏதோ ஒன்று கண்களோடும் கால்களோடும் இருப்பதை அவள் பார்த்தாள். அது ஒரு தேரை.

''மாம்மாமியா!''
மரியா-நுன்ஸியாதா பூச்செடிகளுக்கிடையே, குதி உயர்ந்த ஷுக்களோடு, தாவிச் சென்றாள். லீபெர்சோ தேரை அருகே குத்துக்காலிட்டு அமர்ந்து, பழுப்பு முகத்தின் மத்தியில் வெண்பற்கள் தெரியச் சிரித்தான்.

''பயந்து விட்டாயா? இது வெறும் தேரை. இதற்கேன் பயப்படுகிறாய்?''

''தேரை!'' மூச்சு வாங்கியபடி சொன்னாள் மரியா-நுன்ஸியாதா.

''ஆம் தேரைதான். இங்கேவா'' என்றான் லீபெர்சோ.

நடுங்கும் விரலால் அதைச் சுட்டிக்காட்டி, ''அதைக் கொல்'' என்றாள்.

அதைப் பாதுகாக்கும் வகையில் அவன் தன் கைகளைக் குவித்தான். ''நான் அப்படிச் செய்யமாட்டேன். இது மிக அருமையான ஒன்று.''

''அருமையான தேரை?''

''எல்லா தேரைகளுமே அருமையானவை. அவை புழுக்களைத் தின்கின்றன.''

''ஓ!'' என்றாள் மரியா-நுன்ஸியாதா. ஆனால் பக்கத்தில் வரவில்லை. மேலாடையின் முனையைச் சவைத்தபடி ஓரக்கண்ணால் அதைக் கவனிக்க முயற்சித்தாள்.

''எவ்வளவு அழகாக இருக்கிறது பார்'' என்ற லீபெர்சோ அதன்மீது ஒரு கையை வைத்தான்.

மரியா-நுன்ஸியாதா அருகில் வந்தாள். இப்போது அவளிடம் சிரிப்பு இல்லை. வாய் திறந்தபடி அதைப் பார்த்தாள். ''வேண்டாம்! வேண்டாம்! அதைத் தொடாதே!''

தேரையின் சாம்பல் பச்சை முதுகில் ஒட்டியிருந்த சேற்றுச்க் கரணகைளை லீபெர்சோ ஒரு விரலால் தட்டினான்.

''உனக்கென்ன பைத்தியமா? அவற்றைத் தொடும்போது கையில் அரிப்பு ஏற்பட்டு, கை வீங்கிவிடும் என்று உனக்குத் தெரியாதா?''

அவனுடைய பெரிய பழுப்புக் கைகளை அவளிடம் காட்டினான். உள்ளங்கைகளில் மஞ்சள் சகதி படர்ந்திருந்தது.

''எனக்கு அரிக்காது'' என்றான். ''எவ்வளவு அழகாக இருக்கிறது பார்.''

இப்போது அவன் தேரையின் பிடரியைப் பிடித்து, ஒரு பூனையைப் போல அதை எடுத்துத் தன் உள்ளங்கையில் வைத்தான். மரியா-நுன்ஸியாதா இன்னமும் தன் மேலாடையின் முனையைச் சவைத்தபடி அருகில் வந்து அவனுக்குப் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தாள்.

''மாம்மாமியா!'' அவள் அலறினாள்.

பன்னிறப் பூச்செடிகளுக்குப் பின்னால் கால்களை மடக்கி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். மரியா-நுன்ஸியாதாவினுடைய இளஞ்சிவப்பு ரோசாநிற முழங்கால் முட்டுகள், லீபெர்சோவின் பழுப்பான, காய்த்துப்போன முட்டுகள்மீது உரசிக் கொண்டிருந்தன. தேரை, அவன் கையிலிருந்து குதித்துச் செல்ல முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் லீபெர்சோ தன் இன்னொரு கையால் அதை அமுக்கிக்கொண்டிருந்தான்.

''நீ தடவிப் பார், மரியா-நுன்ஸியாதா'' என்றான்.

அவள் தன் மேலாடைக்குள் கைகளை மறைத்துக் கொண்டாள். ''முடியாது'' என்று தீர்மானமாகச் சொன்னாள்.

''என்ன'' என்றான் அவன். ''உனக்கு வேண்டாமா?''

மரியா-நுன்ஸியாதா கண்களைத் தாழ்த்தி தேரையைப் பார்த்தாள்.

''வேண்டாம்'' என்றாள் அவள்.

''ஆனால் இது உன்னுடையது. நான் உனக்குத் தருகிறேன்'' என்றான் லீபெர்சோ.

மரியா-நுன்ஸியாதாவின் கண்கள் கலங்கின. ஒரு அன்பளிப்பை நிராகரிக்க நேர்வது சோகமானது. அவளுக்கு எவரும் ஒருபோதும் அன்பளிப்புகள் தந்ததில்லை. ஆனால், உண்மையில் தேரை அவளுக்கு வெறுப்பூட்டியது.

''நீ விரும்பினால் இதை வீட்டுக்குக் கொண்டு போகலாம். இது உன்னோடு தோழமையாக இருக்கும்.''

''வேண்டாம்'' என்றாள் அவள்.

லீபெர்சோ தேரையை மீண்டும் தரையில் விட்டான். அது வேகமாகக் குதித்தோடி இலைகளுக்குள் பதுங்கிக்கொண்டது.

''வருகிறேன், லீபெர்சோ.''

''ஒரு நிமிஷம் பொறு.''

''நான் போய் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைக்க வேண்டும். நான் தோட்டத்திற்கு வருவது வீட்டுக்கார அம்மாவுக்குப் பிடிக்காது.''

''பொறு. நான் உனக்கு ஏதாவது தர விரும்புகிறேன். உண்மையிலேயே அருமையான ஏதாவது ஒன்று. என்னோடு வா.''

சரளைக்கல் பாதையில் அவனைப் பின்தொடர்ந்தாள். நீண்ட தலைமுடியோடு, தேரைகளைக் கைகளில் பிடித்துத் திரியும் இந்த லீபெர்சோ எவ்வளவு வேடிக்கையானவன்.

''உனக்கு என்ன வயது லீபெர்சோ?''

''பதினைந்து. உனக்கு?''

''பதினாலு.''

''இப்போதா, இல்லை அடுத்த பிறந்தநாளின் போதா?''

''அடுத்த பிறந்தநாளின் போது. விண்ணேற்பு நாள்.''

''அது இன்னும் வரவில்லையா?''

''விண்ணேற்பு நாள் என்று வரும் என்பது உனக்குத் தெரியாதா?'' அவள் சிரிக்கத் தொடங்கினாள்.

''தெரியாது.''

''விண்ணேற்பு நாளன்று ஊர்வலம் செல்லுமே. அந்த ஊர்வலத்துக்கு நீ போனதில்லையா?''

''நானா? இல்லை.''

''எங்கள் ஊரில் ஊர்வலம் அற்புதமாக இருக்கும். இங்கு இருப்பது போல் இல்லை. அங்குள்ள பெரிய வயல்வெளி முழுவதும் எலுமிச்சை நிறைந்திருக்கும். எலுமிச்சை தவிர வேறெதுவும் கிடையாது. காலையிலிருந்து இரவு வரை எல்லோரும் எலுமிச்சை பறிப்பார்கள். எனக்கு 14 சகோதரர்களும் சகோதரிகளும் இருந்தார்கள். எல்லோருமே எலுமிச்சை பறிப்பார்கள். குழந்தைகளாக இருக்கும்போதே ஐந்து பேர் இறந்து விட்டனர். அதன்பிறகு, என் அம்மாவுக்கு நரம்பிசுவு நோய் வந்துவிட்டது. அங்கிள் கார்மெலோவிடம் போவதற்காக ஒரு வாரம் ரயிலில் பயணம் செய்தோம். அங்கிருந்த ஒரு காரேஜில் நாங்கள் எட்டு பேரும் தூங்கினோம். அது சரி, நீ ஏன் இவ்வளவு நீளமுடி வைத்திருக்கிறாய்?''

அவர்கள் நின்றார்கள்.
'ஏனென்றால் அது அப்படி வளர்கிறது. உனக்குக்கூடத்தான் முடி நீளமாக இருக்கிறது.''

''நான் ஒரு பெண். நீ முடியை நீளமாக வைத்திருக்கும்போது பெண்போலத் தெரிகிறாய்.''

''நான் பெண்போல இல்லை. முடியை வைத்து ஆணா, பெண்ணா என்று சொல்ல முடியாது.''

''முடியை வைத்து இல்லையா?''

''இல்லை. முடியை வைத்து இல்லை.''

''ஏன் முடியை வைத்து இல்லை?''

''நான் உனக்கு அருமையான ஏதாவதொன்றைத் தருவதை நீ விரும்புகிறாயா?''

''ஆம்.''

ஆகாயத்தை நோக்கிக் கம்பீரமாக மொட்டுகள் அரும்பியிருந்த அல்லி மலர்க்கூட்டத்திடையே லீபெர்சோ நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றாகப் பார்த்தபடியும், இரண்டு விரல்களை அங்குமிங்குமாக அலையவிட்டபடியும், பிறகு தன் உள்ளங்கையில் எதையோ மறைத்தபடியும் லீபெர்சோ இருந்தான். மலர்க்கூட்டத்தினருகே மரியா-நுன்ஸியாதா செல்லவில்லை. மெளனப் புன்னகையோடு அவனைக் கவனித்துக கொண்டிருந்தாள். இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? லீபெர்சோ எல்லா அல்லிச் செடிகள் மீதும் இப்போது தன் பார்வையைப் படர விட்டான். ஒரு கையால் மறு கையைப் பொத்தியபடி அவளருகே அவன் வந்தான்.

''உன் கைகளைத் திற'' என்றான்.மரியா-நுன்ஸியாதா தன் கைகளைக் கிண்ணம்போல் குவித்தபோதிலும், அவனுடைய கைகளுக்குக் கீழாகக் கொண்டுபோகப் பயந்தாள்.

''உன் கைகளுக்குள் என்ன வைத்திருக்கிறாய்?''

''மிக அருமையானவை.''

''முதலில் காண்பி.''

லீபெர்சோ அவள் பார்க்கும் வகையில் கைகளைத் திறந்தான். அவன் உள்ளங்கை முழுவதும் பல வண்ணச் சில்வண்டுகள் நிறைந்திருந்தன. சிவப்பு, கருப்பு, ஊதா என இருந்தாலும் பச்சை நிறமானவை வெகு அழகாக இருந்தன. அவை மென்னிரைச்சலோடு ஒன்றோடடொன்று முட்டி மோதி உரசிக்கொண்டு, சிறிய கறுப்புக் கால்களைக் காற்றில் அலையவிட்டபடி இருந்தன.

மரியா-நுன்ஸியாதா தன் மேலாடைக்குள் கைகளை மறைத்துக் கொண்டாள்.

''இப்படி நீட்டு'' என்றான் லீபெர்சோ. ''உனக்குப் பிடிக்கவில்லையா?''

''ஆமாம்'' என்று நிச்சயமில்லாமல் சொன்னாள் மரியா-நுன்ஸியாதா.

''நீ அவற்றை இறுகப் பொத்திக் கொண்டிருக்கும்போது அவை சிலிர்க்க வைக்கும். நீ அதை உணர விரும்பவில்லையா?''

மரியா-நுன்ஸியாதா மருட்சியோடு தன் கைகளை நீட்டினாள். லீபெர்சோ, எல்லா நிறங்களிலுமான சில்வண்டுகளை அவள் கைகளுக்குள் அலை அலையாகக் கொட்டினான்.

''பயப்பாடாதே, அவை உன்னைக் கடிக்காது.''

''மாம்மாமியா!'' அவை கடிக்கக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியிருக்கவில்லை. அவள் கைகளைத் திறந்துவிட்டாள். சில்வண்டுகள் சிறகு விரித்தன. அழகிய வண்ணங்கள் மறைந்தன. கருப்புப் பூச்சிக்கூட்டம் பறந்து சென்று தங்கியதைத் தவிர வேறெதையும் பார்க்க முடியவில்லை.

''என்ன பரிதாபம். நான் உனக்கு ஒரு அன்பளிப்பு தர முயற்சிக்கிறேன். ஆனால் நீ அதை விரும்பவில்லை.''

''நான் போய் பாத்திரங்களைக் கழுவியாக வேண்டும். நான் அங்கு இல்லையென்றால் வீட்டுக்கார அம்மா என்னைத் தேடி இங்கு வந்துவிடுவார்.''

''உனக்கு அன்பளிப்பு வேண்டாமா?''

''இப்போது நீ எனக்கு என்ன தரப் போகிறாய்?''

''வந்து பார்.''

அவளுடைய கைகளை மீண்டும் பிடித்துக் கொண்டு மலர்க்கூட்டத்தினிடையே அவன் நடக்க ஆரம்பித்தான்.

''நான் அடுப்படிக்கு உடனடியாகப் போயாக வேண்டும், லீபெர்சோ. ஒரு கோழியை வேறு உரிக்க வேண்டும்.''

''ஃபூ''

''என்ன ஃபூ''

''இந்த பறவை, விலங்குகளின் மாமிசத்தை நாங்கள் சாப்பிடுவதில்லை.''

''ஏன், எப்போதுமே நீ இறைநோன்பில் இருப்பாயா?''

''என்ன சொல்கிறாய்?''

''சரி, வேறென்னதான் நீ சாப்பிடுவாய்?''

''ஓ, எல்லாமேதான். முள்ளங்கி, கீரை, தக்காளி. நாங்கள் மாமிசம் சாப்பிடுவதை என்னுடைய அப்பா விரும்புவதில்லை. அதுபோல, காபி, சீனி சாப்பிடுவதையும்.''

''உன்னுடைய சீனி 'ரேஷனை' என்னதான் செய்கிறாய்?''

''கறுப்புச் சந்தையில் விற்றுவிடுவேன்.''

கண்கவர் சிவப்புப் பூக்கள் நிரம்பியிருந்த படர் கொடிகள் இருந்த இடத்தை அவர்கள் வந்தடைந்திருந்தனர்.

''என்ன அழகான பூக்கள்'' என்றாள் மரியா-நுன்ஸியாதா. ''நீ எப்போதாவது இவற்றைப் பறிப்பாயா?''

''எதற்கு?''

''மடோனாவுக்குக் கொண்டு செல்ல. பூக்கள் மடோனாவுக்குரியவை.''

''மீசெம்பிரியாந்திமம்.''

''என்ன அது?''

''இந்தக் கொடிக்கு லத்தீனில் மிசெம்பிரியாந்திமம் என்று பெயர். எல்லாப் பூக்களுக்குமே லத்தீனில் பெயர் உண்டு.''

''பூசைகூட லத்தீனில் உண்டு.''

''எனக்கு அதுபற்றித் தெரியாது.''

லீபெர்சோ இப்போது சுவரின் வளைவுப் பகுதியின் பிளவுக்கூடாக மிக உன்னிப்பாகப் பார்த்தான்.

''அதோ அங்கே இருக்கிறது'' என்றாள்.

''என்ன அது?''

கரும்புள்ளிகளுடன் பச்சை நிறப் பல்லி ஒன்று சூரிய ஒளியில் காய்ந்து கொண்டிருந்தது.

''நான் அதைப் பிடிக்கப் போகிறேன்''

''வேண்டாம்''

ஆனால் அவன், இரு கைகளும் திறந்திருக்க, மிக மெதுவாகப் பல்லிக்கு வெகு அருகில் சென்றான். ஒரு குதி; அவ்வளவுதான். அவன் அதைப் பிடித்துவிட்டான். வெண்பற்கள் தெரிய சந்தோஷமாகச் சிரித்தான். ''இங்கே பார், தப்பிக்கப் பார்க்கிறது!'' அவனுடைய மூடிய விரல்களினூடாக வழுக்கிக் கொண்டு, மிரண்டுபோ தலை முதலில் வெளிவந்தது. அதன் பிறகு வால். மரியா-நுன்ஸியாதாவும் சிரித்தாள். ஆனால் பல்லியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பின்னால் துள்ளிச் சென்று தன் பாவாடையை இறுகப் பற்றி முழங்கால் வரை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

''ஆக, நான் உனக்கு எதுவுமே தருவதை நீ உண்மையிலேயே விரும்பவில்லை'' என்ற லீபெர்சோ, மிகுந்த வருத்தத்தோடும் வெகுகவனமாகவும் பல்லியைத் திரும்பவும் சுவற்றின் மீது விட்டான். அநத் நொடியில் அது மறைந்தது. மரியா-நுன்ஸியாதா கண்களைத் தாழ்த்தியபடி இருந்தாள்.

''என்னோடு வா'' என்றபடி லீபெர்சோ மறுபடியும் அவள் கையைப் பற்றிக்கொண்டான்.

''ஞாயிற்றுக்கிழமைகளில் நடனமாடச் செல்லும்போது என் உதடுகளுக்குப் பூசிக்கொள்ள சிவப்புச் சாயம் வேண்டுமென்று எனக்கு ஆசை. அதன்பிறகு, ஆசிர்வாதம் பெறும்போது, என் தலையில் அணிந்துகொள்ள கறுப்புத்துணி வேண்டுமென்றும் ஆசை.''

''ஞாயிற்றுக்கிழமைகளில் நான் என் சகோதரனோடு காட்டுக்குச் செல்வேன். இரண்டு சாக்கு நிறைய 'பைன்' கூம்புகளை அடைப்போம். பிறகு மாலையில் என் அப்பா குரோபோட்கினிலிருந்த சத்தமாக வாசிப்பார். என் அப்பாவுக்குத் தலைமுடி தோள்வரை இருக்கும். தாடி மார்பைத் தொடும். கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும்கூட அரைக்¡கல் டவுசர்தான் அணிவார். கிளர்ச்சியாளர் கூட்டமைப்பின் சன்னல்களுக்கு நான் கோட்டோவியங்கள் வரைவேன். விளிம்பு கொண்ட நீளத்தொப்பி அணிந்த உருவங்கள் தொழிலதிபர்கள். விளிம்பில்லாத் தொப்பி அணிந்த உருவங்கள் படைத்தலைவர்கள், வட்டத் தொப்பியிலிருப்பவர்கள் மத குருக்கள். பிறகு, உருவங்களுக்கு நீர்வண்ணம் பூசுவேன்.''

வட்டமான ஆம்பல் இலைகள் படர்ந்திருந்த ஒரு குட்டைக்கு அவர்கள் வந்திருந்தார்கள்.

''அமைதியாக இரு'' என்று கட்டளையிட்டான் லீபெர்சோ.

தண்ணீருக்கடியில் ஒரு தவளை, தன்னுடைய பச்சைத் தோள்களாலும் கால்களாலும், வெகு அழகாக நீச்சடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிகிறது. அது திடீரென மேலே வந்து, ஒரு ஆம்பல் இலையை நோக்கி தாவி அதன் மத்தியில் உட்கார்ந்து கொண்டது.

''அங்கே'' என்று கத்திய லீபெர்சோ அதைப் பிடிப்பதற்காக ஒரு கையை நீட்டினான். ஆனால் மரியா-நுன்ஸியாதா ''ஓ' என்று கத்தியதை அடுத்து தவளை மீண்டும் தண்ணீருக்குள் குதித்து விட்டது. லீபெர்சோ, தண்ணீருக்கு மேலாகத் தன் மூக்கு தொடுமளவு குனிந்து, மீண்டும் அதைத் தேட ஆரம்பித்தான்.

''அதோ, அங்கே இருக்கிறது.''

ஒரு கையை உள்ளுக்குள் நுழைத்து, மூடிய உள்ளங்கையில் அதை வெளியில் எடுத்தான்.''

''இரண்டு சேர்ந்திருக்கிறது'' எனக் கத்தினான். ''பார், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு.''

''ஏன் அப்படி?'' மரியா-நுன்ஸியாதா கேட்டாள்.

''ஆணும் பெண்ணும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும்'' என்றான் லீபெர்சோ. ''அவை என்ன செய்கின்றன, பார்.'' மரியா-நுன்ஸியாதாவின் கைகளில் தவளைகளை வைக்க அவன் முயறசித்தான். மரியா-நுன்ஸியாதாவுக்கு தன்னுடைய பயம், அவை தவளைகள் என்பதாலா, இல்லை அவை ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்திருப்பதாலா என்று தெரியவில்லை.

'' அவற்றை விட்டுவிடு'' என்றாள் அவள். ''நீ அவற்றைத் தொடக்கூடாது.''

''ஆணும் பெண்ணும்'' என்று மறுபடியும் சொன்னான் லீபெர்சோ. ''அவை தலைப்பிரட்டையை உருவாக்குகின்றன.'' சூரியனை மேகம் மறைத்தது. மரியா-நுன்ஸியாதா திடீரென பதட்டமடையத் தொடங்கினாள்.

''நேரமாகிவிட்டது. நிச்சயம் வீட்டுக்கார அமமா என்னைத் தேட ஆரம்பித்திருப்பார்.''
ஆனால் அவள் போகவில்லை. மாறாக சூரியன் மீண்டும் வெளிவராத வெளிச்சத்தினூடே அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். பிறகு, அவன் ஒரு பாம்பைக் கண்டான்; மூங்கில் புதருக்குப் பின்னால் இருந்த சின்னஞ்சிறிய குட்டிப் பாம்பு அது. அதைத் தன் மேற்கையில் சுற்றிவிட்டுக்கொண்டு, அதன் தலையைத் தடவிக் கொடுத்தான்.

''ஒரு சமயம் நான் பாம்புகளைப் பழக்கினேன். ஒரு டசன் பாம்புகள் என்வசம் இருந்தன. அதில் ஒன்று, நீளமான, மஞ்சள் நிறத் தண்ணீர் பாம்பு. ஆனால் அது தோலை உரித்துப் போட்டுவிட்டு தப்பிவிட்டது. இது வாய் திறக்கும் போது இதன் நாக்கு பிளவுபட்டிருப்பதைப் பார். தடவி கொடு. கடிக்காது.''

ஆனால் மரியா-நுன்ஸியாதா பாம்புகளைப் பார்த்தும் பயந்தாள். பிறகு அவர்கள் பாறைக் குளத்துக்குச் சென்றார்கள். முதலில் நீர் ஊற்றுகளைக் காண்பித்தான். நீர் பீற்றுகளை எல்லாம் திறந்துவிட்டான். அது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. பிறகு தங்க மீனை அவளுக்குக் காண்பித்தான். அது ஒன்றையான, முதிய தங்க மீன். அதன் செதிள்கள் ஏற்கெனவே வெளிவர ஆரம்பித்துவிட்டன. கடைசியாக, மரியா-நுன்ஸியாதாவுக்குத் தங்க மீனைப் பிடித்துப் போய்விட்டது. லிபெர்சோ அதைப் பிடிப்பதற்காகத் தண்ணீருக்குள் கைககைள அலைய விட்டான். அதைப் பிடிப்பத வெகு சிரமமாக இருந்தது. அதை அவன் பிடித்துவிட்டால் மரியா.நுன்ஸியாதா அதை ஒரு கோப்பையில் போட்டு அடுப்படியில் வைத்துக் கொள்ள முடியும். ஒரு வழியாக அதை அவன் பிடித்துவிட்ட போதிலும், தண்ணீருக்கு வெளியே எடுத்தால் அதறக்கு மூச்சு திணறக் கூடுமென்று வெளியில் எடுக்கவில்லை.

''உன் கைகளை உள்ளே விட்டு, அதைத் தடவிப் பார்'' என்றான் லீபெர்சோ. அது மூச்சு விடுவதை நீ உணர முடியும் அதன் துடுப்புகள் காகிதம் போல் இருக்கின்றன. செதிள்கள் லேசாகக் குத்துகின்றன.''

ஆனால் மரியா-நுன்ஸியாதா மீனையும் தடவிப் பார்க்க விரும்பவில்லை.

குழல் வடிவ ஊதா நிறப் பூப்படுக்கையில் பூமி மிருதுவாக இருந்தது. லீபெர்சோ விரல்களால் மண்ணைத் தோண்டி, நீளமான, மிருதுவான சில புழுக்களை எடுத்தான்.

மரியா-நுன்ஸியாதா கிறீச்சிட்டபடி ஓடிப் போனாள்.

''உன்னுடைய கையை இங்கே வை'' என்று பழைய பீச் மரத்தின் அடிப்பாகத்தைச் சுட்டிக்காட்டி லீபெர்சோ சொன்னான். எதற்கென்று புரியாமல் மரியா-நுன்ஸியாதா அதில் கை வைத்தாள். உடனே அலறியபடி ஓடிப்போய் குளத்தில் கையை முக்கினாள். காரணம் என்னவென்றால் அவள் கை முழுவதும் எறும்புகள் அப்பியிருந்தன. அந்த பீச் மரத்தில் சின்னஞ்சிறிய கறுப்பு 'அர்ஜென்டினிய' எறும்புகள் கூட்டம் கூட்டமாக இருந்தன.

''இங்கே பார்'' என்ற லீபெர்சோ அடிமரத்தில் தன் கையை வைத்தான். அவனுடைய கையின் மீது எறும்புகள் ஊறத் தொடங்கின. ஆனால் அவன் அதைத் தட்டிவிடவில்லை.

''ஏன்?'' என்றாள் மரியா-நுன்ஸியாதா. ''ஏன் இப்படி எறும்புகளை உன் மீது ஏறவிடுகிறாய்?''

இப்போது அன் கை கறுப்பாகியிருந்தது. அவனுடைய மணிக்கட்டு வரை அவை ஊர்ந்துகொண்டிருந்தன.

''உன்னுடைய கையை எடு'' என மரியா-நுன்ஸியாதா முனங்கினாள். ''உன்னுடைய உடம்பு முழுக்க ஏறிவிடும்.''

அவனுடைய வெறும் கையில் எறும்புகள் ஊர்ந்து ஏற்கனவே முழங்கை வரை ஏறிவிட்டன.

இப்போது அவனுடைய கை முழுவதும் நகரும் கரும் புள்ளிகளய் எறும்புகள் மூடியிருந்தன. அவனுடைய அக்களுக்குள் அவை சென்றபோதும் அவன் தட்டிவிடவில்லை.

''வந்துவிடு, லீபெர்சோ. தண்ணீருக்குள் உன் கையை விடு.''

லீபெர்சோ ! நீ என்ன விரும்பினாலும் செய்கிறேன். நீ எனக்குத் தந்த எல்லா அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்கிறேன்.''

அவனுடைய கழுத்தைச் சுற்றி தன்னுடைய கைகளால் எறும்புகளைத் தட்டிவிடத் தொடங்கினாள்.

அவனுடைய பழுப்பு மற்றும் வெண் சிரிப்போடு லீபெர்சோ மரத்திலிருந்து கையை எடுத்துவிட்டு, அசட்டையாகக் கைகளைத் துடைக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் நெகிழ்ந்து போய்விட்டதென்னவோ உண்மை.

''நல்லது. நான் உனக்கு மிகப் பெரிய அன்பளிப்பு தர முடிவு செய்துவிட்டேன். என்னால் தர முடிந்த பெரிய அன்பளிப்பு.''

''என்ன அது?''

''முள்ளெலி''

''மாம்மாமியா!'' வீட்டுக்கார அம்மா. வீட்டுக்கார அம்மா என்னைக் கூப்பிடுகிறார்.

மரியா-நுன்ஸியாதா பாத்திரங்களை எல்லாம் கழுவி முடித்த சமயத்தில் சன்னலைக் கல்லால் தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பெரிய கூடையோடு லீபெர்சோ அதனடியில் நின்றிருந்தான்.

''மரியா-நுன்ஸியாதா உள்ளே வரட்டுமா. நான் உனக்கு ஆச்சரியம் தரப்போகிறேன்.''

''இல்லை. நீ இங்கே வரக்கூடாது. நீ என்ன வைத்திருக்கிறாய்.'' அச்சமயத்தில் வீட்டுக்கார அம்மா மணி அடித்தார். மரியா- நுன்ஸியாதா மறைந்து போனாள்.

அவள் அடுப்படிக்குத் திரும்பி வந்தபோது, லீபெர்சோ எங்கும் தென்படவில்லை. சன்னக்கு அடியிலும் இல்லை. அடுப்படியிலும் இல்லை. மரியா-நுன்ஸியாதா பாத்திரம் கழுவும் தொட்டிக்கருகில் சென்றாள். அங்கு ஆச்சரியம் காத்திருந்தது.

காய்வதற்காக அவள் வைத்துவிட்டுப் போயிருந்த ஒவ்வொரு தட்டிலும் ஒரு தவளை பதுங்கியிருந்தது. கைப்பிடி பாத்திரத்துக்குள் ஒரு பாம்பு சுருண்டிருந்தது. சூப் கோப்பை நிறைய பல்லிகள். எல்லாக் கண்ணாடி டம்ளரிகளிலும் சேற்றுடனான சிறு உயிரிகள் பல வண்ண ஒளிக் கீற்றுகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. அகன்ற, பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிறைந்திருக்க, அதில் முதிய, ஒற்றைத் தங்க மீன் நீந்திக் கொண்டிருந்தது.

மரியா-நுன்ஸியாதா ஓரடி பின்வாங்கினாள். ஆனால் அவள் காலடிகளுக்கிடையே ஒரு மிகப் பெரிய தேரை இருப்பதைப் பார்த்தாள். அதற்குப் பின்னால் ஐந்து சிறிய தேரைகள். கருப்பு - வெள்ளை பாவோடுகள் பரவிய தரையின் குறுக்காக, லேசாகத் தத்தித் தத்தி அவளை நோக்கி அவை வந்தன.

*******

ஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ

ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர்
தமிழில்: ஆர். சிவக்குமார்.

 

இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவிitalo-calvino-bw1-frmல் பிறந்தார்.இத்தாலியில் வளர்ந்தார். இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தியநாவலாசிரியர்களில் தலை சிறந்தவராகக்  கருதப்படுகிறார். இவர்எழுதியுள்ள முக்கியமான நூல்கள்: தி காஸ்ட்ல் ஆப் க்ராஸ்ட் டிஸ்டினீஸ்(நாவல், 1973), இன்விஸிபில் சிட்டீஸ் (1972), டிபிக்கல்ட் லவ்ஸ்(சிறுகதைகள், 1984), ரோட் ஆப் சன் ஜியோவன்னி (1994) மற்றும் அன்டர் த ஜகர்ஸன் (1992).


திருமதி ஸ்டெஃபனியா ஆர். காலை ஆறு மணிக்குத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அதுதான் முதல் தடவை.

கார் அவளுடைய வீடு இருந்த கட்டடத்திற்கு முன்பாக இல்லாமல் சற்று முன்னாலேயே திருப்பத்தில் நின்றது. அந்த இடத்தில் தன்னை விட்டுவிடும்படி அவள்தான் ஃபர்னெரோவை கேட்டுக்கொண்டாள்; ஏனென்றால், கணவன் ஊரிலில்லாத சமயத்தில் அதிகாலையில் ஓர் இளைஞனுடன் அவள் வீடு திரும்புவதைக் காவலாள் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. என்ஜினை நிறுத்தியவுடன் ஃபர்னெரோ அவளைத் தன் கையால் அணைக்க முற்பட்டான். வீடு அருகிலிருந்தமை எல்லாவற்றையும் மாற்றிவிட்டதைப் போல ஸ்டெஃபனியா அவனிடமிருந்து சட்டென பின்னகர்ந்தாள். காரிலிருந்து அவசரமாக வெளியேறிய அவள், காரைக் கிளப்பிக்கொண்டு போய்விடும்படி ஃபர்னெரோவுக்குக் குனிந்து சைகை செய்துவிட்டு, கோட்டின் கழுத்துப்பட்டியில் முகம் புதைந்திருக்க வேகமாக
நடக்க ஆரம்பித்தாள். அவள் தன் கணவனுக்கு துரோகம் செய்பவளா? கூட்டுக் குடியிருப்புகள் நிறைந்த அந்தக் கட்டடத்தின் பிரதான கதவு இன்னும் பூட்டியே இருந்தது. ஸ்டெஃபனியா இதை எதிர்பார்க்கவில்லை. அவளிடம் சாவி இல்லை. சாவி இல்லாததனால்தான் முந்தைய இரவை அவள் வெளியே கழித்தாள். நடந்த கதை அதுதான். இரவின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதைத் திறக்க நூறு வழிகள் இருந்திருக்கலாம்; அல்லது தன்னிடம் சாவி இல்லை என்பது முன்னதாகவே அவளுக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவே இல்லை; வேண்டுமென்றே அவள் அப்படி செயல்பட்ட மாதிரி இருந்தது. இரவு உணவுக்கும் திரும்பிவிட முடியும் என்று அவள் நினைத்ததால் சாவி இல்லாமலேயே பிற்பகலில் வீட்டைவிட்டுக் கிளம்பினாள். ஆனால் அவள் பல காலம் பார்க்காதிருந்த அவளுடைய பெண் நண்பர்களும், அவர்களின் ஆண் நண்பர்களும் முதலில் இரவு உணவுக்கும், பின் குடிக்கும், நடனத்திற்கும் என்று அவளை ஒவ்வொருவர் வீடாக இழுத்தடித்தனர். விடியற்காலை இரண்டு மணிக்குத் தன்னிடம் சாவி இல்லையென்பது நினைவுக்கு வந்தபோது மிகவும் தாமதமாகிவிட்டது. அதற்கெல்லாம் காரணம், அந்த ஃபர்னெரோவுடன் அவள் கொஞ்சம் காதல் வயப்பட்டிருந்ததுதான். காதலா? கொஞ்சம் கூடுதல் குறைச்சலில்லாமல் விஷயங்களை உள்ளவாறே பார்க்க வேண்டும். அவனுடன் அந்த இரவை அவள் கழித்திருந்தாள்,உண்மைதான். ஆனால் அப்படிச் சொல்வது மிகை; அப்படிச் சொல்வதுசரியுமல்ல. அவள் வசித்த கட்டடத்தின் கதவு திறக்கப்படுவதற்கான நேரம்வரை அவனுடைய தோழமையில் அவள் இருந்தாள். அவ்வளவுதான். ஆறுமணிக்குத் திறந்துவிடுவார்கள் என்று நினைத்து வீடு திரும்ப அவள் அவசரப்பட்டாள். ஸ்டெஃபனியா இரவை வெளியே கழித்ததை ஏழு மணிக்கு வரும் துப்புரவு செய்யும் பெண் தெரிந்து கொள்வதையும் அவள் விரும்பவில்லை. அவளுடைய கணவன் வேறு இன்று வீடு திரும்புகிறான்.

கதவு இன்னும் திறக்கப்படாமலிருப்பதைக் கண்டாள். ஆளரவமற்ற தெருவில் அவள் மட்டும்தான் இருந்தாள். எல்லாவற்றையும் உருப்பெருக்கிக் காட்டுவது போன்ற அந்த அதிகாலை ஒளியில் அவள் பகலின் வேறெந்தநேரத்தை விடவும் துலக்கமாகத் தெரிந்தாள். ஒரு கலக்க உணர்வு சுரீரென்று அவளை உறைத்தது; கணவன் அருகில்,அவன் அரவணைப்பில் ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் அனுபவிக்கும் நீண்ட ஆழ்ந்த தூக்கத்துக்கு அவள் ஏங்கினாள். இந்த ஏக்கம் ஒரு கணம்தான்; குறைவாகக்கூட இருக்கலாம். அந்தக் கலக்கத்தைத் தான் உணர்வோம் என்று அவள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் உண்மையில் அவள் அதை உணரவேயில்லை. காவலாள் வெளிக்கதவை இன்னும் திறக்காமலிருந்தது சலிப்பூட்டியது. ஆனாலும் அந்த அதிகாலைக்காற்றிலும், அந்த நேரத் தனிமையில் இருப்பதில் உண்டான ரத்த ஓட்டத்துள்ளலிலும் ஒருவகையான பரவசம் இருக்கத்தான் செய்தது .ஃபர்னெரோவை அனுப்பிவிட்டதில் அவளுக்கு வருத்தம் ஒன்றுமில்லை;அவன் அருகில் இருந்திருந்தால் அவள் கொஞ்சம் பதற்றத்துடனேயே இருந்திருப்பாள். மாறாக, தனியாக இருந்ததில் அவள் வேறுவகையாகஉணர்ந்தாள். சிறுபெண்ணாக இருந்தபோது உணர்ந்ததை அது கொஞ்சம் ஒத்திருந்தாலும் முற்றிலும் வேறானது.

இரவை வெளியே கழித்ததில் அவளுக்குக் கொஞ்சமும் குற்றஉணர்வில்லை. இதை அவள் ஒத்துக்கொண்டேயாகவேண்டும்.அவளுடைய மனசாட்சி சுமையின்றி இருந்தது. அது கவலையற்றுஇருந்தது. இப்போது அந்தச் செயலைத் துணிந்து அவள்மேற்கொண்டுவிட்டதாலா? அல்லது கடைசியில் அவள் தன்னுடைய தாம்பத்ய கடமைகளை ஒதுக்கி வைத்து விட்டதாலா? அல்லது அதற்கு மாறாக, எல்லாவற்றையும் மீறி ஆசையை எதிர்த்து நின்று தன்னுடைய தாம்பத்ய விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டதாலா?ஸ்டெஃபனியா தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். இந்த குழப்பமும்,உறுதியற்ற நிலையுமே காலை நேரக் காற்றின் குளிர்ச்சியுடன் சேர்ந்துஅவளைக் கொஞ்ச நேரம் திடுக்குற வைத்தன. அவள் தன்னைஒழுக்கங்கெட்டவள் என்று கருதுவாளா, இல்லையா? தன்னுடைய நீண்டகோட்டின் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக்கொண்டு அவள்முன்னும் பின்னுமாகக் கொஞ்ச நேரம் நடந்தாள். ஸ்டெஃபனியாவுக்குக் கல்யாணமாகி இந்த இரண்டு வருடங்களில் கணவனுக்குத் துரோகமிழைப்போம் என்று அவள் ஒருபோதும் நினைத்ததில்லை. கல்யாணமான ஒரு பெண் என்ற முறையில் ஏதோ ஒரு மாதிரியான எதிர்பார்ப்பு அவளுக்கிருந்தது; ஏதோ ஒன்று அவளுக்குக் கிடைக்காதது போன்ற உணர்வு அது. தன் சிறுபெண்தனத்திலிருந்து அவள் முழுமையாக இன்னும் விடுபடாதது போல இருந்தது. ஊர் உலகத்தின் முன் கணவனுக்கு சமதையாக ஆகும்படி, அவனைச் சார்ந்து வாழும் ஒரு புதிய சிறுபெண்தனத்திலிருந்து அவள் வெளியேற வேண்டும். அவள் இதுநாள் வரை காத்துக்கொண்டிருந்தது இந்த ஒழுக்கக் கேட்டுக்குத்தானா? ஃபர்னெரோ ஓர் ஒழுக்கங்கெட்டவனா? இரண்டு கட்டடங்கள் தாண்டி சாலையின் எதிர்புறமிருந்த ஒரு மதுபான விடுதி திறந்திருப்பதை அவள் பார்த்தாள். உடனடியாக அவளுக்கு ஒரு சூடான காஃபி தேவைப்பட்டது. விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஃபர்னெரோ ஒரு சிறு பையன். அவனைக் குறித்து பெரிய வார்த்தைகளை உபயோகிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.அவனும் அவளும், அவனுடைய சிறிய காரில் இரவு முழுக்க மலைகளை முன்னும் பின்னுமாக வலம் வந்ததும், நதியோரத்துச் சாலையில் பயணம்செய்தும் பொழுது புலரும்வரைச் சுற்றினார்கள். ஒரு கட்டத்தில்பெட்ரோல் தீர்ந்துபோய் காரைத் தள்ளிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் நிலைய பணியாளை அவர்கள் எழுப்பவேண்டியதாயிற்று. அந்த இரவு முழுக்க அவர்கள் குழந்தைகளின்குதூகலத்தோடு நகரத்தைச் சுற்றினார்கள். மூன்று நான்கு முறைஃபர்னெரோவின் முயற்சிகள் பத்தானவையாக இருந்தன; ஒருமுறைஅவன் தான் தங்கியிருந்த விடுதியின் வாசற்படிக்கே அவளை அழைத்துக்கொண்டுபோய் தீர்மானமான குரலில் சொன்னான்: 'அலட்டிக் கொள்ளாமல் நீ இப்போது என்னுடன் மேல்மாடிக்கு வரவேண்டும்.'ஸ்டெஃபனியா மேல்மாடிக்குப் போகவில்லை. அப்படி நடந்து கொண்டது முறைதானா? பிறகு என்ன ஆகும்? அதைப் பற்றி இப்போது நினைக்க அவள் விரும்பவில்லை. ஒரு இரவைத் தூக்கமின்றி கழித்ததில் அவள் சோர்வடைந்திருந்தாள். அல்லது, இந்த அசாதாரண மனநிலையில் இருந்ததால் ஒருவேளை தான் தூக்கக் கலக்கத்தில் இருப்பதையே அவள் இதுவரை உணரவில்லையோ என்னவோ; ஆனால் படுக்கைக்குப் போய்விட்டால் ஒளி மங்கி மறைவது போல அவள் தூக்கத்தில் அமிழ்ந்து விடுவாள். தன்னை எழுப்ப வேண்டாமென்று சமையலறை சிலேட்டில் வேலைக்காரிக்குக் குறிப்பெழுதி வைத்துவிடுவாள். அவளுடைய கணவன் வந்த பிறகு ஒருவேளை அவளை எழுப்பக்கூடும். இன்னும் அவள் தன் கணவனை நேசிக்கிறாளா? அவள் அவனை நேசிப்பது உண்மைதான். அதன் பிறகு என்ன? அவள் தன்னைத்தானே இனி கேள்வி கேட்டுக்கொள்ளமாட்டாள். அவள் அந்த ஃபர்னெரோவோடு லேசாகக் காதல் வயப்பட்டிருந்தாள். லேசாகத்தான். பாழாய்ப்போன முன் கதவை எப்போதுதான் திறக்கப் போகிறார்கள்? மதுபான விடுதியில் நாற்காலிகள் அடுக்கப்பட்டும், மரத்தூள் தரையில் பரப்பப்பட்டும் இருந்தன. கவுண்ட்டரில் பணியாள் மட்டும் இருந்தான். ஸ்டெஃபனியா உள்ளே நுழைந்தாள். அந்த அகால நேரத்தில் அங்கு இருப்பது பற்றி அவள் கொஞ்சமும் சங்கோஜப்படவில்லை. யாருக்கு என்ன தெரியும்? அவள் அப்போதுதான் விழித்தெழுந்திருப்பாள்; ரயில் நிலையம் நோக்கிப் போய்க்கொண்டோ அல்லது வந்து சேர்ந்தோ இருப்பாள். எப்படியோ யாருக்கும் அவள் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. இந்த எண்ணம் அவளுக்கு சந்தோஷம் தந்ததை அவள் உணர்ந்தாள். பணியாளிடம், 'சூடான கடுங் காஃபி' என்று சொன்னாள். அவள் இதற்கு முன் வந்தேயிராத இந்த விடுதியின் பணியாளுக்கும் அவளுக்கும் ஏற்கனவே ஏதோ அறிமுகம் இருந்ததைப்போல அவளுடைய குரலில் நம்பிக்கையும் உறுதியும் ஏற்பட்டிருந்தன.

'சரி அம்மா, யந்திரம் ஒரு நிமிடத்தில் சூடானவுடன் காஃபி தயாராகிவிடும்' என்று சொன்ன பணியாள் தொடர்ந்தான்: 'காலை நேரத்தில் நான் சுறுசுறுப்பு பெற எந்திரம் சூடாகத் தேவைப்படும்நேரத்தைவிட அதிக நேரம் பிடிக்கிறது.'

சிரித்துக்கொண்டே ஸ்டெஃபனியா குளிரினால் காலருக்குள் கழுத்தை இறுக்கிக்கொண்டே 'பர்ர்ர்...' என்று சொன்னாள்.

கடையில் வேறொருவன், ஒரு வாடிக்கையாளன். ஒரு ஓரமாக நின்று ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெஃபனியாவின் நடுக்கத்தைக் கேட்டு அவன் திரும்பியபோதுதான் அவளும் அவனைப் பார்த்தாள். இரண்டு ஆண்கள் அங்கு இருந்தது திடீரென்று அவளை சுயநினைவுக்கு ஈர்த்தது போல கவுண்டருக்குப் பின்புறமிருந்த கண்ணாடியில் தன்னைக் கவனத்துடன் பார்த்தாள். இரவை வெளியே கழித்தவள்போல நிச்சயம் அவள் தோன்றவில்லை; கொஞ்சம் வெளிறிப் போயிருந்தாள். அவ்வளவுதான். பையிலிருந்து சிறிய ஒப்பனைப் பெட்டியை எடுத்து மூக்குப் பகுதியில் பவுடர் போட்டுக்கொண்டாள். அந்த ஆள் இப்போது கவுண்டர் அருகே வந்துவிட்டான். வெண்பட்டுக் கழுத்துப் பட்டியைக் கொண்ட கருப்பு ஒவர் கோட்டையும், நீலநிற சூட்டையும் அவன் அணிந்திருந்தான். யாரையும் குறிப்பாகப் பார்த்துப் பேசாமல் அவன் சொன்னான்: 'காலையில் இந்த நேரத்தில் விழித்திருப்பவர்கள் இரண்டு வகைப்படுவார்கள். இன்னும் விழித்திருப்பவர்கள் மற்றும் இப்போதுதான் விழித்தவர்கள்.'

தன் கண்களை அவன்மீது பதிக்காமல் ஸ்டெஃபனியா லேசாகச் சிரித்தாள். ஆனாலும் ஏற்கனவே அவள் அவனை நன்றாகப் பார்த்திருந்தாள். பரிதாபமும் சாதாரணமும் நிரம்பிய முகம் அவனுடையது. வயோதிகத்தை அடையும் முன்பாகவே தம்மையும் உலகத்தையும் புகாரில்லாமல் ஏற்றுக்கொண்டு, புத்திசாலித்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் இடைப்பட்ட நிலைக்கு வந்து சேர்ந்துவிட்ட மனிதர்களில் அவனும் ஒருவன்.

அவன் தொடர்ந்தான்: '... ஒரு அழகான பெண்ணை நீ பார்க்கும்போது அவளுக்குக் காலை வந்தனம் சொல்லிவிட்டு...' அவன் தன் வாயிலிருந்த சிகரெட்டை  எடுத்துவிட்டு ஸ்டெஃபனியாவை நோக்கித்தலை வணங்கினான். ஸ்டெஃபனியாவும் கொஞ்சம் குதர்க்கமான குரலில் 'காலை வந்தனம்' என்றாள்.

'... உன்னை நீயே கேட்டுக்கொள்கிறாய்: இன்னுமா? இப்போதுதானா? இப்போதுதானா? இன்னுமா?... அங்குதான் புதிரே இருக்கிறது' என்றான்.

விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டும் விளையாட மனமில்லாதவளின் குரலில் 'என்ன?' என்றாள் ஸ்டெஃபனியா. அவன் அவளை விவஸ்தையில்லாமல் உன்னிப்பாகக் கவனித்தான். ஆனால் அவள் 'இன்னும்' விழித்திருப்பவள் என்பதைத் தெரிந்து கொண்டால்கூட ஸ்டெஃபனியா கவலைப்படப் போவதில்லை.

'நீங்கள்?' என்று அவள் மறைமுகக் கேள்வியுடன் கேட்டாள். தூங்காமல் அலையும் இரவு நேர ஆந்தை என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்பவன் அவன்; அப்படிப்பட்டவன் என்று தன்னை முதல் பார்வையிலேயே மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாதபோது வருத்தம் அடைபவன்.

'என்னையா கேட்கிறீர்கள்? நான் இன்னும் விழித்திருப்பவன்! எப்போதும் இன்னும் விழித்திருப்பவன்!' பிறகு தான் சொன்னதைப்பற்றி ஒரு கணம் யோசித்தான். 'பார்த்தால் உங்களுக்குத் தெரியவில்லையா?' அவன் அவளைப் பார்த்து சிரித்தாலும் இவ்விஷயத்தில் தன்னைத்தானே கிண்டல் பண்ணிக்கொள்ளத்தான் அவன் விரும்பினான். அங்கேயே ஒரு விநாடி நின்று தன் எச்சில் கசந்ததைப்போல அதை மெதுவாக விழுங்கினான். 'பகல் வெளிச்சம் வௌவாலைக் குகைக்குள் துரத்துவது போல என்னை என் இருப்பிடத்திற்குத் துரத்துகிறது...' என்று நாடக பாத்திரம் போல தன்னை மறந்து அவன் சொன்னான்.

'இதோ நீங்கள் கேட்ட பால். இது அந்த அம்மாவுக்குக் காஃபி' என்று சொல்லி பணியாள் கொண்டு வந்து வைத்தான். அவன் தன் கிளாசை ஊதியவாறு மெதுவாக உறிஞ்சிக் குடித்தான்.
'நன்றாக இருக்கிறதா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள்.

'மகா மோசம்' என்று அவன் சொன்னான். 'விஷத்தை உடலிலிருந்து அகற்றும் என்கிறார்கள். ஆனால் இன்றைய நிலையில் அது என்னை என்ன செய்துவிட முடியும்? ஒரு விஷப்பாம்பு என்னைக் கடித்தால் அதுதான் செத்துப்போகும்.'

'உங்களுக்கு ஆரோக்கியம் இருக்கும் வரையில்...' என்றாள் ஸ்டெஃபனியா. வரம்பு மீறி அவள் அவனை கிண்டல் செய்கிறாள் போல.

'எனக்குத் தெரிந்த ஒரே விஷமுறிவு, நீங்கள் என்னை சொல்லச் சொன்னால்...' அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது  கடவுளுக்குத்தான் தெரியும்.

'நான் எவ்வளவு தரவேண்டும்?' என்று பணியாளிடம் கேட்டாள் ஸ்டெஃபனியா,

'...நான் எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்...' என்று அந்த இரவு ஆந்தை தொடர்ந்தான்.

கதவைத் திறந்துவிட்டார்களா என்று பார்ப்பதற்காக ஸ்டெஃபனியா வெளியே போனாள். நடைபாதையில் கொஞ்சதூரம் போனவள் கதவு இன்னும் மூடியிருப்பதைப் பார்த்தாள். இதற்கிடையில் அவளைத் தொடரும் எண்ணம் உடையவனைப் போல அவனும் மதுபான விடுதியிலிருந்து வெளியே வந்துவிட்டிருந்தான். ஸ்டெஃபனியா திரும்பி நடந்து விடுதியில் மீண்டும் நுழைந்தாள். இதை எதிர்பார்க்காத அவன் ஒரு கணம் தயங்கி தானும் திரும்ப ஆரம்பித்தான். ஒருவகையான,நடப்பதை ஏற்றுக்கொள்ளும் தன்மை மேலிட, லேசாக இருமிக்கொண்டு தன் வழியே போக ஆரம்பித்தான்.

'இங்கு சிகரெட் விற்கிறீர்களா?' என்று ஸ்டெஃபனியா பணியாளைக் கேட்டாள். அவளிடம் இருந்தவை தீர்ந்து போயிருந்தன; வீட்டிற்குப் போனவுடனேயே புகைக்க விரும்பினாள். சிகரெட் கடைகள் இன்னும் திறக்கவில்லை.

பணியாளரிடமிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு காசைக் கொடுத்தாள். விடுதியின் வாசற்படிக்கு அவள் மீண்டும் போனாள். கழுத்தில் கட்டப்பட்ட தோல்வாரை மூர்க்கத்தனமாக இழுத்துக்கொண்டு வேட்டைநாய் ஒன்று அவளை அநேகமாக மோதிக்கொண்டு உள்ளே நுழைந்தது. அதை இழுத்துப் பிடித்துக்கொண்டுஒரு வேட்டைக்காரன் பின்னால் வந்தான். துப்பாக்கி, குண்டுகள் ஆகியவை பொருத்தப்பட்ட இரும்புப் பட்டை மற்றும் வேட்டையாடப்பட்டவற்றை போட்டுக் கொள்ளும் பை ஆகியவற்றோடு அவன் இருந்தான். நாயைப் பார்த்து 'ஃப்ரிசெத்! உட்கார்!' என்று அதட்டியவன் விடுதிக்குள்ளே பார்த்து 'காஃபி' என்று கத்தினான்.

நாயைத் தடவிக்கொண்டே 'அழகாயிருக்கிறது' என்று சொன்ன ஸ்டெஃபனியா, 'இது மோப்ப நாயா?' என்று கேட்டாள்.

'இது ப்ரெத்தினிலிருந்து வந்த இனத்தைச் சேர்ந்த வேட்டை நாய்' என்று சொன்னான். அவன் இளமையாகவும், வெட்கப்படும் சுபாவம் காரணமாக ஒரு மாதிரி கரடு முரடாகவும் இருந்தான்.

'என்ன வயது?'
'ஏறத்தாழ பத்து மாதங்கள். ஃப்ரிசெத் ஒழுங்காக நடந்து கொள்.'
'சரி, கௌதாரிகள் எங்கே?' என்று விடுதியின் பணியாள் கேட்டான்.
'நாய்க்குப் பயிற்சிக் கொடுப்பதற்காகத்தான் வெளியே போகிறேன்' என்று வேட்டைக்காரன் சொன்னான்.
'ரொம்ப தூரம் போவீர்களா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள்.
அதிக தூரத்தில் இல்லாத ஒரு பகுதியை அவன் குறிப்பிட்டான். 'காரில் போனால் அது ஒரு தூரமேயில்லை. எனவே பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவேன். இந்த வேலை...'
'அந்த இடம் நன்றாக இருக்கும்' என்று ஸ்டெஃபனியா சொன்னாள்.
அவர்கள் இருவரும் எதைப்பற்றியும் அதிகம் பேசவில்லையென்றாலும் உரையாடலை நிறுத்திவிட அவளுக்கு மனமில்லை.

'அங்க பாலை வனமான புதரடர்ந்த ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. காலை நேரத்தில் பனிப்படலம் இல்லாததால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியும்... நாய் எந்தப் பறவையையாவது துரத்தினால்...'
'பத்து மணிக்கு எனக்கு வேலை ஆரம்பித்தால் தேவலை. ஒன்பதே முக்கால் வரை தூங்குவேன்' என்று பணியாள் சொன்னான்.

'ஆமாம், எனக்கும் தூங்க ஆசைதான்; இருந்தாலும், எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது அங்கு போக வேண்டியிருக்கிறது...என்னவென்று தெரியவில்லை, எனக்கு அது பிடித்திருக்கிறது... அதுஒரு வெறியாகவே என் உள்ளே இருக்கிறது...' என்று வேட்டைக்காரன் சொன்னான்.

இந்த இளைஞன் தன்னுடைய வெளிப்படையான சுய மெய்ப்பித்தலுக்குப் பின்னால் ஒரு கூர்மையான பெருமிதத்தையும், சுற்றியுமுள்ள தூங்கும் நகரத்தின்மீது ஒரு வெறுப்பையும், வித்தியாசமாக உணர வேண்டுமென்ற உறுதியையும் மறைத்து வைத்திருப்பதை ஸ்டெஃபனியா உணர்ந்தாள்.

'தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம், வேட்டைக்காரர்களாகிய நீங்கள் எல்லாருமே பைத்தியக்காரர்கள் என்பது என் கருத்து; அதாவது நடுராத்திரியில் எழுந்து கொள்ளும் இந்த வேலை...' என்றான் பணியாள்.

'அப்படி இல்லை, அவர்களை நான் புரிந்துகொள்கிறேன்' என்றாள் ஸ்டெஃபனியா. 'ஹ்ம்ம், யாருக்குத் தெரியும்? வேறெந்த வெறியையும் போன்றுதான் இதுவும்' என்று சொன்ன வேட்டைக்காரன் இப்போது ஸ்டெஃபனியாவை நன்றாகப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

வேட்டையாடுதலைப் பற்றிய தன் பேச்சில் அவன் முன்பு வெளிப்படுத்தியிருந்த உறுதி இப்போது இல்லாத மாதிரி தோன்றியது. ஸ்டெஃபனியாவின் முன்னிலை, அவனுடைய முழு அபிப்ராயமும் தப்பானதோ என்றும், மகிழ்ச்சி என்பது அவன் தேடிக்கொண்டிருந்த மாதிரி இல்லாமல் வேறான ஒன்றோ என்றும் அவனை சந்தேகிக்க வைப்பது மாதிரி இருந்தது. 'உண்மையாலுமே உங்களைப் புரிந்துகொள்கிறேன். இதைப் போன்ற ஒரு காலை...' என்று ஸ்டெஃபனியா சொன்னாள்.

பேச விரும்பியும் என்ன பேசுவது என்று தெரியாதவன் போல வேட்டைக்காரன் சில விநாடிகள் இருந்தான். 'இம்மாதிரியான உலர்ந்த, குளிர்ச்சியான சீதோஷ்ணநிலையில் நாயால் நன்றாக நடக்க முடியும்' என்றான் அவன். காஃபியைக் குடித்துவிட்டு அதற்குக் காசுகொடுத்தான். வெளியே போக நாய் அவனை இழுத்துக்கொண்டிருந்தது.ஆனால் அவன் தயங்கியபடியே அங்கேயே நின்றிருந்தான். 'நீங்களும்ஏன் என்னுடன் வரக்கூடாது?' என்று ஸ்டெஃபனியாவை அவன்தடுமாற்றத்துடன் தயங்கியபடி கேட்டான்.
ஸ்டெஃபனியா சிரித்தாள். 'ஓ, மீண்டும் நாம் சந்திக்க நேர்ந்தால் அதற்கு ஏற்பாடு செய்வோம், என்ன?'
வேட்டைக்காரன் 'ம்ம்' என்று சொல்லிவிட்டு மேலும் ஏதாவது பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்பதற்காகக் கொஞ்சம் தயங்கி நகர்ந்தான். 'சரி, நான் போகிறேன். வணக்கம்.' இருவரும் கையசைத்துக் கொண்டார்கள். நாய் அவனை இழுக்க வெளியே போனான். ஒரு தொழிலாளி உள்ளே வந்தான். ஒரு கிளாஸ் வைனுக்கு ஆர்டர் கொடுத்தான். பிறகு தன்னுடைய கிளாசை உயர்த்திப்பிடித்து, 'காலையில் சீக்கிரம் கண்விழிக்கும் எல்லாருடைய ஆராக்கியத்திற்கும் - குறிப்பாக
அழகான பெண்களுக்கு' என்றான். அவன் இளைஞனாக இல்லாவிட்டாலும் உல்லாசமாகத் தோற்றமளித்தான். ஸ்டெஃபனியா பணிவாக 'உங்களுடைய ஆரோக்கியத்துக்கு' என்று சொன்னாள்.

'இந்த உலகமே உங்களுக்கு சொந்தமானது என்ற உணர்வே காலையில் உங்களுக்குத் தோன்றும் முதல் எண்ணம்' என்று அவன் சொன்னான். 'மாலையில் இல்லையா?' ஸ்டெஃபனியா கேட்டாள். 'மாலையில் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறோம். எதைப்பற்றியும் நாம் நினைப்பதில்லை. நினைத்தால் அது தொல்லையைத்தான் உண்டாக்கும்...' என்றான்.

'காலையில் நான் வரிசையாக ஒவ்வொரு பிரச்சனையாக யோசிக்கிறேன்' என்று விடுதியின் பணியாள் சொன்னான்.

'ஏனென்றால் காலையில் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு சந்தோஷமான பயணம் தேவைப்படுகிறது. நீ என்னைப்போல செய்ய வேண்டும். குளிர்காற்று என் முகத்தில் பட நான் மோட்டார் சைக்கிளில் தொழிற்சாலைக்குப் போகிறேன்...'
'காற்று யோசனைகளைத் துரத்திவிடும்' என்றாள் ஸ்டெஃபனியா.
'பார், அந்தப் பெண் என்னைப் புரிந்துகொள்கிறார். அப்படிப் புரிந்து கொள்வதால் அவர் என்னுடன் குடிக்க வேண்டும்' என்று தொழிலாளி சொன்னான்.
'நன்றி, நான் குடிப்பதில்லை.'
'காலையில் அதுதான் நமக்குத் தேவைப்படுகிறது. இரண்டு கிளாஸ் வைன்' என்று பணியாளைப் பார்த்து சொன்னான்.
'நான் உண்மையில் எப்போதும் குடிப்பதில்லை; நீங்கள் என்னுடைய ஆரோக்கியத்திற்காகக் குடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.'
'நீங்கள் எப்போதுமே குடிப்பதில்லையா?'
'எப்போதாவது மாலை வேளையில்.'
'அங்குதான் தப்பு செய்கிறீர்கள், புரிகிறதா...?'
'ஒவ்வொரு நபரும் நிறைய தவறுகள் செய்கிறோம்...'
'உங்கள் ஆரோக்கியத்திற்கு' என்று சொல்லிவிட்டு அவன் தொடர்ந்து இரண்டு கிளாஸுகளையும் காலி செய்தான். 'ஒன்றும் ஒன்றும் இரண்டு. நான் விளக்குகிறேன் பாருங்கள்...'

அந்த வித்தியாசமான ஆண்களுக்கு மத்தியில் ஸ்டெஃபனியா தனியாக உட்கார்ந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் அமைதியாக,தன்னம்பிக்கை நிறைந்தவளாக இருக்கிறாள்; அங்கு எதுவும் அவளை நிலைகுலையச் செய்யவில்லை. இதுதான் அன்றைய காலையின் புது சம்பவம்.

தன் வீடிருக்கும் கட்டடத்தைத் திறந்து விட்டார்களா என்று பார்ப்பதற்காக அவள் விடுதியிலிருந்து வெளியே வந்தாள். அந்தத் தொழிலாளியும் வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கையுறைகளை அணிந்துகொண்டான். 'உங்களுக்குக் குளிரவில்லையா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள். அவன் தன் நெஞ்சில் தட்டிக் காண்பித்தான். செய்தித்தாள்கள் சரசரக்கும் சப்தம் கேட்டது. 'நான்
கவசம் அணிந்திருக்கிறேன்' பிறகு அவன் உள்ளூர் பேச்சு வழக்கில் 'நான் வருகிறேன், அம்மணி' என்று சொன்னான். ஸ்டெஃபனியாவும் அதே வழக்கில் அவனுக்கு விடை கொடுத்தபின் அவன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டுப் போய்விட்டான்.தன்னால் இப்போது கைவிட்டுவிட்டு மீளமுடியாத ஏதோ ஒன்று நடந்துவிட்டது என்பதை ஸ்டெஃபனியா உணர்ந்தாள். இப்படி ஆண்களுடன் இரவு ஆந்தை, வேட்டைக்காரன், தொழிலாளி - அவள் இருக்கும் புது நிகழ்வு அவளை வித்தியாசமாக உணர வைத்தது. இதுதான் அவள் அவளுடைய கணவனுக்கு செய்த துரோகம். இப்படி ஆண்களுடன் தனியாக, அவர்களுக்குச் சமமாக இருப்பது. அவள் ஃபர்னெரோவைக் கூட மறந்துவிட்டிருந்தாள்.

கட்டடத்தின் முன் கதவு திறக்கப்பட்டிருந்தது. ஸ்டெஃபனியா வேகமாகவீட்டிற்குப் போனாள். வாயிற்காவலாளி அவளைப் பார்க்கவில்லை.

*************

நன்றி: காலச்சுவடு